வெள்ளி, டிசம்பர் 22, 2023

பொருள் வைத்த சேரி தந்த மெய்ப்பொருள்

 

கோவிலூர் ஆண்டவர் திவ்ய வரலாறு

                              பொருள் வைத்த சேரி  தந்த மெய்ப்பொருள்

மனிதர்கள் தமது உடல்  தோற்றத்தை பல்வேறு வகை  ஆடைகள் அணிந்து அழகு படுத்துகின்றனர்.  இந்த ஆடைகளை நெய்து தயாரித்துத் தரும் நெசவாளர்கள் மனிதர்களின் மானத்தையும் அழகையும் காப்பவர்கள்.  ஆள் பாதி,  ஆடை பாதி இதுவே மனித நாகரீகம். உழவிற்கும் தொழிலிற்கும் வந்தனை செய்வோம் என்றார் பாரதியார். உழவு என்பது விவசாயத்தைக் குறிக்கும். தொழில் என்பது நெசவுத் தொழிலைக் குறிக்கும்.  நெசவுச் தொழில் செய்து, மனித உடலையும், மனித மனத்தையும் அழகுபடுத்தய அன்பர்கள் பலர் உண்டு. வள்ளுவரும் நெசவுத் தொழில் செய்தவர். கபீர்தாசரும்  உடலையும் உள்ளத்தையும் காக்கும் நெசவுத்தொழில் செய்தவர்.  பொருள் வைத்த சேரி என்ற இடத்தில் வாழ்ந்த உகந்த ஞான தேசிக சுவாமிகளும் நெசவுத்தொழில் செய்தவர். தற்காலத்தில் வாழ்க வளமுடன் என்ற மங்கல வாசகத்தை உலகிற்களித்த ஞானி வேதாத்திரி மகரிஷியும் நெசவுத் தொழில் புரிந்தவர். இவ்வாறு நெசவுத் தொழில் புரிந்தவர்கள் மனிதர்தம் அக அழகையும், புற அழகையும் வளமைப் படுத்தியவர்கள். அவர்களின் வழியில் உடலையும் உள்ளத்தையும் பேணி பண்படுத்தி வாழ வேண்டியது மக்களின் வாழ்க்கைக் கடமையாகும்.

            பொருள்வைத்த சேரியில் உகந்த ஞான தேசிகர்  தன் வருவாயை எண்ணிக் கொண்டிருந்தார். நெசவுத்தொழிலில் ஓரளவிற்கு வருமானம் வந்து கொண்டுதான் இருந்தது. தன் வருவாயை அவர் மூன்றாகப் பகுத்தார். ஒன்றில் நாளைக்குத் தன் தொழிலுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிட செலவழிப்பது அவரின் இயல்பு. மற்றொன்றில் தன் குடும்பச் செலவுகளுக்கு என்று ஒதுக்கி வைத்தார். மூன்றாம் பகுதியை தன் இல்லத்திற்கு வரும் அடியவர்க்கு உணவு தருதல், அவர்களுக்கு வேண்டுவன தருதல் என்று செலவழித்தார். இம்மூன்றில் மூன்றாவதைச் செலவழிக்கையில் அவரின் மனம் பெரிதும் மகிழ்ந்தது.

            நாள்தோறும் இப்படித்தான். மூன்றாய் பிரித்த வருவாய், நன்றாய் வளர்ந்தது. நாளும் அடியவர்கள் உகந்தலிங்க ஞான தேசிகர் இல்லத்திற்கு வந்து உணவருந்தினர். அவருடன் ஞானத்தைக் கலந்து பேசி மகிழ்ந்தனர்.

            அன்று சிக்கலில் இருந்து ஓர் ஆன்மப் பக்குவப்பட்ட இளைஞர்  உகந்த லிங்க ஞான தேசிகரைப் பணிந்து வணங்க வந்தார். அவருடனே என்றும் அவரைப் பிரியாது இருக்கும் நல்லான்  என்ற நண்பரும் வந்தா்.  வந்த இளைஞர் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவராகக் காணப்பட்டார். தன் மேனி முழுவதும் திருநீறு பூசியவராக விளங்கினார். மேலும் அவர் தன் நண்பன் நல்லானோடு  தெய்வ சம்பந்தமான விஷயங்களை விவாதிப்பார். தென்கிழக்கு திரைசயில் இருந்த திருவாசல் மடம்தான் அந்த இளைஞரின் இருப்பிடமாக விளங்கியது. தனக்கான குருவைத் தேடிடும்  பார்வை அவரிடத்தில் இருந்தது.  தனக்கென  யாதுமின்றி இறையுளத்துடன் திரிபவராக விளங்கிய அந்த இளைஞரை உகந்த லிங்க ஞான தேசிகர் திருக்கண் நோக்கிப் பார்த்தார்.

            அப்பார்வையிலேயே தான் தேடிவந்த ஞான குரு இவர் தான்  உணர்ந்து கொண்டார் அந்த இளைஞர். அந்த இளைஞரிடத்தில் அவரது பெற்றோர் பற்றியும் ஊர் பற்றியும் உகந்த லிங்க ஞான குரு வினவினார்.

            இறைபற்றைத் தவிரக் குடும்பப் பற்று அற்று இருந்த அந்த இளைஞரிடம் கேட்கப் பட்ட இந்தக் கேள்விகள் அர்த்தமற்றவையாக விளங்கின. இருந்தாலும் கேட்பது குரு என்பதை உணர்ந்து அவர் பதில் தந்தார்.

            ”என் பெயர் முத்து ராமலிங்கம். ஆனால் முத்தி ராமலிங்கம் என்றே என்னை நான் அழைத்துக்கொள்வதுண்டு. முத்தி நிலை அடையவேண்டும் என்பதாலேயே  நான் என் பெயரை முத்திராமலிங்கம் என்று வைத்துக் கொண்டேன்.

            இந்த முத்தி ராமலிங்கம்  முத்தி பெறுவதற்காக உகந்தரை உவந்து வந்துள்ளது. தாங்கள் எனக்கு நல்வழி காட்ட வேண்டும்.

            என் ஊர் பற்றி தாங்கள் கேட்டதற்கு நான் பதில் சொல்ல வேண்டும்.  வணிகர்கள் வாழும் காரைக்குடி எனது ஊர். அந்த ஊரில் என் தந்தையான மெய்யப்பரும் தாயான வள்ளியம்மை வாழ்ந்து இல்லறத்தின் விளைபயனாய் என்னைப் பெற்றெடுத்தார்கள். பெற்றவர்கள் அவர்கள் என்றாலும் என்னை ஆட்கொண்டு ஞானத் தந்தையாக விளங்கவேண்டியவர்கள் தாங்களே” என்று சொல்லி  அவரிடத்தில் தன்னை அந்த இளைஞர் முற்றிலும் ஒப்படைத்தார்.

தன்னை நாடிவந்த நல்ல ஆன்மாக்களை ஈடேற்றும் பெரும்பணியைச் செய்துவந்தவர் பொருள் வைத்த சேரி உகந்த லிங்க ஞான தேசிகர். அவரும் இந்த இளைஞனின் அருள் நோக்கத்தை அறிந்து அவருக்கு ஞான உபதேசம் அளிக்க திருக்கண் பார்வை சேர்த்தார்.

இந்த இளைஞருக்குச் சில நாள்கள் முன்னர்தான் இதுபோல் கந்தசாமி என்பவரும்  முழுவதுமாக உகந்த லிங்க ஞானதேசிகரிடம் ஒப்படைத்து குரு உபதேசம் பெற்றார்.  அவரின் தகுதி அறிந்து அவருக்கு உபதேசம் செய்தருளி அவரை அண்ணாமலையில் சென்று மடம் அமைத்து சேவையாற்ற குருவாசகம் கிடைத்தது.

கந்தசாமி ஞான தேசிக சுவாமிகளும் திருவண்ணாமலையை அடைந்து அங்குக் கிழக்குப் புறத்தில் ஞான வேள்வியைத் தொடங்கினார். இவரின் இருப்பிடத்தில் இவருக்கு இவரின் அடியார்கள் மடம் அமைத்தனர். திருவண்ணாமலையில் அமைந்த முதல் மடம் ஈசானிய மடம் என்பது குறிக்கத்தக்கது. ஈசானத்தில் அமைந்த மடம் ஈசானிய மடம் ஆனது. கந்தப்பர் ஈசானிய தேசிகர் ஆனார். அவர் ஞானவழியில் அருஞ்சாதனைகள் புரிந்தார்.

 ஈசானிய மடம் கோவிலூர் மடத்தின் ஆளுகைக்கு உட்பட்டு நாளும் இறை பணி ஆற்றி வருகிறது. இம்மடம் செட்டிநாட்டுக் கட்டடக் கலையில் கட்டப்பெற்று இன்று பொலிவுடன் திகழ்கிறது.  இவ்வீசானிய  மடத்தில், கந்தப்ப சுவாமிகள் சுரங்கம் அமைத்து தவமியற்றும் வழக்கம் கொண்டார். ஒருநாள் கந்தப்பசாமி  தவத்தின்போது இவர் அருகே புலியொன்று அமர்ந்திருப்பதை இவர் கண்டார். ‘‘அண்ணாமலையப்பா! வந்து அணையப்பா!” என்று இவர் தம்மை ஆட்கொள வேண்ட அப்புலி அமைதியாய் அகன்று போனது.

இவ்வாறு பக்குவப்பட்ட உயிர்களுக்கு, ஞானம் தேடிவரும் ஆன்மாக்களுக்கு ஆதரவாய் ஆன்ம பலம் தரும் அரும்பணியை உகந்த லிங்க சாமிகள் பொருள் வைத்த சேரியில் நிகழ்த்தி வந்தார். நமது நல் இளைஞர், கோவிலூர் ஆண்டவர் என்று பின்னாளில் அழைக்கப்பெற்ற முத்திராம லிங்கர் தமது ஞானத் தேடலின் வழியாகச் சிறந்த ஆசிரியரை, நெறிகாட்டும் நல்லவரை உகந்த லிங்க ஞான குருவை அடைந்து ஞானவழிக்குத் தொடக்கம் பெற்றார்.

அன்றிலிருந்து ஞானம் அடைய விரும்பும் இளைஞனாக  அவர் ஆனார். அப்போது அவருக்கு வயது பதின் மூன்று  அவ்வயதிலேயே ஞானத்தின் வலிமையை அவர் உணர்ந்து கொண்டார்.

இவ்வாறு முத்தி ராமலிங்கம் வாழ்க்கையில் பொருள் வைத்து சேரி மெய்ப்பொருளை ஆண்டவர் மனதில், முத்திராமலிங்கவர் மனதில் வைத்த சேரியாக விளங்கியது. பொருள் வைத்த சேரிக்கு நாமும் போவோம். மெய்ப்பொருள் பெறுவோம்.

           

கருத்துகள் இல்லை: