திங்கள், ஜூன் 01, 2015

பசப்புறு பருவரல் - தமிழரின் பண்பாட்டு அடையாளம்

திருவள்ளுவர் நாடு, மொழி, இனம் என்ற பாகுபாடுகளைக் கடந்து சமநிலைக் கருத்துகளைத் திருக்குறளில் எடுத்துரைத்துள்ளதால் அது உலகப் பொதுமறை என்று போற்றப்பெறுகின்றது. அவரே பொதுவாகப் பல கருத்துக்களை எடுத்துரைத்திருந்தாலும் பண்பாட்டு நோக்கில் காணுகையில் தமி்ழ்ப்பண்பாட்டின் அடையாளங்கள் பலவற்றைப் திருக்குறளில் பொதிந்து வைத்துள்ளார். குறிப்பாகக் காமத்துப்பாலில் அவர் வரைந்துள்ள களவியல், கற்பியல் சார்ந்த குறட்பாக்கள் தமிழினத்தின் பண்பாட்டு அடையாளங்களாக விளங்குகின்றன. இதற்குக் காரணம் தமிழர்களின் அகம் சார்ந்த பண்பாடு உலக அளவில் பொதுமை மிக்கதாகவும், உயர்வு மிக்கதாகவும், எடுத்துரைக்கத் தக்கதாகவும் உள்ளது என்பதே ஆகும். எனவே தமிழரின் பண்பாட்டுச் செழுமையை உலகுக்கு உணர்த்தப் பொதுமறையாம் திருக்குறளில் அவற்றைப் பதிவு செய்துள்ளார் திருவள்ளுவர்.

காலந்தோறும் திருக்குறளை மக்கள் மனதில் பதிய வைக்க பற்பல முயற்சிகள் நடந்து வருகின்றன. காலம்தோறும் மக்கள் தோன்றுகின்றனர். அவர்களில் இருந்துப் படைப்பாளர்கள் தோன்றுகிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதான திருக்குறள் காலம் கடந்து தமிழக மக்கள் மனதில் நிறைய வேண்டுமானால், அவ்வவ் காலத்தில் திருக்குறளை முன்னிறுத்திப் பல நூல்கள் தோன்றவேண்டும். அவ்வகையில் திருக்குறளை முன்னிறுத்த உரை நூல்கள் காலந்தோறும் தோன்றி வருகின்றன. இவை தவிர திருக்குறள் கதைகள் படைப்பாளர்களால் எழுதப்பெறுகின்றன. அவ்வகையில் திருக்குறளை அடியொற்றி ஒவ்வொரு குறளையும் வெண்பாவின் ஈற்றடியாக வைத்துக்கொண்டு அக்குறளின் பொருளுக்கு ஏற்ப ஒரு நிகழ்வினை முன்னதாகச் சொல்லி திருக்குறளை விளக்கம் செய்யும் முறையில் இருபதாம் நூற்றாண்டில் நூல்கள் எழுதப்பெற்றன. கவிராஜ பண்டிதர் எனப் போற்றப்படும் ஜெகவீரபாண்டியனார் என்பவர் எழுதிய திருக்குறள் குமரேச வெண்பா என்ற நூல் இவ்வகையில் சிறந்தது. ரங்கேச வெண்பா என்ற ஒரு நூலும் நூற்று முப்பத்துமூன்று அதிகாரங்களுக்கு ஒரு குறள் என்ற அடிப்படையில் எடுத்துக்கொண்டு ரங்கேசனை வினவும் முறையில் நூற்று முப்பத்து மூன்று வெண்பாக்கள் கொண்டு தொகுக்கப் பெற்றுள்ளன.

குறளையும் தந்து, அதற்கு இணையான கருத்தையும் சொல்லி அக்கருத்து மக்களுக்குப் புரியும்படியாக விளக்கமும் செய்து பதின்மூன்று தொகுதிகளாக திருக்குறள் குமரேச வெண்பாவை தாமே அச்சிட்டு வெளியிட்டு மகிழ்ந்தவர் ஜெகவீரபாண்டியனார். இதற்காக அவர் உழைத்த உழைப்பு பதினான்கு ஆண்டுகாலங்கள் ஆகும்.

‘‘எவ்வகையினாலாவது திருக்குறளின் பயனை எல்லோரும் பெற்று இன்புற வேண்டும் என்புதே என் வேட்கை. செவ்விய இனிய இவ்வேணவாவே எனது நாணத்தை ஒரு புறம் ஒதுக்கி என்னை இந்நூல் இயற்றும்படி செய்தது.’’ (முகவுரை, தொகுதி -1) என்று திருக்குறளைப் பரப்புவதற்காக இந்நூலைச் செய்ததாக ஜெகவீரபாண்டியனார் இந்நூலின் முகவுரையில் குறிப்பிடுகின்றார்.

திருக்குறள் குமரேச வெண்பாவில் ஜெகவீரபாண்டியனாரின் கல்விப்புலமை, பல நூல்களைக் கற்றதால் ஏற்பட்ட படிப்பறிவு ஆகியன தெரியவருகின்றன. குறிப்பாக வடமொழிக் கதைகள், பாரதம், பாகவதம் போன்ற பல நூல்களை, ஆங்கில அறிஞர்கள் பலரின் கருத்துகளை இவர் திருக்குறள் சொல்பொருள் விரிவிற்காக, வெண்பாவில் வழங்கிய கதையின் சாரத்திற்காக எடுத்தாண்டுள்ளார். பெரும்பாலும் ஒரு அதிகாரத்திற்கு இரண்டு, மூன்று கதைகள் பாரதம், பாகவதம் போன்ற இந்தியத்தன்மை வாய்ந்த இலக்கியங்களில் இருந்து எடுத்துக் கொள்வதை இவர் தன் இயல்பாகக் கொண்டுள்ளார்.

இருப்பினும் காமத்துப்பாலில் , களவியல் பிரிவில் அமைந்துள்ள பசப்புறு பருவரல் என்ற அதிகாரத்திற்குத் தமிழ் நூல்களில் இருந்து மட்டுமே மேற்கோள் கதைகளை அமைத்துக் கொண்டு்ள்ளார். இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதவாது வடமொழிக் காப்பியங்களில், கதைகளில் இருந்து எடுத்துக்கொள்ள இயலாத அளவிற்குத் தமிழ்ப்பண்பாட்டோடு இரண்டறக் கலந்தது பசப்புறுபருவரல் என்ற அதிகாரம் என்பதே அக்காரணம் ஆகும். மற்ற மொழிகளில், மற்ற மொழி இலக்கியங்களில் இவற்றுக்கான விரிவினைத் திருக்குறள் குமரேச வெண்பா எடுத்துக் கொள்ளாததால் தமிழ்ப் பண்பாட்டின் மொத்த அடையாளமாக பசப்புறு பருவரல் அமைந்துள்ளது என்பது கருதத்தக்கது.

இதிலுள்ள பத்துக் குறட்பாக்களுக்கும் தமிழ் இலக்கியங்களில் இருந்து மட்டுமே எடுத்துக்காட்டுக் கதைகள் தரப்பெற்றுள்ளன. காமத்துப்பாலை அமைக்கின்றபோதே குமரன் என்ற தலைவனை அமைத்து அவனை மையப்படுத்தி இக்குறட்பாக்களை இந்நூலாசிரியர் படைத்துக் கொண்டுள்ளார். இதன் காரணமாக குமரன் என்ற தமிழ்க்கடவுளை முன்னதாக வைத்துக் களவியல் செய்திகள் உரைக்கப் பெறுவதும் இங்குச் சிறப்பிற்குரியதாகின்றது.

தலைமகள் தலைவனின் பிரிவால் ஏற்படும் வருத்தம் காரணமாக பசப்படைந்து வருந்தும் வருத்தம் என்று இவ்வதிகாரத்திற்குப் பொருள் கொள்ளலாம். இவ்வதிகாரக் குறட்பாக்களுக்கு எடுத்துக்காட்டுக் கதைகளைப் (சரிதங்களைப்) பின்வருமாறு வரிசைப்படுத்திக் கொள்ளமுடிகின்றது.

குறள் 1181 – சிந்தாமணி

குறள் 1182 – வெள்ளிவீதியார் பாடல்கள்

குறள் 1183 - கம்பரின் தனிப்பாடல்

குறள் 1184 - சூளாமணி

குறள் 1185 - புறநானூறு

குறள் 1186 - பார்க்கவ புராணம்

குறள் 1187 - நெடுநல்வாடை

குறள் 1188 - சீவகசிந்தாமணி

குறள் 1189 - தனிப்பாடல் 

குறள் 1190 - திருவிளையாடற்புராணம்

இவ்வகையில் தமிழரின் தனித்த அடையாளம் பசப்புறு பருவரல் என்பது உறுதியாகின்றது. 

இப்பத்துக் குறட்பாக்களையும் அவற்றிற்கு ஜெகவீரபாண்டியனார் அமைத்த எடுத்துக்காட்டுக்கதைகளையும் இங்கு விளக்குவது இக்கட்டுரைக்கு இனிமை பயப்பதாக அமைகின்றது.

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் என்ற முதலடியின்படி பிரிவேன் என்ற தலைவனுக்கு ஒப்புதலைத் தலைவி தருகிறாள். இதன் காரணமாக அவள் தற்போது துன்பப்படுகிறாள். இத்துன்பத்தை அவளே அனுபவிக்கிறாள் என்பதே முதல் குறள்.

இக்குறளை மையமாக வைத்து திருக்குறள் குமரேச வெண்பா பின்வரும் வெண்பாவை அமைக்கின்றது.

‘‘நேர்ந்து விடைகொடுத்த நிப்புதியின் வெம்பசலை
கூர்ந்துளைந்தாள் என்னே குமரேசா- சார்ந்து
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்புயார்க்கு உரைக்கோ பிற ’’

(திருக்குறள் குமரேச வெண்பா, தொகுதி.12, ப. 155)

என்பதில் முதல் இரண்டு அடிகள் ஜெகவீரபாண்டினார் படைத்துக் கொண்டது. குமரேச என்ற விளி முருகப்பெருமானை விளிப்பது. அதற்குப் பிறகு ஒரு தனிச்சொல் வந்து, அதற்கு அடுத்துத் திருக்குறள் அமைக்கப்பெற்றுள்ளது. இப்பாடலுக்குப் பின்னால் உரைவிளக்கம் செய்து, கதைவிளக்கம் செய்து ஒவ்வொரு குறளுக்கும் விரிவான பொருளுரையைக் கண்டுள்ளார் ஜெகவீரபாண்டியனார். இவ்வகையில் திருக்குறளுக்கு எழுந்த மிக விரிவான விளக்கவுரை ஜெகவீரபாண்டியனாரின் திருக்குறள் குமரேச வெண்பாவாகும்.

இப்பாடலின் முற்பகுதியில் சீவகசிந்தாமணியில் இடம்பெறும் கேமசரியாரின் தாயாரைப் பற்றிக் குறிப்பிடுகின்றார் ஜெகவீரபாண்டியனார். சீவகன் பிரிவால் வருந்தும் கேமசரியை அவளின் தாய் நிப்புதி என்பவள் உலக வழக்கம் சொல்லிக் கவலையைப் போக்கவைக்கிறாள். இவளும் தன் கணவன் பிரிந்த காலத்தில் இத்துன்பத்தை அனுபவித்தவள் என்பதால் தன் மகளுக்கு அதே சூழ்நிலை வரும்போது இவள் பெற்ற அனுபவப் பாடத்தை மகளுக்கு எடுத்துரைக்கிறாள். ‘‘மன்னுநீர் மொக்குள் ஒக்கும் மானிடர் இளமை. இன்பம் மின்னின் ஒத்து இறங்கும், செல்வம் வெயிலுறு பனியினீங்கும்…. பிறந்தவர் சாவர். செத்தவர் பிறப்பவே.. புணர்ந்தவர் பிரிவர் என்ற சீவக சிந்தாமணிப் பாடல் பகுதியை விளக்கப்பகுதியில் எடுத்துக்காட்டுகிறார் இப்புலவர்.

மேனி மேல் ஊரும் பசப்பு அவர் தந்தார் என்பதால் மகிழ்கிறேன். அவராலே அது விலகினால் இன்னும் நலமாக இருக்கும் என்பது இவ்வதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள். இதற்கு சங்கப்புலவர் வெள்ளிவீதியாரின் வாழ்வை, அவரின் பாடல்களைச் சான்றாக்கிக் காட்டுகிறார் ஜெகவீரபாண்டியனார்.

வெள்ளிவீதியார் தேவசன்மன் என்பவரை மணந்து இல்லறம் நடத்தியமைக் காட்டி, அக்கணவரின் பிரிவால் இவர் வாடிய செய்தியை நற்றிணை (பாடல் எண்கள் ) முந்நூற்று நாற்பத்தியெட்டு, எழுபது, முன்னூற்று முப்பதைந்து, அகநானூறு (பாடல் எண்கள்) நாற்பத்தைந்து, முன்னூற்று அறுபத்தியிரண்டு, நூற்று நாற்பத்தேழு, குறுந்தொகை இருபத்தேழு ஆகிய பாடல்கள் கொண்டுக் காட்டுகின்றார்.

‘கன்றும் உணாது கலத்தினும் படாது … எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது, பசலை உணீஇய வேண்டும்’ என்ற பாடலை மிகப் பொருத்தமாக இக்குறட்பாவுக்கு அமைக்கிறார் ஜெகவீர பாண்டியனார். இக்குறளுக்கு எடுத்துக்காட்டாக அமையும் வெள்ளிவீதியார் பற்றி ஒரு சிறு ஆய்வே இவ்விடத்தில் ஜெகவீர பாண்டியனாரால் செய்யப்பெற்றுள்ளது.

சாயலும் நாணமும் அவர் கொண்டார் அதற்குக் கைமாறாக நோயும் பசலையும் தந்தார் என்ற குறட்பாவிற்கு சாந்தை என்ற பெண்ணை மணந்த சவுந்திர பாண்டியன் என்பவன் பிரிந்தநிலையை எடுத்துக்காட்டி அவளின் வருத்தத்தை குறளுக்கான இலக்கியமாக்குகிறார் இந்நூலாசிரியர். இதற்கு அவர் தரும் சான்று கம்பரின் தனிப்பாடலாகின்றது.

பிரிந்த தலைவரையே எண்ணிக் கொண்டிருக்கிறாள் தலைவி. பேச்செல்லாம் அவர் பற்றியதே. இருப்பினும் பசலை கள்ளமாய் வந்து தலைவியின் உளத்தில் புகுந்துவிட்டது என்ற நான்காம் குறளுக்குச் சூளாமணியில் இருந்து விளக்கம் தருகிறார் புலவர். கனக சித்திரை என்ற பெண்ணை மயூரகண்டன் என்ற அரசிளங்குமாரன் மணந்து கொள்கிறான். அவன் புறத்தொழில் கருதி பிரிந்த நிலையில் இவள் உள்ளம் அழிகிறாள். தோழிகள் ஆறுதல் சொல்லியும் இவளுக்கு அமைதி ஏற்படவில்லை. பசலை படர்ந்தது. இதுவே இக்குறளுக்கு இவர் தரும் எடுத்துக்காட்டு.

என் காதலர் என்னைப் பிரிந்து அங்கே செல்கிறார். அந்நேரத்திலேயே என்மீது பசலை படந்துவிட்டது என்ற ஐந்தாம் குறளுக்கு, சமதமன் என்பவன் விந்தை என்ற பெண்ணை மணந்து இல்லறம் நடத்தி வரும்பொழுது அவர்கள் இருவரும் காட்டுவழி செல்கையில் அண்டவாயு நோயால் அவன் பாதிக்கப்பட்டு இறக்கிறான். இதனை அறிந்த விந்தை, அவனுடலை பெயர்க்கு முனைகிறாள். அது எடுக்க வராத அளவு வலிமையுடையதாக இருக்கிறது. அப்போது தன்னிலையை எண்ணித் தலைவி வருத்தத்துடன் தலைவன் தன்னுடன் எழுந்து சிறிது தூரம் நடந்து வரமாட்டானா என ஏங்குகிறாள்.

‘ஐயோ எனின் யான் புலியஞ்சுவலே ..... நிரைவளை முன்கை பற்றி வரைநிழற் சேர்க நடத்திசிற்சிறிதே’ என்ற புறநானூற்று இருநூற்று ஐம்பத்தைந்தாம் பாடலை எடுத்துக்காட்டாக்கியுள்ளார் ஜெகவீரபாண்டியனார்.

விளக்கம் அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கண்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு (1186)

என்ற ஆறாம் குறளுக்கு தமயந்தியைப் பெற்றெடுத்த தாயான சாருகாசினி என்பவள் சுதர்மன் என்பவனை மணந்து நின்ற செய்தியையும், சுதர்மன் பிரிந்தபோது அவள் பெற்ற பசலையையும் காட்டாகக் காட்டுகிறார் ஜெகவீரபாண்டியனார்.

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக் கொள்வதற்றே பசப்பு (1187)

என்ற குறளுக்கு நெடுநல்வாடையில் இருந்து எடுத்துக்காட்டு தருகிறார் புலவர். கதை என்பவள் பாண்டிய நெடுஞ்செழியனின் மனைவி. போர்கருதி நெடுஞ்செழியன் சென்றபோது துயருறுகிறாள் கதை. புனையா ஓவியம் போல அவள் காணப்படுகிறாள். இதனால் துயர் அடைந்த தோழியர் பாண்டியனுக்குத் தூது விடுக்க பாண்டியன் வர இவளின் துயரம் தீர்ந்தது.

எட்டாம் திருக்குறளான பசந்தாள் இவளென ஊர் தூற்றுகிறதே தவிர பசப்பினைத் தந்த தலைவனை யாரும் பழிக்கவில்லை என்ற பொருளை உடையது. இதற்குக் குணமாலை என்ற சீவகசிந்தாமணியின் தலைவியருள் ஒருத்தியின் தாயான விநயமாலை என்பவளின் பசப்பு நிகழ்வை எடுத்துக் காட்டுகிறார் இந்நூலாசிரியர். குபேரமித்திரனை மணந்த விநயமாலை அவன் பிரிந்தபோது ஊராரால் பசப்பினைப் பெற்றால் என இகழப்பட்டாள். அப்போது அவள் தலைவனை இகழாது என்னை இகழ்வது ஏன் என்று கேட்டாளாம். இதுவே இக்குறளுக்கு உரிய சரிதமாயிற்று.

என்னைப் பிரிந்த கணவன் பிரிந்து சென்றமையால் நன்மை அடைவார் என்றால் அடையட்டும். என்மேனி பலர் தூற்றப் பசலை பெறட்டும். என்ற பொருளுடைய ஒன்பதாம் குறளுக்கு யாழ் வாசிப்பதில் சிறந்த சுநந்தையானவள் தீர்க்கபாகு என்பவனை மணந்து, அவன் பிரிந்தபோது அவன் பிரிவு அவனுக்கு நன்மை தந்தால் போதும் என்ற அளவில் பொறுமை காக்கிறாள் என்று எடுத்துக்காட்டு தருகிறார்.

ஊரார் அவரைப் பழிக்கமாட்டார் அதனால் பசலை நல்லது என்ற நிறைவுக் குறளுக்கு இலக்கியமாக திருவிளையாடற்புராணத்துச் செய்தியைத் தருகிறார். காந்திமதி உக்கிரமகுமார பாண்டியரை மணந்து வாழ்ந்தாள். உக்கிரகுமார பாண்டியர் பிரிந்துபோது அவரைத் தூற்ற உலகம் நல்லது என்று இவள் ஆற்றியிருந்தாள்.

இவ்வாறு பத்துக்குறள்களுக்கும் தக்க எடுத்துக்காட்டுகளைத் தேர்ந்து அவற்றை ஒரு வெண்பாவின் முன்பகுதியாக ஆக்கித் தந்துள்ள ஜெகவீரபாண்டியரின் நூல்திறம் வியக்கத்தக்கது என்றாலும் அவர் அறியாமலே இவ்வதிகாரத்திற்குத் தமிழிலக்கியங்களை இலக்கியமாகக் கையாண்டுள்ளார் என்ற கருத்தைப் பெறுவது இக்கட்டுரையின் நோக்கமாகின்றது.

தமிழரின் தனித்த பண்பாட்டில் ஒன்று தலைவி தலைவனுக்காகக் காத்திருத்தல் என்பது. இதனை இருத்தலும் இருத்தல் நிமித்தம் என்ற முல்லை நில ஒழுக்கமாகக் கொள்கிறது சங்க இலக்கியங்கள்.

திணையடிப்படையில் குறளை வள்ளுவர் பாடவில்லை என்றாலும் திணை ஒழுக்கங்களின் விரிவாகக் குறளைப் புனைந்துள்ளார் என்பதற்கு பசப்புறு பருவரல் என்ற அதிகாரம் ஒரு சான்றாகிறது. இவ்வொழுக்கம் சங்ககாலம் முதலே தமிழரின் அடையாளகக் கொள்ளப்பெற்று வருகிறது. திருக்குறள் குமரேச வெண்பாவில் காத்திருக்கும் தலைவியர் அனைவரும் இல்லற வகைப்பட்ட தலைவியர் என்பது கொள்ளவேண்டிய கருத்து என்றாலும், களவியலில் பசப்பு என்பது சிறப்பானது என்பதே மூலநூலாசிரியரான திருவள்ளுவரின் கருத்தாகும். எடுத்துக்காட்டு இலக்கியங்கள் இதனைச் சற்று மீறியுள்ளன என்பது கொள்ளத்தக்கது.

களவியல், கற்பியல் எதுவாயினும் தலைவனுக்காக ஆற்றியிருக்கும் தலைவியின் ஒழுக்கத்தைத் தமிழரின் தலைசிறந்த ஒழுக்கமாக வள்ளுவர் கொண்டதால் அதன் விரிவாக பசுப்புறு பருவரல் அதிகாரத்தைப் படைத்துள்ளார் என்பதை இங்கு விளங்கிக்கொள்ள முடிகின்றது. அதற்கு இலக்கியம் வகுத்த ஜெகவீரபாண்டியனார் தமிழ் இலக்கியங்களை மட்டுமே இங்கு மேற்கோள் கதைகளாகக் கையாண்டிருப்பதன் வாயிலாக தமிழின் தனித்த அடையாளமாக பசப்புறு பருவரல் என்ற அதிகாரம் விளங்குகின்றது என்ற முடிவினை இக்கட்டுரை எட்டுகின்றது.

தற்காலத்திலும் பசப்பு என்ற சொல் வழக்கில் உள்ளது. பசப்புகிறாள் என்று அதிகம் வருத்தப்படுவது போன்ற செய்கைகளைச் செய்யும் பெண்ணைப் பழிப்பது இன்னமும் தமிழகத்தில் எச்சமாக விளங்குகின்றது. பசப்பு சொல்வழக்காகவும் உள்ளது. ‘பசப்பி’ என்ற சொல்லும் கொச்சை வழக்காக உள்ளது. பசப்பி என ஊர் தூற்றுகிறது என்பதே இவ்வழக்குகளிலிருந்துப் பெறப்படும் கருத்து. திருவள்ளுவர் காலத்திலும் தலைவியைப் பசப்பு பெற்றவள் என்றே ஊர் தூற்றியுள்ளது. வள்ளுவர் காலத்தில் இருந்துத் தமிழகமும் மாறவில்லை. தமிழ்ப்பண்பாடும் மாறவில்லை என்பது குறிக்கத்தக்கது.

இக்காலத்திலும் தலைவன் பிரிவின்போது தன் கற்புநலன் காத்துத் தமிழ்ப்பெண்டிர் வாழ்ந்துவருகின்றனர் என்ற நிலை சங்கஇலக்கியம், திருக்குறள் போன்ற இலக்கியங்களால் கட்டமைக்கப்பெற்ற ஒழுக்கம் என்பது இங்குக் கருதத்தக்கது. இவ்வொழுக்கத்தை உலகிற்கு உணர்த்த வள்ளுவரும் முயன்றுள்ளார். அதற்கு வலு சேர்த்துள்ளது திருக்குறள் குமரேச வெண்பா. திருக்குறள் நாளும் பரவ, வருங்கால மக்களிடத்திலும் பரவ இன்னும் பல படைப்பாளிகள் தோன்றுவார்கள். அவர்களால் திருக்குறள் காலந்தோறும் அழியாப் பெருமையை பெற்று உயரும்.

Thanks to Muthukamalam (web magazine)

கருத்துகள் இல்லை: