ஞாயிறு, அக்டோபர் 02, 2016

வ. சுப. மாணிக்கனாரின் வழியில் இலக்கியக் கலை

செம்மல் வ. சுப. மாணிக்கனாரின் நூற்றாண்டு விழா நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வள்ளுவத்தைத் தன் வாழ்நாளின் இலட்சிய நூலாகக் கொண்டு வாழ்ந்தவர் செம்மல் வ. சுப. மாணிக்கனார். அவரின் தமிழ்க்காதல் என்ற நூல் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் நூல். அவரின் கம்பர், ஒப்பியல் நோக்கு, சிந்தனைக் களங்கள் ஆகிய நூல்கள் சிறந்த ஆராய்ச்சிப் பனுவல்கள். அவரின் எந்தச் சிலம்பு, இலக்கிய விளக்கம் ஆகியன சிறந்த கட்டுரை நூல்கள். அவரின் திருக்குறள் தெளிவுரை தமிழுக்குக் கிடைத்த மாணிக்க உரையாகும். சங்க இலக்கியங்களில் தெளிவும், திருக்குறளில் ஆழமும், காப்பியங்களில் தோய்வும் கொண்டுத் தன் ஆய்வுப்பாதையை வடிவமைத்தவர் மூதறிஞர் வ. சுப. மாணிக்கனார். அழகப்பா கல்லூரியும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், மதுரைப் பல்கலைக்கழகமும் அவரின் ஆளுமையால் சிறந்தன. அவரின் நடை தனித்த பாங்கினது. அவர் கையாளும் சொற்கள் நேர்த்தியானவை. சொற்சுருக்கம் அவரிடத்தில் காணப்படும் தனித்த சிறப்பு. எடுத்துக்கொண்ட பொருள் பற்றிய தெளிவான பார்வை அவரிடத்தில் அமைந்திருக்கும். ஒரு பொருள் பற்றி முன்பு சிந்தித்தாலும் அதனை மீள் பார்வை பார்க்கும் நிலையில் மறுபடிச் சிந்திக்கும் போக்கும் அவருக்கே உரிய தனிச்சிறப்பு. இரட்டைக் காப்பியங்களாக சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் அவரால் ஏற்க முடிந்தது. “சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் அல்ல” என்று தன் கருத்தைத் தானே மறுக்கும் நேர்மை மிக்க ஆய்வாளர் செம்மல் வ. சுப. மாணிக்கனார். 

அவரின் இலக்கியக் கலை என்ற கட்டுரை ஒவ்வொரு இலக்கிய வாசகனும் படிக்கவேண்டிய கட்டுரை. இலக்கியக் கலை பற்றிய அவரின் கருத்து இதோ. “பல கலைகளுள் இலக்கியக்கலை சிறந்த பல கூறுகளை உடையது. இசைக்கலை உணர்ச்சியைத் தூய்மைப்படுத்தும். ஒவிய சிற்பக் கலைகள் உணர்ச்சியை ஒருமைப்படுத்தும். ஆனால் இசை முதலிய கலைகளுக்கு எண்ணத்தை விரிவுபடுத்தும் தன்மை இலக்கியக் கலைக்குப் போல இல்லை. இசைக்கலை குரல் சார்ந்தது. நாடகக் கலை மெய்சார்ந்தது. ஓவியம், சிற்பம் முதலான கலைகள் புறப்பொருள் சார்ந்தவை. இலக்கியக் கலை ஒன்றே மொழி சார்ந்தது. மொழி மனிதப் பிறப்புக்கு உரிய தனியுடைமை. எண்ணம் மொழித்துணையின்றி வளராது. எண்ண விரிவுக்கு மொழியும், மொழி விரிவுக்கு இலக்கியப் பயிற்சியும் வேண்டும்”(இலக்கிய இன்பம், ப. 50) என்று இலக்கியகலையின் ஏற்றத்தை எடுத்துரைக்கிறார் வ. சுப. மாணிக்கனார். இலக்கியக் கலை என்பது எண்ணங்களின் விரிவிற்கு உதவுவது. மொழியின் வளர்ச்சிக்கு உதவுவது. எனவே ஒரு மொழி வளரவேண்டுமானால் இலக்கிய வாசிப்பு என்பது அவசியமாகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.


இலக்கியத்திற்குக் குறிக்கோள் என்பது முக்கியமானது. குறிக்கோள் இல்லாத இலக்கியம் இலக்கியமாகாது. இலக்கியத்திற்கும் குறிக்கோளுக்கும் உள்ள தொடர்பைப் பின்வருமாறு வ. சுப. மாணிக்கானர் காட்டுகிறார். உலகில் எவ்வுயிரும் துன்பத்தை விரும்புவதில்லை. துன்பம் செய்யும் உயிரையும் விரும்புவதில்லை. சில குறிக்கோள்களுக்காக துன்ப வரவைத் தாங்கிக் கொள்பவர்களும் கூட அத்துன்பத்தால் குறிக்கோள் நிறைவெய்தும் இன்பத்தைக் காண்கிறார்கள். அதனால் குறிக்கோள் வழிப்பட்டத் துன்பம் இன்பமாக மாறுகிறது. குறிக்கோளால் துன்பம் வந்தாலும் அதன் நிறைநிலை இன்பம் என்று காட்டுகிறார் வ. சுப. மாணிக்கனார். 

இவ்விளக்கத்தைக் கம்பராமாயணப் பாடல் ஒன்றின் வழி மெய்ப்பிக்கிறார் வ. சுப. மாணிக்கனார். கம்பராமாயணத்தில் ஒரு துன்பக் காட்சி. சீதை அசோக வனத்தில் சோக உருவமாய்த் தவம் இருக்கிறாள். அவளைத் தேடி அனுமன் வருகிறான். வந்த அனுமன் அவளைப் பணிந்து தான் கொண்டுவந்த செய்திகளைத் தெரிவிக்கிறான். அடையாளப் பொருளை வழங்குகிறான். எல்லாவற்றையும் அறிந்து கொண்ட சீதை, தன்னிலையை அனுமனுக்குத் தெரிவிக்கிறாள். அவ்வகையில் ஒரு பாடல் அமைகிறது. 

“ஈண்டு நானிருந்து இன்னுயிர் மாயினும்
மீண்டு வந்து பிறந்துதன் மேனியைத்
தீண்டல் ஆவதோர் தீவினை தீர்வரம்
வேண்டினாள் தொழுதொன்று விளம்புவாய்” (சுந்தரகாண்டம் , சூளாமணிப் படலம்)

என்று சீதை இராமனிடம் ஒரு வரத்தைக் கேட்கச்சொல்லி அனுமனிடம் வேண்டுகிறாள். 

இப்பாடலின்வழி சீதைக்கு ஏற்பட்ட துன்பம் குறிக்கோள் நிறைவேறுதல் காரணமாக இன்ப முடிவைத் தந்து நிற்கும் என்பது உறுதி. நான் இலங்கையில் இருந்து மீட்கப்படாத நிலை வராது. அவ்வாறு வந்துவிட்டால், நான் மாண்டு போவேன். அவ்வாறு மாண்டு போன பின்பு, மீளவும் பிறப்பேன். பிறந்து இராமனை அடைவேன். அப்பிறவியில் இராமனை அடைந்து அவன் மேனியை நான் தொடுவேன். அந்நிலைக்கு என்னை ஆட்படுத்த இராமனிடம் ஒரு வரம் தரச் சொல் அனுமா என்பதே சீதையின் கூற்று. அடுத்தபிறவியில் சீதை இராமனதைத் தீண்டும் வரை அவள் சிறையில் இருந்த தீநிலை மாறாதாம். இராமனை மீளவும் தொட்ட பின்னரே இத்தீவினை தீரும். அது இந்தப் பிறவியிலா அல்லது அடுத்த பிறவியிலா என்பதுதான் சீதையின் கேள்வி. தன்னை அடுத்தப் பிறவிக்கு ஆயத்தப்படுத்திக் கொள்கிறாள் சீதை. இதன்வழி இப்பிறவியிலேயே இராமன் வந்துத் தன்னை மீட்பான் என்ற உறுதிப்பாடு அவளை இதுநாள் வரை உயிருடன் இருக்கச் செய்திருக்கிறது என்பதை உணர முடிகின்றது. 


சீதையின் இந்த நம்பிக்கை, துன்பச் சூழலில் அமைந்தாலும், வரப்போகிற இன்பத்திற்கு வரவேற்பு நல்குவதாக உள்ளது. இதுவே இலக்கிய வாழ்க்கை தரும் இன்பம். குறிக்கோளுக்காகத் துன்பப்பட்டாலும் அதன் நிறைநிலை இன்பமே என்று அமைவது இலக்கியம். இதுவே இலக்கியக் கலை ஆகின்றது. இதைப் போன்றே மற்றொரு குறிக்கோள் காட்சியையும் சிலப்பதிகாரத்தில் இருந்து காட்டுகிறார் செம்மல் வ. சுப. மாணிக்கனார். 

“கடுங்கதிர் வெம்மையிற் காதலன் தனக்கு
நடுங்குதுயர் எய்தி நாப்புலர வாடித் 
தன்துயர் காணத் தகைசால் பூங்கொடி
இன்றுணை மகளிர்க்கின்றி யமையாக்
கற்புக்கடம் பூண்டஇத் தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்” (சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை)

என்பது குறிக்கோள் சார்ந்த சிலப்பதிகாரப் பாடலடிகள் ஆகும். 

கண்ணகியும், கோவலனும் மதுரைக்கு நடந்து வருகின்றனர். அப்போது கடுமையான வெயில்நேரம். இவ்வெயிலில் தனக்குக் கால் சுடுகிறதே என்று அவள் கவலைப்படவில்லை. தன் கணவனுக்குக் கால் சுடுமே என்று கவலை கொள்கிறாள். தன் கணவன் நீர்த்தாகத்தால் அல்லல்படுகிறானே என்று அவள் கவலைப்பட்டாள். தன் துயர் காணாது, கணவன் துயர் கண்டு இரங்கிய தகைசால் பூங்கொடி அவள். கற்புடைய பெண்களுக்கு உரிய இயல்பு என்பது கணவனுக்கு ஏற்படும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்வமையும், தனக்கு வந்த துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதலும் ஆகிய பண்புகள் ஆகும். இதன் காரணமாகக் கண்ணகி துயர் பட்டாலும் அவள் கற்புக் குறிக்கோளை அடைந்த நிலையில் இன்பம் கண்டவளாகின்றாள். இவை போன்ற எண்ண விரிவுகளுக்கு இடம் அளிப்பது இலக்கியக் கலை ஆகும். இலக்கியக் கலை குறித்து மேலும் பல கருத்துகளைத் தெரிவிக்கிறார் வ. சுப. மாணிக்கனார். 


“வாழ்வு என்பது எண்ணத்தால் அமைவது. நல்லெண்ணத்தால் வளர்வது. அல்லெண்ணத்தால் வீழ்வது. எவ்வகை வாழ்வுக்கும் எண்ணங்களே மூலங்கள். எண்ண விரிவு செயல் விரிவாக வாழ்வு விரிவாக முகிழ்க்கின்றது... அமைதியான ஆற்றலான, ஒருமையான, எண்ண வளர்ச்சிக்குக் கலைகளே சிறந்த பற்றுக்கோடு. இயல், இசை, நாடகம், ஓவியம், சிற்பம் முதலான கலைகள் தீய எண்ணங்களைக் கலைக்கின்றன. அலைந்து திரியும் மனநிலைகளை ஒருமைப்படுத்துகின்றன. ஓடிப்பாயும் அளவிறந்த உணர்ச்சிகளை அளவு படுத்துகின்றன” என்று கலைகளின் இயல்பினைக் கூறுகிறார் வ. சுப.மாணிக்கனார். இவ்வகையில் மனித வளர்ச்சிக்கு உதவுவது எண்ண வளர்ச்சி. எண்ண வளர்ச்சிக்கு உதவுவது இலக்கியக் கலை. இலக்கியக் கலை வளர்ச்சிக்கு உதவுவது மொழி. இதன் மறுநிலையில் மொழியால் கலை வளர்கிறது. கலையால் மனித உள்ளம் வளருகிறது என்று தலைகீழ்ப்பாடமாகவும் இதனைக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: