திருவண்ணாமலை
ஈசானிய ஞான தேசிக சுவாமிகள் வரலாறு
முனைவர் மு.பழனியப்பன்
தமிழ்த் துறைத் தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரி
திருவாடனை
திருவண்ணாமலையில் ஈசானிய மடத்தில் வீற்றிருந்து ஞானபெருங்கருணையைச்
செய்துவரும் சீர் வளர் சீர் ஈசானிய ஞான தேசிகரின் அருமை பெருமைகள் அளவில் அடங்காதனவாகும். இவர் ஞான நிட்டையில் இருக்கும் காலத்தில் அண்ணாமலையாரும் உண்ணாமுலையம்மனும் புலிகளின் வடிவில் எழுந்தருளி இவருக்குக் காவலாக
இருந்த பெருமை யாருக்கும் வாய்க்காத பெருமையாகும்.
வேலூரில் வாழ்ந்து வந்தவர் திருநீலகண்டர். இவரின் மனைவி உமைய
பார்வதி. இருவரின் இல்லறத்தில் மகப்பேறு இன்மை என்ற ஒரு குறையைத் தவிர வேறு குறை இல்லை.
மகப்பேறு வேண்டி இவர்கள் திருவண்ணாமலையில்
உள்ள முருகப் பெருமானை வேண்டி வணங்கி வந்தனர்.
இவர்களின் குறையைப் போக்க முருகப்பெருமான் கருணைக் கடைக்காட்டி மகப்பேறு உருவாகும்
நிலையைக் கொண்டுவந்தார். மிக மகிழ்ந்த இருவரும்
பிறக்கும் குழந்தைக்குக் கந்தப்பன் என்று பெயர் சூட்டி மகிழ மனம் வைத்தனர்.
இவர்களுக்கு ஆண்மகவு பிறந்தது. அக்குழந்தைக்குக் கந்தப்பன்
என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இளம் வயது
முதலே அமைதியும், அன்பும், ஞானமும் உடைய குழந்தையாக அக்குழந்தை வளர்ந்து. பள்ளிப் பருவத்தில் பல அருட்செயல்களை அக்குழந்தை செய்தத, இது பலருக்கும்
ஆச்சரியத்தை அளித்தது.
குருநிலை
பள்ளியில் சொல்லித் தரப்படும் பாடங்களை உடனுக்கு உடன் மனனம்
செய்து ஒப்புவிக்கும் ஆற்றல் இக்குழந்தைக்கு மிகச் சிறப்பாக அமைந்திருந்து. பாடங்களை
ஆசிரியரிடம் சொல்லி முடித்தபின் அமைதியில் கலந்து விடும் அற்புதத்தையும் அக்குழந்தை
செய்து வந்தது. இச்சிறுவயதில் ஞானத் தொடர்பு அக்குழந்தைக்கு ஏற்பட்டுச் சில நாள்கள்
தன்னை மறந்து, உலகை மறந்து நிற்கும் நிலை இருந்தது.இது அக்குழைந்தையின் ஞானம் தேடிய வாழ்வின் தொடக்கமாக
அமைந்தது. இவரின் குடும்பத்தார் இவரை குருத்தன்மை பெற்ற குழந்தை என்பதை உணர்ந்து அவரைக்
குருவாகவேக் கொண்டாடினர். இவரும் நாளும் சிவபூஜை செய்து தியானத்தில் ஆழ்ந்து வாழ்ந்து வந்தார்.
தல யாத்திரை
இவரின் குடும்பத்தார் இவருக்குத் திருமணம் செய்விக்க முயற்சித்த
நேரத்தில் தான் சிவபெருமானுக்கு பரம அடியவனாகி, அப்பெருமான் கோயில் கொண்டுள்ள இடங்களைத் தரிசித்து வருகிறேன்
என்று தலயாத்திரை செய்ய ஆரம்பித்தார். ஊர்தோறும்
சென்று சிவபிரானின் பேரருள் பெற பயணித்தார். சிதம்பரம் நகரடைந்து நடராச மூர்த்தியை வணங்கித் திருவிளக்குக் கட்டளை
ஒன்றை அவர் ஏற்படுத்தினார்.
மௌன குருவை அடைதல்
சிதம்பரத்தில் இருந்த மௌனகுருவிடம்
இவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. நாளும் நடராசரோடு அவரையும் தரிசித்து வந்தார். காலை, மாலை
வேளைகளில் அவரின் அருட் கருணைக்கு ஏங்கினார். அவரிடம் உபதேசம் பெற விரும்பினார். குளிர்
மழை நாளில் கௌபீனம் மட்டுமே அணிந்து அவர் முன்னர் ஞானம் வேண்டி நின்றார். இவரின் ஞானவேட்கையை
அறிந்த மௌனகுரு இவருக்கு போர்த்திக்கொள்ள கம்பளம் கொடுத்து ஞான உபதேசமும் செய்துவித்தார்.
மௌன குருவின் மீது பஞ்ச ரத்தினப் பாடல்கள் பாடினார். மௌனகுருவிடம் ஞானிகளுக்கு அடையாளங்களான
ஞானத் தண்டம், ஞானப் பட்டி சடாமகுடம் தரித்து மௌன சுவாமிகளின் அருட்பார்வையில் ஞானித் திருக்கோலம் ஏற்றார்.
தொடர் பயணம்
இதன் பின் கந்தப்ப சுவாமிகள்
திருவாரூர் சென்று தியாகேசரை வணங்கி, மடப்புரம்
வந்து தட்சிணாமூர்த்தி சுவாமிகளைக் கண்டு ஞானம்
பெருக்கினார். சிக்கல் அருகில் இருந்து பொருள்வைத்த
சேரியில் வீற்றிருந்த சீர் வளர் சீர் உகந்த
லிங்க சுவாமிகளையும் தரிசித்து சிலகாலம் அவருடன் இருந்து அருள் பெருக்கினார். தொடர்ந்து
பயணித்த இவரின் பயணம் வேட்டவலம் என்ற ஊருக்கு அருகில் உள்ள பாக்கம் என்ற ஊரில் உள்ள
மலையடுக்கில் பலகாலம் ஞான சமாதி நிலையில் நிட்டையில் இருந்தார்.
மண்ணில் பொன்
பாக்கத்து மலையில் பல நாளும்
பால் தந்து தன்னைக் காத்த முத்துசாமி உடையாருக்குச்
செல்வம் பெருக்கக் காரணமாகச் சித்து இயற்றினார். அவர் வீட்டில் கிடைத்த புதையல் அவருக்குப்
பெருஞ்செல்வம் தந்தது. இதனை இவரது பெருமையாகக் கருதி மக்கள் இவரிடம் செல்வம் கேட்டு
முறையிட்டனர். இவர்களின் அன்புத் தொல்லைகளால் அவ்விடம் விட்டு அகல கந்தப்பர் முன் வந்தார்.
திருவண்ணாமலைக்கு வருகை தந்து, அருள்மிகு அண்ணாமலை, உண்ணாமுலை அம்மனைத் தரிசித்து அங்கேயே இருப்பது என முடிவெடுத்தார். திருவண்ணாமலையின்
கோரக்க நாதர் குளக்குரை இவரின் இருப்பிடமானது.
பிள்ளைக் கனி
இக்காலத்தில் இவரிடம் தொண்டு
புரிய அருணாசலம் செட்டியார் என்பவர் வந்தார். அவருக்குக் குழந்தைப் பேறு இல்லாத குறை போக்கத் தமக்கு சித்தர்கள் அருளால் கிடைத்த
ஞானக் கனி ஒன்றைக் கொடுத்து அருளினார். சித்தர்களின் கூட்டுறவால் மனித வாசனையற்ற அருட்குகைகளில் இவர் சில காலம் தங்கும் பேறு கிடைத்தது.
இவருக்கு மேலும் சித்து விளையாட்டுத் திறன்கள் கிடைத்தன. அருணாசலம் செட்டியார் குழந்தைப்
பேறு பெற்றார். அவருக்குக் கந்தப்பர் வழங்கிய திருநீற்றுப் பை இன்னமும் அருணாசல செட்டியார்
குடும்பத்தாரால் வைத்து வணங்கப்பெற்று வருகிறது.
பாக்கத்து முத்துச்சாமி பக்கத்தில் வருதல்
பாக்கம் என்ற ஊரில் இருந்து
அண்ணாமலைக்குக் கந்தப்பர் வந்த செய்தியை கடவுள் தந்த குறிப்பின் வழி அறிந்த முத்துச்சாமி
உடையார் அண்ணாமலைக்குக் கந்தப்பரைத் தரிசிக்க ஈசானியமூலைக்கு வந்தார். கந்தப்பரையும் அண்ணாமலையார் ஈசானியத்திற்கு எழுந்தருளக்
குறிப்பளித்தார். கந்தப்பர் அவ்வாறே ஈசானியத்தில் இருப்பதானார்.
வரிப்புலி காவல்
ஈசானியத்தில் இருந்த கந்தப்பருக்குக்
காவலாக அவ்வப்போது அவரின் அருகில் வரிப்புலிகள்
வந்து அமர்ந்து அவருக்கு அரணாக விளங்கும்.
அவற்றை தன் நிட்டை கலைந்த காலத்தில் அன்பொழுக தடவிக் கொடுத்து மகிழ்வார் கந்தப்பர்.
தொண்டர்கள் வருங்காலத்தில் வரிப்புலிகளை அவைகளின் இருப்பிடத்திற்குத் திரும்ப அன்புக்
கட்டளையிட அவைகளும் அடிபணியும். (திருவண்ணாமலை ஈசானிய மடத்தில் உள்ள பாதாளக் குகையில்
இக்காலத்திலும் கந்தப்பர் இருந்த அந்தக் குகைத்தளத்தைப் பார்வையிட இயலும்.)
இன்னும் விளையாடல்
புதுப்பாளையத்தைச் சார்ந்த
ஒருவர் சூலை நோயால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தார். அவர் திருவண்ணாமலையைக் கிரிவலம்
செய்து வரும்பொழுது கந்தப்பரைக் கண்டு வேண்டினார். அவரைத் தன் திருக்கண் நோக்கிப் பார்க்க
அவரின் நோய் தீர்ந்தது. அதுமுதல் அவர் இவருக்கு அடிமையாகி அவரும் ஈசானிய சுவாமி என்று அவர் ஊராரால் அறிவிக்கப்பெற்று
அவருக்கு மடம் முதலியன எழுப்பப்பட்டன.
மற்றொருநாள் கந்தப்பர் தவம்
இருக்கும் இடத்திற்கு ஆவேசமாய் வந்த கரடி ஒன்று அருகிருந்த பிள்ளையார் சிலை தாக்க அக்கரடி
வீடுபேறு அடைந்தது. கரடி மோட்சம் பெற்ற நிலை இதுவாகும். அவ்வாறு வந்த பிள்ளையார் சிலைக்குக்
கரடி விநாயகர் என்ற நாமம் ஏற்பட்டு அவர் வழிபடப்பட்டுவருகிறார்.
ஈசானிய ஞான தேசிகர் ஆதல்
பாக்கத்து முத்துச்சாமி திருண்ணாமலையில் ஈசானியத் திசையில் இருந்த தமக்குச் சொந்தமான நந்தவன இடத்தைக் கந்தப்பர் இருக்கைக்கு
வழங்கினார். இதுமுதல் ஈசானிய ஞான தேசிகர் என்றே அனைவராலும் கந்தப்பரால் அழைக்கப்பட்டார்.
பொருள் வேண்டா தவவேள்வி
திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணாசல
சுவாமி என்பவர் தம் புதுச்சேரி சொத்துகளைப் பொன்னாக்கிக் கொண்டு வந்து ஈசானிய தேசிகரிடம்
வைப்பதென முடிவெடுத்தார். ஈசானிய தேசிகரோ பணமும்
வராது, நீயும் வரமாட்டாய் அதனால் போகாதே என்றார். மீறியும் அவர் சென்று மாடுகளால் குத்துண்டு மறித்துப்
போனார். அவரின் பொன்னும் பணமும் புதுச்சேரிக்குள்ளேயே முடங்கியது.
ஐடன் துரையும் அன்பும் , ஆறு கடந்த குதிரையும்.
திருவண்ணாமலையில் ஐரோப்பியர்
ஐடன் என்பவர் மாவட்ட ஆட்சியராக இருந்தார். அவர் ஈசானிய ஞான தேசிகரைக் காண வந்தார்.
அப்போது அண்ணாமலை வரிப்புலியாரை விலகச் செய்து ஐரோப்பியருக்குக் காட்சி நல்கினார் ஈசானியர்.
அவரைப் பிணித்திருந்த காசநோயை நீங்கும்படி அமிழ்து அளித்தார். துரை பல சன்மானங்கள்
நிலங்கள் தருவதாய்ச் சொன்னபோதும் அவற்றை மறுத்து அருள் செய்தார் ஈசுானிய ஞான தேசிகர்.
அதுமுதல் அந்த ஐரோப்பியல் எச்செயல் செய்தாலும்
‘‘தாத்தாவே நீ இக்காரியத்திற்கு முன் இருந் து செய் ’’ என்று ஈசானியரை வணங்கிச்
செய்யத் தொடங்குவார். செயல்கள் வெற்றி பெறும்.
திருவண்ணாமலைத் தேர் வடம் பிடிக்க
இத்துரை வரும்போது ஈசானியரை மனதால் வேண்டி வாக்கால் வேண்டி அதன் பின்னே காரியம் தொடங்குவார். ஓராண்டு துரை வர இயலாத நிலையில் ஆற்று வெள்ளம் பெருகியது. எல்லோரும் நிற்கையில்
துரை மட்டும் தாத்தாவின் பெயரைக் குதிரையின் காதில் சொல்லிட அது வேகம் கொண்டு ஆற்றில்
பாய்ந்து தேர் வடம் பிடிக்க வந்து சேர்ந்தது. அதே நேரம் நிட்டையில் இருந்த ஈசானிய தேசிகரின்
கரங்கள் நீண்டு இடப்பக்கம் தாழ்ந்தது. இதற்கான காரணத்தை அருகில் இருப்பவர் அறிய விரும்ப
ஈசானிய தேசிகர் ‘‘ எவன் ஆற்றில் விழுந்தாலும் அதற்கு நாம் உத்திரவாதியாக வேண்டுமோ?’
என்று பதில் உரைத்தார். ஐடன் துரையின் குதிரைக்குச் சித்து அளித்தவர் ஈசானியர்.
சீர்வளர் சீர் முத்திராமலிங்க ஞான தேசிகர் சந்திப்பு
அருணாசலம் வந்த சீர் வளர் சீர்
முத்திராமலிங்க ஞான தேசிகர் ஈசானிய ஞான தேசிகரைச் சந்தித்து அவருடன் சிலகாலம் தங்கினார்.
இருவரும் ஞானம் பெருக்கினர். அப்போது அருகில் இருந்த முத்துச்சாமி கோவிலூர் சாமிகளின் கைவிரலில் இருந்த மோதிர அழகினை
மோகிக்க அதுவறிந்த கோவிலூர் முத்திராமலிங்கர்
அதனை அவருக்கு அளித்து மகிழ்ந்தார். மோதிரம் பெற்ற தொண்டர் திருக்கதை இங்கும் தொடர்கிறது.
மண்டகுளத்தூரும் வேதப் பெருக்கும்
மண்டக் குளத்தூரைச் சார்ந்த
சபாபதி என்பார் காஞ்சிபுரத்தில் கண்ட கனவின்வழி
திருவண்ணாமலை ஈசானிய தேசிகரைத் தன் ஞானகுருவாகக் கொள்ள வருகை புரிந்தார். அவர்
வடமொழி வல்லமை பெற்றவர். அவருக்கு நிட்டை கை கூடி வராது காலம் தாழ்த்தியது. இதற்கான
காரணத்தை ஈசானிய ஞான தேசிகரிடம் கேட்க அவர்
வடமொழி வேதங்களை மற்றவர்களுக்கு விளங்கச் சொல்லவும். அவை உன் புத்தியில் அடைந்து
கிடக்கிறது என்றார் ஈசானியர். அவரும் தன்னூர் சென்று அங்கிருந்த வேதியச் சிறுவர்க்கு
வேதஞானம் புகட்டி நிட்டை கைவரப்பெற்றார்.
இதன்பின் அவர் கிணற்றில் விழுந்த
நண்பரின் உயிரைக் காத்து, நீரில் விளக்கெரித்து
போன்ற பல சித்துகள் செய்தார். தவ நிறைவு எய்திய அவருக்கு அங்கு மடமும் நாள்பூசையும்
நடந்து வருகிறது.
உகந்த லிங்கரின் நிறைவும் ஈசானியரின் நினைவும்
சீர் வளர் சீர் உகந்த ஞான லிங்க
தேசிகர் தன் நிறைவின் நிலை அறிந்து அதற்காகக் காத்திருந்தார். சரியான நேரத்தில் ஈசானியர்
அவர் இருக்கை சென்று அவரின் மனம் நிறைந்தார். இறை கலந்தார். அவரின் திருமேனியை அடக்கம் செய்யச் சென்ற நிலையில் ஊரார்
தடை செய்ய அவர்களை தன் ஆணையால் விலக்கி நலமுடன் அடக்கம் செய்தார்.
தனது பரிபூரணம் உணரல்
ஈசானிய ஞான தேசிகர் சொல்வாக்கு மிக்கவர். சொல் பலிதம் கொண்டவர்,
சிவ காடட்சம் மிக்கவர். அவர் சிறந்த ஆன்மீகக் கவிஞர். திருவண்ணாமலையார் அவருக்கு கோரக்க
நாதர் குளக்கரையில் தரிசனம் கொடுத்த காலத்தில் அவ்வனுபவத்தை அண்ணாமலையார் தோத்திரப்
பாமாலையாகப் பாடி அருளினார். மேலும் வெண்பா, அந்தாதி கண்ணி வடிவங்களிலும் பெருமான்
பெருமையை அவர் பாடியுள்ளார்.
தொண்டர்கள் புடை சூழ எந்நாளும் வீற்றிருந்து ஞான கடாட்சத்தை
அவர் அருளி வந்தார்.ஈசானிய ஞான தேசிகர் தமது ஞான திருஷ்டியால் தன் நிறைவுக் காலம் நெருங்குவதை
உணர்ந்தார். ஓலையில் 1829 ஆம் ஆண்டு. மார்கழி மாதம் 26 ஆம் நாள் குருவாரம் , மிருகசீரிட
நட்சத்திரத்தில் தன் நிறைவு என்பதை அவர் எழுதி
வைத்தார். ஆயிரங்கால் மண்டபத்தில் அறைக்கட்டுக்கு
ஸ்ரீநடராச பெருமான் போகின்றார். நாமும் அங்குப் போக வேண்டுமென்று அவர் திருவாக்கு அருளினார்.
அவரின் வாக்குப்படியே அவரின் முக்தி நிலை அமைந்தது.
அவரின் ஜீவ சமாதியை அவர் வில்வக் கண்ணாடியில் அண்ணாமலையாரைக் கண்ட இடத்தில் அமைத்தனர்.
வேட்டவலம் ஜமீன்தார் குடும்பத்தார் ஜீவ சமாதியின் மீது திருக்கோயில் எழுப்பினர். சிவலிங்கப்
பிரதிட்டை செய்தனர்.
தற்போது மாதம் தோறும் மிருக
சீரிட நட்சத்திரத்தில் மாத குருபூசையும் மார்கழியில் வருட குருபூசையும் சிறப்புடன்
நடைபெறுகிறது. மாத குருபூசைகளில் இந்தியாவின் பல மாநில அன்பர்கள் கலந்து கொண்டு அன்னதானம்
செய்கின்றனர். வாருங்கள் ஈசானியம் செல்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக