செவ்வாய், ஜனவரி 13, 2015

தொல்காப்பிய புறத்திணை நோக்கில் சிலப்பதிகாரம்

tholkappiyar
தொல்காப்பியப் பொருள் இலக்கணம் இருவகைப்படுகின்றது. அக இலக்கணம், புற இலக்கணம் எனபனவாகும். இவ்விரண்டிற்கும் தனித்த இலக்கண மரபுகள் தொல்காப்பியரால் காட்டப்பெற்றுள்ளன. அக இலக்கண மரபுகளை அப்படியே தாங்கிச் சங்க இலக்கிய அகப் பாடல்கள் அமைந்துள்ளன. புற இலக்கண மரபுகளை அப்படியே ஏற்று புற இலக்கியங்கள் படைக்கப்பெற்றுள்ளன. சங்கம் மருவிய காலத்தில் சிற்சில மாறுபாடுகள் இவ்விலக்கண மரபுகளி;ல் தோன்றினாலும், அப்பகுப்பு சார்ந்த அக, புற இலக்கியங்கள் தொல்காப்பிய மரபுகளைப் பின்பற்றின என்பதில் ஐயமில்லை. இதற்குப் பின் சிலப்பதிகாரம் தோற்றம் பெறுகின்றது. ஏறக்குறைய பத்துப்பாட்டின் வளர்ச்சி நிலை சிலப்பதிகாரம் எனக் கொள்ளலாம். நெடிய பாடலாக விளங்கும் பத்துப்பாட்டு அமைப்புமுறையின் நீட்சிச் சிலப்பதிகாரக் காப்பியமாக வளர்கின்றது. இதனுள்ளும் அக, புற இலக்கணங்களின் மரபுகள் பின்பற்றப்பெற்றுள்ளன. அவற்றை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
புற இலக்கணம் வரையறை
புறம் என்ற இலக்கணத்தின் அடிப்படையை அறிந்து கொள்ள இளம்பூரணரின் விளக்கம் பயன்படுகின்றது. ~~புறப்பொருளாவது மறஞ் செய்தலும் அறஞ் செங்தலும் ஆகலான் அவற்றானாய பயன் பிறர்க்குப் புலனாதலின் புறம் என்றார் என்ற புற இலக்கணம் பற்றிய குறிப்பு, புறத்திணைப் பொருள் இலக்கணத்தின் அடிப்படையை எடுத்தியம்புகின்றது.
தொல்காப்பியர் அகத்தை ஏழாகப் பிரித்தது போலவே புறத்தையும் ஏழாகவேப் பிரித்தார். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய எழு திணைகள் தொல்காப்பியம் குறிப்பிடும் புறத்திணைகள் ஆகும்.
வெட்சி என்பது ஆநிலை கவர்தல் ஆகும். வஞ்சி என்பது மண் கருதிய போராகும். உழிஞை எதிரி அரசனின் அரணை முற்றுகையிடலும், அம்முற்றுகையை அவ்வரசன் முறித்தலும் ஆகும். தும்மை என்பது இரு பெரு வேந்தர்களும் போர் எதிர்தலாகும். வாகை என்பது வெற்றியைக் குறி;ப்பதாகும். காஞ்சி என்பது யாக்கை, செல்வம், இளமை ஆகியனவற்றின் நிலையாத் திறம் காட்டிப் போரை விலக்கல் ஆகும். பாடாண் என்பது இவ்வகையில் n;வற்றி பெற்று அடங்கி வாழ்ந்தத் தலைவன் ஒருவனின் புகழ் பாடுவதாகும். இத்துறைகளுக்கு வைக்கப்பெற்ற பெயர்கள் பூக்களின் பெயர்கள் ஆகும். இப்பூக்களை மூடி இவ்வினைகளைத் தமிழர்கள் ஆற்றினர். இதன் காரணமாக சமுதாயத்தில், போர்க்களத்தில் அவர்கள் எக்குழு சார்ந்தவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளமுடிந்தது.
சிலப்பதிகாரம் – புறத்திணைச் சார்புடையது
சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் வகையில் அமைந்த முத்தமிழ்க் காப்பியம் ஆகும். இதனை இயற்றிய இளங்கோவடிகள் அரச மரபினர் என்பதால் அவர் புறத்திணை மரபுகளைப் பெரிதும் அறிந்தவர் ஆகின்றார். இதன் காரணமாக அவர் படைத்த சிலப்பதிகாரம் முழுவதிலும் தொல்காப்பிய புறத்திணை மரபுகள் விரவிக் கிடப்பதைக் காணமுடிகின்றது.
சிலப்பதிகாரப் புறத்திணைக் கூறுகள் என்ற பொருளில் நூல் வரைந்துள்ள, இராம தட்சிணாமூர்த்தி சிலப்பதிகாரத்தில் அனைத்துக் காதைகளிலும் இடம்பெற்றுள்ள புறத்திணைக் கூறுகளை எடுத்தியம்பியுள்ளார். அவர் தம் நூலில், சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியப் புறத்திணையியலும், புறப்பொருள் வெண்பாமாலையின் புறத்திணையியலும் இணைந்து இடம்பெற்றுள்ள திறத்தைக் காட்டியுள்ளார். அவரின் கருத்துகள் சிலப்பதிகாரம் பின்பற்றிய புறத்திணை மரபுகளின் இயல்புகளை தெளிவுடன் காட்டுகின்றன. அவற்றில் சில பின்வருமாறு.
~~சங்க இலக்கிய மரபை முழுக்க மறுக்காமலும், முழுக்கப் பற்றாமலும் சிலப்பதிகாரத்தை அடிகள் ஆக்கினார். ஒரு வணிகக் குடிமகனுக்கும், அவன் மனைவிக்கும் ஏற்பட்ட வாழ்க்கைச் சுழல்களையும், அழல்களையும் விளக்கி ஒரு பெரிய தொடர்நிலைச் செய்யுளைப் படைத்தார். தம் கதையின் மூலமாக, சில உண்மைகளைக் கூற முனைந்தார். அவற்றையே முப்பேருண்மைகளாகக் குறிப்பிட்டார். அதுகாறும் இலக்கியங்களின் போக்குக்கும், நோக்குக்கும் அடிப்படையாக அமைந்த ~பொருளிலக்கண வழக்கு அவரது புதிய இலக்கியத்திற்கு இன்றியமையாத தேவையாயில்லை. ஆனாலும் சங்க இலக்கியப் பொருள் இலக்கண மரபின் தாக்கத்தை அவர் நூலில் காணமுடிகின்றது என்ற அவரின் கருத்து சிலப்பதிகாரத்தில் சங்க இலக்கியப் புறத்திணை மரபுகள் பின்பற்றப்பட வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் இளங்கோவடிகள் பின்பற்ற முனைந்துள்ளமையைக் குறிப்பிடுகின்றது.
அவரே ~~மறத்துறையைச் சார்ந்த திணை, துறைகளை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பொருத்தி, வீரப் பெண்மைக்குப் புகழ் பாடியவர் இளங்கோவடிகள். வஞ்சிக் காண்டத்தில் கண்ணகி ~வீரபத்தினி| என்றே குறிக்கப் பெறுகிறாள். பண்டைக்காலத்தில் தமிழகத்தில் வீரமிக்க ஆடவர்கட்குக் கல்லெடுப்பது மரபு. இதை நடுகல் என்பர். நடுக்கல்லில் இறந்த தலைவனுடைய பெயரையும், சிறப்புகளையும் எழுதி மயிற்பீலி சூட்டி வணங்குவர்.
நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடு மெழுதி யதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் 
சிலம்பில், கண்ணகி என்ற பெண்ணுக்கே நடுகல் விழா நடக்கின்றது. 
~~காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூன்று வகையிற் கல்லொடு புணர
என்று தொல்காப்பியம் கூறும் புறத்திணைத் துறைகளையே வஞ்சிக்காண்டத்தின் தலைப்புக்களாகக் கொடுத்துள்ளார் இளங்கோவடிகள் என்ற மேற்குறித்த ஆய்வாளரின் கருத்து தொல்காப்பியத்தில் காட்டப்பெற்ற ஆண் புற மரபுகள் சிலப்பதிகாரத்தில் பெண்ணுக்கும் உரியதாக ஆக்கப்பட்டதைக் காட்டுகின்றது.
சிலப்பதிகாரக் காட்சிக் காதை- தொல்காப்பிய புறத்திணையியலின் சிறிய வடிவம் எனக் கொள்ளத்தக்கது என்கிறார் மேற்சுட்டிய ஆய்வாளர். ~~செங்குட்டுவன் தன் நாட்டைந்த பத்தினிக் கடவுளுக்குச் சிலையெடுக்க நினைந்து இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையில் நீர்ப்படை செய்தல் சிறந்தது எனக் கூறுகின்றான். மலையரசன் மாபெரும் பத்தினிக் கடவுளுக்குக் கல் தாரான் எனின், அவனோடு மலைவேன் என்று வஞ்சினம் கூறுகின்றான். செங்குட்டுவன் வடதிசை நோக்கிப் போர் மேலெழுவதற்காக வஞ்சினம் உரைப்பது போலவமைந்துள்ளது இப்பகுதி. தான் வஞ்சி சூடி வாளமர் செய்யும் வஞ்சி வேந்தன் :போலவும், மலையரசன் (இமயமலை) காஞ்சி வேந்தன் போலவும் குறிக்கப்பெறுகின்றனர். சேரன் கூறும் வீரவுரை முழுவதும் ~ஒரு சிறிய புறத்திணையியல்| போலவே அமைகின்றது. என்ற கருத்து சிலப்பதிகாரம் தொல்காப்பிய புறநெறிகளின்படி போர்த்திறத்தைக் காட்டியுள்ளது என்பதைத் தெரிவிக்கின்றது.
மேற்சுட்டிய ஆய்வாளரின் கருத்துகள் சிலப்பதிகாரம் தொல்காப்பிய புற மரபுகளின் வழிப்பட்டது என்பதை உறுதி செய்கின்றன.
சிலப்பதிகாரப் புறத்திணைச் சார்புப் பகுதிகள்
சிலப்பதிகாரத்தில் புறத்திணையை ஒட்டிய மரபுகள் காதைகள் தோறும் அமைந்துள்ளன என்றாலும், கட்டுரையின் அளவு கருதி இங்கு ஒரு சில பகுதிகள் மட்டும் சுட்டிக்காட்டப்பெறுகின்றன. குறிப்பாக தொல்காப்பிய புறத்திணைகள் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பாங்கு இக்கட்டுரையில் தொட்டுக் காட்டப்பெறுகின்றது.
வெட்சி
வெட்சி புறத்திணைகளில் முதல் திணையாகும். இதன் திணை மற்றும் துறைகளை மிக்க வெளிப்படையாகவே வேட்டுவ வரியில் இளங்கோவடிகள் பாடியுள்ளார்.
கொற்றவை கோலம் புனைந்து வந்த பெண்மகளைக் கொற்றவையாகவே கருதி அவளுக்கு வேண்டுவன செய்யும் நடைமுறை வேட்டுவவரியில் விவரிக்கப்படுகின்றது. அப்போது கொற்றவை விரும்புவது வெட்சிப் போரும், கரந்தைப்போரும் என்றுக் குறிக்கிறார் இளங்கோவடிகள்
~~உட்கு உடைச் சீறூர் ஒருமகன் ஆநிரை கொள்ள உற்ற காலை
வெட்சி மலர்புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டும்போலும்
வெட்சி மலர்புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டின் வேற்றூர்க்
கட்சியுள் காரி கரிய குரல் இசைத்துக் காட்டும் போலும்
என்ற அடிகளில் வெட்சிப் போர் முறை விளக்கப்பெற்றுள்ளது. வெட்சிப் பூக்களைச் சூடி ஒரு ஆடவன் போருக்குச் செல்கின்றான். அவனுக்குத் துணையாகக் கொற்றவையும் (கொற்றவையாகிய நீயும்) செல்லுவாய். இதன் காரணமாக வெட்சிக்கு எதிரான ஊரில் அழிவு நேரப்போகின்றது என்பதைக் கரிக்குருவி அறிவிக்கக் கிளம்பிவிட்டது என்ற செய்தியும் புள்வாய்ப்பச் சொன்ன நிமித்தமாக வெளிப்படுத்தப்பெற்றுள்ளது.
அடுத்த பாடலில்
~~கள்விலையாட்டி மறுப்பப் பொறா மறவன் கைவில் ஏந்திப்
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும்போலும்
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகுங்காலைக்
கொள்ளும் கொடி எடுத்துக் கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் 
என்ற இந்தப் பாடலில் கொடி எடுத்துக்கொண்டு வெட்சிப்போருக்குப் புறப்பட்ட ஆண்மகனின் வீரத்திற்குத் துணையாகக் கொற்றவையும் போவாள் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது.
இச்செய்திகள் அப்படியே வெட்சி பற்றி தொல்காப்பிய நூற்பாவின் மறுவடிவமாக விளங்குகின்றன.
~~வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக்களவின்
ஆ தந்து ஓம்பல் வேற்று ஆகும்
வெட்சித் துறைகள் சிலவற்றையும் இளங்கோவடிகள் இதனுள் புகுத்தி உரைக்கின்றார். பாதீடு, கொடை ஆகிய துறைகளை அவர் பெரிதும் சிலப்பதிகாரத்தில் விளக்குகின்றார். கொண்டு வந்த ஆநிரைகளைப் போருக்கு உதவியவர்களுக்கு, ஊருக்கு உதவியர்களுக்கு மறவர்கள் அளிக்கின்றார்கள். அவர் அளித்தபட்டியல் நீண்டதாகும்.
இள மா எயிற்றி! இவை காண், நின் ஐயர்
தலைநாளை வேட்டத்துத் தந்த நல் ஆன் நிரைகள்
கொல்லன், துடியன், கொளை புணர் சீர் வல்ல
நல் யாழ்ப் பாணர்-தம் முன்றில் நிறைந்தன.
முருந்து ஏர் இள நகை! காணாய், நின் ஐயர்
கரந்தை அலறக் கவர்ந்த இன நிரைகள் 
கள் விலைஆட்டி, நல் வேய் தெரி கானவன்,
புள் வாய்ப்புச் சொன்ன கணி, முன்றில் நிறைந்தன.
கய மலர் உண் கண்ணாய்! காணாய், நின் ஐயர்,
அயல் ஊர் அலற, எறிந்த நல் ஆன் நிரைகள்
நயன் இல் மொழியின் நரை முது தாடி
எயினர், எயிற்றியர், முன்றில் நிறைந்தன .
என்பன கொடை பெற்றவர்களின் பட்டியல். இவ்வடிகளுக்குள் ஒரு நகைச்சுவையும் கலந்துள்ளது. கள் விற்பவள் போர் செல்ல இருந்த மறவனுக்குக் கள் தராமல் காலம் நீட்டித்தாள். அவன் கள்ளுண்ணாமலே போருக்குச் சென்றுவி;ட்டான். ஆனால் வெற்றி பெற்றதும் கள் தராத அம்மங்கைக்கும் ஆநிரைகளைத் தந்து அப்போர்வீரன் வெற்றிகண்டான். தராதவளுக்கும் கொடை அறித்த பெருந்தன்மையாளனாக அப்போர்வீரன் இளங்கோவடிகளால் காட்டப்பெற்றுள்ளான்.
இதன்பிறகு அவிப்பலி என்ற துறையும் எடுத்துரைக்கப்படுகின்றது. இவ்வாறு வெட்சியின் விளக்கம் வேட்டுவவரியில் இடம்பெற்றுள்ளது.
வஞ்சித்திணை, காஞ்சித்திணை வஞ்சித்திணையும் கர்ஞ்சித்திணையும் காட்சிக்காதையில் இளங்கோவடிகளால் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன. சேரன் வஞ்சினம் கூறிப் போருக்குச் செல்லும் செயலைக் குறிக்கும் பகுதியில் வஞ்சியை எடுத்தாள இளங்கோவடிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. அதனுடன் இணைந்துக் காஞ்சியும் இடம்பெற்று விடுகின்றது.
பொதியில் குன்றத்துக் கல் கால்கொண்டு, 
முது நீர்க் காவிரி முன் துறைப் படுத்தல், 
மறத் தகை நெடு வாள் எம் குடிப் பிறந்தோர்க்கு, 
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று
புன் மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை, 
முந்நூல் மார்பின், முத்தீச் செல்வத்து 
இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன் 
மடவதின் மாண்ட மா பெரும் பத்தினிக் 
கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின், 
வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை 
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும், 
முது குடிப் பிறந்த முதிராச் செல்வியை 
மதிமுடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும், 
தென் திசை என்- தன் வஞ்சியொடு வட திசை 
நின்று எதிர் ஊன்றிய நீள் பெருங் காஞ்சியும், 
நிலவுக் கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி 
அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த 
வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை 
மேம்பட மலைதலும், காண்குவல் ஈங்கு| என, 
~குடைநிலை வஞ்சியும், கொற்ற வஞ்சியும், 
நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும் 
வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும், 
பின்றாச் சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும், 
குன்றாச் சிறப்பின் கொற்றவள்ளையும், 
வட்கர் போகிய வான் பனந் தோட்டுடன், 
புட்கைச் சேனை பொலிய, சூட்டி
பூவா வஞ்சிப் பொன் நகர்ப் புறத்து, என், 
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும்| என-
என்ற இப்பகுதியில் சேரன் வஞ்சினம் கூறுகின்றார். வஞ்சினக்காஞ்சியாக இது அமைகின்றது. அவ்வஞ்சினத்தில் காஞ்சித் திணை செய்திகளும். வஞ்சித் திணை செய்திகளும் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன.
குடைநிலை வஞ்சி, கொற்ற வஞ்சி, நெடுமாறாயம், பெரு வஞ்சி,பெருஞ்சோற்று வஞ்சி, கொற்ற வள்ளை ஆகிய வஞ்சித் துறைகள் மேற்சுட்டிய பகுதியில் இடம்பெற்றனவாகும். வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என்ற பாடலடியின் வழியாக வஞ்சிப் பூவினை வாளுக்குச் சூடி சேரன் படையெடுத்த நிலை தொல்காப்பிய புறத்திணையியல் சார்ந்த்தாகும்.
இதற்கு முன்பே மூன்று காஞ்சித் துறைகள் இடம்பெற்றுள்ளன. கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சி என்ற தொல்காப்பியத் து:றை, கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை எனச் சிலப்பதிகாரத்தால் வழிமொழியப்பெற்றுள்ளது. முதுகுடிப்பிறந்த முதிராச் செல்வியை மதிமுடிக்களித்த மகட்பாற் காஞ்சி என்ற சிலப்பதிகாரம் காட்டும் காஞ்சித் துறை தொல்காப்பியம் குறிக்கும் ~முதுகுடி மகட்பாடஞ்சிய மகட்பாலானும்| என்ற துறையாகக் கொள்ளத்தக்கது. தென்றிசை என்றன் வஞ்சியொடு வடதிசை நின்றெதிரூன்றிய நீள் பெருங்காஞ்சி என்ற சிலப்பதிகாரத்துக் காஞ்சித் துறை, மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை| என்றத் தொல்காப்பியத் :துறையாகக் கொள்ளத்தக்கது.
தும்பைத்திணை
சேரனின் போர்திறம் தும்பைத் திணையுடன் சிலப்பதிகாரத்தில் விளக்கம் பெறுகின்றது.
நும்போல் வேந்தர் நும்மொடு இகலி
கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயல்கொடி
பகைப்புறத்துத் தந்தனர் ஆயினும் ஆங்கு அவை
திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன
கொங்கணர் கலிங்கர் கொடும் கருநாடர்
பங்களர், கங்கர், பல்வேல் கட்டியர்
வட ஆரியரோடு வண்தமழ் மயக்கத்து உன்
கடமலை வேட்டம் என் கண்புலம் பிரியாது
கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எம் கோமகளை ஆட்டிய அந்நாள்
ஆரிய மன்னர் ஈர் ஐந்நூற்றுவர்க்கு
ஒரு நீ ஆகிய செருவேம் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கண் கூற்றம்
என்ற இப்பகுதி சேரன் மற்ற மன்னர்களுடன் நேருக்கு நேர் மோதிய ஆற்றலைத் தெரிவிக்கின்றது. இது ~மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்றுதலை அழிக்குஞ் சிற்ப்பிற்றென்ப என்ற தொல்காப்பியத் தும்பை வரையறையின் சார்பினது ஆகும். மேலும் போர்த்தானைகளைச் சிறப்பிப்பது தானை நிலை எனப்படும். அத்தானைநிலையை
மேலும் கனக விசயருடன் சேரன் போர் புரிந்த ஆற்றலை,
~~எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்n;தாகை
ஒரு பகல் எல்லையில் உண்ணும் என்பது
ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய
நூழில் ஆட்டிய சூழ்கழல்வேந்தன்
போந்தொடு தொடுத்த பரவத்தும்பை
ஓங்கு இரும் சென்னி மேம்பட மலைய|
என்ற பாடலடிகளில் தும்பையைச் சேரன் அணிந்த நிலை எடுத்துரைக்கப்பெற்றுள்ளது. வடபுலத்து அரசர்களை வெற்றி கொள்ளும் நிலையிலும் தமிழ் போர்மரபு பின்பற்றப்பெற்றிருப்பதை இவ்வடிகள் எடுத்துரைக்கின்றன.
வாகைத்திணை
போரில் சேரன் வெற்றி பெறுகின்றான். அவனின் தேருக்குப் பின்னாலும், முன்னாலும் மகிழ்ந்து வீரர்கள் ஆடிவருகின்றனர். இவ்வாட்டம் வாகைத்திணையின் வயப்பட்டதாகும்.
~~…..பேர்இசை
முன் தேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி
பின்தேர்க்குரவைப் போய் ஆடு பறந்தலை
முடித்தலை அடுப்பில் பிடர்த்தலைத் தாழி
தொழத்தோள் துடுப்பின் துழைஇய ஊன்சோறு
மறப்பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட
சிறப்பு ஊண் கடிஇனம் செங்கோல் கொற்றத்து
அறக்களம் செய்தான் ஊழி வாழ்க
என்ற பாடலடிகளில் வென்ற கோமான் முன்தேர்க்குரவையும், ஒன்றிய மரபிற் பின்தேர்க்குரவையும் அரும்பகை தாங்கும் ஆற்றலும் ஆகிய தொல்காப்பியத் துறைகள் சிலப்பதிகாரத்தால் ஏற்கப்பெற்றன என்பதைக் காட்டுகின்றன.
பாடாண் திணை
சிலப்பதிகாரத்தில் சேரனைப் போற்றும் மாடலனின் பாடலடிகள் பாடாண் திணை வயப்பட்டனவாக உள்ளன.
~~…நின் 
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் 
இளவரசு பெறாஅர் ஏவல் கேளார்
வளநாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின்
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து அவர்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்
பழையன காக்கும் குழைபயில் நெடும்கோட்டு
வேம்பு முதல் தடிந்த ஏந்து வாழ் வலத்து
போந்தைக் கண்ணிப் பொறைய
என்ற பகுதி சேரனின் பெருமையைப் பேசும் பாடாண்திணைப்பகுதியாகும்.
இவ்வாறு அரசர் போர்ப்பகுதியை விளக்கும் வஞ்சிக்காண்டம் தொல்காப்பியப் புறத்திணைச்சாயலுடன் ஒட்டிப்படைக்கப்பெற்றுள்ளது என்பது உறுதியாகின்றது.
வஞ்சிக்காண்டத்தின் காதைகளின் பெயரமைவு என்பது தொல்காப்யிர் சுட்டும் கரந்தைத்திணை சார்ந்த துறைகளை ஒட்டியே இளங்கோவடிகள் அமைத்திருப்பது அவரின் தொல்காப்பிய நெறி பின்பற்றலுக்குச் சான்றாகின்றது. காட்சி, கால்கோள், நீர்ப்படை நடுகல், வாழ்த்தல் என்ற அதே அமைப்பில் கண்ணகிக்குச் சிலை காணும் போக்கை இளங்கோவடிகள் அமைத்துள்ளார்.
~மதுரை மூதூர் மாநகர் கோடுஉற 
கொதிஅழல் சீற்றம் கொங்கையின் விளைத்து
நல்நாடு அணைந்து நளிர்சினை வேங்கை
பொன்அணி புதுநிழல் பொருந்திய நங்கையை 
அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி,
சிறப்புடைக் கம்பியர் தம்மொடும் சென்று
மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள்
பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து
இமையவர் உறையும் இமையச் செல்வரைச் 
சிமைய சென்னித் தெய்வம் பரசிக்
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றுஇழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து. காப்புக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாள்தோறும் வகுத்து
கடவுள் மங்கலம் செய்க என ஏவினான்
வடதிசை வணங்கிய மன்னவர் ஏறுஎன்
என்ற இந்தப் பாடலடிகளில் கண்ணகிக்குக் கடவுள் மங்கலம் செய்யப்படும் திறம் நடுகல் நாட்டி வணங்கும் திறமாக உள்ளது. தொல்காப்பியத்தில் ஆணுக்குச் சொல்லப்படும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி ஒரு பெண்ணிற்கு செய்யப்பெற்றதாக இளங்கோவடிகள் படைத்துக்காட்டுவது என்பது மரபு மீறல்அல்ல… புறத்திணை பெண்களுக்கும் உரியது என்ற எண்ணம்தான்.
நன்றி வல்லமை இதழ்

கருத்துகள் இல்லை: