புதன், ஆகஸ்ட் 16, 2017

காளமேகத்தின் அறிமுகம்





அறிமுகம் செய்வது என்பது பெரிய கலை. ஒருவரைப் பற்றி ஒருவரிடம் அறிமுகம் செய்யும்போது இருவரின் மனங்களும் கசங்கி விடாமல், நொருங்கி விடாமல் மென்மையான சொற்களால் மேன்மையாக அறிமுகம் செய்யவேண்டும்.

சுய அறிமுகம் செய்து கொள்வது என்பது இன்னும் கடினமாகது. எதிரில் நிற்பவரிடம் நம்மைப் பற்றி அதிகமாகவும் சொல்லிவிட முடியாது. குறைவாகவும் சொல்லமுடியாது. எதனை விடுவது, எதனைக் காட்டுவது என்ற குழப்பத்திற்கு ஆளாகி எதையும் சொல்லாமல் வெற்றாளாக நின்று விடுகிற நிலைகூட ஏற்பட்டிருக்கலாம்.

காளமேகப்புலவர் ஒரு பெருங்கவிஞர். இவரின் இயற்பெயர் வரதராசன் என்பதாகும். இவர் மேகம்போல கவிமழை பொழிவதால் காளமேகம் என்று சிறப்பிக்கப் பெற்றார். இவரின் இயற்பெயர் மறைந்து காளமேகம் என்ற சிறப்புப் பெயரே நிலைத்துவிட்டது. இலக்கிய வரலாறுகளிலும் ஆளுமை பெற்றுவிட்டது.

காளமேகத்திடம் அதிமதுரக் கவி என்ற கவிஞர் “யார் நீவீர்” என்று கேட்டார்.

அப்போது;

“ஐந்து நாழிகையில் தூதினைப் பாடுவேன்
ஆறு நாழிகையில் மாலை பாடுவேன்
ஏழு நாழிகையில் அந்தாதி பாடுவேன்
பத்து நாழிகையில் மடல் கோவை பாடுவேன்
ஒரு நாள் முழுவதும் இருந்து பரணி பாடுவேன்
காவியம் இரு நாள்களில் பாடி முடிப்பேன்”

என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் காளமேகம்.


எத்தனை பெரிய தன்னம்பிக்கை அவரிடம். அதெல்லாம் சரிதான். அதென்ன நாழிகைக் கணக்கு. இருபத்து நான்கு நிமிடங்கள் ஒரு நாழிகை ஆகும்.

ஏறக்குறைய இரண்டு மணி நேரத்தில் தூது இலக்கியம் பாடிடும் வல்லமை பெற்றவர் காளமேகம். அவருக்கு இரண்டரை மணி நேரம் மாலை இலக்கியம் பாடப் போதுமானது. உலா, அந்தாதி இலக்கிய வகைகளைப் பாட இரண்டே முக்கால் மணி நேரங்கள் போதுமானது. நான்கு மணி நேரத்தில் மடல், கோவை பாடும் வல்லமை பெற்றவர் காளமேகம். நாள் முழுவதும் பாடுவது பரணி. இரு தினங்களில் பாடுவது காவியம்

இந்தப் பட்டியலில் காளமேகத்தின் கவி வல்லமை தெரிகிறது. அதே நேரத்தில் எந்த இலக்கியப் படைப்பு எவ்வளவு நேரத்தில் எழுதப்பட இயலும் என்பதையும் அறிந்து கொள்ளமுடிகின்றது. தூது இலக்கியம் கண்ணி என்ற பாவகை சார்ந்தது. அது பாட எளிமையானது என்பது தெரியவருகிறது. மாலை இலக்கியம் தூதுக்கு அடுத்த நிலையில் பாடுவது எளிமையானது. உலா, அந்தாதி அடுத்த நிலையில் பாடவல்லது. அதவாது நூறு பாடல்கள் உடையது அந்தாதி. அந்தாதித் தொடையில் பாடப்படுவது. இதில் ஒரு பாடல் பாட ஒன்றரை நிமிடங்கள் போதுமானதாகக் காளமேகத்திற்கு இருந்துள்ளது. பரணி இலக்கியம் பாடுவது கடினமானது என்பதும், காவியம் பாடுவதும் கடினமானது என்பதும் இந்த வரிசையின்படி தெரியவருகிறது.

அதிமதுரகவியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னதாக இன்னொரு தனிப்பாடலும் கிடைக்கிறது.

“இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
அம்மென்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ - சும்மா
இருந்தால் இருந்தேன். எழுந்தேனே ஆயின்
பெருங்காளமேகம் பிள்ளாய்”

என்னும் பாடல் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் காளமேகம்.

இம் என்று சொல்லுமுன்னே எழுநூறு பாடல்கள் எண்ணூறு பாடல்கள் பாடும் ஆற்றல் பெற்றவன். அம் என்று சொன்னால் அந்தக் கால எல்லைக்குள் ஆயிரம் பாடல்கள் பாடி முடித்துவிடுவேன். சும்மா இருந்தால் இருப்பேன். பாடக் கிளம்பிவிட்டால் நீர் நிறைந்த காளமேகம் போலப் பொழிவேன் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் காளமேகக்கவி.

பாடல் பாடுவதே தன் வாழ்க்கை என்று வாழ்ந்திருக்கிறார் காளமேகக்கவி. கவிதைகள் படைக்காத நேரம், சும்மா இருக்கும் நேரம் என்றும் காளமேகம் குறித்திருப்பது அவரின் கவிதையாற்றலின் மேன்மையைக் காட்டுவதாக உள்ளது.

எமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்ற பாரதியின் வாக்குக்கு முன்னோடி காளமேகப் புலவர். இவரின் பாடல்களில் நேரடியாகப் பொருள்களைப் பெறுவதை விட மறைமகமாகவே பெற இயலும். இவரின் பாடல்களில் புதிர்கள் நிறைந்திருக்கும். இந்தப் புதிர்களுக்குள் வாழ்வின் உண்மைகள் ஒளிந்திருக்கும்.

இதோ அவரின் இனிய பாடல் ஒன்று;

“பண்புளருக்கு ஓர் பறவை. பாவத்திற்கு கோர் இலக்கம்
நண்பிலாரைக் கண்டக்கால் நாற்காலி - திண்புவியை
ஆள்வார் மதுரை அழகிய சொக்கர்க்கு அரவம்
நீள்வாகனம் நன்னிலம்”

என்பது அவரின் பாடலாகும்.

இந்த நான்கு அடிப்பாடலில் நான்கு செய்திகள் ஒளிந்து கிடக்கின்றன.

பண்புளருக்கு ஓர் பறவை என்ற அடியில் ஒளிந்திருப்பது ஈ என்ற பறவை. பண்புள்ளவர்களுக்கும் ஈக்கும் என்ன தொடர்பு. நல்ல பண்புகளைப் பெற்றவர்களுக்குப் பொருள்களைக் கொடுக்கவும். அதாவது ஈயவும் என்பதையே பண்புள்ளவர்களுக்கு ஓர் பறவை என்று புதிர் வைக்கிறார் காளமேகம்.

பாவத்திற்கு ஓர் இலக்கம். பாவத்திற்கும் இலக்கத்திற்கும் என்ன சம்பந்தம். இணைக்க முடியாதவற்றை இணைப்பவன் கவிஞன். இணைப்பது கவிதை. பாவத்திற்கும் எண்ணுக்கும் என்ன தொடர்பு. பழி, பாவத்திற்கு அஞ்சு. அதாவது பழி பாவம் செய்வதற்கு அஞ்சவேண்டும் என்பதைத்தான் பாவத்திற்கு ஒர் இலக்கம் என்று புதிராக்குகிறார் காளமேகம்.

அடுத்து நண்பிலாரைக் கண்டக்கால் நாற்காலி. போலி நட்புடையவர்களை நாற்காலியில் அமர வைக்கவேண்டுமா? ஐயையோ அது சரியா என்று எண்ணலாம். நாற்காலி என்றால் என்ன பொருள். இருகாலி மனிதன், பறவை. நாற்காலி யானை புலி போன்ற விலங்கு. நாற்காலி என்பதற்கு விலங்கு என்று பொருள் கொள்ளவேண்டும். இப்போது நண்பிலாரைக் கண்டக்கால் நாற்காலி என்பது புரியவரும். நண்பில்லாதவரைக் கண்டால் விலகி விடவேண்டும் என்பதே இந்தப் புதிர்.



அடுத்த அடி இன்னும் அதிக பொருள் வளம் கொண்டது. சொக்கர்க்கு அரவம் நீள் வாகனம் நன்னிலம் என்பது நிறைவடி. இதில் அரவம் என்றால் பாம்பு என்றுதானே பொருள் கொள்ளுவோம். இந்தப் பாடலுக்கு அரவம் என்பதைப் பணி என்று பொருள் கொள்ளவேண்டும். சொக்கருக்கு எது வாகனம். விடை என்ற காளை. பணிவிடை என்பதை அரவம், வாகனம் என்ற இரண்டு சொற்கள் வழியாகப் பெற்றுக்கொண்டோம். நன்னிலம் என்பது செய் நிலம் என்று இலக்கியங்களால் குறிக்கப்படும். பணவிடை செய் என்பதை அரவம், வாகனம், நன்னிலம் ஆகிய சொற்கள் கொண்டு வருவித்துக் கொள்கிறார் காளமேகம்.

காளமேகம் பாடல்களில் பூட்டும் இருக்கும். சாவிகளும் இருக்கும். பூட்டைச் சரியான சாவிகளால் திறந்து மறைந்து இருக்கும் பொருளை உணர்ந்து கொள்ளவேண்டும். இது படிப்பவருக்கு சாவால். படைப்பவரின் வெற்றி.

கருத்துகள் இல்லை: