ஞாயிறு, ஜனவரி 09, 2022

சாம்பவான் என்ற நன்னம்பிக்கை முனை

 

Siragu Kambar 1

மானுடம் வென்ற கதை கம்பராமாயணம் ஆகும். அரக்கர்களை அழிக்க இராமன் என்னும் மானிடன் நடப்பன, பறப்பன, ஊர்வன இவற்றோடு மனிதர்களையும் இணைத்துச் செயல்பட்ட கதை இராமகாதை ஆகும். ”அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்பதே இக்கதையின் கதைக்கருவாம். பாவம் பெருகி வருத்தும்போதெல்லாம் அறம் பெருவலிமையுடன் எழுந்து நின்று பாவத்தை வேரொடு அறுக்கும். இந்த நம்பிக்கையை மனித உள்ளத்திற்குள் கால காலமாக விதைத்துவரும் காப்பியம் இராமாயணம்.

வால்மீகியின் வழியில் கம்பன் காப்பியக் கோட்டையாக இராமகாதையை வடிவமைத்துக்கொண்டான். இதனுள் தமிழ்மரபும், வடமொழிக் கதையும் ஒன்றுக்கொன்று வேறுபடாமலும் மாறுபடாமலும் கம்பனால் கையாளப்பெற்றுள்ளன. கம்பராமாயணம் என்னும் காப்பியக் கலவையைச் சுவைபடவும், பொருட்செறிவு படவும், பண்பாட்டு நெறிமுறைகள் படியும், சொல்வண்ணம், பாவண்ணம் போன்றன கொண்டுச் சுவை கூட்டும் படியும் கம்பன் படைத்துள்ளான்.

கம்பனின் படைப்புத் திறத்திற்கு இராமன் என்னும் தனிப்பாத்திரம் எவ்வளவு தகைமை உடையதோ அதே அளவு தகைமையைப் பிற பாத்திரங்களுக்கும் கம்பன் அளித்துள்ளான். எதிர், இணை, சிறு பாத்திரங்கள் என்று எல்லாப் பாத்திரங்களிலும் கம்பனின் கைவண்ணம் பெருந்தகைமையையும், பேராற்றலையும் கொண்டே எண்ணி எண்ணி நினைந்து நினைந்துப் படைக்கப்பெற்றுள்ளன.

கம்பனின் கவித்திறத்தில் பெரும் பாத்திரங்களும் மிளிர்கின்றன. சிறு பாத்திரங்களும் மிளிர்கின்றன. கரடி குலத் தலைவனான சாம்பவன், குரங்கு குலத் தலைவனான சுக்ரீவன், அரக்கர் குல அறத் தலைவனான வீடணன், பறவைகுலப் பிரதிநிதியான சடாயு போன்ற பாத்திரங்கள் மனித குலத் தலைவனான இராமனுக்குப் பெரிதும் உதவியுள்ளன. இராமன் எனும் உயரிய பாத்திரத்திற்கு உதவும் எப்பாத்திரங்களும் நல்லனவாகவும் வல்லனவாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. அவ்வகையில் இராமனுக்கு உதவிய கரடிகள் குலத் தலைவனான சாம்பன் எனப்படும் சாம்பவன் என்னும் பாத்திரத்தின் இயல்புகளை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

  “காவியத்தை வனப்புடைய ஒரு மாளிகைக்கு ஒப்பிட்டால், சிறுபாத்திரங்களை அம்மாளிகையிலுள்ள பலகணிகளுக்கு ஒப்பிடலாம். இச்சிறு பாத்திரங்களின் மூலந்தான் காவியத் தலைவனைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ளுகிறோம். இவர்கள்தாம் காவியத்தலைவனின் குண நலன்களைத் திறனாய்கின்றனர். மற்று, காவியத்தை மங்கையர் வீட்டு முற்றங்களில் தீட்டும் கோலத்திற்கு ஒப்பிட்டால், சிறு பாத்திரங்களை அக்கோலம் போடுவதற்கு இடப்படும் புள்ளிகளுக்கு ஒப்பிடலாம். புள்ளிகளால் கோலம் சிறப்பதுபோல சிறு பாத்திரங்களால் காவியம் வனப்புடையதாகிறது” என்று சிறுபாத்திரங்களின் இயல்புகளை ஆய்ந்துரைக்கிறார் ந. சுப்புரெட்டியார். (குமரிமலர் 1955) இவ்வழியில் இராமன் எனும் அலகில விளையாட்டுடையானின் அழகிற்கு ஒரு புள்ளியாக சாம்பவன் என்ற பாத்திரமும் விளங்குகின்றது.

இராமபிரானுக்குச் சற்று அயர்ச்சி வரும் போதெல்லாம் அவ்வயற்சியை நீக்கும் பாத்திரமாக விளங்குவது சாம்பவன் என்னும் பாத்திரம் ஆகும். இப்பாத்திரம் பிரம்மாவின் வடிவம் என்றே அறிமுகம் ஆகிறது. மகாவிஷ்ணு இராமனாக அவதாரம் எடுத்த நிலையில் பிரம்மா கரடிகளுக்கு அரசனாகத் தன்னை அவதாரப்படுத்திக் கொண்டு மண்ணில் பிறந்து இராமனுக்கு உழைத்துத் தன்கடன் தீர்க்கிறது.

‘‘என்னை ஆளுடைய ஐயன், கலுழன் மீது எழுந்து போய

பின்னர், வானவரை நோக்கி, பிதாமகன் பேசுகின்றான்:

“முன்னரே எண்கின்வேந்தன் யான்”-என, முடுகினேன்; மற்று,

அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடுமின்’ என்றான். ”

                        (பாலகாண்டம், திருஅவதாரப் படலம் பா. 23)

மேற்பாடல் வழி, பிரம்மன் தான் ”எண்கின் வேந்தனாக” (கரடிகளின் தலைவனாக) இராமாயணத்தில் பங்குபெறுவேன் என்று திருஅவதாரப்படலத்திலேயே கம்பர் காட்டுகிறார். பிரம்மன் பிறப்பின் இரகசியம் தெரிந்தவன். ஆகவே இராமன், இலக்குவன் ஆகியோர் கூட அயர்வு பெற்றிடும்போதும் அயராமால் மீண்டும் பிறப்பிக்கும் யோசனைகளைச் சொல்லித் தான் பிரம்மாவின் அவதாரம் என்பதை நிறுவிக் கொண்டே இருக்கிறான்.

இது மட்டும் இல்லாமல் கம்பரால் சாம்பன் என்றும், சாம்பவான் என்றும், எண்கின் வேந்தன் என்றும் சுட்டப்படும் இப்பாத்திரம் காப்பிய அறிமுகத்தின்போதும் காப்பிய நிறைவின்போதும் எண்கின் வேந்தன் என்றே சுட்டப்பெற்றுள்ளது. இப்பாத்திரத்தின் அறிமுகம் என்பது முன் சுட்டிய பாடலே ஆகும். அப்பாடலில் எண்கின் வேந்தன் என்றே பிரம்மதேவன் தன்னை அழைத்துக்கொள்கிறான்.

சாம்பவனுக்கு விடைதரும் நிறைவுப் பாடலிலும் எண்கின் வேந்தனாகவே கம்பன் விடை பெறவைக்கிறான்.

      ‘‘சந்திரற்கு உவமை சான்ற,  தாரகைக் குழுவை வென்ற

இந்திரற்கு ஏய்ந்ததாகும் என்னும் முத்தாரத்தோடு

கந்து அடு களிறு, வாசி,  தூசு, அணிகலன்கள் மற்றும்

உந்தினன், எண்கின், வேந்தற்கு  உலகம் முந்து உதவினானே.” (10519)

என்று இராமபிராமன் எண்கின் வேந்தனுக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கிறான். இந்திரனுக்கு உரிய முத்துமாலை போன்ற ஒன்றையும், யானைகள், அணிகலன்கள், பட்டாடைகள் போன்றவற்றையும் அளித்து இராமபிரான் எண்கின் வேந்தனுக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கிறான் . கரடி பரிசாக யானையைப் பெற்ற நிலை இதுதான்.

கரடிக்கு அரசனான சாம்பவன் அனுமனின் ஆற்றலை உணர்ந்து அவனை நம்பிக்கை கொள்ளச் செய்த பாத்திரம் ஆகும். அனுமனின் ஆற்றலை உணர்ந்து மருந்துமலை கொண்டு வரச் சொன்ன பாத்திரமும் அதுவே ஆகும். அனுமனுக்கு தரப்பெற்ற நம்பிக்கை உரைகள் இன்றைக்கும் துவண்டுபோன உயிர்களைத் தட்டி எழுப்பும் நம்பிக்கை உரைகளாக விளங்குகின்றன. இவ்வாறு நம்பிக்கை தரும் பாடல்களின் எண்ணிக்கை பதினொன்று ஆகும். இப்பதினொன்றும் படிக்கப் படிக்க அனுமன் புகழையும், துவண்ட ஒருவனுக்கு துடிப்பாக எழுந்து பணி செய்யும் உத்வேகத்தையும் ஒரு சேர வெளிப்படுத்துகின்றன. இப்பாடல்களில் அனுமன் என்ற பெயரோ அல்லது குறிப்போ இடம்பெறா நிலையில் இப்பாடல்களை துவண்டு போன உயிர்களிடத்தில் சொன்னாலோ, அல்லது வாசிக்க வைத்தாலோ நன்னம்பிக்கை மேம்படும்.

‘மேரு கிரிக்கும் மீது உற  நிற்கும் பெரு மெய்யீர்;

மாரி துளிக்கும் தாரை  இடுக்கும் வர வல்லீர்;

பாரை எடுக்கும் நோன்மை  வலத்தீர்; பழி அற்றீர்;

சூரியனைச் சென்று ஒண் கை  அகத்தும் தொடவல்லீர். ‘ (4829)

என்று இயற்கையையும் தன் ஆளுகைக்குள் கொண்டுவரும் வல்லமை உடையவராக அனுமன் விளங்குவதை இப்பாடல் காட்டுகிறது. இது அனுமனுக்கு மட்டுமான தன்னம்பிகை உரை அல்ல, அனைவருக்குமான உரை. பழி அற்றவர்களுக்கான நன்னம்பிக்கை உரை.

‘நீதியின் நின்றீர்; வாய்மை  அமைந்தீர்; நினைவானும்

மாதர் நலம் பேணாது  வளர்ந்தீர்; மறை எல்லாம்

 ஓதி உணர்ந்தீர்; ஊழி கடந்தீர்; உலகு ஈனும்

ஆதி அயன் தானே என  யாதும் அறைகின்றீர். ‘(4832)

என்று நீதி வழி நின்றோரின் சிறப்பினை இப்பாடல் காட்டுகிறது. இதனுள் பிரம்மன் என்ற குறிப்பு உள்ளது. பிரம்மாவின் வடிவமான கரடி அரசன், பிரம்மாவே யாதும் என்று உரைக்கும் அனுமனைப் போற்றிப் புகழ்கிறது.

‘‘ஈண்டிய கொற்றத்து இந்திரன்  என்பான் முதல் யாரும்

பூண்டு நடக்கும் நல் நெறியானும்  பொறை யாலும்

பாண்டிதர் நீரே; பார்த்து இனிது  உய்க்கும்படி வல்லீர்;

வேண்டிய போதே வேண்டுவ  எய்தும் வினை வல்லீர். ” (4835)

என்று வேண்டியபோது வேண்டுவ எய்தும் வினை வல்லமை உடையவன் அனுமன் எனக் காட்டி அவ்வகையில் நிற்போர் அனைவரையும் தூண்டிச் சுடர் விளக்காய்ப் பிரகாசிக்க வைக்கிறார் சாம்பவன்.

      நிறைவாக அனுமனுக்கே உரிய கடமையைக் காட்டுகிறார் சாம்பவன்.

            ‘ஏகுமின்; ஏகி, எம் உயிர்  நல்கி, இசை கொள்ளீர்;

ஓகை கொணர்ந்து உம் மன்னையும்  உய்யும்படி செய்யீர்;

சாகரம் முற்றும தாவிடும்  நீர் இக்கடல் தாவும்

வேகம் அமைந்தீர் ‘என்று  விரிஞ்சன் மகன் விட்டான்.”(4836)

“‘இலங்கையை இடந்து வேரோடு  இவ் வயின் தருக “ என்றாலும்,

“விலங்கினர் தம்மை எல்லாம்  வேரொடும் விளிய நூறிப்

பொலங் குழை மயிலைக் கொண்டு  போது ‘‘ எனப் புகன்றிட்டாலும்,

கலங்கலிர்! உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது, காண்டிர். (4839)‘

என்ற பாடல்கள் அனுமன் செய்யவேண்டிய பணிகளைப் பட்டியலிட்டு, அவற்றைச் செய்ய முடுக்கிவிட்டு முடிக்கச் செய்வனவாக உள்ளன. இவ்வகையில் ஒரு சிறுஉயிரின் பெருமையை அதற்கு உணர்த்தி அதனை பெருஞ்செயல் செய்விக்க கம்ப வார்த்தைகளால் முடியும் என்பதைக் காட்டி நிற்கும் பாத்திரம் ஜாம்பவான் பாத்திரம். அதனாலேயே இப்பாத்திரம் சிரஞ்சீவியாக என்றும் வாழ்கிறது. மகாபாரதத்திலும் இதன் பணி கிருஷ்ணனுக்குத் தொடர்கிறது. இன்றும் வாழ்கிறது. இவ்வகையில் நம்பிக்கை உரை வழங்கி மானிட வெற்றிக்குத் துணை செய்து நிற்கும் சிறு பாத்திரம் சாம்பவன் ஆகும்.


கருத்துகள் இல்லை: