கோவிலூரின் கதை-7
சீ்ர் வளர் சீர் மகாதேவ ஞான தேசிக சுவாமிகளின் வரலாறு
முனைவர் மு.பழனிப்பன்
தமிழ்த்துறைத் தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருவாடானை
கோவிலூர் வேதாந்த மடத்தின் ஏழாம் பட்டமாக அருள்பீடம் ஏறி,
இருபத்தெட்டு ஆண்டுகள் அருளாட்சி நடத்திய தவசீலர்
சீர் வளர் சீர் மகாதேவ ஞான தேசிக சுவாமிகள் ஆவார். இவர் திருவண்ணாமலை ஈசானிய மடத்தில்
இருந்த காலத்தில் ரமண மகரிஷி இவருடன் அருள் நட்பு கொண்டிருந்தார். இவரின் காலத்தில்
அதிக அளவில் வேதாந்தப் பாடம் கற்கும் சீடர்கள் அமைந்து அருள் சுரந்தனர்.
அண்ணாமலையார் தந்த செல்வர்
அண்ணாமலை என்ற இயற்பெயர் பெற்ற ஏழாம் பட்ட சுவாமிகள் சீர்
வளர் சீர் வீரசேகர ஞான தேசிக சுவாமிகளால் மாகதேவ ஞான தேசிகர் என்ற தீட்சா நாமத்தைப்
பெற்றவர். இவர் தேவகோட்டையைச் சார்ந்த சுப்பிரமணியஞ் செட்டியார், சிட்டாளாச்சி ஆகியோருக்கு
அண்ணாமலையாரின் திருவருளால் திருமகனாக அவதரித்தார். இவர் 1882 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினைந்தாம் நாள் இப்பூவலகில் அவதரித்தார். இவருக்கு சுப்பிரமணியர்
அண்ணாமலை என்று பெயர் சூட்டினார்.
இவர் இளம் வயது முதலே தெய்வீக நாட்டம் பெற்றிருந்தார். இவர்
கல்வி, கேள்வி ஆகியவற்றில் சிறந்து, விளங்கினார். இளமைப் பருவம் தாண்டிய நிலையில் செல்வம்
சேர்க்க அக்கால முறைப்படி திரைகடல் கடந்து சென்று பொருள் சேர்த்து வந்தார். இவருக்கு
உரிய வயதில் திருமணம் செய்விக்கப் பெற்றோர் எண்ணினர். சிவஞானப் பற்றுடைய இவர் திருமண
பந்தத்தைத் தவிர்க்க விரும்பினார். குலமரபு தழைக்கத் திருமணம் செய்வது அவசியம் என்று
பெற்றோர் வலியுறுத்த அதனை ஏற்று திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார்.
அலமேலு என்ற மங்கை நல்லாளை மணம் புரிந்து இல்லறத் தொடர்பில் மகாதேவ அண்ணாமலை இணைந்தார். இருப்பினும் மனம் முழுவதும்
சிவஞானம் பெறுவதை எண்ணித் தவம் கிடந்தது. சிறிது நாள்களில் பெற்றோர் வாழ்வின் நிறைவினை அடைய அவர்களுக்கும் உரிய முறையில்
அண்ணாமலை மகாதேவர் நீத்தார் கடன் செய்து முடித்தார்.
இல்லறத்தின் விளைவாக அண்ணாமலை மகாதேவர் அண்ணாமலை, திருநெல்லை என்ற இருமக்களைப் பெற்றெடுத்தார்.
மகன் அண்ணாமலையைக் காசி என்று அழைத்து மகிழ்ந்தார் அண்ணாமலை மகாதேவர்.
குருவருள் பெற்ற செல்வர்
குழந்தைகள் வளர்ந்து வந்த நிலையில் இவரின் அருள் நோக்கம்
சிவானுபவத்தை நோக்கிச் சென்றதால், கோவிலூர் வேதாந்தப் பெருவெளி இவரை வரவேற்றது. கோவிலூரில்
அருளாட்சி புரிந்து வந்த சீர் வளர் சீர் வீரசேகர சுவாமிகளிடத்தில் இவர் அருள் சீடராக
அமைய இறை திருவருள் உதவியது.
இவரின் அருள் நோக்கத்தை அறிந்து கொண்ட சீர் வளர் சீர் வீரசேகர
ஞான தேசிக சுவாமிகள் இவரை மகாதேவர் என்ற பெயருடன் தம் சீடர்களின் கூட்டத்தில் இணைத்துக்
கொண்டார். இவருக்கு வேதாந்தப் பாடத்தை நடத்தினார். குருவருளின் துணையினால் திருவருளின்
இயல்புகளை அறிந்து கொண்டார் மகாதேவர்.
கோவிலூர் முறைப்படி ஆண்டு ஒன்றுக்கு ஒரு நூல் கற்பிக்கவும்
கற்கவும் வேண்டும். மேலும் அவ்வாண்டில் அந்நூல் மனப்பாடம் செய்து கொள்ளப்பட வேண்டும்.
இவ்வகையில் பதினாறு ஆண்டுகள் பதினாறு நூல்கள் என்ற நிலையில் இவர் வேதாந்தப் பாடம் கற்றார்.
மேலும் ஒருமுறை பாடம் கேட்டல் மட்டும் முறைமை அன்று. மறுமுறையும் பாடம் கேட்டாக வேண்டும்.
இவ்வகையில் சீர்வளர் சீர் அண்ணாமலை ஞான தேசிக சுவாமிகளிடத்தில் வேதாந்தக் கல்வி பயின்றார்.
ஞானவாசிட்டம் ஏடு பெற்ற செல்வர்
கோவிலூர் மரபின்படி ஞானவாசிட்டம் ஏடு வாங்குதலையும் இவர்
தன் வாழ்வில் பெற்றார். சீர் வளர் சீர் வீரசேகர ஞான தேசிக சுவாமிகளுக்கு உரிய முறையில்
வழிபாடு இயற்றி இவர் அவரின் திருக்கரங்களால் ஞான வாசிட்ட ஏட்டினைப் பெற்றார். இவ்வாறு
ஏடு பெறுவது என்பது வேதாந்தத்தை முறைப்படி முழுமையாக உணர்ந்ததற்கான அறிகுறியாகக் கொள்ளப்படுகிறது.
இது குருவிற்குச் செய்யும் நன்றியறிதல் நிகழ்வாகும்.குருவிற்கு நன்றி செலுத்தி மகிழ்ந்தார்
அண்ணாமலை மகாதேவர்.
திருப்பணிகளுக்கு துணைநின்ற செல்வர்
இவ்வாறு இந்நிகழ்வுகள்
நடந்து வரும் வேளையில் கோவிலூர் கொற்றவாளீசர் ஆலயம், திருக்களர் பாரிஜாதவனேசுவரர் ஆலயம் ஆகியவற்றிற்குத் திருப்பணிகள் நடைபெற்றுவந்தன. அப்பணிகளுக்குத் துணைநின்றார் அண்ணாமலை
மாகதேவர். இவ்வாயலங்கள் குடமுழக்கு பெற்றன. இதன்பின் சீர்வளர் சீர் வீரசேரக ஞானதேசிகர்
விவேக முக்தி பெற, ஆறாம் பட்டமாக சீர்வளர் சீர் அண்ணாமலை ஞானதேசிகர் குருபீடம் ஏற்கிறார்.
ஈசானியம் வந்தமர்ந்த செல்வர்
திருவண்ணாமலை ஈசானிய
மடத்தின் குருமூர்த்தமாக இருக்க அண்ணாமலை மகாதேவரை ஆறாம் பட்டம் வேண்ட, அவர் மறுக்க, இருப்பினும் சீர்
வளர் சீர் மகாதேவ ஞான தேசிக சுவாமிகளாக ஈசானிய மடத்தில் குருபீடம் ஏற்க வைத்தது இறை
திருவுளம்.
அண்ணாமலைக்கே அண்ணாமலை மகாதேவர் வந்தமரச் செய்கிறார் அண்ணாமலையான்.
இவ்வண்ணாமலையில் பல சீடர்களுக்கு வேதாந்தப் பாடம் சொல்லி வருகிறார் சீர்வளர் சீர் மகாதேவ
ஞானதேசிக சுவாமிகள். மேலும் இக்காலத்தில் ரமண மகரிஷி சீர் வளர் சீர் மகாதேவ ஞான தேசிக
சுவாமிகளைச் சந்தித்து அவ்வப்போது வேதாந்த விசாரணை செய்துவருவார். மேலும் ஈசானிய மடத்தில்
அவருக்கு அன்னம்பாலிப்பும் நடைபெறும். ரமண மகரிஷி
தியானத்தில் அமர, குகை நமசிவாயர் ஆசிரமத்திற்கு மேற்கில் கந்தாஸ்ரமத்தை அமைத்துத்
தந்தவர் சீர் வளர் சீர் மாகதேவ ஞான தேசிகர் என்பது சிறப்பிற்குரியது.
கோவிலூர் பட்டம் ஏற்ற ஞானச் செல்வர்
ஆறாம்
பட்டமாக விளங்கிய சீர் வளர் சீர் அண்ணாமலை ஞானதேசிகர் தம் வாழ்வின் நிறைநாளை அறிந்து
எண்ணி, திருவண்ணாமலை ஈசானிய மடத்தில் இருந்த சீர்வளர் சீர் மாகதேவ ஞான தேசிகரை அழைத்து,
கோவிலூர் மடத்தில் ஏழாம் பட்டமாக அமைய அருள் நோக்கம் செய்தார். இதற்கான உயில் எழுதப்பட்டது.
1919 ஆம் ஆண்டு, மே மாதம் பத்தாம் நாள் இவ்வுயில்
சாசனம் எழுதப்பெற்றது. இவ்வாண்டின் இருபத்தொன்றாம்
நாள் ஆறாம் பட்டம் முக்திப் பேற்றினை அடைகிறார்.
இதனைத் தொடர்ந்து ஏழாம் பட்டமாக சீர் வளர் சீர் மகாதேவ ஞான தேசிகராக கோவிலூர் மடத்தின்
ஞான பீடமாக காலம் வரவேற்றுக்கொண்டது.
இவர் தன்
வாழ்நாளில் ஏழு முறை வேதாந்தப் பாடங்களைச் சொல்லி வந்து நிறைவில் ஞானவாசிட்ட ஏடு வழங்கலை
நிகழ்த்தியுள்ளார். இவர் காலத்தில் மிக அதிக அளவில் வேதாந்த சீடர்கள் பயின்றனர் என்பது
எண்ணிப் பார்க்க வியப்பினைத் தரும் செய்தியாகும்.
மடாலயத்தின் மாண்பினைப் பெருக்கிய செல்வர்
சீர் வளர்
சீர் மாகதேவ சுவாமிகள் அருள், வேதாந்தக் கல்வி
ஆகியவற்றைப் பெருக்கியதுடன் மடத்தின் நிர்வாகத்தையும் மேன்மைப் படுத்தினார்.
சாணானேந்தில் என்னும் கிராமத்தில் மடம், நெற்களஞ்சியம் இவர் காலத்தில் நிறுவப்பெற்றன. இவர் காலத்தில் மடத்தில்
ஆயிரக்கணக்கான பேர் அனுதினமும் அன்னம் பெற்று மகிழ்ந்தனர்.
பொருள்வைத்த
சேரி மடத்திற்கு வீர சண்முக சுவாமிகள், சிதம்பரம்
கோ. சித. பொன்னம்பல சுவாமிகள் மடத்திற்கு சோமசுந்தர சுவாமிகள், ஈசானிய மடத்திற்கு நடேச
சுவாமிகள், திருக்களர் மடத்திற்கு கிருஷ்ணானந்த சுவாமிகள் ஆகியோர் அருளாட்சி செய்துவர
நியமிக்கப்பெற்றனர்.
இவர் காலத்தில்
திருக்களர் சீர் வளர் சீர் வீரசேகர ஞான தேசிகரின் அருட்கோயிலுக்கு இராச கோபுரம், வெளிமண்டபம்,
பிரகார பத்தி போன்றன உருவாக்கப்பெற்று திருக்குடமுழுக்கு நடத்தப்பெற்றது.
சிருங்கேரி சாரதா பீடத்தில் பெருமை பெற்ற செல்வர்
சிருங்கேரி சாரதா பீடத்தின் 34 ஆம் பட்டத்தினரான
சீரு்வளர் சீர் சந்திரசேகர பாரதி சுவாமிகளைக் கோவிலூருக்கு அழைத்து வந்து, கோயில் மடம்
காட்டி வேதாந்தப் பெருமையை உணரச் செய்தவர் சீர் வளர் சீர் மகா தேவ ஞான தேசிக சுவாமிகள்.
மேலும் அவரின் அழைப்பின் பேரில் பெங்களுர் சங்கர மட சாரதாம்பாள் பிரதிஷ்டைக்குச் சென்று
அங்கு சுவாமிகள் அருள் காட்சி நல்கினார்.
நூல்கள் தந்த செல்வர்
சீர் வளர்
சீர் மகாதேவ ஞான தேசிக சுவாமிகள் காலத்தில் பல நூல்களும் வெளியிடப்பெற்றன. சிதம்பரம்
பொன்னம்பல சுவாமிகள் உரை செய்த கைவல்லிய நவநீதம் ஆறாம் பதிப்பாக 1941 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது.
மேலும் அத்வைத சாஸ்திர மான்மிய சங்கிரகம், கைவல்லிய உக நிஷதார்த்தம், பட்டினத்தார்
பாடல்கள் போன்ற பல நூல்களும் இவர் காலத்தில் வெளியிடப்பெற்றன.
நிறைவாழ்வு பெற்ற செல்வர்
பல தலங்களுக்குச் சென்று அருள்பெற்று வந்த
சீர்வளர் சீர் மகாதேவ ஞான தேசிக சுவாமிகள் தன் வாழ் நாள் நிறைவின் எல்லையை உணர்ந்து
1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் நாள் உயில் ஒன்றை எழுதினார். தன்னுடைய அறுபத்தாராம்
வயதில் 26-6-1947 ஆம் நாள் விவேக முக்தி பெற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக