வெள்ளி, பிப்ரவரி 13, 2015

தொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்

பொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இலக்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம், புறம் ஆகிய பொருள்களை வெளிப்படுத்தும் கருவியாக யாப்பு விளங்குகின்றது. யாப்பில் உணர்வைக் கூட்டுவது மெய்ப்பாடாகின்றது. யாப்பில் அணிநலம் சேர்ப்பது அணியாகின்றது. யாப்பில் மரபினை மாறாமல் காப்பது மரபாகின்றது. எனவே பொருள் இலக்கணம் செய்யுளின் வடிவம், அழகு, வெளிப்பாட்டுத்திறன் ஆகியவற்றின் இலக்கணமாக விளங்குகின்றது.

tolkapiyamதொல்காப்பியர் இலக்கியத்தில் இடம்பெறும் உணர்ச்சிகளை மெய்ப்பாட்டியல் என்ற இயலில் தனித்து விளக்குகின்றார். இவருக்குப் பின்வந்த புத்தமித்திரனார் தன் இலக்கண நூலான வீரசோழியத்தில் மெய்ப்பாட்டு இலக்கணத்தைச் சுட்டியுள்ளார்.
புத்தமித்திரனார் தன் வீரசோழிய நூலினை ஐந்திலக்கண நூலாகப் படைக்கின்றார். இந்நூல் எழுத்ததிகாரப் பிரிவில் சந்திப்படலம், சொல்லதிகாரப்பிரிவில் வேற்றுமைப்படலம், தொகைப்படலம், தத்திதப்படலம், தாதுப்படலம், கிரியாபதப்படலம், பொருளதிகாரப் பிரிவில் பொருள்படலம், யாப்பதிகாரப் பிரிவில் யாப்புப்படலம், அலங்காரப் பிரிவில் அலங்காரப்படலம் ஆகிய உட்பகுப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. இதனுள் உள்ள பொருளதிகாரப் பிரிவில், பொருட்படலத்தில் அகம், புறம், அகப்புறம் ஆகியன பற்றிய இலக்கணங்கள் எடுத்துரைக்கப்பெறுகின்றன.
அகப்பாடல்களில் இருபத்தேழு உரைமுறைகள் உள்ளனவாக வீரசோழியம் குறிக்கின்றது. சட்டகம், திணை, கைகோள், நடை, சுட்டு, இடம், கிளவி, கேள்வி, மொழி, கோள், உட்பெறுபொருள் (உள்ளுறை), சொற்பொருள், எச்சம். இறைச்சி, பயன், குறிப்பு, மெய்ப்பாடு, காரணம், காலம், கருத்து, இயல்பு, விளைவு, உவமம், இலக்கணம், புடையுரை, மொழிசேர்தன்மை, பொருளடைவு என்பன அவ்விருபத்தேழும் ஆகும். இவ்விருபத்தேழில் ஒன்றாகக் குறிக்கத்தக்கது மெய்ப்பாடு ஆகும்.இவ்வகையில் இரு   நூல்களிலும் குறிக்கத்தக்க இடத்தை மெய்ப்பாடு பெற்றுள்ளது. தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாட்டு இயல்புடன், வீரசோழிய மெய்ப்பாட்டு இயல்புகளை ஒப்பு நோக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
மெய்ப்பாடு விளக்கம்:
தொல்காப்பியம்
‘‘கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே’’[1]
என்று மெய்ப்பாட்டிற்கு இலக்கணம் வகுக்கின்றது. இலக்கியங்களில் வெளிப்படுத்தப்படும் மெய்ப்பாடு என்பது நுண்ணிய உணர்வுடையாரால் மட்டுமே அறியத்தக்கது. கண்களாலும், செவிகளாலும் மெய்ப்பாடுகள் உணரத்தக்கனவாக இருக்க வேண்டும் என்பன தொல்காப்பியம் தரும் மெய்ப்பாட்டிற்கான வரையறைகள் ஆகும். மெய்யின்கண் படும் பாடு மெய்ப்பாடு என்று பொதுவில் மெய்ப்பாடு என்பதற்குப் பொருள் கொள்ளலாம்.
வீரசோழியம் மெய்ப்பாடு என்பதை ‘‘மெய்க்கட் பட்டு விளங்கிய தோற்றம் செவ்விதின் தெரிந்து செப்பல்’’ [2] என்று விளக்கம் கொள்கின்றது. தொல்காப்பியம் உரைத்த அதே விளக்கத்தினை ஏற்றுத் தாமும் வழிமொழிவதாக வீரசோழியம் விளக்கம் தருகின்றது.
மெய்பாட்டின் வகைகள்:
மெய்ப்பாட்டினைத் தொல்காப்பியர் பொதுவான மெய்ப்பாடுகள், அகத்திற்கே உரிய மெய்ப்பாடுகள் எனப் பிரிக்கின்றார்.
வீரசோழிய ஆசிரியர் அகத்திற்கான மெய்ப்பாடுகள், புறத்திற்கான மெய்ப்பாடுகள் எனப் பகுத்துரைக்கின்றார்.
தொல்காப்பியர் சுட்டும் அகமெய்ப்பாடுகள் வீரசோழியம் காட்டும் அக மெய்ப்பாடுகளுடன் பொருந்தத் தக்கன. தொல்காப்பியர் காட்டும் பொதுவான மெய்ப்பாடுகள் புற மெய்ப்பாடுகளுடன் பொருந்தத்தக்கன.
அகத்திற்கே உரிய மெய்ப்பாடுகள் ஐந்து நிலைகளாக் கொள்ளப்படுவதாகக் குறிக்கிறார் புத்தமித்திரனார். மன்மதனின் ஐந்து கணைகள் போல அது ஐந்து என்பது அவரின் கணக்கீடு. ‘‘ ஐவகை கணையுளாக்கிய காமம்’’[3] என்று இதனைப் புத்தமித்திரனார் மொழிகின்றார். இந்த ஐவகை பின்பு முப்பதியிரண்டுத் துறைகளாகப் பகுக்கப்பெறுகின்றன.
ஐந்து கணைகள்:
சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என்னும் ஐந்தும் அக மெய்ப்பாட்டின் பிரிவுகளாகப் புத்தமித்திரனரால் கொள்ளப்பெறுகின்றன. இவற்றுக்கான விளக்கங்களையும் புத்தமித்திரன் வழங்கியுள்ளார்.
சுப்பிரயோகம் – காதலர் குறித்த சொல்லும் நினைப்புமாக இருப்பது
விப்பிரயோகம்- வெய்துயிர்ப்பு உறுதல்
சோகம்– உடலில் வெம்மை ஏற்படலும், சோறுண்ணாமல் இருத்தலும்
மோகம் – மயக்கமும் மொழி பல பிதற்றலும்
மரணம்- அணங்கலும் வருந்தலும்[4]
என்று ஐவகைக் கணைகளுக்கும் விளக்கம் தருகின்றார் புத்தமித்திரனார். இச்செய்தி தொல்காப்பியத்தில் காணப்படாத செய்தியாகும்.
துறைகள் முப்பத்தியிரண்டு:
      இவ்வைங்கணைகள் முப்பத்தியிரண்டின் வழிப்படுகின்றன. அவை தொல்காப்பிய அக மெய்ப்பாடுகளுடன் ஒப்பு வைக்கத்தக்கன. தொல்காப்பியர் சுட்டும் அக மெய்ப்பாடுகள் அவத்தைகள் என அழைக்கப்படுகின்றன.[5]
mm1
விளர்ப்பேமேற்காண் பட்டியலில் தொல்காப்பிய அக மெய்ப்பாடுகளுடன் பொருந்தும் வீரசோழிய மெய்ப்பாடுகள் காட்டப்பெற்றுள்ளன. பொருந்தாத மெய்ப்பாடுகள் பின்வருமாறு.
 1. பசப்பே
 2. மெலிவே
 3. விதிர்ப்பே
 4. துளக்கந் துயர்தல்
 5. தும்மல்
 6. சோர்தல்
 7. வெருவுதல்
 8. விரும்புதல்
 9. ஒப்பிலாமை
 10. உருகுதல்
 11. மயங்குதல்
 12. மூரி உயிர்ப்பு
 13. மூர்ச்சனை
 14. முறுவல்
 15. காரிகை கடத்தல்
 16. இருந்துழியிராமை
 17. இராகம் இகழ்தல்
 18. சேர் துயிலின்மை
 19. காட்சி விரும்பல்
 20. உண்டி விரும்பாமை
 21. உரைத்தது மறுத்தல்
 22. கண்ணீர் வழிதல்
 23. கனவு நனி காண்டல்[6]
ஆகியன தொல்காப்பியத்தில் இல்லாத புதிய அக மெய்ப்பாட்டுத் துறைகளாக வீரசோழிய ஆசிரியரால் கண்டுகொள்ளப்பெற்றுள்ளன.
புறமெய்ப்பாடுகள்:
தொல்காப்பியர் பொதுவான மெய்ப்பாடுகள் எனச் சுட்டிய நகை முதலான எட்டையும் ஏறக்குறைய புற மெய்ப்பாடுகளாகக் கருதுகின்றார் வீரசோழியம் இயற்றிய புத்தமித்தினரார். அவற்றின் பட்டியல் பின்வருமாறு.
mm2
இப்பட்டியல் தொல்காப்பிய மெய்ப்பாடுகளுடன் வடமொழி மெய்ப்பாடுகளையும், வீரசோழிய மெய்ப்பாடுகளையும் ஒப்பிட்டு நோக்குகின்றது. இவற்றில் வெகுளி என்ற மெய்ப்பாடு வீரசோழியத்தில் இடம்பெறவில்லை. உட்கோள் என்பது புதிதாக இடம்பெற்றுள்ளது. சிருங்காரம் என்பது வடமொழிக்கும், வீரசோழியத்திற்கும் பொருந்துகிறது. இப்பொருத்தம் வீரசோழியம் வடமொழிச் சார்பினது என்பதைத் தெரிவிப்பதாக உள்ளது. வடமொழியின் சாந்தம் தமிழ் மரபில் தனித்த நிலையில் ஏற்கப்பெறவில்லை என்பதற்குத் தொல்காப்பியமும் வீரசோழியமும் அதனை விடுத்தது கருதித் தெரியவருகின்றது.
இவ்வெண்வகை மெய்ப்பாடுகளும் தோன்றும் களங்கள் நான்காகும். இதனைத் தொல்காப்பியமும் ஏற்கின்றது. வீரசோழியமும் ஏற்கின்றது. அவற்றையும் இங்குப் பொருத்திப் பார்ப்பது மெய்ப்பாடு குறித்த முழுமையான புரிதலை உண்டாக்கும்.
நகை:
நகை தோன்றும் இடங்களாகத் தொல்காப்பியம்,
எள்ளல், இளமை, பேதமை, மடனென்று
உள்ளப்பட்ட நகை நான் கென்க[7]
என்ற நான்கினைக் காட்டுகின்றது. வீரசோழியம்
மயக்கம்,பெயர்ப்பே, இகழ்வே, நோக்க
நயப்பத் தோன்றும் நகையது நலனே[8]
என்ற நான்கினைக் காட்டுகின்றது. இவற்றை ஒப்பிட்டுப் பின்வரும் பட்டியல விளக்குகின்றது.
mm3

அழுகை:
நகைக்காக களங்கள் ஏறக்குறைய இரு நூல்களிலும் பொருந்துவதாக அமைகின்றது. இளமை என்ற ஒன்று தொல்காப்பியத்திலும், பெயர்ப்பு என்ற ஒன்று வீரசோழியத்திலும் தனித்து் விளங்குகின்றன. எனவே நகை தோன்றும் இடங்கள் நான்கில் இருந்து ஐந்தாக வளர்ச்சி பெற்றுள்ளது எனக் கொள்ள இயலும். எள்ளல், இளமை, பேதமை, மடன், பெயர்ப்பு நகை தோன்றுவதற்கான இடங்களாகின்றன.
அழுகை என்ற மெய்ப்பாட்டினைத் தொல்காப்பியர் காட்ட அதற்கு இரக்கம் என்ற மெய்ப்பாட்டை இணையாக வைக்கின்றார் வீரசோழிய ஆசிரியர்.
இழிவே, இழவே, அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே[9]
என்பது தொல்காப்பியம்
வருத்தம் இகழ்வே விலியின்மை, பெருமை
இரக்கந் தோன்றும் இந்நாலிடத்தே[10]
என்பது இரக்கம் மெய்ப்பாடு தோன்றும் நான்கு களங்கள் என்கிறது வீரசோழியம். இதன் பொருத்தப்பாடு பின்வருமாறு.
mm4

இளிவரல்:
அழுகைக்கான களங்களில் இழவிற்குத் தொல்காப்பியத்தில் இடம் தரப்பெற்றுள்ளது. வீரசோழியத்தில் பெருமைக்கு இடம் தரப்பெற்றுள்ளது. மற்ற மூன்றும் பொருந்துகின்றன. எனவே இதுவும் ஐந்தாக வளர்ச்சி கொள்ளுகின்றது. இழிவே, இழவு, அசைவு, வறுமை, பெருமை ஆகியன அழுகைக்கான களங்கள் ஆகும்.
தொல்காப்பியம் சுட்டும் இளிவரலை, இழிப்பு எனக் கொள்கின்றது வீரசோழியம்.
இளிவரல் மெய்ப்பாட்டின் தோற்றக் களங்கள் பின்வருமாறு.
‘‘மூப்போ பிணியே வருத்த மென்மையொடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே’’[11]
இழிப்பு பற்றிய வீரசோழிய நூற்பா பின்வருமாறு
நாற்றஞ் சுவையே தோற்றம் ஊறு என்று
இந்நால் வழித்தாம் இழிப்பு எனப்படுமே[12]
இவ்விரு நூற்பாக்களின் வழி பெறப்படும் பகுப்புகள் பின்வரும் நிலையில் ஒப்பு நோக்கத்தக்கனவாகும்.
mm5

மருட்கை:
தொல்காப்பியம் இளிவரல் எனச் சுட்டுவது, இழிப்பு என்ற வீரசோழியம் காட்டும் மெய்ப்பாடுடன் ஒத்துப்போகின்றது. இளிவரல் தோன்றும் களங்களில் மூப்பு, பிணி ஆகிய இரண்டும் பொருந்துகின்றன. மற்ற இரண்டான வருத்தம், மென்மை ஆகியன பொருந்தவில்லை. வீரசோழியத்தால் புதிதாகக் காட்டப்பெற்றுள்ள நாற்றம்,சுவை ஆகியவற்றால் இழிப்புத் தோன்றும் என்பது உறுதி. எனவே இது இழிப்பின் மெய்ப்பாட்டின் வளர்ச்சி நிலை எனக் கருதலாம். இதனடிப்படையில் மூப்பு, பிணி, வருத்தம், மென்மை, நாற்றம்,சுவை ஆகிய ஆறாக இளிவரல் மெய்ப்பாடு தோன்றும் இடங்கள் அமைகின்றன.
வியப்பு என வீரசோழியத்தால் குறிக்கப்படும் தொல்காப்பிய மருட்கை நான்கு தோற்றக் களன்களை உடையது.
தொல்காப்பியம்,
புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே[13]
என்று மருட்கை தோன்றும் இடங்களைக் காட்டுகின்றது.
வீரசோழியம்
தறுகண்மை, புலமை, பொருளே, பண்பே
பெறுவழித் தோன்றும் பெருந்தகு வியப்பே[14]
என்று வியப்பு பிறக்கும் களங்களைச் சுட்டுகின்றது. இதன் ஒப்பீடு பின்வருமாறு.
mm6
தொல்காப்பியம் சுட்டும் வியப்பிற்கான களங்கள் மூன்றும் பண்பு என்ற வீரசோழியப் பகுப்பில் உள்ளடங்கி விடுகின்றன. ஆக்கம் என்பதற்குப் பொருள் என்பதை ஒப்பாக வைக்கலாம். இவை தவிர தறுகண், புலமை காரணமாக வியப்பு மேலிடலாம் என்றுப் புதிதாக முடிகின்றது வீரசோழியம். ஆகவே புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம், தறுகண், புலமை ஆகியன வியப்பின் பிறப்பிடங்களாக அமைகின்றன.
அச்சம்:
அச்சம் என்ற மெய்ப்பாடு இரு நூல்களாலும் அதே பெயரெில் அழைக்கப்படுகின்றது. இது பிறக்குமிடம் நான்கு என்கிறது தொல்காப்பியம்.
‘‘அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே’’[15]
‘‘மாற்றலர், விலங்கல், மற்றவர் சேருத
லாற்றத் தோன்றும் அச்சத்து விளைவே’’[16]
என்பது வீரசோழியம் காட்டும் அச்ச மெய்ப்பாட்டுக்கான பிறப்பிடங்கள் ஆகும்.
அச்சம் என்ற மெய்ப்பாடு பொருந்தும் நிலையைப் பின்வரும் பட்டியல் விளக்குகின்றது.
mm7

பெருமிதம்:
அச்சத்தில் இரு களங்கள் ஒத்தமைகின்றன. மற்றவர் என்ற களம் வீரசோழியத்தில் உள்ளது. தம் இறை, அணங்கு ஆகியன தொல்காப்பியத்தில் உள்ளன. இவற்றை வீரசோழியம் மற்றவர்கள் எனக் குறிப்பதாகக் கொள்ளலாம். அணங்கு, விலங்கு, கள்வர், இறை, மற்றவர் என்ற நிலையில் அச்சம் அமையலாம். வீரசோழியத்தில் அச்சம் தோன்றும் மூன்று இடங்கள் மட்டும் சுட்டப்பெற்றுள்ளன.
தொல்காப்பியம் சுட்டும் அடுத்த சுவை பெருமிதம் என்பதாகும். இந்தப் பெருமிதத்திற்கும் பிறக்கும் களன் நான்காகும்.
கல்வி தறுகண் இசைமை கொடை யெனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே[17]
வீரசோழியம் பெருமிதம் என்பதை வீரம் என்ற மெய்ப்பாடாகக் கொள்ளுகின்றது. அம்மெய்ப்பாடு பிறக்கும் நான்கு இடங்கள் பின்வருமாறு.
‘‘பகையே செருவே இகலே முனிவே
மிகுவழித் தோன்றும் வீரத்து விளைவே’’[18]
இவ்வகையில் ஓரளவிற்கு இணையும் இம்மெய்ப்பாடுகளைப் பின்வரும் நிலையில் அதன் பிறப்பிடங்களை நோக்கி ஒப்புக் காண முடிகின்றது.
mm8

வெகுளி:
தொல்காப்பியம் பெருமிதம் என்பதை மெய்ப்பாடாகக் கொள்ளுகின்றது. அதன் களங்கள் கல்வி, தறுகண், இசைமை, கொடை என்பதாகச் சுட்டுகின்றது. இவற்றுள் தறுகண் என்பதை வீரமாகக் கொண்டு வீரத்தை மெய்ப்பாடாக வீரசோழியம் கருதுகின்றது. வீரம் என்ற மெய்ப்பாடு வடமொழியிலும் உள்ளது, வடமொழியின் சார்பினால் வீரசோழியம் வீரத்தை மெய்ப்பாடாகக் கருதுகின்றது எனக் கொள்ளலாம்.
வெகுளி என்ற மெய்ப்பாடு தொல்காப்பியத்தில் மட்டும் காணப்படுகின்றது. இதனை ரௌத்திரம் என்று வடமொழி குறிக்கின்றது. வீரசோழியம் இதற்கு இணையாக மெய்ப்பாடு எதனையும் கொள்ளவில்லை.தொல்காப்பியம் உறுப்பறை, குடி, அலை, கொலை ஆகியனவற்றை வெகுளி மெய்ப்பாடு பிறக்கும் களங்களாகச் சுட்டுகின்றது.
தொல்காப்பியம் காட்டும் வெகுளி மெய்ப்பாட்டின் பிறப்பிடங்களை உணர்த்தும் நூற்பா பின்வருமாறு.
‘‘உறுப்பறை குடிகோள் அலைகொலை என்றன
வெறுப்ப வந்த வெகுளி நான்கே’’[19]
இம்மெய்ப்பாட்டினைப் புத்தமித்திரர் தன்னுடைய நூலான வீரசோழியத்தில் விடுத்ததற்கான காரணம் உண்டு. உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என்பன நான்கும் ஒருவரை வருத்தும் துயரங்கள் ஆகும். இதனை பௌத்த சமயம் ஏற்காது. பௌத்த சமயத்தின் அடிப்படைக் கொள்கையே அகிம்சையாகும். இதன் காரணமாக புத்தமித்திரனார் இந்த மெய்ப்பாட்டை விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலாக உட்கோள் என்ற ஒன்றைப் புதிதாகப் புத்தமித்திரன் உருவாக்கி எண்வகை மெய்ப்பாடாக ஆக்கிக்கொள்கிறார்.
உவகை:
சிருங்காரம் என்பது வடமொழியில் உள்ள முதல் மெய்ப்பாடு ஆகும். இதனை அப்படியே வீரசோழியம் ஏற்கின்றது. இதனைத் தொல்காப்பியம் சுட்டும் உவகை என்ற மெய்ப்பாடுடன் ஒத்து வைத்து எண்ணமுடியும்.
செல்வம் புலனே புணர்வு விளையாட்டென
அல்லல் நீத்த உவகை நான்கே[20]
என்ற தொல்காப்பிய நூற்பா உவகையின் பிறப்பிடங்கள் நான்கினைக் காட்டுவதாக உள்ளது,
இளமையும் வனப்பும் வளமையும் கலவியும்
களனாகத் திரிதருஞ் சிருங்காரம்மே[21]
என்ற வீரசோழிய நூற்பா சிருங்காரரசம் பிறக்கும்.இடங்களைக் காட்டுகின்றது. இவற்றின் ஒப்புநிலை பின்வருமாறு.
mm9

உட்கோள்:
சிருங்கார ரசத்திற்கான தோற்றக் களங்களில் தொல்காப்பியத்திற்கும், வீரசோழியத்திற்கும் இரண்டு என்ற அளவில் பொருந்துகின்றன. இரண்டு பொருந்தவில்லை. ஆகவே செல்வம்,புணர்வு, விளையாட்டு, புணர்வு, இளமை, வனப்பு ஆகியன நகைக்கான பிறப்பிடங்களாக அமைகின்றன.
வெகுளி என்ற மெய்ப்பாட்டினை ஏற்காத வீரசோழியம் அதனிடத்தில் உட்கொள் என்ற ஒன்றை அமைத்துக்கொண்டுள்ளது. உட்கோள் தோன்றும் நிலைக்கலன்களாக ஐவகைக் குரவர்(தாய், தந்தை, குரு, தெய்வம், மூத்தோர்), தேவர், மன்னர் ஆகியோரின் எய்தாது எய்திய இயல்பு உட்கோள் என்கிறது வீரசோழியம்.
‘‘ஐவகைக் குரவர் தேவர் மன்னர்
எய்தா தெய்திய வியல்பவை உட்கோள்’’[22]
என்பது உட்கோளை விளக்கும் வீரசோழிய நூற்பாவாகும்.
மேற்கண்ட ஒப்பீடுகளில் இருந்துப் பின்வரும் கருத்துகள் அறியத்தக்கனவாகின்றன..
நகையும் அழுகையும் ஆகிய இரு மெய்ப்பாடுகள் தொல்காப்பியம், வீரசோழியம் ஆகிய இரண்டு இலக்கண நூல்களிலும் பெரிதும் பொருந்துவனவாகத் திகழ்கின்றன. இவை தோன்றும் களங்களாக காட்டப்படும் நான்கில் மூன்று பொருந்தி வருகின்றன.
இளிவரல், வியப்பு, அச்சம், சிருங்காரம் ஆகிய நான்கும் தொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் தோற்றக் களங்கள் இரண்டினால் ஒன்று படுகின்றன. இரண்டால் வேறுபடுகின்றன.
பெருமிதம் என்ற தொல்காப்பிய மெய்ப்பாடு வீரம் என்பதாக வீரசோழியத்தால் கொள்ளப்படுகின்றது. பெருமிதத்தின் தோற்றக்களன்களுள் ஒன்றாக வீரத்தைத் தொல்காப்பியம் காண வீரத்தையே தனியான மெய்ப்பாடாக வடமொழியினுடன் ஒத்து வீரசோழியம் கொள்ளுகின்றது.
வெகுளி என்ற தொல்காப்பிய மெய்ப்பாடு வீரசோழியத்தில் இல்லை. உட்கோள் என்ற வீரசோழிய மெய்ப்பாடு தொல்காப்பியத்தில் இல்லாதப் புதுமையது.
நகை, மருட்கை, அச்சம் போன்ற மெய்ப்பாடுகள் பெயர் நிலையில் அப்படியே இரு நூல்களில் ஒத்து அமைகின்றன. அழுகை என்பதற்கு இரக்கம் என்பதும், இளிவரல் என்பதற்கு இழிப்பு என்பதும் கொள்ளப்படுகின்றது. சிருங்காரம், வீரம் ஆகிய வீரசோழிய மெய்ப்பாடுகள் தொல்காப்பிய மெய்ப்பாடுகளான உவகை, பெருமிதம் ஆகியவற்றோடு பெயரளவில் ஒத்துச் செல்லவில்லை என்றாலும் பொருள் அளவில் ஓரளவிற்கு ஒத்து் அமைகின்றன.
வெகுளி என்ற தொல்காப்பிய மெய்ப்பாட்டை வீரசோழியத்தால் ஏற்க முடியவில்லை. உட்கோள் என்ற வீரசோழியம் காட்டும் மெய்ப்பாடு தொல்காப்பியத்தில் பெயரளவிலும் பொருள் அளவிலும் காணப்படவில்லை.
இவ்வாறு புற மெய்ப்பாடுகளில் ஒற்றுமை, வேற்றுமைகளை ஒப்பிட்டு அறியமுடிகின்றது.
முடிவுகள்:
தொல்காப்பியம், வீரசோழியம் ஆகிய இரண்டிலும் மெய்ப்பாடுகள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியம் அகம் சார்ந்த மெய்ப்பாடுகளாக இருபத்துநான்கினைக் காட்ட, வீரசோழியம் அகம் சார்ந்த மெய்ப்பாடுகளாக ஐந்து கணைகள், முப்பத்தியிரண்டுத் துறைகள் ஆகியனவற்றைக் காட்டுகின்றது. இவையிரண்டையும் பொருத்திப் பார்க்கையில் எட்டு இரண்டு நூல்களுக்கும் பொருந்தி அமைகின்றன. மற்றவை பொருந்தவில்லை. அவ்வகையில் தொல்காப்பிய அகமெய்ப்பாடுகளில் பதினாறும், வீரசோழியத்தில் இருபத்துநான்கும் பொருத்தமில்லாமல் தனித்து விளங்குவனவாகும்.
புறமெய்ப்பாடுகள் என்று தொல்காப்பியம் சுட்டும் வெகுளி முதலான எண்வகை மெய்ப்பாடுகளை ஒட்டி எட்டினை வீசோழியம் குறிக்கின்றது. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம்,பெருமிதம், உவகை ஆகிய ஏழும் பகுப்பு, பொருள் அளவில் பொருந்தி அமைகின்றன.
வெகுளி என்ற தொல்காப்பிய மெய்ப்பாடு வீரசோழியத்தால் பின்பற்றப்படவில்லை. உட்கோள் என்ற ஒன்று குறிக்கப்படுகிறது. இது ஐவகைக் குரவர் போன்றோர் மீது ஏற்படும் மதிப்பால் விளையும் உடல் மெய்ப்பாடுகள் ஆகும்.
வடமொழியில் உள்ள சாந்தம் என்ற மெய்ப்பாடு தொல்காப்பியத்தாலும் வீரசோழியத்தாலும் தனித்த ஒன்றாக ஏற்கப்படவில்லை. வடமொழியின் சா்ர்பின் காரணமாக சிருங்கார ரசம், வீர ரசம் ஆகியன வீரசோழியத்தினால் எடுத்தாளப்பெற்று அவை மெய்ப்பாடுகளாக ஆக்கப்பெற்றுள்ளன.
தொல்காப்பியர் காட்டிய மெய்ப்பாடுகள் வீரசோழிய காலத்தில் தேய்வும், வளர்ச்சியும் பெற்றுள்ளளன என்று முடியலாம்.பயன் கொண்ட நூல்கள்:
 1. இளம்பூரணர்(உ.ஆ) தொல்காப்பியம், சாரதா பதிப்பகம், சென்னை, 2010
 2. சுப்பிரமணியம்.ச.வே., வீரசோழியம் திறனாய்வு, மூலமும் கருத்தும், தமிழ்ப்பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 1979
 3. தாமோதரம் பிள்ளை,(சி.வை.), வீரசோழியம், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, 2008

[1] தொல்காப்பியம்,மெய்ப்பாட்டியல், நூற்பா,27
[2] வீரசோழியம்.பக் 77-78
[3] வீரசோழியம், ப.79
[4] வீரசோழியம்,ப. 79
[5] தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் நூற்பாக்கள் 13,14,15,16,17,18 ஆகியவற்றின் சுருக்கம்
[6] வீரசோழியம், ப.79
[7] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல்,நூ.4
[8] வீரசோழியம், ப. 80
[9] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூ.5
[10] வீரசோழியம், ப. 80
[11] தொல்காப்பியம்,மெய்ப்பாட்டியல், நூ.6
[12] வீரசோழியம், ப. 80
[13] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூ.7
[14] வீரசோழியம், ப. 80
[15] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல்,நூ.8
[16] வீரசோழியம், ப. 80
[17] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூ.9
[18] வீரசோழியம், ப. 80
[19] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூ.10
[20] தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் நூ.11
[21] வீரசோழியம், ப. 80
[22] வீரசோழியம், ப. 80

1 கருத்து:

Unknown சொன்னது…

ஐயா...
நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஓர் ஆய்வு மாணவன். நான் வீரசோழியம் குறித்தான ஆய்வினை செய்து வருகிறேன் எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் அடங்கிய நற்கட்டுரையாக இக்கட்டுரை அமையப் பெற்றுள்ளது. மிக்க நன்றி ஐயா..