திங்கள், ஏப்ரல் 10, 2006

சாலை


சாலை

காட்சி-1

சென்னை மாநகரம்
நிரம்பி வழியும்
சக்கரம் முளைத்த குப்பைத்தொட்டி
குப்பைச் சேகரிப்பு வாகனம்
நாளை
காலை வரும்
இந்தச் சாலையில்
இன்னும் மூன்று இருக்கின்றன

எல்லாவற்றிலும்
பிளாஸ்டிக் பைகளைப்
பொறுக்க வேண்டும்.
தண்ணீர் பட்டவை
படாதவை
மெல்லிதானவை
கடினமானவை
தரம் பிரித்துச் சேர்க்கத் தனிதனிப்பைகள்
தூக்கிச் செல்வதில் சிரமம் இருக்காது

வயதுக்கு மீறிய சுறுசுறுப்பு
வெள்ளை தாடி
மடிந்து கன்னத்தில் விழும்
கண்பள்ளங்கள் குழிவிழுந்து
கண்பந்துகள் துருத்தி நிற்கும்

கைகளில் எது பட்டாலும்
கால்களில் எது ஒட்டினாலும்
கவலையில்லை
இன்றைக்கு
எடை எவ்வளவு
தாராசில் நெருக்கப்படும்வரை நெருடும் நெஞ்சம்

இன்று ரூபாய்
பன்னிரண்டோ பத்தோ
கொண்டுபோய் தந்தால் மருமகள் சோறிடுவதில்
வருத்தம் இருக்காது
கைகள் பரபரக்கின்றன

காட்சி-2

போவோர் வருவோர் தெய்வம்
அவர்களைப் பார்த்தே பொழுது போய்விடும்
வீட்டு வெளி வாசலில்
சிறு நாற்காலி
ஆடாமல் அசையாமல்
அமர்ந்து
தினம் வந்த மனிதர்களைப் பார்த்து
அவர்களின் நிறம் பார்த்து

பென்ஷன் போதும்
நான் சாப்பிடும் சாப்பாட்டுக்கு

ஊர்ப்பக்கங்களில்
ஏன் பெரிய பெரிய கோவில்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறது

காலாற நடக்கலாம்
மூக்காற சுவாசிக்கலாம்
கண்ணாற வானம் பார்க்கலாம்

இருந்தாலும்
பத்தடி பத்தடி
வானத்திற்குள் வாழ்க்கை பழகிக் கிடக்கிறது

போவோம் என்றாலும் முடியாத நிலை
இருப்போம் என்றாலும் முடியாது

மணி ஆறாகி விட்டது
பக்கத்து வீட்டுப் பெண் அலுவலகம் விட்டு வந்தாச்சு
நாளையும் பார்க்க மனிதர்கள் வருவார்கள்
muppalam2003@yahoo.co.in

கருத்துகள் இல்லை: