தமிழகத்துச் சமுதாயம் வேளாண் சமுதாயம் ஆகும். பழங்காலத்தில் இருந்தே வேளாண்மை தமிழரின் தொழில் அடையாளமாக இருந்து வந்துள்ளது. சங்க காலத்தில் மருத நிலத்தில் வேளாண்மை மிக உயர்ந்து நின்றது.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம் தொழுதுண்டு பின்செல்ப வர் என்கிறார் திருவள்ளுவர். உழுதலாகியத் தொழிலைச் செய்யும் வேளாண் மக்களே உரிமையோடு வாழ்கின்றனர் என்று எண்ணத்தக்கவர்கள். மற்ற பணிகளைச் செய்பவர்கள் எல்லாம் யாரையாவது தொழுது, தங்களின் தொழிலைச் செய்து வருபவர்கள் ஆகின்றார்கள். இதே குறளுக்கு மற்றொரு நிலையிலும் விளக்கம் சொல்லலாம். உழவுத் தொழில் செய்பவர்களே சிறந்தவர்கள். மற்றவர்கள் உழவுத் தொழிலைச் செய்யக் கூடியவர்களாகிய வேளாண் மக்களைத் தொழுது வாழவேண்டிய நிலையில் உள்ளனர் என்றும் பொருள் சொல்லலாம். ஔவையார் உழவுத்தொழிலின் பெருமையைப் பாடுகின்றார். அவர் காலத்தில் உழவுத் தொழில் இன்றியமையாத தொழிலாக இருந்தது. அது என்றைக்கும் இன்றியமையாத தொழிலாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். உழவுத் தொழில் என்பது ஒரு தொழில் மட்டுமன்று. அது ஒரு பண்பாட்டின் தொடர்ச்சி. நாகரீகத்தின் வளர்ச்சி. மக்களின் பசி போக்கும் உன்னதத் தொழில். இயற்கையை வளப்படுத்தும் மகத்தான பணி வேளாண்மை ஆகும். ஊர் தோறும் உள்ள நிலங்கள் எல்லாம் நல்லபடியாக விளைந்தால், செல்வமிக்க நாடாக இந்தியா தோற்றம் அளிக்கும். அதற்கான பெருமுயற்சியை விவசாயப் பெருமக்கள் எடுத்துவருகிறார்கள். ஊர்தோறும் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் விவசாய மேம்பாட்டிற்காக உருவானவை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்நிலையில்தான் ஔவையார் உழவுத்தொழிலின் மேன்மையைப் பாடுகின்றார். ஆற்றங்கரையின் மரமும் அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம் உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர் பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு என்று ஔவையாரின் நல்வழிப் பாடல் ஒன்று அமைகின்றது. ஆற்றங்கரை மிக வளமான பகுதி. அதன் அருகில் இருக்கும் மரங்கள் நீர் வளத்தின் காரணமாக மிகவும் வளர்ந்து என்றைக்கும் வளப்பமாக இருக்கக் கூடியவை. அந்த மரம் கூட தன் உயர்வான நிலையில் இருந்துத் தாழ்ந்து வீழலாம். ஆற்றங்கரையில் பெரிய வெள்ளம் வரும்போது, கரைகளில் உள்ள மண் அரிப்பால் ஆற்றங்கரையில் நூற்றாண்டுகளாக நின்று கொண்டிருந்த மரம் ஒரே நாளில் சாய்ந்து போகலாம். அரசாங்கத்தின் மிக்க உயர் பணியில் இருப்பவர்கள் என்றைக்கும் அந்தப் பணியில் இருந்து கொண்டே இருக்க இயலாது. மாற்றுப் பணிகள் மாறி மாறி வரலாம். அல்லது பணி செய்வதற்கான கால வரம்பு பணி செய்தவர்களுக்கு ஓய்வினைத் தந்துவிடலாம் அல்லது காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணிவரைதான் அலுவலகத்தில் அலுவலராக இருக்க முடியும். அது இல்லாமல் வீட்டிற்கு வந்த பிறகும் அலுவலராக இருக்க முடியுமா? ஆகவே அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் ஒருநாள் கழிந்து போகக் கூடியது. ஆனால் உழுது உண்டு வாழ்பவர்களுக்கு என்றைக்கும் ஒப்புமை கிடையாது. அவர்கள் ஒப்பு உயர்வற்றவர்கள். நாளும் அவர்கள் விவசாயிகளே. அந்தப் பணிக்கு ஓய்வு என்பதே கிடையாது. அவர்கள் ஓய்ந்து போனால் மக்களின் வயிறு காய்ந்து போய்விடும். அவர்களுக்கு நேரம் காலம் கிடையாது. என்றைக்கும் ஏரும் கலப்பையும் அவர்களை எதிர் கொண்டு அழைக்கின்றது. ஆற்றங்கரையில் உயர்வான வாழ்வு பெற்றிருந்த அரச மரம் அடியோடு சாய வாய்ப்பிருந்தாலும், அரசாங்கம் அறிய பெரிய பணியில் இருந்தாலும் இவை என்றைக்காவது ஒருநாள் இதிலிருந்து கீழிறங்க வேண்டிய நிலை ஏற்படலாம், ஏற்படும். ஆனால் வேளாண் தொழிலும், வேளாண் தொழில் செய்பவர்களும் என்றைக்கும் உயர்வானவர்கள். அவர்கள் உழைப்பில் அவர்கள் உண்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் விவசாயிகள் உழைப்பில் அதாவது மற்றவர்கள் உழைப்பில் தான் வாழ்கிறார்கள். பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு என்ற மற்ற பணிகளின் தன்மையை விவசாயத் தொழிலுக்குக் குறைத்தே ஔவையார் பாடுகின்றார். உழுது உண்டு, பழுது உண்டு என்ற இத்தொடர்கள் கவிதை அழகுடையன. அதனைத் தாண்டி இச்சொற்களில் உழவுத் தொழிலுக்கான ஏற்றத்தைக் காணமுடிகிறது. உலகில் மாந்தர்கள் பலவகையான தொழில்களைச் செய்து வருகின்றனர். எல்லாத் தொழில்களும் சரிவர இயங்கினால் மட்டுமே நாடு தன்னிறைவடைய இயலும் என்றாலும் எல்லாத் தொழில்களுக்கும் விடுமுறை உண்டு. வரையறுக்கப்பெற்ற விடுமுறை உண்டு. ஆனால் விடுமுறையே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து உழைக்கின்ற பெருமக்கள் உழவர் பெருமக்கள். அவர்களின் வாழ்வும், நலமும் என்றைக்கும் காக்கப்பட வேண்டியனவாகும். மற்ற தொழில்களில் பழுது இருக்கும். குற்றம் இருக்கும். குறைகள் இருக்கும். அழுத்தம் இருக்கும். ஆனால் பழுதில்லா ஒரே தொழில் விவசாயம் தான் என்கிறார் ஔவையார். உலகத்திற்கு அச்சாணி போன்றவர்கள் உழவர்கள். அவர்களின் உளம் மகிழ நிலமென்னும் தாய் தானிய வளத்தை அள்ளி வழங்கிக் கொண்டே இருக்கட்டும். .
நன்றி முத்துக்கமலம் இணைய இதழ்.
|
ஞாயிறு, ஜனவரி 03, 2016
5. உழவுத் தொழில் உயர்வானதா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக