சனி, அக்டோபர் 31, 2020

தேம்பாவணியில் அறக்கருத்துகள் முனைவர் மு.பழனியப்பன்


siragu thembavani1

தமிழ்மொழி இலக்கியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருள்களை வெளிப்படுத்துவனவாகும். இந்நால்வகைப் பொருள்களையும் அடிப்படையாகக் கொண்டு பண்டைக்காலம் முதல் இன்றைய காலம் வரை தோன்றிய இலக்கியங்கள் அவ்வக்காலச் சூழல்களை விளக்குவனவாக அமைந்தன. தமிழ்ச் சமுதாயததின் நாகரீகத்தையும், வாழ்வியல் முறைமைகளையும் எடுத்துக்காட்டுவனவாகவும் அமைந்துள்ளன. சங்ககால இலக்கியம் முதல் இக்கால உரைநடை இலக்கியங்கள் வரை முன் குறிப்பிட்ட நால்வகைப் பொருள்களும் அவற்றின் அடிப்படையில் தமிழர்தம் வரலாற்றுச் செய்திகளும் அமைந்துள்ளன என்பதை மறுக்க இயலாது. நால்வகைப் பொருள்களும் தமிழிலக்கியங்களுக்கு இன்றியமையாதன என்பதைத் தமிழ் இலக்கண நூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை என்ப”
அறம், பொருள், இன்பம் வீடு அடைதல் நூற்பயனே”
நாற்பொருள் பயக்கும் நடை நெறித்தாகி

என்ற இலக்கண வரிகளில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருளையும் தமிழ் இலக்கியங்கள் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்ற அறம் பெறப்படுகின்றது.

இந்நால்வகைப் பொருள்களில் அறம் என்பது மக்களின் வரையறுக்கப்பட்ட ஒழுங்குமுறை வாழ்க்கையினைக் குறிப்பிடுவதாகும். பொருள் என்பது தமிழர்களின் அக வாழ்வையும், புறவாழ்வையும் குறிப்பிடுவதாகும். இன்பம் என்பது அவ்விரு வாழ்க்கையினாலும் ஏற்படுகின்ற மகிழ்வைக் குறிப்பிடுவதாகும். வீடு என்பது வரையறுக்கப்பட்ட ஒழுக்க நெறியில் அக வாழ்வையும், புற வாழ்வையும் அமைத்துக் கொண்டு, அவற்றால் ஏற்பட்ட இன்ப துன்பங்களை அனுபவித்து, அவற்றின் பயனாகிய பேரின்பம் பெற்றுப் பிறவியை நீக்கிக் கொள்வதைக் குறிப்பிடுவதாகும்.

அறு என்ற அடிச்சொல்லில் தோன்றிய அறம் என்ற சொல் பல பொருள்களைக் கொண்டு விளங்குவதாகும். அறம் என்ற இச்சொல்லிற்குக் கீழ்வரும் பொருள்கள் அறிஞர்களால் கூறப் பெறுகின்றன.

1. மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே – முழுநிறை வடிவமே அறம் எனக் கூறுவர்.
2. மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்டதோடு அன்றி அவ்வக் காலத்தில் ஆளுவோர், சமயங்கள், சமூக நிறுவனங்கள் ஆகியவை வகுத்துக் கொடுத்தவையும் அறம் எனப்பட்டன என்பது கருதத் தக்கது.
3. அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம்.
4. அன்புச் செய்கையும், இரக்கச் செய்கையும் அறம் எனப்படும். மனத்தால் நினைப்பதும்
வாயால் பேசுவதும் அறம் ஆகி விடாது. செயலாக நிகழ்வதே அறம் எனப் போற்றப்பட்டு வந்தது.
5. அறம் என்பது தக்கது தக்கதனைச் சொல்லி நிற்றலுமாம் .
இவ்வாறு அறம் என்ற சொல்லிற்குப் பொருள் கூறப் பெற்றுள்ளன. இத்தகைய அறம் பற்றிய கருத்துகள் கிறித்துவ இலக்கியமான தேம்பாவணி நூலில் விரிந்து காணப் பெறுகின்றன. அவற்றில் ஒருசிலவற்றை அதிலும் முன்பகுதியில் இடம் பெற்றுள்ள அறக் கருத்துகளைச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தேம்பாவணி

கிறித்துவ சமயத்தார் தமிழுக்கு அளித்த இலக்கியக் கொடைகளில் முதன்மை பெறுவது தேம்பாவணி ஆகும். இதனைத் தந்தவர் இத்தாலிய நாட்டுக் கவிஞர் சோஜப் பெஸ்கி என்ற வீரமாமுனிவர் ஆவார். இவர் தமிழ்நாட்டில் சமயப்பணி ஆற்றுவதற்காக கி.பி. 1711 ஆம் ஆண்டு மே 8ஆம் நாள் மதுரைக்கு வந்தார். இவர் தமிழ், வடமொழி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். சுப்பிர தீபக் கவிராயரிடம் இவர் தமிழ் பயின்றார். தான் பெற்ற தமிழ்ப் புலமையால் சூசையப்பர் வரலாற்றைச் செந்தமிழ்க் காவியமாகத் தேமபாவணி என்ற பெயரில் இயற்றினார். இந்நூல் கிறித்துவத் தமிழ்க் காவியங்களில் தலைமை சான்றது. இதனால் மதுரைத் தமிழ்ச் சங்கம் இந்நூலின் நயங்களைப் பாராட்டி அவருக்கு வீரமாமுனிவர் என்ற பட்டம் அளித்தது. எனவே வீரமாமுனிவர் என்ற பெயரைத் தந்த மாபெரும் இலக்கியம் தேம்பாவணி ஆகும்.

சிந்தாமணிப் பாடல்களின் சாயலையும், கம்ப இராமாயணத்தின் சந்தத்தையும் பின்பற்றித் தேம்பாவணியின் பாடல்கள் அமைந்துள்ளன. முனிவரது தமிழ் அறிவையும், சமயப் பற்றையும் தேம்பாவணியில் பரக்கக் காணலாம். தேம்பாவணி அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களை உணர்த்தும் பெருங்காப்பியங்களின் வரிசை நூலைச் சேர்ந்ததாகும். இது மூன்று காண்டங்களைக் கொண்டது. 3615 செய்யுட்களையும், 36 படலங்களையும் கொண்டதாகும். காப்பிய இலக்கணப்படி நாட்டுப்படலம், நகரப் படலம் கூறிய பின், காப்பியத் தலைவனாகிய வளன் வரலாறு கூறப்பெறுகிறது. இது வேதநூல் முறையைக் கர்ண பரம்பரைக் கதையோடும், புனைந்துரைகளுடனும் கூறி மங்கல முடிவைக் கொண்டு நிறைவு பெறுகிறது. இதில் திருக்குறள், நாலடியார் உள்ளிட்ட நூல்களில் காணப்படுகின்ற அறக்கருத்துகள் தழுவப் பெற்று இந்நூலில் அமைந்துள்ளன எனலாம்.

இந்நூலைச் சிந்தாமணியைப் போல முதற்கர்பியம் எனக் குறிப்பிடுவர். இந்நூலின் முதற்படலமாக விளங்குவது நாட்டுப்படலம். அப்படலத்தில் இடம் பெற்ற அறக் கருத்துகளைக் காணுகின்ற பொழுது பண்டைத் தமிழ் நீதி இலக்கியங்களின் உணர்வைப் பெற முடிகிறது.

1. ஆசிரியரின் அறம்

ஆசிரியர் எனப்படுவோர் தான் முதலில் நன்கு கல்வியைக் கற்றுப் பிறகு மாணவர்களுக்கு ஐயம் ஏற்படாத வண்ணம் கல்வியைப் புகட்ட வேண்டும். இதனைத் தேம்பாவணி இயற்கைக் காட்சியை வருணிக்கும் பொழுது இவ்அறக் கருத்தை வலியுறுத்துகிறது.

“படித்தநூல் அவை பயன்பட விரித்துரைப பவர்போல்,
தடித்தநீல் முகில் தவழ்தலை பொலிந்தபொன் மலையே,
குடித்த நீரெலாம் கொப்புளித்து, அமுதென அருவி
இடித்து, அறாஒலி எழத் திரை எறிந்து உருண்டு இரிவ.”
(நாட்டுப்படலம், பா. 4)

இப்பாடலின் பொருள் – படித்த நூற்பொருளை மாணவர்களின் கூட்டம் பயன்பெறும் வண்ணம் ஓசையோடும், விரித்து உரைப்பவர் போலச் சூல் கொண்ட நீல மேகம் தவழ்கின்ற அழகிய மலைகள், தாம் குடித்த நீரைக் கொப்பளித்தமையால் அமுதம் போன்ற அருவிகள் ஓசையை எழுப்பி, அலையை வீசி உருண்டு ஓடின என்பதாகும்.

இப்பாடலில் ஆசிரியர்க்கு உரிய அறம் கூறப்படுகிறது. மேகநீரை மலை வாங்கிக் கொண்டு அருவியாகக் கொப்பளித்தல் என்ற உவமை மூலம் அந்த அறம் விளக்கப்படுகிறது. அதாவது ஒரு ஆசிரியர் தான் கறபிக்கக் கூடிய பாடத்தை உள்வாங்கிக் கொண்டு மாணவர்களுக்கு நல்ல ஓசை இன்பத்தோடு விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற அறம் கூறப்படுகிறது. இதனையே நன்னூலும் நல்லாசிரியர் இலக்கணம் கூறும் பகுதியில்,

குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை”
என்று குறிப்பிடுகிறது.

2. கற்ற சான்றோரின் அறநிலை

கல்வியை நன்கு கற்ற சான்றோர்கள் உலக இன்பங்களை வெறுத்து வீட்டுப் பேற்றை விரும்பி நிற்பர். எனவே சான்றோர்க்கு உரிய அறம் உலக இன்பத்தைவிடப் பேரின்பத்தை விரும்புவதே ஆகும். இதனைத் தேம்பாவணி கிழ்வரும் பாடலில் குறிப்பிடுகிறது.

அஞ்சி லாஎதிர் அடுக்கிய கல்லெலாம் கடந்தே .
எஞ்சி லாஎழில் இழதைத்தநீள் மருதமும் நீக்கித்,
துஞ்சி லாநதி, தொடர்ந்துஅகல் கருங்கடல் நோக்கல்,
விஞ்சை யாரெலாம் வெறுத்துவீடு இவறிய போன்றே”
(நாட்டுப்படலம், பா. 8)

இப்பாடலின் பொருள் – அருவியாக வீழ்ந்து ஆற்று நீராக ஓடிய நீர், குறிஞ்சியையும் மருதத்தையும் கடந்து, நெய்தல் நிலமாகிய கடலில் போய்க் கலந்தது. இது எதனைக் காட்டுகிறது என்றால் அறிவுடையோர் உலக இன்பங்களைத் துறந்து வீடு பேற்றை விரும்பியதைப் போன்றது ஆகும்.

இதில் கூறப்பெற்றுள்ள அறம் சான்றோர்கள் உலக இன்பங்களை வெறுத்து, வீடு பேறாகிய இன்பத்தைப் பெறுவார்கள் என்பதாகும். இதனையே திருக்குறளும்,

சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரு நோய்
இக்குறளின் குறிப்பு உலக இன்பங்களில் சாராது தான் சார வேண்டிய மெய்ப்பொருளைச் சார்ந்தால் பிறவி அறும் என்ற அறமாகும்.

3. ஐம்பொறிகள் அடக்கும் அறம்

மனிதனின் வாழ்வுக்குத் துன்பம் தருவன ஐம்புலன்களால் ஏற்படும் உணர்வுகளாகும். அவ்வுணர்வுகளை அடக்கி வாழ்வதுதான் சான்றோர்களாகிய முனிவர் பெருமக்களின் அறமாகும். இதனைத் தேம்பாவணியின் கீழ்வரும் பாடல் உணர்த்துகிறது.

செறி உலாம் புனல் சிறைசெய்து, பயன்பட ஒதுக்கி,
வெறி உலாம் மலர் மிடைந்து, அகல் வயல்வழி, விடுவார்
பொறி உலாம் வழி போக்கிலது இயல்பட அடக்கி,
நெறி உலாவு அறம்நேர், அவை நிறுத்தினர் போன்றே”
(நாட்டுப்படலம், பா. 10)

இப்பாடலின் பொருள் – ஆறாக ஓடிவரும் நீரை ஏரியில் தேக்கி வைத்து, வயலுக்குப் பயன்படும் வண்ணம் வாய்க்கால் வழியாக நெறிப்படுத்தி உழவர்கள் வயல்களில் பாயவிடுவர். இது எதனைக் காட்டுகிறது என்றால் பொறிகள் வழியாக மனத்தைச் செல்ல விடாது, அதனை அடக்கி அறவழியில் செலுத்துகின்ற சான்றோரின் செயலைப் போன்றது என்பது இதன் பொருளாகும்.

இப்பாடலில் இடம்பெறும் அறம், ஐம்புலன்களின் வழியே மனம் செல்லாதவாறு தடுத்து அறவழியில் செலுத்துவது தான் மனித உயிரின் கடமையாகும் என்பதாகும். இவ்அறத்தைச் சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூறும் வலியுறுத்துகிறது.

விழையா உள்ளம் விழையும் ஆயினும்
கேட்டவை தோட்டியாக மீட்டு ஆங்கு
அறனும் பொருளும் வழாஅமை நாடித்
தன்தகவுடைமை நோக்கி மற்று அதன்
பின்னாகும்மே முன்னியது முடித்தல்”

என்பது பாடற் பகுதியாகும். இப்பாடலின் கருத்து – மனதை அதன் விருப்பப்படி செல்லவிடாது, கேள்விச் செல்வத்தால் அறனும் பொருளும் வழாது, தன் பெருமையை நோக்கி அறிவைச் செலுத்துதல் எண்ணியதை முடிப்பதற்குரிய ஆற்றலைத் தரும் என்பதாகும். எனவே ஐம்புலன் அடக்கினால் நல்நெறி செல்லலாம் என்பது அறிவுறுத்தப் பெறுகிறது.

4. அறமற்ற பொருளை விரும்பாமை

ஐம்புலனை அடக்கி வாழும் சான்றோர் பெருமக்கள் அறம் அல்லாத நிலையில் தங்களிடத்தில் பொருள் வந்து சேருமானால் அதனை வெறுத்து ஒதுக்கிவிடுவர் என்பதை இயற்கை வருணனை மூலம் கீழ்வரும் தேம்பாவணிப் பாடல் குறிப்பிடுகிறது.

நோக்க, இன்புஉளம் நுகர, ஒண் முளரியோடு ஆம்பல்
நீக்க லாது . எலா நீர்மலர் களையெனக் கட்டல்,
ஆக்கம் ஆக்கினும் அறனிழந்து ஆவது கேடென்று
ஊக்க(ம்) மாண்பினர், ஒருங்குஅவை ஒழிக்குதல் போன்றே”
(நாட்டுப்படலம், பா. 13)

இப்பாடலின் பொருள் – வயலில் முளைத்துள்ள ஒளி மிக்கதும், மணம் கொண்டதுமான தாமரைப் பூவினையும், ஆம்பல் பூவினையும் உதவாத களைகள் என்று உழத்தியர் பிடுங்கி எறிவர். இது எதனைக் காட்டுகிறது என்றால் அறநெறி தவறி வரும் செல்வம் ஆக்கத்தை உண்டாக்கினாலும், கெடுதலை உடையதே என்று சான்றோர் அதனை நீக்கி விடுவர் என்பது பாட்டின் பொருளாகும். இப்பாடலில் நெல்விளையும் வயலில் நெல்லுக்கு மாறாக (அழகும் மணமும் பொருந்திய தாமரை மலர்கள் உள்ளிட்டவை சிறந்தவை என்றாலும் அவை களையாகக் கருதப்படும் என்ற இயற்கை நிகழ்வு இடம் பெற்றுள்ளது)

இப்பாடலில் இடம்பெற்ற அறம், அறநெறி தவறிய செல்வம் இன்பம் பயக்கும் என்றாலும், சான்;றோர் அதனை ஏற்க மாட்டார்கள் எனக் கூறப்பெற்று, அறநெறி தவறிய நிலையில் செல்வத்தைச் சேர்க்கக் கூடாது என்று கூறப்பெற்றுள்ளது. இச்செய்தியைப் பிற தமிழ் இலக்கியங்களும் சுட்டிக் காட்டுகின்றன.

அறன்ஈனும் இன்பமும்ஈனும் திறன் அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள்
என்று திருக்குறளும்,
அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன்
திறத்து வழிப்படூஉம் செய்கை போல”

என்று மணிமேகலையும், அறத்தினால் வருவதுதான் சிறப்புடைய பொருளாகும் என்பதை வலியுறுத்துகின்றன.

5. விருந்தோம்பல் அறம்

தமிழகத்தில் வழங்கி வரும் அறங்களில் தலைமை சான்றது விருந்தோம்புதல் அறமாகும். வந்த விருந்தை உபசரித்து, வரவிருக்கும் விருந்தை எதிர்பார்த்தல்தான் அறம் என்று திருக்குறள் குறிப்பிடும். இத்தகைய விருந்தோம்பல் அறத்தை வலியுறுத்தும் வண்ணம் தேம்பாவணியில் கீழ்க்கண்ட பாடல் அமைந்துள்ளது.

இருந்து ஓடிய திரு, இங்கணில் இனிது அன்புற இடலால்,
பருந்தோடுறும் நிழலென்று, உயர் பயன் ஈன்றிடும் எனவே,
மருந்தோடுஇகல் அரிதுஅன்பு, உளம் மலிகின்றன மரபோர்,
விருந்தோடுஉண விருகின்றனர் இலையென்று, உளம் மெலிவார்”
(நகரப்படலம், பா. 63)

இப்பாடலின் பொருள் – செருசலேம் நகரத்து மக்கள் அறம் செய்யாதிருந்தால் செல்வங்கள் ஓடி விடுமே என்று கவலைப்படுகின்றனர். ஏனென்றால் நகரத்தில் உள்ள வீடுகளில் இருந்து இனிதாகவும், அன்பாகவும் அறம் செய்தால் பருந்தின் நிழல் தொடர்ந்து வருவது போல அறம் தங்களைத் தொடர்ந்து வரும், இன்ப உலகத்தைத் தரும் என்ற அறத்தை உணர்ந்தவர்கள் அந்நகரத்து மக்கள். ஆனால் அறத்தைச் செய்வதற்குரிய விருந்தினர்கள் வரவில்லையே, அவர்களை உபசரிக்க முடியவில்லையே என்று வருந்துகிறார்கள் என்பது பொருள்.

இப்பாடலில் கூறும் அறம் – விருந்தினர்க்கு உணவு படைக்கும் அறம் பொருட் செல்வத்தைக் காக்கும். விருந்தினரைப் பெறமுடியாது எருசலேம் நகரத்து மக்கள் வாடுவதால் அறம் செய்யாத நிலை ஏற்படுகிறது. அதனால் பொருளின் பயனும், அறத்தின் பயனும் கிடைக்காமல் போய் விடுகிறதே என்ற அறக்கருத்து இடம்பெற்றுள்ளது. இவ்விருந்து புரத்தல் அறத்தைக் கீழ்வரும் திருக்குறளும் வலியுறுத்துகிறது.

அகன்அமர்ந்து செய்யான் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஒம்புவான் இல்

இத்திருக்குறள் முகமலரச்சியோடு விருந்தினரை வரவேற்று உபசரிப்பவன் இல்லத்தில் திருமகள் அதாவது செல்வமகள் இனிது அமர்ந்து உறைவாள் என்று அறத்தைத் வலியுறுத்துகிறது.

6. இல்லற, துறவற மேன்மை

அறத்தின் மே;னமையைத் தமிழ் இலக்கியங்கள் இல்லறம் என்றும் துறவறம் என்றும் வகைப்படுத்தி அவற்றின் சிறப்பினை எடுத்துக் கூறுவனவாகும். இந்த இருவகைப் பிரிவு வள்ளுவர் காலத்திலேயே தொடங்கி விட்டது. திருவள்ளுவர் அறத்துப்பாலில் இல்லற இயல் என்றும் துறவற இயல் என்றும் பிரித்துக் குறட்பாக்களைத் தந்துள்ளார். அதோடு மட்டுமல்லாது,

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று

என்ற குறள்வழியும் அவ்விருவகையைப் பதிவு செய்துள்ளார். இக்குறட்பாவிற்கு உரை எழுதிய பரிமேலழகர், இக்குறட்பாவில் இல்வாழ்க்கை என்பதால் இல்லறமும், அஃது என்ற சொல்லால் துறவறமும் குறிக்கப் பெற்றுள்ளது என்ற முறையில் பொருள் தந்துள்ளார். இந்த இல்லற, துறவறத்தைத் தேம்பாவணி சுட்டிக்காட்டி, இரண்டு அறங்களும் தேவை என்பதை வலியுறுத்துகிறது.

ஈரறம் பிரிந்து நோக்கில், இயம்பிய துறவின் மாட்சி
பேரறம் ஆவ தன்றி, பிரிவிலா இரண்டு, தம்முள்
ஓரற மாகச் சேர்க்கில், உறுதியும் பயனும் ஓங்கத்
தேர்அற மாகும் என்றான் செழுந்துறைக் கேள்வி மூத்தோன்”
(பாவமாட்சிப் படலம், பா.40)

இப்பாடலின் பொருள் – இல்லறம், துறவறம் என்ற இரண்டில் துறவறமே சிறந்தது என்றாலும், இரண்டையும் ஓர் அறமாகக் கொண்டு வாழ்ந்தால் வாழ்வில் உறுதியும் பயனும் கிடைத்திடும் என்று முதியவன் கூறினான் என்பது பொருளாகும்.

இதில் கூறப்பெற்ற அறம், இல்லறம் துறவறம் இரண்டையும் அனுபவித்து அதில் மேன்மை அடைவதுதான் தக்க அறம் என்பது கூறப்பெற்றுள்ளது.

இல்லறத்தின் சிறப்பையும், அது துறவறத்திற்கு ஒப்பாக அமையும் என்பதைத் திருக்குறளும் வலியுறுத்துகிறது.
ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து
என்பது அக்கருத்துடைய குறளாகும்.

7. இன்னா செய்தாரைப் பொறுத்தல்

உலகில் சமயநெறிகள் அனைத்தும் மக்களின் வாழ்வியலுக்கு ஏற்ற நெறிமுறைகளைக் குறிப்பிடுகின்றன. நெறிமுறைகளில் மிக இன்றியமையாததாக மனிதர் குலத்திற்குக் கூறப்பெறுவது மன்னிக்கும் குணம் அனைவருக்கும் வேண்டும் என்பதாகும். அதிலும் தனக்குத் தீங்கு செய்தவர்களின் தீமையைப் பொறுத்து அவர்களை மன்னித்தல வேண்டும் என்பது சிறந்த அறமாக எல்லாச் சமயமும் கூறுகின்றன. தேம்பாவணியில் இக்கருத்தை வலியுறுத்தும் பாடல் கீழ்வருமாறு அமைந்துள்ளது.

துய்யம் தாய்உரித் தொடர்பினார், சுடப்புகன் றவர்க்கும்
மய்யம் தாவிய மனத்துஎழும் அன்பின் நன்று இயற்றல்
நொய்அம் தாதுகள் நோவ, உள் குடைந்துஇமிர் அளிக்கும்
செய்அம் தாமiரை நினைப்ப, நல் விருந்துஇடும் போன்றே”
(ஈரறம் பொருத்து படலம், பா. 60)

இப்பாடலின் பொருள் – தூய மனமுடைய தாய் போன்ற அன்புடைய வளனாரும் மரியாளும் தங்களைப் பற்றிக் கொடிய சொற்களால் ஏசியவர்களுக்கும், தங்களுடைய மனத்தில் தோன்றிய அன்பினால் அவர்கள் கூறியதைப் பொருட்படுத்தாது அவர்களுக்கு விருந்து படைத்தனர். அது எது போல என்றால், குளிர்ந்த இலைகளையும், தாதுக்களையும் உடைய பூக்கள், தாதுக்களை உண்பதற்காகத் துன்பப்படுத்திய வண்டுகளுக்குத் தேனைக் கொடுப்பது போல என்று இப்பாடல் குறிப்பிடுகிறது.

இப்பாடலில் தீய சொற்களைக் கூறித் துன்பப்படுத்தியவர்களுக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்ற அறத்தை இப்பாடல் குறிப்பிடுகிறது.
இதனைக் கீழ்வரும் நீதி இலக்கியப் பாடலும் குறிப்பிடுகிறது.

உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் – உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்”

இப்பாடலில் இடம் பெற்ற அறம் – நற்குடிப் பிறந்தார்கள் தாங்கள் செய்த ; உதவியை எண்ணாது,தங்களுக்கு அபகாரம் செய்தவர்களுக்கும் மீண்டும் நல்லதே செய்தல் நல்லோரின் அறமாகும் என்பதாகும்.

8. ஊழ்வினைக் கோட்பாடு

உலகச் சமயங்கள் அனைத்தும் ஏற்றுக்கொண்ட கோட்பாடு வினைக்கோட்பாடு ஆகும். முன்வினைப் பயனை அடுத்த பிறவியில் அனுபவிப்பதும், இப்பிறவியில் செய்த வினையின் பயனை அடுத்த பிறவியில் அனுபவிப்பதும் வினைக்கோட்பாடாகும். நல்வினை செய்தால் புண்ணியத்திற்கு ஆளாகி இன்பத்தை அனுபவிப்பர். தீவினை செய்தால் பாவத்திற்கு ஆளாகித் துன்பத்தை அடைவர். இக்கோட்பாடு கிறித்துவ சமயத்திலும் உண்டு என்பதைத் தேம்பாவணி பல இடங்களில் குறிப்பிடுகிறது. இதனை வளனார் கூறுவது போலத் தேம்பாவணி கீழ்வரும் பாடல்களில் குறிப்பிடுகிறது.

வினை முதிர்ந்து விளித்தனர ஆவிபோய்,
முனைமுதிர்ந்த அழல் முதிர் பூதியில்,
கனைமுதிர்ந்த பனிப்பொடு, எக் காலமும்
புனைமுதிர்ந்த சிறை புதைந்து ஓவுமால்”
(காண்டம் – 3, பாடல், 86)
செய்த நற்றவ வாள்கொடு, தீவினை
கொய்தபின், இறந்து ஆவிகுளிர்ந்து, அருள்

பெய்த நெஞ்சு, பெயர்கில பேரின்பம்
எய்த ஆண்டகை கண்டுஎன்றும் வாழுமால் “.
(காண்டம் -3, பாடல்; -87)
இருவ கைப்படும் இவ்வுயிர் விட்டு,இடை
வருவ கைப்படும் மற்றுயிர், தன்வினை
ஒருவ கைப்படும் ஒப்பினைத் தீயுலகு
அருவகைப் படும் அல்லலில், வீயுமால்”
(காண்டம் -3, பாடல் – 88)

இப்பாடல்களின் பொருள் – (சூசையிடம் சிவாசிவன் என்பவர் உபதேசம் கேட்கிறார். அந்த உபதேசத்தில் இப்பாடல்கள் அமைந்துள்ளன)
தீவினை செய்து இறந்துபட்டவர்கள் தீவினைக்கு உரிய சிறையாகிய நரகில் வீழ்வர். அந்நரகத்தில் இருக்கும் பேய்கள் அவர்களுக்குத் துன்பம் செய்யும்.

தவம் எனும் வாளால் தீவினையை அறுத்து நல்வினை செய்தவர்கள் இறந்த பிறகு வானுலகத்தை அடைந்து, அருள் பெற்றுப் பேரின்பத்தை எய்தி இறைவனைக் கண்டு தொழுவார்கள். இரண்டிற்கும் நடுவே நின்றவர் இவ்வுலகில் சிலகாலம் வாழ்ந்து, துன்பங்களை அடைந்து, பிறகு ஞானம் பெற்று இறையருளைப் பெறுவார்கள் என்ற செய்தியை இப்பாடல்கள் தருகின்றன.

இவற்றால் உணர்த்தப் பெறுகின்ற அறம் ஒரு பிறப்பில் தீவினை செய்தவர்கள் நரகத்தில் வீழ்ந்து துன்பப்படுவர். நல்வினை செய்தவர்கள் தங்கள் தவத்தால் துன்பத்திலிருந்து நீங்கிப் பேரின்பத்தை அடைவர்.

தீயவராகவும் நல்லவராகவும் வாழ்ந்தவர்கள் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை அனுபவித்த பிறகு, இறையருளைப் பெறுவர் என்ற அறக்கருத்து கூறப்படுகிறது.

இந்த ஊழ்வினைச் செய்தியைத் திருக்குறள் பத்துப் பாக்களில் குறிப்பிடுகிறது. ஊழ் என்ற அதிகாரத்திற்கு உரை எழுதிய பரிமேலழகர், ஊழ் என்பது இருவினைப் பயன் செய்தவனையே சென்று அடைதற்கு ஏதுவாகிய நியதிஎன்று உரை எழுதியுள்ளார்.

இம்மை செய்தன யான்அறி நல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது”

என்று சிலப்பதிகாரத்தில் மாடல மறையோன் கோவலனின் துன்பத்திற்குக் காரணத்தை விதியின் பயனாகக் கூறுவதையும் இங்கு நினைவு கொள்ளலாம்.

இவ்வாறு ஊழ்வினைக் கோட்பாடுகள் பண்டைக்காலம் தொட்டுத் தேம்பாவணி வரை சமுதாய நம்பிக்கையாக இருந்தமை புலனாகின்றது.

9. முதன்மை ஊழ்

மானிடத் தோற்றம் பற்றிக் கிறித்துவ சமயத்தில் வழங்கப்பெறும் ஆதம், ஏவாள் நிகழ்வைத் தேம்பாவணி மூன்றாவது காண்டத்தில் ஞாபகப் படலத்தில் குறிப்பிடுகிறது. அந்நிகழ்வு இடம் பெற்ற சூழல் சூசை சிவாசிவனுக்கு ஊழ்வினை பற்றிக் கூறும் இடத்தில் அமைந்துள்ளது. சிவாசிவன் சூசையை நோக்கி, எனக்கு ஓர் ஐயம் உள்ளது. கற்றறிந்த எங்கள் முன்னோர் ஊழ்வினை உண்டென்று சொல்லியிருக்கிறாரே, அது என்னஎன்று கேட்கிறார். அதற்குச் சூசை, நீ சொன்ன விதி பற்றிய வேதநூல் கருத்தைக் கூறுகிறேன், கேள். இறைவன் உலகத்தைப் படைத்தபின் முதல் மனிதராகிய ஆதம், ஏவாளைப் படைத்து ஒரு அழகிய சோலையின்கண் வைத்தார். இச்சோலையில் ஒரு மரத்தின் கனியைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நீங்கள் உண்ணலாம் என்று அனுமதித்தார். குறிப்பிட்ட அந்த மரத்தின் கனியை உண்ணக் கூடாது. உண்டால் இறந்து போவீர்கள் என்று கூறினார். ஆனால் ஏவாள் தீவினையின் (அலகை எனும் பேய்) தூண்டுதலால் அக்கனியைப் பறித்து உண்டதோடு, கணவனுக்கும் கொடுத்து உண்ணச் செய்தாள். அதனால் அக்கனி அவர்களுக்கு நஞ்சாகி, வானத்து நன்மைகள் அத்தனையையும் ஒழித்தது. இதுவே முதல் ஊழ்வினை ” என்று நிகழ்வைக் குறிப்பிடுகிறார். (காண்டம் – 3, ஞாபகப் படலம் – பாடல் 108 முதல் 117 வரை)
எனவே கிறித்துவமத முதல்வினைக் கோட்பாடு இயற்கைக்கு மாறாக இறைவனின் ஆணையை மீறி, முதல் மனிதர்கள் செய்த தீவினைதான் ஊழின் தொடக்கமாக அமைந்தமை பெறப்படுகிறது.

முடிவு

பிற நாட்டைச் சார்ந்த நல்லறிஞர்கள் தமிழுக்கு அளித்த கொடைகளில் முதன்மையானது வீரமாமுனிவர் தந்த தேம்பாவணிக் காவியம் ஆகும். காப்பியத்திற்கு உரிய இலக்கணங்கள் பொருந்தி பாடப்பெற்ற இக்காவியம் தமிழர்தம் மரபுகளையும், கொள்கைகளையும் குறைவு படாது விளக்கும் ஒரு பெரு நூலாகும். தேம்பாவணியின் ஆசிரியர் வீரமாமுனிவர் தமிழ்நாட்டில் கிறித்துவப்பணி செய்தபொழுது தமிழை நன்கு கற்று, சிலப்பதிகாரம், சிந்தாமணி உள்ளிட்ட காப்பியங்களைக் கற்று, அவைகளின் சாயலில் தேம்பாவணியைப் படைத்துள்ளமை பெருமைக்கு உரியதாகும். தமிழ்க் காப்பியங்களின் சந்தங்களும், அமைப்புக்களும் பொருந்தும் வண்ணம் தேம்பாவணி பாடப் பெற்றுள்ளது. தமிழ்க் காப்பியங்களுக்கு ஏற்ப அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருள்களை வலியுறுத்தும் காப்பியமாகவும் இது அமைந்துள்ளது. அறத்தை வலியுறுத்தும் வண்ணம் தமிழ் மக்களின் அறக்கோட்பாடுகளைத் தேம்பாவணி தன்னகத்துக் கொண்டு விளங்குகிறது. அவற்றில் ஒரு சிலவற்றை இக்கட்டுரை எடுத்துக் காட்டியுள்ளது. இதன் மூலம் தேம்பாவணியின் சிறப்பையும், அயல்நாட்டாரின் தமிழ் உணர்வையும் அறிய முடிகிறது.

கருத்துகள் இல்லை: