ஞாயிறு, டிசம்பர் 22, 2024

கோவிலூரின் கதை – 9,10,11 ஒன்பதாம் பட்டம் பத்தாம் பட்டம் பதினொன்றாம் பட்டம்

 

 

கோவிலூரின் கதை – 9,10,11

ஒன்பதாம் பட்டம்

சீர் வளர் சீர் இராமநாத ஞான தேசிக சுவாமிகள்  வரலாறு

             நாட்டரசன் கோட்டையில் பிறந்து காரைக்குடிக்குப் பிள்ளையாக வந்தவர் கோவிலூரின் ஒன்பதாம் பட்டமாக விளங்கிய சீர் வளர் சீர் இராமநாத சுவாமிகள்.  இவர் நாட்டரசன்கோட்டையில் வாழ்ந்த  திரு. வேலாயுதஞ் செட்டியார், திருமதி முத்துக்கருப்பி ஆச்சிக்கு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எட்டாம் ஆண்டில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கறுப்பையா என்பதாகும். இவர் தொடக்கக்கல்வியை நாட்டரசன்கோட்டையில் இருந்த சிதம்பர வாத்தியார்  திண்ணைப் பள்ளி, கம்பர் கலாசாலை ஆகியவற்றில் கற்றார். தன் இளம் வயதில் நாள்தோறும் அருள்மிகு கண்ணாத்தாள் கோயிலுக்குச் சென்று அங்குள்ள பிள்ளையாருக்கு எண்ணெயும் பூவும் வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன்பின்பே இவர் பள்ளிக்குச் செல்வது வழக்கம்.

            தனது பத்தாம் வயதில் இவர் காரைக்குடி வீ. சித. ராம. சித வீட்டிற்கு குலம் தழைக்க தத்துப் பிள்ளையாக வந்து சேர்ந்து இராமநாதன் என்ற பெயரைப் பெற்றார். காரைக்குடியில் ரெங்க வாத்தியார் பள்ளி, இந்து மதாபிமான சங்கத்தின் இராமகிருஷ்ண கலாசாலை ஆகியவற்றில் கல்வி கற்றார். அக்காலத்தில் இவரின் நண்பர்களாக விளங்கியவர் கம்பன் அடிப்பொடி சா. கணேசன், அ. தெ. மு.மு. அருணாசலம்  போன்றோர் ஆவர். திரு. சொ. முருகப்பனாருடனும் இவருக்கு நடபு வளர்ந்தது. அந்நாளில் இவர்களுக்கு குமரன் கோஷ்டி என்ற பெயர் வழங்கி வந்துள்ளது.

            இவர் அக்காலத்தில் இந்துமதாபிமான சங்கம், காரைச் சிவன் அடியார் திருக்கூட்டம், தன வைசிய ஊழியர் சங்கம் போன்றவற்றில் அங்கம் வகித்துள்ளார். கல்வி கற்றபின்பு  பர்மாவிற்குத் தொழில் செய்யச் சென்றார். தொழில் விருப்பம் ஓரளவு நிறைவேறிய நிலையில் தாயகம் திரும்பி ஞானத் தேடலில் ஈடுபட்டார்.  பல ஊர்களில் இத்தேடல் நிகழ்ந்தது. மன்னார்குடியிலு் ச. து.சு. யோகியார் என்பவரின் இல்லத்தில் இவர் தங்கியபோது ஆசிரம வாழ்க்கை இவருக்கு நிறைவைத் தருவதாக உணர்ந்தார். ஆசிரம வாழ்க்கை மேற்கொள்ள இவரின் மனம் விரும்பியது.

திருப்பம் தந்த திருப்பராய்த்துறைப் பயணம்

            ஒருமுறை திருப்பராய்த்துறைக்கு  இவர் செல்லும் வாய்ப்பு அமைந்தது. இராமகிருஷ்ண தபோவனத்திற்குச் சென்று அங்கு ஸ்ரீமத் சித்பவானந்த சுவாமிகளின் அருளாசியைப் பெற்றார். அங்கு இருந்த விவேகானந்தர் படம் இவரைப் பெரிதும் ஈர்த்தது. அப்படத்தைத் தனக்காக வாங்கி வந்து அவரின் வாழ்க்கை போன்று தன் வாழ்வும் அமைய வேண்டும் என்று விரும்பினார். இதே நேரத்தில் இராஜாஜி எழுதிய  கடோப உபநிஷம் இவருக்குப் படிக்கக் கிடைத்தது. இந்நூல் இவரின் ஞானவாழ்க்கைக்குத் தொடக்கமாக அமைந்தது.

            ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து மூன்றாம் ஆண்டு இவர் சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள் ஆலயத்தில் துறவறம் மேற்கொண்டு துறவாடை பெற்றார்.  இதன்பின் தல யாத்திரை மேற்கொண்டார். திருப்பதி இவருக்கு விருப்பான தலம். பலமுறை அங்கு சென்று அங்கப் பிரதட்சணம் செய்து பெருமாளைத் தரசித்து வந்தார்.

            கோவிலூர் மடத்தின்  ஆதி மூலமான பொருள்வைத்த சேரி மடத்தில் தங்கி ஞானம் தேடும் பணியில் இறங்கினார். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை ஈசானிய மடத்தினை நடத்திச் செல்ல  இவருக்கு வழி காட்டப்பெற்றது. அப்போது தன்னுடன் விவேகானந்தர் உருவப்படத்தையும் எடுத்துச் சென்று வழிபட்டு வந்தார். இன்றும் ஈசானிய மடத்தில அப்படம்  ஞானவழி காட்டிக் கொண்டு இருக்கிறது.

ஈசானியமே ஈசன் இருப்பிடம்

            திருவண்ணாமலையில் ஈசானிய மடத்தின் பொறுப்புகளுடன்,  சேவாஸ்ரமம் ஒன்றையும் தொடங்கி ஏழை மாணவர்கள் கல்வி சிறக்கப் பாடுபட்டார். இது சிறிது காலத்தில்  உயர் தொடக்கப்பள்ளியானது. திருவண்ணாமலையில் ஓடாது நின்ற அம்மன் தேர் இவரின் முயற்சியால் சீர்பெற்றது. ஓடியது. அருணகிரிநாதரின் தலமான திருவண்ணாமலையில் அவருக்குச் சிறப்பான விழா ஆண்டுதோறும் எடுக்க இவரே முன்னவராக இருந்தார். அவ்விழா சிறப்புடன் இன்றும் நடைபெற்றுவருகிறது.

            இவர் நூல் எழுதும் ஆற்றலும் மிக்கவர். திருவண்ணாமலை தல வரலாறு என்ற நூலை இவர் எழுதி வெளியிட்டுள்ளார். நூலகம் ஒன்றை ஈசானிய மடத்தில் வைத்திருந்தார். இவரின் நூல் சேகரிப்புகள் தற்போது கோவிலூர்  மின் நூலகத்தை அலங்கரித்து வருகின்றன.  அருணாசல புராணத்தை இராய. சொக்கலிங்கனார் குறிப்புரையுடன் வெளிவர இவர் உதவினார்.

            ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து ஆறாம் ஆண்டு  திருவண்ணாமலையில் திருக்குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. அக்காலத்தில் இவர் அவ்விழாவிற்குப் பெருந்துணை  புரிந்தார். மேலும் மலர் ஒன்றையும் தயாரித்து இவர் வெளியிட்டார்.

            இவர் திருச்சி சுவாமிகளுடன்  இரண்டற ஒன்று கலந்து பழகிய பண்புடையவர். திருத்தணி முருகன் இவருக்கு தொடர்வண்டி ஊழியராக வடிவெடுத்து உதவிய நிகழ்வும் நடந்துள்ளது.

ஒன்பதாம் மடாதிபதியாக

அருள்பணியும், கல்விப் பணியும் ஆற்றிவந்த இவர் கோவிலூர் மடத்தின் மடாதிபதியாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்றாம் ஆண்டில் பொறுப்பேற்றார். சீர் வளர் சீர் இராமநான ஞான தேசிகராக இவர் கோவிலூர் மடத்தின் அருளாட்சியை ஏற்றார்.

            மடத்தின் பொறுப்பினைக் கவனிக்க ஆண்டவர் மன்றம் ஏற்படுத்தப்பெற்றது. இது தலைவர், செயலர், துணைச் செயலர், துணைத் தலைவர் போன்ற பொறுப்புகளைக் கொண்ட பொறுப்பு குழுவாக இயங்கியது. மேலும் கோவிலூர் மடத்தின் ஆவணங்களைச் சரிசெய்து தொகுத்த பணியும் இவர் காலத்தில் நடந்த முக்கியமான பணியாகும். மேலும் கிளைமடங்களையும் இவர் ஒழுங்குபடுத்தி பல புதிய கட்டங்களை, வசதிகளை ஏற்படுத்தினார்.

            புயலில் உருத்தெரியாமல் ஆகியிருந்த கோவிலூரின் வழிகளில் உள்ள தேர் உருவங்களைப் புதுப்பித்த பெரும்பணியும் இவர்காலத்தில் நடைபெற்றதே ஆகும்.கோட்டையூர் அ.க.அ.சித. அழ. சிதம்பரம் செட்டியார்  இதற்காக பெருங்கொடை நல்கினார்.

            இதன்பின் திருச்சி சுவாமிகளுடன் கும்பமேளா யாத்திரையை இவர் மேற்கொண்டு காசி முதலான பல  இடங்களைத் தரிசித்தார்.

திருநெல்லை அம்மன்  உருத் தோற்றமும் உணர்த்திய செய்தியும்

            இவருக்கு அருகாமையில் ஓர் முன்னிரவில் திருநெல்லையம்மன் வருத்தத்துடன் தோன்றி மறைந்தாள். இந்த வருத்தக் குறி அருள்மிகு திருநெல்லை உடனாய கொற்றவாளீசர் கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தக் காட்டப்பெற்றதாகும். இதனைச் செயலாற்ற சுவாமிகள் முனைந்து வெற்றி பெற்றார்.

            தனது மன உடல் ஓய்விற்காக இளைய பட்டமாக காளையார் கோயில் மடத்தின் பொறுப்பில் இருந்த திரு அரு. இராமநாதன் அவர்களை நியமித்து மடத்துப் பணிகள் சிறக்க இவர் உதவினார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து இரண்டாம் ஆண்டில்  நிறைவாழ்வு பெற்றார்.

                                    பத்தாம் பட்டம்

சீர் வளர் சீர்  இராமநாத ஞான தேசிக சுவாமிகள் (II) வரலாறு

            சீர் வளர் சீர்  இராமநாத சுவாமிகளால்  இளைய பட்டமாக அறிவிக்கப்பெற்ற பெருமைக்கு உரியவர் சீர் வளர் சீர் அரு. இராமநாத சுவாமிகள் ஆவார். இவர் அரிமழத்தில்  திரு செல்லப்ப செட்டியார் திருமதி மீனாட்சி ஆச்சி ஆகியோருக்குப் பிள்ளையாகப் பிறந்தார். தன் கல்வியை அரிமழத்தில் கற்று முடித்தார்.

            இதன்பின் ஞான நாட்டம் ஏற்பட்டு காளையார் கோயிலில் அமைந்துள்ள செல்லப்ப சுவாமிகள் மடத்திற்குச் சென்றார். தனது இருபதாவது வயதில்  காளையார் கோயிலில் இருந்த அருணாசல சுவாமிகள் ஞானக் கல்வி பெற்றார்.  அவரிடம் வேதாந்தப் பாடத்தையும், தீட்சையையும் பெற்றுத் துறவறம் பூண்டார்.

            ஆயிரத்துத் தொள்ளயிரத்து எழுபதாம் ஆண்டு முதல் காளையார் கோயில் செல்லப்ப செட்டியார் மடம், மதுரை குட்டைய சுவாமிகள் மடம் ஆகியவற்றில் தன் ஞானப் பணியை மேற்கொண்டார். இதன்பின் சிதம்பரம் பொன்னம்பல சுவாமிகள் மடத்தின் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுச் செயல்பட்டார்.

            ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தாறாம் ஆண்டு முதல் கோவிலூர் மடத்தின் இளையபட்டமாக இவர் முன்னிருந்த சுவாமிகளால் நியமிக்கப்ட்டார்.  கோவிலூர் ஆண்டவர் மன்றத்தின் தலைவராக இவர் பணியாற்றினார்.

            இவர் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்றாம் ஆ்ண்டில் காசி யாத்திரை மேற்கொண்டார்.  பன்னிரு சோதிர் லிங்கத் தலங்களையும் இவர் வழிபட்டு வந்தார்.  காளையார் கோயிலில் விழாக்களைச் சிறப்பாக நடத்தி வெற்றி கண்டவர் இவர். இவ்வாறு இவரின் ஆன்மீகப் பணிகள் தொடர்ந்தன.

            இவர் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து இரண்டாம் ஆண்டு  முன்னவர் நிறைவாழ்வு ஏற்றபோது கோவிலூர் மடத்தின் மடாதிபதியாக அமர்ந்து சீர் வளர் சீர் அரு. இராமநாத ஞான தேசிக சுவாமிகள் என்ற பெயர் பெற்று அருளாட்சி ஏற்றார். தொடர்ந்து நான்கு ஆண்டுகள் இறைபணியாற்றி நிறைந்தார்.

பதினொன்றாம் பட்டம்

சீர் வளர் சீர் காசிவிசுவநாத ஞான தேசிக சுவாமிகள்‌ - (1986 - 1995)

                முன்னவரான சீர் வளர் சீர் அரு. இராமநாத ஞான தேசிகர் நிறைவாழ்வு பெற்றபோது, சீர் வளர் சீர் காசி விசுவநாத ஞான தேசிக சுவாமிகள் பதினொன்றாம் பட்டமாக அருளாட்சி ஏற்றார்.  இவர் வேதாந்தத்திலும், திருமந்திரம், சித்தர் பாடல்கள் ஆகியவற்றிலும் ஈடுபாடு உடையவர். வேதாந்த வகுப்புகள் பலவற்றை இவர் நடத்தினார். மேலும் ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம், மருந்துதானம் போன்றவற்றையும் வழங்கி அற நிலையமாக கோவிலூர் மடத்தை  விளங்க வைத்தார்.  ஏழை மாணவர்களுக்குக் கல்வி சிறக்கவும் பணி செய்தார். இவரின் காலத்தில் இலக்கியப்பூங்கா என்னும்கருத்தரங்கு நிகழ்ச்சி திங்கள்தோறும்நடத்தப்பட்டது. இவரின் காலத்தில் இளம் பிள்ளைகள் படிக்க ஏற்ற வகையில் ஞானப் புத்தகங்கள் வெளியிடப்பெற்றுள்ளன. மடத்தின் நிர்வாத்தையும் அதன் கணக்குகளையும் சரிவர நடை பெற வைத்தார்.

            இவ்வாறு பல பணிகளை ஆற்றிய சீர் வளர் சீர் காசி விசுவநாத ஞான தேசிக சுவாமிகள்  ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்றைந்தாம் ஆண்டு நிறைவாழ்வு பெற்றார்.

 

கருத்துகள் இல்லை: