புதன், ஜனவரி 03, 2018

செம்மொழி இலக்கியப் பெண் புனைவுகள் முனைவர் மு.பழனியப்பன்

சங்க இலக்கியங்களில் பல புனைவுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பெண் குறித்தான புனைவுகள் கூர்ந்து கவனிக்கத்தக்கன. பெண்ணியம் விழித்து எழுந்து மூன்றாம் அலையாய்ப் பரவும் இக்கால எல்லையில் அப்புனைவுகளைப் பெண்ணிய நோக்கில் ஆராய்வது என்பது புதிய வெளிச்சத்தைப் பரப்பும் என்பதில் ஐயமில்லை.
சங்கஇலக்கியங்களில் காணப்படும் பெண் சார்ந்த புனைவுகளாகப் பின் வருவனவற்றைக் கொள்ள இயலும். கொல்லிப்பாவை, பெண்கொலை புரிந்த நன்னன், திருமாவுண்ணி, அன்னிமிஞிலி ஆகிய புனைவுகளில் பெண் பாத்திரங்கள் மையமாக அமைகின்றன. இக்கதைகள் வாய்மொழிப் புனைவுகளாகும். இவற்றை உருவாக்கியவர்கள் யார் என்று அறியாத நிலையில் இவை எவரால் சொல்லப்பட்ட புனைவுகள் என்பதை அறிய இயலாத நிலை உள்ளது. இவை உவமைகளாக, எடுத்துரைப்புகளாக இருப்பதை எண்ணிப் பார்க்குங்கால் தமிழ்ச் சமுதாயத்தில் இவை வழிவழியாகப் பயன்படுத்தப் பெற்று வந்துள்ளன என்பதை மட்டும் உணரமுடிகின்றது.
தற்காலத்தில் தொன்மம் சார்ந்த புனைவுகளிலும் பெண்ணிய ஆய்வு மேற்கொள்ளப்பெறுகின்றது. இதுகுறித்த பின்வரும் ஆய்வாளரின் கருத்து நோக்கத்தக்கது. ‘‘தற்போதைய காலக்கட்டத்தில் பெண்ணிய இயக்கம் சமுதாய அறிவியல், தொல்லியல், தொல்மானிடவியல், இறையியில் போன்ற பலதுறைகளைக் கவனித்து வருகிறது. அதே நேரத்தில் அவற்றில் இடம்பெற்றுள்ள தொன்மக் கூறுகளை பெண்மையத்துடன் ஆராயத் தலைப்படுகிறது. அவற்றில் காணப்படும் ஆ;ண் மையமிட்ட  அரசியலை, ஆண்  பாத்திரங்களை அவை குறித்த சொல்லாடல்களை வெளிப்படுத்த பெண்ணிய நோக்கு முன்வருகிறது. இத்தொன்மங்களில் உள்ள பெண் மௌனம்,  பெண்ணுக்கான இடமில்லா நிலை போன்றனவும் நுணுக்கமாக கவனிக்கப்படுகின்றன என்ற கருத்தின் வழியாக பெண்ணியம் தொன்மங்களிலும் தன் ஆய்வினைச் செலுத்திவருகிறது என்பது உணரப்படுகின்றது.
மேற்குறித்த புனைவுகளை பெண்ணிய நோக்கில் ஆராய்வது என்பது இக்கட்டுரையின் நோக்கமாகின்றது.
கொல்லிப்பாவை
siragu semmoli5
மிகு அழகு பொருந்திய ஒரு படிமமாகக் கொல்லிப்பாவை சங்க இலக்கியங்களால் சுட்டப்படுகிறது. இக்கொல்லிப்பாவை இன்னமும் கொல்லிமலையில் எட்டுக்கை அம்மனாக வழிபடப்பட்டு வருகிறது என்பது சங்க இலக்கிய மரபின் தொடர்ச்சி இன்னமும் தமிழகத்தில் எச்சமாக உள்ளது என்பதை விளக்குவதாக உள்ளது.
கொல்லிப்பாவை பற்றிப் பல்வேறு சங்கப்பாடல்கள் அறிவிக்கின்றன.
‘பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப்
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின்
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே. (நற்றிணை-192-8-12.)
என்பது கொல்லிப்பாவையின் இயல்பினைத் தெளிவாக உணர்த்தும் நற்றிணைப் பாடலாகும். கொல்லி மலை பலா மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியை உடையது. இதனுள் உள்ள குடவரையில் பூதத்ததால் செய்யப்பெற்ற புதிய இயல் பாவை வெளியில் வந்து இளவெயிலில் நின்றது போன்ற வடிவத்தைப் பெற்றவள் தலைவி என்று இங்குத் தலைவன் தலைவியைப் பாராட்டுகிறான்.
இப்பாடல் வழி கொல்லி மலை பலாமரங்கள் பலவற்றை உடையது என்பதும், அங்கு பல குடவரைகள் உள்ளன என்பதும், கொல்லிப்பாவை பூதத்தால் செய்யப்பெற்றது என்பதும், அது வெயிலில் நின்றது என்பதும் ஆன கருத்துகள் பெறப்படுகின்றன. எனவே கொல்லிப்பாவை வெயிலில் நின்றது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
“ஈங்கே வருவாள் இவள் யார் கொல்? ஆங்கே, ஓர்
வல்லவன் தைஇய பாவைகொல்? நல்லார்
உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள்கொல்? வெறுப்பினால்,
வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்கொல்?“ (கலித்தொகை-56-6-9)
என்று கலித்தொகைத் தலைவன் கொல்லிப்பாவையின் அழகைக் காட்டுகிறான். வல்லவன் தைஇய பாவை கொல் என்ற தொடர் மிகக் கவனமாகக் கவனிக்கத்தக்கது. சிற்பக்கலை வல்ல ஒருவனோ, அல்லது ஓவியக்கலை ஒருவனோ செய்த பாவை கொல்லிப்பாவை என்பது தெரியவருகிறது. மேலும் அப்பாவைக்கு அழகும் இயக்கமும் தரப்பெற்று உண்மைப் பெண்ணாகவே வடிவமைக்கப்பெற்றிருந்தது என்பது தெரியவருகிறது. இப்பாவை, அழியா நிலை பெற்றது என்பதை மற்றொரு நற்றிணைப்பாடல் காட்டுகின்றது.
‘‘ செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு,
அவ் வௌ;அருவிக் குட வரையகத்து,
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும்,
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின்
மாயா இயற்கைப் பாவையின்,
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே” (நற்றிணை-201-5-12)
என்ற பாடலின்வழி வெள்ளருவிப் பக்கத்தில் கொல்லிப்பாவை நிறுவப்பெற்றது என்பதையும், கொல்லிப்பாவையைத் தெய்வ அருள் காத்துவருகிறது என்பதையும் அறியமுடிகிறது. இது போன்று பல பாவைகள் தமிழகத்தின் பல இடங்களில் இருந்துள்ளன. ஆனால் அவற்றில் அழியாமல் இருக்கும் ஒரே பாவை கொல்லிப்பாவை மட்டும்தான் என்பது கொல்லி மலை மக்களின் கூற்றாகவும் உள்ளது. இச்செய்தி இப்பாடலில் அமைந்துள்ளது. காற்றடித்தாலும்,  பெருமழை பொழிந்தாலும், இடி இடித்தாலும், பல இன்னல்கள் விளைந்தாலும், நிலமே பிளந்தாலும் அழியாத திருஉருவாக மாயா இயற்கைப் பாவையாகக் கொல்லிப்பாவை கொல்லிமலையில் நிறுவப்பெற்றுள்ளது.
இக்குறிப்புகள் தவிர “பாவை அன்ன வனப்பினள் இவள்“ (நற்றிணை-301-6), “நல்லியற் பாவை அன்ன“ (குறுந்தொகை-89-6), “வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் பாவையின் மடவந் தனளே“ (குறுந்தொகை-100-5-6), “ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற், பாவை அன்ன குறுந்தொடி மகளிர்“ (புறநானூறு-251-1-2) போன்றனவும் கொல்லிப்பாவையின் இருப்பினைக் காட்டுவனவாக உள்ளன.
கொல்லிப்பாவை பற்றிய தொன்மக்கருத்துகளும் தமிழ் உலகில் அமைந்துகிடக்கின்றன. அபிதான சிந்தாமணி மூன்று கருத்துகளை முன்வைக்கின்றது. இவற்றின் சுருக்கம் பின்வருமாறு.
இது கொல்லி மலையின் மேற்பாற் செய்துவைக்கப் பட்ட பெண் வடிவமாகிய பிரதிமை. இக்கொல்லி மலை முனிவர்கள், தவத்தோர் உறைவதற்கு மிகச் சிறந்த இடமாகும். இங்கு அவர்களுக்கு ஊறு செய்யும் இராக்கதர்கள் வந்து இடைஞ்சல் செய்கின்ற நிலையில் அவர்களை திசை திருப்ப ஒரு பெண் உருவம் செய்து வைக்கப்பெற்றது. அவ்வுருவம் இராக்கதர் வருவதை அறிந்து அவர்கள் வரும்போது நகை செய்து மயக்கும். இம்மயக்கத்தில் மயங்கிக் காமம் தலைக்கேறி தன் உயிர் மாயத்துக்கொல்வர் என்பது முதற்கருத்தாகும். அடுத்து இப்பாவை தேவதைகளால் காக்கப்படுவது, காற்று, மழை, ஊழியாலும் அழியாதது என்று சங்க இலக்கியம் காட்டும் கொல்லிப்பாவையைக் காட்டுவதாக இரண்டாம் கருத்து அமைகிறது. மூன்றாம் கருத்து இது கொல்லி என்னும் பெயர் கொண்ட மலையின்கணுள்ள ஒருபெண்பாற் பிரதிமை. இது மோகினிப்படிமை. என்று புராணச் சார்புடன் அமைகிறது.
இக்கருத்துகளின் வழியாகக் கொல்லிப்பாவை புனையப்பெற்ற ஒரு பாவை என்பது தெரியவருகிறது. இப்பாவை இன்றளவும் கொல்லிமலையில் உள்ளது. தென்னங்கீற்றோலை வேயப்பெற்ற கோயிலாக இது விளங்குகிறது. உள்ளே அழகான உருவத்தில் கொல்லிப் பாவை வடிவமைக்கப்பெற்றுள்ளது. தற்போது இது கற்சிலையாக விளங்குகிறது. ஓவிய நலனும் புனையப்பெறுகிறது. இதற்கு ஆண்களே பூசைகள் இயற்றுகின்றனர்.
siragu semmoli1
கொல்லிப்பாவை என்பது பெண் உருவம். ஆனால் ஆண்களால் வடிவமைக்கப்பெற்ற உருவம். ஆண்களை வசியம் செய்ய அமைக்கப்பெற்ற உருவம். ஆண்களை அழிக்கும் உருவம் என்ற கருத்துருவாக்கம் கொல்லிப்பாவையின் மீது சுமத்தப்பெற்றுள்ளது.  தோன்றிய பின்புலமே இல்லாமல், எவ்வித நிகழ்வும் இல்லாமல் ஒரு பெண் உருவம் புனையப்பெற்றுள்ளது. இவ்வுருவத்தை இவ்வளவு உயரத்தில் வந்து அந்த காலத்தில் பெண்கள் வந்து தரிசித்திருக்க வாய்ப்பில்லை.
இவ்வளவில் பெண்ணுக்குத் தொடர்பில்லாத ஒருபடைப்பினைப் படைத்து, அதனால் ஆண்கள் அழிவதாகக் காட்டும் ஆண் ஆக்க முறைமை, பெண்ணின் அழகு ஆண்களை அழிக்கத்தக்கது என்ற அளவில் ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே அமைக்கப்பெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது. மேலும் கொல்லிப்பாவையின் அழகுக்கு இணையானவள் தலைவி என்றால் அக்கொல்லிப்பாவையின் குணங்களுக்கும் உரியவளாகப் பெண் மறைமுகமாகச் சுட்டப்படுகிறாள். பெண்ணுக்கே சம்பந்தம் இல்லாத ஒரு ஆண்படைப்பு பெண்ணைக் குறைத்து மதிப்பிடப் பயன்படுத்தப்பெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது.
தற்கால கொல்லிப்பாவையின் கோயிலும், கொல்லிப்பாவையும்
எவ்வாறு இருப்பினும் கொல்லிப்பாவை  எட்டுக்கை அம்மனாகத் தற்காலத்தில் வழிபடப்பெற்றுவருவதன் வழி சங்க இலக்கிய எச்சம் நீள்வதையும், அதன்வழி புனைவுகளில் ஆண்மையம் நீள்வதையும் உணரமுடிகின்றது.
குறிப்பாக இப்புனைவின் வாயிலாக பெண்ணின் நகைப்பு எவ்வகை இயந்திரத்தாலும் இயற்ற முடியாதது, அதனை இயற்றிக் காண்பிக்க முடியும் என்பதைக் காட்டுவதாகக் கொல்லிப்பாவை அமைகிறது. பெண்ணின் சிரிப்பு என்பது இயந்திரத்தனமானது என்பதையும், அதன் காரணமாக ஆண்களுக்கு அழிவே நேரும் என்பதையே இப்புனைவு முன்வைக்கின்றது.
பெண் கொலை புரிந்த நன்னன்
பெயர் அறியப் பெறாத ஒரு பெண்ணின் சோகக்கதையை உட்கொண்டது பெண் கொலை புரிந்த நன்னன் என்ற புனைவு.
‘‘மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே” (நற்றிணை 292)
என்ற நற்றிணைப்பாடல் பெண் கொலை புரிந்த நன்னனின் கதையைத் தெளிவாக்குகின்றது. ஆணைமலையில் அழகான நெற்றியை உடைய பண் ஒருத்தி  ஆழியாற்றிற்கு நீராடச் செல்கிறாள். அப்போது அந்த ஆறு ஒரு பசிய மாங்காயை அடித்துவருகிறது. இதனை அவள் உண்டுவிடுகிறாள்.
நன்னன் என்ற மன்னனுக்கு உரிய காவல்மரமாக அந்த பசிய மாங்காயின் மரம் விளங்கியது. இதன் காரணமாக காவல் மரத்திற்கு இழிவு செய்தாள் என்ற நிலையில் அவளுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இதனைத் தவிர்க்க மாங்காய் உண்ட பெண்ணின் எடைக்கு ஈடாக ஒரு பொற்பாவையையும்,  எண்பத்தோரு யானைகளையும் தருவதாகக் கூறியபோதும் அவன் மாங்காய் உண்ட பெண்ணைக் கொலை செய்யாது விடவில்லை. கொன்றுவிடுகிறான். இதுவரை இப்பாடலில் பதிவுசெய்யப்படுகிறது. இதன்பின் நன்னன் அழிவு என்பது அடுத்த கட்டமாகத் தொடர்கிறது.
‘‘மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போக்கிய
ஒன்று மொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே” (குறுந்தொகை,73)
என்ற பாடலில் நன்னின் அழிவு காட்டப்பெறுகிறது.
இப்பாடலின் வழி கொலை செய்யப்பெற்ற பெண் கோசர் இனத்தவள் என்பது தெரியவருகிறது. தம் குலப்பெண்ணை அழித்த நன்னனைக் கோசர்கள் பழிவாக்கக் காந்திருந்தனர். அகுதை என்பானின் தந்தையிடம் அகவன் மகளிரை அனுப்பி அவனிடம் கொடை பெற வைத்தனர். அவன் கொடையாகத் தந்த யானைகளை நன்னனின் காவல்மரமான மாமரத்தில் கட்டச் செய்தனர். இந்நேரத்தில் நன்னன் ஊரில் இல்லாத காரணத்தால் யானைகள் கட்டப்பெற்றன. அவ்யானைகள் மாமரத்தைத் தூருடன் பெயர்த்தன. இதன் காரணமாக காவல் மரம் அழிந்தது. இதனை அழித்தவர்கள் யார் என்று தேடி வந்த நன்னனைக் கோசர்கள் அகுதையின் படையுடன் சந்தித்து அவனைக் கொன்றுப் பழி தீர்த்தனர். இவ்வரலாறுகள் பெண்கொலை செய்த நன்னன் என்ற புனைவில் அமைந்துள்ளன.
இந்நிகழ்வில் பாதிக்கப்பெற்ற பெண்ணே தற்போது மாசாணி அம்மனாக விளங்குகிறது என்ற நம்பிக்கை விளங்கி வருகிறது. பெண் கொலை செய்யப்பட்ட கோலத்தில், பதினைந்து அடி நீளத்தில் படுத்துக் கிடக்கும் அம்மனாக மாசாணி அம்மன் விளங்குகிறது. இவ்வம்மன் உப்பாற்றின் கரையில் மயானத்தில் உள்ளது. மயான அம்மன் மாசாணி அம்மன் எனப்பட்டிருக்கவேண்டும்.
இவ்வம்மனுக்கு மிளகாய் அரைத்துப் பூசும் வழக்கம் இருந்துள்ளது. இதன்வழி அவ்வம்மனின் மன எரிச்சல் நீக்கப்படுவதாகக் கொள்ளலாம். ஒரு பசுங்காயைத் தின்றதற்காக இவ்வளவு பெரிய தண்டனை வழங்கப்படுவது சற்றும் ஏற்கமுடியாததாக இருந்ததால் இப்பெண்ணைத் தெய்வமாகக் கொண்டாடும் முறைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இக்கதையில் பொன்னாலான பாவை புனையப்பெற்றுத் தரப்பெறலாம் என்பதும் இக்கட்டுரையின் நோக்கத்திற்கு வலு சேர்க்கும் செய்தியாக அமைகிறது.
பெண் ஒரு மாங்காயைத் தின்பது தவறா? அப்படித் தின்றால் அவள் கொல்லப்படவேண்டுமா? அவளின் பெயர் யாது? போன்ற கேள்விகள் இந்நிகழ்வின் அடியில் தொக்கி நிற்கின்றன. இப்புனைவின் வழியாகப் பெண்களின் குறைந்த பட்ச ஆசை கூட நிறைவேற்றப்படமாட்டாது என்பது புலனாகின்றது. பெண் செய்த தவறாகக் கருதப்படும் செயலுக்கு மாற்றே கிடையாது என்பதும் பெறப்படுகிறது. மேலும் இப்பெண்ணிற்கு ஏற்பட்ட தாழ்வைப்போக்க ஆண்களே முன்வரவேண்டியவர்களாக உள்ளனர் என்பதும் தெரியவருகிறது. மொத்தத்தில் பெண் காரணமாக ஆணுக்கு அழிவே நேரும் என்பதும், அவள் பிறந்த குலத்திற்குத் துன்பமே நேரும் என்பதான புனைவாகவே இது கண்டுகொள்ளத்தக்கதாக விளங்குகிறது. இத்தாழ்வின் காரணமாகவே அவள் கடவுளாக வணங்கப்படும் நிலை எழுந்துள்ளது. நன்னன் செய்த தீமை இன்றளவும் நினைக்கப்படத்தக்கதாகவும், இதன்வழி பெண்கள் தன் சொந்த ஆசைகளை வெளிப்படுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்படுவதையும் உணரமுடிகின்றது.
மாசாணி அம்மன் உருவமும், அவ்வம்மனின் கோவிலும்
திருமாவுண்ணி
siragu semmoli6
திருமாவுண்ணி கதைதான் கண்ணகிக் கதையாக வளர்ந்தது என்பது ஆய்வாளர்தம் கருத்து. இருப்பினும் சங்க இலக்கியங்களில் குறிக்கத்தக்க புனைவாக திருமாவுண்ணி விளங்குகிறது.
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;
கண்ணுறு விழுமம் கை போல் உதவி,
நம் உறு துயரம் களையார்ஆயினும்,
இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே;
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையராயினும்,
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே” (நற்றிணை 216)
என்ற பாடலின்வழி திருமாவுண்ணி பற்றிய குறிப்பு கிடைக்கின்றது.
பறவைகள் ஒலித்து வாழும், நெருப்பு போன்ற நிறமுடைய வேங்கை மரத்தின் பரண் அருகே ஒரு பெண் நின்று இருந்தாள். அவளின் மனதில் சோகம் அப்பிக்கிடக்கிறது. உடலில் இரத்தம் வடிகிறது. அயலான் ஒருவனால் கைவிடப்பெற்ற அவள் தன் ஒரு மார்பகத்தை அறுத்த நிலையில் நின்று கொண்டிருந்தாள். இவளின் நிலையைக் கேட்டவர்கள் கேட்டபடி சென்றுவிடுவார்கள். ஆனால் அவளின் மீது அன்பு கொண்டவர்கள் அவளின் நிலைக்காக வருந்துவார்கள்.  இத்தகைய செய்தியைத் தாங்கி நிற்கிறது மேற்காணும் நற்றிணைப்பாடல்.
கண்ணகி நின்றதும் வேங்கைமரம், அவள் இழந்ததும் ஒரு முலை என்ற நிலையில் இவர்கள் இருவரும் ஒருவரே என்றும் கொள்ள இயலும். இவளுக்கும் கோட்டம் கண்டுத் தமிழகம், கேரளம் இன்றுவரை நினைத்துவருகிறது.
இவ்வகையில் திருமாவுண்ணி அல்லது கண்ணகி ஆகியோருக்கு நேர்ந்த துன்பத்தைத் துடைக்க இன்றளவும் அப்பாத்திரங்கள் தெய்வங்களாக வழிபட்டு வரும் முறைமை விளங்கி வருவதைக் காணமுடிகின்றது.
இப்புனைவில் பெண்ணின் பெயர் திருமாவுண்ணி என்பது தெரியவருகிறது. ஆனால் துன்பம் தந்த அயலான் பெயர் தெரியவில்லை. பெண் தன்னை பெயரறியா ஒருவனிடம் அடைக்கலப்படுத்தி அதன்வழி துன்பம் அடைந்துள்ளாள் என்பது தெரியவருகிறது. இதனை எதிர்த்துப் போராட இயலா  நிலையைப் பெற்றவளாகவும் பெண் இருக்கிறாள். இதே நிலை இக்கால அளவிலும்  தொடர்கிறது. பெண்ணின் வருத்தம் தீர்க்க இயலாதது என்ற நிலையில் தமிழ்ச்சமுகம் இன்றுவரை அந்தத் துயரத்தை நினைவு கொள்ளும் எச்சங்களைப் பெற்றுள்ளது என்பது குறிக்கத்தக்கதாக இருந்தாலும் இதில் தவறு இழைத்த ஆண்கள் வெளிச்சமிட்டுக்காட்டப்படவில்லை என்பது குறையே.
அன்னிமிஞிலி
கோசர்கள் தம் வயல்களில் பயறு விளைவித்தனர். நன்றாக பயறுச் செடிகள் வளர்ந்துப் பயன் தரும் வேளையில் மாடு ஒன்று அவற்றை நன்றாக மேய்ந்துவிடுகிறது. இதற்காக மாட்டின் உரிமையாளரின் கண்களை அவர்கள் பிடுங்கி இத்தவறுக்குத் தண்டனை தருகின்றனர். இத்தண்டனையில் இருந்து மீள பல வழிகளில் முயற்சித்தும் அவை இயலாதாயின. எனவே கண்கள் இழப்பு தண்டனையானது.
கண்கள் இழந்த தந்தையை மகள் அன்னிமிஞிலி பார்க்கிறாள். துன்பப்படுகிறாள். கண்களை அழித்த கோசர்களைப் பழிவாங்க அவள்  எண்ணினாள். இதன் காரணமாகப் பழிக்குப் பழி வாங்கும் நிலை எய்தும்வரை அவள் உணவு உண்ணாது நின்றாள். நீராடாது தவிர்த்தாள். உடை மாற்றாமலும் விளங்கினாள். இதனை அறிந்த அப்பகுதியின் அரசன் திதியன் இவளின் உறுதியைக் கண்டுக் கோசரை அழித்தான். இதன்பிறகு அன்னிமிஞிலி மகிழ்ச்சியுடன் உண்டு, உடுத்து பெருமிதத்துடன் நகருலா வந்தாள் என்ற புனைவு அகநானூற்றின் வாயிலாகக் கிடைக்கிறது.
‘‘தந்தை
கண்கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண் போகிய,
கடுந்தேர்த் திதியன் அழுந்தை, கொடுங்குழை
அன்னி மிஞிலியின் இயலும்
நின்நலத் தகுவியை முயங்கிய மார்பே” (அகநானூறு, 196; 8-13)
என்ற இப்பாடலில் மேற்கருத்து இடம்பெற்றுள்ளது. இதில் தந்தை மீது பெண் குழந்தை ஆறாத பற்றுடையவளாக இருக்க வேண்டும் என்ற அடிக்கருத்து செயல்பட்டுள்ளது. பெண்களின் ஆடை, உடல்தூய்மை போன்றன மிக முக்கியமானவை. அவற்றை அவள் நாள்தோறும் பேணவேண்டும் என்பன உணர்த்தப்படுகின்றன. மேலும் பெண்கள் சூளுறைத்தாலும் அவளின் சூளுறையை நிறைவேற்ற ஆடவனே முயலவேண்டும் என்ற  ஆண்மையம் சார் கட்டமைப்பும் இருப்பதை உணரமுடிகின்றது.
இப்புனைவில் அன்னிமிஞிலி வென்றால் என்பதால், அவள் பாதிக்கப்படவில்லை என்பதால் அவள் தெய்வ நிலைக்கு ஏற்றப்படவில்லை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.
இவ்வகையில் சங்க இலக்கியங்களில் காணலாகும் பெண் சார் புனைவுகள் ஆண்மையம் கொண்டனவாக, பெண்களைப் பேசா இடத்திற்குத் தள்ளுவனவாக, பெண்களைப் பாதிப்படையச் செய்வனவாக, அவ்வாறு அவர்கள் அடைந்த பாதிப்புகளைக் காட்டிப் பெண்களை இயங்காநிலைக்கு இட்டுச் செல்வனவாக உள்ளன என்பதை உணரமுடிகின்றது.

கருத்துகள் இல்லை: