ஞாயிறு, ஜனவரி 09, 2022

குறிப்பறிதல்




siragu thirukkural2
மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம், பொருள், இன்பம் ஆகியன பற்றி அறிவுறுத்தும் தமிழ் நூல்களில் சிறப்பிடம் பெறும் நூல் திருக்குறள் ஆகும். திருக்குறளின் அறத்துப்பால் மனிதன் வாழத்தகுந்த அற வாழ்க்கை முறைகளைத் தொகுத்துரைக்கின்றது. மனிதனின் சமூகம் சார்ந்த உலகவாழ்வியலைக் கூறும் பகுதி பொருட்பால் ஆகும். அது நாடு, அரசு, அமைச்சு, படை, குடி, செல்வம், உணவு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. இதனுள் மனிதசமுதாயம் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறைகள் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன. காமத்துப்பாலில் தமிழர்தம் காதல் மரபுகளும், கற்பு மரபுகளும் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இவ்வகையில் மனிதனின் அகம், புறம் சார்ந்த வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் நடத்திக் கொள்ள ஏற்ற வழிகாட்டு நூலாக திருக்குறள் விளங்குகிறது. இந்நூலின் கருத்துகளைப் பின்பற்றி உலக மக்கள் வாழ்ந்து நன்மை பெற இயலும் என்பதால் திருக்குறளின் உலகப்பொதுமறை எனப்படுகிறது. இவ்வுலகப் பொதுமறையில் அரசியல் நடைமுறைகளுள் ஒன்றான குறிப்பறிதல் பற்றிய வரையறைகளை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

திருக்குறளில் குறிப்பறிதல் என்ற அதிகாரம் இருமுறை இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளது. பொருட்பாலில் அமைச்சியலிலும், காமத்துப்பாலில் குறிஞ்சித்திணையிலும் குறிப்பறிதல் என்ற தலைப்பில் இரு அதிகாரங்களில் கருத்துகள் வகுத்துத் தரப்பெற்றுள்ளன. பொருட்பாலில் எழுபத்தியிரண்டாவது அதிகாரத்தில் அமைந்த குறிப்பறிதல் என்னும் அதிகாரம், பிறர் உள்ளத்துள் எண்ணுவதை அவர் சொல்லாமலே, அவருடைய மனக் குறிப்பை அறியக் கூடிய, அறிந்து நடந்து கொள்ளக் கூடிய பண்புகளைக் காட்டும் கருத்துகளை உடையதாகப் படைக்கப்பெற்றுள்ளது.

மணப்பருவம் எய்திய கன்னிப் பெண்ணும் கட்டிளங் காளையும் காதல் வயப்படும் முன் ஒருவர் உள்ளக் குறிப்பை மற்றவர் அறிந்து கொள்ளவதே காமத்தப்பாலில் அமைந்த குறிப்பறிதல் ஆகும்.

இவ்வகையில் குறிப்பறிதல் என்பது மனிதனின் பொதுவாழ்விற்கும், மனிதனின் தனிப்பட்ட வாழ்விற்கும் உரியதாக விளங்குகிறது. இன்பம், துன்பம், பெருமிதம், பயம் போன்ற உள்ளத்துப் பண்புகள் அனைத்தும் அவர் அறியாமல் ஒருவர் அறிந்துகொள்ளத்தக்கப் பண்பு குறிப்பறிதலாகின்றது.

குறிப்பறியும் பண்பு உலக மக்கள் அனைவருக்கும் தேவை என்றாலும், சிறந்த ஆட்சி செய்ய மன்னனுக்கும், அவனைச் சார்ந்த அமைச்சர்களுக்கும் இப்பண்பு இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. ஒரு சமுதாயத்தின் மன்னனாகிய, தலைவன் மக்களின் குறிப்பு உணர்ந்து ஆட்சியை நடத்த வேண்டும் என்பதே குறிப்பறிதல் அதிகாரத்தின் அடிக்கருத்து ஆகும். பிறர் மனமறிந்து நடக்கும் உளவியல் நிலையையும் திருவள்ளுவர் தம் காலத்தில் தம் கருத்தால் உணர்ந்து அறிவுறுத்தியுள்ளார் என்பது திருவள்ளவரின் சீரிய அறிவினைக் காட்டுவதாக உள்ளது. மக்கள் மனதை அறியும் சிறந்த குறிப்பறியும் பண்பினைக் காட்டும் குறிப்பறிதல் அதிகாரத்தின் கருத்துகளின் தொகுப்பு இதன்பின் எடுத்துரைக்கப்பெறுகின்றன.

குறிப்பறியும் பண்பினைப் பெற்றோர் உலகிற்கே அணிகலன் போன்றவர். ஒருவரை இவர் இன்னார் என அறிவிப்பன கண்களே ஆகும். இக்கண்கள் வெறும் பார்வைக் கருவிகள் மட்டுமல்ல. அவை மற்றவரைப் பார்த்தவுடன் மதிப்பிடுவதால் அவை மதிப்பீட்டுக் கருவிகள் ஆகும். கருணை பொழிவதால், இரங்குவதால் , ஆனந்தக் கண்ணீர் சொறிவதால் அவை உணர்வும் அறிவும் சார்ந்த தலையாய உறுப்புகள் ஆகின்றன. கண்கள் கருவிகள் மட்டுமல்ல அவை கண்ணோட்டம் என்ற தகுதியைப் பெற்றன என்று கருதிய வள்ளுவர் கண்ணின் கண்ணோட்டத்திற்கென்றே தனித்த அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும். (575)

மற்றவர் துன்பம் கண்டு இரங்கும் நிலைப்பாடே கண்ணோட்டம் ஆகும். இக்கண்ணோட்டம் என்பது கண்ணிற்கான சிறந்த அணிகலன் ஆகும். காதுகளுக்கு, கழுத்திற்கு, மூக்கிற்கு அணியப்பெறும் அணிகலன்கள் அணிபவர்க்கு அழகைத் தருவனவாகும். ஆனால் கண்களுக்கு எவ்வித அணிகலன்களும் இதுவரை உலகில் அணிவிக்கப்பெறுவதில்லை. அவ்வாறு அணிவித்தால் அவ்வணி கண்களுக்குச் சுமையாகும். அவை காட்சிக்குத் தடையாகும். அவ்வணிகலன் நலனாகாது.

இருப்பினும் திருவள்ளுவர் கண்களுக்குச் சிறந்த அணிகலன் ஒன்றை அணிவித்து மகிழ்கிறார். மூக்கணி இல்லாமல் கூட கழுத்தணி இல்லாமல் கூ.ட இருந்துவிடலாம். ஆனால் கண்களுக்கு அணிகலன்களான கண்ணோட்டம் இல்லாமல் இருந்துவிடக் கூடாது என்று வள்ளுவர் கட்டளையிடுகிறார். இவ்வாறு அணிகலன் அணிய இயலாத நுண்ணிய உறுப்பான கண்களுக்கும் அணிகலன் அணிந்து மகிழ்கிறார் வள்ளுவர்.

கண்களுக்கான சிறந்த பண்பான கண்ணோட்டம் என்பது ஒருவரின் துன்பம் அறிந்து அவருக்காக கருணை செய்வதாகும். அதாவது ஒருவர் கண்ணில் நீர்வழிந்தால் அதைப் பார்ப்பவர் நெஞ்சில் உதிரம் சொட்டுவதாகும். வெளிப்பட தெரியாமல் ஒளிந்திருக்கும் ஒருவரின் உளக்கருத்தைச் சிற்சில குறிப்புகள் கொண்டு கண்கள் தெரிந்து கொள்ளுகின்ற நுண்தன்மை பெற்றனவாகும்.

அவ்வாறு ஒருவர் கருத்தை இன்னதென்று அவர் வெளிப்படுத்தாமலே அறிந்து கொள்ளும் நல்ல பண்பினைப் பெற்றவர்கள் உலகத்திற்கே அணிவிக்கப்பெறும் அணி போன்றவர்கள் என்று வள்ளுவர் உலகத்திற்கு அணிகலன் அணிந்து பார்க்கிறார்.

உலகம் எவ்வளவு பெரியது. அந்த உலகிற்கு ஒருவர் அணிகலன் அணிவிக்கிறார் என்றார் அவரின் பெருமை எத்தகையதாக இருக்க வேண்டும், அவரின் ஆளுமை எத்தகையதாக இருக்கவேண்டும். அந்த அளவிற்குப் பெருமை உடையவர் குறிப்பறியும் தன்மை பெற்றவர். அவரால் உலகம் அமைதியால் தழைக்கும். இன்பத்தில் திளைக்கும்.
கண்ணால் காணமுடியாத வெளிப்படையாக அறிவிக்கமுடியாத உளக்குறிப்புகளையும் சிற்சில குறிப்புகளால் அறிந்து அதனை உள்வாங்கி எவருக்கும் துன்பம் இல்லாமல் செயலாற்றும் கடமையே குறிப்பறிதல் என்ற கடமையாகும். இக்கடமை பெற்றோர் உலகிற்கே அணி போன்றவர் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

வள்ளுவர் அணிகளன்களுக்கான கடையையும் வைத்து நிர்வகித்துள்ளார். கண்களுக்குச் சிறந்த அணிகலன் கண்ணோட்டம். உலகிற்கு அணிகலம் போன்றோர் குறிப்பறிதல் என்ற பண்பினைப் பெற்றோர் என்று வள்ளுவரின் நகைக்கடை மனிதருக்கும், உலகிற்கும் உண்மையான அணிகலன்களை அளிப்பதாக உள்ளது.

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி. (701)
ஒன்றை வெளிப்படக் கூறாது இருந்தும் அதனைக் குறிப்பால் அறிய வல்லவன், எக்காலத்தும் வற்றாத நீர் சூழ்ந்த உலகுக்கு அணிகலன் போன்றவன் என்று வள்ளுவர் குறிப்பறிதல் பண்பினைப் பெற்றவரைச் சுட்டுகிறார்.

மேற்குறளில் இடம்பெற்றுள்ள ”வையக் கணி” என்ற தொடர் சுருக்கமுடையது. ஆனால் அகில உலகத்தையே உள்ளடக்கி நிற்பது. நகை என்றால் அழகும் நுண்மையும் உடையதாக இருக்கவேண்டும். வள்ளுவர் உலகிற்கு அழகான, நுண்மையான அணிகலனைத் தந்துள்ளார்.

குறிப்பறிவோர் கடவுள் ஆவார்
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். குறள் (702)

மற்றவர்கள் மனதில் இதுதான் உள்ளது என்று சிறு ஐயம் கூட இல்லாமல் கண்டறியத்தக்கவர் தெய்வத்துடன் ஒப்பு வைக்கத் தக்க பெருமையாளர் என்கிறது இக்குறள்.

ஐயத்திற்கு இடமில்லாமல் என்பது சிறிது சந்தேகம் கூட இல்லாமல் என்ற நிலைப்பாட்டை உடையதாகும். இவர் இப்படி நினைத்திருப்பாரோ, அப்படி நினைத்திருப்பாரோ என்று சந்தேகப்படாமல் இவர் இப்படித்தான் எண்ணுகிறார் என்று சொல்லும் திண்ணமான குறிப்பறியும் திறன் கடவுளுக்கானது என்கிறார் வள்ளுவர்.

கடவுளை மனித உள்ளத்தில் உள்ளதை அறியும் நிலை பெற்றவராக வள்ளுவர் கருதுவதால் அந்நிலை உடைய குறிப்பறிவாரையும் கடவுளாகவே கொள்கிறார். வள்ளுவர் கடவுள் என்வருக்கான இலக்கணமாக, அறியாத உள்ளத்து உணர்வுகளையும் அறிபவர் என்று காட்டுகிறார்.

கடவுள் என்பவர் மனிதர்களின் உள்ளத்தில் உள்ளதை ஐயம் இன்றி அறிந்து கருணை செய்பவர் ஆவார். இந்நி்லைப்பாடே கடவுளுக்கு உள்ள ஆனால் மனிதரால் பெற இயலாத பண்பு என்பதை உணரமுடிகின்றது. எனவே குறிப்பறிந்து வாழ்வது கடவுள் வாழ்க்கை ஆகின்றது.

குறிப்பறிய உதவும் கருவிகள்

உலகிற்கே அணிகலனாகவும், கடவுள் பண்பு பெற்றவராகவும் விளங்கும் குறிப்பறிதல் பண்புடையவர்கள்தம் நடைமுறை, அவர்களுக்கான கருவிகள் போன்றவற்றையும் இவ்வதிகாரத்தில் வள்ளுவர் காட்டியுள்ளார்.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். (706)

தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைத் தன்மையைக் காட்டும் கண்ணாடியைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அப்படியே அவனின் முகம் காட்டிவிடும். நெஞ்சம் மகிழ்வதை முகம் காட்டுகிறதைவிட நெஞ்சம் கடுத்ததை முகம் தெற்றென காட்டிவிடும்.

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். குறள் (707)
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின். ( 708)

உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை என்பதை இக்குறள்கள் காட்டுகின்றன. அகம் நோக்க எண்ணுபவர்கள் முகம் நோக்கி நின்றால் போதும்.

தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றால், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும். மனத்தில் இருக்கும் மகிழ்ச்சியையும் நிறைவையும், துன்பத்தையும், கவலையையும் தெளிவாக முகம் காட்டி விடும். எனவே முகமே மனித மனிதத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குகிறது. கண்ணாடி உணர்வை வெளிப்படுத்தாது. உருவத்தை மட்டுமே பிரதிபலிக்கும். ஆனால் முகம் அகத்தையும் புறத்தையும் காட்டும் சிறந்த கண்ணாடியாகும்.

குறிப்பறிதல் பண்பு தரும் பயன்கள்

கண்கள் போதும். பிறர்தம் உளக் கருத்துகளை அறிந்து கொள்வதற்கு. முகம் போதும் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்துவதற்கு. முகம் என்பது குறிப்பறியும் களமாகும். கண்கள் என்பன குறிப்பறிதலுக்கான கருவிகள் ஆகும். இவ்வாறு உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக முகமாக அதனைப் பெற்று அதற்கேற்ப இயங்கும் நி்லைப்பாடு உடையதாக கண்களும் விளங்குகின்றன. குறிப்பறிதல் பண்பினால் பற்பல நன்மைகளை உலகம் பெற்றுவருகிறது.
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண். (705)

என்று ஒருவன் குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் எந்த நன்மையும் இல்லை என்று விளக்கியுள்ளார். கண்களின் பயனே குறிப்பறிதல் பண்பு என்று வள்ளுவர் கருதுகிறார்.

சிறப்பு

கற்றவர்களே கண்ணுடையவர்கள் என்று அறியப்படுவர். கல்வி கற்றால்தான் கண்களுக்கு சிறப்பு என்று கல்வி அதிகாரத்திலும். பகைவர் வீசும் வேலினைக் கண்டு தம் கண்களை ஒரு நொடி மூடித் திறந்தாலும் அதுவே அவ்வீரரின் தோல்வியாகும் என்று படைச்செருக்கு அதிகாரத்தில் கண்களின் பெருமையை கூறிய வள்ளுவர் . குறிப்பறிதலில்
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். (709)
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற. (710)

என்று உள்ளத்தில் பகையையும் நட்பையும் வெறுப்பையும் விருப்பத்தையும் கண்ணே சொல்லிவிடும் என்றும், உள்ளக் கருத்தை நுட்பமாக அளந்தறியும் கருவியாகப் பயன்படுவது கண்ணே என்றும் தெளிவாக்குகிறார். கண்களால் பிறரின் நுண்ணுணர்வுகளையும் கண்டு கொள்ள இயலும், தன்னுடைய நுண்ணுணர்வைப் பிறர்க்கு உணர்த்தவும் இயலும் என்பதைத் திருவள்ளுவர் மேற்கண்ட இருகுறள்களின் வழியாக உணர்த்தியுள்ளார்.

வள்ளுவர் சொன்ன இக்கருத்துகள் இன்றைய உலகிலும் உண்மையாவதைப் பல நிகழ்ச்சிகள் உறுதி செய்கின்றன. அவ்வகையில் இன்றைய உலகச்செய்தி ஒன்றை வள்ளுவரின் கருத்துகளுடன் ஒப்பு நோக்கமுடிகின்றது.
”கனாயம் புதா” என்பவர் ஜப்பான் நாட்டுப் பெண்மணி ஆவார். இவருக்கு ஐம்பத்து ஐந்து வயதான நிலையில் அவரின் கைகால்கள் மற்றும் பேச்சுக் கருவிகள் போன்ற செயலிழந்துபோய்விட்டன. இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று நீண்டநாள் ஆசை. செயலற்ற நிலையில் அவரால் எப்படி நூல் எழுத இயலும். ஆனாலும் அவர் எழுதினார். அவர் ஓர் உதவியாளரை வைத்துக்கொண்டு கண் இமைகளை அசைத்து கண்சாடை மூலமாக இருநூற்று எண்பது பக்கங்களில் ஒரு புத்தகத்தை எழுதி முடித்தார். அதற்கு இரண்டு ஆண்டுகள் ஆயின .இந்நிகழ்ச்சி, கண்சாடைகள் வழியாக மொழியற்ற நிலையிலும் கருததுகளை வெளிப்படுத்த முடியும் என்னும் கண்களின் நுண்தன்மையை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

குறிப்பறிவாரின் துணையே சிறந்த துணை
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.(703)

ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எதனைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும் என்பது வள்ளுவரின் கருத்தாகும்.

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு. (704)

குறிப்பறியக் கூடியர்கள், குறிப்பறிய இயலாதவர்கள் ஆகிய இருதன்மையினரும், உறுப்புகளால் ஒற்றுமை பட்டவர்களாக இருக்கலாம். ஆனால் அறிவால் இவ்விரு தன்மையருக்கும் வேறுபாடுகள் உண்டு. குறிப்பறிவோர் அறிவில் சிறந்தவர்கள் ஆவர்.

இவ்வாறு வள்ளுவர் குறிப்பறியும் பண்பின் சிறப்பினையும், குறிப்பறிதலுக்கான கருவியையும், குறிப்பறிவாரால் ஏற்படும் நன்மைகளையும் ஒருசேரத் தொகுத்து குறிப்பறிதல் அதிகாரமாகத் தந்துள்ளார். தனிமனிதனின் புறவாழ்க்கை சார்ந்த இக்குறிப்பறிதல் பண்பு அன்பும், இரக்குமும், கருணையும் கொண்டு உலகை நிலைத்தவாழச் செய்தவற்கான சிறந்த பண்பாகும்.


கருத்துகள் இல்லை: