சனி, ஜூலை 13, 2024

சீர் வளர் சீர் வீரசேகர ஞான தேசிக சுவாமிகள் என்னும் திருக்களர் ஆண்டவர் (1883-1911)

 

கோவிலூரின் கதை -5

 சீர் வளர் சீர் வீரசேகர ஞான தேசிக சுவாமிகள் என்னும் திருக்களர் ஆண்டவர்

(1883-1911)

 

முனைவர் மு.பழனியப்பன்

தமிழ்த்துறைத் தலைவர்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

திருவாடானை

 

             கோவிலூரின் ஐந்தாம் பட்டமாகத்  தன் விருப்பத்தின்பேரில் இல்லாமல் பலரது வேண்டுகோளுக்கு இணங்க  பட்டமேற்றவர் புதுவயல் வீரசேகர ஞான தேசிக சுவாமிகள் ஆவார். இவர்  திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்களர் என்றும் ஊரில் உள்ள சிவாலயத்தின் மீது மிகு பற்றுக் கொண்டு அவ்வாலயத்திற்குத் திருப்பணி செய்து,  அங்கு தன் நிறைவாழ்வைக் கண்டவர் என்பதால் திருக்களர் ஆண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார்.

            சீர் வளர் சீர் முத்திராமலிங்க ஆண்டவர்  அருள்மிகு கோவிலூர் திருநெல்லை உடனாய கொற்றவாளீசர் ஆலயத்திற்கான விரிவான வரைபடத்தைத் தயாரித்த போது அவரின் அருகிருந்த நல்லான் செட்டியார் இவ்வளவு விரிவானதொரு கோயிலைக் கட்ட இயலுமோ என்று கேட்டார். அதற்கு ஆண்டவர் சுவாமிகள்  ‘‘கவலை வேண்டாம். கண்டோர் வியக்கும் வண்ணம் இதனைக் கட்டி முடிக்க ஒரு வீரன் வருவான் ” என்று உரைத்தார்.  அத்தகைய நல்வாசகத்தின்படி சத்திய ரூபமாக வீரனாக வந்தவர்  சீர் வளர் சீர் வீரசேகர ஞான தேசிக சுவாமிகள் ஆவார்.

            புதுவயலில் வாழ்ந்த அருணாசலம் செட்டியார், உமையாள் ஆச்சி ஆகியோரின் பிள்ளைக் கலி தீர்க்கப் பிறந்த மகன் வீரசேகரர் ஆவார். இவர் 1848 ஆம் ஆண்டு, ஆவணி மாதம் பன்னிரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை அன்று மண்ணுலகு மேன்மை பெற உதித்தார்.

            இவருக்கு இளம் வயது முதலே புதுவயல் அழகப்பா ஐயா என்பவர், பட்டினத்தார், தத்துவராய சுவாமிகள் ஆகியோர்  நூல்களையும் கொடுத்து இவருக்கு வேதாந்த அறிவினைப் புகட்டினார்.  இவர் தம் பத்தாம் வயதில் வெளிநாடு சென்று திரவியம் தேடச் சென்றார்.  அப்பயணம் முடித்து வந்தபின் இவ்வுலக வாழ்வில் நாட்டம் இல்லாது அருள் உலக வாழ்வில் நாட்டம் பெற்றவராக விளங்கினார்.

            இவரின் ஞானவாழ்விற்கு வீரப்ப ஐயா என்பவர் வழிகாட்டினார். கோவிலூர் வேதாந்த மடம் சென்று  அங்குக் கருணாநிதி சுவாமிகளிடம் சீடராகச் சென்றிட அவர் நல்வழி காட்டினார். கோவிலூர் வந்து சேர்ந்த வீரசேகரர் அங்கிருந்த பொன்னம்பல சுவாமிகள் வழியாக கோவிலூர் மடாலயத்தின் மூன்றாம் பட்டமாக விளங்கிய சீர் வளர் சீர் கருணாநிதி சுவாமிகளின் சீடராக ஏற்கப்பட்டார். இந்நிலையில் இவரின் குடும்பத்தார் இவருக்குத் திருமணம் நடத்திட எண்ணினர். இதனை அறிந்த வீரசேகரர் ஒருவரும் அறியாது பொருள்வைத்த சேரிக்குச் சென்று அங்கு அப்போது உத்தலிங்க சுவாமி மடத்தில் இருந்த சட்டையப்ப சுவாமிகளிடத்தில் சந்நியாச தீட்சை பெற்றுத் துறவாடை ஏற்றுத் துறவியானார். மீண்டும் கோவிலூர் வந்து  கோவிலூர் மடாலயத்தின் மரபின்படி நாநா சீவ வாதக் கட்டளை  என்ற நூல் தொடங்கி ஞான  வாசிட்டம் வரை உள்ள வேதாந்த நூல்கள் அத்தனையையும் தன் குருவிடம் பாடம் கேட்டார்.

            இதனைத் தொடர்ந்து தலயாத்திரையை நடை பயணமாக மேற்கொள்ள வீரசேகர சுவாமிகள் விருப்பம் கொண்டார். சிதம்பரத்திற்கு நடந்தே சென்றார். வழிநடையில் கிடைத்த பொருளைப் புசித்து நடந்தார். பின்பு மௌன சுவாமிகள் மடத்தில் இருந்தபடி பன்னிரு ஆண்டுகள்  நடராச மூர்த்தியைத் துதித்து வந்தார். இந்நேரத்தில் மூன்றாம் பட்டமான கருணாநிதி சுவாமிகள் விவேக முக்தி அடைய, பொன்னம்பல சுவாமிகள் அவரின் பாதுகைகளைப் பெற்றுச் சிதம்பரத்தில் தங்கி மடம்  நிறுவினார். அப்போது வீரசேகர சுவாமிகள் சிதம்பரத்தில் இருப்பதை அறிந்து அவரை அழைத்து வந்து இரவு நேரத்தில் இம்மடத்தில்  நடைபெறும் வேதாந்த சத் சங்கத்தில் கலந்து கொண்டுப் பிச்சை ஏற்று அருள வேண்டினார். இவ்வாறு பொன்னம்பல சுவாமிகளும் வீரசேகர சுவாமிகளும்  இணைந்து சிதம்பரத்தில் அருளாட்சி புரிந்து வந்தனர்.

            இந்நிலையில்  கோவிலூர் மடாலயத்தின் நான்காம் பட்டமாகிய  சீர் வளர் சீர் இராமநாத சுவாமிகள்  இறைநிலை அடைந்த நிலையில்  கோவிலூர்  மடத்திற்கான அடுத்தப் பட்டத்திற்கு உரியவராக யாரை ஏற்பது என்ற  கேள்வி எழுந்தது. பொன்னம்பல சுவாமிகள் தில்லையில் நடந்த வேதாந்த சத் சங்கத்தில்  வீரசேகரே தக்கவர் என்று அசரீரி போல் ஒலித்தார். இதைக் கேட்டுத் திகைத்த வீரசேகர சுவாமிகள் அன்று இரவே ஒருவரும் அறியாது  மடத்திற்குத் தலைமை ஏற்றல் தனக்கு ஏற்புடையதன்று என்று  கருதி வேறு ஓர் ஊரில் சென்று மறைந்து கொண்டார்.

            அவர் மறைந்திருந்த வளவனூர் மடத்திற்குப் பலரை அனுப்பி வீரசேகர சுவாமிகளை வரவழைத்துக் கோவிலூர் மடத்தின் தலைமை ஏற்ற சம்மதிக்கச் செய்தார். தம்மை எல்லாம் கடைத்தேற்றிட குருமார்கள் உதவினார்கள். அவர்களைப் போல உலக உயிர்களை உய்விக்க இப்பணி ஏற்றருள்க என்று பொன்னம்பல சுவாமிகள் இவரை ஆற்றுப்படுத்தினார். மேலும்  நான்காம் பட்டத்தின் விருப்பமும் அதுவே ஆன காரணத்தினால் இத்தலைமை சீர் வளர் சீர் வீரசேகர சுவாமிகளுக்கு அமைந்தது. அவருடன் கோவிலூரில் உடன் இருந்து பொன்னம்பல சுவாமிகள் பல நற்காரியங்கள் செய்துவித்தார். சில நாட்களில் தில்லை மடம் சென்றார்.

            சீர் வளர் சீர் வீரசேகர ஞான தேசிக சுவாமிகள்  கோவில், மடம் எல்லாவற்றையும் கலைநயம் பொலிய சிறப்புடன் ஆக்குவித்தார். கைலாசக் கொட்டகை, பிரம்ம சபை, கொற்றவாளீசர் ஆலயம், திருநெல்லை அம்மன் சந்நிதி கரும் சலவைக்கல் பணி, பூ மண்டபம், குருபூசைக் கட்டு, ஊருணி கல் படித்துறை, நெற்களஞ்சியம், அடியார் தங்குமிடம்  போன்றன கலை எழில் மிகுந்து உருவாகின. கோவிலூர் கலைநயமிக்கக் கலைநகரானது இவரது காலத்தில்தான்.

            சிருங்கேரி மடத்து சங்கராச்சாரிய சுவாமிகள் இராமேசுவர யாத்திரையாக வந்த போது, அவரைக் கோவிலூர் அழைத்து வந்து  வீரசேகர சுவாமிகள் பெருமை கொண்டார். இவரின் கலை நயமிக்க எழில் கட்டுமானம் கண்டு சிருங்கேரியில் உள்ள அருள்மிகு சாரதா தேவிக்குக் கருங்கல் கோவில் அமைக்க வேண்டினார். இதனை ஏற்று பொருள் செலவு செய்து அருமைப் பணியாக சாரதா கோயில் பணியையும் செய்துமுடித்தார் வீரசேகர சுவாமிகள். தொடர்ந்து நடைபெற்ற கொற்றவாளீசர் திருக்கோயில் குடமுழுக்கில் சாரதா பீட சங்கராச்சாரியார் கலந்து கொண்டு  வீரசேகர சுவாமிகளுக்குப் பஞ்சரத்தினம் வழங்கிச் சிறப்பித்தார்.

            இவரின் சீடர்களாக பலர் விளங்கினர். வேங்கட்ட முனிவர், வெள்ளியங்கிரி, சுப்பையா, அண்ணாமலை, நாராயணன், காசிகாநந்தர், மகாதேவர், சிவாநந்தர் போன்றோர் அச்சீடர்களுள் குறிக்கத்தக்கவர்கள். இவ்வாறு நடந்து வரும் நிலையில் திருவேரகத் தலத்தில் (சுவாமி மலை) நடைபெற்ற குடமுழுக்கு விழாவில்  வீரசேகர சுவாமிகள் கலந்து கொண்டார். அப்போது அன்பர் ஒருவர் திருக்களர் என்ற தலம்  திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் இருப்பதை சுவாமிகளுக்குத் தெரிவித்தார்.

            சுவாமிகளும் இதனைக் கருத்தில் கொண்டார். வீரசேகர சுவாமிகள் முன்கோப குணம் உடையவர். அவரின் கோபம் குறைய வேண்டியும் திருக்களர் செல்ல  அவர் விரும்பினார். துருவாச முனிவருக்கு ஆடல் காட்டி அவரின் கோபத்தைக் குறைத்த தலம் அத்தலம். எனவே அத்தலம் வீரசேரக சுவாமிகளின் ஏற்பு தலமாக விளங்கியது. திருக்களர் சென்று அங்கு அக்கோயில் திருப்பணிகளைச் செம்மையுடன் செய்து வந்தார். பெரும்பாலும் இக்காலத்தில் சுவாமிகள் திருக்களரில் தங்கியபடி கோவிலூர் பணிகளையும் செய்து வந்தார்.

            திருக்களர் குடமுழுக்கு விழாவினைச் சிறப்புடன் முடித்தார் வீரசேகர சுவாமிகள். மேலும் திருவிழாவிற்குத் தேவையான  வெள்ளி வாகனங்கள், வெள்ளிக் கவசங்கள், அலங்காரப் பொருள்கள், தீப தூப பொருள்கள், குடை முதலான பொருட்கள் எல்லாவற்றையும் அக்கோயிலுக்கும் மக்களின் பேராதரவுடன் வீரசேகர சுவாமிகள் அமைத்துத் தந்தார். திருவிழாக்களும், நாள் வழிபாடுகளும் சிறப்புற அக்கோயிலுக்கு அமைந்தது.

            கோவிலூரில் ஆடிப்பூர உற்சவம் இக்காலத்தில் வந்தது. அதனையும் நியம முறைப்படி வீரசேகர சுவாமிகள் நடத்தினார். இதனிடையில் திருக்களர் மண்டலாபிஷேக நிறைவு விழா வந்தது. திருக்களர் பிரம்மோத்சவமும் வந்தது. ஆனால் மற்றவர்கள் இவற்றை அடுத்த ஆண்டு நடத்தலாம் என்று எண்ணியபோது வீரசேகரர் அவ்வாண்டே நடத்தவேண்டும் என்று கொடியேற்றித் துவக்கி வைத்தார்.

            திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர், அமிர்தவல்லிக்கு அருள்பெருந்திருவிழா சிறப்புடன் நடக்கத் தொடங்கியது. தேர்த்திருவிழாவும் நடைபெற்றது. வீரசேகர சுவாமிகள் தேர்த்திருவிழாவின்போது நடத்தப்படும் உயிர்ப்பலியை நடத்தக் கூடாது என்று தவிர்த்தார். பஞ்ச மூர்த்திகளின் தேர்கள் அசைந்தாடிக் கொண்டு வந்தன. சுவாமியின் தேர் தென்கிழக்கில் நகராமல் நின்றுவிட்டது. இது சற்று கவலையை அனைவருக்கும் அளித்தது. வீரசேகர சுவாமிகள் தன் இருப்பிடத்திற்கு வந்து மற்ற பணிகளைக் கவனித்தார்.

            அடுத்த நாளுக்கான வேலைப் பணிகள் சுவாமிகளால் அருளப்பெற்றன. அப்போது சுவாமிகள் ‘‘நாளை கற்பூரமும், பூக்களும் அதிக அளவில் தேவைப்படும் . வாங்கி வாருங்கள்” என்றார். இது ஓர் அருள் குறிப்பு. மேலும் அனைவரிடத்திலும் எடுத்த பணியை விடாது செய்ய வேண்டும் என்று கூறினார்.

            காலை எழுந்து  அன்பர்களிடத்தில்  இன்று மதியப் பொழுதிற்குள் தேர்கள் அனைத்தும் சேர்க்கை சேரவேண்டும். அதற்கேற்ப ஆட்களைச் சேருங்கள் என்று ஆணையிட்டார். வீரசேகர சுவாமிகள்  மிக்க மகிழ்வுடன் தேரின் பக்கத்தில் சென்று அதனை உருட்டிட ஆவன செய்தார். அருகிருந்து ‘‘அர கர மகாதேவா” என்று பலமுறை முழங்கினார். என் உயிர் கொண்டு தேர் நகரட்டும் என்று அவர் மனம் இறைஞ்சியது.

            அரகர மகா தேவா முழக்கத்துடன் அவர் பூமியில்  சாய்ந்தார். அருகிருந்த அந்தணர் அவரைத் தாங்கிப் பிடிக்கிறார். சீர் வளர் சீர் வீரசேகர ஞான தேசிக சுவாமி முக்தி பெற்றார். அவரை உரிய முறையில் அவர் நிர்மானித்த திருக்களர்  சீவசமாதிக்குகையில் வைக்க ஏற்பாடுகள் நடந்தன. வைகாசி விசாகம் அவரின் நிறைவாலும் புகழ் கொண்டது.

             அந்நேரத்தில் தேர்கள் அனைத்தும் சேர்க்கை சேராமல் இருப்பது உணர்ந்து வீரசேகர சுவாமிகளை மனதால் எல்லோரும் நினைந்து இழுக்க தேர்கள் நகரத் தொடங்கின. இத்தேர்களை வணங்கியபடி சீர் வளர் சீர் வீரசேகர சுவாமிகளின் முக்திப் பயணம் தொடங்கியது. நிறைவுபெற்றது.

 அவரின் ஆலயம் கர்ப்ப கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் முதலானவற்றுடன் அமைக்கப்பெற்றது.             இவருக்குப் பின் பட்டமேற்ற மகாதேவ ஞான தேசிகர் இவரின் ஆலயத்திற்கு  பிரகார மண்டபம், உற்சவ மூர்த்தி ஆலயம், இராச கோபுரம், பதினாறு கால் மண்டபம் போன்றவற்றை எழுப்பினார்.

            சீர்வளர் சீர் வீர சேகர சுவாமிகளின் ஐம்பதாம் ஆண்டு,  திருவருள் திருவிழா 1961 ஆம் ஆண்டு நடத்தப்பெற்றது. திருக்களரில் நடந்த இவ்விழா குரு ஒருவருக்குச் செய்யப்பெற்ற உன்னத விழாவாகும். இவ்விழாவில் ஸ்ரீவீரசேகர புகழ் உரை ரச மஞ்சரி என்னும் நூல் வெளியிடப் பெற்றுள்ளது. மேலும் இவர் மீது பதிகம், நான்மணி மாலை, பிள்ளைத்தமிழ் முதலியன பாடப்பெற்றுள்ளன. இவரின் சரிதம் உரைநடையிலும் கவிதையிலும் வெளியிடப்பெற்றது. வீரசேகர மணிமாலை என்பதும் இவர் குறித்துப் பாடப்பெற்றுள்ளது.

 

திருக்களரில் உள்ள சீர் வளர் சீர் வீரசேகர சுவாமிகளின் திருவுருவச் சிலை

             

           

கருத்துகள் இல்லை: