ஞாயிறு, செப்டம்பர் 18, 2016

5. தமிழலங்காரம்





வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப் பெருமான் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். இவர் கௌமார நெறி நின்ற சான்றோர். அவர் பாடிய புலவர் புராணம் தமிழ்ப் புலவர்கள் தம் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும். அவர் இயற்றிய அறுவகை இலக்கணம் தமிழ் இலக்கணத்திற்குக் கூடுதல் பெருமை சேர்ப்பது. இவர் இயற்றிய தமிழலங்காரம் தமிழின் பெருமையை எடுத்துரைப்பது. தமிழ்ப் பாடல்கள் பாடியதால் ஏற்பட்ட சாதனைகளை எடுத்துக் காட்டுவது. ஒரு நூறு பாடல்களைக் கொண்டது. இந்நூல் தமிழ் மொழியின் வெற்றியைத் தரணிக்குக் காட்டுவது.

இந்நூலில் திருச்செந்தூர் முருகப்பெருமானைப் பாடிப் பரவி நலம் பெற்ற பல புலவர்களைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. முத்துவயிரவன், பகழிக் கூத்தர், வீரபாண்டியப் புலவர், கந்தசாமிப் புலவர் என்று பலர் தமிழ்ப் பாடல்கள் பாடித் திருச்செந்தூர் முருகன் அருளைப் பெற்று வளம் பெற்றுள்ளனர். தக்க புலவர்கள் தம் பாடல்களினால் பெற்ற பெருவரத்தை வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் வழி அறிய முடிகின்றது. இவை தவிர, சரசுவதி தேவி, உமையம்பிகை, சிவபெருமான் போன்ற பல கடவுளர்களும் தமிழ்ப்பாடல்களுக்குத் தந்த பெருவளத்தையும் இந்நூலில் தண்டபாணி சுவாமிகள் குறிப்பிடடுக் காட்டியுள்ளார். இதன் காரணமாகத் தமிழால் எதுவும் முடியும் என்ற நிலையை அறிந்து கொள்ளமுடிகின்றது.

முத்துவயிரவன் என்ற புலவர் திருச்செந்தூர் முருகன் மீது முப்பதாயிரம் கீர்த்தனைகள் பாடியுள்ளார். இவர் ஒரு மாற்றுத் திறனாளி. இவர் தம் கீர்த்தனை ஒன்றில் முருகனைத்தான் காணவேண்டும் என்றும், தன்னோடு இருக்கும் மற்றவர்களும் காணவேண்டும் என்று பாடினார். அதில் “கொண்டு வா மயிலே குமர கெம்பீரனை” என்று மயிலுக்கு ஆணையிட்டார்.

இவரின் ஆணைக்கு இணங்கிய மயில் குமாரக் கடவுளைத் தன் மீதேற்றிக் கொண்டு வந்தது. அத்தோடு கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான முத்துவயிரவப் புலவர்க்குக் கண்பார்வையும் கிடைத்தது. கண்ணார அவர் முருகப்பெருமானைக் கண்டு மகிழ்ந்தார். தன்னையும் தந்து, கண்ணையும் தந்தது தமிழ்ப்பாடல் என்பதே தமிழுக்குக் கிடைத்த சிறப்பு.

திருச்செந்திலாண்டவர் பிள்ளைத்தமிழ் என்ற நூலைப் பகழிக் கூத்தர் இயற்றினார். அந்நூலை அரங்கேற்றம் செய்ய அவர் பல முறைகள் முயற்சித்தார். ஆனால் முயற்சி பலிக்கவில்லை. முருகப்பெருமானிடம் உன்னைப் பற்றிப் பாடிய நூலை நீயே அரங்கேற்றித் தரவேண்டும் என்றார். கனிவாய்க் கேட்ட முருகன் தன்னுடைய பதக்கம் ஒன்றை அவருக்கு நல்கினான். அதுமட்டும் இல்லாமல் மக்கள் தம் கனவில் தோன்றி, பிள்ளைத்தமிழ் நூல் அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது. எனவே அனைவரும் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான். பதக்கமும் தந்து, மக்கள் கூட்டத்தையும் அளித்தது தமிழ்ப்பாட்டு.

வீரபாண்டியப் புலவர் என்பவர் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள ஆற்றூரில் வசித்து வந்தார். அவரின் புலமையை அப்பகுதி மன்னன் ஒருவன் சோதித்துப் பார்க்க விரும்பினான். அவரை அழைத்து, ஒரு புளிய மரத்தின் துண்டினைக் காட்டினான். அதனைப் புலவர் தன் பாட்டால் மேலும் இரு துண்டாக்கவேண்டும் என்று மன்னன் ஒரு சோதனை வைத்தான். அப்புலவர் “எப்படியும் செந்தூர்க்கிறையவா” என்று பாடி புளியமரத்துண்டை மேலும் இரண்டாக்கினார். இதைச் செய்தது தமிழ்.


வீரபாண்டியப் புலவரின் வாழ்வில் மற்றொரு முறையும் முருகன் அவர் பாடிய தமிழுக்காக உதவி செய்தான். வீரபாண்டியப் புலவருக்கு ஒரு மகள் இருந்தாள். அம்மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, மணமுடித்தார் வீரபாண்டியனார். ஆனால் மகளின் வாழ்க்கை இனிமையாக இல்லை, மருமகன் கடல்கடந்து கண்காணாத இடத்திற்குச் சென்றுவிட்டான். வீரபாண்டியப் புலவர் திருச்செந்தூர் முருகனிடம் வேண்டுகோள் வைத்தார். ஆயிரத்து எட்டு அண்டங்களை ஆண்ட சூரபதுமனிடம் தூது சென்ற வீரபாகுத் தேவரை என் மகளுக்காக மருமகனிடம் தூதாக அனுப்பி அவள் வாழ்வு நலமாக அமையச் செய்வாய் என்றார். இவ்வேண்டுகோளுக்காக, முருகப்பெருமான் சூரபதுமனைத் தூதாக அனுப்பி வீரபாண்டியனார் மகளின் வாழ்வு சிறக்கப் பணியாற்றினர். அன்றும் தூது நடந்தது தமிழ், இன்றும் தூது நடக்கிறது என்றும் தூது நடக்கும் தமிழ்.இதுவே தமிழின் சிறப்பு.

கந்தசாமிப்புலவர் என்பரும் திருச்செந்தூர் முருகனைத் தமிழில் பாடி பற்பல பயன் பெற்றுள்ளார். அதனையும் காட்டியுள்ளார் தண்டபாணி சுவாமிகள். ஒருமுறை கந்தசாமிப்புலவர் சேர மன்னன் ஒருவனைப் பார்க்கச் செல்வதாக இருந்தார். இதற்காக முருகப்பெருமானிடம் சேர நாடு செல்லத் துணைக்கு வரும்படி பாடலால் அழைக்கிறார். இப்பாடலைக் கேட்ட முருகன் சேர மன்னனின் கனவில் சென்று கந்தசாமிப் புலவர் வருவதை உரைக்கிறான். இதன் காரணமாகக் கந்தசாமிப் புலவருக்குச் சேரமன்னன் பெருத்த வரவேற்பு அளிக்கிறான். அதுமட்டும் இல்லாது கந்தசாமிப் புலவருக்குப் பல வெகுமதிகள் அளிக்கிறான். இவ்வாறு தமிழால் கந்தசாமிப்புலவரின் வாழ்க்கை வளம்பெற்றது.

கந்தசாமிப் புலவர் வெற்றிலை போடும் பழக்கம் உடையவர். அவர் திருச்செந்தூர் கடற்கரையில் இருந்தபடி வெற்றிலையைப் போட்டுக் கொண்டே முருகன் மீது பாடல்களைப் பாடினார். அருகிருந்து முருகப்பெருமான் இப்பாடல்களைக் கேட்டார். அவ்வாறு கேட்கும்போது கந்தசாமிப் புலவர் துப்பிய வெற்றிலைச் சாறு முருகப்பெருமானின் தலையில் கட்டப் பெற்றிருந்த பரிவட்டத்தில் தெரிக்கிறது. தவித்துப் போனார் கந்தசாமிப்புலவர். இதே எச்சில் திருச்செந்தூர் கோயிலின் உள் உள்ள முருகப்பெருமான் ஆடையிலும் காணப்பட்டது கண்டு எல்லோரும் அதிசயித்தனர். இந்த அளவிற்குத் தமிழுக்காக எச்சிலையும் ஏற்ற பெருமானாக முருகப்பெருமான் விளங்கினார் என்று வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடுகிறார்.

“முச்சிலும் செங்கைக் கழங்கும் கொள்வார் தம்மை மூரிச் சிறார்
மெச்சிய சிற்றில் வியன் வீதிச் செந்திலில் மேய செவ்வேள்
நச்சியவாறு தமிழால் துதிக்குமோர் நாவலன் தன்
எச்சிலும் கீழ் விழலாகதென்று ஆடையில் ஏந்தினனே”
என்று இதனைப் பாடலாக வரைகிறார் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள்.

கழங்கு ஆடும் செல்வச் சிறுமியர்கள் தம் கரங்கள் சிவக்கும்படி கட்டிய சிற்றில்கள் பலவாக இருக்கும் திருச்செந்தூரில் வாழும் செந்தில் ஆண்டவர், தமிழ்ப் பாக்களால் துதிக்கும் புலவரின் எச்சிலும் கீழே விழுந்திடக் கூடாது என்று ஆடையில் ஏந்தினான் என்றால் தமிழுக்கு எவ்வளவு உயர்வு என்று பாடுகிறார் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.

இவ்வாறு தமிழ்ப் பாக்கள் வல்லமை உடையன. தமிழ் மொழி வல்லமை உடைய மொழி என்று நூறு பாடல்களிலும் அவர் உறுதியாக உரைக்கிறார். அதுமட்டும் இல்லாமல் உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்று காட்டிய மொழி தமிழ்மொழி என்பதால் இன்னும் அம்மொழிக்குப் பெருமை அதிகம் என்கிறார் வண்ணச்சரபனார்.

“ஒளவை வள்ளுவன் ஆதியர் விண்ட தென்னூல், ஊன் முழுப்பாவம் எனவே அடிக்கடி ஒதிடுமே”

என்ற பாடலடியைப் படைத்துத் தமிழின் பெருமையை அவர் உயர்த்துகிறார். ஒளவையாரும், வள்ளுவரும் புலால் உணவு சாப்பிடுவது தவறு என்று உரைத்துள்ளதால் தமிழே தலைசிறந்த மொழி என்று வலியுறுத்துகிறார் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.

இவ்வாறு பல்வேறு வரலாறும், வளமும் கொண்ட தமிழ் மொழி நாளும் வளர தமிழ் நூல்களை, தமிழ்ப் பண்பாட்டைக் காத்து வருவது தமிழ்ச்சமுதாயத்தின் தலையாய கடமையாகின்றது.

thanks to muthukamalam

கருத்துகள் இல்லை: