திங்கள், பிப்ரவரி 12, 2018

(விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் பற்றிய விமர்சனம்)


ஆனந்த யாழை மீட்டிய விபுலாநந்த அடிகளார்.


முனைவர் மு.பழனியப்பன்,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறைத் தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரி
திருவாடானை, 623407,
9442913985

       யாழ்நூல் யாத்த பெரும்புலவர் விபுலாநந்த அடிகளார் பற்றிய ஆவணப்படம்  இலக்கிய வரலாற்று ஆவணமாகத் தற்போது வெளிவந்துள்ளது. இப்படைப்பினைப் பெருமையுடன் வயல்வெளித்திரைக்களம்  வெளியிட்டுள்ளது. இவ்வாவணப் படத்தின் எழுத்து, எண்ணம், இயக்கம் அத்தனைக்கும் உரியவர் இளம் செம்மொழி அறிஞர் மு. இளங்கோவன் ஆவார்.  இவரது இனிய குரலாலும் ஆவணப்படம் அழுத்தம் பெறுகிறது. 

    இமயம் முதல் குமரி வரை என்ற இந்திய எல்லையை விபுலாநந்த அடிகளாருக்காகச் சற்று மாற்றி அமைக்க வேண்டும். இமயம் முதல் இலங்கைக் காரைதீவு வரை என்பதே அந்த எல்லையின் விரிவாக்கம். அடிகளாரின் வாழ்க்கைப் பயணம் இலக்கியத் தேடல் பயணமாக, கல்வி பரப்பும் பயணமாக, இராமகிருஷ்ண போதனைகளை விளக்கும் பயணமாக இமயம் முதல் இலங்கை வரை நிகழ்ந்துள்ளது. 

இமயம் முதல் இலங்கை வரை என்ற இணைப்பு நினைக்கவே இனிப்பாக இருக்கிறது. அரசுகள் மாறலாம். அதிகாரங்கள் வேறுபடலாம். அன்பு ஒன்றே மாறாதது.

அன்பு, தமிழ், எண்ணம் இவற்றால் மக்களினம் சாதி, மதம், இனம் கடந்து ஒன்றாகும் நாள் எந்நாளோ? என்ற நினைவில் ஏங்கித் தவிக்கிறபோது நாம் ஒன்றாகி இருக்கிறோம். தமிழ் மொழியால் ஒன்றாகி இருக்கிறோம். விபுலாநந்த அடிகளாரின் நினைவு நாள் இலங்கையில் தமிழ்மொழித் தினமாக இலங்கை அரசால் கொண்டாடப்படுகிறது. இதனை இலங்கையின் மதிப்பு மிகு அமைச்சரே இந்த ஆவணப் படத்தில் பதிவுசெய்துள்ளார். தமிழால் தமிழ்நாட்டையும்,  இலங்கையையும் ஒன்றிணைத்த இசைப் பேரறிஞர் விபுலாநந்த அடிகளார் ஆவார்.

மண்ணைக் குழைத்து மாசற்ற பொன்னை வடிவமைக்கிறது ஆவணப்படத்தின் முதற்காட்சி. வடிவமற்றுக் கிடந்த மண் பிசைவை மெல்ல வனைந்து, அழகாக்கி அற்புத உருவமாக விபுலாநந்தர் படைக்கப்பெறுகிறார். நேர்த்தியும், பளபளப்பும் எதற்காக என்றால் அவரின் (அந்தச் சிலையின்)  நிறைவான இதழ் நெளியாப் புன்னகைக்காகத்தான். விபுலாநந்தரின் மண்உருவம் இதழ்களில் சிரிப்பளித்து, தமிழைச் சிறக்கச் செய்துவருகிறது. 

நூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ்ப்பெரியவரின் வாழ்வை இன்றைக்கு அடையாளப்படுத்துவதில், ஆவணப்படுத்துவதில் எவ்வளவு சிரமம் இருந்திருக்கும் என்பதை நினைக்கும்பொழுது இதயம் விம்முகின்றது.. நினைத்தமாத்திரத்தில் சென்று வர இலங்கை நெருக்கடியில்லாமலா இருக்கிறது?. அல்லது இமயம் கூப்பிடு தூரத்தில்தான்  இருக்கிறதா?.

நற்சாந்துபட்டி கிராமம், மேலைச்சிவபுரி கிராமம், பேரையூர் கிராமம், கரந்தைத் தமிழ்ச்சங்கம், மதுரைத் தமிழ்ச்சங்கம்  என்று விபுலாந்தரின் பாதம் தேடி அலைகிறது ஆவணப்படத்தின் படப்பிடிப்புக்கருவி….

            இலங்கையில் காரைதீவு, மட்டக்களப்பு, ஆனைப்பந்தி, ஆரையம்பதி, வாழைச்சேனை, கல்முனை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி என்று எல்லைக்கடவுச் சீட்டு கொண்டு எல்லை கடக்கிறது இந்த ஆவணப்படம். இவ்வளவு சிரமமும் எதற்காக……. எல்லை தாண்டிய தமிழ்வெளியின் வெற்றியைக் காட்டத்தான்.

மயில்வாகனன், பிரபோத சைதன்யர், விபுலாநந்தர்………. இந்த முப்பெயருக்குள்தான் ஒரு பேரறிஞனின் வாழ்வு ஒளிவீசுகிறது. இலங்கையில் பிறந்த மயில்வாகனன், சென்னை இராமகிருஷ்ணமடத்தில் பிரபோத சைதன்யராக துறவுப்பாடம் கற்றுப் பின்னாளில் விபுலாநந்தர் என்ற துறவியாகிறார். இந்தத் துறவி துறக்காத ஒன்று தமிழ். மறக்காத ஒன்று தமிழ். 

யாழ்ப்பாண பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியன இவரின் வரவால் பெருமை பெற்றன. சென்னைப் பல்கலைக்கழகம் இவரின் பேச்சால் பொலிவுற்றது. சிவானந்த வித்யாலயம் இவர் பெயர் சொல்லி இன்னமும் இலங்கையில் கல்விப் பேரொளி பாய்ச்சுகிறது. இதனுடன் இணைந்த இருபத்தேழு கல்விநிலையங்களில் விபுலாநந்தரின் உயிர் வாசம் செய்கிறது. 

நற்சாந்துபட்டி ராம,பெரி,பெரி  சிதம்பரம் செட்டியாரின் உதவியால் யாழ்நூல் அரங்கேற்றம் திருக்கொள்ளம்பூதூரில் நடக்கிறது. இதனைக் காட்டும் ஆவணப் படக் காட்சியின் சிறப்பு எண்ணி எண்ணி வியக்கத்தக்கது. திருக்கொள்ளம்பூதூரில் விபுலாநந்தர் யாழ்நூல் அரங்கேற்றம் செய்யும் புகைப்படம் காட்டப்படுகிறது.  அதன்பின் அந்நூல் இசையை வாசிக்கும் இசைக்கலைஞர்கள் என்று நகரும் ஒளிப்படக்கருவி அவ்விழாவில் கலந்துகொண்டவர்களைக் குறியீடு ஒன்றின் வழியாகக் காட்டுகிறது.  

திருக்கொளம்புதூர் திருக்கோயிலின் இராசகோபுரம், கருவறைக் கோபுரம் இவற்றில் ஒவ்வொரு புறாவாக வந்து அமர்கின்றன. அதே நேரம் இக்காட்சியின் மறுபாதியில் விழாவிற்கு வந்த அறிஞர்கள் ஒவ்வொருவரின் படமும் அரங்கேறுகிறது. உவப்பத் தலை கூடுதல் புலவர் தொழில். புறாக்களின் தொழிலும் அதுதானே. 

கோபுரங்களில் புறாக்கள் நின்றது இயல்பா?, அல்லது திட்டமிட்டச் செயல்பாடா?, அல்லது குறியீடா?. ஆவணப்படத்தைப் பார்த்தால்தான் இந்த வினாவிற்கு உங்களால் விடைசொல்ல இயலும்.

புறாக்கள் ஒருபுறம் ஒன்று கூட, புலவர்கள் ஒருபுறம் யாழ்நூல் நலம் பெற அதனை ஏற்று உலகிற்குச் சொல்ல வருகின்றனர். புறாக்களுடன் புலவர்களை ஒருங்கிணைத்துக் காட்டிய காட்சி ஊடகத்தின் வெற்றி.  யார் யாருக்காகக் காத்திருந்து கடமையாற்றினர் என்பது புரியாத புதிர்.  புறாக்கள் வாழ்க. இலக்கியப் புறாக்கள் வாழ்க. அவை மணிப்புறாக்கள். மாமணிப்புறாக்கள். என்றும் தமிழ் வாழ உழைத்த புறாக்கள்.

றோசல்லா மாளிகை. அதுவே தமிழ் இசையின் இன்னிசை மாளிகை. அந்த மாளிகையில் யாழ் நூலுக்காகத் தவமிருந்தார் விபுலாநந்தர். அந்தத் தவச்சாலையைக் காணாத கண்ணும் கண்ணா? கண்டு கொள்ளுங்கள்.

தமிழறியும் தற்காலப் பிள்ளைகள் அனைவரும் இந்த ஆவணப் படத்தைக் கண்டே ஆகவேண்டும். சென்ற நூற்றாண்டின் பழுதிலாத் திறமுடைய சான்றோரும், தற்கால நூற்றாண்டின் தரமிகு தமிழறிஞர்களும் விபுலாநந்தர் என்ற மையப் புள்ளியில் ஒருங்கிணைந்து தமிழிசையின் புகழைத் தரணி புகழத்தருகின்றனர்.  இந்தக் காலப்பெட்டகம் சான்றோர்தம் காட்சிப் பெட்டகமாக விளங்குகிறது.  இவர்களை நேரடியாகச் சந்திக்காத பலர் இந்த ஆவணப்படத்தில் இவர்களைச் சந்திக்கலாம். அவர்களின் மொழி கேட்டு இன்புறலாம். 

இந்த ஆவணப்படத்தில் கலை நேர்த்தியும் கொட்டிக் கிடக்கிறது. அழகான பாடல் வரிகளுக்கு அசைந்தாடும் பரத நாட்டியப் பெண்கள்- நாயனாருக்குப் பிடித்த மலர் எதுவெனத் தேடுகிறார்கள். வெள்ளை நிற மல்லிகையா? இல்லை, நெய்தலா? இல்லை. உத்தமனார் வேண்டுவது உள்ளக்கமலம். இந்தப்பாடலின் பொருள்தான் விபுலாந்தருக்கு மிகவும் பிடித்த பொருள். அப்பொருளை மெய்பொருளாக்கி இவ்வாவணப்படம் சிறப்பூட்டுகிறது. 

யாழ்நூல் -  இதுவே விபுலாநந்தர் தனித்தன்மை மிக்க தலைமைப் பணி. தமிழரின் இசைக்கலைக்குச் சான்று சொல்லும் நற்பணி. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் ஆகிய நூல்களில் காணப்படும் இசைக்குறிப்புகள் சிலவற்றை வைத்துக்கொண்டு, தமிழரின் இசைக்கலையைத் தேடித்திரிந்த அந்த பாட்டுப்புலவனின் சேகரிப்பு கணம் செந்தமிழுக்கு உரம். இந்தக் கணத்தை அளவு குறையாமல் காட்டுகிறது மு.இளங்கோவன் உருவாக்கியுள்ள ஆவணப்படம். யாழ்நூலின் பக்கங்களை நாம் தொட்டுப் பார்க்க அனுமதிக்கிறது இந்த ஆவணப்படம். 

அடிகளாருடன் பழகியவர்களை அணுகி, அவரன்பினைப் பதிவுசெய்கிறது ஆவணப்படம். இந்தப் படத்தின் பதிவுகள் வெறும் பதிவுகளல்ல. காலச்சக்கரத்தைப் புரட்டிச் சரியாக உண்மையைத் தமிழன்பை வெளிப்படுத்தும் பத்திரப் பதிவுகள். எத்தனைக் காலம் காத்திருந்து இந்த இனிய படம் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும் என்று ஒரு நிமிடம் சிந்தித்தால்! அதுவே இதற்கு நாம் செய்யும் நன்றி. இந்தப் படம் உருவாக்கப்பட்டபோது உயிருடன் இருந்த சிலர் இப்படம் வெளிவரும் நேரத்தில் இயற்கை எய்திவிட்டனர் என்றால் அவர்கள் உயிருடன் இருக்கும் நேரத்தில்  செய்யப்பட்ட  இந்தப் பதிவின் நிலைப்பாடு எத்தகைய  பெருமைக்கு உரியது என்பது தெரியவரும்.

யாழ்நூல், யாழ் என்ற இசைக்கருவியைத் தமிழர்க்கு மீட்டுத்தந்தது. யாழ் போலவே அடிகளாரின் வாழ்வும் நோயால் சுற்றி வளைக்கப்பட்டது. நோயின் வருத்தம், காலத்தின் எல்லை அவரைக் கற்சிறைக்குள் அமைதிப்படுத்தியது. எழுதிய விரல்கள் எழுதாமல் நிற்கின்றன. ஒரே ஒரு பன்னீர் பூ மட்டும் அவரின் கல்லறையில் அழுது கொண்டு கிடப்பதாய் ஆவணப்படம் சுட்டிச் செல்கிறது.

உத்தமனார் வேண்டிய உள்ளக் கமலம் அவரின் உள்ளம்.  மண்ணில் இருந்து தோன்றிய உருவம் மண்ணுக்குள் அமைதியாகிறது. ஆவணக் காட்சி என்னும் ஒரு பூவால் தன்னை அர்ப்பணிக்கிறது இந்த ஆவணப்படம்.

இசையும், படத்தொகுப்பும், காட்சி மாற்றங்களும் ஆவணப்படத்தைத் திரைப்படத் தரத்திற்கு முன்னேற்றியுள்ளது. விபுலாநந்த அடிகளார் மறைவுக்குப் பாவேந்தர் பாரதிதாசன் பாடிய "ஆங்கிலமும் ஆரியமும்" எனத்தொடங்கும் வெண்பா வரிகள் கலைமாமணி கா.இராசமாணிக்கனார் குரலில் இதயத்தைப் பிழிந்தெடுக்கும் சோக வரிகளாக இந்த ஆவணப்படத்தில் ஒலிக்கின்றன.

நூறாண்டு கடந்தும் தமிழ் அறிஞர்களை நினைவு கூறும் ஆவணப்படத்தின் நற்செயலுக்குத் தமிழர்கள் நிச்சயமாக நன்றி சொல்லவேண்டும். உலகத் தமிழர்கள் நன்றி சொல்லி வருகிறார்கள். நாமும் நம் நன்றியைச் சொல்வோம். 

நன்றி சொல்ல  செம்மொழி இளம் அறிஞர்  திருமிகு முனைவர் மு. இளங்கோவன் அவர்களின்  செல்பேசி. 9442029053


திங்கள், ஜனவரி 29, 2018

திருவாடானை கல்லூரியல் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் நடப்படும் பயிலரங்கம்

IMG-20180124-WA0102


அன்புடையீர்
வணக்கம்
IMG-20180124-WA0099
IMG-20180124-WA0021


திருவாடானை அரசு கலைக் கல்லூரியல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கை வழி செம்மொழி இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் பயிலரங்கம் ஒன்றை நடத்த உள்ளோம் அதன் அழைப்பினை இதனுடன் இணைத்துள்ளோம்.புதன், ஜனவரி 03, 2018

செம்மொழி இலக்கியப் பெண் புனைவுகள் முனைவர் மு.பழனியப்பன்

சங்க இலக்கியங்களில் பல புனைவுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பெண் குறித்தான புனைவுகள் கூர்ந்து கவனிக்கத்தக்கன. பெண்ணியம் விழித்து எழுந்து மூன்றாம் அலையாய்ப் பரவும் இக்கால எல்லையில் அப்புனைவுகளைப் பெண்ணிய நோக்கில் ஆராய்வது என்பது புதிய வெளிச்சத்தைப் பரப்பும் என்பதில் ஐயமில்லை.
சங்கஇலக்கியங்களில் காணப்படும் பெண் சார்ந்த புனைவுகளாகப் பின் வருவனவற்றைக் கொள்ள இயலும். கொல்லிப்பாவை, பெண்கொலை புரிந்த நன்னன், திருமாவுண்ணி, அன்னிமிஞிலி ஆகிய புனைவுகளில் பெண் பாத்திரங்கள் மையமாக அமைகின்றன. இக்கதைகள் வாய்மொழிப் புனைவுகளாகும். இவற்றை உருவாக்கியவர்கள் யார் என்று அறியாத நிலையில் இவை எவரால் சொல்லப்பட்ட புனைவுகள் என்பதை அறிய இயலாத நிலை உள்ளது. இவை உவமைகளாக, எடுத்துரைப்புகளாக இருப்பதை எண்ணிப் பார்க்குங்கால் தமிழ்ச் சமுதாயத்தில் இவை வழிவழியாகப் பயன்படுத்தப் பெற்று வந்துள்ளன என்பதை மட்டும் உணரமுடிகின்றது.
தற்காலத்தில் தொன்மம் சார்ந்த புனைவுகளிலும் பெண்ணிய ஆய்வு மேற்கொள்ளப்பெறுகின்றது. இதுகுறித்த பின்வரும் ஆய்வாளரின் கருத்து நோக்கத்தக்கது. ‘‘தற்போதைய காலக்கட்டத்தில் பெண்ணிய இயக்கம் சமுதாய அறிவியல், தொல்லியல், தொல்மானிடவியல், இறையியில் போன்ற பலதுறைகளைக் கவனித்து வருகிறது. அதே நேரத்தில் அவற்றில் இடம்பெற்றுள்ள தொன்மக் கூறுகளை பெண்மையத்துடன் ஆராயத் தலைப்படுகிறது. அவற்றில் காணப்படும் ஆ;ண் மையமிட்ட  அரசியலை, ஆண்  பாத்திரங்களை அவை குறித்த சொல்லாடல்களை வெளிப்படுத்த பெண்ணிய நோக்கு முன்வருகிறது. இத்தொன்மங்களில் உள்ள பெண் மௌனம்,  பெண்ணுக்கான இடமில்லா நிலை போன்றனவும் நுணுக்கமாக கவனிக்கப்படுகின்றன என்ற கருத்தின் வழியாக பெண்ணியம் தொன்மங்களிலும் தன் ஆய்வினைச் செலுத்திவருகிறது என்பது உணரப்படுகின்றது.
மேற்குறித்த புனைவுகளை பெண்ணிய நோக்கில் ஆராய்வது என்பது இக்கட்டுரையின் நோக்கமாகின்றது.
கொல்லிப்பாவை
siragu semmoli5
மிகு அழகு பொருந்திய ஒரு படிமமாகக் கொல்லிப்பாவை சங்க இலக்கியங்களால் சுட்டப்படுகிறது. இக்கொல்லிப்பாவை இன்னமும் கொல்லிமலையில் எட்டுக்கை அம்மனாக வழிபடப்பட்டு வருகிறது என்பது சங்க இலக்கிய மரபின் தொடர்ச்சி இன்னமும் தமிழகத்தில் எச்சமாக உள்ளது என்பதை விளக்குவதாக உள்ளது.
கொல்லிப்பாவை பற்றிப் பல்வேறு சங்கப்பாடல்கள் அறிவிக்கின்றன.
‘பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப்
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின்
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே. (நற்றிணை-192-8-12.)
என்பது கொல்லிப்பாவையின் இயல்பினைத் தெளிவாக உணர்த்தும் நற்றிணைப் பாடலாகும். கொல்லி மலை பலா மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியை உடையது. இதனுள் உள்ள குடவரையில் பூதத்ததால் செய்யப்பெற்ற புதிய இயல் பாவை வெளியில் வந்து இளவெயிலில் நின்றது போன்ற வடிவத்தைப் பெற்றவள் தலைவி என்று இங்குத் தலைவன் தலைவியைப் பாராட்டுகிறான்.
இப்பாடல் வழி கொல்லி மலை பலாமரங்கள் பலவற்றை உடையது என்பதும், அங்கு பல குடவரைகள் உள்ளன என்பதும், கொல்லிப்பாவை பூதத்தால் செய்யப்பெற்றது என்பதும், அது வெயிலில் நின்றது என்பதும் ஆன கருத்துகள் பெறப்படுகின்றன. எனவே கொல்லிப்பாவை வெயிலில் நின்றது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
“ஈங்கே வருவாள் இவள் யார் கொல்? ஆங்கே, ஓர்
வல்லவன் தைஇய பாவைகொல்? நல்லார்
உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள்கொல்? வெறுப்பினால்,
வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்கொல்?“ (கலித்தொகை-56-6-9)
என்று கலித்தொகைத் தலைவன் கொல்லிப்பாவையின் அழகைக் காட்டுகிறான். வல்லவன் தைஇய பாவை கொல் என்ற தொடர் மிகக் கவனமாகக் கவனிக்கத்தக்கது. சிற்பக்கலை வல்ல ஒருவனோ, அல்லது ஓவியக்கலை ஒருவனோ செய்த பாவை கொல்லிப்பாவை என்பது தெரியவருகிறது. மேலும் அப்பாவைக்கு அழகும் இயக்கமும் தரப்பெற்று உண்மைப் பெண்ணாகவே வடிவமைக்கப்பெற்றிருந்தது என்பது தெரியவருகிறது. இப்பாவை, அழியா நிலை பெற்றது என்பதை மற்றொரு நற்றிணைப்பாடல் காட்டுகின்றது.
‘‘ செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு,
அவ் வௌ;அருவிக் குட வரையகத்து,
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும்,
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின்
மாயா இயற்கைப் பாவையின்,
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே” (நற்றிணை-201-5-12)
என்ற பாடலின்வழி வெள்ளருவிப் பக்கத்தில் கொல்லிப்பாவை நிறுவப்பெற்றது என்பதையும், கொல்லிப்பாவையைத் தெய்வ அருள் காத்துவருகிறது என்பதையும் அறியமுடிகிறது. இது போன்று பல பாவைகள் தமிழகத்தின் பல இடங்களில் இருந்துள்ளன. ஆனால் அவற்றில் அழியாமல் இருக்கும் ஒரே பாவை கொல்லிப்பாவை மட்டும்தான் என்பது கொல்லி மலை மக்களின் கூற்றாகவும் உள்ளது. இச்செய்தி இப்பாடலில் அமைந்துள்ளது. காற்றடித்தாலும்,  பெருமழை பொழிந்தாலும், இடி இடித்தாலும், பல இன்னல்கள் விளைந்தாலும், நிலமே பிளந்தாலும் அழியாத திருஉருவாக மாயா இயற்கைப் பாவையாகக் கொல்லிப்பாவை கொல்லிமலையில் நிறுவப்பெற்றுள்ளது.
இக்குறிப்புகள் தவிர “பாவை அன்ன வனப்பினள் இவள்“ (நற்றிணை-301-6), “நல்லியற் பாவை அன்ன“ (குறுந்தொகை-89-6), “வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் பாவையின் மடவந் தனளே“ (குறுந்தொகை-100-5-6), “ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற், பாவை அன்ன குறுந்தொடி மகளிர்“ (புறநானூறு-251-1-2) போன்றனவும் கொல்லிப்பாவையின் இருப்பினைக் காட்டுவனவாக உள்ளன.
கொல்லிப்பாவை பற்றிய தொன்மக்கருத்துகளும் தமிழ் உலகில் அமைந்துகிடக்கின்றன. அபிதான சிந்தாமணி மூன்று கருத்துகளை முன்வைக்கின்றது. இவற்றின் சுருக்கம் பின்வருமாறு.
இது கொல்லி மலையின் மேற்பாற் செய்துவைக்கப் பட்ட பெண் வடிவமாகிய பிரதிமை. இக்கொல்லி மலை முனிவர்கள், தவத்தோர் உறைவதற்கு மிகச் சிறந்த இடமாகும். இங்கு அவர்களுக்கு ஊறு செய்யும் இராக்கதர்கள் வந்து இடைஞ்சல் செய்கின்ற நிலையில் அவர்களை திசை திருப்ப ஒரு பெண் உருவம் செய்து வைக்கப்பெற்றது. அவ்வுருவம் இராக்கதர் வருவதை அறிந்து அவர்கள் வரும்போது நகை செய்து மயக்கும். இம்மயக்கத்தில் மயங்கிக் காமம் தலைக்கேறி தன் உயிர் மாயத்துக்கொல்வர் என்பது முதற்கருத்தாகும். அடுத்து இப்பாவை தேவதைகளால் காக்கப்படுவது, காற்று, மழை, ஊழியாலும் அழியாதது என்று சங்க இலக்கியம் காட்டும் கொல்லிப்பாவையைக் காட்டுவதாக இரண்டாம் கருத்து அமைகிறது. மூன்றாம் கருத்து இது கொல்லி என்னும் பெயர் கொண்ட மலையின்கணுள்ள ஒருபெண்பாற் பிரதிமை. இது மோகினிப்படிமை. என்று புராணச் சார்புடன் அமைகிறது.
இக்கருத்துகளின் வழியாகக் கொல்லிப்பாவை புனையப்பெற்ற ஒரு பாவை என்பது தெரியவருகிறது. இப்பாவை இன்றளவும் கொல்லிமலையில் உள்ளது. தென்னங்கீற்றோலை வேயப்பெற்ற கோயிலாக இது விளங்குகிறது. உள்ளே அழகான உருவத்தில் கொல்லிப் பாவை வடிவமைக்கப்பெற்றுள்ளது. தற்போது இது கற்சிலையாக விளங்குகிறது. ஓவிய நலனும் புனையப்பெறுகிறது. இதற்கு ஆண்களே பூசைகள் இயற்றுகின்றனர்.
siragu semmoli1
கொல்லிப்பாவை என்பது பெண் உருவம். ஆனால் ஆண்களால் வடிவமைக்கப்பெற்ற உருவம். ஆண்களை வசியம் செய்ய அமைக்கப்பெற்ற உருவம். ஆண்களை அழிக்கும் உருவம் என்ற கருத்துருவாக்கம் கொல்லிப்பாவையின் மீது சுமத்தப்பெற்றுள்ளது.  தோன்றிய பின்புலமே இல்லாமல், எவ்வித நிகழ்வும் இல்லாமல் ஒரு பெண் உருவம் புனையப்பெற்றுள்ளது. இவ்வுருவத்தை இவ்வளவு உயரத்தில் வந்து அந்த காலத்தில் பெண்கள் வந்து தரிசித்திருக்க வாய்ப்பில்லை.
இவ்வளவில் பெண்ணுக்குத் தொடர்பில்லாத ஒருபடைப்பினைப் படைத்து, அதனால் ஆண்கள் அழிவதாகக் காட்டும் ஆண் ஆக்க முறைமை, பெண்ணின் அழகு ஆண்களை அழிக்கத்தக்கது என்ற அளவில் ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே அமைக்கப்பெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது. மேலும் கொல்லிப்பாவையின் அழகுக்கு இணையானவள் தலைவி என்றால் அக்கொல்லிப்பாவையின் குணங்களுக்கும் உரியவளாகப் பெண் மறைமுகமாகச் சுட்டப்படுகிறாள். பெண்ணுக்கே சம்பந்தம் இல்லாத ஒரு ஆண்படைப்பு பெண்ணைக் குறைத்து மதிப்பிடப் பயன்படுத்தப்பெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது.
தற்கால கொல்லிப்பாவையின் கோயிலும், கொல்லிப்பாவையும்
எவ்வாறு இருப்பினும் கொல்லிப்பாவை  எட்டுக்கை அம்மனாகத் தற்காலத்தில் வழிபடப்பெற்றுவருவதன் வழி சங்க இலக்கிய எச்சம் நீள்வதையும், அதன்வழி புனைவுகளில் ஆண்மையம் நீள்வதையும் உணரமுடிகின்றது.
குறிப்பாக இப்புனைவின் வாயிலாக பெண்ணின் நகைப்பு எவ்வகை இயந்திரத்தாலும் இயற்ற முடியாதது, அதனை இயற்றிக் காண்பிக்க முடியும் என்பதைக் காட்டுவதாகக் கொல்லிப்பாவை அமைகிறது. பெண்ணின் சிரிப்பு என்பது இயந்திரத்தனமானது என்பதையும், அதன் காரணமாக ஆண்களுக்கு அழிவே நேரும் என்பதையே இப்புனைவு முன்வைக்கின்றது.
பெண் கொலை புரிந்த நன்னன்
பெயர் அறியப் பெறாத ஒரு பெண்ணின் சோகக்கதையை உட்கொண்டது பெண் கொலை புரிந்த நன்னன் என்ற புனைவு.
‘‘மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே” (நற்றிணை 292)
என்ற நற்றிணைப்பாடல் பெண் கொலை புரிந்த நன்னனின் கதையைத் தெளிவாக்குகின்றது. ஆணைமலையில் அழகான நெற்றியை உடைய பண் ஒருத்தி  ஆழியாற்றிற்கு நீராடச் செல்கிறாள். அப்போது அந்த ஆறு ஒரு பசிய மாங்காயை அடித்துவருகிறது. இதனை அவள் உண்டுவிடுகிறாள்.
நன்னன் என்ற மன்னனுக்கு உரிய காவல்மரமாக அந்த பசிய மாங்காயின் மரம் விளங்கியது. இதன் காரணமாக காவல் மரத்திற்கு இழிவு செய்தாள் என்ற நிலையில் அவளுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இதனைத் தவிர்க்க மாங்காய் உண்ட பெண்ணின் எடைக்கு ஈடாக ஒரு பொற்பாவையையும்,  எண்பத்தோரு யானைகளையும் தருவதாகக் கூறியபோதும் அவன் மாங்காய் உண்ட பெண்ணைக் கொலை செய்யாது விடவில்லை. கொன்றுவிடுகிறான். இதுவரை இப்பாடலில் பதிவுசெய்யப்படுகிறது. இதன்பின் நன்னன் அழிவு என்பது அடுத்த கட்டமாகத் தொடர்கிறது.
‘‘மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போக்கிய
ஒன்று மொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே” (குறுந்தொகை,73)
என்ற பாடலில் நன்னின் அழிவு காட்டப்பெறுகிறது.
இப்பாடலின் வழி கொலை செய்யப்பெற்ற பெண் கோசர் இனத்தவள் என்பது தெரியவருகிறது. தம் குலப்பெண்ணை அழித்த நன்னனைக் கோசர்கள் பழிவாக்கக் காந்திருந்தனர். அகுதை என்பானின் தந்தையிடம் அகவன் மகளிரை அனுப்பி அவனிடம் கொடை பெற வைத்தனர். அவன் கொடையாகத் தந்த யானைகளை நன்னனின் காவல்மரமான மாமரத்தில் கட்டச் செய்தனர். இந்நேரத்தில் நன்னன் ஊரில் இல்லாத காரணத்தால் யானைகள் கட்டப்பெற்றன. அவ்யானைகள் மாமரத்தைத் தூருடன் பெயர்த்தன. இதன் காரணமாக காவல் மரம் அழிந்தது. இதனை அழித்தவர்கள் யார் என்று தேடி வந்த நன்னனைக் கோசர்கள் அகுதையின் படையுடன் சந்தித்து அவனைக் கொன்றுப் பழி தீர்த்தனர். இவ்வரலாறுகள் பெண்கொலை செய்த நன்னன் என்ற புனைவில் அமைந்துள்ளன.
இந்நிகழ்வில் பாதிக்கப்பெற்ற பெண்ணே தற்போது மாசாணி அம்மனாக விளங்குகிறது என்ற நம்பிக்கை விளங்கி வருகிறது. பெண் கொலை செய்யப்பட்ட கோலத்தில், பதினைந்து அடி நீளத்தில் படுத்துக் கிடக்கும் அம்மனாக மாசாணி அம்மன் விளங்குகிறது. இவ்வம்மன் உப்பாற்றின் கரையில் மயானத்தில் உள்ளது. மயான அம்மன் மாசாணி அம்மன் எனப்பட்டிருக்கவேண்டும்.
இவ்வம்மனுக்கு மிளகாய் அரைத்துப் பூசும் வழக்கம் இருந்துள்ளது. இதன்வழி அவ்வம்மனின் மன எரிச்சல் நீக்கப்படுவதாகக் கொள்ளலாம். ஒரு பசுங்காயைத் தின்றதற்காக இவ்வளவு பெரிய தண்டனை வழங்கப்படுவது சற்றும் ஏற்கமுடியாததாக இருந்ததால் இப்பெண்ணைத் தெய்வமாகக் கொண்டாடும் முறைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இக்கதையில் பொன்னாலான பாவை புனையப்பெற்றுத் தரப்பெறலாம் என்பதும் இக்கட்டுரையின் நோக்கத்திற்கு வலு சேர்க்கும் செய்தியாக அமைகிறது.
பெண் ஒரு மாங்காயைத் தின்பது தவறா? அப்படித் தின்றால் அவள் கொல்லப்படவேண்டுமா? அவளின் பெயர் யாது? போன்ற கேள்விகள் இந்நிகழ்வின் அடியில் தொக்கி நிற்கின்றன. இப்புனைவின் வழியாகப் பெண்களின் குறைந்த பட்ச ஆசை கூட நிறைவேற்றப்படமாட்டாது என்பது புலனாகின்றது. பெண் செய்த தவறாகக் கருதப்படும் செயலுக்கு மாற்றே கிடையாது என்பதும் பெறப்படுகிறது. மேலும் இப்பெண்ணிற்கு ஏற்பட்ட தாழ்வைப்போக்க ஆண்களே முன்வரவேண்டியவர்களாக உள்ளனர் என்பதும் தெரியவருகிறது. மொத்தத்தில் பெண் காரணமாக ஆணுக்கு அழிவே நேரும் என்பதும், அவள் பிறந்த குலத்திற்குத் துன்பமே நேரும் என்பதான புனைவாகவே இது கண்டுகொள்ளத்தக்கதாக விளங்குகிறது. இத்தாழ்வின் காரணமாகவே அவள் கடவுளாக வணங்கப்படும் நிலை எழுந்துள்ளது. நன்னன் செய்த தீமை இன்றளவும் நினைக்கப்படத்தக்கதாகவும், இதன்வழி பெண்கள் தன் சொந்த ஆசைகளை வெளிப்படுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்படுவதையும் உணரமுடிகின்றது.
மாசாணி அம்மன் உருவமும், அவ்வம்மனின் கோவிலும்
திருமாவுண்ணி
siragu semmoli6
திருமாவுண்ணி கதைதான் கண்ணகிக் கதையாக வளர்ந்தது என்பது ஆய்வாளர்தம் கருத்து. இருப்பினும் சங்க இலக்கியங்களில் குறிக்கத்தக்க புனைவாக திருமாவுண்ணி விளங்குகிறது.
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;
கண்ணுறு விழுமம் கை போல் உதவி,
நம் உறு துயரம் களையார்ஆயினும்,
இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே;
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையராயினும்,
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே” (நற்றிணை 216)
என்ற பாடலின்வழி திருமாவுண்ணி பற்றிய குறிப்பு கிடைக்கின்றது.
பறவைகள் ஒலித்து வாழும், நெருப்பு போன்ற நிறமுடைய வேங்கை மரத்தின் பரண் அருகே ஒரு பெண் நின்று இருந்தாள். அவளின் மனதில் சோகம் அப்பிக்கிடக்கிறது. உடலில் இரத்தம் வடிகிறது. அயலான் ஒருவனால் கைவிடப்பெற்ற அவள் தன் ஒரு மார்பகத்தை அறுத்த நிலையில் நின்று கொண்டிருந்தாள். இவளின் நிலையைக் கேட்டவர்கள் கேட்டபடி சென்றுவிடுவார்கள். ஆனால் அவளின் மீது அன்பு கொண்டவர்கள் அவளின் நிலைக்காக வருந்துவார்கள்.  இத்தகைய செய்தியைத் தாங்கி நிற்கிறது மேற்காணும் நற்றிணைப்பாடல்.
கண்ணகி நின்றதும் வேங்கைமரம், அவள் இழந்ததும் ஒரு முலை என்ற நிலையில் இவர்கள் இருவரும் ஒருவரே என்றும் கொள்ள இயலும். இவளுக்கும் கோட்டம் கண்டுத் தமிழகம், கேரளம் இன்றுவரை நினைத்துவருகிறது.
இவ்வகையில் திருமாவுண்ணி அல்லது கண்ணகி ஆகியோருக்கு நேர்ந்த துன்பத்தைத் துடைக்க இன்றளவும் அப்பாத்திரங்கள் தெய்வங்களாக வழிபட்டு வரும் முறைமை விளங்கி வருவதைக் காணமுடிகின்றது.
இப்புனைவில் பெண்ணின் பெயர் திருமாவுண்ணி என்பது தெரியவருகிறது. ஆனால் துன்பம் தந்த அயலான் பெயர் தெரியவில்லை. பெண் தன்னை பெயரறியா ஒருவனிடம் அடைக்கலப்படுத்தி அதன்வழி துன்பம் அடைந்துள்ளாள் என்பது தெரியவருகிறது. இதனை எதிர்த்துப் போராட இயலா  நிலையைப் பெற்றவளாகவும் பெண் இருக்கிறாள். இதே நிலை இக்கால அளவிலும்  தொடர்கிறது. பெண்ணின் வருத்தம் தீர்க்க இயலாதது என்ற நிலையில் தமிழ்ச்சமுகம் இன்றுவரை அந்தத் துயரத்தை நினைவு கொள்ளும் எச்சங்களைப் பெற்றுள்ளது என்பது குறிக்கத்தக்கதாக இருந்தாலும் இதில் தவறு இழைத்த ஆண்கள் வெளிச்சமிட்டுக்காட்டப்படவில்லை என்பது குறையே.
அன்னிமிஞிலி
கோசர்கள் தம் வயல்களில் பயறு விளைவித்தனர். நன்றாக பயறுச் செடிகள் வளர்ந்துப் பயன் தரும் வேளையில் மாடு ஒன்று அவற்றை நன்றாக மேய்ந்துவிடுகிறது. இதற்காக மாட்டின் உரிமையாளரின் கண்களை அவர்கள் பிடுங்கி இத்தவறுக்குத் தண்டனை தருகின்றனர். இத்தண்டனையில் இருந்து மீள பல வழிகளில் முயற்சித்தும் அவை இயலாதாயின. எனவே கண்கள் இழப்பு தண்டனையானது.
கண்கள் இழந்த தந்தையை மகள் அன்னிமிஞிலி பார்க்கிறாள். துன்பப்படுகிறாள். கண்களை அழித்த கோசர்களைப் பழிவாங்க அவள்  எண்ணினாள். இதன் காரணமாகப் பழிக்குப் பழி வாங்கும் நிலை எய்தும்வரை அவள் உணவு உண்ணாது நின்றாள். நீராடாது தவிர்த்தாள். உடை மாற்றாமலும் விளங்கினாள். இதனை அறிந்த அப்பகுதியின் அரசன் திதியன் இவளின் உறுதியைக் கண்டுக் கோசரை அழித்தான். இதன்பிறகு அன்னிமிஞிலி மகிழ்ச்சியுடன் உண்டு, உடுத்து பெருமிதத்துடன் நகருலா வந்தாள் என்ற புனைவு அகநானூற்றின் வாயிலாகக் கிடைக்கிறது.
‘‘தந்தை
கண்கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண் போகிய,
கடுந்தேர்த் திதியன் அழுந்தை, கொடுங்குழை
அன்னி மிஞிலியின் இயலும்
நின்நலத் தகுவியை முயங்கிய மார்பே” (அகநானூறு, 196; 8-13)
என்ற இப்பாடலில் மேற்கருத்து இடம்பெற்றுள்ளது. இதில் தந்தை மீது பெண் குழந்தை ஆறாத பற்றுடையவளாக இருக்க வேண்டும் என்ற அடிக்கருத்து செயல்பட்டுள்ளது. பெண்களின் ஆடை, உடல்தூய்மை போன்றன மிக முக்கியமானவை. அவற்றை அவள் நாள்தோறும் பேணவேண்டும் என்பன உணர்த்தப்படுகின்றன. மேலும் பெண்கள் சூளுறைத்தாலும் அவளின் சூளுறையை நிறைவேற்ற ஆடவனே முயலவேண்டும் என்ற  ஆண்மையம் சார் கட்டமைப்பும் இருப்பதை உணரமுடிகின்றது.
இப்புனைவில் அன்னிமிஞிலி வென்றால் என்பதால், அவள் பாதிக்கப்படவில்லை என்பதால் அவள் தெய்வ நிலைக்கு ஏற்றப்படவில்லை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.
இவ்வகையில் சங்க இலக்கியங்களில் காணலாகும் பெண் சார் புனைவுகள் ஆண்மையம் கொண்டனவாக, பெண்களைப் பேசா இடத்திற்குத் தள்ளுவனவாக, பெண்களைப் பாதிப்படையச் செய்வனவாக, அவ்வாறு அவர்கள் அடைந்த பாதிப்புகளைக் காட்டிப் பெண்களை இயங்காநிலைக்கு இட்டுச் செல்வனவாக உள்ளன என்பதை உணரமுடிகின்றது.

திரு அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி எழுதிய தமிழால் இணைவோம் நூல் பற்றிய கருத்துரை)


Siragu tamil4
தமிழ் உயரிய மொழி செம்மொழி என்ற பெருமைகளை எல்லாவற்றைக் காட்டிலும் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் உயிர்மொழி என்ற பெருமையே அதன் சிறப்பும் தேவையும் ஆகும். தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள், உலகெங்கும் விரவிக் கிடக்கிறார்கள். அவர்களிடம் தமிழ்மொழி சற்றே ஒட்டிக் கிடக்கிறது. இதனை வலுப்படுத்தாவிட்டால் தமிழ் என்னும் தாய் மொழி தாயாகும் தன்மையை இழந்து வெறும் ஏட்டுமொழியாகிவிடலாம்.
இலங்கை, சிங்கப்பூர் மலேசியா, மொரிஷியஸ், ஆஸ்திரேலியா இன்னும் பற்பல இடங்களில் தமிழர்கள் இன்று தம் மொழியை முன்னிறுத்தி வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சிக்கல்களை உற்றுக்கவனிக்க என்ன செய்ய இயலும்?
தமிழகத்திலும் தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். தமிழகத்தில் சாதி அவர்களைப் பிரிக்கிறது. சாதித் தொகுதிகள் பிரிக்கின்றன. தமிழர்களை ஒருங்கிணைக்க ஒரே வழி தமிழ்தான்.
தமிழைத் தமிழர்தம் ஒற்றுமைக்கான ஒரே தீர்வாகக் காட்டுகிறது அனிதா கு. கிருட்டிணமூர்த்தி அவர்கள் எழுதிய தமிழால் இணைவோம் என்ற நூல். உண்மையிலேயே இதுதான் நூல். ஏனென்றால் தமிழகத்தின் நூல் உற்பத்தித் தளத்தில் இருந்து இந்நூல் உருவாகி இருக்கிறது.
தமிழர்தம் பழமையைப் போற்றிப் பல நூல்கள் செய்யலாம். ஆனால் தமிழரின் இன்றைய நிலையை பற்றிய நூல் எழுதுவதில் பல சிரமங்கள் இருக்கின்றன. இதனை மிகக் கவனமாக செய்திருக்கிறார் நூலாசிரியர். அவரின் தமிழர் தொன்மை பற்றிய அறிவு அரசியல் தொடர்பு, தமிழகத்தில் விளைந்த அரசியல்வாதிகளுடனான பழக்கம், உலகத்தமிழ் மாநாடுகளில் கலந்து கொண்ட பங்களிப்பு போன்றவற்றால் தமிழரின் இன்றைய நிலையை உரசிப் பார்க்கிறார் அனிதா கிருட்டிணமூர்த்தி.
கீழடியில் தமிழரின் பண்பாடு புதைந்துகிடக்கிறது. அதனைப் புதைத்துவிட விட்டுவிடக் கூடாது என்று குரல் தருகிறார் இந்நூலாசிரியர். தொல்லியல் பகுதியாக இருக்கும் 110 ஏக்கர் நிலத்தை உடனடியாகத் தமிழக அரசு அந்நிலத்தை உரியவருக்கு இழப்பீடு தந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். நாம் என்ன செய்யப்போகிறோம். தமிழரின் வரலாற்றை வைகை நாகரீகத்தைக் கண்டும் காணாமல் அமைதியாய் இருக்கப் போகிறோமா?
ஆரிய பவன் உணவத்தில் சாப்பிட்டிருக்கிறீர்களா? உணவு நன்றாக இருக்குமா? ஆம் என்பது உங்கள் பதிலாக இருந்தால் ஆரியபவனுக்குள் ஒளிந்திருக்கும் அரசியல் நீங்கள் அறியவில்லை என்பதுதான். மிகத் தெளிவாக இதன் அரசியலை ஆராய்கிறார் நூலசிரியர். கடந்த காலத்தில் அந்தணர்கள் உணவு உண்ணத் தேடும் இடம் பிராமணாள் ஹோட்டல், அல்லது உடுப்பி ஹோட்டல். தற்போது அந்தணர்கள் நம்பிச் சாப்பிடும் இடம் ஆரியபவன். ஆரியர்கள் உணவு உண்பதற்காக ரெட்டியார்கள் ஏற்படுத்திய உணவகம் ஆரிய பவன். அது தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் பரவியிருக்கிறது, பரவி வருகிறது.
tamil-mozhi-fi
இதே போல மற்றொன்று அய்யங்கார் பேக்கரி. முட்டை கலந்து செய்யப்படும் கேக் வகைகளுக்கு எதற்கு ஐயங்கார் பேக்கரி என்ற பெயர்?  மேலும் இக்கடைகளில் முட்டை இல்லாமல் உணவுப் பொருட்கள் செய்யப்படுகின்றன என்று யாராலாவது உத்திரவாதம் தரப்பட இயலுமா?
இசுலாமியச் சமயத்தவர்கள் துணிக்கடை வைக்கும்போது பூம்புகார் துணிக்கடை என்று ஏன் வைக்கிறார்கள். அவர்கள் வந்திறங்கிய துறைமுகங்களில் ஒன்று என்பதாலா? தமிழ்நாடு துணிக்கடல் என்று வைக்கும் அவர்கள் உணவகம் வைக்கும்போது மட்டும் ஏன் பிஸ்மில்லா போன்ற பெயர்களைப் பயன்படுத்தி, ஹலால் செய்யப்பட்டது என்று பெயர் வைக்கிறார்கள்.
இது ஒரு  பக்கம் இருக்கட்டும். ஏன் தமிழகத்தின் பிற்பட்ட வகுப்புகளாக வருணிக்கப்படும் இனத்தாரின் பெயர்களில்  உணவகங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்பது மற்றுமொரு தங்கக் கேள்வி.
இன்றைக்கு ஆசாரிக் கடைகள் மறைந்து முத்துட், கொசமட்டம், மலபார் ஜுவல்லரிகள் தமிழகத்தில் புகுந்துவிட்டன. முதல் தளத்தில் நகைக்கடை, இரண்டாம் தளத்தில் தங்க நகைகளை அடகு வைக்கும் அடகுக்கடை. வாங்கி அடகு வைக்கவேண்டுமா? அல்லது அடகு வைத்து வாங்கவேண்டுமா? விற்பவர்கள் வேற்று மாநிலத்தவர்கள் வாங்குபவர்கள் மட்டும் தமிழகத்தார்கள்.
பால் விற்பனை தெலுங்கரிடம், காய்கறி விற்பனை ரிலையன்ஸ், மால் விற்பனை பிக் பஜார் போன்ற வடநாட்டாரிடத்தில். வாணிகத்தில், வணிகத்தால் பிரிந்து கிடக்கிறது தமிழகம். பிரிந்து கிடந்தாலும் பரவாயில்லை. பொருளாதாரத்தைப் பறிகொடுத்து நிற்கிறது என்பதே உண்மை.
இந்த உண்மையை உரக்கச்சொல்கிறது இந்த நூல்.
தமிழகத்தின் மிக நீண்ட பரப்பினையும் செல்வ வளம் மிக்க இடத்தினையும் தமிழர்கள் இழந்துள்ளாரகள் என்று பல்வகைக் குறிப்புகளுடன் இந்நூலாசிரியர் எடுத்துரைத்துள்ளார். நீர்வளம் மிக்க தமிழகப் பகுதிகள் கர்நாடகத்திற்குத் தாரை வார்க்கப்பட்ட உண்மை ஆசிரியரால் வெளிவருகிறது. திருத்தணியை கன்னியாக்குமரியைக் காப்பாற்ற நடந்த போராட்டங்கள் அவரால் நினைவு கூரப்படுகின்றன. தலைமைச் செயலராக திரு.வர்கீஸ் இருந்த காலத்தில் கேரளப் பகுதிகள் தமிழகத்தில் இருந்துப் பிரித்துத் தரப்பட்டன என்ற கூற்றில் வர்கீஸ் அவர்களின் கேரளப் பற்று தெரியவருகிறது. இந்திய எண்ணம் கொண்ட காமராசர் காலத்தில் தான் இது நடைபெற்றது. இதனை எதிர்க்க தி.முக. அப்போது ஏழு வயது பத்தாது என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
உலகத்தமிழ் மாநாடுகள் இனி நடக்குமா? அதனால் பயன் உண்டா? என்ற வினாவை எழுப்பி விடைகாண்கிறார் நூலாசிரியர. தனிநாயகம் அடிகள், அண்ணா ஆகியோர் முறையே முதலாம் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினர். அண்ணா அவர்கள் கம்பராமாயணத்தை எதிர்த்தபோதும் கம்பனைக் கவிச்சக்கரவர்த்தியாகவே கண்டு அவருக்குச் சிலை எழுப்பினார். தான் எழுப்பிய கம்பரின்சிலைக்கு அருகிலேயே அவர் இன்று மீளாத்துயில் கொள்வது என்ன பொருத்தம். கம்பன் எடுத்துக்கொண்ட கதை மீதுதான் அண்ணாவிற்கு வெறுப்பு. கவியின் மீதல்ல என்பதற்கு இதுவே சான்று என்பது ஆசிரியரின் கூற்று. மூன்றாம் மாநாடு பாரீசிலும், நான்காம் மாநாடு இலங்கையிலும் நடந்தன. ஐந்தாம் மாநாடு ம.கோ. இராமச்சந்திரன் (எம்.ஜி. ஆர்) அவர்களால் நடத்தப்பெற்றது. ஆறாம் மாநாடு கோலாலம்பூரில், ஏழாவது மொரிஷியஸ், எட்டாவது மாநாடு தஞ்சையில் நடத்தப்பெற்றது. இதுவரை உலகத்தமிழ் மாநாடு நடத்தப்படாதது பெருத்த இழப்பே. எதிர்கால சந்ததியினர் தமிழின் வலிமையை அறிந்து கொள்ள உலகத்தமிழ் மாநாடுகள் நடத்தப்பட வேண்டும். அதில் அரசியல் வேண்டாம், தமிழ் வேண்டும். அதுவே தமிழரை ஒன்றாக்கும். ஒன்றான தமிழர் கண்டு நம் பகைவர் அஞ்சி ஓடுவர்.
தமிழால் தமிழர்களை இணைத்த சான்றோர்களையும் அவ்வப்போது இந்நூலாசிரியர் பாராட்டுகிறார். ம.பொ.சி, வ.உ.சி, சோமசுந்தர் பாரதி, மகாகவி பாரதி, சண்முகம் செட்டியார், கால்டுவெல் போன்ற பலரை இந்நூலில் முன்னிறுத்துகிறார் நூலாசிரியர். இவர்களை முன்னிறுத்தினால் தமிழர்களுக்குள் ஒற்றுமை வரும். தமிழால் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இல்லையெனில் அனைவர்க்கும் தாழ்வே. இதுவே இந்நூலின் நோக்கம். அந்நோக்கத்தை எய்தச் செய்யும் எழுச்சியை இந்நூல் தருகிறது.

தனித்தமிழும் இனித்தமிழும் - முனைவர் மு.பழனியப்பன்

தனித்தமிழ் நடை… மறைமலையடிகள் நடந்த பாதை. வ.சுப. மாணிக்கனார் சுட்டிய பாதை. மொழித் தூய்மை, ஒலித்தூய்மை கொண்டுத் தமிழைக் கண்ணெனக் காப்பது தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை.
தற்காலத்தின் பேச்சு வழக்கு அதிகமாக அயல் மொழி கலப்புடையதாக உள்ளது. பேச்சு மொழி சார்ந்து எழுதப்படும் படைப்பியலக்கியங்களிலும் அயல்மொழிக்கலப்பு என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.
பேச்சுத்தமிழும் எழுத்துத் தமிழும் வேறு வேறு என்ற நிலையை எய்திவிட்டால் பேச்சுத்தமிழ் ஒரு தமிழாகிவிடும். எழுத்துத்தமிழ் ஒரு தமிழாகிவிடும். எனவே பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும் ஒன்றைஒன்று அதிக அளவில் சார்ந்தே இயங்கவேண்டும். செய்யுள்நடை, வழக்கு நடை ஆகிய இரண்டு நடைகள் தொன்று தொட்டே வந்துகொண்டுள்ளன. செந்தமிழ், கொடுந்தமிழ் ஆகிய இரண்டும் இருந்துள்ளன. செய்யுள் நடையில் திசைச் சொற்கள் குறைவு. வழக்கு நடையில் திசைச் சொற்கள் கலப்பது ஏற்கத்தக்கது. கொடுந்தமிழைத் தாண்டி, வழக்குத் தமிழைத்தாண்டி செய்யுள் நடை இன்னமும் நிலைத்து நிற்கிறது. அன்றைக்கு எழுதிய சிலப்பதிகாரம் இன்றைக்கும் புரிகிறது என்றால் எழுத்துநடைத் தமிழ் உயரிய நிலையில் பேணப்பட்டு வந்துள்ளது என்றே பொருள்.
mozhi valarchchikku7
இந்நிலையில் தமிழின் தூய்மையைக் காத்தல் வேண்டும் என்றால் பேச்சுத்தமிழில் அயல்மொழி வழக்குகளைக் குறைக்கவேண்டும். நல்ல தமிழ் பேசப்பட வேண்டும். நல்ல தமிழில் எழுதப்பட வேண்டும் திரையிசைப்பாடல்களில் அளவுக்கதிகமான ஆங்கிலக் கலப்பு. அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பேச்சுமொழியில் அளவுக்கு அதிகமான அயல் மொழிக் கலப்பு. தொலைக்காட்சித்தமிழில், வானொலித்தமிழில், திரைத்தமிழில் அயல்மொழிக் கலப்பு அதிகம்.
தமிழில் வார்த்தைகள் குறைவல்ல. தமிழைப் படிப்பவர்கள் குறைவு. தமிழில் படிப்பவர்கள் குறைவு. தமிழைத் தமிழாகக் கற்காதவர்கள் ஒலிபரப்பு நிலையங்களில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு நடத்த தமிழ் தன்னை வதைத்துக்கொள்கிறது. தமிங்கிலிஷ் வளருகிறது. தமிழ் தேய்கிறது. எனவே மக்கள் தளத்தில் இயங்குபவர்கள், ஊடகங்களில் இயங்குபவர்கள் நிச்சயமாக தமிழ் படிக்க ஓராண்டு நல்ல தமிழ் கற்பிக்கும் சான்றிதழ்க் கல்வியை அரசு உடனே துவங்கவேண்டும். அதனைப் படித்தே பின்பே ஊடகத்துறையில் நுழைய இயலும் என்று சட்டம் வகுக்கப்பட வேண்டும்.
Siragu thani tamil1
தமிழ்வழிக் கல்வி – இது ஏற்க முடியாத கல்வி முறையாக இன்றைக்கு ஆகிவிட்டது. தமிழாசிரியர்கள் ஆங்கிலத்தில் ஒரு பாடம் எடுக்க வேண்டும் என்ற கட்டளை பல்வேறு உலகப் பல்கலைக்கழகங்களில் இன்றைய தேவையாக இருக்கிறது. அவ்வாய்ப்புகளுக்குச் சிலர் செல்லட்டும். பலரும் தமிழை நல்ல தமிழாகப் படிக்கட்டும்.
தமிழ் படிக்க வரும் மாணவர்கள் எந்த பட்டப்படிப்பிலும் இடம் கிடைக்காதவர்களாக தமிழுக்குத் தள்ளப்பட்டவர்களாக இருக்கிறார்கள். நல்ல பட்டப்படிப்பில் சேருவோர்கள் தமிழை விரும்பா நிலை இருக்கிறது. இந்த நிலை மாற தமிழ் படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
தமிழ் சார்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ் படித்தவர்களுக்கான பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.
தமிழ் தாய்மொழி. அது இல்லாமல் தமிழர் இல்லை. ஆனால் அதனை மறந்து வீட்டிலும் தமிழ் பேசுவதைக் குறைத்துக் கொண்டுவருகிறது தமிழ்க் குடும்பங்கள். இந்நிலை மாறவேண்டுமானால் மீண்டும் ஒரு புத்தெழுச்சி உருவாக வேண்டும். இங்குள்ள தமிழர் எல்லோரும் நன்னிலை எய்தும் நாள் எந்நாளோ?

சிலப்பதிகாரத்தில் காலக்கணிதரும், காலக்கணக்கும் - முனைவர் மு.பழனியப்பன்

பல்வகை இனக்குழுக்கள் இணைந்து வாழுகின்ற சமுதாயமாகத் தமிழ்ச் சமுதாயம் தொன்றுதொட்டு விளங்கி வந்துள்ளது. ஒவ்வொரு இனக்குழுவும் தனிக்கென தனித்த அக, புற அடையாளங்களை அடையாளப்படுத்திக்கொண்டு தமிழகத்தில் வாழ்ந்துள்ளன. வாழ்ந்து வருகின்றன. இவ்வினக்குழுக்களை தமிழ் மொழி ஒன்றிணைத்துள்ளது. பல்வேறு இனக்குழுக்களுக்களுக்கான தனித்த அடையாளங்களைத் தாண்டி தமிழ்நிலம், தமிழ் மொழி என்ற இணைவு பொதுமைநிலையில் தமிழ்ச்சமுதாயத்தில் செயல்பட்டு ஒற்றுமையைக் காத்து வந்துள்ளது.
தமிழகத்தில் வாழ்ந்துவரும் பல்வேறு இனக்குழுக்களில் கணக்கீடு செய்யும் இனக்குழுவினர் முக்கிய இடம் பெறுகின்றனர். காலத்தை., பொருளின் அளவை, சமயத்தை இவை போன்றவற்றைக் கணக்கீடு செய்யும் தமிழர்கணக்கீட்டு முறைமை சங்ககாலந்தொட்டு இருந்து வந்துள்ளது. ஓலைக்கணக்கர், நாழிகைக் கணக்கர், மந்திரக்கணக்கர், அமயக் கணக்கர், ஆசிரியக் கணக்கர், பெருங்கணக்கர், கணக்கியல் வினைஞர், காலக்கணிதர், ஆயக்கணக்கர்போன்ற பல குழுவினர் கணக்கீடு செய்யும் குழுவினராகச் செம்மொழி இலக்கிய காலத்தில் இருந்து வந்துள்ளனர். இதற்கான சான்றுகள் பல செம்மொழி இலக்கியங்களில் உள்ளன.
இக்குழுவினருள் காலக்கணக்கீடு செய்யும் குழுவினர்பல்வேறு நிலைகளில் தமிழகத்தில் சங்ககாலந்தொட்டு வாழ்ந்து வந்துள்ளனர். தமிழர்க்கென தனித்த காலக்கணக்கீட்டு முறைமை இருந்துள்ளது. செம்மொழி இலக்கியங்களான தொல்காப்பியம், சங்க கால இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள், காப்பிய கால இலக்கியங்கள் ஆகியவற்றில் காலக் கணக்கீடு முறையும் கணக்கீட்டாளர்களும் இருந்துள்ளனர். காலக்கணிதர், நாழிகைக் கணக்கர், கணியர்போன்ற பல நிலையினர்இக்காலக் கணக்கீட்டை அவரவர்கள் தன்மைக்கு ஏற்பச் செய்துள்ளனர். இவ்வளர்ச்சியை அடியொற்றிச் சிலப்பதிகார காலத்தில் காணலாகும் காலக் கணக்கீட்டாளர் பற்றியும், காலக்கணக்கீட்டு முறை பற்றியும் இக்கட்டுரை தொகுத்துரைக்கிறது.
காலக்கணிதர்:
காலத்தைக் கணக்கீடு செய்பவர் காலக்கணிதர் ஆகின்றார். காலக்கண்கீட்டளார்கள் பூம்புகாரின் ஒரு பகுதியான பட்டினப்பாக்கத்தில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிக்கிறது. ‘‘ஆயுள் வேதரும் காலக்கணக்கரும் பால்வகை தெரிந்த பன் முறை இருக்கையும்” (சிலப்பதிகாரம், இந்திரவிழவூரெடுத்த காதை, அடி 44-45) என்று காலக்கணிதர் உறைந்த வீடுகள் பற்றி அறிவிக்கிறது சிலப்பதிகாரம்.
காலத்தை வகுத்துறைக்கும் நிலையில் நாழிகைக் கணக்கர்என்போர்சங்க காலத்தில் இருந்ததாகக் குறுந்தொகை பதிவு செய்துள்ளது. ‘‘வான்நோக்கிக் காலக்கணக்கை அறிந்தனர் நாழிகைக் கணக்கர்” (குறுந்தொகை, பாடல்எண். 261, அடி 6-7) என்ற இலக்கியச் சான்று இதனை மெய்ப்பிக்கும். பொழுது அளந்தறியும் பொய்யா மக்கள் (முல்லைப்பாட்டு, அடி 55) என்று முல்லைப்பாட்டு பொழுது அளந்தறியும் பணியாளர் பற்றிக் குறிக்கிறது. சிலப்பதிகாரத்திலும் நாழிகைக் கணக்கர் பற்றிய குறிப்பு கிடைக்கின்றது. கன்னல் என்னும் நாழிகைக் கணக்கு இயந்திரத்தைப் பயன்படுத்திய குறிப்பு அகநானூற்றில் காட்டப்பெற்றுள்ளது. (அகநானூறு 43, அடி 6)
‘நாழிகைக் கணக்கர் நலம் பெறு கண்ணுளர்” (சிலப்பதிகாரம், இந்திர விழவு+ரெடுத்த காதை, அடி 49) என்று நாழிகைக் கணக்கர் இல்லம் பூம்புகாரில் இருந்த நிலையைக் குறிக்கிறது சிலப்பதிகாரம்.
Siragu-silappadhikaaram-4கணியன்:
கணியன் என்ற இனக்குழு தமிழகத்தின் தொன்று தொட்டு இருந்துவரும் எதிர்காலத்தை அளந்து சொல்லும் இனக்குழுவாக விளங்கிவருகிறது. இன்றைக்கு கணியர்களுக்கென தனித்த கூத்து வடிவம் என்ற நிலையில் கணியான் கூத்து நடைபெறுகிறது. கணியர்க்குள் தனித்த குழுஉக்குறிச்சொற்கள் போன்றன விளங்கி வருகின்றன. சங்ககாலத்தில் இடம் பெற்றிருந்த இனக்குழுவான கணியர்கள் இன்றளவிலும் தம் அடையாளங்களுடன் நிலைபெற்றுவருகின்றனர் என்பது தமிழ்ச்சமுதாயத்தின் நிலைத்த பாங்கினை அறிவிப்பதாக உள்ளது.
சங்ககாலத்தில் கணியன் பூங்குன்றன் என்ற பெயரடையின் வழியாக கணியன் என்ற சொல்லை ஓர் இனக்குழு அடையாளமாகவே கொள்ளவேண்டியிருக்கிறது. காலத்தைக் கணித்துச் சொல்லும் மரபினராக சங்ககாலம் முதல் கணியக்குழுவினர் விளங்கிவந்துள்ளனர். கணியன் பூங்குன்றனார் எழுதிய இரு பாடல்களிலும் காலம் பற்றிய அறிவும், உலகிற்கு அறிவுரை சொல்லும் பொதுமொழி வெளிப்பாடுகளும் (புறம் 192, நற்றிணை 226) அமைந்துள்ளன. தொல்காப்பியத்தில் கணியன் என்ற சொல் அறிவர்என்ற நிலையில் இடம்பெற்றுள்ளது.
மூவகைக்காலமும் நெறியானாற்றும் அறிவர்(புறத்திணையியல். 74), ‘‘பாணன் கூத்தன் விறலி பறத்தை ஆணம் சான்ற அறிவர்கண்டோர்” (களவியல்-) என்ற நிலையில் அறிவர்என்று அறியப்பட்டவர்கள் சங்ககாலத்தில் கணியன் எனப்பட்டிருக்க வேண்டும். அறிவர் எனப்படுபவர்கள் அக, புற வாழ்க்கை நிலைகளில் உதவி புரிந்துள்ளனர். வெற்றியை நோக்கிச்செய்யப்படும் போரின் வெற்றிக் காலத்தை நிர்ணயித்துத் தரும் பொறுப்பும், தலைவிக்குத் தலைவன் வரும் பொழுது பற்றி உரைத்து அவளை ஆற்றுப்படுத்தும் நிலையிலும் அறிவர்தேவைப்பட்டுள்ளனர்.
இவ்வகையில் தொல்காப்பிய, சங்க இலக்கியங்களில் மக்களோடு மக்களாக வாழ்ந்த கணிய மரபினர் சிலப்பதிகார காலத்தில் அரசவையில் இருப்பிடம் பெறும் அளவிற்கும், அரசனுடன் ஒருங்கமையும் நெருக்கத்திற்கும் உரிய மதிப்பு பெற்றனர்.
மன்னரவையில் கணியர்:
மன்னர்களின் அவையில் கணியருக்குத் தனியிடம் தரப்பெற்றிருந்தது. சேர மனனர்; அவையில் கணியர்இடம்பெற்றிருந்த நிலையைச் சிலப்பதிகாரம் தெரிவிக்கின்றது. கணக்கியல் வினைஞர் என்று இவர்கள் போற்றப்பெற்றுள்ளனர். காலைப்பொழுதில் சேரன் செங்குட்டுவன் அரசவைக்கு வருகின்றான். அவனின் வரவறிந்துப் பல்லோரும் வாழ்த்துகின்றனர். அப்போது கணியரும் அவனை அவனின் ஆட்சியை வாழ்த்தி அமைகின்றனர்.
‘‘அறைபறை யெழுந்தபின் அரிமான் ஏந்திய
முறைமுதல் கட்டில் இறைமகன் ஏற
ஆசான்பெருங்கணி அருந்திறல் அமைச்சர்
தானைத் தலைவர்தம்மொடு குழீஇ
மன்னர்மன்னர்வாழ்கென்று ஏத்தி”
சிலப்பதிகாரம், கால்கோட்காதை,அடிகள் 1-7)
என்ற பகுதியின் வழி மன்னரை வாழ்த்தும் முறைமை, ஏற்றத்தை கணியர் பெற்றிருந்தனர் என்பது தெரியவருகிறது.
மன்னர் வடதிசை நோக்கிப் போர் நடைபெறும் என்பதை அறிவிக்கிறான். அப்போது வீரர்கள் மகிழ்ந்து ஒலியெழுப்புகின்றனர். அமைச்சர், கரும வினைஞர், கணக்கியல் வினைஞர் போன்றோர் அரசன் ஆணையை ஏற்று அவன் நீடு வாழ்க என வாழ்த்துகின்றனர். இவ்வாறு மன்னனின் ஒவ்வொரு செயலிலும் காலம் அறிந்து உணர்த்தும் கணியர் பங்களிப்பு இருந்துள்ளது.
மன்னருடன் உடன் இருத்தல்:
கணியர்கள் மன்னருடன் உடன் உறைந்துள்ளனர். சேரன் செங்குட்டுவன் வடதிசைக்குப் போர் எடுத்து வந்து முப்பத்தியிரண்டு மாதங்கள் ஆகின்றன. இந்நேரத்தில் அவன் நிலவை நோக்கிப் பார்க்கிறான். அப்போது அவனின் எண்ணம் அறிந்து அவனுக்குக் காலக்கணக்கினை அறிவிக்கிறான் ஒரு கணியன்.
‘‘அந்திச் செக்கர்வெண்பிறை தோன்றப்
பிறையேர்வண்ணம் பெருந்தகை நோக்க
இறையோன் செவ்வியிற் கணியெழுந்துரைப்போன்
எண்நான்கு மதியம் வஞ்சி நீங்கியது
மண்ணாள் வேந்தே வாழ்க என்றேத்த”
(சிலப்பதிகாரம், நீர்ப்படை காதை, அடிகள் 143-150)
என்ற நிலையில் மன்னன் எவ்விடம் சென்றாலும் அவ்விடத்திற்குக் காலக்கணக்கு செய்து வருவதுரைக்கக் கணியன் உடன் சென்றுள்ளான் என்பது புலனாகின்றது.
Siragu silappadhikaaram2
போர்வெற்றிக்கு உதவும் கணியன்:
ஆநிரை கொள்ளச் சென்ற வீரர்கள் தாம் கொண்டுவந்த செல்வங்களை ஒற்றர், கணியர்தம் வீட்டு வாசகல்களில் நிரப்பிய செய்தி ஒன்றையும் மதுரைக்காண்டத்தில் பதிவு செய்கிறார் இளங்கோவடிகள்.
‘‘முருந்தேர்இளநகை காணாய்நின்னையர்
கரந்தை அலறக் கவரந்த இனநிரைகள்
கள்விலை யாட்டி நல் வேய் தெரிகானவன்
புள்வாய்ப்புச் சொன்ன கணி முன்றில் நிறைத்தன”
(சிலப்பதிகாரம், வேட்டுவவரி, பாட்டு 15)
என்ற நிலையில் கரந்தை அணிந்த வீரர்கள் அலறத் தாம் கொண்டுவந்த செல்வங்களை வெட்சி வீரர்கள் கணியன் வீட்டின் முன் நிறைத்துள்ளனர். இதற்குக் காரணம் வெற்றி வரும் என்று அறிந்து சொன்ன கணியன் மொழிகள் ஆகும். இவ்வகையில் கணியர்குலத்தோர் வெல்லும் சொல் (சொல் பலிதம்) கொண்டவர்களாக விளங்கியுள்ளனர். பறவைகளின் இயக்கம், ஒலிக்குறிப்பு ஆகியன கொண்டு அவற்றின் நிமித்தத்தால் நன்மை விளையும் என்று உரைக்கும் தன்மை பெற்றவர்களாக கணியர்கள் இருந்துள்ளனர்.
இவ்வாறு வெல்லும்சொல் சொல்லும் அளவிற்கு ஆற்றல் பெற்றமைக்கு உரிய காரணங்கள் யாவை என்பது ஆராயப்படத்தக்கதாகும். தற்காலத்தில் கணியர்குலத்தார்திருநெல்வேலி சார்ந்த பகுதிகளில் பெருமளவில் வாழ்ந்து வருகின்றன. இவர்களின் கலை வடிவம் கணியான் கூத்து என்பதாகும். இக்கூத்து தனித்துவம் வாய்ந்த நாட்டார்கலையாக உள்ளது. கணியான் இனத்தாருக்கு மட்டுமே உரியதாக உள்ளது. தாம் வணங்கும் கடவுள் முன்னர் நேருக்கு நேராக ஆடும் ஆட்டமாக இது விளங்குகிறது.
கணியான் கூத்து நீலகதை, இசக்கியம்மன் கதை, சுடலை மாடன் கதை போன்ற நாட்டார் கதைகளை அடிப்படையாக வைத்து ஆடப்பெறுகிறது. இதனை மகுடஆட்டம் என்றும் அழைக்கின்றனர். இவ்வாட்டத்தில் மகுடம் என்ற தோற்கருவி பயன்படுத்தப்படுகிறது. இதனை இசைத்து இக்கூத்து ஆடப்படுவதால் இதனை மகுடாட்டம் என்கின்றனர். இக்கூத்தில் மொத்தம் ஏழுபேர் நடிக்கிறார்கள். இவர்களின் இருவர் பெண் வேடம் தரித்த ஆடவர்களாக இருப்பர். இக்கூத்தில் கணியன் என்பவன் முக்கியப் பாத்திரமாகக் கொள்ளப்பெறுகிறாள். அவனே முதன்மைப் பாத்திரத்திற்குத் துணைபுரிபவன் ஆவான். அரசனுக்கு உதவும் கணியன் போல இங்கு முதன்மைப் பாத்திரத்திற்கு உதவும் பாத்திரமாக கணியன் பாத்திரம் அமைக்கப்பெற்றிருப்பது கணியர்மரபின் தொடர்ச்சியாகும். கடவுள் முன் ஆடப்படும் இக்கூத்து இந்நடைமுறையில் சிலப்பதிகார கால அளவிலேயே நடைபெற்றிருக்க வேண்டும். இதன்வழி சொல்பலிதம் பெற்றவர்களாக கணியர்கள் விளங்கியிருக்க இயலும். குறிப்பாக கணியான் கூத்தின் நடுநிலைப்பகுதியில் சாமியாடிக்கு சாமி அருள் வந்து அவர் குறிப்பிடும் சொற்கள் அனைத்தும் நடக்கும் சொற்களாக ஏற்கப்படும் முறைமை காணப்படுகிறது. ஆகவே கணியர்கள் தம் சொல் பலிதம் பெற தெய்வ அருள் என்பதை முதன்மைப்படுத்தி வழிபட்டுள்ளனர் என்பதை உணரமுடிகிறது.
இவ்வகையில் காலக்கணக்கரும், கணியரும் அரச நடப்புகளில், சாதாரண மக்களின் வாழ்வில் கலந்து கொண்டு அவர்களை எதிர்காலம் நோக்கி நம்பிக்கையுடன் அழைத்துச் சென்றதை உணரமுடிகின்றது. இம்மரபு இன்னமும் தொடர்வது சிறப்பிற்குரியதாகும்.
சிலப்பதிகாரத்தில் காலக்கணக்கீட்டுக் குறிப்புகள்:
Siragu ilango1
சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோவடிகள் சில காலக்கணக்கீட்டு முறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். மணத்திற்குரிய நன்னாள், வைகறை காலம், மழைக்காலம், அழிவுக்காலம் போன்றன பற்றிய குறிப்புகள் காலக்கணக்கீட்டுக் குறிப்புகளாகச் சிலப்பதிகாரத்தில் காட்டப்பெற்றுள்ளன.
மணம் நடந்த நன்னாள்:
கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நடந்த நன்னாளை நட்சத்திரக் குறிப்புகளுடன் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். இம்முறை தற்கால திருமண அழைப்பிதழ்களிலும் பின்பற்றப்படுவது குறிக்கத்தக்கது.
“வானூர்மதியம் சகடு அணைய வானத்துச்
சாலி யொருமீன் தகையாளை கோவலன்”
(சிலப்பதிகாரம், மங்கல வாழ்த்துப் பாடல், அடி 50-51)
என்பது திருமணம் நிகழந்த நல்ல பொழுதைக் குறிக்கும் அடிகள் ஆகும். வானத்தில் திகழும் நிலவு உரோகினி நட்சத்திரத்துடன் கூடிய நன்னாளில் அருந்ததி போன்ற கற்பினை உடைய கண்ணகியைக் கோவலன் மணந்தான் என்று இளங்கோவடிகள் குறிக்கிறார். இதன்வழி நாள், நட்சத்திரம் பார்த்து மணநாளை தீர்மானிக்கும் மரபு தமிழர்மரபாக விளங்குகிறது என்பதை உணரமுடிகின்றது.
வைகறைக் காலம்:
நாடுகாண் காதையில் கோவலனும் கண்ணகியும் வீட்டை விட்டு வெளியேறும் நிலையில் வைகறை வரவினைப் பின்வருமாறு குறிக்கிறார்.
‘வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
காரிருள் நின்ற கடைநாள் கங்குல்”
(சிலப்பதிகாரம், நாடுகாண்காதை, 1-3)
நட்சத்திரங்களோடு அழகுடன் விளங்கிய வெண்மதி நீங்கும் வைகறைப் பொழுதில் விதி துரத்த கோவலன் புகாரை விட்டு நீங்கினான் என்று இளங்கோவடிகள் இவ்வடிகளில் குறிப்பிடுகிறார். வானத்தில் இருந்து நிலவு விலகுவதுபோல கோவலன் புகாரை விட்டு நீங்கினான் என்று காலக்குறிப்பினோடு குறியீட்டையும் உட்படுத்தி உரைக்கிறார் இளங்கோவடிகள்.
மழைவரும் காலம்:
கால அளவில் சில நேர்வுகள் நிகழும்போது மழை பொழியும் என்பது காலக்கணிதம் ஆகும். அவ்வகையில்,
‘கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர்வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பின் கடுங்குரலேற்றொடும்
சூல்முதிர்கொண்மூப் பெயல் வளம் சுரப்ப”
(சிலப்பதிகாரம், நாடுகாண்காதை, அடிகள் 102-105)
என்ற குறிப்பு இங்குக் கவனிக்கத்தக்கது. சனி என்ற கோள் கரிய நிறமுடையது. அதனின்று புகை தோன்றினாலும், புகைக்கொடியாகத் தோன்றும் தூமகேது வானத்தில் தோற்றம் பெற்றாலும், வெள்ளி என்னும் கோள் தென்திசைக்கு நகர்ந்தாலும் குடகுமலையின் மீது வானம் இடித்து மழை வரும் என்றக் காலக்குறிப்பினை இங்கு இளங்கோவடிகள் காட்டியுள்ளார்.
ஊர்அழியும் காலம்:
‘‘ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து
அழல்சேர்குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத் தொள்ளெரி உண்ண
உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும்
உரையும் உண்டே”
(சிலப்பதிகாரம், கட்டுரைக்காதை, அடி 131-136)
என்ற குறிப்பின்படி மதுரை அழியும் காலச் சூழல் விளக்கப்படுகிறது. கிருட்டிண பட்சத்து ஆடிமாதத்தில் வரும் அட்டமி நாளில் காரத்திகையின் குறையாக விளங்கும் ஆறு விண்மீன்களின் குறை சேர்ந்த வௌ்ளிக்கிழமையன்று மதுரை அழியும் என்பது பழைய மொழியாகும். அது மெய்யானது என்று சிலப்பதிகாரம் அழிந்ததற்குக் காலக்குறிப்பினைத் தருகிறது.
இவ்வாறு இளங்கோவடிகள் வானியில், காலக்கணக்கீடு போன்ற துறைகளில் ஈடுபாடு உடையவர் என்பதும், அவ்வாறு காலக்கணக்கீடு செய்யும் அறிஞர்களுடன் தொடர்புடையவர் என்பதும் சேர அரசு காலக்கணிதர்களால் வழிநடத்தப்பெற்றுள்ளது என்பதும் இதன் வழி பெறப்படுகின்றன.
தமிழ் நிலத்திற்கு என்று அமைந்திருந்த தனித்த காலக்கணிதம் தற்போது பிற நிலம் சார்கலப்பிற்கு ஆளாகி தேய்ந்து இல்லாததாகிவிட்டது என்பதை உணருகையில் அவை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்ற ஊக்கம் பிறப்பதை உணரமுடிகின்றது. அவற்றை காலக்கணிதம் குறித்தான கட்டுரைகள் முன்னெடுத்துச்செல்கின்றன.
thanks to siragu.com