வெள்ளி, ஜூலை 10, 2015

திருக்குறள் இன்றைய சூழலுக்கும் பொருந்துகிறது






வணிகத்துறை சார்ந்து இன்றைய நிலையில் திருக்குறளை முன்னிறுத்தி அறம் பேசும் அன்பர் சோம. வீரப்பன் அவர்கள்
தி இந்து நாளிதழில்  பல்வகைப் பொருள்கள் குறித்துப் பலரும் எழுதுவதற்கான ராஜபாட்டை திறந்து வைக்கப்பெற்றிருப்பது நல்ல விஷயம். திருக்குறளை முன்னிறுத்தி சோம. வீரப்பன் அவர்கள் எழுதிவரும் சில கட்டுரைகளைப் படிக்க நேர்ந்தது. அதன் விளைவே இந்தக் கட்டுரை.
     திருக்குறளை முன்னிறுத்தி அதன் உட்பொருளைப் புரிந்து கொள்ள பலரும் பல வழிகளைச் செய்துவருகின்றனர். நடப்பியல் வாழ்வை, வாழ்க்கை நிகழ்ச்சிகளை முன்வைத்து அந்நிகழ்ச்சிகளுக்குப் பொருத்தமான குறளைச் சொல்லி முடிக்கும் செறிவான கட்டுரையை வழங்கி வருகிறார் சோம. வீரப்பன்.
     தலைப்பு, சூழல், திருக்குறள் தேர்வு இம்மூன்றையும் ஒருங்கிணைக்கும் எழுத்தாக சோம. வீரப்பன் அவர்களின் எழுத்துகள் விளங்குகின்றன. அவரின் யாமிருக்க பயமேன், பதவியின் பயன் உதவுவதே, உத்தம வில்லன் ஆகிய கட்டுரைகளைப் படித்தேன்.
     இக்கட்டுரைகளைப் படிக்கின்றபோது, தினமணியின் தலையங்கம் நினைவிற்கு வந்தது. தினமணியில் நாள்தோறும் தலையங்கத்தில் ஒரு தலைப்பு விவாதிக்கப்பெறும். அதற்குக் கீழ் எப்போதும் ஒரு குறள் தரப்பெறும். பெரும்பாலும் அக்குறள் தலையங்கத்திற்குப் பொருந்துவது போலத் தோன்றும். கோடுகள் போட்டுப்பிரித்துக் காட்டினாலும் இப்பொருத்தம் கலையாது.
     சோம. வீரப்பன் அவர்கள் கோடுகள் போட்டுப் பிரித்துக் கொள்ளாமல் நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகளை ஒருங்கிணைக்க முயல்கிறார். இதற்கு முக்கியமான தேவை நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்வது. அடுத்துத் திருக்குறளில் தேர்ந்த பயிற்சி. இதனோடு சொல்ல வந்ததைச் சரியாக நேராகச் சொல்லவேண்டும் என்ற எழுத்து வன்மை.
     இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் உலக விஷயங்களை சோம. வீரப்பன் நாளேடுகள் வழியாக அறிகிறார். அவை தந்த செய்திகளை அவற்றிற்கே திருக்குறள் கட்டுரைகளாக மாற்றுவடிவில் வழங்குகிறார்.
     ஒரு செய்தி அவரைப் பொறுத்தவரை செய்திக்கட்டுரையாக மறுவடிவம் கொள்ளுகின்றது. இருப்பினும் அவரின் திருக்குறள் ஆர்வம் வியக்கத்தக்கதாக உள்ளது.  தமிழாசிரியர்கள் கூட கற்க மறந்த திருக்குறள்களை அவர் வெளிப்படுத்துகிறார்.
     நான்கு பத்திகள் அதன்பின் திருக்குறள் என்ற நிலையில் திருக்குறளைப் பொருத்திப் பார்த்துக் கொள்வது படிப்பவரின் கடமையாக அமைந்துவிடுகிறது.
     திருக்குறளுக்கு முன்புள்ள பத்தி ஏறக்குறைய திருக்குறள் கருத்தையும்,  நடப்பியல் கருத்தையும் ஒன்றிணைக்க முயல்கிறது. இம்முயற்சி வாசகனை எட்டும் அளவே இக்கட்டுரையின் வெற்றி அளவாகும்.
     இக்கட்டுரைகளின் முக்கியமான அம்சம் அவர் எடுத்துக்கொள்ளும் நடப்பியல் சிக்கல்கள். உயர் அதிகாரிகளில் டார்ச்சரால் மன உளைச்சலுக்கு ஆளாகும் பணியாளர்கள் பற்றிய கட்டுரையாக யாமிருக்க பயமேன் என்ற கட்டுரை அமைகின்றது. ஏறக்குறைய அலுவலங்களில் பணியாற்றும் அனைத்து அன்பர்களுக்கும் ஆறுதலாக அமையும் கட்டுரை இது.  முறை செய்து காப்பாற்றும் மன்னன் என்ற குறள் இக்கட்டுரைக்கு மணிமுடியாக வைக்கப்பெற்றுள்ளது. இருப்பினும் முறை செய்யாது நடுத்தெருவில் மக்களை விட்டுவிடும் உலகமாக இக்கால உலகம் அமைந்திருப்பதை நோக்கும்போது வள்ளுவ உள்ளம் சிதைக்கப்பட்டிருப்பதை உணரமுடிகின்றது.  நேர் மறைாயக (பாஸிட்டிவாக) அமையும் குறள், எதிர்மறையாக நடக்கும் (நெகட்டிவாக) நடக்கும் உலகம் இவ்விரு முரண்பாடுகளை உணர்த்துகிறது இக்கட்டுரை.

         
     பதவியில் பல விடுதலைகள் தேவை என்பதை உணரத்துகிறது பதவியின் பயன் உதவுவதே என்ற கட்டுரை. இதற்குக் காட்டப்பெற்றுள்ள குறள் இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு  …. என்பதாகும். இன்சொல் ஈத்தளிக்க இந்தியாவில் எந்த முதலாளியும் தயாராக இல்லை என்ற முரண்பாட்டையே இக்கட்டுரை விவரிக்கின்றது.
     உத்தம வில்லன் என்ற கட்டுரை நுட்பமான கட்டுரை. எதிரிகளை வளர விட, வாழவிட விட்டுவிடக் கூடாது என்பதை இக்கட்டுரை சொல்கிறது. எதிரிகளுக்கு வழியை நாமே காட்டிவிடக் கூடாது என்கிறது இக்கட்டுரை. வகை அறச் சூழாது எழுவது பகைவருக்கு வழி தந்துவிடும் என்று குறள் இக்கட்டுரையுடன் பொருத்தப்பெற்றுள்ளது. பகைவருக்கு வழி தந்துவிடக் கூடாது என்ற கருத்துக்கு முரணான வகை அறச் சூழாது எழுதல் என்பது அமைகிறது. இதுவும் திருக்குறளுக்கும் இற்றைக் காலத்தில் நடக்கும் நடப்பிற்கும் இடையேயான முரண்பாட்டின் வெளிப்பாடாகவே கொள்ளத்தக்கது.
     திருக்குறள் தமிழரின் சொத்து. அச்சொத்தைப் பெற்ற தமிழன் (உலக மனிதன்) அதன் மதிப்பறியாது தாழும் நிலையை,  எண்ணி அதனை மேம்படுத்தும் நோக்கில் அமைகின்றன  சோம. வீரப்பன் அ்வர்களின் கட்டுரை. 

----------------------------------------------------------------------------
சோம. வீரப்பன் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரைப் பகுதி. 


குறள் இனிது: உத்தம வில்லன்!


நீங்கள் உபயோகிப்பது ஸ்மார்ட்போன் தானே? இல்லையென்றால் விரைவில் அதை வாங்க வேண்டுமென்ற திட்டமிருக்கும். இருக்காதா பின்னே? 2014ம் ஆண்டு உலகில் விற்பனையான ஸ்மார்ட் போன்கள் மொத்தம் 130 கோடியாம்! அதுசரி. உங்கள் கைபேசியில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன? ஆண்ட்ராய்டா, ஐஓஎஸ்ஸா, வின்டோஸா? ஒரு கைபேசியின் மூளையாயிற்றே அது.
விற்பனையில் இவர்கள் மூவரும் மேற்கொண்ட யுக்திகள் வித்தியாசமானவை. சுமார் 12 வருடக் கதை இது. 2003ல் ஆண்டிராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கண்டுபிடித்த கூகுள் நிறுவனம் அதை வெவ்வேறு ஸ்மார்ட்போன்களிலும் உபயோகப்படுத்த அனுமதித்தது.
சாம்சங், சோனி, மைக்ரோமேக்ஸ், மோட்டோரோலா, ஹெச்டிசி என்று அந்த வரிசை நீளும்! ஆனால், “என்வழி தனிவழி”, என்று தங்களுக்கு மட்டும் தனியாக ஒரு ஐஓஎஸ் சிஸ்டத்துக்கு வழிவகுத்துக் கொண்டது உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள்! “எங்களது, எங்களுக்கு மட்டும்” என்பது அவர்கள் கொள்கையாக இன்றும் இருந்து வருகிறது. மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் பலரும் அறிந்தது. நோக்கியாவில் இவர்களது ஆப்பரேட்டிங் சிஸ்டம்தான். அதனால் அதன் விற்பனை நோக்கியா கைபேசிகளின் விற்பனையைச் சார்ந்தே இருக்குமில்லையா?
இன்றைய நிலை என்ன? ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆண்டுக்கு சுமார் 30% அதிகரித்தாலும் வெவ்வேறு ஸ்மார்ட்போன்களின் விற்பனை பெருமளவில் வித்தியாசப்படுகின்றது. 2015ன் முதல் காலாண்டில் ஆண்ட்ராய்ட் போன்களின் சந்தைப் பங்களிப்பு மட்டும் 78%. அதாவது உலகில் விற்கும் 4 ஸ்மார்ட்போன்களில் 3ல் அவர்கள் சிஸ்டம்தான்! ஐஓஎஸ் 18.3% விண்டோஸ் 2.7% மற்றவை 1 சதவீதம். ஒரு செயலைத் தொடங்கும் முன்பு அதனால் வரும் பின்விளைவுகளை முற்றிலுமாக ஆராயாமல் தொடங்குவது பகைவரை நன்கு வளரும் நிலத்தில் வேரூன்றச் செய்வது போன்றது என்கிறது குறள்.
தற்பொழுது வணிக உலகில் நடைபெறும் பெரும்போர் விற்பனைக்காகத்தான். விற்பனையைக் கூட்டவும், சந்தையில் முதலிடம் பிடிக்கவும், மொத்த விற்பனையில் சந்தையின் சதவீத பங்களிப்பை அதிகரிக்கவும் நடைபெறும் போட்டி இது. எப்படி விற்போம் யாருக்கு விற்போம் என்பது இன்றைய தொழில்நுட்ப உலகில், அவசர உலகில் மிக முக்கியம்! மோட்டோஜீ போன்களை பிளிட்கார்ட் மூலமே விற்போம். அதனால் மேற்செலவுகள் குறையும் என்று சமீபத்தில் வந்த அறிவிப்பைப் பார்த்து இருப்பீர்கள்.
பகைவர்கள் வெற்றிபெற பல காரணங்கள் உண்டு. அந்த வெற்றி எதிரியின் படை பலத்தினால் மட்டுமின்றி பகைதொடுக்கும் காலத் தினாலும், பகைபுரியும் இடத்தினாலும், கூட இருக்கலாம்! ஆனால் வள்ளுவர் கூறும் காரணம் சிந்திக்கத்தக்கது. சிலசமயங்களில் நாம் முழுவதுமாக ஆராயாமல் எதிரியே எதிர்பாராத உதவியைச் செய்து அவர்கள் பெரும்வெற்றி பெற நாமே வகை செய்து விடுவோம் என்கிறார். நாம் இன்று இதைக் செய்தால் நாளை என்ெனன்ன நடக்கலாம் என்பதைத் தீர ஆலோசித்தே எதையும் தொடங்க வேண்டும் என்கிறது குறள்.
வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு

கருத்துகள் இல்லை: