ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2020

துறவறம் சார்ந்த அறக் கோட்பாடுகள் – (பாகம் -2)

முனைவர் மு.பழனியப்பன்

Aug 1, 2020
 

Siragu silappadhigaaram2

8. கிளைக் கதைகள் உணர்த்தும் அறக்கோட்பாடுகள்

சிலப்பதிகாரத்தில் பல கிளைக்கதைகள் படைக்கப்பெற்றுள்ளன. இக்கதைகள் காப்பியப் போக்கிற்குத் துணை செய்வனவாகவும், படிப்போருக்குக் காப்பியத்தின் மீதான ஆர்வத்தை மிகுவிப்பனவாகவும் விளங்குகின்றன. இக்கிளைக்கதைகளின் வழியாக அறத்தை நிலை நிறுத்த இளங்கோவடிகள் முயன்றுள்ளார். முசுகுந்தன் கதை, அகத்தியர் சாபம் அளித்த கதை, பத்தினிப் பண்டிர் எழுவர் பற்றிய கதைகள், மணிமேகலா தெய்வம் உதவிய கதை போன்ற கதைகள் சிலப்பதிகாரத்தில் கிளைக்கதைகளாக அமைக்கப்பெற்றுள்ளன.

முசுகுந்தன் கதை

இந்திரவிழா நடக்கும் காலத்தில் புகார் நகருக்கு மக்கள், விஞ்சையர், தேவர்கள் அனைவரும் வந்து சேருவர். அவ்வாறு வந்தவர்கள் புகார் நகரத்தின் பேரழகினை, வடிவமைப்பினைக் கண்டு மகிழ்வர். அவ்வாறு வந்த ஒரு விஞ்சையன் தன் துணையாளுக்குப் புகார் நகரின் பக்கங்களைக் காட்டிக் கொண்டு வருகிறான். அப்போது அவன் ஒரு பூதச் சதுக்கத்தைக் காட்டுகிறான். பெரிய பூதத்தால் காக்கப்பெற்றுவரும் அச்சதுக்கம் இந்திரனுடன் தொடர்புடையதாகும்.

ஒரு காலத்தில் அரக்கர்கள் தேவர்களைத் துன்புறுத்தினர். இதனைத் தாங்கமாட்டாது தேவர் தலைவன் இந்திரன் முசுகுந்தன் என்ற சோழ அரசனின் துணை வேண்டினான். அவ்வரசன் அரக்கர்களின் வலியை அடக்கித் தோற்று ஓடச் செய்தான். தோற்ற அரக்கர்கள் முசுகுந்தனை வருத்த ஒரு கணை செய்தனர். அக்கணை விரைந்து வந்து முசுகுந்தனைத் தாக்கிட நெருங்கியபோது பூதம் ஒன்று அவனைக் காத்து நின்றது. முசுகுந்தன் வெற்றி பெற்றான். தேவர்கள் அமைதி அடைந்தனர். அரக்கர்கள் வலி அடங்கினர். இந்நிலையில் இந்திரன் முசுகுந்தனிடம் வெற்றி பெற்றது எவ்வாறு என்று வினவியபோது அவன் பூதத்தின் துணையால் வென்றேன் என்று கூறினான். இதனால் அந்தப் பூதத்தைக் காவிரிப்பூம்பட்டினத்திலேயே இருக்கச் செய்து நாளங்காடியைக் காத்து வரச் செய்தான் இந்திரன். இவ்வாறு பூதச் சதுக்கம் உருவாகியது. இதனைச் சிலப்பதிகாரம்

‘‘கடுவிசை அவுணர் கணம்கொண்டு ஈண்டிக்

கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த

தொடுகழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகி

நெஞ்சுஇருள் கூர நிகர்த்துமேல் விட்ட

வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்

திருந்துவேல் அண்ணற்குத் தேவர்கோன் ஏவ

இருந்துபலி உண்ணும் இடனும் காண்குதும்”

என்ற நிலையில் ஒரு கிளைக்கதை புகார்க்காண்டத்தில் உரைக்கப்பெறுகிறது. நல்லோர்க்கு உதவி செய்தால் நன்மையே கிடைக்கும் என்ற நிலையில் இக்கதை அறத்தைக் காட்டி நிற்கிறது. மேலும் இந்திரனே ஆனாலும் அவனும் ஒரு காலத்தில் ஆதரவற்றவனாக ஆகிவிடுகிறான். அவனைக் காக்கப் பிறர் உதவி தேவைப்படுகிறது. எனவே அல்லல் பட்டு அழுபவர்களைக் காப்பது என்பது மிகச் சிறந்த அறமாகின்றது.

அகத்திய முனிவர் வழங்கிய சாபம்

siragu agaththiyar1

தேவலோக நடன மங்கை உருப்பசி அகத்தியரின் சாபத்தினால் மண்ணுலகு வந்தாள். அவளின் பரம்பரையில் தோன்றியவள் ஆடல் மங்கை மாதவி ஆவாள். இவளின் இப்பிறப்பு பற்றிய கிளைக்கதை ஒன்று சிலப்பதிகாரத்தில் காட்டப்பெற்றுள்ளது.

‘‘ தெய்வ மால்வரைத் திருமுனி அருள

எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு

தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய

மலைப்புஅருஞ் சிறப்பின் வானவர் மகளிர்

சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய

பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை”

என்ற நிலையில் உருப்பசியும் (ஊர்வசியும்), இந்திரன் மகன் சயந்தனும் மண்ணுலகில் பிறக்க அகத்தியர் சாபம் காரணமாக அமைந்தது.

தேவலோகத்தில் உருப்பசியின் நடனம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நடனத்தினை இந்திரன் முதலானோரும், அகத்தியர் போன்றோரும் கண்டு களித்தனர். அப்போது உருப்பசி இந்திரன் மகன் சயந்தனைக் கண்டு காதலுற்றுத் தன் நடனத்தைப் பிழைபட ஆடினாள். நடனம் பிழைபடுவதை அறிந்த அகத்திய முனிவர் உருப்பசியையும், சயந்தனையும் சபித்தார். அவர்கள் மண்ணுலகில் பிறக்கட்டும் என்று சாபம் அளித்தார். அவ்வகையில் உருப்பசி மண்ணுலகில் பிறந்தாள். தன் சாபம் ஒரு காலத்தில் நீங்கி தேவ உலகம் சென்றாள். அவளின் பரம்பரையில் மாதவி தோன்றினாள். சயந்தன் மண்ணுலகில் மூங்கிலாகக் பிறந்து நடன மங்கையருக்கு வழங்கப்படும் தலைக்கோல் பட்டத்திற்கு உரிய நிலையில் விளங்கினான்.

இச்சிறு கிளைக்கதையின் வழியாகக் கடமை தவறுவோர் தண்டனை பெறுவர் என்ற அறம் முன்னிறுத்தப்படுகிறது.

—————————

தேவந்தி

கண்ணகியின் தோழியாக விளங்கியவள் தேவந்தி ஆவாள். இவளுக்கென ஒரு கிளைக்கதையும் சிலப்பதிகாரத்தில் இடம் பெறச் செய்யப்பெற்றுள்ளது.

மாலதி என்ற பெண் குழந்தைப் பேறு இல்லாதவள். எனவே அவளின் கணவன் மற்றொரு பெண்ணைத் திருமணம் புரிகின்றான். அப்பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. இக்குழந்தையைப் பராமரிக்கும் பணியை மாலதி செய்துவந்தாள். பால் விக்கிய காரணத்தால் இக்குழந்தை இறந்துவிடுகிறது. குழந்தை இறந்தமைக்குத் தான் தானே காரணம் என்று மாலதி கலங்கினாள். அழுதாள். கணவனும், மாற்றாளும் தன்னைப் பழி தூற்றுவார்களே என்று அஞ்சினாள். பல கோயில்களுக்குச் சென்று குழந்தையை உயிர்ப்பிக்க வேண்டினாள்.

இதற்கிடையில் இடாகினிப் பேய் ஒன்று இவளிடம் குழந்தையைப் பெற்று உயிர்ப்பிப்பதாகச் சொல்லி அக்குழந்தையின் பிணத்தைத் தின்றுவிடுகிறது. இதனால் பெரிதும் துன்பப்பட்டு அழுது கலங்கினாள் மாலதி.

இந்நேரத்தில் இவளின் நிலை கண்ட சாத்தன் கோயிலில் இருந்த சாத்தன் என்ற தெய்வம் இவளுக்கு உதவ முன்வந்தது. தானே ஒரு குழந்தையாகி அவளின் கைகளில் அடைக்கலமாகியது.

இக்குழந்தை வளர்ந்து, பெரிதாகி திருமண வயது அடைந்தது, அவ்வயதில் தேவந்தி என்பவனை இவனுக்கு மணம் முடித்து வைத்தனர். சாத்தன் என்ற தெய்வம் தன் உண்மை உருவினைத் தேவந்திக்குக் காட்டியது. தேவந்தியைப் பிரிந்துத் தீர்த்த யாத்திரை மேற்கொள்வதாகக் கூறித் தன் கோயிலுக்குள் சென்றுவிட்டது. தேவந்தி தனக்கு துணை வேண்டி சாத்தன் கோயிலுக்கு            நாளும் சென்று பூசை செய்துவரலானாள்.

இக்கதையைப் பின்வருமாறு சிலப்பதிகாரம் பாடுகின்றது.

‘‘மேல் ஓர் நாள்:

மாலதி மாற்றாள் மகவுக்குப் பால்அளிக்கப்

பால்விக்கிப் பாலகன் தான்சோர மாலதியும்

பார்ப்பா னொடுமனையாள் என்மேல் படாதனவிட்டு

ஏற்பன கூறார்என்று ஏங்கி மகக்கொண்டு”

என்று மாலதி ஏங்கிய ஏக்கம் சிலப்பதிகாரத்தில் பதிய வைக்கப்பெற்றுள்ளது. அவள் பல கோயில்களுக்குச் சென்றாள் என்பதை இளங்கோவடிகள் என்ன என்ன கோவிலுக்குள் சென்றாள் என்பதைப் பின்வருமாறு பட்டியலிடுகிறார். இப்பட்டியலின்படி புகார் நகரத்தில் இருந்த கோயில்களை அறிந்துகொள்ளமுடிகின்றது.

‘‘அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்

புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்

உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம்

வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்

நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும்

தேவிர்காள் எம்உறுநோய் தீர்ம்அன்று மேவிஓர்

பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு,”

என்ற நிலையில் பல கோயில்களுக்கு மாலதி சென்றுள்ளாள்.

அமரர் தரு கோட்டம் என்பது தேவர் தருவாகிய கற்பக மரம் நிற்கும் கோட்டம் ஆகும். வெள்யானைக் கோட்டம் என்பது ஐராவதம் நிற்கும் கோயிலாகும். புகர் வெள்ளை நாகர்தம் கோட்டம் என்பது அழகினை உடைய பல தேவர் கோயில்களைக் குறிக்கும். பகல்வாயில் உச்சிக் கிழான் கோட்டம் என்பது கீழ்த்திசையில் தோன்றுகிற சூரியன் கோட்டம் ஆகும். ஊர்க் கோடம் என்பது சிவபெருமான் நிற்கும் கைலாயக் கோட்டம் ஆகும். வேற் கோட்டம் என்பது முருகனின் படையான வேல் நிறுத்தி வழிபடும் கோயில் ஆகும். வச்சிரக் கோட்டம் என்பது இந்திரனின் ஆயுதமான வச்சிரம் நிறுவப்பெற்ற கோயில் ஆகும். புறம்பணையான் வாழ் கோட்டம் என்பது சாதவாகனன் மேவிய கோயில் ஆகும். நிக்கந்தன் கோட்டம் என்பது அருகன் கோயிலாகும். நிலாக் கோட்டம் என்பது சந்திரன் கோயில் ஆகும். இக்கோயில்களுக்கு எல்லாம் மாலதி சென்றுள்ளாள். இதன்வழி புகார் நகரில் இந்திரனுக்கான கோயில்கள் பல இருந்துள்ளன என்பது தெரியவருகிறது. மாலதி எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அவளால் அக்குழந்தையை எழுப்ப இயலவில்லை.

‘‘ஏசும் படிஓர் இளங்கொடியாய் ஆசுஇலாய்

செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம்கொடார்

பொய்உரையே அன்று பொருள்உரையே கையிற்

படுபிணம்தா என்று பறித்துஅவள்கைக் கொண்டு

சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்குஇருளில் சென்றுஆங்கு

இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி

மடியகத்து இட்டாள் மகவை, இடியுண்ட

மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு”

என்ற நிலையில் பெரிதும் துன்பம் கொள்கிறாள் மாலதி. இடியுண்ட மயிலின் நிலைபோல அவளின் நிலை ஆயிற்று. இதிலிருந்து சாத்தன் மீட்டுவித்தநிலை பின்வருமாறு சிலப்பதிகாரத்தில் காட்டப்பெற்றுள்ளது.

‘‘ அச்சாத்தன்

அஞ்ஞைநீ ஏங்கி அழல்என்று முன்னை

உயிர்க்குழவி காணாய்என்று அக்குழவி யாய்ஓர்

குயில்பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்புஇன்றி

மாயக் குழவி எடுத்து மடித்திரைத்துத்

தாய்கைக் கொடுத்தாள்அத் தையலாள், தூய

மறையோன்பின் மாணியாய் வான்பொருள் கேள்வித்

துறைபோய் அவர்முடிந்த பின்னர் இறையோனும்

தாயத்தா ரோடும் வழக்குஉரைத்துத் தந்தைக்கும்

தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள்

தேவந்தி என்பாள் மனைவி அவளுக்குப்

பூவந்த உண்கண் பொறுக்கென்று மேவித்தன்

மூவா இளநலம் காட்டிஎம் கோட்டத்து

நீவா எனஉரைத்து நீங்குதலும், தூமொழி

ஆர்த்த கணவன் அகன்றனன் போய்எங்கும்

தீர்த்தத் துறைபடிவேன் என்றுஅவனைப் பேர்த்துஇங்ஙன்

மீட்டுத் தருவாய் எனஒன்றன் மேல்இட்டுக்

கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள்”

என்ற நிலையில் சாத்தன் வளர்ந்து, தேவந்தியைத் திருமணம் செய்து தன் உண்மை நிலையை அவளுக்கு விளக்கிக் கோயில் புக்க நிலை சிலப்பதிகாரத்தில் காட்டப்பெறுகிறது.

தேவந்தியின் இக்கதை வழியாக இறந்தவர்களை மீட்பது இயலாது. தெய்வத்தை நம்பினோர் கைவிடப்பட மாட்டார், துயருற்றவர்களை யாரேனும் காப்பர் போன்ற அறங்களைப் பெற முடிகின்றது.

மணிமேகலா தெய்வம்

கோவலன் மாதவியுடன் வாழ்ந்த நாளில் அவளுக்குப் பெண் குழந்தை ஒன்று பிறக்கிறது. இக்குழந்தைக்குக் கோவலன் மணிமேகலை என்று பெயர் சூட்ட விழைகின்றான். இதற்குக் காரணம் கோவலனின் முன்னோரில் ஒருவர் கடல் பயணம் செய்தபோது அவர் சென்ற மரக்கலம் உடைந்துவிடுகிறது. இதன் காரணமாக நடுக்கடலில் தத்தளித்த அவரை மணிமேகலா தெய்வம் என்ற தெய்வம் காப்பாற்றி கரை சேர்த்தது. இதன் காரணமாகக் கோவலனின் பரம்பரையினர் மணிமேகலா தெய்வத்தைத் தம் குல தெய்வமாகப் போற்றினர். இதன் காரணமாகக் கோலவன் தன் மகளுக்கு மணிமேகலை என்று பெயர் சூட்ட விழைகிறான். இதனைப் பின்வரும் பாடலடிகள் உணர்த்தி நிற்கின்றன.

‘‘மாந்தளிர் மேனி மாதவி மடந்தை

பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து

வாலா மைந்நாள் நீங்கிய பின்னர்

மாமுது கணிகையர் மாதவி மகட்கு

நாம நல்லுரை நாட்டுது மென்று

தாமின் புறூஉந் தகைமொழி கேட் டாங்கு

இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல்

உடைகலப் பட்ட எங்கோன் முன்னாள்

புண்ணிய தானம் புரிந்தோ னாகலின்

நண்ணுவழி இன்றி நாள்சில நீந்த

இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்

வந்தேன் அஞ்சல் மணிமே கலையான்

உன்பெருந் தானத் துறுதி யொழியாது

துன்ப நீங்கித் துயர்க்கட லொழிகென

விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த

எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென

அணிமே கலையார் ஆயிரங் கணிகையர்

மணிமே கலையென வாழ்த்திய ஞான்று”

என்ற நிலையில் மணிமேகலா தெய்வம் தானே வந்து தலையளித்துக் காப்பாற்றியதால் அத்தெய்வப் பெயரை இடுவதற்குக் கோவலன் ஆர்வமாக இருந்தான். அப்பெயரே அக்குழந்தைக்கு வைக்கவும் பெற்றது.

மணிமேகலா தெய்வம் கோவலனின் முன்னோர் செய்த அறச்செயல்கள் காரணமாக கடலில் தத்தளித்தபோது காப்பாற்றியது. எனவே அறம் செய்தால் உயிர் காக்கப்படும் என்பது இந்நிகழ்வின்வழி உணரத்தக்க அறமாகின்றது.

பத்தினிப்பெண்டிர் எழுவர்

பத்தினிப்பெண் எழுவர் பற்றி செய்திகள் சிலப்பதிகாரத்தின் வஞ்சின மாலைப் பகுதியில் சிறு சிறு கதைகளாகச் சொல்லப்பெற்றுள்ளன. இக்கதைகள் பெண்களின் கற்பறத்தைச் சிறப்பிப்பனவாக உள்ளன.

வன்னி மரத்தைச் சான்றாக்கிய பத்தினி

காவிரிப்பூம்பட்டினத்தைச் சார்ந்த வணிகன் ஒருவன் தன் மகளை மதுரையில் உள்ளதன் மருமகனுக்கு மணம் முடித்துத் தர வாக்களித்திருந்தான். இது நடப்பதற்கு முன்பே வணிகனும் அவன் மனைவியும் இறந்துவிடுகின்றனர். அச்செய்தி அறிந்த வணிகனின் மருமகன் காவிரிப்பூம்பட்டினம் வந்து, வணிகன் மகளை மதுரைக்கு அழைத்துச் சென்று மணம் முடித்துக்கொள்ள எண்ணினான். இதற்குச் சுற்றத்தாரும் ஒத்துக்கொண்டனர்.

அவ்வாறு இருவரும் மதுரை செல்லும் நிலையில் திருப்புறம்பியம் என்ற இடத்தில் இருவரும் தங்க நேர்ந்தது. அங்குள்ள கோவிலில் இருவரும் தங்கினர். அந்நேரத்தில் மருமகனை அரவு ஒன்று தீண்டிவிடுகிறது. இறந்து பட்ட அவன்மீது விழுந்து அழவும் முடியாமல் மீளவும் முடியாமல் வணிகன் மகள் அழுதாள். அந்நேரத்தில் அவள் அழுகை கேட்டு திருஞானசம்பந்தர் வருகை தந்து அவளின் இன்னல் நீக்கி அவ்விளைஞனை உயிர் பெறவைத்தார். இதன்பின் அவனை அழைத்து அவளை மணம் முடித்துக்கொள்ளச் சொன்னார். அவனோ சுற்றத்தார் சாட்சி இல்லாமல் எப்படி மணப்பது என்று கூற அருகிருந்த வன்னிமரம், சிவலிங்கம், கிணறு இவைகளே சாட்சி என்று சொல்லி அவர் அத்திருமணத்தை நடத்தி வைத்தார்.

மதுரை வந்த வணிகனுக்கு முன்பே ஒரு குடும்பம் இருந்தது. அக்குடும்பத்தில் இவளும் இணைந்து ஒன்றாய் வாழ்ந்தாள். இருப்பினும் ஒருநாள் ஏற்பட்ட சண்டையில் காவிரிப்பூம்பட்டினத்துப் பெண்ணை மதுரைப் பெண் சாட்சியில்லாமல் நீ செய்துகொண்ட திருமணம் திருமணமாகுமா என்று கேலி பேசினாள். அதற்கு புகார் நகரத்துப் பெண் என் திருமணத்திற்கு மூன்று சாட்சிகள் உள்ளன என்றாள். அவை இங்கு வருமா? இங்கு வந்து சாட்சி சொல்லுமா என்று மூத்தவள் கேட்க அவை மூன்றும் மதுரைக்கு அப்படியே வந்து இவ்வணிக மகளுக்குச் சாட்சி சொல்லின. அந்த அளவிற்குக் கற்பில் சிறந்தவளாக இவ்வணிகப் பெண் அமைந்து பத்தினியாக அறியப்பட்டாள்.

‘‘வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக

முன்னிறுத்திக் காட்டிய மொய்குழ லாள்”

என்று இப்பத்தினிப் பெண்ணின் வரலாற்றைப் பதிவு செய்துள்ளார் இளங்கோவடிகள்.

மணற்பாவையால் செய்யப்பட்ட கணவன்

காவிரிக் கரையில் பெண்கள் பலர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண்ணிடம் காவிரிக் கரை மணலில் ஒரு ஆண் பொம்மையைச் செய்து இதுவே உன் கணவன் என்று சொல்லி வைத்தனர். அதனையே உண்மை என நம்பினாள் அப்பெண். அப்போது காவிரியில் எழுந்த அலைகள் இப்பொம்மையை நெருங்கி வந்து மோதி அழிக்க முயல இவள் அப்பொம்மையை அழியாமல் காத்தாள். காவரி வெள்ளமும் அப்பொம்மையை அழிக்காமல் கரையேறியது. இப்பத்தினிப் பெண் தன் மணற் பொம்மைக் கணவனை அழியாமல் காத்த கற்பரசியாக விளங்கினாள். இதனை

‘‘பொன்னிக்

கரையின் மணற்பாவை நின்கணவ னாமென்று

உரைசெய்த மாதரொடும் போகாள் திரைவந்து

அழியாது சூழ்போக வாங்குந்தி நின்ற”

என்று இப்பத்தினியைப் பதிவு செய்துள்ளது சிலப்பதிகாரம்.

கரிகால்வளவன் மகள்

கரிகால் வளவன் மகளான ஆதிமந்தி, தன் காதலனுடன் கடலாடிக் கொண்டிருந்த பொழுதில், கடல் காதலனை இழுத்துச் சென்றுவிடுகிறது. இழுத்துச் சென்ற காதலனைத் தேடி அவள் ஓட கடலலைகள் அவளின் காதலனைக் கொண்டு வந்து நிறுத்தின. அவள் அவனைத் தழுவி நின்றாள். இவளும் பத்தினியருள் ஒருத்தியாக வைத்துச் சிலப்பதிகாரத்தில் எண்ணப்படுகிறாள்.

‘‘வரியா ரகலல்குல் மாதர் உரைசான்ற

மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்

தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று

கல்நவில் தோளாயோ வென்னக் கடல்வந்து

முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு”

என்ற நிலையில் கரிகால் வளவனின் மகளது கற்பு மேம்பாட்டைச் சிலப்பதிகாரம் பாடுகின்றது.

கல்லுருவான கற்பரசி

கற்புடைப் பெண் ஒருத்தியின் கணவன் பொருள் தேடப் போனான். அவன் மீண்டும் வரும் வரையில் அவன் மனைவி கற்சிலையாகவே கடற்கரையில் அவன் வரவை எதிர் நோக்கி நின்றாள். சென்ற கணவன் பொருள் தேடி வந்தபின் கற்சிலையாக நின்ற அவள் உணர்வு பெற்று அவனுடன் சேர்ந்து வாழ்ந்தாள்.

‘‘பொன்னங் கொடிபோலப் போதந்தாள் மன்னி

மணல்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக்

கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் இணையாய”

என்ற நிலையில் கல்லுருவம் கொண்ட பெண்ணும் கற்பரசியாக விளங்குகிறாள்.

மாற்றாள் குழந்தையை மீட்ட கற்பரசி

ஒருவனுக்கு இரு மனைவியர். முதல் மனைவியின் பிள்ளை எதிர்பாராதவிதமாக கிணற்றில் விழுந்துவிடுகிறது. மற்றொருத்தி இதனைக் கண்டு வருந்துகிறாள்.

‘‘மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று

வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் வேற்றொருவன்”

என்று குழந்தையை மீட்டெடுத்த கற்புக்கரசியைச் சிலப்பதிகாரம் சுட்டுகின்றது.

குரங்கு முகம் கொண்ட பத்தினிப்பெண்

‘‘நீள்நோக்கங் கண்டு நிறைமதி வாள்முகத்தைத்

தானோர் குரக்குமுக மாகென்று போன

கொழுநன் வரவே குரக்குமுக நீத்த

பழுமணி அல்குற்பூம் பாவை”

என்று மற்றொரு பத்தினியைப் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்துள் காட்டப்பெற்றுள்ளது. பத்தினிப் பெண் ஒருத்தியை விட்டுக் கணவன் நீங்கினான். அக்காலத்தில், தன்னை ஒருவன் குறிக்கொண்டு நோக்கியதைக் கண்ட அவள் தன் முகத்தைக் குரங்கு முகமாக ஆக்கிக்கொள்கிறாள். பிரிந்த கணவன் வந்த பின்பு, அந்தக் குரங்கு முகத்தைத் தன் முகமாக ஆக்கிக் கொள்கிறாள். இந்த அளவிற்குக் கற்பு மேன்மை உடையவளாக இப்பத்தினிப் பெண் விளங்குகிறாள்.

வாக்கு பொய்க்காத பத்தினி

பெண்கள் இருவர் தோழிகளாக விளங்கி வந்தனர். அவர்கள் இருவரும் தமக்குத் திருமணம் ஆகும் நிலையில் ஒருத்தி, ‘‘ஓர் ஆண்மகன் எனக்குப் பிறந்தால் அவனை உனக்குப் பெண் பிள்ளை பிறக்கும் நிலையில் அவளுக்குத் திருமணம் செய்து கொடுப்பேன்” என்று உறுதி கொடுத்தாள். கால வெள்ளத்தில் அவளுக்கு ஆண்பிள்ளை பிறந்தும், இவளுக்குப் பெண்பிள்ளை பிறந்தும் திருமணம் செய்ய இயலாது அயல் மணம் நிகழ இருந்தது. இந்நிலையில் வருத்தமுற்று பெண்ணைப் பெற்றவள் முன்னால் தாம் எடுத்துக்கொண்ட உறுதிமொழியைப் பற்றிக் கூற அப்பெண்பிள்ளை தானாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு அவ்வாண்பிள்ளையைத் தேடி அடைந்தது. இதுவும் கற்பு நிலையாகும் என்கிறார் இளங்கோவடிகள்.

‘‘விழுமிய

பெண்ணறி வென்பது பேதைமைத்தே என்றுரைத்த

நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே எண்ணிலேன்

வண்டல் அயர்விடத் தியானோர் மகள்பெற்றால்

ஒண்டொடி நீயோர் மகற்பெறில் கொண்ட

கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம்

கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால்

சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத்

தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர்

கோடிக் கலிங்கம் உடுத்துக் குழல்கட்டி

நீடித் தலையை வணங்கித் தலைசுமந்த

ஆடகப்பூம் பாவை அவள்போல்வார் நீடிய

மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்”

என்று இப்பெண் குறித்துச் சிலப்பதிகாரம் பாடுகின்றது. இவ்வகையில் எழுவகைப் பத்தினிப் பெண்களை வரிசை பட மொழிகிறாள் கண்ணகி. வஞ்சினமாலையில் இவர்களைக் காட்டித் தன் பத்தினித்தன்மையால் கண்ணகி மதுரையை எரிப்பேன் என்கிறாள்.

‘‘பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்

ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்

பட்டிமையுங் காண்குறுவாய்”

என்ற நிலையில் இதனைச் சிலப்பதிகார ஆசான் இளங்கோவடிகள் வெளிப்படுத்தி நிற்கிறார். இதன்வழி பெண்களுக்கான அறம் என்பது: கற்பு வழிப்பட்டு நிற்றலே ஆகும் என்பதைத் தெளிவாக உணரமுடிகின்றது.

கணவன் பிரிந்து சென்ற நிலையில் அவன் திரும்பி வரும்வரைக் கற்புடன் காத்திருத்தல், அவன் அழிந்துபட்ட நிலையில் தன் கற்பின் திறத்தால் அவனை எழுப்பல், கற்புக்குச் சாட்சி காட்டல், கற்பால் இழந்த உயிரை மீட்டல் போன்ற செயல்பாடுகள் அறத்தின்பாற்பட்ட செயல்பாடுகளாக விளங்குகின்றன.

கருத்துகள் இல்லை: