புதன், டிசம்பர் 02, 2015

வெறும் பானை பொங்குமோ?




2. வெறும் பானை பொங்குமோ?

அது ஒரு தைப் பொங்கல் நாள். ஔவையார் தைப்பொங்கலன்று தமிழக மக்கள் பொங்கல் கொண்டாடும் அழகினைப் பார்ப்பதற்காகப் பவனி வந்தார். ஊரெல்லாம் வளமை பெருகி நிற்கிறது. கரும்பும் மஞ்சளும் இல்லம் தோறும் மணக்கின்றன. செந்நெல்லும், வெல்லமும் சேர்ந்து இனிக்கின்றன.

ஔவையார் சென்ற பொழுதில் ஓர் இல்லத்தில் அப்போதுதான் விளக்கேற்றிப் பொங்கல் வைக்கத் தொடங்கினார்கள். மற்றொரு இல்லத்தில் குழந்தைகள் ஔவையாருக்குக் கரும்பு கொண்டு வந்து கொடுத்து மகிழ்ந்தார்கள். அக்குழந்தைகளுக்கு ஆசி வழங்கினார் ஒளைவையார். இன்னொரு வீட்டில் வாழை இலையில் சூடான சர்க்கரைப் பொங்கலை வாங்கி உண்டார். என்ன இனிமை. என்ன இனிமை என்று அவர் வாய் சொன்னது.

இப்படியே பலரும் பலவாறு பொங்கல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஓர் இல்லத்திற்குப் போன ஔவையார் நின்றுவிட்டார். நெடு நேரமாக நின்று கொண்டே இருக்கிறார். வந்த ஔவையாரை வரவேற்க அங்கு ஆளில்லை. ஒற்றைப் பெண்மணியாக அடுப்பை ஊதுவதும், பால் பொங்கி வருகிறதா என்று பார்ப்பதும் கவலை கொள்வதுமாக அங்கு ஒரு காட்சி நடந்து கொண்டே இருந்தது.

பாவம். பொங்கல் வைக்கத் தெரியாத பெண்பிள்ளை என்று நினைத்து, ஒவையார் அவளுக்கு உதவலாம் என்று இல்லத்தில் நுழைந்தாள். வந்தவர் புலவர் என்பதைப் பற்றியெல்லாம் அப்பெண்மணிக்குக் கவலை இல்லை. ஏன் பால் பொங்கவில்லை என்ற கவலையே பெருங்கவலையாக இருக்கிறது.

ஆமாம். நம் வீட்டில் மட்டும் பால் பொங்கவில்லை என்றால் மகிழ்ச்சியாகவா இருக்கும். அந்தப் பெண்ணிடம் ‘‘அம்மா! ஏன் கவலையாக இருக்கிறாய்?’’ என்று மெல்லப் பேச்சுக் கொடுத்தார் ஔவையார்.

அப்பெண்மணி, “மூதாட்டியே என் வீட்டில் மட்டும் பால் பொங்வில்லையே! என்று வருந்துகிறேன்” என்றாள்.

“அம்மா உனக்குப் பொங்கல் வைக்கத் தெரியுமா?” என்று ஓளவையார் கேட்டார்.

“தெரியும்…” என்று இழுத்தாள் அந்தப் பெண்மணி.

“பொங்கல் வைக்க என்ன என்ன செய்தாய் அம்மா?”

“பானை வாங்கினேன். தண்ணீர் ஊற்றினேன். கொஞ்சம் பால் ஊற்றினேன். நெய் வைத்திருக்கிறேன். வெல்லத்தைப் பொடியாக்கி வைத்துள்ளேன்.”

“ம்...ம்...”

“அடுப்பு மூட்டினேன். பானையை அடுப்பில் வைத்தேன். அதற்கு முன்பே அடுப்பைப் பற்றவைத்தேன்”

“ம்... ம்... சரி சரி...”

“அப்புறம் என்ன செய்யவேண்டும்?”

“அரிசி வேண்டாமா?” என்று ஔவையார் சிரித்துக் கொண்டே கேட்டார்.

“ஆமாம் எங்கள் வீட்டில் அரிசிப்பானையில் சில அரிசி மணிகளே உள்ளன. அரிசியை மறந்துவிட்டேன்”

“அரிசியை மறந்தால் எப்படி அம்மா பொங்கி வரும்?” என்றார் ஔவையார்.

அதன்பிறகு அரிசி கொண்டு வந்து வைத்துப் பொங்கல் செய்தார்கள் என்று கதையை முடித்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்த நிகழ்ச்சி ஔவையாரின் மனதிற்குள் கிடந்தது. ஒரு பாடலாக உருப்பெற்றது.

வெறும் பானை பொங்குமோ மேல்

என்று பாடலின் கடைசி அடி முதலில் எழுந்தது. வெறும் பானை பொங்கவே பொங்காது. பானைக்குள் அரிசியை இட்டால்தானே பொங்கிவரும்.

இந்த மனிதர்கள் வெற்றுப் பானைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் மனம் மகிழ்வால் பொங்கவே மாட்டேன் என்கிறது. பாடல் வளருகிறது.

வையத்து அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமே மேல்

என்று பாடலின் பாதிப்பகுதியை எழுதினார் ஔவையார்.

உலகத்தில் எல்லோரும் வளமாக இருந்துவிடுவதில்லை. சிலர் பொருள் செல்வம் அதிகம் பெற்றுள்ளார்கள். சிலர் குறைவாகப் பெற்றுள்ளார்கள். செல்வமுடையவர்கள் செல்வம் இல்லாதவர்களின் நிலையை எண்ணிப் பார்த்து அவர்களுக்கு உதவ வேண்டும். அதனை தருமமாகச் செய்யலாம். உதவியாகச் செய்யலாம். செய்த உதவி திரும்ப வரும் என்ற உறுதி இல்லையென்றாலும் செய்வதே அறம் ஆகும்.

அவ்வாறு தராமல் தானே வாழ்பவர்கள் வாழ்க்கை மகிழ்வால் பொங்கவே பொங்காது. வெற்றுப்பானை போல ஆகிவிடும். பானைக்குள் அரிசியை இடுகிறோம் என்றால், அது பொங்குகிறது என்றால் அரிசியை முன்னரே தயார் செய்திருக்க வேண்டும். உழைத்து வேளாண்மை செய்திருக்க வேண்டும். தனக்குப் போக மற்றதை மற்றவர்களுக்கு வழங்கும் விவசாயிகளின் வள்ளல் குணம் வேண்டும். அந்த அறம் செய்தால் மட்டுமே வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.

பாடலின் மற்ற இரண்டு அடிகள் இன்னமும் ஆழமாக ஒரு கருத்தைச் சொல்கின்றன.

செய்த தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்



நல்லது செய்தால் நல்லதே நடக்கும். தீயது செய்தால் தீயதே நடக்கும். தீவினைகளைச் செய்த ஒருவன் எனக்குப் பணம் இல்லையே என்று வருந்துகிறான். அதற்காகத் தெய்வத்தைக் குற்றம் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது.

நல்லறங்களைச் செய்து வாழும் நலமான வாழ்க்கையை மனிதர்கள் வாழவேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் பொங்கல் அன்று நம் வீட்டுப் பானை பொங்கும். இல்லையென்றால் அது வெறும்பானைதான்.

நல்லறங்களைச் செய்தால் இரு நிதியம் வரும். அந்த நிதியத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அறம் செய்யவேண்டும். அவ்வாறு அறம் செய்தால் மனித வாழ்க்கை வெற்றுப்பானை வாழ்க்கையாக இல்லாமல் சர்க்கரையும், அரிசியும் நெய்யும் கலந்த நிறை வாழ்க்கையாக அமையும் என்பதே இப்பாடல் சொல்லவரும் கருத்தாகும்.
நன்றி- முத்துக்கமலம் இணைய இதழ்

கருத்துகள் இல்லை: