சிதம்பரம் பொன்னம்பல சுவாமிகளின் கதை
முனைவர் மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத் தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,திருவாடானை
தேவகோட்டைக்கு அருகில் உள்ள
அனுமந்தக்குடி ஒரு பெரும் வேதாந்த ஞானியை உலகுக்கு அளித்துள்ளது. அவரே சிதம்பரம் பொன்னம்பல ஞான தேசிகர் ஆவார். இவரின் தந்தையார்
ஆங்கிலேய இராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் பிறந்த காலத்தில் இவர்கள் வாழ்ந்த
இடம் வடநாட்டில் உள்ள விஜயநகரம் ஆகும். இவரின் இளம் வயதிலேயே தந்தையார் இறந்துபோக, இவர்
அன்னையார் அங்கம்மாள் இவரை நன்கு வளர்த்து வந்தார்.
இளமையிலேயே இறையுணர்வு பெற்றவராக
பொன்னம்பலர் விளங்கினார். பள்ளிப்பருவத்தில் பள்ளி செல்லும் வழியல் உள்ள பிள்ளையாரை
வணங்கிச் செல்வதும். அவருக்கு அபிடேக ஆராதனை செய்வதும் இவரின் வழக்கம். இவருக்கு இவரின்
தாயார் தலையும், உடலும் செம்மைப் பட எண்ணெய் வழங்குவது வழக்கம். இந்த எண்ணெயைப் பிள்ளையாருக்கு
எண்ணெய்க் காப்பு செய்து இவர் வணங்குவார்.
இதனால் இவரின் உடலும் தலையும் பசையற்றுக் காணப்பட்டன. இதன் காரணம் அறிய ஒரு நாள் இவருடன்
தொடர்ந்து வந்த தாயார் இவர் செய்யும் பிள்ளையார் பூசையைக் கண்டார். இறைதொண்டை விட தன் மகனின் உடல் நலம் கெடுவதை அவரால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. மகனைப் பொய்க் கோபம் கொண்டுக் கண்டித்தார். ஓரே மகனின் நல்வாழ்வினைக் கருத்தில் கொண்டு தாயார்
செய்த செயல் இதுவாகும்.
பதினாறு ஆண்டுகள் ஆன நிலையில்
ஞானம் தேடிப் பொன்னம்பலர், பொன்னம்பலமான சிதம்பரத்துக்குத் தனியே வந்து சேர்ந்தார். சிதம்பரம் திருக்கோயிலில் அனைத்து இறைபணிகளையும்
அவர் செய்தார். கோயில் தூய்மை செய்தல், மலர் பறித்துக் கொண்டு வந்து தருதல், தீபாராதனைக்கு
உரிய பொருள்களைக் கழுவிச் சுத்தம் செய்தல் போன்ற பல பணிகளை அவர் தொண்டாகச் செய்தார். இவரின் தொண்டால் இறைவன் மகிழ்ந்தான். சிதம்பரத்தில் சந்நியாசியாக
விளங்கிய பெத்தாச்சி அடிகளாரின் அருந்துணை
இவருக்குக் கிடைத்தது. இவர் இவருக்கு ஞான மார்க்கத்தை
உபதேசித்தார்.
இவர் தன்னை உய்யும் நெறிக்கு
உய்விக்கும் குருபிரானை நாளும் தேடி வந்தார்.
சிதம்பரம் சன்னதியில் ஓர் நாள் கழனிவாசல்
என்னும் கோவிலூர் வேதாந்த மடத்தின் சீர் வளர் சீர் கருணாநிதி என்னும் சிதம்பர ஞான தேசிகர் சிதம்பரநாதனைத் தரிசிக்க வருகை புரிந்தார். அவரே தன்னைக் கரையேற்றும் ஞான குரு என்பதை உணர்ந்தார் பொன்னம்பலர். பெத்தாச்சி அடிகள் வழி காட்ட கோவிலூர்
ஆதீனத்தின் முன் பணிந்து வீழ்ந்தார். தன்னை உய்யக் கொண்டு அருள வேண்டுகோள் வைத்தார். கோவிலூர் ஞான தேசிகரும் இவரை மாணாக்கராக ஏற்றுக்
கோவிலூரில் மாணாக்கர் கூட்டத்துடன் இருக்க வழி செய்தார். கோவிலூரில் அனைத்து வேதாந்தப் பாடங்களையும் கேட்டு இவர் ஞானப் படிகளில் ஏறினார்.
பொன்னம்பலர் கற்றது மட்டும்
இல்லாமல் தன் கூர்மையான அறிவால் மற்றவர்க்கு விளங்க வைக்கும் ஆற்றலும் பெற்றார். இதன் காரணமாக வேதாந்தப் பாடங்களை மறுமுறை பயிற்றுவிக்கும்
ஆசானாக இவர் கோவிலூர் மடத்தில் விளங்கினார். அனைவரும் இவரைப் பொன்னம்பல ஐயா என்று விரும்பி
அழைத்து மகிழ்ந்தனர்.
வடமொழி நூல்களைக் கற்க விரும்பிய
பொன்னம்பலர் அதற்காக வட நாட்டு யாத்திரை மேற்கொள்ள குருபிரானிடம் வேண்டி நின்றார்.
குருவின் ஆசியால் இவர் காசி முதலான வடநாட்டுத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார்.
அங்கே இருந்து கிருஷ்ண சுவாமிகளிடம் பல நூல்களைப் பாடம் கேட்டார். அருங்கலை வினோதர்
இந்தி மொழியில் எழுதிய விசாரசாகரம் என்னும்
நூலை முழுவதும் தானே கற்றார். இவ்வாறு காசியில் வசிக்கும்போது ஒரு நாள் அன்னப் பூரணியை
வணங்கச் சென்றபோது கூட்டமிகுதியால் இவரால் அருகில் சென்று வணங்க இயலவில்லை. தன் கையில்
கொண்டுவந்த சந்தனத்தை எவ்வாறு அம்பிகைக்குச் சாத்துவது என்று எண்ணியிருந்த வேளையில் அதனைச் சற்று உயர்த்தி அம்பிகைக்கு முன்பு வீச அது
அம்பிகையின் நெற்றியில் மங்கலாமாக சென்று சேர்ந்தது. இறைவியின் கருணைக்கு இவர் பாத்திரமானதற்கு
இதுவும் ஒரு சான்று.
இதன்பின் காசியில் பல நூல்களைக் கற்றார். விருத்திப்பிரபாகம் என்னும் ஒருலட்சம்
பாடல்களைக் கொண்ட தொகுதி இவர் கைக்குக் கிடைத்தது. அதனைத் தெளிவுறப் படிக்கத் தன் சேமிப்பில்
வைத்தார். காசிப் பயணம் வெற்றி பெற்ற நிலையில் கோவிலூர் திரும்பலானார்.
காசிச் செலவிற்கு குருவளித்த
பணம் அதிகமாகக் கையில் இருந்த நிலையில் அதனைக் கோவிலூருக்கே செலுத்த வேண்டி தயிர்சாதக் கட்டளையை நிறுவினார். மேலும் திருநெல்லை
அம்மன் குதிரை உற்சவத்திற்குத் தேவையான உடைகளையும் வடநாட்டில் இருந்து வாங்கிவந்துச்
சேர்த்தார். சென்னை வந்து சேர்ந்து சில நாள்கள் அங்கிருந்து பொன்னம்பலர் அந்நாளில்
வித்யாரண்ய முனீந்திரர் எழுதிய பஞ்சதசி என்னும் நூலை தமிழில் ஆக்கி அச்சில் ஏற்றி வெளியி்ட்டார்.
கோவிலூர் வந்து தன் குருவின்
பாதங்ளில் கங்கை நீரையும், சிவ திருநீற்றையும் துளவத்தையும் வைத்து வணங்கி ஆசி பெற்றார்.
இந்நிலையில் குருபிரானுடன் அவருடன் பயணிக்கும்
அருமைப் பேற்றைப் பெற்றார். இவர்கள் திருவாவடுதுறை மடத்திற்குச் சென்றபோது வேதாந்த
மாணவர்தம் சிறப்பறிய விளக்கம் அளிக்க வேண்டப் பெற்றது. அப்போதுபொன்னம்பலர் அப்பணியைத்
திறம்பட செய்துப் பாராட்டப்பெற்றார். பிரம்ம கீதையில் இருந்து சில பகுதிகளை விளக்கம்
செய்து, தமிழ், வடமொழி இரண்டிலும் மேற்கோள் உரைத்து சிறப்புற விளக்கம் அளித்தார் பொன்னம்பலர்.
கோவிலூர் வந்தபின் பிரம்ம கீதைக்கு நல்ல உரை எழுதப் பணிக்கப்பெற்ற பொன்னம்பலர் அதனையும்
சிறப்புடன் செய்தார்.
இந்நாளில் குருபிரானின் முக்திப்
பேறு நிகழ்ந்தது. பொன்னம்பலர் ஆண்டவர் சன்னதிக்கு
முன்பாக குருபிரானின் நிறைவு இருக்கையை அமைத்து அவருக்குச் சன்னதி எழுப்பினார். கோவிலூர்
மடத்திற்கு அடுத்த பட்டம் யாரென்ற நிலை எழுந்தது. அம்மடத்தின் நியமபப்படி நகரத்தார்
குருபீடமாதலால் தன்னுடன் உடன் உறைந்து வரும் இராமசாமியாரை, நான்காம் பட்டமாக ஞான தேசிகராக ஆக்கி இவர் மகிழ்ந்தார்.
இதன்பின் பொருள்வைத்த சேரிக்குச்
சென்று அங்குச் சில நாள்கள் தங்கினார். அங்குத் தன் குருவான சீர் வளர் சீர் கருணாநிதி
சுவாமிகளின் பாதுகைகளை வைத்து நாளும் பூசித்து வந்தார். இச்செயல் பரதன் இராமன் பாதுகைகளை
வைத்து வணங்கிய காட்சியை அனைவருக்கும் நினைவு படுத்தியது.
தொடர்ந்து, திருவாரூர் தட்சிணாமூர்த்தி
மடம், திருமழபாடி மடம், புனல்வாசல் மடம் போன்றவற்றில் இருந்துத் தன் வேதாந்தப் பணிகளைச்
செய்துவந்தார். புனல்வாசலில் இருந்த காலத்தில் மடமொன்று அமைக்க முயற்சி செய்தார். அதற்கான
செங்கல் சூளை அமைக்கப்பட்டது. ஆனால் அந்தச் சூளை நிறைவேறும் தருவாயில் பொன்னம்பலருக்குச்
சூலை நோய் வந்து சேர்ந்தது. இந்நோய் தீராது வருத்தம் செய்தது. இந்நேரத்தில் சிதம்பரம்
சென்றால் நோய் தீரும் என்று எண்ணிய பொன்னம்பலர்
மீண்டும் சிதம்பரம் வந்தார். அங்கு ஒரு தீட்சிதரின் வடிவில் பெருமான் நடராசரின் குஞ்சித
பாதத்தில் சூட்டப்பெற்ற மாலையையும், அம்பலவாணரின் திருநீறும் தந்தார். வாங்கி அணிந்து
பசுபதி கோயில் மடம் வர நோய் முற்றிலும் நீங்கியது. சூலை தந்து அப்பரைப் பெருமான் ஆட்கொண்டான்.
அதே நிலை இவருக்கும் எய்தியது. நீறளித்துச்
சம்பந்தர் சூலை நோய் தீர்த்தார். அதே போல இவருக்கும் நீறு பெற நோய் தீர்ந்தது.
சிதம்பரத்தில் பொன்னம்பலருக்குத்
தனிமடம் அமைக்க காரைக்குடி முரு. ராம. ஆவிச்சிச் செட்டியாரின் குடும்பத்தார் உதவினர்.
தான் இறக்கும் தருவாயில் ஆவிச்சி செட்டியார் பொன்னம்பலருக்கு உதவிட வழி காட்டினார்.
அதன்படி அவரின் குடும்பத்தார் மடம் அமைத்துத் தர அதில் கருணாநிதி சுவாமிகளின் பாதுகைகளை
நிறுவி நாளும் பணி செய்து வந்தார் பொன்னம்பலர். பொன்னம்பலத்தில் பொன்னம்பலப் பேர் கொண்ட
சிதம்பர குருவிற்கு பொன்னம்பலனார் கோயில் நிறுவினார். இம்மடத்திற்கும் கோவிலூர் சிதம்பர சுவாமிகள் மடம் என்றே தன் குருவின் பெயரை
வைத்தார் பொன்னம்பலர். இம்மடத்தின் திறப்பு விழாவிற்கு இராமசாமி ஞான தேசிகர் வருகை
தந்து ஆசியருளினார்.
மடத்துப் பணிகள் செம்மையுற
நடந்து வர இவர் ஞானப் பணிகளில் ஈடுபட்டார். எப்போது ஓலை வாசித்தும் ஓலை எழுதியும் இவர்
வேதாந்தப் பணி செய்து வந்தார். பரமாரத்த தரிசனத்திற்குத் தக்க உரை கண்டார். தாண்டவராயர்
எழுதிய கைவல்ய நவநீதம் நூலுக்குப் பலரும் பலவகையில்
உரை செய்திருக்க இவர் அவற்றைப் பொய் உரைகளாக்கி மெய் உரை ஒன்றை எழுதினார். அதுவே என்றும்
நிற்கும் மெய் உரையாயிற்று. வேங்கடநாதர் இயற்றிய
பிரபோத சந்திரோதயம் என்பதையும் அச்சிட்டார்.
மேலும் இவர் சிவப்பிரகாசரின் வேதாந்தச் சூடாமணிக்கு மறைபொருள் விளக்கம் என்று
உரை கண்டார்.
சிதம்பரத்தில் பல வேத பாடசாலைகள்,
பசுமடங்கள், வித்யாசாலைகள் ஏற்பட வழி செய்தார். மேலும் பொன்னம்பலத்திற்குப் பொன்னோடு
வேய்ந்துப் புதிதாக அளித்தார். திருப்புலீச்சுரத்தில் இருந்த கோயில், குளம் ஆகியவற்றைச்
சீர் செய்து புதிதாக்கினார். மேலும் சுப்பிரமணியன் செட்டியாருக்கு ஏற்பட்ட கண் நோயை
நீக்கினார். அவர் செல்வம் பலவும் அள்ளித் தந்து பொன்னம்பலர் மாணவர் ஆனார். இவரின் செல்வத்
துணை கொண்டு தத்துவராய சுவாமிகளின் நிறைநிலை
இருந்த இறும்பூதூர் (எறும்பூர்) தலத்தினைச் சீர்மை செய்தார்.
கோவிலூரில் சீர் வளர் சீர்
இராமசாமி ஞானதேசிகர் முக்திப் பேறு அடைந்த நிலையில் வீரசேகரரை அடுத்த பட்டமாக்கிட இவரின்
சொல்லும் துணை நின்றது. இவ்வாறு மூன்று கோவிலூர் ஆதினங்களின் அருமைக்கும் பெருமைக்கும்
காரணமாக இவரின் துணை அமைந்தது. வீரப்ப சுவாமிகள் தன் பால் பயின்றவர் என்றாலும் அவரிடத்தில்
ஊழியன் பொன்னம்பலவன் என்ற நிலையிலேயே தனது அன்பைக் காட்டி வந்தார் பொன்னம்பலர்.
கோவிலூருக்கு உரித்தான களத்தூர்
கிராமத்தில் மழை இன்றி வறட்சி ஏற்பட்ட நிலையில் பொன்னம்பலர், வீரசேகர ஞான தேசிகர் ஆகியோர்
சென்று அங்கு மழை வர வேண்ட மழை வந்து சேர்ந்த
அதிசயமும் நடைபெற்றது.
அதுபோல் மடத்திற்கு அண்டி வந்தோரை
இவர் சிவ பரம்பொருளாகவே கண்டார். பல நாள்களில் இரவில் வரும் அடியார்களை நோயுற்றாரைத்
தன் நினைவால் உணர்ந்து அவர்களுக்கு உதவி செய்யச் சொல்லி அவர்கள் உண்டு உறங்கிய பின்பே
தான் உறங்குவார் பொன்னம்பலர். பொருள் வைத்த சேரி மடம் கோவிலூரில் இருந்து பிரிவுபடும்
நிலை வந்த காலத்து அதனைக் கோவிலூருக்கே உரிமையாக்கியவர் பொன்னம்பலர். மேலும் தனக்குப்
பின்னால் சிதம்பர மட உரிமையை கோவிலூர் மடத்திற்கே ஆக்கி பத்திரம் பதிந்தார்.
எழுபத்து மூன்றாண்டுகளாக ஞான
வழி நடந்து வந்த பொன்னம்பலருக்கு முக்திப் பேறு அடையும் நாளும் வந்தது. கலியாண்டு 5006 , குரோதி ஆண்டு ஐப்பசி திங்கள் தீபாவளித்
திருநாளன்று பொன்னம்பல சுவாமிகள் நிறைநிலை பெற்றார். அவரின் திருமேனி சிதம்பரம் மடத்தில்
தென்பாகத்தில் வைக்கப் பெற்றுத் திருக்கோயில் கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக