ஞாயிறு, ஜூலை 23, 2017

திருமுருகாற்றுப்படையின் அமைப்பு


Siragu tamil2
தமிழ் நிலை பெற்ற மதுரையில் மூன்றாம் சங்கமான கடைச் சங்கம் அமைந்திருந்தது. இச்சங்கத்தில் புலவர்கள் பலர் இருந்துத் தமிழ் வளர்த்தனர். இக்கடைச் சங்ககாலத்து நூல்களுள் தற்போது கிடைத்திருப்பவை எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும். இவற்றைச் சங்க இலக்கியங்கள் என்கிறோம். இந்தச் சங்க நூல்கள் செம்மொழிக் கால நூல்கள் ஆகும். செம்மொழிப் பண்புடைய நூல்கள் ஆகும். செம்மொழி வயப்பட்டதான இந்தப் பதினெட்டு நூல்களில் திருமுருகாற்றுப்படையும் ஒன்று.
பத்துப்பாட்டு நூல்களில் முதன்மையானதாகவும், இறைவணக்கப் பாடலாகவும் அமைந்திருப்பது திருமுருகாற்றுப்படையாகும். குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் ஆவார். எட்டுத்தொகை நூல்களான குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றில் முருகன் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. முருகனை தெய்வமாக வணங்கி அவனுக்கு வெறியாட்டு என்னும் வணக்கம் செய்யும் முறை சங்க காலத்தில் இருந்துள்ளது. பரிபாடல் என்னும் எட்டுத்தொகை நூலில் செவ்வேள் பற்றிப் பாடப் பெற்ற எட்டுப் பாடல்கள் கிடைத்துள்ளன. இந்த எட்டுப் பாடல்களில் முருகனின் பிறப்பு, அவனின் வெற்றிச் சிறப்பு போன்ற பல செய்திகள் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனை வழிபடும் வழிபாடு மெல்ல வளர்ந்து வந்துள்ளதை இந்த வளர்ச்சி எடுத்துக்காட்டுகின்றது.
பரிபாடலில் முருகனின் இருப்பிடங்களுள் தலைசிறந்ததாகத் திருப்பரங்குன்றம் கருதப்படுகிறது. பரிபாடல் வையை, மதுரை போன்ற மதுரையைச் சுற்றியுள்ள செய்திகளை மட்டுமே பரிபாடல் கொண்டிருப்பதால் மதுரைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றம் முதன்மைப்படுத்தப்படுகிறது.
திருப்பரங்குன்ற மலையின்மீது முருகன் கோயில் கொண்டு இருந்ததாகவும், இம்மலைத் தேவர்கள் வந்து வணங்கும் மலையாக இருந்ததாகவும் அதனால் தேவர்கள் உறைவதாகக் கருதப்பட்ட மேருமலையை இது ஒத்திருந்ததாகவும் பரிபாடலில் செய்திகள் காட்டப்படுகின்றன.
முப்புரம் எரித்த கடவுளான சிவபெருமானும் உமையம்மையும் கலந்த கலப்பினாலே தோன்றிய வலிமை மிக்கக் கருவை இந்திரன் சிதைத்தான். இந்திரன் சிதைத்த இந்தக் கருவானது ஏழு பாகங்களாக ஆனது. இதனை முனிவர்கள் வேள்வித்தீயில் இட்டு அதன் வழியாக அவிஉணவைப் பெற்றனர். கார்த்திகைப் பெண்கள் அறுவர் இந்த அவிஉணவினை உண்டனர். இதன் காரணமாக அவர்கள் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். இந்த ஆறு குழந்தைகளும் சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் விளையாடின என்று பரிபாடல், முருகனின் பிறப்பு பற்றிய செய்திகளை எடுத்துரைக்கின்றது.
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ்சுனைப்
பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்
பெரும் பெயர் முருக
என்ற இந்தப் பகுதியின் வாயிலாக சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் முருகன் வளர்ந்தான் என்பது தெரியவருகிறது.
இவ்வகையில் முருகன் பற்றிய பல குறிப்புகளைப் பரிபாடலில் காணமுடிகின்றது. இவ்வாறு வளர்ந்த முருக வழிபாடு பத்துப்பாட்டுக் காலத்தில் பெருவளர்ச்சி பெற்றிருந்திருக்கிறது.
மதுரை கணக்காயர் மகனராக விளங்கிய நக்கீரர் திருமுருகாற்றுப்படை என்ற தனித்த வகை ஆற்றுப்படை நூலைப் படைத்தார். இது முருகனைப் புகழ்வதாகவும், அவன் இருப்பிடங்களைச் சுட்டுவதாகவும் அமைந்துள்ளது. நக்கீரர் மதுரையைச் சார்ந்தவர் என்பதால் திருப்பரங்குன்றத்தை முதலாவதாக வைத்து ஆறுபடை வீடுகளை முருகனுக்கு உரிய தலங்களாகக் காட்டி நிற்கின்றார். ஆற்றுப்படை என்பதே மெல்ல மாறி ஆறு படை வீடுகளாக மாறியிருக்க வேண்டும்.
Siragu thirumurugatrupadai2
மதுரைக் கடைச் சங்கத்தில், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர், மதுரை நகரின் அருகில் உள்ள திருப்பரங்குன்றத்து முருகனைப் பாடியிருப்பதன் வாயிலாக இதன் கடைச் சங்ககால படைப்புச் சூழல் தெளிவாகின்றது. மேலும் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு போன்ற தொகுப்புகளில் நக்கீரரின் பல பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பத்துப்பாட்டில் மற்றொன்றான நெடுநல்வாடை என்பதும் இவர் பாடியதே என்பாரும் உண்டு, இல்லை என்பாரும் உண்டு.
குறுந்தொகையில் நக்கீரர் பாடியுள்ள நூற்று ஐந்தாம் எண்ணுடைய பாடல் திருமுருகாற்றுப்படையில் காட்டப்பெற்றுள்ள வெறியாடலுடன் தொடர்புடையதாக உள்ளது.
வேலன் வெறியாடலுக்குப் பல பொருள்களைச் சேகரிக்கிறான். அதில் ஒன்று புதிய இளம் திணைக் கதிர்கள் ஆகும். இக்கதிர்களில் சிலவற்றை வெறியாடிய பின் வேலன் வெளியாடிய களத்திலேயே விட்டுச் சென்றுவிடுகிறான். அந்த இளம் திணைக் கதிர்களை ஒரு மயில் தின்றுவிடுகிறது. இதனால் அம்மயில் வெறி கொண்டு ஆடியது. அது கூத்தாடும் ஆடுமகள் போல ஆடியதாம். இந்த ஆடல் பயத்தைத் தருவதாக இருந்தது. இத்தகைய நிகழ்வை உடைய மலைநாட்டின் தலைவனின் நட்பை எண்ணுகையில் கண்களில் நீர் தளும்புகின்றது என்ற பொருள்பட அப்பாடல் பாடப் பெற்றுள்ளது. இப்பாடலில் வெறியாடல் என்ற முருகனை வழிபடும் சங்க கால வழிபாட்டுமுறை தொட்டுக் காட்டப்பெற்றுள்ளது. இவ்வகையில் எட்டுத்தொகைப் பாடல்களைப் பாடிய நக்கீரரும் திருமுருகாற்றுப்படை நக்கீரரும் ஒருவர் என முடியலாம்.
இந்நூலினை திருமுறைகளிலும் சமய உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதாவது பன்னிரு திருமுறைகளில் இது பதினோராவது திருமுறைத் தொகுப்பினுள் சேர்க்கப் பெற்றுள்ளது. சிவன் பற்றிய பாடல்களின் தொகுப்பில் முருகன் பற்றிய இப்பாடலும் இணைக்கப் பெற்றிருப்பது சிவனுக்கும் முருகனுக்கும் உள்ள குடும்ப உறவைக் காட்டுவதன் வழிப்பட்டது என்றே கொள்ள வேண்டும். இத்திருமுறையில் தொகுக்கப் பெற்றுள்ள திருமுருகாற்றுப்படையைப் பாடியவர் நக்கீரதேவ நாயனார் என்று ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படுகிறது. இத்தொகுப்பில் திருமுருகாற்றுப்படையுடன் கயிலை பாதி காளாத்தி பாதி, திருக்கண்ணப்பதேவர் திருமறம் போன்ற பத்துப்பனுவல்கள் தொகுப்பாகத் தரப்பட்டுள்ளன. திருமுருகாற்றுப்படை இப்பத்துப் பாடல்களில் இருந்துத் தனித்து விளங்குகின்றது. தனித்த நடை, தனித்த பொருள் நலம் கொண்டு திருமுருகாற்றுப்படை திகழ்கிறது. எனவே திருமுருகாற்றுப்படை என்பது பதினோரந்திருமுறை பாடப்பெற்ற காலத்தில் இருந்த நக்கீர தேவ நாயனாரால் எழுதப் பெற்றிருக்க முடியாது என்று முடியலாம்.
இருப்பினும் பக்தி இலக்கிய காலத்தில் சங்க இலக்கியச் சுவடிகளைப் பயிலுவதும், எழுதுவதும் ஆகிய செயல்கள் வலுவற்றிருந்திருக்க வேண்டும். அவற்றுள் இறைவனைப் பற்றிப்பேசும் திருமுருகாற்றுப்படை மட்டும் சங்ககால நூலாக இருந்தாலும் தனித்து நின்று சமய உலகத்தோடு கலந்து நின்று மக்களிடத்தில் வழிபாட்டு நூலாக வழங்கி வந்திருக்க வேண்டும். பக்தி இலக்கிய காலத்தில் திருமுருகாற்றுப்படையை மட்டும் சுவடிகளாக எழுதியும்,மனனமாக மக்கள் படித்தும் வந்திருக்க வேண்டும்.
இதன் காரணமாக திருமுறைகளைத் தொகுத்தோர் சங்க காலத்து நூலாகத் திருமுருகாற்றுப்படை இருந்தபோதும் அதனை விட்டுவிடாது பதினோராம் திருமுறையில் ஒன்றாக இணைத்திருக்க வேண்டும். வழிவழியாக திருமுருகாற்றுப்படை வழிபாட்டு முறையால் தமிழ்மக்களிடத்தில் இருந்து வந்துள்ளது என்பதைத்தான் இந்த நிகழ்வு காட்டுகின்றது. வேறு பிரதிகள் எதற்கும் கிடைக்காத பெருமை இவ்வகையில் திருமுருகாற்றுப்படைக்குக் கிடைத்து விடுகின்றது. அதாவது ஒரே நூல் இரு இடங்களில், இரு தொகுப்புக்களில் தொகுக்கப் பெற்றிருப்பதற்கான பெருமை அதுவாகும்.
திருமுருகாற்றுப்படையின் மொழி நடை, கருத்துநலம் போன்றன சங்க நூற்களின் சாயலைப் பெற்றிருப்பதை எண்ணிக் காணுகையில் இந்நூல் சங்க இலக்கிய கால நூல் என்பதில் ஐயமில்லை.
மலை நிலக் கடவுளாக இருந்த முருகன், கடல் சார்ந்த நிலப்பகுதியான திருச்செந்தூர் என்று இன்று அழைக்கப்படும் திருச்சீரலைவாயின் தலைவனாகவும் திருமுருகாற்றுப்படையில் ஏற்கப் பெற்றுள்ளான். நெய்தல் நிலமான கடலும் கடல் சார்ந்த இடத்திற்கு வருணன் திணைத் தெய்வமாக இருந்த நிலை மாறி முருகன் அங்கும் வணங்கப்பட்ட நிலை இதன்வழி தெரியவருகிறது. முருகன் குறிப்பிட்ட குறிஞ்சித் திணைக்கு மட்டும் உரிய தெய்வம் என்ற நிலையில் வளர்ந்துப் தமிழ் நிலத்தின் பொதுத்தெய்வமாக அவன் மாற்றம் பெற்றுள்ளான் என்பதை இச்சூழல் தெரிவிக்கின்றது. முருக வழிபாடு என்பது தமிழர்களின் வழிபாட்டு முறை, அதன் வழியாக தமிழ் மக்களை ஒருங்கு கூட்ட முடியும் என்பதும் இதன் வழியாகப் பெறக்கூடிய கருத்தாகும். இன்றைய சூழலில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் தனித் தெய்வமாக முருகன் வணங்கப்படுவதை எண்ணிக் காணுகையில் முருகன் தமிழர்களின் பொது நிலத் தெய்வம் என்பது தெளிவாகின்றது.
சதுக்கம், மன்றம், சந்தி, ஆற்றிடைக் குறை போன்ற பல இடங்களிலும் முருகன் இருக்கும் இடங்களாகத் திருமுருகாற்றுப்படையில் வணங்கப் பெற்றுள்ளதை எண்ணிப் பார்க்கையில் முருகன் தனிப் பெருந்தெய்வமாக பத்துப்பாட்டுக் காலத்தில் வளர்த்தெடுக்கப் பெற்றுள்ளான் என்பது தெளிவாகின்றது. முருகனை முழுமுதல் தெய்வமாகக் கருதிப் பாடப்பெற்ற நூல், முருக வழிபாட்டை முன்னிறுத்திய நூல் திருமுருகாற்றுப்படை ஆகும்.
ஆற்றுப்படை என்பது பெற்ற பெருவளம் பெறாதவர்க்கு அறிவுறுத்தும் போக்கினது ஸ்ரீ ஆகும். பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல விறலியை ஆற்றுப் படுத்தும் போக்கின. புறநானூற்றுப் பாடல்கள் பல புலவர்களை வள்ளல்களிடம் ஆற்றுப்படுத்தும் போக்கின. புறப்பகுதி சார்ந்த ஆற்றுப்படையானது, அகப்பொருள் நிலையில் வேலன் வெறியாடல் என்ற நிலையில் அதனோடு இணைந்து புறமும் அகமும் கலந்து தோன்றிய புதிய இலக்கிய வகையாக வடிவம் கொண்டுவிடுகின்றது.
நச்சினார்க்கினியர் வீடு பெறுதர்க்குச் சமைந்தானோர் இரவலனை வீடு பெற்றான் ஒருவன் முருகனிடத்தில் ஆற்றுப்படுத்துவது ஸ்ரீஸ்ரீ என்று திருமுருகாற்றுப்படையின் நோக்கத்தை எடுத்துரைக்கின்றார்.
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்ளைக் புலம் பிரிந்து உறையும்
செலவு நீ நயந்தனை ஆயின் பலவுடன்
நன்னர் நெஹ்சத்து இன்னசை வாய்ப்ப
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே
என்ற திருமுருகாற்றுப்படையின் அடிகள் ஆற்றுப்படுத்துவர் யார் ஆற்றுப்படுத்தப்படுபவர் யார், ஆற்றுப்படுத்தப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை எல்லாம் எடுத்துரைக்கின்றன.
சங்க காலச் சூழலில் பொருளைப் பெறுவதற்காக அரசர்களை, வள்ளல்களை நாடிச் செல்லும் புலவர்களின் நிலையில் இருந்து விலகித் திருமுருகாற்றுப்படை இறைவன் அருளைப் பெறுவதற்காக பாடப் பெற்றுள்ளது. வீடுபேறு என்ற கருத்துருவாக்கம் சங்ககாலச் சூழலில் முன்நிறுத்தப்படவில்லை. உரையாசிரியர் நச்சினார்க்கினியர் காலத்தில்தான் அது முன்னிறுத்தப் பெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவு. இருப்பினும் சங்க காலத்தில் முருகாற்றுப்படுத்துவதால் வளம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இவ்வகையில் முருகனை வணங்குதற்கு உரிய பனுவலாக திருமுருகாற்றுப்படை விளங்கியுள்ளது என்பது முற்றிலும் உண்மையானதாகும்.
திருமுருகாற்றுப்படையின் யாப்பு வடிவம் என்று காணுகையில் அது முந்நூற்றுப்பதினேழு அடிகளை உடையதாகும். இது ஆசிரியப்பா யாப்பினில் எழுதப் பெற்றுள்ளது. இந்த நெடும்பாடல் அமைப்பே பின்னாளில் காப்பியங்கள் ஆசிரியப்பாவில் இயற்றப்படுவதற்குக் காரணமாக இருந்தது. தமிழில் காப்பிய நடைமுறை வருவதற்கு இந்தப் பத்துப் பாட்டுக்களாகிய நெடும் பாடல்கள் உதவியுள்ளன என்பது கருதத்தக்கது ஆகும்.
இப்பாடலின் நிறைவில் சில முருகனைப் பற்றிய வழிபாட்டுப் பாடல்கள் வெண்பா யாப்பில் அமைக்கப்பெற்றுள்ளன. இவை பிற்சேர்க்கை என்பது தெளிவு. இருப்பினும் இவையும் கருத்துவளம் மிக்கவை.
நூற்பயன் கூறுவதாக திருமுருகாற்றுப்படையோடு தொடர்ந்து அமைந்துள்ள வழிபாட்டுப்பாடல் ஒன்று உள்ளது.
நக்கீரர் தாம்உரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல் நாடோறும் சாற்றினால் – முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான் நினைத்த எல்லாம் தரும் ( பாடல் எண் 10)
இப்பாடலில் திருமுருகாற்றுப்படை மக்களின் அன்றாட நடைமுறையான நாள் வழிபாட்டில் பாடத்தக்க நூலாக இருந்ததை அறியமுடிகிறது. இன்னமும் மக்கள் இன்னல்கள் தீருவதற்காகப் பாடப்படும் வழிபாட்டுப் பனுவலாக இதனைப் பாடிவருகின்றனர்.
இவ்வகையில் சங்க இலக்கியப் பகுப்பில் குறிக்கத்தக்க இடத்தை திருமுருகாற்றுப்படை மக்களிடத்தில் தொடர்ந்து பெற்று வந்துள்ளது என்பதை அறியமுடிகின்றது.
இதன் பொருள் அமைப்புமுறை பல்வேறு செய்திகளை உள்ளடக்கியதாக உள்ளது. முருகனின் பிறப்பு, முருகனின் பெருமை, சூரர மகளிர் இயல்பு, பேய்களின் துணங்கைக் கூத்து, திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை, முருகனை வழிபடுதல், முருகனை வாழ்த்தல் போன்ற செய்திகளை உள்ளடக்கியதாக இது உள்ளது.
முருகன் உயிர்கள் மகிழ உலகத்தினைச் சுற்றிவருதைப்போல அன்பர்கள் உள்ளத்தில் ஒளியுலா வருகின்றான். அதே நேரத்தில் அவனே மக்களின் கருத்திற்கு எட்டாதவனாய்த் தூரத்திலும் இருக்கின்றான்.
அவன் வீட்டின்பத்தை நல்கும் திருவடிகளையும் பெரிய கைகளையும் உடையவன். அவன் தெய்வயானைக்குக் கணவனாகியும் காட்சிதருகிறான். அவன் செங்கடம்ப மாலை அசையும் மார்பினை உடையவன். கோழிக் கொடி நெடுங்காலம் வாழ்வதாக என்று மலையிடம் எல்லாம் எதிரொலி செய்யும்படி பாடிடும் சூரரமகளிர் ஆட நின்ற சோலையினையுடையவன். அவன் சூரபன்மனைக் கொன்ற சுடர் வேலையும் உடையவன். பேய்கள் துணங்கைக் கூத்தாட மாமரத்தை வெட்டிய வெற்றியையுடையவன்.
நல்லபுகழையும் செவ்விய வேலையும் உடைய முருகப்பெருமானது சேவடியை நீ அடைய விரும்பினால் இப்பொழுதே நீ செல்வாய் நீ கருதிய வினையின் பயனைப் பெற்றிடுவாய் என்று முருகனிடத்தில் ஆற்றுப்படுத்துவதாக திருமுருகாற்றுப்படையில் முதல்ப் பகுதி அமைந்துச் சிறக்கின்றது.
அவ்விறைவனை எங்கு காணலாம் என்று நீ கேட்டால் அவ்விறைவன் இருக்கும் இடங்களை வரிசைப்பட உனக்குச் சொல்லுகிறேன். கேள்.
முருகன் திருப்பரங்குன்றம் என்ற இடத்தில் இருப்பான். அத்திருப்பரங்குன்றம் மதுரையின் அருகில் இருக்கின்றது. அந்த ஊருக்குச் செல்லும் நடைமுறையை நான் குறிப்பிடுகின்றேன். கேள்.
மதுரை பெரிய கோட்டையை உடைய ஊராகும். அக்கோட்டையின் வாயில் மிக்க காவலுடையதாக இருக்கும். வீரர்கள் ஒருபுறமும் காவல் காத்துக் கொண்டிருப்பர். எதிரிகள் ஒருபுறம் அடைக்கப்பட்டிருப்பர். கோட்டையில் வாயிலில் பல பந்துகள் தொங்கவிடப்பெற்றுள்ளன. அவற்றின் கூடவே பொம்மைகளும் தொங்குகின்றன. இவை கோட்டைவாயிலில் அடைக்கப்பட்டுள்ள, கயிறுகளால் கைகள், கால்கள் கட்டப்பட்டுள்ள எதிரிகளின் பொழுதுபோக்கிற்காக அவர்களின் பார்வைக்காகக் கட்டப்பட்டுள்ளனவாம்.
திருமகள் வீற்றிருக்கும் குற்றமற்ற அங்காடித்தெருக்கள், மாடங்கள் மிக்க ஏனைய தெருக்கள், இவைகளையுடைய மதுரையின் மேற்கு திசையில் திருப்பரங்குன்றம் அமைந்திருக்கிறது.
Siragu thirumurugatrupadai1
அத்திருப்பரங்குன்றம் கரிய சேற்றையுடைய அகன்ற வயல்களால் சூழப்பெற்ற ஊராகும். இவ்வயல்களில் பல பூக்கள் மலர்ந்திருக்கும். இந்தப் பூக்களில் வண்டுகள் மொய்த்துக்கிடக்கும். தாமரைப் பூக்களில் இரவில் உறங்கிய வண்டுகள் காலையில் கதிரவன் வந்தவுடன் தாமரை மலர்படுக்கையை விட்டு வெளியே வரும். வைகறைப் போதில் தேன் மணக்கும் நெய்தல் பூக்களில் அவை கிடக்கும். இத்தகைய வளமையையுடைய திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் வீற்றிருப்பான். நீ அங்கு சென்றால் அம்முருகனைக் கண்டு வேண்டியனவற்றைப் பெறலாம்.
முருகப் பெருமான் வீற்றிருக்கும் மற்றொரு இடம் திருச்சீரலைவாய் ஆகும். இங்குள்ள முருகப்பெருமானின் வாகனம் யானை ஆகும். அந்த யானை கோயிலின் முன்னிலையில் நெற்றியில் பொன்மாலையுடன் கூடிய பட்டத்துடன் அலங்காரமாய் அசைந்து கொண்டிருக்கும். அதன் உடலில் பல மணிகள் தொங்கிக் கொண்டு இருக்கும். அம்மணிகள் மாறி மாறி ஒலித்த வண்ணமாக இருக்கும். அது விரைந்த நடையினையும் கூற்றுவனை யொத்த வலிமையினையும் உடையது ஆகும். அது ஓடும்போது காற்று எழுந்தாற்போன்று விரைந்து செல்லும் தன்மையது. அதனில் முருகப் பெருமான் ஏறியபடி வருவான். நீ அவனைக் கண்டு கொள்ளலாம்.
முருகப் பெருமானது தலைகளில் உள்ள முடிகளில் மணிகள் மின்னல் போன்று ஒளிகளை உமிழ்ந்து கொண்டே இருக்கும். பொன்னாற் செய்த மகரக் குழைகள் திங்களைச் சூழ்ந்த விண்மீன்கள் போன்று முருகப் பெருமானின் காதுகளில் ஒளிவீசும்.
குற்றமற்ற தவத்தைச் செய்து முடித்தவருடைய தூய உள்ளத்தே பொதிந்து தோன்றுகின்ற ஒளியும் நிறமும் உடையனவாக முருகப் பெருமானின் திருமுகங்கள் அமைந்திருந்தன. அவனின் ஆறுமுகங்களும் ஆறு சிறப்பு மிக்க தொழிலைப் புரிந்து வந்தன. அத்தொழில்களை உனக்கு உரைக்கின்றேன் கேட்பாயாக.
இந்த உலகம் பேரிருளால் மறைக்கப்பட்டுள்ளது. அந்த இருள் அகலுமாறுப் பகலாகிய சுடர்களையும் தோன்றச் செய்தது ஒரு முகம்.
ஒருமுகம் தன்னை வணங்கும் அன்பர்களைப் பொருந்தி அவர்களுக்கு அவர்கள் வேண்டும் பொருள்களைத் தந்து நிற்கும்.
மற்றொரு முகம் மந்திரங்களை ஓதி முறைமாறாமல் வேள்விகளைச் செய்துவரும் சான்றோருடைய வேள்விகட்கு இடையூறு நேராதபடிக் காத்துநிற்கும்.
ஒரு முகம் நூல்களால் காட்டமுடியாமல் நிற்கும் மெய்ப் பொருள்களைத் தன் அன்பர்கள் காணும்படிக் காட்டித் திங்கள் போலத் திசை விளங்கும்.
மற்றொரு முகம் போர்க்களத்தில் வெகுளியோடு அசுரர் முதலியோரை அழித்து மறக்களவேள்வியைச் செய்த வெற்றியைக் காட்டி நிற்கும். மற்றொரு முகம் வள்ளியோடு மகிழ்தலைப் பொருந்தி நிற்கும். இவ்வாறு ஆறு முகங்களும் தன்னிகரற்று ஆறு நிலைகளில் சேவையாற்றிக் கொண்டே இருந்தன.
இவ்வறு முகங்களுக்கு ஏற்ப செயல் புரிவனவாக பன்னிரு கைகளும் விளங்கின. அப்பன்னிரு கைகளும் அகன்ற தோள்களின் அணிவகுப்பாக முருகனிடத்தில் விளங்கின.
முருகனின் தோள்கள் பரந்து காணப்பெற்றன. ஒளிமிகுந்த பொன்மாலை முருகனின் அழகிய மார்பிடத்துக் கிடந்தது. வேற்படையை எறிந்து பகைவர் உடலைப் பிளப்பனவாகவும், பிளந்தபின்னே மீண்டும் அதனை வாங்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றனவாகவும் முருகப் பெருமானின் தோள்கள் விளங்கின.
வீட்டுலகத்துச் செல்லும் முறைமையினையுடைய துறவிகளுக்குப் பாதுகாவலாக ஏந்தியது ஒரு கை. அதற்கு இணையாகிய மற்றொரு கை இடையில் வைக்கப்பட்டது.
ஒரு கை செய்ய நிறமுடைய ஆடை அணிந்த காலின் மேலே கிடந்தது. அதற்கு இணையாகிய மற்ற கை அங்குசத்தைச் செலுத்தியது.
ஏனை இரண்டு திருக்கைகளில் ஒன்று அழகிய பெரிய கேடயத்தை ஏந்தியது. மற்றொன்று வேற்படையும் வலமாகச் சுழற்றியது.
ஒரு கை முனிவர்களுக்கு எஞ்சிய பொருளை ஏமுற நாடி உணர்த்துமாறு மார்போடு விளங்கியது. அதற்கு இணைந்த கை மார்பின் மாலையோடு சேர்ந்து அழகு பெற்றது.
ஒரு கை களவேள்விக்கு முத்திரை காட்டியது. அதன் இணையான கை இனிய ஓசையுடைய மணியை ஒலித்து தன் மங்கல வரவினை உலகிற்குக் காட்டியது.
ஒரு கை உலகில் மிக்க மழையைப் பெய்யச்செய்தது. அதற்கிணையான மற்ற கை தெய்வமகளிர்க்கு மண மாலை சூட்டியது.
இவ்வாறு முருகப் பெருமானின் பன்னிரண்டு திருக்கரங்களும் ஆறு திருமுகங்களும் அருமையான தொழில்களைச் செய்து மக்களைக் காத்து வந்தன.
தேவ துந்துபி முழங்கவும், கொம்புகள் மிக்கொலிக்கவும் வெள்ளிய சங்குகள் முழங்கவும், முரசு முழங்கவும் முருகன் இத்திருச்சீரலைவாயில் வீற்றிருந்தான்.
திருவாவினன்குடி என்பது முருகன் இருக்கும் மற்றொரு இடமாகும். திருவாவினன்குடி தவம் செய்வோர் நிறைந்திருக்கும் இடமாகும். அங்கும் முருகன் மிக்க அருளுடன் விளங்குகின்றான்.
முனிவர்களின் உடலும் உள்ளமும் அருள் நிரம்பியது. அவர்கள் காவியாடையாகிய மரவுரியை உடுத்தவர்கள். வலம்புரிச் சங்கையொத்த அழகிய நரைமுடியை உடையவர்கள். அழுக்கின்றி விளங்கும் திருமேனியை உடையவர்கள். கரிய மானின் தோலைப் போர்த்தியவர்கள். வயிற்றைச் சுருக்கும் நோன்புகள் பல இருந்துத் தசை அழிந்துபோன மார்பில் எலும்பின் கோர்வை நின்றிருப்பது போன்றதான உடலை அவர்கள் பெற்றிருப்பர். அவர்கள் பலநாட்கள் ஒருங்கே உண்ணாமல் கிடந்து இடையே உண்ணும் பழக்கத்தினை உடையவர்கள். கற்றோராலும் அறியப்படாத அறிவினையுடையவர்கள். கற்றோர்க்குத் தாம் எல்லையாகிய தலைமையுடையவர்கள். சினத்தையும் போக்கிய அறிவினையுடையவர்கள். தவத்தினால் உண்டான உடல் வருத்தம் அவர்களிடத்தில் இருந்தது. மனத்தால் சிறிதும் வருத்தம் இல்லாத இயல்பினை உடையவர்கள் அவர்கள். ஒருவருடனும் வெறுப்பில்லாத நல்லறிவினையுடையவருமாகிய முனிவர்கள் பலர் அம்மலையிடத்து முருகனை வணங்க முற்படச் சென்றனர். அத்தகைய பெருமை வாய்ந்த மலை ஆவினன் குடி மலையாகும். இம்மலையே முருகன் வீற்றிருக்கும் இடமாகும்.
அம்மலையில் காந்தருவர்களும் வந்துத் தங்கி முருகப் பெருமானை வணங்கிச் செல்லுவர். காந்தருவர் என்பவர்கள் நுண்ணிய ஆடையை அணிந்திருப்பர். அவர்கள் மாலை சூழ்ந்த மார்பினைப் பெற்றிருப்பர். யாழ் கொண்டு இசை வாசிக்க வல்லவர்களாகவும் அவர்கள் இருப்பர். இக்காந்தருவர்கள் எக்காலமும் இனிய மென்மொழியே பேசும் இயல்பினர் ஆவர். இவர்களும் அம்மலை இறைவனைத் தொழுதனர். இவர்களுடன் காந்தருவ மகளிரும் வருகை தந்து முருகனது அருளைப் பெற்றுத் திரும்பினர்.
முனிவர்கள், காந்தருவரகள் இவர்கள் மட்டும் இல்லாமல் மற்ற தேவர்களும் ஆவினன் குடி மலைக்கு அவ்வப்போது வருகை புரிவர்.
கொடிய வலிமையுடைய பாம்புகள் அழியும் படியான வீரத்தை உடைய கருடனை வாகனமாகக் கொண்ட திருமால் அம்மலைக்கு வருகைபுரிந்தார். வெள்ளிய காளையுடைய வெற்றிக்கொடியாக வலப்பக்கத்தில் உயர்த்தியவனும், பலராமனும் புகழ்கின்ற திண்ணிய தோளையுடையவனும், இறைவியை ஒரு பாகத்தில் பொருந்தி விளங்கும் திருமேனியை உடையவனும், முப்புரத்தை எரித்தவனும் மாறுபாடு மிக்கவனும் ஆகிய உருத்திரன் அம்மலையில் வந்து இவ்விறைவனைக் கண்டார். ஆயிரம் கண்களைப் பெற்றவனான, நூறு வேள்விகளை இயற்றிச் சிறந்தவனாகவும் விளங்குகின்ற, நான்கு ஏந்திய கொம்புகளையும், நெடிய துதிக்கையினையும் உடைய புகழ் பெற்ற யானையின் பிடரிடத்தே ஏறிய திருமகள் நோக்கமிக்க இந்திரன் அம்மலைக்கு எழுந்தருளினான்.
இந்நிலையில் முருகன் தனிப் பெருந்தெய்வமாக தேவர்களும், கடவுளர்களும், காந்தர்வர்களும் வந்து வணங்கும் பெருந்தெய்வமாக திருமுருகாற்றுப்படையில் உயர்த்தப்பட்டுள்ளான் திணைத்தெய்வங்களான இந்திரன், திருமால் போன்றோரும் வணக்கத்தக்க பெருமை கொண்டவனாக முருகனைத் திருமுருகாற்றுப்படை காட்டியிருப்பது அவன் திணைகளின் பொது தெய்வமாக ஏற்கப் பெற்றிருக்கிறான் என்பதை உணர்த்துவதற்கே ஆகும்.
திருமால், உருத்திரன், இந்திரன் என்ற மூன்று கடவுளரும் தத்தம் தொழிலைவிட்டு வேறு காரணம் கருதி அம்மலைக்கு ஒருங்கே வந்தனர். நான்கு திருமுகங்களை உடைய பிரம்மனை விடுவிக்கக் கருதி அவர்கள் வருகை புரிந்தனர்.
இவர்களுடன் மற்ற தேவர்களும், தமது குறையை முருகப்பெருமானிடத்தில் கூறி அதன் காரணமாக நன்மை பெறவும் அவர்கள் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
குற்றமற்ற கற்பினையுடைய தெய்வயானையுடன் திரு ஆவினன் குடி என்னும் ஊரில் முருகன் இருத்தலும் உரியன். ஆதலால் அங்கு சென்றாலும் அப்பெருமானைக் காணலாம்.
இப்போது இத்தலம் சித்தன் வாழ்வென்றும், பழனி என்றும் வழங்கப்படுகின்றது. பண்டைக்காலத்தில் இது பொதினி என்னும் பெயருடைத்தாய் ஆவி என்னும் வேளிர்தலைவனுக்கு உரியதாயிருந்தது.
முருகன் வீற்றிருக்கும் அடுத்த தலம் திருவேரகம் ஆகும். இங்கு அவன் தியானநிலையில் காட்சி தருகிறான். அந்தணர்கள் இங்கு முருகனை வழிபாடு செய்தனர்.
அந்தணர்கள் நாற்பத்தெட்டு ஆண்டாகிய நல்ல இளமைக்காலம் முழுவதும், பிரமசரியம் காத்த பேராண்மையாளர்கள். அவர்கள் அறங்கூறும் கோட்பாடு உடையவர்கள். நாற்சதுரம், முச்சதுரம், வில்வடிவம் என்னும் மூன்று வடிவம் கொண்ட ஆகவனீயம், தட்சணாக்கினி, காருகபத்தியம் என்னும் மூன்று தீ வகைகளை உண்டாகி அதனைக் காத்து வருபவர்கள் அந்தணர்கள் ஆவர். அவர்கள் மிக்க செல்வத்தையும் இரு பிறப்பினையும் உடையவர்கள்.
அந்தணர் தாங்கள் வழிபடுவதற்குரிய காலம் அறிந்து புலராத ஆடையையும் அணிந்து கொண்டு தலைமேலே குவித்த கையினராய் முருகனை வணங்க வந்தனர். முருகனின் ஆறெழுத்து மந்திரத்தை நா தழும்பு ஏறும் அளவிற்கு ஓதி மணமிக்க மலர்களைத் தூவி அந்தணர்கள் முருகனை வாழ்த்துவர். இத்தகைய திருவேரகம் என்னும் ஊரிலே அவன் இருப்பதற்கும் உரியவன் ஆவான்.
திருவேரகம் என்னும் ஊரினை மலைநாட்டு அகத்தொரு திருப்பதிஸ்ரீ என்கிறார் நச்சினார்க்கினியர். அருணகிரிநாதர் சோழநாட்டிலுள்ள சுவாமிமலை என்னும் தலமே திருவேரகம் என்று கொள்ளுவார். இத்தலத்தில் முருகன் வீற்றிருந்த சிறப்பைப் பெருமையுடன் எடுத்துக் காட்டுகிறது திருமுருகாற்றுப்படை.
இத்தலங்கள் மட்டும் அல்லாமல் முருகன் மலைகள் தோறும் இருப்பவன். அவனை வழிபாடு செய்தலுக்கு உரியவன் வேலன் ஆவான்.
அவ்வேலன் பச்சிலைக் கொடியால் நறுமணமுள்ள காயை இடையே இட்டுத் தக்கோல காயையும் கலந்து தன்மேல் காட்டிக் கொண்டு முருகனின் அருள் பெற்று ஆடக்கூடியவன் ஆவான். அவ்வேலன் மல்லிகையுடன் வெண்டாளியையும் கட்டிய கண்ணியை உடையவன். அவன் சந்தனத்தைப் பூசிய மார்பினை உடையவன். அவன் குறவர்கள் மூங்கில் குழாயில் தேனைப்பெய்து முற்றச் செய்த கள்ளை மலை நிலத்துச் சிறிய ஊரில் உள்ள தம் சுற்றத்தாரோடு உண்டு மகிழ்ந்து பறையை முழங்கி அதன் தாளத்திற்கு இயைய ஆடுபவன். அவன் மீது இத்தெய்வம் ஏறி நின்று ஆடும் இயல்பினது ஆகும்.
வேலனுடன் மலை நிலத்தில் உள்ள மகளிரும் முருகனை வணங்குகின்றனர். இம்மகளிர் சுனையில் பூத்த மலரால் புனையப்பட்ட வண்டுகள் மொய்க்கும் மாலையைச் சூடியவர்கள் ஆவர். நறிய பூங்கொத்துகளையும் மராமரத்து மலர்க்கொத்துகளை இடையேயிட்டுத் தொடுக்கப்பட்ட தழையை ஆடையாக உடுத்தியவர்கள். அவர்கள் மயிலைப் போன்ற சாயலையுடையவர்கள்.
இவ்வாறு வேலனும் மகளிரும் வணங்கும் நிலத்தில் முருகப் பெருமான் வந்து தோன்றி அருளுவான். எனவே நீ அங்குச் சென்றும் முருகனைக் காண இயலும்.
இவ்விடம் தவிர முருகன் பழமுதிர்சோலையிடத்தும் அமர்ந்திருப்பான். பழமுதிர்சோலையில் இருந்து அருவியானது ஓடிவருகின்றது. அது சந்தன மரங்களைச் சுமந்து வருகின்றது. அகில் கட்டைகளை ஏந்தி வருகின்றது. மு்ங்கிலின் மலர்பறித்து அதனை அடியோடு சாய்த்து வருகின்றது.
பலாச்சுளைகள் நிரம்பி வர அது வருகின்றது. குரங்குகளும், யானைகளும் நடுங்கும்படி வருகின்றது.
மேலும் அது வாழைகளை, தேங்காய்களைத் தள்ளிய வண்ணம் வந்து கொண்டிருந்தது. மிளகுக் கொடிகளையும் சுமந்து வந்தது.
கரடிகள் மறைந்து கொள்ளும். கோழிகள் விலகும். ஆண்பன்றி பெண்பன்றியோடு பயந்து ஓடும். இப்படியாக அது காட்டினில் பயணத்தை தொடர்ந்து செய்து கொண்டிருந்தது. இவ்வாறு பாயும் பெருமையுடைய நிலத்திலும் இருக்கத் தக்கவன் முருகன்.
அருள் வேண்டி வந்தவனே உனக்கு முருகன் இருக்கும் இடங்களை இதுவரைச் சொல்லி வந்தேன். நலமுடன் நீ கேட்டுவந்தாய். இனி நான் முருகனின் பெருமைகள் சிலவற்றைக் கூறுகிறேன்… கேள்.
அவன் பிறப்பு பற்றி முதலில் நான் கூறுகின்றேன். கேள். அவன் மலைமகள் மகன். ஆலமரத்தடியில் வீற்றிருக்கும் கடவுளின் செல்வன். இமயமலையில் உள்ள நீல நிறத்துப் பசுமைச் சுனையில் ஐந்து பெரும் பூதங்களான நிலம், நீர், காற்று, வான், தீ என்ற ஐந்தினுள் ஒன்றாகிய தீக்கடவுள் தீப்பொறிகளை கொண்டு வந்து தர ஆறுபெண்கள் முருகப் பெருமானை வளர்த்தார்கள். அவ்வகையில் வளர்ந்தவன் முருகன்.
அவனின் பெருமைகள் பலப்பல.
வானோர் வணங்கு வில்தானைத் தலைவ
மாலை மார்ப நூல் அறிபுலவ
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல் கெழு தடக்கை சால் பெருஞ்செல்வ
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண் பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பலர் புகழ் நன்மொழிப்புலவர் ஏறே
அரும் பெறல் மரபின் பெரும்பெயர் முருக
நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபேர் ஆள
என்று முருகனின் பெருமைகளை நக்கீரர் அடுக்கி உரைக்கின்றார்.
இன்னும் அவன் பெருமைகளாக
புறச்சமயத்தார்க்கு அரியேறு போன்றவன்
வீட்டின்பத்தை வேண்டியவர்க்கு அதை அளிப்பவன்
துன்பப்பட்டு வந்தவர்க்கு அருளுபவன்
பேரணிகள் அணிந்த பெம்மான்
இரந்து வந்தவர்க்கு வேண்டுவன தந்து காப்பவன்
தேவரும் அந்தணரும் துதிக்கத் தக்கவன்
மதவலி என்னும் பெயரை உடையவன்
சூரனை அழித்தவன்
பூதங்கள் போற்றத் தக்கவன்
என்றவாறு முருகன் பல்வேறு பெருமைகளை உடையவனாக நக்கீரரால் ஏற்றிப் போற்றப் பெற்றுள்ளான். இந்தப் பெருமைகளை நீ சொல்லி வேண்டினால் உனக்கு வீடுபேறு கிடைக்கும். அவனை வணங்கும் முறையையும் உனக்கு நான் அறிவிக்கின்றேன்.
முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்திக்
கை தொழுஉப் பரவிக் கால் உற வணங்கி
என்ற முறையில் நீ முருகனை வணங்குவாயாக.
முதல் அவனை அன்போடு நோக்கு. அதன் பின் கைகள் தொழட்டும். அதன்பின் முருகனின் கால்களில் பொருத்தமுடன் வணங்கி விழுந்துஎழுக. இதுவே முருகனை வணங்கும் முறையாகும்.
நீ உன் கவலைகளை நினைத்துக் கலங்காதே. அவன் உன் வரவினை அறிந்து உனக்கு வேண்டியனவற்றை அருளுவான்.
அன்புடை நன்மொழி அளைஇ விளிவு இன்று
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒரு நீ ஆகித் தோன்ற விழுமிய
பெறல் அரும் பரிசில் நல்குமதி
உனக்கு வேண்டிய பரிசில்களை உனக்கு முருகன் நல்குவான், கவலைப்படாதே என்று அருள் வேண்டி வந்த ஒருவனுக்கு அருள் கிடைக்கும் என்று முருகனருள் பெற்றவன் ஆற்றுப்படுத்தும் போக்கில் திருமுருகாற்றுப்படை அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை: