செவ்வாய், ஏப்ரல் 04, 2017

செவ்விலக்கியங்களில் விளையாட்டு

செவ்விலக்கியங்களில் விளையாட்டு


Siragu sevvilakkiyam4
மனிதனின் உடலை வளப்படுத்துவது விளையாட்டு. மனித மனதை மகிழ்ச்சி அடையச் செய்வதும் அதுவே. மனித வாழ்வில் ஏற்படும் வெற்றித் தோல்விகளைச் சரிசமமாக ஏற்க வைப்பதும் விளையாட்டு அனுபவமே ஆகும். ‘‘செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கே” என்று விளையாட்டால் உவகை தோன்றும் என்கிறார் தொல்காப்பியர்.
சங்க இலக்கியங்களிலும், தொடர்ந்து எழுந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும், காப்பியங்களிலும் பல்வகை விளையாட்டுகள் குறித்த பதிவுகள் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன. தமிழர்தம் மரபு சார்ந்த அடையாளங்களுள், பழக்கவழக்கங்களுள் ஒன்றாக நீடித்து இருப்பது விளையாட்டுத் துறை ஆகும். செவ்விலக்கிய கால விளையாட்டுகள் இன்றைக்கு வரை தமிழர்களின் புழங்குமுறையில் இருப்பது என்பது விளையாட்டு உணர்ச்சியின் தொடர்வையும், செவ்விலக்கிய கால நீட்சியையும் அறிவிப்பதாக உள்ளது.
விளையாட்டில் ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர், முதியோர் போன்றோர் தனித்தும், குழுவாகவும் கலந்து கொள்ளும் பல விளையாட்டுகள் செவ்விலக்கியங்களில் காணப்பெறுகின்றன.
உடல்வித்தை, உழலை, எழில், கவண், கவணை, சிறுபாடு, தெள்விளி,மரம்ஏறல், முக்கால்சிறுதேர், வட்டு, வில்ஆகிய விளையாட்டுகள் சிறுவர் விளையாடும் விளையாட்டுகள் ஆகும். சிறுமியர் ஆடுவனவாக எண்ணல்,ஓரைகண்புதை, கழங்கு, களவு, காய்மறை, சிற்றில், தெற்றி, தைந்நீராடல், பந்துபாவை, பூ கொய்தல், மரம்வளர்த்தல், வட்டுஆகியன அமைந்தன. வண்டல் என்ற விளையாட்டு மகளிர் ஆடிய விளையாட்டு ஆகும். ஏறுதழுவுதல், குத்துச் சண்டை, மற்போர், வட்டுநா, வில் போன்ற விளையாட்டுகள் ஆண்கள் ஆடிய விளையாட்டுகள் ஆகும். முதியோர்விளையாடிய விளையாட்டுகள் கட்டு, கவறு –கன்னம் தூக்கல், சூதுவட்டு சூதுவட்டு, வல்லு ஆகியனவாகும்.
இவை தவிர காதலர் விளையாட்டு, நீர் விளையாட்டு, படகு ஏறல் முதலியனவும் நடைபெற்றுள்ளன. மேலும் ஊசல், ஊதல், ஓட்டம், குளிர், தட்டை, தெள்விளி, தொழிற்பாடல், பறை, யானையேற்றம், வட்டு, அலவன்ஆட்டல், குறும்பூழ்ச்சண்டை, சேவல்சண்டை, தகர்ச்சண்டை, யானைப்போர் ஆகியன மகிழ்ச்சிக்காக விளையாடவும் பிறரால் பார்க்கவும் நிகழ்ந்துள்ளன. இவ்வகையில் பல்வேறு விளையாட்டுகள் செவ்விலக்கிய காலங்களில் தமிழ் மக்களால் விளையாடப்பெற்றுள்ளன. அவற்றில் சில இன்னமும் தமிழர் வாழ்வில் அமைந்துச் செவ்விலக்கியத் தொடர்பினை வெளிப்படுத்தி நிற்கின்றன. இவற்றில் சிலவற்றின் விரிவினை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
சிறுதேர் உருட்டல்
Siragu sevvilakkiyam2
சிறுவர்களின் விளையாட்டில் இன்றுவரை தொடரும் விளையாட்டுக்களுள் ஒன்று சிறுதேர் உருட்டும் விளையாட்டு ஆகும். இது தேர் போன்ற மாதிரி வடிவத்தையும் உருட்டுவதாக அமைகிறது. தற்காலத்தில் உள்ள நடைவண்டி ஓட்டும் விளையாட்டு இதன் எச்சமாகும்.
‘‘தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த
ஊரா நல்தேர் உருட்டிய புதல்வர்
தளர்நடை வருத்தம் வீட அலர்முலைச்
செவிலி அம்பெண்டிர்த் தழீஇ பால் ஆர்ந்து
அமளி துஞ்சும் அழகுடைநல் இல்”
என்று உழவர் இல்லத்தில் சிறுவர் சிறுதேர் உருட்டிய நிகழ்வைப் பெரும்பாணாற்றுப்படை காட்டுகிறது. நடைவண்டியில் சிறுவர்கள் ஏறி மகிழ இயலாது. இருப்பினும் அவர்கள் ஏறி மகிழ்வது போன்ற இன்பத்தைத் தரவல்லதாக அவ்விளையாட்டு அமைகிறது. இதனையே இப்பாடல் ஊரா நல்தேர் என்று குறிப்பிடுகிறது. சிறுதேர் ஓட்டி அயர்ந்தபோது செவிலித்தாயர் அச்சிறுவர்களைத் தழுவி எடுத்து, பால் தந்து, படுக்கையில் தூங்க வைத்த நிகழ்வுகள் பெரும்பாணாற்றுப்படையில் காட்டப்பெற்றுள்ளன. ஐங்குறுநூற்றில் தலைவனும் தலைவியும் தம் மகன் சிறு தேர் உருட்டி விளையாடும் விளையாட்டினைக் கண்டு மகிழ்கின்றனர். இல்லறப் பயனை அனுபவிக்கின்றனர்.
‘‘புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே
அகன் பெருஞ்சிறப்பின் தந்தை பெயரன்
முறுவலின் இன்னகை பயிற்றிச்
சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே”
சிறிய தேரைத் தன் மகன் ஓட்டிச் செல்வதைத் தலைவனும் தலைவியும் காணுகின்றனர். அச்சிறுவன் முறுவல் பூத்த வண்ணம், தளர் நடை இட்டபடி சிறுதேரை உருட்டுகிறார். இதனைக் கண்டு தலைவி மகிழ்கிறாள். தலைவன் மீது கொண்ட அன்பின் பெரிய தன்மைபோல தன் மகனிடத்திலும் பெரிய அன்பினை அவள் வைக்கிறாள். இவ்வாறு சிறுதேர் விளையாட்டு குடும்பத்திற்கே உவகை தருவதாக அமைகிறது.
”தச்சன் செய்த சிறுமா வையம்,
ஊர்ந்துஇன் புறாஅர் ஆயினும், கையின்
ஈர்ந்து இன்புறூஉம் இளையோர் போல
உற்றுஇன் புறோம் ஆயினும் நற்றேர்ப்
பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே”
என்ற பாடலில் சிறுதேர் இழுக்கும் இன்பம் உவமையாக ஆக்கப்பெற்றுள்ளது. இது மருத நிலப்பாடல். தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து வேறு ஒருத்தியுடன் பழகி வருகிறான். இந்நிலையில் தலைவி தன் துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்கிறார். தச்சர்கள் செய்து தந்த சிறிய தேரில் அமர்ந்து செல்ல முடியாவிட்டாலும் அதனை இழுத்துச் சென்று இன்பம் பெறுகின்றனர் சிறுவர்கள். அதுபோல தானும் தலைவனுடன் உற்று இன்புறாவிட்டாலும் அவனின் உறவினைப் பெற்றோம் என்பது கருதி மகிழ்கிறோம். இதன் காரணமாக கழன்று விழ இருந்த என் வளையல்கள், கழலாது இறுக்கமாகின என்கிறாள் தலைவி.
இப்பாடலில் சிறுமா வையம் என்பது குறிக்கத்தக்க பகுதி. மா என்பது குதிரையைக் குறிப்பது. தேரைக் குதிரை இழுத்துச் செல்வது என்பது நடைமுறை. ஆனால் இந்தச் சிறு தேரைக் குதிரை இழுக்க முடியாது. எனவே சிறுவர் இழுத்துச் செல்கின்றனர். இச்சிறுதேரில் ஏற இயலாது. ஆனாலும் சிறுவர்கள் இதனை இழுக்க இயலும்  குதிரையால் இழுக்க இயலாத சிறுதேரின் தன்மையைப் பட்டினப்பாலையும் காட்டுகிறது.
‘‘நேரிழை மகளிர் உணங்குஉணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்கால் சிறுதேர் முன்வழி விலக்கும்”
என்ற பகுதியில் புரவி இன்று உருட்டும் முக்கால் சிறுதேர் என்பது தேரின் வடிவழகைக் காட்டும் பகுதியாகும். முக்கால் என்பது மூன்று சக்கரங்களை உடைய தேர் என்பதை விளக்குவதாகும். புரவி என்பது குதிரை. தேர் என்றால் குதிரைகள் இழுத்துச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்ல இயலாத சிறு தேர் என்பதை விளக்க செவ்விலக்கியங்கள் முயன்றுள்ளன. கோழியை விரட்ட வீசப்பட்ட குழை என்ற தங்க ஆபரணம் சிறுவர் தேரினை தடுக்கும்படியாகக் கிடந்தது என்று இப்பாடலடிகள் குறிக்கின்றன. இதன் காரணமாக குழை தடுக்கும் அளவிற்குச் சிறுமை உடைய தேர் என்பதும் பெறத்தக்கது.
இவ்வகையில் தலைவன், தலைவியின் இன்ப அன்பின் உவமைப் பொருளாகச் சிறுதேர் விளங்கி அது விளையாட்டுப் பொருள் என்ற நிலையில் இருந்து உயர்ந்து அகப்பொருள் சார்புடையதாக அமைந்துவிடுகிறது.
பந்தாடல் 
Siragu sevvilakkiyam5
செவ்விலக்கிய காலம் முதல் இன்றுவரை தொடர்கிற விளையாட்டுக்களில் குறிக்கத்தக்க விளையாட்டு பந்தாடல் என்பதாகும். மகளிர் ஆடும் இவ்விளையாட்டு பற்றிய பல செய்திகள் செவ்விலக்கியங்களில் காணப்பெறுகின்றன. உயர்ந்த மாடங்களில் பெண்கள் வரிபந்துகளை வைத்து விளையாடியதாக பெரும்பாணாற்றுப்படை குறிக்கிறது. ‘‘தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப, உயர்நிலை வான் தோய் மாடத்து வரிப்பந்துஅசைஇ” என்ற பாடற்குறிப்பு இதனை உறுதி செய்யும்.
”சீர்கெழு வியன்நகர்ச் சிலம்பு நகஇயலி
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்
‘வாராயோ‘ என்று ஏத்தி பேர் இலைப்
பகன்றை வான்மலர் பனி நிறைந்ததுபோல்
பால்பெய் வள்ளம் சால்கை பற்றி
என்பாடு உண்டனை ஆயின் ஒருகால்
நுந்தை பாடுமு் உண் என்று ஊட்டி
பிறந்ததற் கொண்டும் சிறந்தவை செய்து யான்
நலம்புனைந்து எடுத்த என் பொலந்தொடி குறுமகள்”
என்று ஒரு நற்றாய் பாடுகிறாள். இதில் தலைவி தன் தோழியர் குழாத்துடன் பந்து விளையாடும் செய்தி குறிக்கப்பெற்றுள்ளது. பெரிய வீட்டினில் வளர்ந்த என் மகள், சிலம்பு ஒளிவிடுமாறு தோழியர் கூட்டத்துடன் பந்து விளையாடுகிறாள். சிறிது நேரம் அவள் விளையாடினாலும் பெரிதாய் விளையாடினாள் என கவலை கொள்கிறாள் நற்றாய். இதன் காரணமாக, வெள்ளிக் கிண்ணத்தில் பால் கொண்டு வந்து அவளுக்கு அயர்ச்சி நீக்க முயற்சிக்கிறாள். அப்போது சிறிது உண்பாள். பின் பால் உண்ண மறுப்பாள். அப்போது ‘என் பங்கிற்குப் பால் உண்டுவிட்டாய். உன் தந்தை பங்கிற்கும் சற்று பால் அருந்து” என்று யான் குறிப்பிடுவேன் என்கிறாள் நற்றாய். அத்தகைய செல்வ வளம் மிக்கவளாக என் தலைவியை நான் வளர்த்தேன் என்று நற்றாய் குறிப்பதாக அகநானூறு பாடுகிறது. இப்பாடல் வழி பந்தாடும் நிகழ்ச்சி ஆயமுடன் ஆடப்படுவது என்பது தெரியவருகிறது.
அகநானூற்றின் மற்றொரு பாடலில் பந்து ஆடிய காரணத்தால் தலைவிக்கு ஏற்படும் அயர்வினைப் பற்றிய குறிப்பு இதுபோன்றே அமைகிறது.
‘‘வளம்கெழு திருநகர்ப் பந்து சிறிது எறியினும்
இளந்துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்
உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ
மயங்குவியர் பொறித்த நுதலன் தண்ணென
முயங்கினள் வதியும் மன்னே”
என்று தலைவி ஆயமோடு பந்து சிறிது நேரம் விளையாடினாலும் தன் உடல் வருத்தம் பெற்றது என்று மயங்கும் மெல்லியத்தன்மை வாய்ந்தவளாகப் படைக்கப்பெற்றுள்ளாள்.
‘‘ஆம்தீம் கிளவி ஆயமொடு கெழீஇப் பந்துவழிப் படர்குவன் ஆயினும் நொந்துநனி வெம்பும்மன் அளியல்தானே” என்ற பாடலடிகளில் தலைவி, தன் ஆயமோடு பந்து விளையாடும் நிலையும், இதன் காரணமாகத் தலைவிக்கு எழும் நோவும் சுட்டப் பெறுகின்றன.
பந்துகளை ஒருவர் மீது ஒருவர் எறியும் நடைமுறையும் செவ்விலக்கிய காலத்தில் இருந்துள்ளது. ‘‘கோதை வரிப்பந்து கொண்டு எறிவார்” பந்தர் வயலை பந்து எறிந்து ஆடி என்ற பாடலடிகள் இதற்குச் சான்றாவன.
இவ்வகையில் பந்து விளையாட்டு என்பது செவ்விலக்கியச் சார்புடையது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.  
கழங்கு
Siragu sevvilakkiyam3
பெண்கள் விளையாடும் செவ்விலக்கிய விளையாட்டுகளில் இன்றும் தொடர்ந்து விளையாடப்பட்டு வரும் முக்கியமான விளையாட்டு கழங்கு என்பதாகும். இவ்விளையாட்டு, கழற்சிக்காய், அல்லது முத்துக்கள் அல்லது முத்துக்கள் வடிவில் இருக்கும் மரக்கட்டை அமைப்புகள் கொண்டு விளையாடப்பெறும். யானைத் தந்தத்தில் கழற்காய்கள் செய்யப்பட்டதாக அகநானூறு குறிக்கிறது. ‘‘கோடுகடை கழங்கின்” என்ற குறிப்பு இதனை உணர்த்தும். இது தற்போது மூன்றாங்கல் முதல் பதினாறாங்கல் வரை விளையாடப்பெறுகிறது.
வீட்டுக்கு வெளியே மணற்பகுதியில் பெண்கள் கூட்டமாகக் கழங்கு விளையாடியுள்ளனர் .
‘‘கூரை தன்மனைக் குறுந்தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின் அறைமிசைச் தாஅம்”
என்று கழங்கு ஆடிய இடம் இப்பாடலடிகளில் காட்டப்பெற்றுள்ளது,
பெரும்பாணாற்றுப்படையிலும் மணற்பாங்கான இடத்தில் கழங்கு விளையாடப்பெற்ற குறிப்பு காணப்பெறுகிறது.         ‘‘பைய
முத்த வார்மணல் பொற்கழங்கு ஆடும்
பட்டின மருங்கின் அசையின்”
என்ற பகுதி மேற்கருத்துக்கு வலு சேர்க்கும். கழங்கு ஆட்டம் விளையாட்டாகவும் செவ்விலக்கிய காலத்தில் இருந்துள்ளது. நன்மை, தீமை அறியும் முன்னோட்டமாகவும் அது செவ்விலக்கிய காலத்தில் இருந்துள்ளது. ‘‘எல்லாம் எண்ணின் இடு கழங்கு தபுந” என்று பதிற்றுப்பத்து இதனைக் குறிக்கிறது. நார்முடிச் சேரலைப் போரில் வெல்லுவதற்கான கழற்காய்களை உருட்டி அதன்வழி கணக்கிட்டு வந்த பகைவர் அனைவரும் கழற்காய் பொய் சொன்னது என்னும் அளவிற்குத் தோல்வியைத் தழுவ வைத்த அரசனே என்ற இப்பாடல் குறிப்பின்படி இது விளங்குகிறது.
இதே நிலை ஐங்குறுநூற்றிலும் காணக்கிடைக்கிறது.
‘‘பொய்படுபு அறியாக் கழங்கே! மெய்யே
மணிவரைக் கட்சி மடமயில் ஆலும்நம்
மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோன்
ஆண்டகை விறல்வேள் அல்லள்இவள்
பூண்தாங்கு இளமுலை அணங்கியோளே”
பொய்த்தலைத் தராத கழங்கு என்று குறிப்பிட்டு, அது பொய்யான நிலையைக் கபிலர் காட்டுகிறார். தலைவி தலைவன் மீது ஆறாக்காதல் கொண்டு அவனை அடைய இயலாது வருந்துகிறாள். இந்நேரத்தில் வேலன் ஒருவன் வருகை தந்து கழற்காய்களை உருட்டித் தலைவிக்கு இத்துயரம் முருகனால் வந்தது என்று கூறிச்செல்கிறான். இதனைக் கேட்டு நகைத்த தோழி இது முருகனால் வந்தது அல்ல, தலைவனால் வந்தது” என்று பேசுகிறாள்.
இவ்வகையில் கழங்காடல் ஒரு விளையாட்டாகவும் பின்வருவதை அறிவிக்கும் முன் முயற்சியாகவும் செவ்விலக்கிய காலத்தில் விளங்கியுள்ளது என்பது குறிக்கத்தக்கது. தற்போது சோழி உருட்டும் நிலை இதனுடன் ஒப்பு வைத்து எண்ணத்தக்கது.
சிலப்பதிகாரத்தில் ‘‘பந்தும் கழங்கும் தந்தனர் பரசி” என்று இரு விளையாடல்கள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.
வண்டல்
Siragu sevvilakkiyam7
மணலில் சிற்றில் கட்டி விளையாடும் விளையாட்டு வண்டல் எனப்படுகிறது. இன்றுவரை தொடரும் செவ்விலக்கிய விளையாட்டாக இது அமைகிறது. மணலில் பாவை செய்து விளையாடுவதும் இவ்வகை விளையாட்டாகின்றது.
தலைவனும் தலைவியும் உடன்போக்கு செல்கின்றனர். அப்போது, தலைவி தன்னை நம்பி வந்த காரணத்தினால் தலைவன் அவளின் மெல்லிய இயல்புகளுக்கு இடம் தருகிறான்
‘‘நிழல்காண் தோறும் நெடிய வைகி
மணல்காண்தோறும் வண்டல் தைஇ
வருந்தாது ஏகுமதி வாள் எயிற்றோயே!”
என்றவாறு தலைவன் தலைவியிடம் பேசுகிறான். புதுமணல் புறப்பாட்டின்போது, சிற்றில் கட்டி விளையாடும் இயல்புடையவள் தலைவி என்பது இதன்வழி தெரியவருகிறது.
ஐங்குறுநூற்றில் வண்டலில் பாவை செய்து விளையாடும் இயல்பினைக் காணமுடிகின்றது.
‘‘கண்டிகும் அல்லமோ காண்கநின் கேளே?
வண்டற் பாவை வௌவலின்
நுண்பொடி அளைஇக் கடல் தூர்ப்போளே”
என்ற பாடலில் தலைவி கடல் மணிலில் பாவை செய்து விளையாடினாள். ஆனால் அந்தப் பாவையைக் கடல் கொண்டுபோனதன் காரணமாக அதனைத் தேடித் தலைவி கடலைத் தூர்த்துக்கொண்டிருக்கிறாள் என்று தலைவியின் காதல் மேன்மையை இப்பாடல் விளக்குகிறது.
தலைவி கட்டிய சிற்றில்லின் அழகினை ஒரு அகநானூற்றுப்பாடல் விவரிக்கிறது.
‘‘கூழை நொச்சிக் கீழது என்மகள்
செம்புடைச் சிறுவிரல் வரித்த
வண்டலும் கண்டிரோ கண்உடையீரே?”
என்ற இப்பாடலில் குட்டையான நொச்சி மரத்தின் அடியில் என்மகள் தன் சிறுவிரலால் கட்டிய சிற்றில்லைப் பாருங்கள். அவள் நேற்று இவ்விடத்தை விட்டுப் பிரிந்துவிட்டாள். இருந்தாலும் அவள் கட்டிய சிற்றிலின் அழகு நம்மைக் கவர்கிறது என்று குறிக்கிறாள் நற்றாய்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் வண்டல் இழைக்கும் முறைமை பதிவு செய்யப்பெற்றுள்ளது. ‘‘பேதை மடவார் தம் வண்டல் விளக்கு அயரும் – (ஐந்திணை ஐம்பது, பாடல் 46 அடி.2) வண்டல் அயர் மணல் மேல் வந்து – திணைமாலைநுநூற்றைம்பது பாடல்3) என்ற நிலையில் வண்டல் பதிவாகியுள்ளது.
இவ்வாறு சிற்றில் இழைக்கும் விளையாட்டைச் செவ்விலக்கியங்கள் பாடுகின்றன.
இவை தவிர வட்டு, ஏறுதழுவுதல் போன்ற பல விளையாட்டுகள் இன்னமும் செம்மொழி இலக்கிய மரபில் தமிழகத்தில் நின்று நிலவி வருகின்றன. இவ்வகையில் தொன்மைச் சமுதாயத்தின் விளையாட்டுக் கூறுகளைத் தமிழகம் தழுவி நிற்பது அதன் மரபுபோற்றல் சிறப்பினை வெளிப்படுத்துவதாக உள்ளது.

கருத்துகள் இல்லை: