புதன், நவம்பர் 23, 2016

9. ஒரு பிடி அவல்






ஒவ்வொரு மனிதருக்கும் நட்பு என்பது அவசியமாகின்றது. நண்பர்கள் நல்ல துணையாக அமைபவர்கள். நண்பர்களைத் தேர்ந்து பழக வேண்டும்.

வள்ளுவர் நட்பாராய்தல் என்று ஓர் அதிகாரமே அமைத்துள்ளார். நல்ல நண்பர்கள்அமைந்து விட்டால் வாழ்க்கை வளமாகின்றது.

கண்ணனும் குசேலரும் நட்பின் இலக்கணத்திற்குச் சான்றாவார்கள். இவர்களின் நட்பின் திறத்தைப் பெரிதுபட விவரிக்கின்றது குசேலோ பாக்கியானம். இதனை எழுதியவர் தேவராசப்பிள்ளை ஆவார். இவர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணாக்கர். குசேலர் பற்றிய கதை என்பதே குசேலோ பாக்கியானம் என்பதாகும்.

குசேலர் வறுமையின் பிடியில் இருக்கிறார். அவரின் வறுமை போக வழியில்லை. எனவே குசேலரின் மனைவி சுசீலை ஒரு யோசனை செய்கிறாள். குசேலரை அவரின் நண்பரான கண்ணனைப் பார்த்து வரச் சொல்லுகிறாள். கண்ணனும் குசேலரும் இனிய நண்பர்கள். ஒன்றாக ஒரே ஆசிரியரிடத்தில் குருகுலத்தில் இருந்து கற்றவர்கள். கண்ணன் துவராகையின் மன்னனாக இருப்பதால் அவரைக் கண்டு வருவதால் தமது ஏழ்மை மறையும் என்று சுசீலை எண்ணினாள். ஆனால் தன் பிறவி தீர வேண்டும் என்பதற்காகக் குசேலர் கண்ணனைக் காண ஒத்துக் கொள்கிறார். தோழமையுடன் ஏழ்மை பேச அவர் விரும்பவில்லை.

சான்றோர்களை, தம்மிலும் பெரியவர்களைக் காணச் செல்கையில் ஏதேனும் கொண்டு செல்ல வேண்டும் என்பது மரபு. அது கருதி கண்ணனுக்கு எதனைக் கொண்டு செல்லலாம் என்று யோசிக்கிறார் குசேலர். ஏழ்மையிலும் சேமித்து வைத்திருந்த அரிசியை இடித்து அவலாக்கிப் பொருளாகத் தருகிறாள் சுசீலை. அதனைத் தன் கந்தையாடையின் ஒரு புறத்தில் கட்டிக் கொண்டுக் குசேலர் துவாரகையை நோக்கி நடக்கிறார்.

கண்ணன் தன் நண்பன் என்றாலும் அவன் கருணாமூர்த்தி. பிறவியை நீக்கும் பெருங்கடவுள் என்ற நிலையிலேயே துவாரகை மன்னனைக் காணச் செல்கிறார் குசேலர்.

துவராகை வெகுதூரமாக உள்ளது. அவரின் கால்கள் நடந்துச் சோர்வெய்துகின்றன. இரவுப் பொழுதில் தங்க இடம் கிடைக்காது சாலைகளிலேயேப் படுத்து உறங்குகிறார். கல்லும் முள்ளும் கால்களைப் பதம் பார்க்க, காதுகள் அடைக்க, பசி வயிற்றில் நீங்காதிருக்கக் குசேலரின் பயணம் துவாரகையைத் தொடுகிறது. துவராகையைக் கண்டதும் குசேலருக்குக் கண்ணனைக் கண்ட மகிழ்ச்சி. துவாரகை மண்ணில் பதமாக நடக்கிறார். ஒரு சிறு உயிருக்கும் துன்பம் தராத வகையில் பார்த்துப் பார்த்து நடக்கிறார்.

துவராகையின் பெரிய கோட்டைகளைக் கடக்கும் போது அவரின் உடல் சிறுமையடைகிறது. யானை, தேர்காவலாளி ஆகியோரைக் கண்டு ஒதுங்கிப் பதுங்கித் துவாரகைககுள் நுழைகிறார்.

அங்கு மாளிகைகள் வானுயர நிற்கின்றன. அவற்றில் கண்ணன் உருவம் அழகழகாக எழுதப் பெற்றுள்ளன. பல ஓவியங்கள் கண்ணன் நிற்பது போலவே உண்மைத் தன்மையுடன் தோன்றுகின்றன. அவ்வோவியங்களிடத்தில் குசேலர் நின்று கண்ணன் இவனே என்று வணங்குகிறார். மயங்குகிறார். ஒருவாறு தெளிந்துப் பின் துவாரகை அரண்மனைக்குச் சென்று துவாரபாலகர்களிடம் தன் வரவை அறிவிக்கிறார்.



அவர்கள் இவரின் வரவைக் கண்ணனிடம் அறிவிக்கின்றனர். கண்ணன் தன் இளமைக்கால நண்பர் குசேலரை உடனே அழைத்து வரக் கட்டளையிடுகிறான். உடன் அழைத்து வரவில்லை என்றால் தானே வந்து அழைத்து வருவதாகவும் கூறுகிறான். காவலர்கள் ஓடிச்சென்று குசேலரை வணக்கத்துடன் அழைத்து வருகின்றனர்.

தன் நண்பனை மார்பில் அணைத்து உச்சி மோந்து கண்ணன் வரவேற்கிறான். மேலும் அவனைப் பற்றியும் அவன் குடும்பம் பற்றியும் விசாரித்து அறிந்து கொள்கிறான். பின்பு உன் மனைவி உன் பயணத்திற்கு உணவாக ஏதேனும் கொடுத்து அனுப்பியிருப்பார். அதையாவது எனக்குக் கொடு என்று கேட்கிறான்.

குசேலர் பத்திரமாகப் பாதுகாத்து முடிந்து வைத்திருந்த அவலைக் கண்ணனுக்கு அளிக்கிறார். கண்ணன் அந்த அவலில் ஒரு பகுதியை அள்ளி எடுத்து ஒரு கைப்பிடி உண்கிறான்.

அடுத்த கைப்பிடி எடுக்கச் செல்லும் போது கண்ணனின் அருகில் இருந்த ருக்குமணி தேவி அவனின் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி விடுகிறாள். கண்ணனுக்கு அவளின் உள்குறிப்பு தெரிய வருகிறது. ஆனால் அருகிருப்பவர்களுக்கு எல்லாம் கண்ணனின் கையை ஏன் ருக்குமணி தேவி தடுக்கிறாள் என்பது புரியவில்லை. கணவன் ஆசையுடன் உண்பதைத் தடுப்பது நல்ல மனைவிக்கு அழகா என்று எல்லோரும் எண்ணுகிறார்கள். மனைவி செய்யும் உணவினை விட அந்த அவல் சுவை மிகுந்ததோ என்ற எண்ணத்தில் ருக்மணி தடுத்திருக்கலாமோ என்று இப்போது நாம் நினைக்கலாம். இந்த ஐயத்தை முன் வைத்து, படைப்பாளர் ஒரு அரிய இலக்கியச் சூழலைப் படைக்கிறார்.

நெய்யுடைக் கவளம் கொள்ளும் நெடுங்கடக் களிற்றின் கையைத்
தெய்ய வார்த்து ஓடிவந்தோர் சிறுபிடி பிடித்தல் போன்று
தைய நுண்ணிடைக்க லாபம் அடிச்சிலம்ப ஓடிப்
பொய்யிலான் கையைத் தேவி பொருக்கெனப் பிடித்த தோற்றம்


என்பது ஒரு பாடல். இது மற்றொரு பாடலுடன் இணைந்துக் கருத்து முடிவைப் பெறுகின்றது.

நெய்யொடு இணைந்து உண்பதற்குச் சுவையாக உள்ள அவலினை அடுத்த பிடி எடுத்து உண்ணத் தலைப்படுகிறான் கண்ணன். குசேலன் கொண்டு வந்தது அவல் மட்டுமே. அந்த அவலில் நெய் எவ்வாறு கலந்திருக்க இயலும்? குடிக்கக் கஞ்சியில்லா நிலையில் தன் வறுமை போக்க வெறும் அவலை மட்டுமே சுசீலையால் கொடுத்தனுப்பியிருக்க முடியும். நெய்யிருந்தால் அவள் வீடு சற்று வறுமையற்று இருந்தது என்று கொண்டு விடலாம். ஆனால் வறுமையின் கொடுமையால் வெற்றவல் மட்டுமே துவாரகைக்கு வந்தது. அங்கு குசேலர் என்ற நண்பனின் அன்பு கலந்ததால் நெய் கலந்தது போல அந்த அவல் இனிமை கொண்டு விளங்கியது.

ஒரு பிடியை எடுத்துக் கண்ணன் உண்கிறான். அடுத்த பிடியை எடுக்க அவன் முயன்று எடுத்தும் விடுகிறான். அந்நேரத்தில், அவன் வாய்க்குள் அவல் சென்று விடாமல் தடுக்கிறாள் ருக்மணிதேவி.

யானை ஒன்று தன் உணவை உட்கொள்ளும் நிலையில் துதிக்கையில் ஒரு கவளத்தை எடுத்து விடுகிறது. நிச்சயம் யானையின் துதிக்கைக்குக் கிடைத்த பண்டம் அதன் வாயிலிருந்து தப்ப இயலாது. ஆனால், ஆண் யானை போன்ற கண்ணனின் கையைப் பெண் யானை போன்ற ருக்மணிதேவி மேகலையும் சிலம்பும் கலங்கும்படி ஓடி வந்து, தடுத்து உண்ணவிடாமல் பிடித்து விடுகிறாள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதை இது.

இது தவறில்லையா. நண்பன் கொண்டு வந்த உணவை உண்பதற்கு மற்றொரு நண்பனுக்கு உரிமை இல்லையா? அல்லது அடுத்த பிடியைத் தனக்கு உண்ணத்தரக் கருதி ருக்மணி தடுத்தாளா என்றெல்லாம் இப்பாடலைச் சிந்திக்கலாம். இப்பாடலின் முடிச்சினை அடுத்த பாடல் அவிழ்க்கிறது.

தகதின்று பிடி அவற் கேசகம் கொள்ளாப் பெருஞ்செல்வம்
மிகத்துன்றும் அஃது அல்லாமல் ஒரு பிடி
நகத்தின்று விடுவானேல் நாள் பலவும் அன்னவர்க்கு
தொகத்துன்றும் அடிமையாய்ச் சொற்பணிகள் கடவானாய்
தான் அமர வேண்டும் எனும் தக்க கருத்து உள்ளமர...
செங்கை பிடித்துத் தடுத்தாள்


என்ற பாடல் இந்தச் சிக்கலைத் தீர்க்கிறது.


கண்ணன் ஒரு பிடி அவல் எடுத்து உண்டவுடனேயே குசேலர்க்குப் பற்பல செல்வங்கள் வந்து குவிந்து விட்டன. உலகமே கொள்ளாத அளவிற்கான பெருங்செல்வம் குசேலர் வீட்டில் ஒரு அவல் பிடியை உண்ணதற்கே வந்து சேர்ந்தது. மேலும் ஒரு பிடி அவல் எடுத்து உண்டால் காலம் காலமாகக் குசேலர் வீட்டில் கண்ணன் அடிமையாளாக இருந்துப் பணி செய்யும் அளவிற்குக் குசேலர் வீட்டிற்குச் செல்வம் சென்று சேர்ந்து விடும். எனவே தன் கணவன் நிலை தாழாமல் இருக்க நண்பனுக்குச் செய்த அன்பினைத் தடுக்க முனைந்தாள் ருக்மணிதேவி.

ஒருபிடி அவலை அன்போடு அளித்தவர்க்கு உலகம் கொள்ளாத அளவிற்குச் செல்வம் வந்து சேர்ந்து விடுகிறது. அன்பின் வலிமை அத்தகையது. எச்செயலையும் அன்புடன் செய்ய வேண்டும். கடைசிவரை குசேலர் தன் வறுமை தீர் என்று கண்ணனிடம் வேண்டுகோள் வைக்கவே இல்லை. கண்ணனும் உனக்கு நான் இன்னது அளித்தேன் என்று சொல்லவும் இல்லை. இதுவே நட்பின் பெருமை.
thanks to muthukamalam

கருத்துகள் இல்லை: