ஞாயிறு, டிசம்பர் 22, 2024

கோவிலூர் ஆதீனம் ஏழாம் பட்டம் சீர் வளர் சீர் சோமசுந்தர ஞான தேசிக சுவாமிகளின் வரலாறு

 

கோவிலூரின் கதை-8

                                  

                                                                                                முனைவர் மு.பழனியப்பன்

                                                                                                தமிழ்த்துறைத் தலைவர்

                                                                                    அரசு கலை மற்றும் அறிவியல் கலலூரி

                                                                                    திருவாடானை

கோவிலூர் வேதாந்த மடத்திற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு. குருபரம்பரையின்வழியில் வேதாந்தப் பாடம் கற்று வந்த சீடர்கள் தொடர்ந்து குருபீடத்தை அலங்கரித்து வந்தனர்.  இவர்கள் குருபீடத்திற்கு வருவதற்குத் தயக்கம் காட்டினாலும் பரம்பொருளின் அருளாற்றல் அவர்களை குருபீடம் அலங்கரிக்க வாய்ப்பளித்து வந்தது. அவ்வகையில்  குருபீடத்தை  எட்டாம் பட்டமாக அலங்கரிக்க வந்தவர் சீர் வளர் சீர் சோமசுந்தர ஞான தேசிக சுவாமிகள் ஆவார்.

பள்ளத்தூர் பெற்ற பெருஞ்சிறப்பு

பள்ளத்தூரில் வாழ்ந்த  இராமநாதன் செட்டியார், மெய்யம்மை ஆச்சி ஆகியோர்க்கு வேண்டித் தவம் இருந்து பெற்றத் திருமகனாக ஆயிரத்து எண்ணூற்றுத் தொன்னூறாம் ஆண்டு மார்ச் மாதம்  பன்னிரண்டாம் நாள் புதன்கிழமை அன்று  சோமசுந்தரர் அவதரித்தார்.  இவரின் இயற்பெயர் நாகப்பன்  என்றும் பின்னால் அது சோமசுந்தரமாக மாறியது என்றும் கருத்து உண்டு.

சோமசுந்தரர் அக்காலக் கல்வியையும் ஆங்கில மொழிக் கல்வியையும் கற்று வந்தார். நற்கல்வி, நல்லொழுக்கம் போன்றவற்றிற்கு இருப்பிடமாக சோம சுந்தரர் விளங்கி உரிய வயதில் திரவியம் தேட கோலாலம்பூருக்குச்  சென்று அளவிலாப் பொருள் கொண்டு வந்தார். இவருக்கும் கொத்தமங்கலம் இலக்குமிபுரத்தைச் சேர்ந்த  சிவகாமி என்பவருக்கும் திருமணத்தைப் பெற்றோர்கள் நடத்தி வைத்தனர்.

இருப்பினும் காலத்தின் கோலம்  சிவகாமி ஆச்சி விரைவில் இறைவனடி சேர்ந்திட தனிமரமாய் ஆனார் சோமசுந்தரர். அக்காலம் அவருக்கு உலகின் நிலையாமைப் பண்பினை அறியச் செய்தது.  பள்ளத்தூரில் இருந்து தனது இருப்பிடத்தைச் சோமசுந்தரர் காரைக்குடிக்கு மாற்றிக் கொண்டார்.

காரைக்குடி, முத்துப்பட்டினத்தைச் சார்ந்த கொ.நா. என்னும் பரம்பரை சார்ந்த  இலக்குமியாச்சி அவர்களை இரண்டாம் மனைவியாக ஏற்று மணம் புரிந்தார் சோமசுந்தரர். இக்காலத்தில் காரைக்குடியில்  தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கனார் ஆன்மீக, இலக்கியப் பணிகளைச் செய்து வந்தார். அவரிடத்தில் சோமசுந்தரர் பல இலக்கிய ஆன்மீகப் பாடங்களைக் கேட்டு மகிழ்ந்தார்.

துறவு நோக்கம்

மெல்ல மெல்ல மெய்யுணர்வை நோக்கி சோமசுந்தரரின் வாழ்க்கை திரும்ப ஆரம்பித்தது.  இவரின் வழிபடு தெய்வம் குன்றக்குடி  ஆறுமுகப் பெருமான் ஆவார். இவர் அவ்வப்போது குன்றக்குடிக்குச் சென்று வருவதும் இறைநிலையில் இருப்பதும் பழக்கமும் வழக்கமும் ஆகியது. குன்றக்குடி  சண்முகநாதன் சன்னதியில் அங்குப் பணிபுரிந்த  சதாசிவக் குருக்கள் என்பவர் இவருக்குச் சிறந்த வழிகாட்டியாக அமைந்தார். இவரிடம் சோமசுந்தரர் பஞ்சாக்கர உபதேசம் பெற்றார். சோமசுந்தரர்  பஞ்சாக்கர மந்திரத்தை நாளும் ஓதி   தன் மனத்தை துறவு நிலைக்கு பயணிக்க வைத்தார்.  இல்லறம் துறந்து துறவறம் ஏற்க இவர் மனம் தயாராகியது. நெடுங்குடி தலத்திற்குச் சென்று, அங்கு இருந்து தட்சிணா மூரத்தியின் திருவடிக் கீழ் காவியாடையை வைத்து, அதனை ஏற்று அணிந்து கொண்டுத் துறவியனார். இல்லத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் இத்துறவு அறிந்து கொள்ள இயலா நிலையில் அமைந்தது. இதன்பின் பல தலங்களுக்குத் தலயாத்திரையைச் சோமசுந்தரர் மேற்கொண்டார்.

கோவிலூர் ஈர்ப்பு

தலயாத்திரை செய்து முடித்தபின் கோவிலூர் மடத்தின் வேதாந்த விழுப்பொருள் சோமசுந்தரரை ஈர்த்தது. அப்போது ஆறாம் பட்டமான  சீர் வளர் சீர் அண்ணாமலை ஞான தேசிகர்  கோவிலூரில்  இருந்தபடி வேதாந்தப் பணிகளைச் செய்துவந்தார். அவரிடத்தில் தன்னை ஒப்படைத்து, தனக்கு நல்வழி காட்டி ஆட்கொண்டருள வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

கோவிலூரின் ஆறாம் பட்ட ஞானகுருவும் இவருக்கு அருள்செய்து சிலகாலம்  காரைக்குடி நகரில் பிச்சை புகுந்து  வாழ்ந்து வருக என்று வழிகாட்டினார். காரைக்குடியில் பிச்சை ஏற்று வாழ்ந்து வந்த சோமசுந்தரர் ஒருநாள் தன் இல்லத்தின் முன்பே பிச்சை கேட்டு நின்றார். இதனைக் கண்டு துணுக்குற்றது சோமசுந்தரர் குடும்பம். விதிவசத்தால் பிச்சை தந்தும் பிச்சை ஏற்றும் நிகழ்ந்தது அந்நிகழ்ச்சி.

தன் இல்லத்திலேயே பிச்சை புகுந்து துறவின் தூய தன்மையை உலகுக்கு உணர்த்திய சோமசுந்தரரின் செயல் ஆறாம் பட்டத்திற்கு எட்டியது. சோமசுந்தரரைக் கோவிலூர் மடத்தில் தங்கிட அனுமதித்து மடத்துப் பணிகளையும் வேதாந்த அறிவையும் பெற  ஆசிரியரின் திருவுள்ளம் ஆணை தந்தது.  அவ்வாணையைத் தலைமேல் ஏற்று நிறைவாகச் செய்து வந்தார் சோமசுந்தரர்.

கால ஓட்டத்தில் ஆறாம் பட்டம் பரம்பொருள் இருக்கைசேர, இரண்டாம் குருவாக  ஏழாம் பட்டம் சீர் வளர் சீர் மகாதேவ ஞான தேசிக சுவாமிகள்  அமைந்து சோமசுந்தரருக்கு நல்வழி காட்டினார்.  மேலும் முதல்நிலையில் பாடம் கேட்டவர்கள் இரண்டாம் நிலையில் சோமசுந்தரரிடம் பாடம் கேட்கலாம் என்றும் அருளாணை பிறந்தது. சோமசுந்தரர் திடமாக, செம்மையாக வேதாந்தப் பாடம் நடத்தும் வல்லுநராக விளங்கிப் பலரையும் வேதாந்தத்திற்குள் ஆழங்கால் படவைத்தார்.  இவ்வாறு பதினைந்து ஆண்டுகள்  நடைபெற்றன.

திரும்ப அழைத்த சிதம்பரம் பணி

சீர் வளர் சீர் மகாதேவ ஞான தேசிகர் காசி போன்ற இடங்களுக்குத் தல யாத்திரை மேற்கொண்டார். அந்த யாத்திரையில் அவருடன் சோமசுந்தரரும் இணைந்து கொண்டு அருள் பெற்றார். இது முடிந்த நிலையில் சிதம்பரம் பொன்னம்பல சுவாமிகள் மடத்தின் காரியங்களைக் கவனிக்க சோமசுந்தரர் அனுப்பப் பெற்றார். அங்கு மடத்தில் சிலகாலம் வதிந்த  சோமசுந்தரர் இப்பணியும் துறவிற்கு இடையீடானது என்று கருதி  இதனை விடுத்து திருவாரூர் தட்சிணாமூர்த்தி மடத்திற்குப் பந்த பாசம் துறக்கச் சென்றுவிட்டார்.

இதனை அறிந்த அனைவரும் அவரை மீளவும் கோவிலூர் பணிக்கும் சிதம்பரம் பணிக்கும் அழைக்க எண்ணினர். சீர் வளர் சீர் மாகதேவ ஞான தேசிகரும், மற்றையோரும் வேண்டி விரும்பி அழைத்த நிலையில் தன் முடிவை மாற்றிக் கொண்டு மீளவும் சிதம்பரப் பணிக்கு வந்து சேர்ந்தார் சோமசுந்தரர்.

சிதம்பரம் பொன்னம்பல சுவாமிகள் மடத்திற்கு கும்பாபிடேகம் ஏற்பாடகி நடந்தது. அவ்விழாவில் சோமசுந்தரர் ஞான ஆசிரியராக அமர வைக்கப்பெற்று சிதம்பரம் கோ. சித மடத்தின் அதிபதியானார். சிதம்பரத்தில் பல சீர்திருத்தங்களைச் சோமசுந்தரர் மேற்கொண்டார்.  அருள்மிகு நடராசப் பெருமானுக்கு நடைபெற்று வந்த கொஸ்துக் கட்டளைச் சிறப்புடன் நடக்க ஆவன செய்தார் சோமசுந்தரர். மேலும் இளமையாக்கினார் கோயில், எறும்பூர் தத்துவராய சுவாமிகள் அருட்கோயில், போன்றன புதுப்பிக்கப்பெற்றுப் பூசை முறைகளும் சிறந்த முறையில் நடக்க ஆவன செய்யப்பெற்றன. மடத்திற்காகப் பல கிராமங்கள் வாங்கப்பெற்றன. பர்மாவில் நிலை மோசமாவதை அறிந்து அங்கிருந்த மடத்தின் பொருள் செல்வங்களை இந்தியா வரப் பெரிதும் உதவினார் சோமசுந்தரர்.

மேலும் பல அரிய நூல்களை அச்சிட்டும் பணிகளையும் செய்தார் சோமசுந்தரர். பொன்னம்பல சுவாமிகளால் உரை எழுதப்பெற்ற பகவத் கீதை, கைவல்லிய நவநீதம் போன்றவற்றையும், தத்துவராய சுவாமிகள் இயற்றிய பாடுதுறை என்னும் நூலையும் சிறந்த முறையில் வெளியிட்டார் சோமசுந்தரர்.

மறுத்தாலும் அடுத்தது இவரே

இந்நிலையில் கோவிலூரின் அடுத்த பட்டமாக சோமசுந்தரர் ஆவதற்கான முறி எழுதப் பட்டு அது அவருக்குத் தெரிவிக்கபட்டது. இருப்பினும் அதனைத் தான் ”எதிர்பார்க்கவும் இல்லை.  விரும்பவும் இல்லை ” என்று பதிலளித்தார் சோமசுந்தரர். இதிலிருந்து அவரின் துறவு மனப்பான்மை தெரியவருகிறது.

இந்நிலையில் ஏழாம் பட்டம் நிறைவுபெற ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்ழோம் ஆண்டு ஆனிமாதத்தில் கோவிலூர் மடாதிபதியாக சீர் வளர் சீர் சோமசுந்தர ஞான தேசிக சுவாமிகள் பொறுப்பில் அமர்ந்தார். இக்காலத்தில் இந்திய அரசாங்கத்தார் இயற்றிய ஜமீன் ஒழிப்பு முறையை எதிர்கொண்டு கோவிலூரின் சொத்துக்களை வழக்காடி காத்த பெருமை இவரையே சாரும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்றாம் ஆண்டு  இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையில் இருந்து கோவிலூர் மடத்தை விடுவித்த பெருமையும் இவரையே சாரும்.

பொருள்வைத்த சேரி மடம், அதனருகில் அமைந்துள்ள அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் ஆலயம்  ஆகியவற்றை சீர் செய்து குடமுழுக்கினைச் சோமசுந்தரர் செய்வித்தார். சிருங்கேரியில் நடைபெற்ற அதிருத்ரசண்டிகா யாகத்திற்கு அழைக்கப்பட்ட  சீர்வளர் சீர் சோமசுந்தர ஞான தேசிகர் அங்குச் சென்று காணிக்கைகள் வழங்கி, கோவிலூர் மடத்தின் வழிவழித் தொடர்பினை உறுதி செய்தார் சோமசுந்தரர்.

இதனைத் தொடர்ந்து சிருங்கேரி ஸ்ரீ ஆசாரியர்  அபிநவ வித்தியா தீர்த்த சுவாமிகள் இராமேசுவர யாத்திரை மேற்கொண்ட நிலையில் கோவிலூரில் ஏழு நாட்கள் தங்கினார். இந்நாட்களில் நகரத்தார் ஊர்களுக்கு இருவரும் சென்று ஆசிர்வாதம் செய்தனர்.

கோவிலூரின் ஏழு மடங்களுக்கும்  சீர் வளர் சீர் சோமசுந்தர சுவாமிகள் பொறுப்பாய் அமைந்து அவை மேம்பட பல வழிகளில் உதவினார். மேலும் இவர் வேதாந்தப் பாடங்களும் நடத்தி வந்தார். தனக்குப் பின்  தக்கார் ஒருவரைக் கோவிலூர் மடத்திற்கு நியமிக்க எண்ணம் கொண்டு, திருவண்ணாமலை  ஈசானிய மடத்தில் இருந்த இராமநாதரை உரியவராகச் சோமசுந்தரர் கண்டுகொண்டார்.

இவ்வாறு இவரின் அருள்பணி தொடர்ந்து வந்த நிலையில் சாதாரண ஆண்டு மாசித்திங்கள், நான்காம் நாள்  காலை முதல் தம்பணிகளில் கவனம் செலுத்தி வந்த சீர் வளர் சீர் சோமசுந்தர சுவாமிகள்  தம் குருநாதர் சீர் வளர் சீர்  அண்ணாமலை ஞான தேசிக சுவாமிகளின் அருள்கோயிலில் சிறப்பு அபிடேகம் செய்து,  மகேஸ்வர பூசையில் கலந்து கொண்டு  பின்பு பிரம்ம சபையில் அடியார்களுக்கு அருள்பாலித்து வந்தார்.  இந்நாளில் மாலை ஆறுமணி அளவில் சீர் வளர் சீர் சோமசுந்தர ஞான தேசிகர் விதேக கைவல்லியத்தை அடைந்தார்.  

 

 

கருத்துகள் இல்லை: