செவ்வாய், ஏப்ரல் 04, 2017

பெண்ணிய நோக்கில் குறுந்தொகை

பெண்ணிய நோக்கில் குறுந்தொகை


Siragu kurundhogai-1
எட்டுத்தொகை நூல்களுள் செறிவும், இனிமையும் மிக்கது குறுந்தொகை ஆகும். ‘‘புறத்தே தோன்றும் காட்சிகளைச் செய்யுட்களில் புனைந்து காட்டும் ஆற்றலினும் அகத்தே தோன்றும் கருத்துக்களை உணர்ச்சியும், மெய்ப்பாடும் புலப்பட உரைக்கும் ஆற்றல் சிறந்தது” என்று குறுந்தொகையின் சிறப்பினை எடுத்துரைக்கிறார் உ.வே. சாமிநாதர். அகமனப் புரிதல்களுக்கு இடமளிக்கும் பாடல்கள் பலவற்றைக் கொண்டது குறுந்தொகையாகும். இக்குறுந்தொகையில் இருபத்தோரு பெண்பாற் புலவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் எழுதிய குறுந்தொகைப்பாடல்கள் மொத்தம் எழுபத்தைந்து என்ற அளவினை எட்டுகிறது. இப்பாடல்களைப் பெண்ணிய நோக்கில் அணுகுவதாக இக்கட்டுரை அமைகிறது.
குறுந்தொகை அகம் சார்ந்த பாடல்களின் தொகுப்பாகும். இவ்வகப்பாடல்களில் செவ்விய நிலையில் காதல் வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. செவ்விய நிலைக் காதல் என்பது ஒருவகையில் பெண்களுக்கு தடைப்படுத்தும் நிலையையும் தருகின்றது. மற்றொரு வகையில் அதுவே விடுதலையையும் தருவதாக உள்ளது. பெண்கள் தாங்களாகவே காதல் இன்பத்தில் ஈடுபடுதல், அல்லது ஆடவரால் வீழ்த்தப்படுதல் என்ற நிலைகளில் திருமணம் என்ற எல்லைக்குச் சென்று குடும்பம், பிள்ளை, இல்லறம் என்ற பிணைப்பு நிலைக்கு ஆளாகின்றனர். அதே நேரத்தில் காதலித்ததன் காரணமாக சிலவகை உரிமைகளையும் பெண்கள் பெறத் தகுதி உடையவர்களாக உள்ளனர். தானே தேர்ந்து கொண்ட கணவன் அல்லது காதலன் என்ற அடிப்படையில் ஆண்களிடத்தில் அவர்கள் தனக்கு வேண்டுவனவற்றை, அல்லது தான் விரும்புவனவற்றைப் பெற்றுக்கொள்ளும் உரிமை பெற்றவர்களாக விளங்குகின்றனர். இதில் கட்டுண்ட நிலை, அல்லது விடுதலை நிலை என்ற நிலைப்பாட்டில் ஏதேனும் ஒன்றைப் பெண்கள் தங்களுக்கு ஏற்ற நிலையில் அமைத்துக்கொள்ளத்தக்கவர்களாக ஆகின்றனர்.
விரும்பி மணந்த காதலன் தன்னுடன் உடன் உறைந்து, தன்னையும் வளப்படுத்தி அவனையும் வளப்படுத்தி வாழும் வாழ்க்கை பெற்ற தலைவியர் மகிழ்ச்சியான வாழ்க்கை பெற்றவர்களாகின்றனர். இவ்வுரிமை நிலையைப் பெறாதவர்கள் துன்ப வாழ்க்கை வாழ வேண்டியவர்களாகின்றனர்.
செவ்விய நிலைக் காதல் என்பது உரிமைகள் பலவற்றை வழங்குவது என்று பெண்ணியவாதிகள் கருத்துரைத்துள்ளனர்.
‘‘தகர்க்க இயலாத சமுதாயச் சுமைகளை உடைக்கும் தன்மை வல்லைமை பெற்றது செவ்விய காதல். பெண்கள் சமத்துவ வாழ்வைப் பெறவும், விடுதலை மிக்க வாழ்வைப் பெறவும், அதிகாரத்தைப் பெறவும் காதல் வழி வகுப்பதாக பெண்ணியத் தத்துவவாதிகளும், சமுதாயவியல் அறிஞர்களும் கருதுகிறார்கள். இதுவே உண்மையுமாகும்.
செவ்விய  நிலைக் காதல் என்பது பெண்களுக்கு அவர்களின் உரிமைகளைப் பெறக் குறிக்கத்தக்கப் புள்ளியாகும். இந்நிலையானது பெண்களைப் பேரிழப்பு, நரகம், தியாகம் போன்றவற்றில் இருந்து விடுவிக்கிறது என்கிறார் சுலமித் பையர்ஸ்டோன்.
ஆனால் செவ்விய நிலைக் காதல் என்பது சமமற்ற தன்மையை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே ஏற்படுத்துவதாக சைமன் டிபொவாயர் போன்ற பெண்ணியவாதிகள் கருதினர். கர்லோ சுமார்ட் என்பவரும், தந்தை வழிச் சமுதாயத்தின் அடக்குமுறைக்குச் செவ்விய காதல் வழி வகுக்கிறது என்கிறார்.
இருப்பினும், செவ்விய காதல் என்பது பெண்கள் உரிமை பெறுவதற்கான வழிவகைகளுள் ஒன்று என்பது தற்போதைய பெண்ணியவாதிகளின் கருத்தாகின்றது.
இவ்வகையில் செவ்விய காதல் என்பது உரிமையின் வாசல் எனப் பெண்ணியவாதிகள் கருதுவதை ஏற்கமுடிகின்றது.
‘‘காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே குழந்தைகளைப் பெறுதல், வீடு, தோட்டங்களைப் பேணுதல் என்பதை மட்டும் கருதியது அன்று. அது உயிரியல் தேவைகளை மட்டும் நிறைவேற்றுவது அன்று. அது மனிதர்க்கான எதிர்காலத்தை வடிவமைப்பது. மனிதரின் மூளையாற்றலை வெளிப்படுத்துவது. அது. பெண்கள் தங்களைத் தாங்களே உணர்ந்து கொள்வதற்கான ஒரு தேடலும் ஆகும்’’ என்று செவ்விய நிலைக் காதலைப் பெண்களுக்கான சுயதேடலாகக் காண்கிறார் பெட்டி பிரைடன்.
இக்கருத்துகளை அடியொற்றிக் குறுந்தொகையில் பெண்பாற்புலவர்களின் பாடல்களை நோக்கும்போது, உரிமை பெறும் இன்பத்தையும் காணமுடிகிறது. உரிமை மறுக்கப்படும் துன்பத்தையும் காணமுடிகிறது.
தலைவனுடன் உடனுறையும் இனிமை
தலைவனும் தலைவியும் காதலித்து மணம் புரிந்து வாழ்கின்றபோது பல உரிமைகளைத் தலைவிக்குத் தலைவன் நல்கி வாழும் வாழ்க்கை வெற்றிகரமான வாழ்க்கை ஆகின்றது. ஆனால் இவ்வெற்றிகரமான வாழ்க்கை மிகக் குறைந்த நிலைப்பாடு உடையனவாகவே குறுந்தொகைச் சூழலில் உள்ளன. தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் அவை உள்ளன.
தலைவன் தலைவியை விட்டுப் பிரிகிறான்.  நீண்ட நாள்கள் ஆகியும் அவன் வந்து சேரவில்லை. தோழி தலைவனின் வாரா இயல்பை எண்ணிக் கவலை கொள்கிறாள். அந்நேரத்தில் தலைவி ‘‘தலைவர் தனக்குத் தந்தையும் தாயும் போன்ற இயல்பினை உடையவன். அவன் நிச்சயம் நம்மை நாடி வருவார்” என்று கூறித் தோழியைத் தேற்றுகிறாள்.
தன்னுடைய தந்தை, தாய் ஆகியோரை ஒரு நாள் பொழுதில் மறந்துவிட்டுத் தலைவனுடன் இல்லறத்தைத் தொடங்குகிறாள் தலைவி. தந்தை, தாய் ஆகியோர் இருந்தால் எவ்வாறு தலைவியை வருத்தப்படாமல் காப்பார்களோ அதுபோல இனித் தலைவன் தலைவியைத் தாங்கவேண்டும். தந்தையையும், தாயையும் தன் அன்பால், தன் அரவணைப்பால் சமப்படுத்த வேண்டும். இதனைச் செய்யும் தலைவன் வெற்றி பெறுகிறான். தலைவி மகிழ்ச்சியடைகிறாள்.
‘‘நம் நலம் தொலைய நலம் மிகச் சாஅய்
இன்உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ
புலவி அஃது எவனோ அன்பிலங்கடையே”
என்ற பாடலில் அன்பின் காரணமாகவே புலவி தோன்றுகிறது என்று தலைவி பேசுகிறாள். இருப்பினும் தலைவன் வராத குறை இங்கு இருக்கத்தான் செய்கிறது.
அள்ளுர் நன்முல்லையாரின் பாடல் ஒன்றில் தலைவி தலைவனுடன் இணைந்து இருக்கும் இரவுப் பொழுது கழிய மெல்ல வைகறை வந்து விடுகிறது. அவ்வைகறை வாள் போல் தோன்றி இருவரையும் பிரித்தது என்று தலைவி எண்ணுகிறாள்.
‘‘குக்கூ என்றது கோழி. அதன் எதிர்
துட்கென்றது என் தூஉ நெஞ்சம்
தோள் தோய் காதலர் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே”
இப்பாடலில் தோள் தோய் காதலர் என்பது தலைவன் தலைவியின் நெருக்கத்தைக் காட்டும் பகுதியாகும். வாள்  என்பது இருவரின் இணைவைப் பிரிக்கும் வைகறையாகின்றது. இரவு முழுவதும் தலைவனும் தலைவியும் மகிழ்ந்து இருந்தனர் என்பதை இப்பாடல் காட்டுகிறது. இப்பாடலைத் தலைவியின் பூப்புடன் தொடர்புபடுத்தி உரையாசிரியர்கள் உரை காணுகின்றனர். அதற்கான எக்குறிப்பும் இல்லாத நிலையில் இந்தப்பாடல் அந்த உள் கருத்து உடையது என்று வலிந்து நோக்க இயலவில்லை. தலைவனும் தலைவியும் தோள் தோய்ந்து இன்பம் கொண்டனர் என்பதற்கு இப்பாடல் சான்றாகின்றது.
பெண்பாற் புலவர்களின் பாடல்களில் ஓரிரு பாடல்கள் மட்டுமே தலைவனுடன் தலைவி கொண்ட இன்பத்தின் சான்றினைக் காட்டும் பாடல்களாக விளங்குகின்றன. மற்றவை வருத்தமிகுதியைக் காட்டும் பாடல்களாகவே உள்ளன.
வருத்தமிகு வாழ்க்கை
பல பாடல்களில் தலைவியின் வருத்தம் பதிவாகியுள்ளது. காதலிக்கும்போது தந்த விடுதலையைக் கற்பில் மறக்கிறான் தலைவன் என்ற ஏக்கம் பல பெண்பாற்புலவர் பாடல்களில் எதிரொலிக்கின்றது.
நோம் என் நெஞ்சே, நோம், என் நெஞ்சே,
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம் என் நெஞ்சே
அமைதற்கு அமைந்த நம் காதலர் அமைவு இலர் ஆகுதல் – என்ற காரணத்தால் தலைவி வருத்தம் கொள்கிறாள். காதலிக்கும்வரை அமைதற்கு அமைந்த தன்மை உடைய காதலன், காதலித்துத் திருமணம் ஆனபின்பு அமைவிலர் ஆனதின் காரணம் யாது என்பது தலைவிக்குத் தெரியாததாகின்றது.
தலைவியைக் காண ஒரு நாள் மட்டும் வரவில்லை. இருநாள்கள் இல்லை. பல நாட்கள் தலைவியின் அன்பினைப் பெறத் தலைவன் முயற்சித்தான். பணிந்து பேசினார். அவளின் நெஞ்சம் அவனை ஏற்றுக்கொண்டபின் சென்றவன் சென்ற இடம் தெரியவில்லை. ஏற்றுக்கொண்டபின் அவனின் நடைமுறைகள் மாற்றம் பெற்றுவிடுவது ஏனோ என்று தோழியும் தலைவியும் கவலைப்படுகின்றனர்.
‘‘ஒருநாள் வாரலன், இருநாள் வாரலன்
பல்நாள் வந்து பணிமொழி பயிற்றி என்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்தபின்றை
வரை முதிர் தேனின் போகியோனே
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ
வேறுபுலன் நல் நாட்டுப் பெய்த
ஏறுடை மழையின் கலிழும் என் நெஞ்சே”
என்ற பாடலில் தலைவனின் பணிந்த நடைமுறை நெஞ்சத்தைப் பெற்றபின்பு மாறிய நடப்பினை வருத்தத்துடன் பகிர்வதாக உள்ளது.
‘‘பிறங்குமலை அருஞ்சுரம் இறந்தவர்ப் படர்ந்து
பயில் இருள் நடுநாள் துயில் அரிதுஆகித்
தெள்நீர் நிகர்மலர் புரையும்
நல்மலர் மழைக்கணிற்கு எளியவால் பனியே”
தலைவன் சுரம் கடந்து பொருள் தேடிச் சென்றான். அவன் வரவை எண்ணித் தலைவி கண்ணீரை மழையாகப் பொழியும் நிலையில் ஏங்கிக் காத்திருக்கிறாள். இவ்வாறு தலைவனுடன் வாழும் வாழ்க்கையில் பெரிதும் பிரிவையே சந்திப்பவளாக, தன் இல்லற உரிமையைக் கூடப் பெற இயலாதவளாகக் குறுந்தொகைத் தலைவியர் வெளிப்பட்டுள்ளனர்.
நாட்டின், நாட்டின், ஊரின், ஊரின், குடிமுறை, குடிமுறை தேரின் கெடுநரும் உளரோ நம் காதலோரே என்ற நிலையில் எங்கும் தேடியும் கிடைக்கப்பெறாதவனாகத் தலைவன் மறைந்துதொழிகிறான். அவனைத் தேடி அவன் வரவை நோக்கிக் காத்திருக்கிறாள் தலைவி.
பின்னிரவிலாவது வந்துவிடுவான் என்று ஒரு தலைவி எண்ணுகிறாள். வீட்டின் கதவை மூடச் சென்றவள் அப்போதாவது தலைவன் வந்தவிடுவான் என்று நம்பிக்கை கொண்டு, தலைவி இப்புறமும் அப்புறமும் பார்க்கிறாள்.
‘‘புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நார்இல் மாலைப்
பலர் புகுவாயில் அடைப்பக் கடவுநர்
வாரார் தோழி! நம் காதலரே!
என்றவாறு தலைவன் வரவை நோக்கிக் கதவுகளை மூடக் கூடத் தாமதம் செய்கிறாள் தலைவி.
செவ்விய காதல் என்ற நிலையில் சித்திரிக்கப்பெறும் குறுந்தொகைக் காதல் பெரும்பாலும் பெண்ணுக்கான உரிமையை வழங்க வாய்ப்பே தரவில்லை என்பதே மேற்கண்ட பாடல்களின் வழி பெறத்தக்க உண்மையாகும்.
அகமும் உடல் வருத்தமும்
காதல் வருத்தத்தைத் தன் உடல் சார்ந்த வருத்தமாகப் பெண்படைப்பாளிகள்  வெளியிட்டுள்ளனர். ஆண்படைப்பாளர்களிடம் இல்லா இந்நிலைப் பெண் படைப்பாளர்களுக்கான தனித்தன்மையாக விளங்குகிறது.
‘‘சேறும் சேறும்’ என்றலின் பண்டைத் தன்
மாயச் செலவாச் செத்து மருங்கு அற்று
மன்னி கழிக என்றேனே, அன்னோ
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ
கருங்கால் வெண்குருகு மேயும்
பெருங்குளம் ஆயிற்று என் இடை முலை நிறைத்தே”
என்ற பாடலில் தலைவியின் வருத்தம் நிலை கொள்ளும் இடமாக மார்பகம் அமைகின்றது. எந்தை என்று இங்குத் தலைவன் தந்தையாகவும் தலைவியால் எண்ணப்பெறுகிறான். மேலும் தலைவியின் மார்பகத்து இடைவெளியில் உள்ளத் துயரம் பெருங்குளமாகக் காட்சி தருகிறதாம். அக்குளத்தில் கரிய கால்களை உடைய வெண்பறவையான கொக்கு மேய்கிறதாம்.
‘அயிரை பரந்த அம் தண் பழனத்து
ஏந்து எழில்மலர தூம்புடை திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு இவள்
இடை முலை கிடந்தும் நடுங்கல் ஆனீர்
அரியம் ஆகிய காலைப்
பெரிய தோன்றினிர் நோகோ யானே”
என்ற இப்பாடலில் தலைவியின் மார்பில் உறங்காத நெருக்கம் அற்றவனாகத் தலைவன் விளங்குகிறான். இது கருதி  தலைவி வருந்துகிறாள். காதலிக்கும் பொழுது பொறுமையுடன் அனைத்தையும் பொறுத்துக்கொண்டவன் தற்போது அவற்றை மறந்தது ஏனோ என்ற ஏக்கம் இந்தப் பாடலில் வெளிப்படுகிறது.
Siragu kurundhogai-3
அது நன்னீர்ப் பொய்கை. அதனில் நிறைய ஆம்பல் மலர்கள் பூத்துக்கிடக்கின்றன. அதனைப் பறிக்கச் சென்ற ஒருவனுக்குத் தாகம் ஏற்படுகிறது. அப்போது அந்நன்னீர்ப் பொய்கையிலேயே நீர் அள்ளிப் பருகாமல் அவன் வெளிவந்துத் தண்ணீர் தேடி அலைவது போல இருக்கிறதாம் தலைவனின் நிலை. மேலும் கன்னிப்பெண்கள் தொழும் பெருமை உடைய மூன்றாம் பிறைச் சந்திரன் உயரத்தில் தோன்றுதல் போல உயர்வான எண்ணங்களை உடைய தலைவன் தற்போது அவற்றை மறப்பது ஏன் என்று உவமைகளால் தலைவன் தலைவியின் நிலைகளை அடுக்கி மொழிகிறாள் தோழி.
மற்றொரு தலைவனும் தலைவியின் மார்பகத்தில் உறங்க மறந்துப் பிரிந்து போகிறான். அவன் செல்லும் வழி கொடுமையான பாலையாகும். ஆனால் நல்ல இனிமையை உடைய தலைவியைப் பிரிந்து ஏன் அவன் அவ்வழி செல்லவேண்டும் என்று தலைவி எண்ணுகிறாள்.
‘‘வெந்திறல் கடுவளி பொங்கர்ப் போந்தென
நெற்று விளை எழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை, அருஞ்சுரம் என்ப நம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே”
என்ற இப்பாடலில் தலைவியின் காதல் வருத்தம் அவளின் மார்பகத்தில் குடிகொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.
மேற்கண்ட பாடல்களில் தலைவியின் உடல் வருத்தம் அவளின் காதல் வருத்தங்களைத் தாங்கும் நிலைப்பாடு உடையதாக விளங்குகிறது.
பொய்யே காமம்
பெண்களின் காதல் இன்ப வேட்கை நிறைவேறாத்தன்மையுடனே இருந்துள்ளது. இதன் காரணமாக பொய்யே காமம் என்று பெண்கள் கருதியுள்ளனர்.
‘‘காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர் துஞ்சுயாமமும் விடியலும் என்று இப்
பொழுது இடைதெரியின் பொய்யே காமம்
மா என மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே”
என்ற பாடலில் பெண்ணின் காமம் பொய்யே என்று காட்டப்பெற்றுள்ளது.
நெய்தற் கார்க்கியார் என்ற மற்றொரு பெண்பாற் புலவர் காமம் இரங்கத்தக்கது என்கிறார். அதற்கான காரணம் பின்வருமாறு.
‘‘கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
தெண்கடல் அடைகரைத் தெளிர்மணி ஒலிப்ப
காணவந்து நாணப் பெயரும்
அளிதோ தானே காமம்
விளிவதுமன்ற நோகோயானே”
என்ற பாடலில் தலைவன் தேரில் வந்ததும் நின்ற காமம் அவன் சென்ற பின் தலைவியை வருத்துவதாயிற்று. இதனால் காமம் இரங்கத்தக்கது. அது அழிதலுக்கு உரியது என்று தலைவி குறிப்பிடுகிறாள்.
இப்பாடல்கள் வழி தலைவியின் காதல் வேட்கை, காமப் பண்பு – தலைமகனால் தீர்க்கப்படாததாக இருந்துள்ளது என்பது அறிய வருகிறது.
அகப்பாடலுடன் தன்னை இணைக்கும் தன்மை விளிகள்
காதல் பாடல்களைப் படைக்கின்ற பெண்பாற் புலவர்கள், தன் அனுபவங்களை தன் அனுபவமாகவே படைத்துச் சிறக்கின்றனர். ஆண்பாற் புலவர்கள் மற்றவர் அனுபவத்தைப் பாடும் போக்கினைக் கையாளத் தன் அனுபவத்தைப் பெண் படைப்பாளிகள் வெளிப்படுத்தி நிற்கின்றனர். இதற்கு மிக முக்கியமான அடையாளமாக விளங்குவது பெண்பாற் புலவர்களின் பாடல்களில் காணப்படும் தன்மை சார் விளிகள் ஆகும்.
‘அருவி வேங்கை பெருமலை நாடற்கு
யான் எவன் செய்கோ, என்றி யான் அது
நகை என உணரேன் ஆயின்
என் ஆகுவைகொல் நன்னுதல் நீயே”
என்ற பாடலில் யான், என் ஆகிய தன்மை இடச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. இத்தன்மையிடச் சொற்கள் பெண்பாற்புலவர்களின் அனுபவ வெளிப்பாட்டின அடையாளங்கள் ஆகும்.
‘‘யானே ஆண்டையேனே என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே
துறைவன் தன் ஊரானே
மறை அலர் ஆகி மன்றத்தஃதே”
என்ற பாடலில் தலைவி நான் இவ்விடத்தில் உள்ளேன். என் நலம் கடற்கரை சோலையிடத்தில் உள்ளது. அங்குதான் தலைவனும் தலைவியும் முதன் முதலாகச் சந்திப்பு நிகழ்த்தியது.  தலைவன் தன் ஊரில் இருக்கிறான். எம்மிடம் இருந்த நட்பானது பலர் அறியும் பழமொழியாகி அலராகி விட்டது என்கிறாள் தலைவி.
‘‘கூன்முள் முண்டகக் கூர்ம் பனி மாமலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறித்
துறைதொறும் பரக்கும் தூமணற்சேர்ப்பனை
யானும் காதலெம் யாயும் நனி வெய்யள்
எந்தையும் கொடிஇயர் வேண்டும்
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே”
என்ற பாடலில் யான், யாய், எந்தை ஆகிய சொற்கள் தன்மையிடம் சார்ந்த சொற்கள் ஆகும். இப்பாடல் தன் அனுபவமாக மிளிர்வது என்பதற்கு தன்மையிடப் பெயர்கள் அடையாளமாகின்றன.
‘‘மள்ளர் குழீஇய விழவினானும்
மகளிர் தழீஇய துணங்கையானும்
யாண்டும் காணேன் மாண் தக்கோனை
யானும் ஓர் ஆடுகள மகளே என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்ந்த
பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே”
என்ற பாடலில் யுான், காணேன் போன்ற சொற்கள் தன்னனுப வெளிப்பாடுகள்.
இவ்வகையில் தனக்கான விடுதலை, உரிமையை நாடி தன்னனுபவ வெளிப்பாடுகளை வெளியிடுவனவாகக் குறுந்தொகையின் பெண்பாற் புலவர் பாடல்கள் அமைந்துள்ளன.
மகளிர் செயல்பாடுகள்
Siragu kurundhogai-4
குறுந்தொகையில் பெண்பாற் புலவர் பாடல்களில் மகளிர் பழக்க வழக்கங்கள் பல குறிப்பிடப்பெற்றுள்ளன. அவை உண்மை அனுபவம் பெற்றனவாக உள்ளன. தலைவி ஒருத்தித் தலைவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். தலைவன் வருகை நிகழவே இல்லை. எனவே அவள் தன் கூந்தலைத் தானே நீவியபடி தலைவன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக கச்சிப் பேட்டு நன்னாகையார் பாடல் புனைந்துள்ளார்.
‘‘எங்கே வருவர் இனையல் அவர் என
அழாஅற்கோ இனியே? நோய் நொந்து உறைவி!
மின்னின் தூவி இருங்குயில் பொன்னின்
உரை திகழ் கட்டளை கடுப்ப மாச்சினை
நறுந்தாது கொழுதும் பொழுதும்
வறுங் குரற் கூந்தல் தைவருவேனே”
என்ற இப்பாடலில் தலைவன் வருவான் எனத் தோழி தலைவியைத் தேற்றுகிறாள். அவ்வாறு அவள் தேற்றும் நிலை கண்டும் தலைவி தேறுதல் அடையவில்லை. நறிய பூக்களைக் கோதும் குயில் கூவும் இளவேனில் காலமோ வந்துவிட்டது. ஆனால் தலைவன் வந்து சேரவில்லை. அவன் வராத காரணத்தால் அழகு செய்யப்பெறாமல் கிடக்கும் கூந்தலை வெறுமனே தடவிக் கொண்டு நான் காலத்தை கழிக்கிறேன் என்கிறாள் தலைவி. இவ்வியல்பு தற்போதை காலத்திலும் பெண்கள் இடத்திலும் இருப்பதைக் காண்கையில் சங்க இலக்கியப் பெண்பாற்புலவர்கள் சொந்த அனுபவம் கொண்டுத் தம் பாடல்களைப் படைத்துள்ளனர் என்பது புலனாகின்றது.
தலைவியானவள் சின்னப் பொம்மை ஒன்றை வைத்து விளையாடுகிறாள். அவள் தலைவன் மீது விருப்பம் கொண்டவுடன் இந்தப் பாவையுடன் விளையாடுவதை மறந்தாள். இதன் காரணமாகத் தோழிகள் அனைவரும் தலைவியை அப்பாவையைக் கொண்டு விளையாடு என்று கூறுகின்றனர். அப்போதும் அவள் அந்த பொம்மையை எடுத்து விளையாடவில்லை. இப்படி இருக்கும் நிலைமை உடைய தலைவியிடம் தலைவன் ஒரு வார்த்தை பேசினால் போதும் அவளின் பசலை தணியும் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
‘‘தாதின் செய்த தண்பனிப்பாவை
காலை வருந்தும் கையாறு ஓம்பு என
ஓரை ஆயம் கூறக் கேட்டும்
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும்
நன்னுதல் பசலை நீங்க அன்ன
நசை ஆகு பண்பின் ஒரு சொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கு?”
என்ற இப்பாடலில் தலைவி குளிர்ச்சி பொருந்திய பாவை ஒன்றை வைத்து விளையாடும் இயல்பினை உடையவள் என்பது தெரியவருகிறது. அவ்விளையாட்டுப் பிள்ளை விளையாட்டை மறந்துத் தலைவனை எண்ணிக் கொண்டிருக்கிறது என்று பாடலைப் படைத்துள்ளார் பூங்கணுத்திரையார்.
தாய்மை வாய்த்த பெண்களுக்குப் புளிப்புச் சுவை என்பது விருப்பமானது ஆகும். அவ்வாறு வயிறு வாய்த்த ஒரு பெண்ணின் புளிப்புச் சுவை விருப்பத்தை உவமையாக ஆக்குகிறார் கச்சிப்பேட்டு நன்னாகையார்.
‘‘அம்ம வாழி தோழி! காதலர்
இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர்போல நீர் கொண்டு
விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரிச்
செழும் பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே!”
என்ற பாடலில் நீரைத் தாங்கும் மேகத்திற்குக் குழந்தையைத் தாங்கும் தாய் உவமையாக்கப்பெற்றுள்ளாள். தாய்மை பெற்ற பெண் பசும்புளி வேட்கை உடையவளாக இருப்பாள் என்ற குறிப்பு இன்றைக்குப் புளிப்பைத் தரும் மாங்காய் போன்றவற்றிற்கு உரியதாக உள்ளது. தாய்மை அனுபவமும், மழை நிகழ்வும் இங்குப் பெண்கவியாக மலர்ந்துள்ளது.
நாள்தோறும் காக்கைக்குச் சோறிடும் வழக்கத்தைப் பெண்கள் மேற்கொண்டிருந்தனர். அதற்குச் சான்றாக குறுந்தொகைப் பாடல் ஒன்று அமைகின்றது,
‘‘திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே”
என்ற இந்தப் பாடலில் காக்கைக்குச் சோறிடும் வழக்கம் குறிக்கப்பெற்றுள்ளது. காக்கைச் சோறிடுவதன் வழியாக அக்காக்கை கரைதலைச் செய்யும். காக்கை கரைதல் என்பது இனியவர் ஒருவரின் வருகை நிகழப் போகிறது என்பதை எடுத்துரைக்கும் நம்பிக்கையைத் தருவதாகும். இதன் காரணமாகப் பிரிந்த தலைவன் வருவான் என்றெண்ணித் தலைவி காக்கைகளுக்குச் சோறிடுகிறாள். இப்பாடலில் உள்ள வாழ்வியல்பு கருதி இதனைப் பாடிய புலவர்க்குக் காக்கை பாடினி நச்செள்ளை என்ற பெயர் தரப்பெற்றுள்ளது. இந்த அளவிற்கு இப்பாடல் அழுத்தம் மிக்கப் பாடலாகும்.
ஏழு பாத்திரங்களில் நெய், தொண்டி என்ற ஊரின் வயலில் விளைந்த நெல்லரிசி ஆகியவற்றைக் கொண்டுக் காக்கைக்குச் சோறு அளிக்கிறாள் தலைவி. இன்னமும் இந்நடைமுறை தொடர்கிறது. பெண்கள் அக்காலம் முதல் சமைத்தல் தொழிலையும், காக்கைக்குச் சோறிடும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர் என்பதற்கும் இந்நடைமுறை எக்காலத்திலும் மாறாமல் தொடர்கிறது என்பதற்கும் இப்பாடல் சான்றாகிறது.
இவ்வாறு பெண் அனுபவங்கள் சங்கப் பெண் படைப்பாளர்கள் பாடல்களில் வெளிப்பட்டுள்ளன. இவை பெண்படைப்பின் தனித்த அடையாளங்களாக விளங்குவனவாகும்.
தலைவன் பொருள் கருதிப் பிரிய, தலைவி ஆற்றியிருக்கும் பாங்கு
Siragu kurundhogai-5
தலைவன் பொருள் கருதிப் பிரிகிறாள். இதன் காரணமாக தலைவி தனியாக வீட்டில் இருக்கிறாள். ஆனால் தலைவனின் நினைவிலேயே அவள் காலத்தைக் கடத்துகிறாள்.
பெயல்மழை துறந்த புலம்புறு கடத்துக்
கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி
துதை மென் தூவித் துணைபுறவு அரிக்கும்
அத்தம் அரிய என்னார் நத்துறந்து
பொருள்வயிற் பிரிவார் ஆயின் இவ் உலகத்து
பொருளே மன்ற பொருளே
அருளே மன்ற ஆகும் இல்லதுவே”
என்ற பாடலில் தலைவன் அருள் துறந்து பொருள் தேடச் சென்றான் எனத் தலைவி வருந்துகிறாள்.
இப்பாடலில் காட்டப்பெற்றுள்ள சூழல் குறிக்கத்தக்கது. கள்ளிச் செடியின் காய் வெடிக்கிறது. அதனால் எழும் சப்தத்தைக் கேட்டு இணைந்திருந்த புறாக்கள் ஒன்றை விட்டு ஒன்று சற்று நீங்குகின்றன. இதுபோன்று தலைவியும் தலைவனும் நிலையில்லாப் பொருள் கருதி பிரிய நேர்ந்ததே. அருளைவிடப் பொருளே சிறந்ததா என்ற வினாவை இப்பாடல் எழுப்புகிறது.
ஒக்கூர் மாசாத்தியார் எழுதிய மற்றொரு பாடலும் இதே பொருளுடையதாக உள்ளது.
‘‘இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்
இவணும் வாரார் எவணரோ? என
பெயல் புறந்தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்கு எயிறுஆக
நகுமோ தோழி! நறுந்தண் காரே!”
என்ற பாடலில் தலைவன் இளமை கழிவதைக் கூடக் கருதாமல் பொருள் தேடிச் சென்றுவிட்டான். இதனைப் பொறுக்க முடியாமல் தலைவி வருந்துகிறாள். தலைவன் மீண்டு வருவதாகச் சொன்ன கார்காலமும் வந்துவிட்டது. ஆனால் அவன் வந்தபாடில்லை. இதன் காரணமாக முல்லை மலர்கள் ‘‘தலைவியைப் பார்த்து நாங்கள் பூத்துவிட்டோம். இன்னும் உன் தலைவன் வரவில்லையே! உன் தலைவன் சொல் பிழைபடுபவனோ ” என்று சொல்லிச்  சிரிப்பதாகப் பாடலைப் புனைந்துள்ளார் ஒக்கூர் மாசாத்தியார்.
ஔவையாரின் பாடல் ஒன்றும் இதே சூழலில் அமைந்துள்ளது.
‘‘பெய்த குன்றத்துப் பூநாறு தண் கலுழ்
மீமிசைத் தாஅய் வீசும் வளி கலந்து
இழிதரும் புனலும் வாரார் தோழி!
மறந்தோர் மன்ற, மறவாம் நாமே
கால மாரி மாலை மாமலை
இன்இசை உருமினம் முரலும்
முன்வரல் ஏமம் செய்து அகன்றோரே”
என்ற பாடலில் தலைவி தலைவன் தன்னை மறந்தாலும் நான் அவனை மறவேன் என்று மொழிகிறாள். கார்காலத்திற்கு முன்பே தான் வருவேன் என்றவன் கார்கலம் வந்தபின்பு வரவில்லை என்பதால் தன்னைத் தலைவன் மறந்து விட்டதாகத் தலைவி எண்ணுகிறாள்.
பொருளே முக்கியம் என்று இளமையையும், இனிமையையும் பாராமல் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்கிறான். இதன்வழி தலைவியின் மனதைப் புரிந்து கொள்ளாமல் பொருளே பெரிதென தலைவன் பிரிவதனை அடிப்படையாக வைத்துத் தலைவியின் விருப்பம் பின்தள்ளப்பெற்றுள்ளது. அல்லது அவளின் உரிமை ஏற்கப்படாததாக மறுக்கப்படுகிறது என்ற முடிவைப் பெற முடிகிறது.
பெண்பாற் புலவர்கள் பயன்படுத்தும் உவமைகள்
பெண்கள் பெரும்பாலும் பழகுபொருள் சார்ந்த உவமைகளையே தம் பாடல்களில் காட்டிள்ளனர். இதற்குக் குறுந்தொகையில் பாடப்பெற்ற பெண்பாற்புலவர்கள் பாடல்கள் சான்றாக விளங்குகின்றன.
வேப்பம்பழமும், பொன்னும்
தலைவன் சென்ற வழி வேப்ப மரங்கள் பல உடைய வழி. அந்த வேப்பமரங்களில் பழங்கள் பழுத்த நிலையில் உள்ளன.  வேறு பழங்கள் கிடைக்காத நிலையில் கிளிகள் வேப்பம் பழங்களை உண்கின்றன. இத்தகைய வெம்மைச் சூழலை உடையது பாலை நிலம். இந்தக் காட்சியைச்  சொல்லவந்த அள்ளுர் நன்முல்லையார் ஒரு உவமையைக் கையாள்கிறார்.
‘‘உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளை வாய்க்கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதி மாண் வள்உகிர்ப்
பொலங்கல ஒரு காசு ஏய்க்கும்
நிலம் கரி கள்ளி அம் காடு இறந்தோரே”
என்ற பாடலில் பொற்கொல்லர் ஒருவர் பொன்னால் ஆன அணிகலனை இணைக்கும் நிலையில் அதனை எடுத்து ஊடுகம்பியை இணைக்கும் நிகழ்ச்சி குறிக்கப்பெற்றுள்ளது. கிளியின் அலகில்  வேப்பம் பழம் இருப்பது என்பது, பொற்கொல்லர் கைகளால் பொன் அணியை இணைப்பது போல உள்ளது என்ற இந்த உவமை குறிக்கத்தக்க உவமையாகும். பெண்கள் பொன்னணி அணிவதி்ல் விருப்பு உடையவர்கள் என்பதும். அக்கால அணிகள் வேப்பம்பழம் போன்ற நிலையில் உருண்டையாக அமைந்திருந்தன என்பதும் கூடுதலாக அறியவரும் செய்தியாகும்.
நெருஞ்சி முள்
தரையில் படர்ந்து கிடக்கும் நெருஞ்சி முள்ளும் பெண்பாற் புலவரின் பாடலில் உவமை நலம் செய்கின்றது. தலைவன் களவில் இனிமையானவனாக விளங்கினார். ஆனால் மணந்து கொண்டு இல்லறம் நடத்தும் நேரத்தில் அவன் பிரிவுத்துன்பத்தைத் தருபவனாக விளங்குகிறான். அது எவ்வாறு உள்ளது என்றால் நெருஞ்சிச் செடி மஞ்சள் நிறத்தில் பூக்கின்றபோது அழகாக இருக்கிறது. மென்மையாக இருக்கிறது. அதுவே காய்க்கின்ற காலத்தில் முள்ளை வெளிப்படுத்துகிறது. அந்த முள் வழியில் செல்வோரை வருத்தும். இது போன்று முன்பு இனிமையாக இருந்த தலைவன் தற்போது கொடுமை உடையவனாக மாறினான் எனத் தலைவி எண்ணுகிறாள். பெண்பாற் புலவர்களின் பார்வையில் இயற்கையான நாளும் காண்கின்ற சிறிய நெருஞ்சி முள்ளும் இலக்கிய உவமையாக ஆக்கப்பெற்றுள்ளது.
‘‘நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே
புன் புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கு இன்புதுமலர் முட் பயந்தாஅங்கு
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே”
என்ற இந்தப் பாடல் சாதாரண நெருஞ்சியை இலக்கிய வளம் கொண்டதாக்குகின்றது.
ஏழுஊர்ப் பொது என்ற நிலையில் ஏழு ஊர்களை இணைக்கும் நடைமுறை தமிழகத்து மக்களிடத்தில் இருந்துள்ளது. ஏழூர் செவ்வாய்த் திருவிழா போன்ற சொல் வழக்குகள் தற்போதும் மக்களிடம் காணப்பெறுகின்றன. இது சங்ககாலத்திலேயே இருந்துள்ளது. ஏழு ஊர்களுக்குப் பொதுவாகப் பாத்திரங்கள் செய்யும் ஊது உலை இருந்திருக்கிறது. தலைவியின் நெஞ்சம் ஊதுஉலைக் களத்தில் உள்ள துருத்தி என்ற காற்று இயக்கும் கருவிபோன்று, மனதைத் துடிக்கச் செய்வதாக இருந்துள்ளது என்று கச்சிப்பேட்டு நன்னாகையார் பாடுகிறார்.
‘‘தாஅவல் அஞ்சிறை நொப்பறை வாவல்
பழுமரம் படரும் பையுள் மாலை
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர்
தமியர் ஆக இனியர் கொல்லோ
ஏழ் ஊர்ப்பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த
உலை வாங்கு மிதி தோல் போலத்
தலைவரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே”
வௌவால்கள் பறந்து பழுத்த மரங்களைத் தேடிச் செல்லும் மாலைப் பொழுதில் தலைவி தனிமை வருத்தத்தில் உள்ளாள். தலைவனுக்கும் இந்தத் தனிமை வருத்தம் இருக்குமோ என்று அவள் எண்ணுகிறாள். அவளின் உடல் தோலால் செய்யப்பெற்றுக் காற்றினை அழுத்தி விடுவிக்கும் துருத்தி என்ற கருவி போன்று உயிர்க்காற்றினை இயக்குவதாக உள்ளது. இப்பாடலில் ஊது உலை, துருத்தி, துருத்தி தோலால் செய்யப்பட்ட நிலை போன்றன அவற்றின் இயல்பின்படி வெளிப்படுத்தப்பெற்றுள்ளன.
Siragu kurundhogai-6
ஒற்றை மூங்கில்  ஒன்றும் உவமையாகத் தலைவியின் மனதில் எழுந்துள்ளது. யானைக் கூட்டம் கரும்புத் தோட்டத்தில் புகுந்து அனைத்துக் கரும்புகளையும் உண்டுவிடுகின்றன. இவற்றுக்கு இடையில் ஒரே ஒரு மூங்கில் மட்டும் நின்று கொண்டிருக்கிறது. அதுபோன்று தலைவி பல இன்னல்களுக்கு இடையில் ஒற்றைத் தனி மூங்கிலாக நிற்கிறாள் என்று பாடல் புனைகிறார் கச்சிப்பேட்டு நன்னாகையார்.
‘‘பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பாஅடி
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்து
அறைமடி கரும்பின்கண் இடை அன்ன
பைதல் ஒரு கழை நீடிய கரன் இறந்து
எய்தினர் கொல்லோ பொருளே அல்குல்
அவ்வரி பாடத் துறந்தோர்
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே”
என்ற பாடலில் ஒற்றை மூங்கில் உவமையாகிறது.
கோழிகளும் பெண்பாற் புலவர் பாடலில் உவமையாக  வந்துள்ளன.
‘‘மனைஉறை கோழிக் குறுங்காற் பேடை
வேலி வெருகினம் மாலை உற்றெனப்
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய
பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு
இன்னாது இசைக்கும் அம்பலொடு
வாரல் வாழியர் ஐய எம் தெருவே”
இப்பாடலில் கோழி, காட்டுப் பூனை ஆகியன உவமைகளாக விளங்குகின்றன. கோழியானது மாலை நேரத்தில காட்டுப் பூனை வந்து தன் குஞ்சுகளை அழித்துவிடலாம் எனக் கருதி அவற்றைப் பாதுகாக்க எண்ணிக் கூவுகின்றது. தலைவன் பரத்தையின் இன்பத்தை பெரிதும் நுகர்கிறான். இதன் காரணமாக அம்பல் எழுகிறது. தலைவி வருந்துகிறாள். அவள் கோழியின் நிலைப்பாட்டை உடையவளாகத் தன்னையும் தன் குழந்தைகளையும் காத்து நிற்கிறாள். காட்டுப் பூனை வருகிறதோ இல்லையோ தன் குட்டிகளைக் காக்கவேண்டும் என்று தாய்க்கோழி எண்ணுகிறது. சேவலோ எக்கவலையும் இன்றித் திரிகிறது. காட்டுப்பூனைபோல நெஞ்சில் வஞ்சம் கொண்டு மெல்ல தலைவனைத் திருடிச் செல்கிறது பரத்தை நேசம். இதனை இயல்பான உவமை கொண்டு விளக்குகிறது இப்பாடல்.
தலைவன் செல்லும் வழியைப் பற்றி அழகான ஓர் உவமையைக் கையாள்கிறது பின்வரும் பாடலடி.
‘‘எறும்பி அளையின் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறி
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறே
அது மற்று அவலம் கொள்ளாது
நொதுமல் கழறும் இவ்வழுங்கல் ஊரே”
தலைவன் பிரிந்து செல்லும் வழியானது எறும்பின் வளைபோல பல குறுகிய சுனைகளை உடையது. கொல்லர் உலைக்களத்தில் உள்ள பட்டடைக் கல்லைப் போன்று வெம்மையை உடையது. எயினர் வில் கொண்டு பொருள் கவரும் தன்மை உடையது. இவ்வழி சென்ற தலைவரின் இயல்பு வருந்தத்தக்கது என்று தலைவன் செல்லும் வழியின் வருத்தத்தைத் தலைவி எண்ணுகிறாள். இதில் தலைவன் செல்லும் பாதையில் உள்ள சுனைகளைக் குறிக்கும்போது எறும்பின் வளை போன்று அமைந்தது என்று குறிப்பது தலைவியின் இல்லம் சார் உவமை எழுச்சியை வெளிப்படுத்துவதாகும்.
தலைவனை தலைவி விரும்புகிறாள். அவனை விடுத்து மற்றார் மணம் பேச வருகின்றனர். இதனை விரும்பாத தலைவி ‘‘மீன் வலை மாப்பட்டாஅங்கு” என்ற உவமையை உச்சரிக்கிறாள். அதாவது மீனுக்கு விரித்த வலையில் வேறு ஒரு கடல் விலங்கு சிக்கினால் எவ்வாறு வலையும் அழியுமோ, அந்த விலங்கும் துன்பப்படுமோ அது போல தலைவியின் நிலை உள்ளது என்று குறுந்தொகைப் பாடல் உவமை விளக்கம் கொள்கின்றது.
இவ்வாறு அன்றாடம் தாம் காணும் இல்லம் சார்ந்த பொருள்களை (கோழி, மீன், மூங்கில், துருத்தி, நெருஞ்சி முள், பொன்னணி போன்றன) உவமைகளாகப் பயன்படுத்தி அவற்றின் வழியாக தன் மன இயல்புகளைப் பெண்பாற் புலவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
பெண்பாற் புலவர்கள் பாடிய தலைவன் கூற்றுப் பாடல்கள்
தலைவன், தலைவி இருவரும் அகப்பொருளின் முக்கிய மாந்தர்கள். தலைவன் பற்றித் தலைவி பல பாடல்களில் குறிக்கிறாள். தலைவி பற்றித் தலைவனும் பல பாடல்களில் குறிக்கிறான். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம். குறை சொல்லலாம். படைப்பாளர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட பாடுபொருளுக்கு ஏற்ப எக்கருத்தும் அமையலாம்.
குறிப்பாக தலைவி பற்றி எழுதும் ஆண்பாற்புலவர்களின் வெளிப்பாடு வேறாக இருக்கும். தலைவி பற்றி எழுதும் பெண்பாற்புலவர்களின் பதிவு முன்னதின் வேறாக இருக்கும். அதுபோன்றே பெண்பாற் புலவர்கள் படைத்த தலைவன் முற்றிலும் வேறானவன். ஆண்பாற் புலவர்கள் படைக்கும் தலைவன் வேறானவன்.
பெண்பாற் புலவர்கள் படைக்கும் தலைவன் தலைவியைக் குறை காணாதவனாக விளங்குகிறான். தலைவியின் பெண் இயல்பைப் போற்றுபவனாக விளங்குகிறான். அவளுக்கு உரிமை தருபவனாக இருக்கிறான். அதற்குக் குறுந்தொகையில் உள்ள பெண்பாற் புலவர்கள் படைத்த தலைவன் கூற்றுப் பாடல்கள் சான்று. ஒரு தலைவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்று பெண்கள் எண்ணினர் என்பதை இப்பாடல்கள் கொண்டு அறிந்து கொள்ளமுடிகின்றது.
தலைவியின் உடல் வளர்ச்சி கண்டு பூரிக்கிறான் தலைவன் ஒருவன்.
‘‘முலையே முகிழ் முகிழ்த்தனவே, தலையே
கிளைஇய மென்குரல் கிழக்கு வீழ்த்தனவே,
செறிமுறை வெண் பலும் பறிமுறை நிரம்பின,
சுணங்கும் சில தோன்றினவே, அணங்குதற்கு
யான் தன் அறிவல், தான் அறியலனே
யாங்கு ஆகுவள்கொல் தானே
பெருமுது செல்வர் ஒரு மட மகளே”
தலைவன் விரும்பும் தலைவி பெருஞ்செல்வர் ஒருவரின் மடமகள். அவள் உடல் வளர்ச்சி அவனுக்கு பெரும் கவர்ச்சியைத் தருகிறது. தலைவியின் மார்புகள் வளரத்தொடங்கின. தலையில் உள்ள மெல்லிய மயிர்க்கொத்துகள் கீ்ழ் நோக்கி வீழ ஆரம்பித்துவிட்டன. பற்களும் விழுந்து முளைக்கத் தொடங்கிவிட்டன. இவ்வளர்ச்சியை யான் அறிகிறேன். ஆனால் அவள் அறியவில்லை. அவளின் வளர்ச்சி என்னை வருத்துகிறது என்று தலைவன் இப்பாடலில் கருத்துரைக்கிறான். பெண்ணின் இயற்கை அழகு எவ்விதப் புனைவும் இல்லாமல் சொல்லப்பெற்றுள்ள பாடல் இதுவாகும். அதே நேரத்தில் பெண்ணுக்கே பெண்ணின் வளர்ச்சி தெரியாது. அதனைக் கூர்ந்து நோக்கும் ஆண்களின் கண்களுக்குப் புலப்படும் என்ற நடப்பினை இப்பாடல் காட்டுகிறது. எனவே பெண்பாற் புலவர் படைத்த தலைவன் கூற்றுப் பாடல் தலைவியை இழிவுபடுத்தாத இயல்பு நிலைப்பட்டது என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.
தலைவன் வினை முடித்து மீள்கிறான். தேரில் வரும் அவன் பாகனிடம் விரைவாகத் தேரைச் செலுத்தச் சொல்லிப் பேசுகிறான். அப்போது தனக்கும் தலைவிக்கும் இடையெ உள்ள தூரம் அதிகமாக உள்ளதே என்று வருந்துகிறான்.
‘‘அஞ்சுவது அறியாது அமர் துணை தழீஇ
நெஞ்சு நப்பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய
கை பிணி நெகிழின் அஃதுஎவனோ நன்றும்
சேய் அம்ம இருவாம் இடையே
மாக்கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு
கோட்புலி வழங்கும் சோலை
எனைத்து என்று எண்ணுகோ முயக்கிடை மலைவே”
என்ற நிலையில் தலைவிக்கும் தனக்குமான இடத்தை வெகுதூரமாகக் காண்கிறான் இத்தலைவன். இப்பாடலில் தலைவியுடன் கொள்ளும் இன்பம் குறிப்பாக விளக்கப்பெற்றுள்ளது. தலைவனின் நெஞ்சு அவனை விட்டுப் பிரிந்து அப்போதே தலைவியின் பக்கம் சென்றுவிட்டதாம். ஆனால் அவளைத் தழுவி இன்பம் தரும் கரங்கள் இன்னும் இங்கேயே இருக்கின்றன. நெஞ்சு மட்டும் சென்று என்ன பயன்? கைகளும் சென்று சேரவேண்டுமே என்று எண்ணுகிறான் தலைவன். அதற்கு இடமளிக்காத இந்தப் பெரிய தூரத்தை எப்படிக் கடப்பது என்று அவன் உள்ளம் கலங்குகிறது.
இதன்வழி பெண்பாற் புலவர்கள் படைத்த தலைவன் அல்லது படைக்க விரும்பும் தலைவன் தலைவி மீது ஆறாக்காதல் உடையவனாக விளங்குகிறான் அல்லது விளங்கவேண்டும் என்பதை உணரமுடிகிறது.
இவ்வேறுபாடே ஆண்கள் படைப்பிற்கும் பெண்கள் படைப்பிற்குமான வேறுபாடு. பெண்களைச் சற்றும் குறைத்துக்  கூறாத இயல்பினை உடையவர்கள் பெண்பாற் புலவர்கள்.
இவ்வகையில் பெண்ணிய நோக்கில் பெண்பாற் புலவர்களின் பாடல்களைக் காணும்போது பெண்கள் படைப்பில் உள்ள நுண்பொருள், விழைவு போன்றவற்றை அறிந்து கொள்ள முடிகின்றது.
தொகுப்புரை
குறுந்தொகை அகமன விளக்கம்  கொண்ட பாடல்களைக் கொண்ட தொகுப்பாகும். இதனுள் இடம்பெற்றுள்ள பெண்பாற் புலவர்தம் பாடல்கள், குறிக்கத்தக்கச் சிறப்புடையன. அவற்றில் பல நுண்பொருள்கள் காணப்படுகின்றன.
செவ்விய நிலைக் காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமான உணர்தலை எளிமைப்படுத்துகிறது. இருவருக்கும் உரிமை வழங்குவதாக உள்ளது. ஆணடிமையைப் போக்கும் வல்லமை மிக்கது. இவ்வகையில் செவ்விய நிலை காதல் இலக்கியமான குறுந்தொகைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பெண்ணுக்கும் ஆணுக்குமான தொடர்பிழையை உண்மை உடையதாக, நெருக்கம் மிக்கதாக ஆக்க முனைகின்றது.
தலைவி தலைவனுடன் இணைந்து தன் இல்லற வாழ்வினை உரிமையுடன் நடத்தினால் அவ்வாழ்க்கை இன்ப வாழ்க்கையாகின்றது. காதலிக்கும்போது அன்புநிலையில் இருக்கும் தலைவன் அதன்பின் அதனை மறந்து தலைவியையும் மறந்து நிற்கும் நிலையில் அவ்வாழ்க்கை துன்பவாழ்க்கையாகின்றது. காதல் வாழ்வில் இணைந்த தலைவனும் தலைவியும் பெரும்பாலும் துன்பவாழ்க்கையையே பெறுவதாக பெண்பாற் புலவர்கள் தம் பாடல்களில் பதிவு செய்துள்ளனர். சிற்சில பாடல்களில் இல்லற வாழ்க்கை உரிமை உடையதாக இனிமையாக இருந்துள்ளது. அதிலும் துயரம் எந்நேரமும் நேரலாம் என்ற தடுமாற்றத்தன்மையே காணப்படுகிறது.
காதல் என்பது தலைவிக்கு மன வருத்தம்  தருவது மட்டுமல்ல. காதலால் மனம் வருந்தும்போது உடலும் அவ்வருத்தத்தை ஏற்கிறது. தலைவியின் வருத்தம் அவளின் மார்பத்தில் குடிகொண்டிருந்துள்ளது.
தலைவியின் காமம் தலைவனால் தீர்க்கப்படா நிலையில் அதனைப் பொய் என்றே கருதுகிறாள் தலைவி. காமம் வருவதும் போவதுமாக இருக்கிறது. ஒரே நிலைப்பாடு உடையதாக அது இல்லை. தலைவன் தேர் வந்தால் போகிறது. அத்தேர்  போனால் உடனே வந்துவிடுகிறது. காலை,மாலை என எல்லா நேரங்களிலும் காமம் தொக்கி நிற்கிறது. இதன் காரணாக அது பொய் என்கிறாள் தலைவி.
பெண்பாற் புலவர்கள் பாடியுள்ள குறுந்தொகைப் பாடல்களில் தன்மை விளிகள், தன்மையிடச் சொற்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பெற்றுள்ளன. தங்களின் வாழ்வனுபவத்தை, உண்மையைச் சொல்வனவாக அவை உள்ளன. இவ்வேறுபாடு ஆண் படைப்பாளர்களிடத்தில் காணப்பாடத ஒன்றாகும்.
தலைவியின் இயல்பான வாழ்க்கை நடப்புகளைக் கூர்ந்து கவனித்துப் பதிவு செய்யும் எழுத்துக்களாக பெண்பாற்புலவர்களின் எழுத்துகள் அமைகின்றன. கூந்தலை வருடுதல், பாவை வைத்து விளையாடுதல், சூல் கொண்ட மகளிர் புளி உண்பது போன்ற பல பெண்ணியல்புகள் பெண்பாற்புலவர்தம் படைப்புகளில் பதிவு செய்யப்பெற்றுள்ளன.
பெண்பாற் புலவர்கள் பயன்படுத்தியுள்ள உவமைகள் குறிக்கத்தக்கவை. அவை இல்லம் சார்ந்தவை. பெண்கள் பயன்படுத்தும் புழங்கு பொருள் சார்ந்தவை. இதன் காரணமாக முழுக்கப் புனைவற்ற இயல்புச் சி்த்திரங்கள் பெண்பாற் புலவர்தம் பாடல்கள் என்பதை உறுதியாக உரைக்கமுடிகின்றது.
பெண்பாற் புலவர்கள் பாடிய தலைவன் கூற்றுப் பாடல்கள் தலைவியை எக்காலத்தும் கீழ்ப்படுத்தான மேன்மை உடையன. அவளின் வளர்ச்சியை மதிப்பிடுவன.
இவ்வகையில் தனித்த சிறப்புடையன குறுந்தொகையில் அமைந்துள்ள பெண்பாற்புலவர்தம் பாடல்கள். அவை தனித்த கவனத்துடன் வாசிக்கப்படவேண்டியன. அவற்றில் புதைந்திருக்கும் பெண்ணியக் கூறுகள் பல. இங்கு ஒரு சிலவே காட்டப்பெற்றுள்ளன. தொடர்ந்து இப்போக்கில் ஆராய முயல்வோர் இன்னும் பல முடிவுகளைப் பெற இயலும்.

நன்றி - சிறகு, http://siragu.com/?p=26500

கருத்துகள் இல்லை: