திங்கள், பிப்ரவரி 11, 2013

சிலப்பதிகாரத்தில் சமண சமயமும், சமண சமய பொது அறங்களும்


ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்ற பகுப்புமுறையில்  அமைந்துள்ள சமண சமயம் சார்ந்த காப்பியங்கள் சமணசமய ஆளுமையைத் தமிழிலக்கியப் பரப்பில் வெளிப்படுத்துவனவாகும். சிலப்பதிகாரம் சமண சமய காப்பியம் என்பது அதனுள் இடம்பெறும் சமண சமயச் செய்திகள், சமண சமயப் பாத்திரங்கள் ஆகியவற்றால் உணரத்தக்கதாக உள்ளது. கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு நடந்துசெல்லும் பெருவழிப் பயணத்திற்கு துணைநின்ற கவுந்தியடிகள் பாத்திரம் சமண சமயததைச் சார்ந்த துறவிப்பாத்திரம் ஆகும். இவர்களின் பயணத்தின்போது சந்திக்கின்ற அறவாணர் சமண சமயம் சார்ந்தவர். அவரின் நல்மொழிகளுடன் தங்கள் பயணத்தை அவர்கள் தொடருகின்றார்கள். இவைபோன்ற பற்பல செய்திகள் சமணசமயத்தின் ஆளுமைப்பரவல் சிலப்பதிகார காலத்தில் இருந்தமையைத் தெரிவிக்கின்றன. சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் சமண சமயத்தவர் என்பதை உணர்த்தும்  பல அகச்சான்றுகளும் இக்காப்பியத்துள் உண்டு. சமண சமயத்தின் சிறப்புக் கூறுகளும், பொதுமைக் கூறுகளும் சிலப்பதிகாரத்தில் உணர்த்தப் பெற்றுள்ளன. சிலப்பதிகாரம் உணர்த்தும் சமண சமயம் சார்ந்த செய்திகளையும் அச்சமயம் உணர்த்தும் பொது அறங்களையும் இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.
புகார் நகரமும் சமண சமயமும்
காவிரிப்பூம்பட்டிணம் என்றழைக்கப்பெறும் பூம்புகார் நகரத்தில் பல் தெய்வக் கோயில்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றோடு சமண சமய வழிபாட்டு இடங்களும் அமைந்திருந்தன.
அவலம் நீத்தறிந் தடங்கிய கொள்கை
மெய்வகை உணர்நத விழுமியோர் குழீஇய
ஐவகை நின்ற அருகத்தானத்துச்
சந்திஐந்தும் தம்முடன் கூடி
வந்து தலைமயங்கிய வான்பெரு மன்றத்துப்
பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்
நீரணி விழவினும் நெடுந்தேர் விழவினும்  
சாரணர் வரூஉம் தகுதியுண்டாமென
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகு ஒளிச் சிலாதலம் தொழுது வலம்கொண்டு (நாடுகாண் காதை 16-25)
என்ற பாடலடிகள் புகார் நகரத்தில் இருந்த சமண இருக்கைகளைப் பற்றி விவரிக்கின்றன. புகாரில் மூவகையான சமண இருப்பிடங்கள் இருந்துள்ளன. அருகத்தானம், பெருமன்றம், சிலாவட்டம் என்பன அவையாகும்.
அருகத்தானம்
புகார் நகரில் அருகத்தானம் என்ற இடம் சமண சமய வழிபாட்டிடமாக இருந்துள்ளது. இங்கு புலால் உண்ணாமலும், பொய்கூறாமை என்ற விரதத்தை மேற்கொண்டும், இவற்றோடு துன்பம் நீக்குவதற்கான வழிகளைக் கண்டறிந்து அவற்றில் வெற்றி பெற்றிருந்தாலும், அடங்கிய கொள்கை உடையவர்கள் இருக்கும் இடம் அருகத்தானம் ஆகும். இது ஸ்ரீகோயில் என்று அக்காலத்தில் வழங்கப்பெற்றது.
பெருமன்றம்
இத்தானத்தை அடுத்துப் பெருமன்றம் என்ற பகுதி அமைந்திருந்தது. ஐவகைப் பட்ட சந்திகள் ஒன்று கூடும் மன்றமாக அது விளங்கியது. ஐந்து சந்திகள் என்பது பஞ்ர பரமேட்டிகள் என்றழைக்கப் பெறும் ஐவகைச் சான்றோர்களைக் குறிக்கும்.  அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள் என்ற அவ்வைவரும் இம்மன்றத்தில் ஒன்று  கூடியிருந்தனர். சமண சமயக் கருத்துக்களைப் பரப்பியும் விவாதித்தும் அவர்கள் அம்மன்றத்தில் உறைந்தனர்.
சிலாவட்டம்
இவ்வருகத்தானத்தில் பல்வகை விழாக்கள் சீரோடும் சிறப்போடும் கொண்டாடப் பெற்றுள்ளன. பொன்போன்ற பூக்களைத் தரும் அசோகமரத்தின் நிழலில் இருந்த அருகப் பெருமானின் உருவத்திற்கு அவ்வருகப்பெருமானின் அபிடேகத்திருநாளில் ஒரு பெருவிழா நடந்துள்ளது. அவருக்குத் தேர்த்திருவிழா ஒன்றும் நடைபெற்றுள்ளது. இவ்விழாக்காலங்களில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சாரணர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்கு, அறக்கருத்துகளை உணர்த்துவதற்கு அமைக்கப் பெற்ற  மேடை போன்ற இடம் சிலாவட்டம் ஆகும். பத்துப்பாட்டில் சிலாவட்டம் என்றால் சந்தனம் அரைக்கும்இடம் என்று பொருள். சந்தனம் அரைக்கும் இடத்தில் இருந்த மணமும், குளிர்ச்சியும் நிரம்பிய இடமாக இவ்விடம் இருந்திருந்த காரணத்தால் இதனையும் சிலாவட்டம் என அழைத்துள்ளனர்.
கோயில், மன்றம், மேடை போன்ற பல்வேறு அமைப்புகளைப் புகார் நகர அருகன் கோயில் கொண்டிருந்தது என்பதை இளங்கோவடிகள் காட்டுகின்றார்.
கோவலனும் கண்ணகியும் சமண சமயத்தினர்
கோவலனும் கண்ணகியும் சமண சமயம் சார்ந்தவர்கள் என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.
கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் முதன் முறையாகக் காணுகின்றார். அவர்கள் திசையறியாது மதுரையை நோக்கிப் பயணம் மேற்கொண்ட சூழலில் இச்சந்திப்பு நடைபெறுகிறது.
‘‘உருவும் குலனும் உயர்பேர்ஒழுக்கமும்
                                 பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்
                                உடையீர் என்னோ உறுகணாளரின்
                                கடைகழிந்து இங்ஙனம் கருதியவாறென’ ( நாடுகாண்காதை, 46-49)
என்ற இப்பாடலடிகளில் பயின்று வந்துள்ள “பெருமகன் திருமொழி பிறழா நோன்பு” என்ற குறிப்பு சமண மதத்தில் இருந்துப் பிரியாத  கொள்கை உடையர்கள் கோவலனும் கண்ணகியும் என்பதை உணர்த்தி நிற்கின்து. கவுந்தியடிகள் கேட்ட இக்கேள்விக்கு ‘‘உரையாட்டில்லை உறுதவத்தீர்’என்று பதில் சொல்லாதுத் தவிர்க்கிறான் கோவலன்.
கவுந்தியடிகள்
கவுந்தியடிகள் மதுரை வருவதற்கான காரணத்தை அவரே குறிப்பிடுகின்றார்.
‘‘அறவுரை கேட்டாங் கறிவனை ஏத்தத்
                                தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரைக்கு
                                ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
                                போதுவல்யானும் போதுமின் ‘ (நாடுகாண் காதை, 57-60)
மதுரைக்குச் சென்று அங்குள்ள அருகதேவனை வணங்குவதைத் தன் விருப்பமாகக் கொண்டவர் கவுந்தியடிகள் ஆவார். இதன் காரணமாக மதுரைவரை சமண சமயத்தின் ஆளுமைப் பரவல் இருந்துள்ளது என்பதைச் சிலப்பதிகாரத்தின் வழி அறியமுடிகின்றது.
திருவரங்கத்தில் சமணம்
புகாரிலிருந்து நடந்து வந்த இம்மூவரும் அரங்கம் என்ற திருவரங்கத்திற்கு வந்து சேருகின்றனர். அங்கு ஒரு சாரணரைச் சந்திக்கின்றனர். திருவரங்கத்திலும் அந்தக் காலத்தில் சமண சமயம் பரவியிருந்ததை இதன்வழி அறியமுடிகின்றது. இச்சாரணர் ஆங்காங்குத் தோன்றி அறக்கருத்துகளை எடுத்துரைப்பவர் ஆவார். முன்னர் பட்டினப்பாக்கம் என்ற புகாரின் நகரப்பகுதியில் சமயவுரையாற்றிய இவர் தற்போது அரங்கத்தி;ல் இம்மூவரும் கேட்க அறவுரை பகர்கின்றார்.
அருகப் பெருமானின் இயல்புகள்
சமண சமயத் தீர்த்தங்கரர்களுள் ஒருவரான அருகப்பெருமானின் சிறப்பியல்புகளைச் சாரணர் இவர்களுக்கு எடுத்துரைக்கின்றார்.
‘‘அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்
                 செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
                தரும முதல்வன் தலைவன் தருமன்
                பொருளன் புனிதன் புராணன் புலவன்
                சினவரன் தேவன் சிவகதிநாயகன்
                பரமன் குணவதன் பரத்திலொளியோன்
                தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
                சித்தன் பெரியவன் செம்மல் திகழொளி
                இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்
                குறைவில் புகழோன் குணப் பெருங்கோமான்
                சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்            
                அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி
                பண்ணவன் எண்குணன் பரத்தில் பழம்பொருள்
                விண்ணவன் வேத முதல்வன் விளங்குஒளி
                ஓதிய வேதத் தொளியுறின் அல்லது
                போதார் பிறவிப் பொதியறையோரென’ (நாடுகாண்காதை 176- 191)
இப்பெருகிய அடிகள் அருகப் பெருமானை வாழ்த்துவனவாகும். அருகப் பெருமானின் வழியல்லது மற்றைவழி செல்லுவோர் பிறவிச் சிறையிலிருந்து விடைபெறமாட்டார்கள் என்று துணிகின்றது இப்பகுதி.
சமண சமயக் கருத்துகளை, சமண சமயச் சான்றோர்களை நினைவு கூர்ந்த இந்தப் பகுதியைக் கேட்டு ஆனந்தமும், நெகிழ்வும் அடைகிறார் கவுந்தியடிகள். இப்பகுதி சமண சமயக் கருத்துகளைத் தருவதற்கு ஏற்ற பகுதியாக இளங்கோவடிகளுக்கு அமைந்துவிட்டது.
வினையின் காரணமாக காப்பியத்தில் இனி சோகம் ததும்பிய காட்சிகள் வரப்போகின்றன என்பதை எடுத்துக்காட்டவும்,  அத்துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியைப் பாத்திரங்களும் படிப்போரும் உணரவேண்டும் என்பதற்காக இவ்விடத்தில் சாரணர்காட்சியையும், அவரின்அறவுரையையும் அமைத்துள்ளார் இளங்கோவடிகள்.
வினைக் கோட்பாடு
சமண சமயத்தின் உயிர்க்கொள்கை என்பது வினைக்கோட்பாடு ஆகும். இவ்வினைக்கோட்பாடே சிலப்பதிகாரத்தின் படைப்புக் கொள்கைகளுள் ஒன்றான ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுதலாக வெளிப்பட்டுள்ளது. சிலப்பத்திகாரத்தில் சாரணர் அறிவிக்கும் முதல் சமணசமயக் கொள்கை வினைக்கோட்பாட்டின் விளக்கமாக அமைகின்றது.
ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை
                இட்டவித்தின் எதிர்ந்து வந்தெய்தி
                ஒட்டுங்காலை ஒழிக்கவம் ஒண்ணா
                கடுங்கால் நெடுவெளி இடுசுடர் என்ன
                ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் ( நாடுகாண் காதை 171-175)
தீவினை என்பது ஒழிக என்று வேண்டினாலும் ஒழியாது வல்வினையை வந்து ஊட்டிவிடும் தன்மையது. விதை இட்டால் அது மரமாவதுபோல முன்செய்வினையானது அதற்கான பலனைத் தந்தே நிற்கும். வெட்ட வெளியில் ஏற்றி வைத்த விளக்கு கடுங்காற்று அடிக்கும்போது அணைந்துபோவதுபோல வினை வந்துத் தாக்கும்போது உயிர் உடம்புடன் நில்லாது நீங்கிவிடும். இக்கருத்துகளைச் சாரணர் கோவலன் உள்ளிட்ட மூவரையும் கண்டவுடன் சொன்னதற்குக் காரணம் கோவலன் வினைவலிமை காரணமாக இறக்கப் போகிறான், அவனையிழந்து இவர்கள் தவிக்கப் போகிறார்கள் என்பதுதான். இந்த முன்னுணர்தல் இளங்கோவடிகளின் படைப்பாற்றலில் காணப்படும் சிறப்புக்கூறு ஆகும்.
கோவலனின் இறப்பிற்குக் காரணம் அவன் செய்த முன்வினையேயாகும். கலிங்க நாட்டில் அரசனுக்கு உறுதுணை செய்யும் பரதன் என்பவனாகக் கோவலன் முற்பிறவியில் பிறந்திருந்தான். அவன் சங்கமன் என்னும் வணிகனை வஞ்சகத்தால் அரசனிடம் காட்டிக் கொடுத்துக் கொலைப்பட வைத்தான். அவனின் மனைவி நீலி இவ்வஞ்சனை செய்தவர்கள் ‘எம்முறு துயரம் செய்தோர் இயாவதும் தம்முறு துயரமிற்றாகுக வென்றே’  என்று உரைத்ததன் வாயிலாக இப்பிறவியில் கோவலன் வணிகனாகப் பிறந்து முன்வினைப்பயனை நுகர்ந்தான்  என்ற தொடர்வும் வினைப்பயன் என்ற சமண உயிர்க்கொள்கையின் விரிவாகும்.
காமநீக்கம்
சமணத்தின் மற்றொரு தலையாய கொள்கை காமநீக்கம் ஆகும். இல்லறத்தாரும் நிறைவில் துறவறம் சார்ந்து இறைநிலை பெறுவது முக்தி என்பது இச்சமயக் கருத்தாகும்.  இதனைக் கவுந்தியடிகள் கோவலனுக்கு விளக்குகின்றார்.
   ‘‘வல்வினை ஊட்டுமென்று
                அறத்துறை மாக்கள் திறத்;திற் சாற்றி
                நாக்கடிப்பாக வாய்ப்பறை அறையினும்
                யாப்பறை மாக்கள் இயல்பில் கொள்ளார்
                தீதுடை வௌ;வினை உறுத்தகாலைப்
                பேதமை கந்தாப் பெரும்பேது உறுவர்
                ஒய்யா வினைப்பயன் உண்ணுங்காலை
                கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்
                பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும்
                உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும்
                புரிகுழல் மாதர்ப்புணர்ந்தோர்க்கு அல்லது
                ஒரு தனிவாழ்க்கை உரவோர்க்கில்லை
                பெண்டிரும் உண்டியும் இன்பமென்று உலகில்
                கொண்டோர் உறூஉம் கொள்ளத்துன்பம்
                கண்டனராகிக் கடவுளர் வரைந்த
                காமம் சார்பாகக் காதலின் உழந்தாங்கு
                ஏமஞ்சாரா இடும்பை எய்தினர்
                இன்றே அல்லால் இறந்தோர் பலரால் ‘ (ஊர்காண் காதை,27- 44)
என்ற இந்தப் பகுதி காம நீக்கம் என்ற கொள்கையை வலியுறுத்துவதாக உள்ளது. தீய செயல்களைச் செய்வதில் இருந்து விலகுங்கள். அவ்வாறு தீச்செயல்களில் இருந்து விலகாமல் இருந்தால் அது அடுத்தடுத்த பிறவிகளில் துன்பத்தை அனுபவிக்கத் தரும் என்று நாவாகிய குறுந்தடியால் வாயாகிய பறையை அறைவதுபோல பலமுறை அறவோர் கூறினாலும் அறிவு அற்றவர்கள் அதனை ஏற்கமாட்டனர். தீவினை தொடரும்போது பெரிதும் வருந்துவர். அறிந்தவர்கள் இவ்வாறு வருந்தமாட்டார்கள். மகளிரைப் பிரிவதால், புணர்வதால் ஏற்படும் துன்பம் இல்லறத்தார்க்கு எப்போதும் உண்டு. தனித்த வாழ்க்கையை மேற்கொண்ட துறவிகளுக்கு அத்துன்பம் இல்லை. பெண்ணும் உணவும் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்வோர் பெருத்த துன்பமடைவர். காமம் சார்பாக காதலில் விழுந்தோர் கரைகாண இயலாது துன்பத்தை அடைகின்றனர்  என்று மேற்காட்டிய பாடலின் பொருள் அமைகின்றது. இப்பகுதி காம நீக்கம் என்ற சமணக் கொள்கையின் வெளிப்பாடாகும்.
இவ்வாறு சமண மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஆங்காங்கே வலியுறுத்தி வந்த இளங்கோவடிகள் பொது அறங்களைக் காப்பிய நிறைவில் உணர்த்துகின்றார். சமண சமயம் சார்ந்தவர்களுக்கும், சாராதவர்களுக்கும் பொதுவான அறங்கள் இவ்வகையில் இளங்கோவடிகளால்  எடுத்துரைக்கப்பெற்றுள்ளது.
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
                தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
                பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
                ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்
                தானம் செய்ம்மின் தவம் பல தாங்குமின்
                செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட்பிகழ்மின்
                பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
                அறவோர்அவைக்களம் அகலாது அணுகுமின்
                பிறவோர்அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
                பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்
                அறமனை காமின் அல்லவை கடிமின்
                கள்ளும் களவும் காமமும் பொய்யும்
                வெள்ளைக்கோட்டியும் விரகினில் ஒழிமின்
                இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
                உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
                செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
                மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென் ( வரந்தரு காதை 186- 202)
என்ற இவை சமண மதச் சார்புடைய ஆனால் பொதுவான அறங்களை எடுத்துரைக்கும் இளங்கோவடிகளின் கவிதையாகும். இதனுள் சொல்லப்பெற்றுள்ள அத்தனை அறங்களும் எளிய மக்களும் பின்பற்றவேண்டிய ஒழுக்க முறைகள் ஆகும். இவற்றைக் காப்பிய நிறைவில் அளிப்பதன் வாயிலாக சமணமதத்தைச் சார்ந்த காப்பியமாக சிலப்பதிகாரம் விளங்கினாலும் சமயப் பொதுமை, சமுதாயப் பொதுமையை வேண்டிப் படைக்கப் பெற்றுள்ளது என்பது உறுதி.

கருத்துகள் இல்லை: