கோவிலூரின் கதை
-11
சீர்
வளர் சீர் நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள் வரலாறு
முனைவர்
மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத்
தலைவர்
அரசு
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருவாடானை
கோவிலூர் மடாலயத்தின் பன்முக ஆற்றல்களும், கல்விப் பணி உயர்வுகளும்,
கோயில்கலைகளைக் காக்கும் அரிய பணிகளும், அரிய புத்தகங்களின் வெளியிட்டுப் பணிகளும், பல்வேறு கோயில்கள், மடங்களின் திருப்பணிகளும் செம்மையுற
நடைபெற்ற காலம் என்பது சீர் வளர் சீர் நாச்சியப்ப ஞான தேசிகரின் அருளாட்சிக் காலம்தான். சீர் வளர் சீர் முத்திராமலிங்க ஆண்டவர் ஞான தேசிக
சுவாமிகளின் அருள் வாக்கான ‘‘எனக்குப் பின் வீரன் வருவான், பேரன் வருவான்’’ என்பதன்படி கோவிலூர் மடாலயத்திற்கு ஞான வள்ளலாக
வந்து அமைந்தவர் சீர் வளர் சீர் நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள் ஆவார்.
பன்னிரண்டு
என்ற எண் சிறப்பிற்குரியது. தமிழ் மொழியில் உயிர் எழுத்துகள் மொத்தம் பன்னிரண்டு. முருகனின்
கரங்கள், தோள்கள், கைகள், கண்கள் ஆகிய அனைத்தும் தனித்தனியே பன்னிரண்டு. திருமுறைகள்
பன்னிரண்டு. ஆழ்வார்கள் பன்னிருவர். ராசிகள் பன்னிரண்டு. சோதிடக் கட்டங்கள் பன்னிரண்டு. இவ்வாறு பன்னிரண்டு
என்ற எண் சிறப்பிற்குரியதாக விளங்குகிறது. கோவிலூர் மடாலயத்தின் வரலாற்றில் பன்னிரண்டாவது ஞானகுருவாக விளங்கியவர் சீர் வளர் சீர் நாச்சியப்ப
ஞான தேசிக சுவாமிகள் ஆவார்.
கோவிலூர் முத்திராமலிங்க ஆண்டவரின் மகன் வழியில் ஆறாவது தலைமுறையில்
பேரனாகத் தோன்றியவர் நாச்சியப்ப சுவாமிகள். இவர் பூர்வாசிரமத்தில் மானகிரியைச் சார்ந்த
திரு சிதம்பரம், திருமதி சீதாலட்சுமி ஆகியோரின்
புதல்வராக 29-5-1923 ஆம் நாள் நாச்சியப்பர் அவதரித்தார்.தன் இளம் வயது கல்வியை மானகிரியில்
உள்ள திண்ணைப் பள்ளியில் இவர் கற்றார். இதன்பின் காரைக்குடி மீனாட்சி சுந்தேரசுவரர்
பள்ளியில் பள்ளிப்படிப்பினை நாச்சியப்ப சுவாமிகள் தொடர்ந்தார்.
இதன்பின்
நாச்சியப்ப சுவாமிகளின் கல்வி சென்னையில் பெசண்ட் நினைவுப் பள்ளியில் பயின்றார். இக்காலத்தில்
கலைவித்தகர் திருமதி ருக்மணிதேவி அருண்டேல் அவர்களின் ஆதரவு இவருக்குக் கிடைக்கப்பெற்றது.
இவ்வாதரவினால் கல்லூரிப்படிப்பினையும் பெற்றார்
நாச்சியப்பர். நாச்சியப்பரின் புதுமை எண்ணம், திட்டமிட்ட செயல்பாடு ஆகியன அவரை திருமதி
ருக்மணி அருண்டேல் அவர்களின் பெருநம்பிக்கைக்கும், பெருமதிப்பிற்கும் உரியதாக ஆக்கியது.
அவர் இவரை அயல்நாடுகளுக்கு அனுப்பி வைத்து நிழற்படக் கலை வல்லுநராக உயர்த்தினார். உலகப்
புகழ் பெற்ற கோடாக் நிறுவனத்தில் நாச்சியப்பர் பணியாற்றி பல புது முயற்சிகளுக்கு வித்திட்டார்.
இதே நேரத்தில் லண்டன், நியுயார்க், டெட்ராய்ட் ஆகிய நகரங்களில் அரங்க ஒளியமைப்பு, மேடைக்கலை
ஆகியன குறித்தும் அவற்றின் நுட்பங்கள் குறித்தும் கற்றுத்தேர்ந்தார். தாய்நாடு திரும்பிய நாச்சியப்பர், தன் தாய்வீடான
கலாஷேத்திரா வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். கலாஷேத்திரா நிகழ்ச்சிகளுக்கு அரங்க
வடிவமைப்பு, புகைப்படப் பதிவு, நிகழ்வு ஏற்பாடு போன்ற பல பணிகளுக்கு நாச்சியப்பர் உதவினார்.
இக்காலத்தில் குழந்தைக்கல்விமுறைக்கு
வித்திட்ட திருமதி மாண்டிச்சேரி அம்மையாரின் உதவியாளராக நாச்சியப்பர் அமைந்து அவரின்
முயற்சிகளுக்குத் துணைபுரிந்தார். கலாச் சேத்திரா நிறுவனம் வழியாக மாண்டிச்சேரி அம்மையாரின்
நூல்கள் வெளிவரக் காரணமாக அமைந்தவர் நாச்சியப்பர் ஆவார். கிடைத்தற்கரிய பொக்கிஷங்கனான
மாண்டிச்சேரி அம்மையாரின் நூல்கள் கலாஷேத்திராவின்
வெளியீடுகளில் மிகப் புகழ் வாய்ந்தனவாகும். மேலும் நாச்சியப்பர் எடுத்த ருக்மணிதேவி
அருண்டேலின் அவர் குழுவின் நடன நாடகப் புகைப்படங்கள்
மிக அரிய பொக்கிஷங்கள் ஆகும். இவை தற்போது கோவிலூர் மடாயலத்தில் பாதுகாக்கப்பெற்று
வருகின்றன.
கலாஷேத்திரா குழுவுடன் உலகின் பல நாடுகளுக்குப் பயணம் செய்து
வெற்றிகரமாக கலை நிகழ்ச்சிகளை நடத்த நாச்சியப்பர் உதவினார். திருமதி ருக்மணி தேவி அருண்டேலின்
மறைவிற்குப் பின் நாச்சியப்பர் அமெரிக்காவில் பெரும்பாலும் தங்க நேர்ந்தது. அங்கு அவர்
பல ஓவியர்களின் நட்பினைப் பெற்றார். அவர்களின் படைப்புகளை நூறு பிரதிகளாக உருவாக்கும்
நேர்த்தி நாச்சியப்பருக்கு கைவந்த கலையானது. வரையப் பெற்ற ஓவியத்தைப் போன்றே புகைப்படங்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவர் நாச்சியப்பர். புகைப்படத்தில்
வண்ணச் சேர்க்கை, வண்ணப்பிரிப்பு ஆகியவற்றைச் செய்வதில் அவருக்கு அவரே நிகரானவர். இவரின் புகைப்பட ஓவியம்
பல மில்லியன் டாலர்களுக்கு விற்பனையானது. இவரின் புகைப்படத்திற்குத் தனித்த அடையாளம்
உலக அளவில் கிடைத்தது. இதன்வழி செல்வாக்கு
மிக்கவராகவும் செல்வம் தழைத்தோங்கி வாழ்பவராகவும் நாச்சியப்பர் விளங்கினார்.
இவரின் அனுமன் குறித்த
நூலும், தஞ்சாவூர் பெரிய கோவில் ஓவியங்கள் அடங்கிய நூலும் இந்தியாவில் இவர் புகழைப்
பரப்பின. தான் சேர்த்த செல்வங்கள் அனைத்தையும் தன் தாய்நாடான இந்தியாவில் பல நிலைகளில்
நிலைப்படுத்தினார் நாச்சியப்பர்.
சேர்க்காத திரவியங்கள் இல்லை. சேர்க்காத புகழ் இல்லை என்று
வாழ்ந்து வந்த நாச்சியப்பரின் வாழ்வில் ஞானப்பார்வையும் பட ஆரம்பித்தது.1975 ஆம் ஆண்டில்
அதற்கான ஒரு அறிகுறியும் தென்பட்டது. இவரின்
நண்பர் பாலகிருஷ்ண சாஸ்திரிகள் என்பவர் நாச்சியப்பரை காஞ்சிபுரத்திற்கு இவரை அழைத்துச்
சென்று காஞ்சி மாமுனிவர் சந்திரசேகர சரசுவதி
சுவாமிகளைச் சந்திக்க வைத்தார். அப்போது இவரிடம் பேசிய காஞ்சி மாமுனிவர் ‘‘ தாங்கள்
…..நகரத்தார்…… கோவிலூரார் வீடு …… என்று குறிப்பிடுவதால் கோவிலூர் மடத்துடன் சம்பந்தம்
வைத்துக் கொள்ளுங்கள் ” என்று ஆசி வழங்கினார். இதனைக் கேட்ட நாச்சியப்பர் தனக்கும் கோவிலூர் மடத்திற்கும் சம்பந்தம் ஏற்படுவது சாத்தியமா
என்றே எண்ணினார்.
காலங்கள்
உருண்டோடின. தான் சேர்த்த செல்வத்தைத் தாய்நாட்டில் நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும்
என்று நாச்சியப்பரின் உள்மனம் கட்டளையிட்டது.
இந்தக் கட்டளையை ஏற்று சென்னைக்கு அருகில் இந்தியன் இன்ஸ்டியுட் ஆப் இண்டாலாஜி
என்ற நிறுவனத்தையும், சனாதன தர்ம பல்கலைக்கழகத்தையும் நிறுவ அவர் முன்வந்தார். இதற்காக நானூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை வாங்கி
இதனைத் தொடங்க ஆவன செய்தார். அந்நேரத்தில் இதன் திறப்புவிழாவிற்கு அப்போதைய கோவிலூர்
மடாலய சீர் வளர் சீர் காவி விசுவநாத சுவாமிகள்
அழைத்து வரப்பெற்றார். இத்தொடக்க விழாவே நாச்சியப்பரின் ஞான வாழ்வின் தொடகத்திற்கு அடிகோலியது.
சீர் வளர்
சீர் காசி விசுவநாத சுவாமிகளின் கனவில் திருநெல்லை அம்மன் தோன்றி அடுத்த பட்டமாக அமையத்
தகுதியானவர் நாச்சியப்பர் என்று திருவருள் காட்டியது. இதனை மனத்துள் கொண்ட பதினொன்றாம்
பட்டம் மந்தன உயிலில் தனக்குப் பின் நாச்சியப்பரே பட்டம் ஏற்கவேண்டும் என்று பதிவு செய்தார். இப்பதிவே நாச்சியப்பரை பதினொன்றாம்
பட்டம் திருநிறைவு அடைந்தபின் ஞான பீடத்தில்
ஏற்றி வைத்தது. பிரம்ம சபையில் அமர
வைத்தது.
1995 ஆம்
ஆண்டு ஜுலை மாதம் பதினான்காம் நாள் நாச்சியப்பர் சீர் வளர் சீர் நாச்சியப்ப ஞான தேசிக
சுவாமிகளாக ஞான வாழ்வு மேற்கொண்டார். அன்று முதல் கோவிலூர் வேதாந்த மடம் பழம் பெருமையையும், புதுப் பொலிவையும்
ஒருங்கே கொண்டு உலகின் உயர்விடத்தைப் பெறத் தொடங்கியது.
சீர் வளர்
சீர் நாச்சியப்ப சுவாமிகள் தன் ஞானவாழ்வு ஏற்ற நிலையில் தான் சேகரித்த அத்தனைப் பொருள்
செல்வத்தையும் மடத்திற்கு ஆக்கினார். மடத்தின் நிர்வாகத்தில் சீர்மையைக் கொண்டுவந்தார். பன்னிரு கிளை மடங்களைச்
செழுமைப்படுத்தினார். இவை தவிர மூன்று புதிய கிளைமடங்களையும் இவர் உருவாக்கி வளர்த்தெடுத்தார்.
நாச்சியப்ப
சுவாமிகள் காலத்தில் பல்வேறு திருப்பணிகள் நடத்தப்பெற்றன. 197 ஆம் ஆண்டு திருவண்ணாமலை
ஈசானிய மடம் புதுப்பிப்பு, பொருள் வைத்த சேரி மடம் மற்றும் அருள்மிகு சுவர்ணபுரிசுவரர்
திருக்கோயில் திருப்பணி மற்றும் குடமுழுக்கு, மருத வனம் அருள்மிகு மருதவனேஸ்வரர் திருக்கோயில்
குடமுழுக்கு, திருக்களர் வீரசேகர ஞான தேசிகரின் அதிட்டானக் கோயில் குடமுழுக்கு, சிதம்பரம் கோ. சித மடத் திருப்பணி, மேட்டுப் பாளையம் சபாபதி சுவாமிகள் மடத் திருப்பணி,
எறும்பூர் தத்துவராய சுவாமிகள் மடம் திருப்பணி, திருக்களர் அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர்
ஆலயத் திருப்பணி, கோவிலூரில் ஆண்டவர் அருட் கோயில் திருப்பணி, கோவிலூர் அருள்மிகு திருநெல்லை
உடனாய கொற்றவாளீசர் திருக்கோயில் திருப்பணி,
மானாமதுரை நாராயண சுவாமிகள் மடம் திருப்பணி, வளவனூர் சண்முக சுவாமிகள் அருட்கோயில் திருப்பணி, திருக்களர் புதிய தேர் திருப்பணி,
கோவிலூர் தேர் திருப்பணி போன்ற பல திருப்பணிகள் நாச்சியப்ப சுவாமிகள் காலத்தில் நிகழ்த்தப்பெற்றன.
அறுபத்து
மூன்று நாயன்மார்களில் ஐவர் நகரத்தார் பெருமக்கள் ஆவர். அவர்களின் முக்தி பெற்ற தலங்களில் ஆண்டு தோறும் அவர்களின்
முத்தி பெற்ற நட்சத்திரத் தன்று வழிபாடும் அன்னதானமும் செய்யத் திருவுளம் கொண்டு அதனையும் செய்துவர ஆவனவற்றை நாச்சியப்ப சுவாமிகள் செய்தார்.
முதலாவதாக
சுவாமிகள் கோவிலூரில் மழலையர் கல்விக் கூடத்தை ஏற்படுத்தினார். தொடங்கிய நாளில் பள்ளிக்கு
வந்து சேர்ந்த சிறுபிள்ளையின் பெயர் திருநெல்லை. திருநெல்லை கல்விக் கூடத்தில் முதலடி
எடுத்து வைத்தாள். அதன்பின் பல கல்வி நிறுவனங்கள் தோன்றின. கோவிலூர் ஆண்டவர் உடற்பயிற்சிக்
கல்லூரி, சமுதாயக் கல்லூரி, பல் தொழில் நுட்பக்
கல்லூரி போன்றன சுவாமிகளின் காலத்தில் தொடங்கப்பெற்று வளர்ந்து வருகின்றன.
மேலும்
கோயில்கலைகளை வளர்த்தெடுப்பதில் தனிக் கவனம் செலுத்தினார் சீர் வளர் சீர் நாச்சியப்ப
சுவாமிகள். தேவார இசை, நாகசுரம் மற்றும் தவில் வாசிப்புக் கலை, சிற்பக் கலை,
ஐம்பொன் சிற்பக் கலை, தேர் சிற்பக் கலை, வேத ஆகமக் கலை ஆகியவற்றை வளர்க்க தனித்தனி
கல்லூரிகளைச் சுவாமிகள் தொடங்கினார். இவற்றை ஒருங்கிணைத்து கோயில் கலைப் பல்கலைக் கழகம்
உருவாக்கப்பட வேண்டும் என்பது சுவாமிகளின்
கனவு. இவை தவிர தேவாரம், முத்துசாமி தீட்சிதர் பாடல்கள் போன்றன இசைவட்டுக்களாக சுவாமிகளின் பேராதரவினால் உருவாகின. கோவிலூர் மரபு வேதாந்த நூல்கள், சங்க இலக்கியங்கள், திருமந்திரம் ஆகியன சுவாமிகளால்
செம்பதிப்புகளாக வெளியிடப் பெற்றன. அவ்வப்போது வேதாந்த மாநாடுகள், தமிழ் வளர்ச்சி மாநாடுகள்
சுவாமிகளால் நடத்தப்பெற்றன. அனைத்து ஊர் நகரத்தார்
கூட்டமும் சுவாமிகளின் காலத்தில் நடத்தப் பெற்றது.
சமுதாய
வளர்ச்சிக்காக, வேதம் படிப்போருக்கு உதவித் தொகை, வட்டியில்லா கல்விக் கடன், முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் தொகை போன்றனவும்
கோவிலூர் மடத்தினால் செய்யப்பட சுவாமிகள் காரணமாக
இருந்தார்.
மேலும்
காசி, டில்லி, ஹரிதுவார் போன்ற இடங்களில் கோவிலூரின்
மடங்களை நிறுவிய பெருமை சீர் வளர் சீர் நாச்சியப்ப
சுவாமிகளையே சாரும்.
இவ்வாறு அரும்பெரும் பணிகளை ஆற்றிய சீர் வளர் சீர் நாச்சியப்ப
ஞானதேசிக சுவாமிகள்2011 ஆம் ஆண்டு அக்டோபர்
திங்கள் மூன்றாம் நாள் தன் எண்பத்தெட்டாம் வயதில் நிறைவாழ்வினைப் பெற்றார்.
--------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் மீனவன் எழுதிய நாச்சியப்ப சுவாமிகள் சதமணி மாலையில்
இருந்து சில பாடல்கள்.
வீரனார் செய்து காத்த வெற்றிசால் பணிகள் எல்லாம்
பேரனார் நாச்சி யப்பர் பெரும்பணி யான தம்மா
தேரொன்று நெல்லைக் காகத் திரள்பல கோடி தந்தே
ஊரெலாம் மகிழச் செய்தார் ஒப்பிலா நாச்சி யப்பர்
காரெனப் பொழிந்த கைகள் கருணையே இலங்கு கண்கள்
ஊரெலாம் திரண்டு வ்ந்தே உவந்திடப் பணிந்த கால்கள்
சீரெலாம் பொலிந்த நூல்கள் சிறப்புறச் செய்த மேதை
பாருலாம் நாச்சி யப்பர் பதமலர் போற்றி போற்றி
மாதவ்ர் பலரும் கூடி மாண்புசால் வேதாந் தத்தை
ஓதவே செய்து வைத்த உயர்முத்தி ராம லிங்கர்
பாதமே மறவார் ஆகிப் பற்பல கல்விச் சாலை
ஆதியாய் அமைத்த ஞானி
அவரடி போற்றி போற்றி
சீர் வளர் சீர் நாச்சியப்ப சுவாமிகளி்ன் அருள் வரலாறு
காண கேட்க
https://www.youtube.com/watch?v=7lLhtPcqjHo
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக