திங்கள், பிப்ரவரி 29, 2016

அடியார் பெருமை


karaikal ammaiyar2


அடியார் பெருமை அளவிடற்கரியது. சிவனடியார்களின் கழுத்தினில் உருத்திராட்சமும், உடலில் திருநீறும், உள்ளத்தில் சிவமந்திரமும் நீங்காது நிறைந்திருக்கும். இதன் காரணமாக உடலாலும், உள்ளத்தாலும் புண்ணியர்களாகச் சிவனடியார்கள் விளங்குகின்றனர். கூடும் அன்பினில் கும்பிடுதலே சிவனடியார்களின் இயல்பு. அவர்கள் செய்வதனைத்தும் சிவத்தொண்டுகள். அவர்கள் நடப்பதெல்லாம் சிவபூமி. அவர்கள் ஊர்தோறும் சென்றுச் சிவனை வணங்கும் கடப்பாடு உடையவர்கள். அவர்கள் தங்க சிற்சில ஊர்களில் மடங்கள் இருக்கலாம். பல ஊர்களில் இவ்வசதி இருப்பதில்லை. இச்சூழலில் ஊர்வலம் வரும் சிவனடியார்களைப் பாதுகாக்க ஊர் மக்களே முன்வரவேண்டி இருக்கிறது. அவ்வாறு சிவனடியாரைக் காப்பவரெல்லாம் சிவனடியார்கள். வருபவர்கள் சிவனடியார்கள். பாதுகாப்பவர்கள் சிவனடியார்கள். இவ்வாறே ஊரில் உள்ள எல்லாரும் நாட்டில் உள்ள எல்லாரும் உலகத்தில் உள்ள எல்லாரும் சிவனடியார்களாகின்றனர்.
சிவபெருமான் ஆலயங்கள் இல்லாத ஊரே ஊர் இல்லை என்ற நிலையில் ஒவ்வொரு ஊரிலும் சிவனை வணங்குவோர் இருப்பர். அவர்கள் அவ்வூர்ச் சிவனடியார்கள். அவர்கள் ஊர்வலமாக வரும் சிவனடியார்களைப் போற்றிப் பாதுகாத்து உணவளித்துச் செய்யும் தொண்டு சிவத்தொண்டாகின்றது. மயிலாப்பூரில் பூம்பாவையை எழுப்பச் சம்பந்தர் முன்வரும்போது இத்தொண்டின் பெருமையை முன் வைத்துப் பாடுகிறார் சேக்கிழார்.
மண்ணி னில்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும் 
அண்ண லார்அடி யார்தமை அமுதுசெய் வித்தல் 
கண்ணி னால்அவர் நல்விழாப் பொலிவுகண்(டு) ஆர்தல் 
உண்மை யாம்எனில் உலகர்முன் வருகஎன உரைப்பார் 
(பெரியபுராணம் 1087)
என்பது சேக்கிழாரின் திருவாக்கு.
பூம்பாவையை எழுப்ப முன்வந்த சம்பந்தர் எவ்விடத்திலும் செய்யாத ஒன்றை மயிலாப்பூரில் செய்கின்றார். மற்ற உயிர்ப்பிக்கும் இடங்களிலெல்லாம் நடக்காத ஒன்று இத்திருவிளையாட்டில் நடைபெறுகிறது. சம்பந்தர் சில சத்திய மொழிகளை உரைத்து அவை உண்மையானால் பூம்பாவை எழட்டும் என்று சிவபெருமானிடம் வேண்டுகோளை வைக்கின்றார்.
“சிவத்தொண்டு என்பது சிவனடியார்க்கு உணவளிப்பது, சிவ விழாக்கள் கொண்டாடுவது என்ற இரண்டும் முன்னிற்பது உண்மையானால் இறந்த பூம்பாவை உயிருடன் எழவேண்டும்”, என்று சம்பந்தர் பாடுவதாக அமைக்கிறார் சேக்கிழார். அதன்படியே சிவ கருணை மேலெழுந்து ஒடுங்கிய இடத்தில் இருந்துப் பூம்பாவை சிவனருளால் பிறந்து, வளர்ந்து வருகிறாள். இதன் காரணமாகச் சிவனடியார்க்கு உணவளித்தல் என்ற தொண்டின் மேன்மையை உணர்ந்து கொள்ள முடிகின்றது.
சிவனடியார்களை இல்லத்திற்கு அழைத்து உணவு தரும் நிலைக்கென்று மரபும் முறைமையும் உண்டு. பெரியபுராணத்தில் இதற்கான முறைமை விரவிக்கிடக்கின்றது. அடியார்களை
1. எழுந்தருளுவித்தல்,
2. பீடம் இட்டு அமரச்செய்தல்,
3.நறுநீர் கொண்டு திருவடிகளை விளக்குதல்,
4. விளக்கிய நீரை வீடெங்கும் தெளித்தல்,
5. எஞ்சிய நீரை உள்ளும் பருகுதல்,
6. பின் அவர்களுக்குப் பூசனை செய்தல்,
7. இதன்பிறகு அவர்களுக்குத் திருவமுது படைத்தல் அவற்றோடு நிதி, ஆடை, உணவுப் பாத்திரம் ஆகியன தருதல்,
ஆகிய நடைமுறைகளை உடையதாகச் சிவனடியார்களை வரவேற்று உணவளிக்கும்முறை அமைகின்றது.
இதனை முறையே…
1. ஆவாகனம்,
2. தாபனம்,
3.பாத்தியம்,
4. அருக்கியம்,
5. ஆசமனம்,
6. அருச்சனை,
7. நிவேதனம் ஆகியனவாக வடமொழியிலும் குறிக்கலாம். இம்முறைமைகளைக் குறைவறச் செய்து சிவத்தொண்டு ஆற்றியவர்கள் நாயன்மார்கள். அவர்கள் வழியில் நாமும் சிவனடியார்களைத் தொழுதல் செய்யவேண்டும்.
1. எழுந்தருளுதல் (ஆவாகனம்): 
சிவனடியார்கள் ஊருக்குள் நுழையும்போதே கோவிலைக் கண்டு இன்புற்று அங்குள்ள இறைவனைக் காண ஏங்கி வருவர். முதல் வேலையாக எம்பிரானைக் கண்டபின்னே அந்த ஊரில் உணவு, தங்கல் போன்றனவற்றைப் பற்றிச் சிந்திப்பர். இந்நேரத்தில் அவ்வூர் அன்பர்கள் சிவனடியார்களைக் கண்டு அவர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல முன்வரவேண்டும்.
ஆரம் என்பு புனைந்த ஐயர்தம் அன்பர் என்பதோர் தன்மையால் 
நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்திமுன் 
கூர வந்து எதிர் கொண்டு கைகள் குவித்து நின்று செவிப்புலத்து 
ஈர மென்மதுரப் பதம்பரிவு எய்த முன்னுரை செய்தபின் (442)
என்ற பாடல் இளையான்குடி மாற நாயனார் புராணத்தில் இடம்பெறுகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள “நேர வந்தவர் யாவர் ஆயினும்” என்பது சிறப்பு மிக்கத் தொடராகும். சிவனாரின் அடியார் என்ற நிலையில் அடியவர் யார் வந்தாலும் சாதி, இனம், மொழி எப்பாகுபாடும் பாராமல் அவர்களின் முன் சென்று கைகள் குவித்து, அவர்களின் செவிகளில் மதுர மொழிகளால் இனியன கூறி இல்லத்திற்கு அழைக்கவேண்டும் என்பது முறைமையாகின்றது. அடியார்களிடம் பேசும் நன்மொழிகளைக் கூடச் சேக்கிழார் தன் காப்பியத்தில் தந்துவிடுகிறார்.
“நன்று உமது நல்வரவு, நங்கள் தவம்” (பாடல். 180) என்று சொல்லலாம்.
“எந்தைபிரான் புரிதவத்தோர்; இவ்விடத்தே எழுந்தருள உய்ந்தொழிந்தேன் அடியேன்” (896) என்றும் கூறலாம்.
“முந்தை எம் பெரும் தவத்தினால் என்கோ? முனிவர் இங்கு எழுந்தருளியது” (408) என்று குறிப்பிடலாம்.
“முடிவில் தவம் செய்தேன் கொல்! முன்பொழியும் கருணை புரி வடிவு உடையீர். என்மனையில் வந்து அருளிற்று என்?” (1797) என்றும் பாராட்டலாம்.
இவ்வாறு பலபட பாராட்டிச் சிவனடியாரை இல்லம் அழைத்துவருவது என்பது முதல் நிலை.
2. பீடம் இட்டு அமரவைத்தல் (தாபனம்): 
வரவேற்று இல்லம் அழைத்து வந்த அடியார் இப்போது வீட்டு வாசலில் நிற்கிறார். யார் வந்தாலும் வீட்டுக்குள் அழைத்து அவர்களுக்கு இருக்கை தந்து உபசரிப்பது தமிழர் மரபு. வந்திருப்பவர் அடியார். வரவேற்பவர் அடியார். வந்தவரை வணங்கி வீட்டிற்குள் அழைத்து உரிய இருக்கையில் அமரவைப்பது என்பது அடுத்தபடிநிலையாகும்.
அடியவர் அமரும் பீடம் வீட்டாரின் வசதிக்கு ஏற்றது என்றாலும், வீட்டிலே இருக்கும் உயர்ந்த ஆசனம் அதுவாக இருக்கவேண்டும். சந்தமலர் மாலைகள், முத்துமாலைகள் ஆகியன சூட்டப்பெற்ற ஆசனமாக அது இருப்பது நலமாகும். பொன் ஆசனம் என்றாலும் அதுவும் தகும். நம்வீட்டில் இருக்கும் ஆசனம் அடியவர் உட்காருவதன் காரணமாக பொன் ஆசனமாக மிளிர்கின்றது. “மண்டு காதலின் ஆதனத்து இடை வைத்தார்” இளையான்குடி மாற நாயனார்.
3. நறுநீர் கொண்டு திருவடி விளக்குதல் (பாத்தியம்): 
வீடும் வேண்டா விறலினரான அடியவர், ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் அப்பெரியார் தற்போது ஆசனத்தில் அடிமைப் பாங்குடன் ஒதுங்கி அமர்கிறார். இச்சிறியவனுக்கு இச்செய்கை பொருந்துமா என்ற வெட்கம் அவரிடத்தில் எழ அவர் ஒதுங்கி அமர்கிறார். அவ்வாறு அமர்ந்திருக்கும் அவரின் திருப்பாதங்களை நறுநீர் கொண்டு விளக்குதல் அடுத்தமுறைமை ஆகும்.
கொண்டு வந்து மனைபுகுந்து குலாவு பாதம் விளக்கினார் இளையான்குடிமாற நாயனார்.
கமழ்நீர்க்கரகம் எடுத்து மனைவியார் ஏந்த, தூயநீரால் சோதியார் தம் கழல் வளிக்கினார் சிறுத்தொண்டர் (3735).
பாதங்கள் விளக்க நீர் முன் அளித்தார் காரைக்கால் அம்மையார். (1739)
இப்பாடலில் சிறுகுறிப்பு காணத்தக்கது. அடியவர் வந்துவிட்டார். கணவர் வீட்டில் இல்லை. இந்நிலையில் பெண்கள் அடியவரை வரவேற்பது சரியா. சிறுத்தொண்டர் புராணத்தில் அடியார் இல்லை என்பதால் வெளிநடப்பு செய்கிறார் அடியவர். இங்கு உள் நுழைகிறார் அடியவர். வரும் அடியவரைப் பொறுத்தது உள் வருவதும், வராததும். சிறுத்தொண்டர் புராணத்தில் அடியவரை வரவேற்கச் சிறுத்தொண்டரின் மனைவி தயாராக இருந்தும் அடியவரே நான் பெண்கள் தனித்திருக்கும் இடத்தல் வரமாட்டேன் என மறுத்துரைக்கிறார்.
காரைக்கால் அம்மையார் புராணத்தில் கடையில் கணவன் இருக்க, வீட்டில் அடியவர் நுழைய, மறுக்காது வரவேற்கிறார் அம்மையார். அவருக்குக் கால்களை விளக்கத் தான் முனையாது நீர் முன் அளிப்பதாகச் சேக்கிழார் பாடுகிறார்.
இதே நிலை ஏயர்கோன் கலிக்காமர் புராணத்திலும் வருகிறது. ஏயர்கோன் இருந்தும் இல்லாமல் இருக்கிறார். சுந்தரர் அந்நேரம் வருகிறார். அப்போது ஏயர்கோன் கலிக்காமர் மனைவி
“தூயமணிப் பொன்தவிசில் எழுந்தருளி இருக்கத் தூநீரால் சேயமலர்ச் சேவடி விளக்கி” (3193)
என்று தானே விளக்குகிறார். இங்கு கணவன் வீட்டில் இருக்கிறார். அவர் நினைவின்றி மயங்குகிறார். அவர் நினைவில் இருக்கையில் சிவனடியாரை வரவேற்பதில் ஏதும் குற்றம் வந்துவிடக் கூடாது என்ற நிலையில் ஏயர்கோன் கலிக்காமர் மனைவி கணவன் உடன் இருந்து செய்யும் பாதம் விளக்கலை அம்முறைப்படிச் செய்கிறார். இவ்வாறு வந்த அடியார் தன் கால்களை முன்னும் பின்னும் இழுத்து இப்பெருமை எனக்கானது அல்ல, சிவனுக்கானது என்று ஏற்கிறார்.
4. விளக்கிய நீரை தம் மீதும், வீடெங்கும் தெளித்தல் (அருக்கியம்): 
அடியார் ஏற்றுக்கொண்ட பாதம் விளக்கலைச் செய்து முடித்த நிம்மதி இப்போது வரவேற்ற அடியாருக்கு வந்துவிட்டது. இருந்தாலும் இது போதாது என்று அவர் மனம் எண்ணுகிறது. அடியார் அடிகளை விளக்கிய நீரை வீடெங்கும் தெளித்து தன் வீட்டைப் புதுப்பிக்கிறார் அடியவர். இதுவே அடுத்த முறைமையாகும்.
“முனைவரை உள் எழுந்தருளு வித்து அவர்தாள் முன்விளக்கும், புனைமலர் நீர் தங்கள்மேல் தெளித்து”( 1807) என்று அப்பூதி அடிகள் அடியார்க்குப் பெருமை சேர்க்கிறார்.
ஏயர்கோன் கலிக்காமர் மனைவி “தூநீரால் சேயமலர் சேவடி விளக்கித் தெளித்துக்கொண்டார். செழும்புனலால் மேயசுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களித்தார்” (3193) அவர் தெளித்த நீர் ஏயர்கோன் உயிரையும் நீட்டித்திருக்க வேண்டும்.
சிறுத்தொண்டர் “ஆய புனிதப்புனல் தங்கள் தலைமேல் ஆரத்தெளித்து இன்பம் மேய இல்லம் எம்மருங்கும் வீசி”(3735) பெருமை கொண்டார்.
அடியவர் அடிகள் நீரை அவரறிந்தும் அறியாமலும் வீடெல்லாம் தெளித்துப் பெருமை கொண்டனர் அடியார் இல்லத்தார்.
5. எஞ்சிய நீரை உள்ளும் பருகுதல் (ஆசமனம்): 
இல்லமெல்லாம் தெளித்து இல்லத்தைப் புதுமை செய்தபின் இன்னும் கொஞ்சம் அப்புனிதநீர் இருப்பதனால் தன் உள்ளுக்குப் பருகுகின்றனர் இல்லத்தார். அப்பூதியார் உள்ளும் பூரித்த நிலை (1807) பாடலால் தெரியவருகிறது.
6. பூசனை (அருச்சனை): 
அடியவர் ஆசனத்தில் இனிது அமர்ந்துள்ளார். அவருக்குப் பாதபூசை செய்யப்பெற்றது. அதன்பின் அவருக்கு அர்ச்சனைகள் செய்யவேண்டுவது முறையாகும். அருச்சனை செய்தபின் (443), ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து (1808), உளம்களிப்ப ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார் (3193), ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார் (3735) என்று அடியவரை ஆண்டவனாகவே எண்ணிப் பூசை செய்த நாயன்மார்தம் செய்கையைப் பெரியபுராணத்தில் காட்டுவார் சேக்கிழார். மலர்கள், சந்தனம், தீபம், தூபம் கொண்டு அடியவருக்குப் பூசனை நிகழ்த்தப்படுகிறது. அடியவரின் உடலுக்கும், உள்ளத்திற்கும், நினைவிற்கும், செயலிற்கும் நடத்தும் இப்பூசனை சிவபூசனையைவிடச் சிறந்தது. ஏனெனில் இப்பூசனை மெய்க்கு மெய்யாக நடத்தப்படும் பூசனையாகும். இறைவனுக்கும் மனத்தாலே, செய்கையாலே பூசனை செய்யலாம். அதனை இறைவன் ஏற்றானா என்பது சந்தேகம்தான். ஆனால் மெய்க்கு மெய்யாக இங்கு அடியவர் பூசனை நிகழ்த்தப்படுகிறது.
7. திருவமுது படைத்தல் (நிவேதனம்): 
பூசனை முடிந்தபின் திருவமுது படைப்பது என்பது நியதி. இத்திருவமுது காலம் கடத்தாமல் நன்பகல் தாண்டாமல் படைக்கப்படவேண்டும். காய்கறி உணவு ஏதும் ஆயத்தமாகவில்லை என்றாலும் திருவமுது (சோறு) மட்டும் தயிருடன் தரப்படலாம். அப்படித் தந்தவர் காரைக்கால் அம்மையார்.
“நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டு வல்விரைந்து வந்தணைந்து படைத்து மனமகிழ்ச்சியினால் அல்லல் தீர்ப்பவர் அடியார்தமை அமுது செய்வித்தார்” (1741) என்று திருவமுது படைத்தார் காரைக்கால் அம்மையார்.
பசி போக்கும் இனிய தொண்டு சிவத்தொண்டு ஆகும். பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் நிலையில் பசி கடக்கா வண்ணம் உணவிடுவது முக்கியம். உணவின் தரம், வகை ஆகியவற்றில் விடுதல் இருந்தாலும் உணவிடுவது காலத்திற்கு நடக்கவேண்டும் என்பது முறைமையாகும்.
“உண்டி நாலுவித்தில் ஆறுசுவைத்திறனில் ஒப்பிலா அண்டர் நாயகன் தொண்டர் இச்சையில் அமுது செய அளித்துள்ளார்” (443) இளையான்குடி மாற நாயனார்.
திருநாவுக்கரசு சுவாமிகள் அப்பூதி அடிகளின் வீட்டில் அமுது உண்கிறார். திருவமுதை இல்லமாதர் எடுத்து நல்க கொத்து அவிற் கொன்றை வேணிக் கூத்தனார் அடியாரோடும் அருந்தமிழ் ஆளியார் அங்கு அவர் அமுது செய்கின்றனார். அப்பூதியடிகள் வீட்டில் ஒரே ஒரு அடியவர் அதாவது திருநாவுக்கரசர் மட்டுமே உணவு உண்ண வந்திருக்க அடியாருடன் உண்டதாகச் சேக்கிழார் குறிக்கிறார். அடியார் உண்ணும் உணவு அதனை உண்ணும் அத்தனை பேரும் அடியாராக மாறும் திறம் இதுவேயாகும்.
வந்திருக்கும் அடியவர் முன் அவர் மனம் கோணாதபடி உணவுகளைப் பரிமாறுகின்றனர் சிறுத்தொண்டரின் இல்லத்தார். “புனிதர் தம்மைப் போனகமும் கறியும் படைக்கும்படி பொற்பின் வனிதையரும், கணவரும் முன் வணங்கிக் கேட்ப மற்று அவர்தாம் இனிய அன்னமுடன் கறிகள் எல்லாம் ஒக்கப்படைக்க” (3736) என்கிறார். இப்பாடலடியின்படி கற்பில் சிறந்த பெருமாட்டியும், பெருமை குன்றாமல் வாழ்ந்து வரும் சிறுத்தொண்டரும் விருந்துக்கான உணவுப்பொருட்களைப் பரிமாறிய நிகழ்வை அறிந்து கொள்ளமுடிகின்றது.
சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரருக்கு உணவு படைக்கிறார். இருவரும் தோழர் என்றாலும் அங்கும் அடியார்தமை வணங்கும் முறைமை பின்பற்றப்படுகிறது.
“பெருமான் வேண்ட எதிர் மறுக்க 
மாட்டார் அன்பின் பெருந்தகையார் 
திருமா நெடுந்தோள் உதியர்பிரான் 
செய்த எல்லாம் கண்டிருந்தார் 
அருமானங்கொள் பூசனைகள் 
அடைவே எல்லாம் அளித்ததன்பின் 
ஒருமாமதி வெண்குடை வேந்தர் 
உடனே அமுது செய்து உவந்தார்” (3904)
என்று அடியாரை உபசரித்தலைப் பூசனை என்ற ஒரு சொல்லால் இங்குக் குறிக்கிறார் சேக்கிழார். இச்சொல்லுக்குள் முன் சொன்ன படிநிலைகள் அனைத்தும் அடங்கிவிடுகின்றன. வரவேற்றல் முதல் பூசனை வரை அனைத்தும் நிகழ அடுத்து உணவு உண்ணும் நிலை வந்தது என்பதை இப்பாடல் தெரிவிக்கின்றது.
இவ்வாறு அடியார்களை அழைத்துச் சிவ உணவைத் தந்து மகிழச் சேக்கிழார் ஒரு செயல்திட்டம் வரைந்து அளித்துள்ளார். இதன்பின் அடைக்காய், வெற்றிலை, பசுங்கர்ப்பூரம் போன்றன நல்கி இப்படையலைச் செழுமைப்படுத்தவேண்டும். உண்ட அடியவர் மனம் மகிழ்ந்து தன் உணவைச் சிவ உணவாகச் சிவனுக்கு ஆக்குகிறார். அடியவர் வழியாக உண்ணும் முறைமையே ஆண்டவனின் உண்ணும் முற்றாகின்றது.
“அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் 
பொன்னம் பாலிக்கும் மேலும் பூமிசை 
என்னம் பாலிக்கும் மாறுகண் டின்புற 
இன்னம் பாலிக்குமோ இப்பிறவி” (அப்பர் தேவாரம்)
என்ற பாடலின்வழி அன்னம் பாலித்த அடியார்கள் தில்லைச் சிற்றம்பலத்தின் தொடர்பு பெற்றவர்கள் ஆகின்றார்கள். இதன்பின் அடியவருக்கு ஆடை, அணி, மணி, மலர்கள், திரு ஆபரண வர்க்கங்கள் எனப்பல தந்து இந்தச் சிவபூசையை நிறைவேற்றவேண்டும் என்பது சேக்கிழார் காட்டும் அடியார் வணக்க நடைமுறையாகும்.
இந்நடைமுறையில் நின்று நாளும் நம் இல்ல விருந்தைச் சிவ விருந்தாக மாற்றுவோம். சிவத்திற்கு எல்லாம் அளிக்கும் நன்முறையே சிவநடைமுறை.


நன்றி - வல்லமை

கருத்துகள் இல்லை: