ஞாயிறு, ஜனவரி 09, 2022

வள்ளுவரின் பாதை (கவிதை)

siragu thiruvalluvar1

(வலியறிதல் – அதிகாரம் – புதுக்கவிதையில்)

  • வள்ளுவர் நடத்தும் அரசியல் பாடம்  வலியறிதல்.

 

  • உலகில் ஒவ்வொரு மனிதருக்கும்

ஒரு கடமை இருக்கிறது.

அக்கடைமையை ஏற்று நடத்தவே அவன் பிறக்கிறான்.

அவனுக்கான காரியம் அவனாலேயே முடிய வேண்டும்.

அவ்வாறு  கடமை முடிய என்ன செய்யவேண்டும்.

 

  • தன்னை உணர்தலும்

தனக்கான கடமையை அறிதலுமே  முதற்படி

 

  • தன்னால் இது செய்ய இயலுமா என்று

தெளிந்தபின் செயலில் இறங்குவதே சிறப்பு

இத்தெளிவின்றிப் பாதியில் வீணாய்ப் போவதும் போனதும் அதிகம்.

 

  • தன்னை உணர்ந்தபின் தன் துணையின் வலிமையும் உணர்க

காரியங்கள் கைகூட துணைவரோடு ஒத்து செல்க

எதிராக நிற்பவற்றின்  வலிமைகளையும் அளந்தறிக

எடுத்த காரியத்தை முடிக்க தொடர்ந்து தொய்வின்றி செல்க…வெற்றி நமதே

 

  • ஊதினால் பறக்கும் மயில் தோகை என்றாலும்

அளவுக்கு அதிகம் சுமையானால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.

 

  • மரமே நமதென்றாலும்

அதன் நுனிக் கொம்பு ஏறினால் அழிவுதான்.

 

  • கொடுப்பதானாலும், கொள்வதானாலும்

அளவறிந்து எதையும் செய்க! அதுவே வாழ்க்கை முறைமை

 

  • செலவைக் குறைக்க வரவு பெருகும்

வரம்பு மீறி வாரிக்கொடுக்க இருப்பே இல்லாமல் ஆகிவிடும்

வலியறிந்தால் வலியின்றி வெற்றி பெறலாம்…….

 

சாம்பவான் என்ற நன்னம்பிக்கை முனை

 

Siragu Kambar 1

மானுடம் வென்ற கதை கம்பராமாயணம் ஆகும். அரக்கர்களை அழிக்க இராமன் என்னும் மானிடன் நடப்பன, பறப்பன, ஊர்வன இவற்றோடு மனிதர்களையும் இணைத்துச் செயல்பட்ட கதை இராமகாதை ஆகும். ”அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்பதே இக்கதையின் கதைக்கருவாம். பாவம் பெருகி வருத்தும்போதெல்லாம் அறம் பெருவலிமையுடன் எழுந்து நின்று பாவத்தை வேரொடு அறுக்கும். இந்த நம்பிக்கையை மனித உள்ளத்திற்குள் கால காலமாக விதைத்துவரும் காப்பியம் இராமாயணம்.

வால்மீகியின் வழியில் கம்பன் காப்பியக் கோட்டையாக இராமகாதையை வடிவமைத்துக்கொண்டான். இதனுள் தமிழ்மரபும், வடமொழிக் கதையும் ஒன்றுக்கொன்று வேறுபடாமலும் மாறுபடாமலும் கம்பனால் கையாளப்பெற்றுள்ளன. கம்பராமாயணம் என்னும் காப்பியக் கலவையைச் சுவைபடவும், பொருட்செறிவு படவும், பண்பாட்டு நெறிமுறைகள் படியும், சொல்வண்ணம், பாவண்ணம் போன்றன கொண்டுச் சுவை கூட்டும் படியும் கம்பன் படைத்துள்ளான்.

கம்பனின் படைப்புத் திறத்திற்கு இராமன் என்னும் தனிப்பாத்திரம் எவ்வளவு தகைமை உடையதோ அதே அளவு தகைமையைப் பிற பாத்திரங்களுக்கும் கம்பன் அளித்துள்ளான். எதிர், இணை, சிறு பாத்திரங்கள் என்று எல்லாப் பாத்திரங்களிலும் கம்பனின் கைவண்ணம் பெருந்தகைமையையும், பேராற்றலையும் கொண்டே எண்ணி எண்ணி நினைந்து நினைந்துப் படைக்கப்பெற்றுள்ளன.

கம்பனின் கவித்திறத்தில் பெரும் பாத்திரங்களும் மிளிர்கின்றன. சிறு பாத்திரங்களும் மிளிர்கின்றன. கரடி குலத் தலைவனான சாம்பவன், குரங்கு குலத் தலைவனான சுக்ரீவன், அரக்கர் குல அறத் தலைவனான வீடணன், பறவைகுலப் பிரதிநிதியான சடாயு போன்ற பாத்திரங்கள் மனித குலத் தலைவனான இராமனுக்குப் பெரிதும் உதவியுள்ளன. இராமன் எனும் உயரிய பாத்திரத்திற்கு உதவும் எப்பாத்திரங்களும் நல்லனவாகவும் வல்லனவாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. அவ்வகையில் இராமனுக்கு உதவிய கரடிகள் குலத் தலைவனான சாம்பன் எனப்படும் சாம்பவன் என்னும் பாத்திரத்தின் இயல்புகளை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

  “காவியத்தை வனப்புடைய ஒரு மாளிகைக்கு ஒப்பிட்டால், சிறுபாத்திரங்களை அம்மாளிகையிலுள்ள பலகணிகளுக்கு ஒப்பிடலாம். இச்சிறு பாத்திரங்களின் மூலந்தான் காவியத் தலைவனைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ளுகிறோம். இவர்கள்தாம் காவியத்தலைவனின் குண நலன்களைத் திறனாய்கின்றனர். மற்று, காவியத்தை மங்கையர் வீட்டு முற்றங்களில் தீட்டும் கோலத்திற்கு ஒப்பிட்டால், சிறு பாத்திரங்களை அக்கோலம் போடுவதற்கு இடப்படும் புள்ளிகளுக்கு ஒப்பிடலாம். புள்ளிகளால் கோலம் சிறப்பதுபோல சிறு பாத்திரங்களால் காவியம் வனப்புடையதாகிறது” என்று சிறுபாத்திரங்களின் இயல்புகளை ஆய்ந்துரைக்கிறார் ந. சுப்புரெட்டியார். (குமரிமலர் 1955) இவ்வழியில் இராமன் எனும் அலகில விளையாட்டுடையானின் அழகிற்கு ஒரு புள்ளியாக சாம்பவன் என்ற பாத்திரமும் விளங்குகின்றது.

இராமபிரானுக்குச் சற்று அயர்ச்சி வரும் போதெல்லாம் அவ்வயற்சியை நீக்கும் பாத்திரமாக விளங்குவது சாம்பவன் என்னும் பாத்திரம் ஆகும். இப்பாத்திரம் பிரம்மாவின் வடிவம் என்றே அறிமுகம் ஆகிறது. மகாவிஷ்ணு இராமனாக அவதாரம் எடுத்த நிலையில் பிரம்மா கரடிகளுக்கு அரசனாகத் தன்னை அவதாரப்படுத்திக் கொண்டு மண்ணில் பிறந்து இராமனுக்கு உழைத்துத் தன்கடன் தீர்க்கிறது.

‘‘என்னை ஆளுடைய ஐயன், கலுழன் மீது எழுந்து போய

பின்னர், வானவரை நோக்கி, பிதாமகன் பேசுகின்றான்:

“முன்னரே எண்கின்வேந்தன் யான்”-என, முடுகினேன்; மற்று,

அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடுமின்’ என்றான். ”

                        (பாலகாண்டம், திருஅவதாரப் படலம் பா. 23)

மேற்பாடல் வழி, பிரம்மன் தான் ”எண்கின் வேந்தனாக” (கரடிகளின் தலைவனாக) இராமாயணத்தில் பங்குபெறுவேன் என்று திருஅவதாரப்படலத்திலேயே கம்பர் காட்டுகிறார். பிரம்மன் பிறப்பின் இரகசியம் தெரிந்தவன். ஆகவே இராமன், இலக்குவன் ஆகியோர் கூட அயர்வு பெற்றிடும்போதும் அயராமால் மீண்டும் பிறப்பிக்கும் யோசனைகளைச் சொல்லித் தான் பிரம்மாவின் அவதாரம் என்பதை நிறுவிக் கொண்டே இருக்கிறான்.

இது மட்டும் இல்லாமல் கம்பரால் சாம்பன் என்றும், சாம்பவான் என்றும், எண்கின் வேந்தன் என்றும் சுட்டப்படும் இப்பாத்திரம் காப்பிய அறிமுகத்தின்போதும் காப்பிய நிறைவின்போதும் எண்கின் வேந்தன் என்றே சுட்டப்பெற்றுள்ளது. இப்பாத்திரத்தின் அறிமுகம் என்பது முன் சுட்டிய பாடலே ஆகும். அப்பாடலில் எண்கின் வேந்தன் என்றே பிரம்மதேவன் தன்னை அழைத்துக்கொள்கிறான்.

சாம்பவனுக்கு விடைதரும் நிறைவுப் பாடலிலும் எண்கின் வேந்தனாகவே கம்பன் விடை பெறவைக்கிறான்.

      ‘‘சந்திரற்கு உவமை சான்ற,  தாரகைக் குழுவை வென்ற

இந்திரற்கு ஏய்ந்ததாகும் என்னும் முத்தாரத்தோடு

கந்து அடு களிறு, வாசி,  தூசு, அணிகலன்கள் மற்றும்

உந்தினன், எண்கின், வேந்தற்கு  உலகம் முந்து உதவினானே.” (10519)

என்று இராமபிராமன் எண்கின் வேந்தனுக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கிறான். இந்திரனுக்கு உரிய முத்துமாலை போன்ற ஒன்றையும், யானைகள், அணிகலன்கள், பட்டாடைகள் போன்றவற்றையும் அளித்து இராமபிரான் எண்கின் வேந்தனுக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கிறான் . கரடி பரிசாக யானையைப் பெற்ற நிலை இதுதான்.

கரடிக்கு அரசனான சாம்பவன் அனுமனின் ஆற்றலை உணர்ந்து அவனை நம்பிக்கை கொள்ளச் செய்த பாத்திரம் ஆகும். அனுமனின் ஆற்றலை உணர்ந்து மருந்துமலை கொண்டு வரச் சொன்ன பாத்திரமும் அதுவே ஆகும். அனுமனுக்கு தரப்பெற்ற நம்பிக்கை உரைகள் இன்றைக்கும் துவண்டுபோன உயிர்களைத் தட்டி எழுப்பும் நம்பிக்கை உரைகளாக விளங்குகின்றன. இவ்வாறு நம்பிக்கை தரும் பாடல்களின் எண்ணிக்கை பதினொன்று ஆகும். இப்பதினொன்றும் படிக்கப் படிக்க அனுமன் புகழையும், துவண்ட ஒருவனுக்கு துடிப்பாக எழுந்து பணி செய்யும் உத்வேகத்தையும் ஒரு சேர வெளிப்படுத்துகின்றன. இப்பாடல்களில் அனுமன் என்ற பெயரோ அல்லது குறிப்போ இடம்பெறா நிலையில் இப்பாடல்களை துவண்டு போன உயிர்களிடத்தில் சொன்னாலோ, அல்லது வாசிக்க வைத்தாலோ நன்னம்பிக்கை மேம்படும்.

‘மேரு கிரிக்கும் மீது உற  நிற்கும் பெரு மெய்யீர்;

மாரி துளிக்கும் தாரை  இடுக்கும் வர வல்லீர்;

பாரை எடுக்கும் நோன்மை  வலத்தீர்; பழி அற்றீர்;

சூரியனைச் சென்று ஒண் கை  அகத்தும் தொடவல்லீர். ‘ (4829)

என்று இயற்கையையும் தன் ஆளுகைக்குள் கொண்டுவரும் வல்லமை உடையவராக அனுமன் விளங்குவதை இப்பாடல் காட்டுகிறது. இது அனுமனுக்கு மட்டுமான தன்னம்பிகை உரை அல்ல, அனைவருக்குமான உரை. பழி அற்றவர்களுக்கான நன்னம்பிக்கை உரை.

‘நீதியின் நின்றீர்; வாய்மை  அமைந்தீர்; நினைவானும்

மாதர் நலம் பேணாது  வளர்ந்தீர்; மறை எல்லாம்

 ஓதி உணர்ந்தீர்; ஊழி கடந்தீர்; உலகு ஈனும்

ஆதி அயன் தானே என  யாதும் அறைகின்றீர். ‘(4832)

என்று நீதி வழி நின்றோரின் சிறப்பினை இப்பாடல் காட்டுகிறது. இதனுள் பிரம்மன் என்ற குறிப்பு உள்ளது. பிரம்மாவின் வடிவமான கரடி அரசன், பிரம்மாவே யாதும் என்று உரைக்கும் அனுமனைப் போற்றிப் புகழ்கிறது.

‘‘ஈண்டிய கொற்றத்து இந்திரன்  என்பான் முதல் யாரும்

பூண்டு நடக்கும் நல் நெறியானும்  பொறை யாலும்

பாண்டிதர் நீரே; பார்த்து இனிது  உய்க்கும்படி வல்லீர்;

வேண்டிய போதே வேண்டுவ  எய்தும் வினை வல்லீர். ” (4835)

என்று வேண்டியபோது வேண்டுவ எய்தும் வினை வல்லமை உடையவன் அனுமன் எனக் காட்டி அவ்வகையில் நிற்போர் அனைவரையும் தூண்டிச் சுடர் விளக்காய்ப் பிரகாசிக்க வைக்கிறார் சாம்பவன்.

      நிறைவாக அனுமனுக்கே உரிய கடமையைக் காட்டுகிறார் சாம்பவன்.

            ‘ஏகுமின்; ஏகி, எம் உயிர்  நல்கி, இசை கொள்ளீர்;

ஓகை கொணர்ந்து உம் மன்னையும்  உய்யும்படி செய்யீர்;

சாகரம் முற்றும தாவிடும்  நீர் இக்கடல் தாவும்

வேகம் அமைந்தீர் ‘என்று  விரிஞ்சன் மகன் விட்டான்.”(4836)

“‘இலங்கையை இடந்து வேரோடு  இவ் வயின் தருக “ என்றாலும்,

“விலங்கினர் தம்மை எல்லாம்  வேரொடும் விளிய நூறிப்

பொலங் குழை மயிலைக் கொண்டு  போது ‘‘ எனப் புகன்றிட்டாலும்,

கலங்கலிர்! உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது, காண்டிர். (4839)‘

என்ற பாடல்கள் அனுமன் செய்யவேண்டிய பணிகளைப் பட்டியலிட்டு, அவற்றைச் செய்ய முடுக்கிவிட்டு முடிக்கச் செய்வனவாக உள்ளன. இவ்வகையில் ஒரு சிறுஉயிரின் பெருமையை அதற்கு உணர்த்தி அதனை பெருஞ்செயல் செய்விக்க கம்ப வார்த்தைகளால் முடியும் என்பதைக் காட்டி நிற்கும் பாத்திரம் ஜாம்பவான் பாத்திரம். அதனாலேயே இப்பாத்திரம் சிரஞ்சீவியாக என்றும் வாழ்கிறது. மகாபாரதத்திலும் இதன் பணி கிருஷ்ணனுக்குத் தொடர்கிறது. இன்றும் வாழ்கிறது. இவ்வகையில் நம்பிக்கை உரை வழங்கி மானிட வெற்றிக்குத் துணை செய்து நிற்கும் சிறு பாத்திரம் சாம்பவன் ஆகும்.


குறிப்பறிதல்
siragu thirukkural2
மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம், பொருள், இன்பம் ஆகியன பற்றி அறிவுறுத்தும் தமிழ் நூல்களில் சிறப்பிடம் பெறும் நூல் திருக்குறள் ஆகும். திருக்குறளின் அறத்துப்பால் மனிதன் வாழத்தகுந்த அற வாழ்க்கை முறைகளைத் தொகுத்துரைக்கின்றது. மனிதனின் சமூகம் சார்ந்த உலகவாழ்வியலைக் கூறும் பகுதி பொருட்பால் ஆகும். அது நாடு, அரசு, அமைச்சு, படை, குடி, செல்வம், உணவு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. இதனுள் மனிதசமுதாயம் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறைகள் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன. காமத்துப்பாலில் தமிழர்தம் காதல் மரபுகளும், கற்பு மரபுகளும் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இவ்வகையில் மனிதனின் அகம், புறம் சார்ந்த வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் நடத்திக் கொள்ள ஏற்ற வழிகாட்டு நூலாக திருக்குறள் விளங்குகிறது. இந்நூலின் கருத்துகளைப் பின்பற்றி உலக மக்கள் வாழ்ந்து நன்மை பெற இயலும் என்பதால் திருக்குறளின் உலகப்பொதுமறை எனப்படுகிறது. இவ்வுலகப் பொதுமறையில் அரசியல் நடைமுறைகளுள் ஒன்றான குறிப்பறிதல் பற்றிய வரையறைகளை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

திருக்குறளில் குறிப்பறிதல் என்ற அதிகாரம் இருமுறை இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளது. பொருட்பாலில் அமைச்சியலிலும், காமத்துப்பாலில் குறிஞ்சித்திணையிலும் குறிப்பறிதல் என்ற தலைப்பில் இரு அதிகாரங்களில் கருத்துகள் வகுத்துத் தரப்பெற்றுள்ளன. பொருட்பாலில் எழுபத்தியிரண்டாவது அதிகாரத்தில் அமைந்த குறிப்பறிதல் என்னும் அதிகாரம், பிறர் உள்ளத்துள் எண்ணுவதை அவர் சொல்லாமலே, அவருடைய மனக் குறிப்பை அறியக் கூடிய, அறிந்து நடந்து கொள்ளக் கூடிய பண்புகளைக் காட்டும் கருத்துகளை உடையதாகப் படைக்கப்பெற்றுள்ளது.

மணப்பருவம் எய்திய கன்னிப் பெண்ணும் கட்டிளங் காளையும் காதல் வயப்படும் முன் ஒருவர் உள்ளக் குறிப்பை மற்றவர் அறிந்து கொள்ளவதே காமத்தப்பாலில் அமைந்த குறிப்பறிதல் ஆகும்.

இவ்வகையில் குறிப்பறிதல் என்பது மனிதனின் பொதுவாழ்விற்கும், மனிதனின் தனிப்பட்ட வாழ்விற்கும் உரியதாக விளங்குகிறது. இன்பம், துன்பம், பெருமிதம், பயம் போன்ற உள்ளத்துப் பண்புகள் அனைத்தும் அவர் அறியாமல் ஒருவர் அறிந்துகொள்ளத்தக்கப் பண்பு குறிப்பறிதலாகின்றது.

குறிப்பறியும் பண்பு உலக மக்கள் அனைவருக்கும் தேவை என்றாலும், சிறந்த ஆட்சி செய்ய மன்னனுக்கும், அவனைச் சார்ந்த அமைச்சர்களுக்கும் இப்பண்பு இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. ஒரு சமுதாயத்தின் மன்னனாகிய, தலைவன் மக்களின் குறிப்பு உணர்ந்து ஆட்சியை நடத்த வேண்டும் என்பதே குறிப்பறிதல் அதிகாரத்தின் அடிக்கருத்து ஆகும். பிறர் மனமறிந்து நடக்கும் உளவியல் நிலையையும் திருவள்ளுவர் தம் காலத்தில் தம் கருத்தால் உணர்ந்து அறிவுறுத்தியுள்ளார் என்பது திருவள்ளவரின் சீரிய அறிவினைக் காட்டுவதாக உள்ளது. மக்கள் மனதை அறியும் சிறந்த குறிப்பறியும் பண்பினைக் காட்டும் குறிப்பறிதல் அதிகாரத்தின் கருத்துகளின் தொகுப்பு இதன்பின் எடுத்துரைக்கப்பெறுகின்றன.

குறிப்பறியும் பண்பினைப் பெற்றோர் உலகிற்கே அணிகலன் போன்றவர். ஒருவரை இவர் இன்னார் என அறிவிப்பன கண்களே ஆகும். இக்கண்கள் வெறும் பார்வைக் கருவிகள் மட்டுமல்ல. அவை மற்றவரைப் பார்த்தவுடன் மதிப்பிடுவதால் அவை மதிப்பீட்டுக் கருவிகள் ஆகும். கருணை பொழிவதால், இரங்குவதால் , ஆனந்தக் கண்ணீர் சொறிவதால் அவை உணர்வும் அறிவும் சார்ந்த தலையாய உறுப்புகள் ஆகின்றன. கண்கள் கருவிகள் மட்டுமல்ல அவை கண்ணோட்டம் என்ற தகுதியைப் பெற்றன என்று கருதிய வள்ளுவர் கண்ணின் கண்ணோட்டத்திற்கென்றே தனித்த அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும். (575)

மற்றவர் துன்பம் கண்டு இரங்கும் நிலைப்பாடே கண்ணோட்டம் ஆகும். இக்கண்ணோட்டம் என்பது கண்ணிற்கான சிறந்த அணிகலன் ஆகும். காதுகளுக்கு, கழுத்திற்கு, மூக்கிற்கு அணியப்பெறும் அணிகலன்கள் அணிபவர்க்கு அழகைத் தருவனவாகும். ஆனால் கண்களுக்கு எவ்வித அணிகலன்களும் இதுவரை உலகில் அணிவிக்கப்பெறுவதில்லை. அவ்வாறு அணிவித்தால் அவ்வணி கண்களுக்குச் சுமையாகும். அவை காட்சிக்குத் தடையாகும். அவ்வணிகலன் நலனாகாது.

இருப்பினும் திருவள்ளுவர் கண்களுக்குச் சிறந்த அணிகலன் ஒன்றை அணிவித்து மகிழ்கிறார். மூக்கணி இல்லாமல் கூட கழுத்தணி இல்லாமல் கூ.ட இருந்துவிடலாம். ஆனால் கண்களுக்கு அணிகலன்களான கண்ணோட்டம் இல்லாமல் இருந்துவிடக் கூடாது என்று வள்ளுவர் கட்டளையிடுகிறார். இவ்வாறு அணிகலன் அணிய இயலாத நுண்ணிய உறுப்பான கண்களுக்கும் அணிகலன் அணிந்து மகிழ்கிறார் வள்ளுவர்.

கண்களுக்கான சிறந்த பண்பான கண்ணோட்டம் என்பது ஒருவரின் துன்பம் அறிந்து அவருக்காக கருணை செய்வதாகும். அதாவது ஒருவர் கண்ணில் நீர்வழிந்தால் அதைப் பார்ப்பவர் நெஞ்சில் உதிரம் சொட்டுவதாகும். வெளிப்பட தெரியாமல் ஒளிந்திருக்கும் ஒருவரின் உளக்கருத்தைச் சிற்சில குறிப்புகள் கொண்டு கண்கள் தெரிந்து கொள்ளுகின்ற நுண்தன்மை பெற்றனவாகும்.

அவ்வாறு ஒருவர் கருத்தை இன்னதென்று அவர் வெளிப்படுத்தாமலே அறிந்து கொள்ளும் நல்ல பண்பினைப் பெற்றவர்கள் உலகத்திற்கே அணிவிக்கப்பெறும் அணி போன்றவர்கள் என்று வள்ளுவர் உலகத்திற்கு அணிகலன் அணிந்து பார்க்கிறார்.

உலகம் எவ்வளவு பெரியது. அந்த உலகிற்கு ஒருவர் அணிகலன் அணிவிக்கிறார் என்றார் அவரின் பெருமை எத்தகையதாக இருக்க வேண்டும், அவரின் ஆளுமை எத்தகையதாக இருக்கவேண்டும். அந்த அளவிற்குப் பெருமை உடையவர் குறிப்பறியும் தன்மை பெற்றவர். அவரால் உலகம் அமைதியால் தழைக்கும். இன்பத்தில் திளைக்கும்.
கண்ணால் காணமுடியாத வெளிப்படையாக அறிவிக்கமுடியாத உளக்குறிப்புகளையும் சிற்சில குறிப்புகளால் அறிந்து அதனை உள்வாங்கி எவருக்கும் துன்பம் இல்லாமல் செயலாற்றும் கடமையே குறிப்பறிதல் என்ற கடமையாகும். இக்கடமை பெற்றோர் உலகிற்கே அணி போன்றவர் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

வள்ளுவர் அணிகளன்களுக்கான கடையையும் வைத்து நிர்வகித்துள்ளார். கண்களுக்குச் சிறந்த அணிகலன் கண்ணோட்டம். உலகிற்கு அணிகலம் போன்றோர் குறிப்பறிதல் என்ற பண்பினைப் பெற்றோர் என்று வள்ளுவரின் நகைக்கடை மனிதருக்கும், உலகிற்கும் உண்மையான அணிகலன்களை அளிப்பதாக உள்ளது.

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி. (701)
ஒன்றை வெளிப்படக் கூறாது இருந்தும் அதனைக் குறிப்பால் அறிய வல்லவன், எக்காலத்தும் வற்றாத நீர் சூழ்ந்த உலகுக்கு அணிகலன் போன்றவன் என்று வள்ளுவர் குறிப்பறிதல் பண்பினைப் பெற்றவரைச் சுட்டுகிறார்.

மேற்குறளில் இடம்பெற்றுள்ள ”வையக் கணி” என்ற தொடர் சுருக்கமுடையது. ஆனால் அகில உலகத்தையே உள்ளடக்கி நிற்பது. நகை என்றால் அழகும் நுண்மையும் உடையதாக இருக்கவேண்டும். வள்ளுவர் உலகிற்கு அழகான, நுண்மையான அணிகலனைத் தந்துள்ளார்.

குறிப்பறிவோர் கடவுள் ஆவார்
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். குறள் (702)

மற்றவர்கள் மனதில் இதுதான் உள்ளது என்று சிறு ஐயம் கூட இல்லாமல் கண்டறியத்தக்கவர் தெய்வத்துடன் ஒப்பு வைக்கத் தக்க பெருமையாளர் என்கிறது இக்குறள்.

ஐயத்திற்கு இடமில்லாமல் என்பது சிறிது சந்தேகம் கூட இல்லாமல் என்ற நிலைப்பாட்டை உடையதாகும். இவர் இப்படி நினைத்திருப்பாரோ, அப்படி நினைத்திருப்பாரோ என்று சந்தேகப்படாமல் இவர் இப்படித்தான் எண்ணுகிறார் என்று சொல்லும் திண்ணமான குறிப்பறியும் திறன் கடவுளுக்கானது என்கிறார் வள்ளுவர்.

கடவுளை மனித உள்ளத்தில் உள்ளதை அறியும் நிலை பெற்றவராக வள்ளுவர் கருதுவதால் அந்நிலை உடைய குறிப்பறிவாரையும் கடவுளாகவே கொள்கிறார். வள்ளுவர் கடவுள் என்வருக்கான இலக்கணமாக, அறியாத உள்ளத்து உணர்வுகளையும் அறிபவர் என்று காட்டுகிறார்.

கடவுள் என்பவர் மனிதர்களின் உள்ளத்தில் உள்ளதை ஐயம் இன்றி அறிந்து கருணை செய்பவர் ஆவார். இந்நி்லைப்பாடே கடவுளுக்கு உள்ள ஆனால் மனிதரால் பெற இயலாத பண்பு என்பதை உணரமுடிகின்றது. எனவே குறிப்பறிந்து வாழ்வது கடவுள் வாழ்க்கை ஆகின்றது.

குறிப்பறிய உதவும் கருவிகள்

உலகிற்கே அணிகலனாகவும், கடவுள் பண்பு பெற்றவராகவும் விளங்கும் குறிப்பறிதல் பண்புடையவர்கள்தம் நடைமுறை, அவர்களுக்கான கருவிகள் போன்றவற்றையும் இவ்வதிகாரத்தில் வள்ளுவர் காட்டியுள்ளார்.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். (706)

தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைத் தன்மையைக் காட்டும் கண்ணாடியைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அப்படியே அவனின் முகம் காட்டிவிடும். நெஞ்சம் மகிழ்வதை முகம் காட்டுகிறதைவிட நெஞ்சம் கடுத்ததை முகம் தெற்றென காட்டிவிடும்.

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். குறள் (707)
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின். ( 708)

உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை என்பதை இக்குறள்கள் காட்டுகின்றன. அகம் நோக்க எண்ணுபவர்கள் முகம் நோக்கி நின்றால் போதும்.

தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றால், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும். மனத்தில் இருக்கும் மகிழ்ச்சியையும் நிறைவையும், துன்பத்தையும், கவலையையும் தெளிவாக முகம் காட்டி விடும். எனவே முகமே மனித மனிதத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குகிறது. கண்ணாடி உணர்வை வெளிப்படுத்தாது. உருவத்தை மட்டுமே பிரதிபலிக்கும். ஆனால் முகம் அகத்தையும் புறத்தையும் காட்டும் சிறந்த கண்ணாடியாகும்.

குறிப்பறிதல் பண்பு தரும் பயன்கள்

கண்கள் போதும். பிறர்தம் உளக் கருத்துகளை அறிந்து கொள்வதற்கு. முகம் போதும் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்துவதற்கு. முகம் என்பது குறிப்பறியும் களமாகும். கண்கள் என்பன குறிப்பறிதலுக்கான கருவிகள் ஆகும். இவ்வாறு உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக முகமாக அதனைப் பெற்று அதற்கேற்ப இயங்கும் நி்லைப்பாடு உடையதாக கண்களும் விளங்குகின்றன. குறிப்பறிதல் பண்பினால் பற்பல நன்மைகளை உலகம் பெற்றுவருகிறது.
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண். (705)

என்று ஒருவன் குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் எந்த நன்மையும் இல்லை என்று விளக்கியுள்ளார். கண்களின் பயனே குறிப்பறிதல் பண்பு என்று வள்ளுவர் கருதுகிறார்.

சிறப்பு

கற்றவர்களே கண்ணுடையவர்கள் என்று அறியப்படுவர். கல்வி கற்றால்தான் கண்களுக்கு சிறப்பு என்று கல்வி அதிகாரத்திலும். பகைவர் வீசும் வேலினைக் கண்டு தம் கண்களை ஒரு நொடி மூடித் திறந்தாலும் அதுவே அவ்வீரரின் தோல்வியாகும் என்று படைச்செருக்கு அதிகாரத்தில் கண்களின் பெருமையை கூறிய வள்ளுவர் . குறிப்பறிதலில்
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். (709)
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற. (710)

என்று உள்ளத்தில் பகையையும் நட்பையும் வெறுப்பையும் விருப்பத்தையும் கண்ணே சொல்லிவிடும் என்றும், உள்ளக் கருத்தை நுட்பமாக அளந்தறியும் கருவியாகப் பயன்படுவது கண்ணே என்றும் தெளிவாக்குகிறார். கண்களால் பிறரின் நுண்ணுணர்வுகளையும் கண்டு கொள்ள இயலும், தன்னுடைய நுண்ணுணர்வைப் பிறர்க்கு உணர்த்தவும் இயலும் என்பதைத் திருவள்ளுவர் மேற்கண்ட இருகுறள்களின் வழியாக உணர்த்தியுள்ளார்.

வள்ளுவர் சொன்ன இக்கருத்துகள் இன்றைய உலகிலும் உண்மையாவதைப் பல நிகழ்ச்சிகள் உறுதி செய்கின்றன. அவ்வகையில் இன்றைய உலகச்செய்தி ஒன்றை வள்ளுவரின் கருத்துகளுடன் ஒப்பு நோக்கமுடிகின்றது.
”கனாயம் புதா” என்பவர் ஜப்பான் நாட்டுப் பெண்மணி ஆவார். இவருக்கு ஐம்பத்து ஐந்து வயதான நிலையில் அவரின் கைகால்கள் மற்றும் பேச்சுக் கருவிகள் போன்ற செயலிழந்துபோய்விட்டன. இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று நீண்டநாள் ஆசை. செயலற்ற நிலையில் அவரால் எப்படி நூல் எழுத இயலும். ஆனாலும் அவர் எழுதினார். அவர் ஓர் உதவியாளரை வைத்துக்கொண்டு கண் இமைகளை அசைத்து கண்சாடை மூலமாக இருநூற்று எண்பது பக்கங்களில் ஒரு புத்தகத்தை எழுதி முடித்தார். அதற்கு இரண்டு ஆண்டுகள் ஆயின .இந்நிகழ்ச்சி, கண்சாடைகள் வழியாக மொழியற்ற நிலையிலும் கருததுகளை வெளிப்படுத்த முடியும் என்னும் கண்களின் நுண்தன்மையை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

குறிப்பறிவாரின் துணையே சிறந்த துணை
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.(703)

ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எதனைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும் என்பது வள்ளுவரின் கருத்தாகும்.

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு. (704)

குறிப்பறியக் கூடியர்கள், குறிப்பறிய இயலாதவர்கள் ஆகிய இருதன்மையினரும், உறுப்புகளால் ஒற்றுமை பட்டவர்களாக இருக்கலாம். ஆனால் அறிவால் இவ்விரு தன்மையருக்கும் வேறுபாடுகள் உண்டு. குறிப்பறிவோர் அறிவில் சிறந்தவர்கள் ஆவர்.

இவ்வாறு வள்ளுவர் குறிப்பறியும் பண்பின் சிறப்பினையும், குறிப்பறிதலுக்கான கருவியையும், குறிப்பறிவாரால் ஏற்படும் நன்மைகளையும் ஒருசேரத் தொகுத்து குறிப்பறிதல் அதிகாரமாகத் தந்துள்ளார். தனிமனிதனின் புறவாழ்க்கை சார்ந்த இக்குறிப்பறிதல் பண்பு அன்பும், இரக்குமும், கருணையும் கொண்டு உலகை நிலைத்தவாழச் செய்தவற்கான சிறந்த பண்பாகும்.


திருக்குறளில் வாழ்க்கை

 திருக்குறள் ஒரு முழுநூல், வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் தழுவி வளர்க்கும் வாழ்க்கை நூல், அறநூல், அரசியல் சாத்திர நூல், அரசியல் உண்மைகளைச் சதுரப்பாட்டுடன் காட்டும் பெருநூல், மெய்யுணர்வினை நல்கும் ஞான நூல், மனித வளர்ச்சியின் பருவந்தோறும் துணை நின்று வழிநடத்தும் வாழ்வு நூல், உலகப் பொது நூல்” என்று திருக்குறளின் மேன்மையை எடுத்துரைக்கிறார் சமுதாய மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். திருக்குறள் வாழ்க்கை நூலாகும். வாழ்ந்த காலத்திற்கும், வாழும் காலத்திறகும் எதிர்காலத்திற்கும் தேவையான கருத்துகளை தந்து செம்மை வழி வாழ்க்கையை நடத்தச் சொல்லும் நன்னூல் திருக்குறள் ஆகும். இந்நூலில் தனிமனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, அற வாழ்க்கை, மற வாழ்க்கை, வணிக வாழ்க்கை, அறிவுலக வாழ்க்கை, மெய்யறிவு வாழ்க்கை போன்ற பலநிலைப் பட்ட வாழ்க்கை முறைகள் பற்றிய அறிவுரைகள், வரையறைகள், கருத்துரைகள் வழங்கப்பெற்றுள்ளன.

வாழ்க்கை என்பதற்கு அகரமுதலி வாழ்க்கை, வாழ்தல், வாழ்நாள், இல்வாழ்க்கை, மனைவி, நல்வாழ்வு நிலை, செல்வநிலை, ஊர், மருத நிலத்தூர் என்று பல பொருள்களைக் காட்டுகின்றது அகரமுதலி. இவற்றில் வாழ்க்கை என்பதற்கு வாழ்தல், நல்வாழ்வு நிலை என்ற பொருள்களை இங்குப் பொருத்தமானவைகளாகும்.

திருக்குறள் என்பது வாழ்வியல் நூல். அந்நூலுள் நல்வாழ்வு நிலைக்கான அறிவுரைகள் எக்காலத்திற்கும் ஏற்ற நிலையில் வழங்கப்பெற்றுள்ளன என்பது தெளிவு. திருக்குறளில் வாழ்க்கை பற்றிய பல கோணங்கள் விவரிக்கப்பெற்றிருந்தாலும் திருவள்ளுவர் நேரடியாக வாழ்க்கை என்ற சொல்லைப் பயன்படுத்தி அதனை முன்னிறுத்திச் சொல்லவரும் பொருள்களை உற்றுநோக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

திருவள்ளுவர் தம் திருக்குறள்களில் நேரடியாக வாழ்க்கை என்ற சொல்லைப் பயன்படுத்தி அதன்வழி வாழ்க்கையை வாழவேண்டியதற்கான நெறிமுறைகளை வகுத்துக் காட்டியுள்ளார். திருவள்ளுவர் சுட்டியவாழ்க்கை பற்றிய சிந்தனைகள் உலக மக்கள் நலம் பெறுவதற்கான சிந்தனைகள் ஆகும். வள்ளுவர் காட்டும் வாழ்க்கை குறித்தான வரையறைகள் வழி நல் வாழ்க்கை, தீயவாழ்க்கை என்ற இருவகைகளைக் காணமுடிகின்றது. நல் வாழ்க்கை என்பது அறம் சார்ந்த வாழ்க்கையாகும். தீய வாழ்க்கை என்பது மறம் சார்ந்த வாழ்க்கை முறையாகும். அறம் சார்ந்த வாழ்க்கை முறைக்கு அறமே குறிக்கோள். மறம் சார்ந்த வாழ்க்கை முறை என்பது அறத்தின் மறுதலையானது ஆகும். அறத்தோடு முரண்பாடு உடையது ஆகும். அறத்து முரணான தீய வாழ்க்கை முறையைத் தவிர்க்க வள்ளுவர் பல்வேறு வழிகளைக் காட்டுகிறார். வாழ்க்கை என்ற சொல்லைத் தன் குறள்களில் நேரடியாகப் பயன்படுத்தி அக்குறள்வழி வாழ்க்கையின் அடிப்படைகளை உணர்த்த முயல்கிறார் திருவள்ளுவர்.

siragu thirukkural2

நல்வாழ்க்கை

வள்ளுவர் காட்டும் நல்வாழ்க்கை அறத்தின் வழியில் வாழ்ந்து, பொருள் ஈட்டி, அப்பொருளை மற்றவர்களுக்கு வழங்கி வாழும் வாழ்க்கையே நல்வாழ்க்கை ஆகின்றது. இந்த ஒரு பண்பினைப் பெற்றுவி;ட்டால் போதுமானது மனிதர்கள் நல்ல மனிதர்களாக வாழ்ந்துவிட முடியும். இதில் தவறிய மனிதர்கள் எக்காலத்தும் நல்ல மனிதர்களாக வாழ்ந்திட இயலாது.

பழிஅஞ்சிப் பாத்து ஊனுடைய வாழ்க்கை
வாழ்க்கை என்பதற்கான இலக்கணத்தை
“பழிஅஞ்சிப் பாத்து ஊணுடைத்தாயின் வாழ்க்கை
வழியஞ்சல் எஞ்ஞான்றும் இல்” (44)

என்ற குறளின்வழி காட்டுகிறார் வள்ளுவர். பழிக்கு அஞ்சி வாழ்தலே சிறந்த வாழ்க்கையாகும். பிறர் பழிக்கா வண்ணம் தன்னுடைய வாழ்க்கை அறம் சார்ந்து பொருள் ஈட்டும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும். அவ்வாறு சேர்த்த பொருளை மற்றவர்களுக்கு பகுத்து உண்ணும் அளவிற்கு அளித்து உண்ணும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும். இவ்வாறு வாழ்பவன் வழி உலகம் நிற்கும்.

இவ்வாறு இல்லாமல் பழியோடு வரும் செல்வம் நிலைக்காது. அவ்வாறு செல்வம் சேர்த்தாலும் அதனை பகுத்து உண்ணா நிலையில் பயன்படாமல் சென்றுவிடும். இவ்வாறு வாழ்தல் சிறந்த வாழ்க்கையாகாது. எனவே மனித வாழ்வில் அறம் சார்ந்து வாழ்ந்து மற்றவர்களுக்கு தன்செல்வத்தை, உணவைப் பகிர்ந்தளித்து வாழும் வாழ்க்கை முறையே சிறந்த வாழ்க்கை முறையாகும். இவ்வாழ்க்கை வாழ்பவரை உலகம் முன்னவராகக் கொண்டுப் பின்பற்றி வாழும்.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பகுத்து மற்றவர்களுடன் உண்ணும் வாழ்க்கை முறையானது திங்களுக்கு ஒருமுறை வருடத்திற்கு ஓர் முறை என்று அமையாமல் நாள்தோறும் பகுத்து உண்ணும் நல்வாழ்க்கை முறை என்றைக்கும் செல்வம் குறையாத நிலையில் வளர்ந்து வரும் வாழ்க்கை முறையைப் பெற்றிருக்கும்.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று (83)
என்ற நிலையில் நாள்தோறும் விருந்தோடு உண்ணும் உணவு முறையானது, செல்வத்தை; மிகுவிக்கும் வாழ்க்கை முறையுமாகும் என்கிறார் வள்ளுவர்.

தீய வாழ்க்கை

நல்லதன் பக்கம் சார்வோர் குறைவானவராகவே இருக்க அல்லதன் பக்கம் சார்வோர் வள்ளுவர் காலத்திலும் அதிக அளவில் இருந்துள்ளனர். இவர்களைத் திருத்தவே வள்ளுவர் திருக்குறளை எழுதி இருக்கவேண்டும். தீய வாழ்க்கை வாழ்ந்துவிடாமல் இருக்க பலவற்றை ஒதுக்க வேண்டி உள்ளது. அவ்வகையில் தீய வாழ்க்கை என்ற நிலையில் ஒழிக்கவேண்டியனவற்றை வள்ளுவர் பலவாகக் காட்டி நிற்கிறார். உயிரையும் உடம்பையும் நீக்கும் தீ வாழ்க்கை.

உயிருடன் உடம்பு நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத் தீவாழ்க்கை யவர். (330)

உயிர்களைக் கொல்லாமல் வாழும் வாழ்க்கை சிறந்த வாழ்க்கையாகும். ஆனால் சிலர் உயிர்களை அவற்றின் உடம்பில் இருந்து நீக்கி வாழ்ந்துவருகின்றனர். அவர்களின் வாழ்க்கை தீய வாழ்க்கையாகும். உயிர்களைக் காத்து வாழும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும். இவ்வகையில் உயிர்க்கொலை தவிர்ந்த வாழ்க்கை உடையவர்கள் உலகில் சிறந்த வாழ்வைப் பெற்றவர்கள் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை

உலக மக்கள் அனைவருக்கும் தனக்கு எதனால் கேடு ஏற்படும் என்று தெரிந்தே வாழ்கின்றனர். இவ்விவற்றால் தீமை வரும் என்று தெரிந்த நிலையில் அவ்வவற்றைத் தன்னிடம் வந்து சேராமல் காத்துக் கொள்ள முன்னேற்பாடு செய்து கொள்ளும் வாழ்க்கை இனிதாக அமையும். அவ்வாறு எதிர் வருவதை அறியாமல் வாழ்பவனின் வாழ்க்கை நெருப்பின் முன்னர் வைத்த எரி பொருளை ஒத்ததாக அமையும். இதனை

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் (435)

என்று எடுத்துரைக்கிறார் வள்ளுவர்.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை

தம் வாழ்வின் எல்லை அறிந்து இவ்வளவே தன்னின் எல்லை என அறிந்து அதற்கேற்ப அவ்வெல்லைக்குள்ளேயே வாழும் வாழ்க்கை உடையவன் சிறந்த வாழ்க்கை வாழ்பவன் ஆகிறான்.

அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகி, தோன்றக் கெடும் (479)

என்ற குறள் இதனை உணர்த்துகிறது. அளவு அறந்து வாழும் வாழ்வே சிறந்த வாழ்வாகும். தன்னிடம் உள்ள பொருள், அதிகாரம் ஆகியவற்றின் அளவறிந்து ஒருவன் வாழ்தல் வேண்டும். இவற்றின் எல்லைகளை அறியாமல் வாழ்பவன் வாழ்க்கை இருப்பது பேல இருக்கும், ஆனால் மறைந்துவிடும் என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை

எவற்றையும் அளவறிந்து செய்தல் வேண்டும். அளவில்லாமல் அனைத்தையும் செலவிடும் வாழ்க்கை சரியான வாழ்க்கையாகாது. அவ்வாழ்க்கை கரையில்லாத குளம் போன்றதாகும் என்கிறார் வள்ளுவர். கரையில்லாத குளத்தில் நீர் தங்குவது கிடையாது. ஆகவே வாழும் வாழ்வில் பொருளைச் சேர்க்க வேண்டுமானால் அளவறிந்து செலவு செய்தல் வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார் வள்ளுவர். அளவில்லாமல் செலவு செய்தால் பொருள் சேராது என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டிய செய்தியாகும்.

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடு இன்றி நீர் நிறைந்தற்று. (523)
இகல் இனிது என்பவன் வாழ்க்கை

வாழ்க்கை என்பது இனிதானது. இனிதானவர்களுடன் பழகி இனிதே செய்வதே வாழ்வின் இனிமையாகும். ஆனால் சிலர் மாறுபட்டு வாழ்வதே வாழ்க்கை என்று வாழ்ந்துவருகிறார்கள். முரண்பட்டு வாழ்தலே வாழ்க்கை என்று வாழ்பவர்தம் வாழ்க்கை, தவறும் வாழ்க்கையாகும். அதுமட்டுமில்லாமல் முற்றிலும் அழிந்துபோகும் வாழ்க்கை என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். முரண்படா வாழ்க்கை வாழ்தலே இனிதானதாகும்.

இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை,
தவலும் கெடலும் நணித்து (856)
என்று வள்ளுவர் காட்டும் வழி சமுதாயத்துடன் இணங்கி வாழும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.

உடன்பாடு இல்லாதவர் வாழ்க்கை

தன்னோடு உடன்பட்டு வாழ்வோருடன் வாழும் வாழ்க்கை சிறப்பானதாகும். முரண்பட்டு வாழ்வோருடன் வாழும் வாழ்க்கையானது கொடுமையானது ஆகும். பாம்புடன் ஒரே குடிலுள் ஒரு மனிதன் வாழும் வாழ்க்கை போன்றது உடன்பாடு இல்லாதவருடன் வாழும் வாழ்க்கை என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். இல்வாழ்க்கையிலும் இதே நிலைதான். பொதுவாழ்க்கையிலும் இதே நிலைதான்.

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று (890)

என்ற குறள் காட்டும் நெறியானது உலக வாழ்க்கையின் உன்னதத்தை உணர்த்துவதாகும்.

வகை மாண்ட வாழ்க்கை

சிறப்பான வாழ்க்கை என்பது பெரியோரைப் பேணி அவர் சொல்படி வாழும் வாழ்க்கையாகும் பெரியாரைப் பிழையாமல் வாழும் வாழ்க்கை சிறப்பானதாகும். நிறைய பொருளும், வளமான வாழ்க்கையும் நிலைக்க வேண்டுமானால் தகைமை உடைய தக்காரிடத்தில் அன்புடன் வாழ்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் சான்றோர் தம் கோபத்தினை அதிகரிக்கும் வண்ணம் வாழும் வாழ்க்கையானது சிறப்பான வாழ்க்கையாக அமையாது.

வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின் (897)

என்ற திருக்குறள் பெரியோரைப் பேணி வாழும் வாழ்வின் சிறப்பினை எடுத்துரைக்கிறது.

ஊன் ஓம்பும் வாழ்க்கை

மானத்துடன் வாழும்வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும். மானத்தை விடுத்து வெறும் உடம்பை வளர்ந்து வாழும் வாழ்க்கை சிறப்பான வாழ்க்கையாகாது. ஒருவனுடைய பெருந்தகைமையால் அவனுக்கு வந்த புகழ் அழியும்நிலையில் வெறும் உடம்பை மட்டுமே பேணி வாழும் வாழ்க்கையால் பயன் இருக்காது. மானம் காத்து வாழும் வாழ்க்கையே சாவாமைக்கு மருந்து ஆகும்

மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்தவிடத்து (968)

என்ற வள்ளவர் கூற்று மானத்துடன் வாழும் பெருந்தகைமை வாழ்க்கையே சாவாமைக்கு மருந்து என்று குறிக்கிறது.
இவ்வகையில் வாழ்க்கை என்ற சொல்லைப் பயன்படுத்தித் தன் குறட்பாக்களில் வாழ்க்கை பற்றிய சிந்தனைகளை அள்ளித் தந்துள்ளார் திருவள்ளுவர். அறத்தின் வழியாகப் பொருளைச் சேர்த்து மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ணும் வாழ்க்கையே சிறந்த நல்ல வாழ்க்கையாகும். மேலும் உயிர்களைக் கொலை செய்யாமல் வாழ்தல், வருமுன்னர் காத்து வாழும் வாழ்க்கை, அளவறிந்து வாழும் வாழ்க்கை, முரண்பாடு இல்லாமல் இயைந்து வாழும் வாழ்க்கை, மானத்துடன் வாழும் வாழ்க்கை போன்றன நல்வாழ்க்கையின் இலக்கணங்கள் ஆகின்றன. இவற்றில் மாறுபட்டு நடக்கும் வாழ்க்கை தீவாழ்க்கையாகின்றது.

சான்றாதாரங்கள்

1. தவத்திரு குன்றக்குடி அடிகளார், திருக்குறள் உரை, ப.3
2. சண்முகம் பிள்ளை, அகரமுதலி

வாருணி சரித்திர கும்மிப் பாடலில் தனிமனித ஒழுக்கக் கூறுகள்

 தமிழ் இலக்கியங்களில் அறியப்படாத பல இலக்கியங்கள் இன்னமும் உள்ளன. குறிப்பாக நாட்டுப் புற இலக்கியங்கள் பல இன்னும் வெளியுலகால் அறியப்படாமலே உள்ளன. திருவாடானை என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சிநேக வல்லி உடனுறை ஆதி ரத்தினேஸ்வரர் ஆலயத்தை மையமாக வைத்து சட்டமுத்து என்ற என். குஞ்சம்மாள் இயற்றிய கும்மி வாருணி சரித்திர கும்மி என்பதாகும். இக்கும்மி இணைய வெளியில் கிடைக்கின்றது. இதுவரை அறியப்படாத இலக்கியமான இதனுள் பல நல்ல கருத்துகள் அடங்கியுள்ளன. குறிப்பாக வாருணி என்பவனின் தனிமனித ஒழுக்கம் குறித்தான செய்திகள் இதனுள் பாடப் பெற்றுள்ளன. அவற்றை எடுத்துரைக்கும் நோக்கில் இக்கட்டுரை எழுதப் பெற்றுள்ளது.

வாருணி சரித்திர கும்மிப் பாடல் –அறிமுகம்

வாருணி சரித்திர கும்மியைப் பாடியவர் சட்டமுத்து என்ற என். குஞ்சம்மாள் ஆவார். இவரின் பிறந்த ஊர் அரும்பூர் ஆகும். இவரின் தந்தையார் பெயர் நல்லசாமி குருக்கள் என்பவர் ஆவார். இப்பெண் திருவாடானையில் வாழ்ந்த ஆபத் நாராயண குருக்குள் என்பவரைத் திருமணம்செய்ததன் காரணமாகத் திருவாடனைக்கு வந்து சேர்கிறார். இவருக்குப் படிப்பறிவு, கேள்வி ஞானம் போன்றன இருந்துள்ளன. இதன் காரணமாக இவர் திருவாரூர் சாமிநாத தேசிகர் எழுதிய திருவாடானை தல மான்மியம் என்ற நூலில் அமைந்துள்ள வாருணி சாபமடைந்த சருக்கம், வாருணி சாப விமோசனச் சருக்கம் ஆகிய பகுதிகளை அடிப்படையாக வைத்து வாருணி சரித்திர கும்மி என்பதைப் படைத்துள்ளார்.

வாருணி சரித்திர கும்மி பதினெட்டு கட்டங்களை உடையதாக எழுதப்பெற்றுள்ளது. கும்மிப் பாடல்கள் இவர் வாழ்ந்த காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த இசைப் பாடல்களை அடியொற்றி எழுதப்பெற்றுள்ளது.

 இதனை வெளியிட உதவியவர் இவரின் மாமா முறையினரான டி. முத்துசாமி குருக்கள் என்பவரால் 1935 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது. இதனை சென்னையில் உள்ள சத்திய நேசன் என்ற அச்சகம் அச்சடித்து வெளியிட்டுள்ளது.

கும்மிப்பாடலின் முன்பகுதியில் விநாயகர், முருகன், நாமகள் ஆகிய கடவுளர்களின் வணக்கங்கள் பாடப்பெற்றுள்ளன. இதன்பிறகு சவுனக முனிவர் வாருணி சாபம் பெற்ற கதையைக் கேட்க சூத முனிவர் கதையைச் சொல்வதாக இக்கும்மி பாடப்பெற்றுள்ளது.

இதனுள் சூரியன், வருணன், வருணனின் மனைவி, வாருணி, பிருகு முனிவர், துர்வாச முனிவர், தேவர்கள், முனிவர்கள், அருள்மிகு ஆதி ரத்தினேஸ்வரர், அருள்மிகு சிநேக வல்லி போன்றோர் பாத்திரங்களாக இடம்பெறுகின்றனர்.

 வாருணி என்ற வருணனின் மகன் சிவபெருமானைத் தரிசித்துவிட்டுத் திரும்பும் நிலையில் அவன் தன் படைகளுடன் துர்வாசர் முனிவர் தம் வனத்தில் தங்கிவிடுகிறான். அவ்வனம் மலர்கள், காய்கள், கனிகள் நிரம்பிக் கிடந்த வனமாகும். அவ்வனத்தில் நுழைந்த வாருணியின் படைகள் அவற்றைப் பறித்தும் அழித்தும் தேய்த்தும் நாசம் செய்ய அதனைத் துர்வாச முனிவர் தடுக்க வருகிறார். அவரிடம் வாருணி பணிவாக நடக்காமல் ஆணவத்துடன் நடக்க அவர் பதினான்கு ஆண்டுகாலம் ஆடு, யானை ஆகிய உருவக் கலப்பாக நீ பிறப்பாய் என்று சாபம் தருகிறார்.

இதனால் ஆட்டுத் தலையும், யானை உடலும் பெற்று வாருணி காண்பவர் சிரிக்கும் நிலைக்குத் தள்ளப்பெற்றான். இவன் சாபம் நீங்க திருவாடானை தலத்து இறைவனை வழிபடவேண்டும் என்று துர்வாசரும், அகத்தியரும் குறிப்பிட அவ்வழி இவன் திருவாடானை வந்து தவம் செய்து அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரரை, சிநேக வல்லித் தாயருடன் காளை வாகனத்தில் தரிசித்துத் தன் முன்வினைப் பயனைத் தீர்த்து நல்லுருவம் பெறுகிறான். இதன் காரணமாக சென்ற கால தீவினைகள் அழிக்கும் இறைவனாகத் திருவாடானை ஆதி ரத்தினேஸ்வரர் விளங்குகிறார் என்ற செய்தி தெரியவருகிறது.

இதன்பின்பு வாருணி வாருணி தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி அதன் அருகே சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டு நற்கதி பெறுகிறான். தேவர்கள் மலர் மழை பொழிகிறார்கள். இதுவே வாருணி சாபம் பெற்ற கதையும் நீங்கிய கதையும் ஆகும். இதனைக் கும்மியாக வடித்துள்ளார் குஞ்சம்மாள்.

தனி மனித ஒழுக்கம்

தனிமனிதனின் ஒழுக்கமே அவன் சார்ந்த சமுதாயத்திற்கும் ஆகின்றது. அவனின் ஒழுக்கம் மீறல் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் மீறலாகி விடுகின்றது. எனவே தனி மனித ஒழுக்கம் சமுதாய ஒழுக்கத்தின் மூலமாக விளங்குகின்றது. “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்ற வள்ளுவர் குறள் ஒழுக்கத்தின் மேன்மையைச் சுட்டும்.

வாருணி சரித்திர கும்மியில் வருணனின் மகன் வாருணி செய்த சில தனிமனித மீறல்களால் அவன் சார்ந்த குழுவும் அவனும் பாதிக்கப்படும் நிலையைக் காணமுடிகின்றது. வாருணி தனக்குச் சொந்தமில்லாத  சோலையைப் பாழ்படுத்தும் நிலையில் அந்தச் சோலைக்கு உரியவரான துர்வாச முனிவரால் சாபத்திற்கு உள்ளாகிறான். இதனை இக்கும்மி

            ‘‘இந்த விதமிருக்க வந்த வாருணி சேனை

வந்து புஷ்ப பத்திர மாநதியை அடுக்க (மெத்த)

செஞ்சடை முனியுந்தன் தஞ்சமென்று வாருணி

அஞ்சிப் பணியாமல் அகங்காரத்துடன் நின்றான்(மெத்த)

அந்தமாய் வாருணியின் சிந்தைக்  கெர்வத்தைக் கண்டு

செந்தழல் என ரிஷி சீரிச் சபிக்கலுற்றார்”

                        (என். குஞ்சம்மாள், வாருணி சரித்திர கும்மி  ஏழாவது கட்டம்)

என்று பாடுகின்றது. துர்சாவ முனிவர் கோபம் என்ற தன்மையின் உச்சியில் நிற்பவர். அவரின் சோலையில் அவரின் அனுமதி பெறாமல் வாருணி சேனை சென்று அந்தச் சோலையை நாசம் செய்கின்றது. அதனை அறிந்து அங்கு வந்த துர்வாச முனிவரின் கோபம் கொள்ள அந்தக் கோபத்தைக் கண்டும் வாருணி அஞ்சாமல், பணியாமால் கர்வத்துடன் நிற்கிறான். இதன் காரணமாக  தீபோன்று முனிவர் அவனைச் சபித்தார்.

இந்நிகழ்ச்சி வழியாக பெரியாரைப் போற்றல் என்ற பண்பினை வாருணி இழந்து நிற்கிறான். மேலும் அவன் கர்வத்துடன் பணிவின்றி நிற்கிறான். பெரியோரைத் தவத்தினரைக் கண்டால் பணிவும், கர்வமின்மையும் வரவேண்டும். இதனை மீறி கர்வத்துடன் நின்ற காரணத்தால் வாருணி என்ற வருண தேவனின் மகன் சாபத்திற்கு ஆளாகிறான். மனிதன் என்ற நிலையைத் தாண்டி தேவர் மகன் ஆயினும் பணிவும் கர்வமின்மையும் வேண்டும் என்பதை இந்நிகழ்ச்சி காட்டுகின்றது.

            துர்வாச முனிவர் வாருணிக்குத் தந்த சாபம் விசித்திரமானது.

“சிந்தையில் துர்வாச ரிஷி சினமிகக் கொண்டு

மைந்தனான வாருணியின் வதனத்தை நோக்கி

அந்தணர் முனிவர்களை அவமதித்ததால்

உந்தன் முகம் அஜமும் யானை உடலும் ஆகவே

தந்தேன் சாபமென்று கூற தரணி வேந்தனும்

சிந்தை நொந்து மகரிஷியின் திருவடி பணிந்தான்”

            (என்.குஞ்சம்மாள், வாருணி சரித்திர கும்மி, எட்டாவது கட்டம்)

என்று சாபத்தின் தன்மையைக் காட்டுகிறது இக்கும்மி.  அந்தணர்கள், முனிவர்கள் ஆகியோரை அவமதித்த குற்றத்தால்  வாருணியின் முகம் ஆட்டின் முகம் போலவும், உடல் யானையைப் போலவும் மாறட்டும் என்று சாபம் வழங்கப்படுகிறது. இச்சாபம் திருவாடானைத்தலத்தில் நீங்கவேண்டும் என்பது இங்குக் குறிப்பு. திருவாடானை என்ற ஊரின் பெயர் இந்தப் புராணத்தின் அடிப்படையில் ஏற்பட்டது. ஆடு, ஆனை வடிவிலான வாருணி என்ற தேவன் வணங்கிப் பழைய தன் உருவம் பெற்றதால் இவ்வூர் திருவாடானை என்றே வழங்கப்படுகிறது. இதனை அஜகஜபுரம் என்று வடமொழியில் அழைப்பர்.

வாருணி செய்த தவறினால் அவனும் அவனுடன் வந்த சேனையும் பாதிப்பினைப் பெற்றது. இச்சாபம் தீர வழியையும் துர்வாச முனிவர் அவனுக்கு அறிவிப்பதாகக் காட்டுகிறது இக்கும்மி.

            வாரணமாக வருஷம் ஈராறு வாருணியே இருப்பாய்

தாரணியில் அகஸ்தியர் வார்த்தையால் தந்தையுடன் சிறப்பாய்

சேத்திரந் தன்னில் கீர்த்தி கண் வாய்ந்த

திருவாடானை வாழ் மூர்த்தியை பானுதீர்த்தத்தில் மூழ்கி

தோத்திரம் செய்திடுவாய்.

முன்னுருவாகி முனியாம் மார்க்கண்டர் தன்னடி பணிந்து

நன்னயமாய் உபதேசம் பெற்று நாயகனைப் பணிந்து

வீராசனத்தில் வீற்றிருக்கின்ற வேதநாதனின்

நேராகவே நீ பஞ்சாட்சரத்தை ஆறு லெட்சம் ஜபிப்பாய்.

என்று துர்வாசர் இயம்பிடக் கேட்டு ஏகினன் இறைவன் அன்று

அஜமும் யானையுடலும் ஆகினான் விரைவாய் (ஒன்பதாம் கட்டம்)

என்ற அடிகளில் சாபத்தைத் தீர்க்க வழி  சொல்லப்படுகிறது. ஆறு லட்சம் முறை ஆண்டவனின் திருப் பெயரை உச்சரிப்பதன் வாயிலாக சாபம் தீரும் என்பது இவ்வடிகள் சொல்லும் வழியாகும்.

ஒருவர் செய்த பிழையைத் தீர்க்கத் தீர்த்தம் ஆடல், தோத்திரம் செய்தல் போன்ற நடைமுறைகள் செய்யப்பட வேண்டும் என்று இப்புராணம் காட்டுகின்றது. பிழைகளைத் தவிர்ப்பவன் இறைவன் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த சாபவிமோசனம் சுட்டப்பெற்றுள்ளது.

மேலும் இக்கும்மியில் நிறைவுப் பகுதியில் இறைவனை வில்வம் கொண்டு அர்ச்சனை செய்வதன் வாயிலாக எல்லா நன்மைகளும் பெறலாம் என்றும் காட்டப்பெற்றுள்ளது. வாருணி ரத்தினங்கள் பல இறைவனுக்கு அளித்து, வில்வ அர்ச்சனை செய்து தன் பழவினை தீர்கிறான்.

இவ்வாறு இக்கும்மி பிழைகள் செய்வோர் இயல்பினையும் அப்பிழைகளைத் தவிர்ப்பவன் இறைவன் என்பதையும் எடுத்துரைக்கின்றது.  தனி மனிதன் தன் ஆசைக்கு உட்பட்டுத் தவறுகள் செய்யாமல் இறைநெறியில் செல்லவேண்டும் என்பதை இக்கும்மி எடுத்துரைக்கின்றது.