வெள்ளி, ஜூன் 05, 2015

கோட்பாடுகளின் அடிப்படையில் செவ்விலக்கியங்களை ஆராயத் துணை செய்யும் இணையத் தரவுகள்

செவ்வியல் இலக்கியங்களில் இலக்கிய நயம் காணுதல், உவமை, உருவக அழகு காணுதல் என்ற மரபு சார்ந்த இலக்கியத் திறனாய்வில் இருந்து வேறுபட்டு, மேலை நாட்டுச் சார்பால் கோட்பாட்டு அடிப்படையிலான திறனாய்வுகள் தற்காலத்தில் பெருகி வளரத் தொடங்கியுள்ளன. பல்வேறு வகையானத் திறனாய்வு முறைகளின் வழியாகச் சங்க இலக்கியங்களில் புதைந்து கிடக்கும் அரிய கருத்துகள் இத்திறனாய்வாளர்களால் வெளிவரச்செய்யப்பெற்றுள்ளன. இதன் காரணமாக தமிழ்த் திறனாய்வுலகில் புத்தொளி வீசத் தொடங்கியுள்ளது. இவ்வாய்வுகளுக்கும், ஆய்வு அணுகுமுறைகளுக்கும் உதவும் இணைய தளங்கள் பல உள்ளன. அவற்றினைப் பற்றிய அறிமுகத்தையும் அவ்விணைய தளங்களின் தரம் பற்றியும் மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
கோட்பாடு – சொல் விளக்கம்:
கோட்பாடு என்பதை ஒரு கருத்தாக்கம் என்று பொருள் கொள்ளலாம். கோட்பாடு என்பதனைப் புரிந்து கொள்ள பின்வரும் எடுத்துக்காட்டு உதவும்.
கற்பு என்பது ஒரு கோட்பாடு. நடைமுறை வாழ்வில் நாம் ஏற்றுக் கொண்டுள்ள கோட்பாடு. இதன் வாழ்வியல் நெறிமுறை என்னவென்றால், ஒருவனுக்கு ஒருத்தி என்பதாகும். எனவே ஓர் ஆணும், ஒரு பெண்ணும் மட்டுமே, சமுதாய நிகழ்வாகிய திருமணச் சடங்கின் மூலம் இணைந்து வாழும் வாழ்க்கையே கற்புக் கோட்பாட்டினைக் கொண்டது என்று கூறப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு கொள்கையின் சிந்தனைத் தெளிவினாலும் – ஏற்றுக் கொள்ளல் என்பதாலும் – சமுதாய நிலைப்பாட்டினாலும் கோட்பாடுகள் உருவாகின்றன.
இவ்விரு மேற்கோள்களும் தமிழ் இணையப் கல்விக்கழகத்தின் இணையதளத்தின் நாட்டுப்புறவியல் பாடப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். தமிழ் ஆய்வுகளின் அடிப்படைகளைத், தமிழ்க்கல்வியின் அடிப்படை நிலைகளை அறிந்து கொள்ளத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையதளம் பயன்படுகின்றது. இத்தளம் தனக்கென ஒரு விரிந்த நூலகத்தையும், தமிழ்ப் பட்டப்படிப்பின் தரத்திற்கான பாடங்களையும் கொண்டு விளங்குகின்றது
கோட்பாடு வகைகள்:
கோட்பாட்டின் வகைகளைப் பின்வருமாறுப் பட்டியலிடுகின்றது விக்கிப்பீடியா தளம்.
அறவியல் திறனாய்வு
பெண்ணியத் திறனாய்வு
அமைப்பியல் திறனாய்வு
பின் அமைப்பியத் திறனாய்வு
பின்நவீனத்துவத் திறனாய்வு
நவீனத்துவத் திறனாய்வு
வடிவவியத் திறனாய்வு
மார்க்சியத் திறனாய்வு
கட்டுடைப்பியத் திறனாய்வு
யதார்த்தவியத் திறனாய்வு
வரலாற்றியல் திறனாய்வு
புது வரலாற்றியல் திறனாய்வு
சமூகவியல் திறனாய்வு
மொழியியல் திறனாய்வு
ஒப்பீட்டுத் திறனாய்வு
உளப்பகுப்பாய்வுத் திறனாய்வு
தொல்படிமவியல் திறனாய்வு
எடுத்துரைப்பியல் திறனாய்வு
அறிவுறுத்தல் திறனாய்வு
பின்காலனித்துவத் திறனாய்வு
புனைவியல் திறனாய்வு
சூழலியல் திறனாய்வு
புதுத் திறனாய்வு
இப்பட்டியலில் உள்ள திறனாய்வுகளை, அவற்றின் செல்நெறிகளை, கோட்பாடுகளின் முந்தையதான நிலையை இத்தளம் எடுத்துரைத்து அதற்கான தொடுப்புகளைப் பெற்றிருப்பது சிறப்பிற்குரியதாகும்.
இவை ஒவ்வொன்றுக்கும் விரிவுதேடி இணையத்தில் நுழைந்தால் அவற்றுக்கான தரவுகள் ஓரளவிற்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இக்கட்டுரையின் அளவு கருதிச் சிற்சில கோட்பாடுகளுக்குக் கிடைக்கும் இணையத் தரவுகள் இங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக தமிழுக்கே உரித்தான தனித்துவ மிக்கக் கோட்பாடுகளாக வளர்ந்துள்ள திணைக் கோட்பாடு போன்ற கோட்பாடுகள் ஒரு வகையாகவும், மேலைநாட்டுச் சிந்தனைக்கு இடமளித்த அவை தந்த வெளிச்சம் கொண்டு சங்க இலக்கியத்தைப் பார்த்த கோட்பாடுகள் மற்றொரு வகையாகவும் ஆக்கிக் கொள்வது என்பது இக்கட்டுரையின் வகைப்பாட்டிற்கு பொருத்தமுடையதாகும் என்பதில் அப்பிரிவே கொள்ளப்படுகின்றது.
தமிழின் தனித்த கோட்பாடுகள்:
தமிழின் தனித்த கோட்பாடுகளாக அறியத்தக்கனவற்றுள்
1. திணைக்கோட்பாடு
2. ஈகைக் கோட்பாடு
3. கூற்றுக் கோட்பாடு
4. அறிவுத் தோற்றவியல்
ஆகிய நான்கு அமைப்புகளை இணைய நிலையில் காணமுடிகின்றது.
திணைக் கோட்பாடு:
திணைக்கோட்பாடு என்ற நிலையில் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் முன்னைப் பேராசிரியர் க.பூரணச்சந்திரனின் இணையதளம் சிறப்பிடம் பெறுகின்றது. இவரின் இத்தளத்தில் இவரது பல் திறப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப் பெற்றுள்ளன. அவற்றைச் சொடுக்கி நமக்குத் தேவையான கட்டுரைகளைப் பெறலாம். திணைக்கோட்பாட்டின் அடிப்படையில் அவர் சங்க இலக்கியங்களைக் கண்டுச் சில முடிவுகளுக்கு வருகின்றார். அவற்றில் பின்வரும் சில குறிக்கத்தக்கன.
முதல், கரு, உரி என்ற இம்மூன்றனுள் உரிப்பொருளே சிறப்பானது. ஏனெனில் முதற்பொருள் பயின்றுவராத, கருப் பொருள் காணப்படாத பாக்களைக் கூட காணலாம். ஆனால் உரிப் பொருளற்ற கவிதை ஒன்றையும் காண இயலாது. உரிப்பொருள் மானிட வாழ்க்கைஅனுபவமே ஆதலின் சங்க இலக்கியமே மனிதமையவாத அடிப்படையில் அமைந்தது என்பதில் ஐயமில்லை. எனவே சங்கப்பாக்களை உரிப்பொருள் மட்டும் பெற்ற பாக்கள், உரிப்பொருள், முதற்பொருள், கருப்பொருள் பெற்ற பாக்கள் என்றுதான் பகுக்க முடியும்.
1. குறிஞ்சி-வேட்டைச் சமூகம், சுரண்டல் உருவாகா நிலை,இயற்கைக் காதல், பெருமளவு தாய்வழிச் சமூகம்.வெட்சி-வேட்டைச்சமூகம், சிறிய தலைவர்கள், ஆநிரை கவர்தல்
2.முல்லை-ஆடுமாடுகள் சொந்தமாதல், தனியுடைமையின் தொடக்கம், மேய்த்தல் சமூகம், தந்தைவழிச் சமூகமாதல், கற்புக் கோட்பாடு, வஞ்சி-சிறிய தலைவர்கள், நேருக்கு நேர் போரிடல்
3. மருதம்-பெருமளவில் நிலத்தைச் சொந்தமாக்குதல், இயற்கை யழிவு, சுரண்டல்- நிலவுடைமைச் சமூகம், பெண்ணுடைமைச் சமூகம், ஆண்கள் நெறிதவறுதல்-நொச்சி-அரணமைத்துக் காத்தல், பெரும் அரசர்கள் தோற்றம்
4. நெய்தல்-இயற்கைக்குத் திரும்புதல், சுரண்டலற்றநிலை, கலப்புக்காதல், சிரமம், துன்பம்,இரங்கல்,புலம்பல், நிச்சயமற்ற பிரிவு, காஞ்சி-நிலையாமை, நிலையின்மை, புலவர்கள் பேரரசை விட்டு சிறிய புரவலர்களை அணுகுதல்பாலை-களவுசெய்யும் சமூகம்இ மனிதனை மனிதன் அழித்தல், தற்காலிகப் பிரிவு, வெம்மை, பிரிவும் பிரிவின்மையும், வாகை-பெருவேந்தர் குறுநில மன்னர்களை வெற்றிகொண்ட தன்மை இரக்கம்
5. பாலை-களவுசெய்யும் சமூகம், மனிதனை மனிதன் அழித்தல், தற்காலிகப் பிரிவு, வெம்மை, பிரிவும் பிரிவின்மையும்,வாகை-பெருவேந்தர் குறுநில மன்னர்களை வெற்றிகொண்ட தன்மை, இரக்கம்
என்பன அவர் காட்டும் திணைக் கோட்பாடு சார்ந்த கருத்துகள் ஆகும்.
ஈகைக் கோட்பாடு:
தமிழர்களின் அறம் சார்ந்த செயல்பாடுகளுள் ஒன்று ஈகை ஆகும். இதனைத் தமிழர்களின் தனித்த கோட்பாடாக முனைவர் ந. இளங்கோ காண்கிறார். அவரின் ஈகைக் கோட்பாடு பற்றிய கட்டுரையானது தமிழ்த்தொகுப்புகள் என்ற தளத்தில் காணப்படுகின்றது. இத்தளமும் சங்க இலக்கியக் கோட்பாட்டு ஆய்வுகளுக்கு இடமளித்து வரும் தளமாகும். இதன் பொறுப்பாளராக சென்னையைச் சார்ந்த சிங்கமணி விளங்கி வருகின்றார். காலத்தால் அழியாத பல செய்திகளைத் தாங்கி இத்தளம் வருவதால் இதற்குத் தமிழ்த் தொகுப்புகள் என்றே பெயரிட்டுள்ளனர். இத்தளத்தில் இடம்பெற்றுள்ள ஆக்கங்களின் ஆசிரியர்கள் பெயர்கள் தரப்பெற்றுள்ளன. அதன் வழியாக அவ்வாசிரியர்களின் ஆக்கங்களைக் காணலாம். இதுதவிர கட்டுரையின் பொருள் வகைமையும் தரப்பெற்றுள்ளது. இதன் வழியாகவும் சங்க இலக்கிய ஆய்வுகளைப் பெறலாம்.
சங்க இலக்கியங்களில் பகிர்ந்துண்ணல், கொடை, பரிசில்,உணவிடல் என்ற பல நிலைகளில் சமூக வழக்கிலிருந்த ஈகை, திருக்குறள் முதலான நீதி நூல்களில் சமண, பௌத்தமதச் சொல்லாடல்களுக்கு ஒப்பப் பசி தீர்த்தல் என்ற பொருளில் இறுக்கம் பெற்றது. அற்றார்அழி பசி தீர்த்தல் (குறள்226) ஈகை, வறியார்க்கு ஒன்று ஈவதே-ஈகை (குறள்221) என்றெல்லாம், ஈகை அறம் பசி தீர்த்தல்; அதுவும்வறியவனின் பசியைத் தீர்த்தல் என்றபொருளில் வலியுறுத்தப்பட்டது. ளளுபுகழ் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் ஈதலால் இசைபெறலாம் என்று ஈகையைப் புகழோடு இணைக்கின்றார். விருந்தோம்பல் என்ற சங்க இலக்கியத்து ஈகையைத் திருவள்ளுவர் இல்லறத்தான் கடமைகளில் ஒன்றாகத் தனித்துவலியுறுத்துகின்றார் என்ற இந்தக் கருத்துச் செவ்வியலக்கியங்களில் காணப்படும் ஈகைக் கோட்பாட்டை விளக்குவதாக உள்ளது.
கூற்றுக் கோட்பாடு:
செவ்விலக்கியங்களில் கூற்று முறை அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. தலைவி, தோழி, தலைவன் போன்றோர் கூற்று நிகழ்த்தும் முறைகளுக்கு ஒரு வரையறை உண்டு. திருக்குறள் கூற்று அடிப்படையில் அமைந்திருப்பதை மையமாக வைத்துக் கூற்றுக் கோட்பாடு என்ற ஒரு கொள்கையை முன்நிறுத்துகிறார் கே. பழனிவேலு. இவரின் கட்டுரை பனுவல் என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது. இத்தளம் பல ஆய்வுக்கட்டுரைகளின் அரங்கமாகத் திகழ்கின்றது (puthiyapanuval blogspot.in). இவ்விதழ் சென்னை அம்பத்தூரில் இருந்து டாக்டர் சீனிவாசன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் உலகு தழுவிய அளவில் வெளிவருகின்றது. இதன் ஆர்க்கைவ்ஸ் என்ற சேமிப்புக்களத்தில் ஒவ்வொரு இதழும் சேமிக்கப்பெற்றுள்ளன. அவற்றில் பல தரமான சங்க இலக்கியக் கோட்பாடு; ஆய்வுகள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இதனுள் ஆய்வாளர்கள் அனைவரும் தங்களின் ஆய்வுரைகளை வழங்க உள்நுழைந்து பதிவு பெற வேண்டும்.
திருக்குறளைக் கூற்றுக் கொள்கை அடிப்படையில் கண்டு அவர் பின்வரும் முடிவிற்கு வருகின்றார்.
திருக்குறள் சுட்டும் அறங்கள், தமிழ்ச் சமூகத்தில் புழங்கிக் கொண்டிருந்த அறங்களே ஆகும். இந்த அறங்கள் எதையும் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்தாகக் கருதமுடியாது. ஆசிரியர்,கூற்றுகளைத் தொடர்நிலையில் மொழிப்படுத்தும் பணியையே செய்துள்ளார். இவ்வாறான மொழிப்படுத்தலின் நுட்பமே அறத்தை உரைக்கும் பனுவலைப் புனைவுப் பனுவலாக இயங்கச் செய்கிறது. கூற்றுகளின் பொருண்மைத் தொகுதிகளைப் புரிந்துகொண்டு பிற கூற்றுகளுடன் இணைக்கின்ற திருவள்ளுவருடைய மொழித்தொழில்நுட்பம் பிற அற இலக்கியங்களில் காணக் கிடைக்காததாகும். இதனாலேயே அறம் உரைக்கின்ற நோக்கத்திற்கு இடையிலும் திருக்குறளால் ஒரு புனைவுப் பனுவலாகவும் இயங்க முடிகிறது என்ற இந்தக் கருத்து திருக்குறளில் கையாண்டுள்ள மொழித் தொழில் நுட்;பத்தை எடுத்துரைப்பதாக உள்ளது.
அறிவுத் தோற்றவியல்:
அறிவுத் தோற்றவியல் என்ற கோட்பாட்டை எம்.டி முத்துக்குமாரசாமி அறிமுகப் படுத்திச் சங்க இலக்கியங்களை அதன் வழியில் ஆராய்ந்துள்ளார். இவரின் பெயரிலேயே ஒரு தளம் அமைந்துள்ளது. இதனுள் பல்வகைக் கட்டுரைகள் கிடைக்கின்றன. சங்க இலக்கியக் கோட்பாட்டுக் கட்டுரைகளும் உள்ளன. இதன் முகவரி http://mdmuthukumaraswamy.blogspot என்பதாகும். அறிவுத்தோற்றவியில் என்பதை அவர் பின்வருமாறு விளக்குகின்றார். அறிவறிவு அல்லது அறிவுத்தோற்றவியல் என்று தமிழில் குறிக்கப்படுகின்ற Epistemology என்பதை இலக்கியத்தில் காண விழைந்த முதல் தமிழ் நூலாக க.நாராயணனின் “தமிழர் அறிவுக்கோட்பாடு” என்ற நூலினைச் சொல்லலாம். ஆனால் நாரயணனின் நூல் அறிவுத்தோற்றவியலை விளக்கிய அளவுக்கு பழந்தமிழ் இலக்கியத்தின் அறிவுத்தோற்றவியலை விளக்கவில்லை. இதற்கு அடிப்படையான காரணம் நெறிமுறையில் ஏற்பட்ட கோளாறே ஆகும்.
நாராயணனின் நூல் “அறிவு” என்ற சொல் பதினென்கீழ்க் கணக்கு நூல்களிலும் பிற சங்க இலக்கியங்களிலும் குறிப்பாக திருக்குறளிலும் எங்கெல்லாம் வருகிறது என்று பார்த்து, அவற்றை “அறிவு” பற்றிச் சொல்லப்படுகின்ற கருத்துக்களோடு இணைத்து தமிழரின் அறிவுக்கோட்பாடு என தனக்கு வேண்டியதை மட்டும் உருவி எடுத்து தொகுப்பதாக உள்ளது. ஆகவே அடிப்படை நிலைப்பாடுகளை தொகுக்கின்ற பிரச்சினை எழவே இல்லை. இதற்கு மாறாக எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களின் அமைப்பாக்கத்தின் அடிப்படை நிலைப்பாடுகளிலிருந்து அவற்றின் அறிவுத்தோற்றவியலை விளக்குவது என் நெறிமுறையாகிறது. இதற்கு சங்க இலக்கியத்தின் மையப்புள்ளியை நான் அடையாளம் காணவேண்டும் என்ற விளக்கம் மிக்க முன்னுரையோடு இவர் இந்தக் கட்டுரையைத் தொடங்குகின்றார்.
இக்கட்டுரையின் முக்கியமான முடிவாகக் கருதத் தக்கது பின்வரும் கருத்தாகும். உணர்ச்சியை மையமாகக் கொண்டு சகமனிதன், இயற்கை, புற உலகு, ஆகியவற்றோடு மொழி செயல்பாட்டின் மூலம் மனிதன் கொள்கிற இயங்கியல் உறவினை அடிப்படை அறிவுத்தோற்றவியல் நிலைப்பாடாக அறியவரும்போது சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் நவீன வாழ்க்கையின் சிக்கல்களிலிருந்து தமிழனை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளை சொல்லக்கூடும். அப்படிப்பார்க்கையில் அக புற ஒழுங்குகளை ஒரே சமயத்தில் எதிர்கொள்கிற நெடுநெல்வாடை போன்ற பாடல்கள் இக்காலத்திற்கு மிகவும் தேவையான, தமிழனின் உணர்வுகளை உயிர்ப்பிக்கின்ற நவீன கவிதைகளாக விளங்குகின்றன. என்னைப் பொறுத்தவரை நெடுநெல்வாடையே பத்துப்பாட்டில் மிகச் சிறந்த கவிதையாகும் இவ்வகையில் சங்க இலக்கியங்கள் முழுவதற்குமான அறிவுத் தோற்றவியல் ஆய்வுகளைத் தொடங்கலாம்.
பல் துறை ஆய்வுகள்:
சங்க இலக்கியப் பல்துறை ஆய்வுகளை இலங்கை நாட்டு அறிஞர்கள் பலரும் செய்துள்ளனர். இலங்கை நாட்டாரின் ஆய்வுகளை இணையப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் தளம் நூலகம் என்ற தளமாகும். இத்தளத்தில் இலங்கையிலிருந்து வெளிவந்துள்ள அத்தனை நூல்களும், சிற்றிதழ்களும், சிறுஅறிக்கைகளும் சேமிக்கப்பெற்றுள்ளன. இத்தளம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தால் நிறுவப்பட்டு, கொழும்புவில் இருந்து இயங்கி வருகின்றது.
தமிழ் இலக்கிய ஆய்வுகள் என்ற பெயரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்திய பேராசிரியர் க.கைலாசபதி நினைவுக் கருத்தரங்கிற் படிக்கப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஒன்று இத்தளத்தில் கிடைக்கின்றது.
இக்கருத்தரங்கு அமரர் கைலாசபதியின் பதினோராவது நினைவு ஆண்டான 1993இல் இடம்பெற்றது. இதனுள் அமைந்துள்ள கட்டுரைகள் பின்வருமாறு.
• சங்க இலக்கியத்தில் நோக்கு என்னும் செய்யுளுறுப்பு (பண்டிதர் க.சச்சிதானந்தன்),
• சங்க இலக்கியங்களிலே ஒழுக்கவியற் கோட்பாடுகள் (வித்துவான் க.சொக்கலிங்கம்),
• சங்க இலக்கியங்களில் தோழி (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்),
• பழந்தமிழர் வழிபாட்டு மரபுகளும் நம்பிக்கைகளும் (கி.விசாகரூபன்),
• சங்கச் செய்யுள் வடிவங்களும் மொழியும் (பேராசிரியர் அ.சண்முகதாஸ்),
• யப்பானிய அகப்பாடல் மொழிபெயர்ப்புக்குச் சங்கப்பாடல் மரபு பற்றிய அறிவின் இன்றியமையாமை (மனோன்மணி சண்முகதாஸ்),
• ஈழத்திற் காணப்படும் சங்ககால முதுமக்கட் தாழிகள் (பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்),
• வழுக்கையாற்றுப் பிராந்தியத்திற் சங்ககாலப் படிமங்கள் (செ.கிருஷ்ணராஜா)
என்ற எட்டுக் கட்டுரைகள் இதனுள் அடங்கியுள்ளன. இக்கட்டுரைகளில் இலங்கையில் நடைபெற்று வந்த சங்க இலக்கியக் கோட்பாட்டு ஆய்வுகளை எடுத்துரைப்பதாக உள்ளது.
இத்தளத்தை அறிமுகம் செய்வதாக அமையும் வலைப்பூ “வேர்களைத் தேடி” என்ற வலைப்பூவாகும். இவ்வலைப்பூவில் பல சங்க இலக்கியக் கட்டுரைகள் காணப்பெறுகின்றன. இதன் பொறுப்பாளர் முனைவர் இரா. குணசீலன் ஆவார். திருச்செங்கோடு கே. எஸ்.ஆர் மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் சங்க இலக்கியங்கள் குறித்த பல தகவல்களை, கட்டுரைகளை அளித்து வருகின்றார் (http://www.gunathamizh.com)
மேலைநாட்டுக் கோட்பாடுகளும், சங்க இலக்கிய ஆய்வுகளும்:
மேலைநாட்டுத் தாக்கத்தால் தமிழ்த் திறனாய்வு உலகிற்குப் பல கோட்பாடுகள் அறிமுகமாகின. குறிப்பாக நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று இவற்றை இருவகையாகப் பகுக்ககுலாம். அழகியல், மார்க்சியம், மொழியியல், அமைப்பியல் போன்ற கோட்பாடுகள் நவீனத்துவக் கோட்பாடுகள் ஆகும். பின்னை நவீனத்துவக் கோட்பாடுகள் என்ற அடிப்படையில், பெண்ணியம், உளவியல், பின்னை நவீனத்துவம் போன்றன அமைகின்றன. இவற்றிற்கான நோக்குகளும் கட்டுரைகளும் இணையத்தில் கிடைக்கின்றன. அவை பற்றிய செய்திகள் பின்வருமாறு.
நவீனத்துவ ஆய்வுகள்:
மொழியியல் ஆய்வுகள்
நவீனத்துவ ஆய்வுகளில் மொழியியல் சார்ந்த ஆய்வுகள் குறிக்கத்தக்கன. மொழியியல் பின்வரும் பல்துறைகளைக் கொண்டது.
• ஒலிப்பியல் ஒரு மொழியில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு ஒலிகள் பற்றிய துறை;
• ஒலியியல், ஒரு மொழியின் அடிப்படை ஒலிகளின் வடிவுரு பற்றி ஆராயும் துறை;
• உருபனியல், சொற்களின் உள் அமைப்புப் பற்றி ஆராயும் துறை;
• சொற்றொடரியல், எவ்வாறு சொற்கள் சேர்ந்து இலக்கணத்துக்குட்பட்ட வசனங்களை உருவாக்குகின்றன என்பதை ஆராயும் துறை;
• சொற்பொருளியல், சொற்களின் நேரடியான பொருளை ஆராய்தலுக்கும்,(சொல் குறிக்கும் பொருள்), அவை சேர்ந்து உருவாக்கும் வசனங்களின் நேரடியான பொருள்களையும் ஆராயும் துறை;
• மொழிநடை, மொழியின் பாணிகளை ஆராயும் துறை;
• சூழ்பொருளியல் தொடர்புச் செயற்பாடுகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றிய ஆய்வு;
• தொடரியல் ஆய்வு
இவற்றின் அடிப்படையில் சங்க இலக்கியங்களை ஆராயும் தன்மை நவீனத்துவ ஆய்வாகின்றது. மொழியியல் சார்பான கட்டுரைகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தளத்தில் பெரிதும் கிடைக்கின்றன. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இதழான ஆய்வியில் என்ற இதழில் வெளிவந்துள்ள பல்வேறு துறைசார்ந்த கட்டுரைகளின் பிடிஎப் வடிவம் கிடைக்கின்றது. இவற்றின் வழியாக மொழியியல் சார்ந்த பலகட்டுரைகளை வாசிக்கமுடிகின்றது. இதன் முகவரி: http://www.ulakaththamizh.org/ என்பதாகும். இத்தளத்தில் 1972 முதல் வெளிவந்த கட்டுரைகள் கிடைக்கின்றன. மேலும் முன்னூறுக்கும் மேற்பட்டக் கட்டுரையாளர்களின் பெயரடைவு உள்ளது. இவ்விரண்டின் வழியாகவும் தேடிக் கட்டுரைகளைப் பெற முடியும். செ.வை. சண்முகம், ஆதித்தன், ச. அகத்தியலிங்கம் போன்ற மொழியியல் அறிஞர்களின் கட்டுரைகள் இங்குச் சேமிப்பாக உள்ளன.
அழகியல்:
அழகியல் என்பதும் நவீனத்துவச் சிந்தனை ஆகும். வருணனை, உவமை, கற்பனை போன்றனவற்றைத் தமிழ் மரபில் அழகியல் எனக்கொள்வோம் இதனைத்தாண்டி மேலைநாட்டு அழகியலின் அடிப்படையில் சங்க இலக்கியங்களை அணுகும் முறைக்கான வாய்ப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன. நவீன இலக்கியத் திறனாய்வில் குறிக்கத்தக்கத் திறனாய்வாளர் தி.சு நடராசன் ஆவார். இவரின் கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அழகியல் சார்ந்த இவரின் ஒரு கட்டுரைத் தமிழ்க் கூடல் என்ற தளத்தில் கிடைக்கின்றது. மகிழம் இன்ஃபோடெக், மதுரை என்ற முகவரியில் இருந்து வெளிவரும் இணையப் பத்திரிக்கை தமிழ்க்கூடல் என்பதாகும். இதன் முகவரி http://www.koodal.com/ என்பதாகும்.
மார்க்சியத் திறனாய்வு:
இணையதள அளவில் அதிகமாகத் தமிழில் கிடைக்கும் அயலக் கோட்பாடுகளில் தலையாயது மார்க்சிய திறனாய்வாகும். மார்க்சிய கொள்கைகளை முன்வைத்துப் பல இணையதளங்கள் இயங்கிவருகின்றன.
இதில் குறிக்கத்தக்க இணையதளம் மார்க்சிஸ்ட். ஆர்க் என்பதாகும். இதன் முகவரி https://www.marxists.org/ மார்க்சியக் கொள்கைகளை அறிந்து கொள்ள மிக உதவும் தமிழ்க்களஞ்சியம் இத்தளமாகும். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் போன்ற பலரின் கட்டுரைகள் இத்தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன.
சிவலிங்கம் என்பவர் இத்தளத்தின் தமிழ்ப்பகுதிக்கு இணைய வடிவமைப்பாளராக விளங்குகின்றார். இவரே பல ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்து அளித்துள்ளார். பொருளியல் ஆய்வுகளுக்கு இத்தளம் மிகப் பயன்படும்.
மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ் என்ற பெயரில் இதழொன்றும் வெளிவருகின்றது. இதில் சங்க இலக்கியம் பற்றியச் சிந்தனைகள் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன. இது மதுரையில் இருந்து வெளிவருகின்றது. கம்யுனிஸ்ட் பார்டி ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் சார்பில் இது வெளிவருகிறது. இதன் முகவரி https://www.marxists.org/. பண்டைய பண்பாடும் ஆய்வுகளும் என்ற கட்டுரையில் மார்க்சிஸ்ட் சிந்தனை வயப்பட்டு சங்க இலக்கியத்தின் மேல் எழுதப் பெற்றக் கட்டுரைகள் மதிப்பிடப்பெற்றுள்ளன. இக்கட்டுரையின் பல கருத்துகள் சங்க இலக்கியத்தைப் புரட்டிப்போடுகின்றன.
இனியொரு என்ற தலைப்பிலான ஒரு தளமும் மார்க்சிய முறையில் இயங்கும் கோட்பாடுகளுக்கு இடமளிக்கும் ஆக்கங்களுக்கு இடம் தரும் தளமாக உள்ளது. இதன் முகவரி iniyoru.com என்பதாகும்.
உளவியல்:
உளவியல் அடிப்படையிலான கோட்பாடுகளுடன் சங்க இலக்கியங்களை ஒருங்கிணைத்துப் பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. மோகனா என்ற சென்னைப்பல்கலைக்கழக ஆய்வாளர் தனக்கென ஒரு வலைப்பூவை நிறுவி அதனுள் தன்னுடைய பல கட்டுரை ஆக்கங்களை வெளியிட்டுள்ளார். உளவியல் அடிப்படையில் ஐந்துச் சங்கப் பெண்பாற் புலவர்களின் ஆக்கங்களை அவர் ஆராய்ந்துள்ளார். இத்தளத்தின் முகவரி mohanawritings.blogspot.in என்பதாகும்.
உளவியில் அணுகுமுறை பற்றிய தகவல்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இலக்கியத்திறனாய்வுப் பாடத்தின் வழியாக வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. அதனடிப்படையில் ஆய்வாளர்கள் உளவயில் ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.
பின்னை நவீனத்துவம்:
பெண்ணியம்:
பின்னை நவீனத்துவக் கோட்பாடுகளில் பெண்ணிய நோக்கில் பல ஆய்வர்ளர்கள் சங்க இலக்கியத்தை ஆராய்ந்துள்ளனர். அ.ராமசாமி, பஞ்சாங்கம், மு.பழனியப்பன் போன்றோர் இதனுள் குறிக்கத்தக்கவர்கள். அ. ராமசாமி பக்கங்கள், பெண்ணியம் (இணைய இதழ்), பதிவுகள் (இணைய இதழ்) ஆகியவற்றில் பெண்ணியக் கட்டுரைகள் பல இடம்பெற்றுள்ளன.
பின்னை நவீனத்துவம்:
பின்னை நவீனத்துவம் என்ற கோட்பாட்டிலும் பல இணையப் பக்கங்கள் கிடைக்கின்றன. பின்னை நவீன அலை என்ற இணையப் பக்கம் பின்னை நவீனத்துவக் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தி அவற்றின் வழியாக சங்க இலக்கியங்களை நோக்குகின்றது. அ.ராமசாமி, முத்துமோகன், தமிழவன் போன்ற பலரின் ஆக்கங்கள் இணையவழிப் படுத்தப்பெற்றுள்ளன. இவர்கள் பின்னை நவீனத்துவம் சார்ந்து இயங்குபவர்கள் ஆவர்.
இவ்வாறு பல்வேறு கோட்பாடுகளை அறிமுகப்படுத்தி அக்கோட்பாடுகளின் வழி சங்க இலக்கியங்களைக் காண பெரும் வாய்ப்புகள் இணையத்தில் கிடைத்துவருகின்றன. இவற்றைத் துணை கொண்டு இளைய ஆய்வாளர்கள் பயன் கொள்வது என்பது அவர்களின் தரத்தை உயர்த்தி நிற்கும்.

கருத்துகள் இல்லை: