திங்கள், மார்ச் 28, 2011

செம்மொழித் தமிழின் தனித்தன்மை

தமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்திய அளவில் ஆரிய மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பம் என்ற இரண்டு வகையில் முத்த திராவிட மொழியாக விளங்குவதாவும் சிறப்பு பெற்றிருப்பது தமிழாகும். இதன் எழுத்துக்கள், சொற்கள், பாடுபொருள்கள், செய்யுளின் யாப்பு வகைகள் முதலியன தனிச்சிறப்பு வாய்ந்தனவாகும். இத்தனிச்சிறப்புகளை எடுத்து மொழிவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலாவதாக தமிழ் ஆரிய மொழிக்குடும்பத்தில் ஒன்றான சமஸ்கிருதம் ஆகிய வடமொழியில் இருந்துத் தனித்தன்மை வாய்ந்தது என்பதை உறுதிப்படுத்தவேண்டியுள்ளது. இதனைத் திராவிட மொழிக் குடும்பம் சார்ந்ததாக அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர்.

இருப்பினும் வடமொழி தமிழுக்குச் செவிலித் தாய் போன்றது என்று மொழியும் அறிஞர்களும் உண்டு. இவர்களுள் குறிக்கத்தக்கவர் வையாபுரிப்பிள்ளை ஆவார். இவர் "தமிழ்மொழியை வடமொழி போஷித்து வந்திருக்கிறதென்பது முன்று வாயில்களால் அறியலாகும். அவை. 1. தமிழிலுள்ள சொற்கள், 2. தமிழ் நூல் விஷயங்கள், 3. தமிழிலக்கிய மரபு என்பனவாம் ( வையாபுரிப்பிள்ளை, வடமொழியும் தமிழும், ஆராய்ச்சிக் களஞ்சியம் தொகுதி. 7. ப. 194) இக்கருத்தின்படி தமிழுக்கும் வடமொழிக்கும் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது என்றாலும் அதனைக் காட்டிலும் தமிழ் தனித்தன்மையான பல நிலைகளைப் பெற்றுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

குறிப்பாக தமிழ் எழுத்து மரபிற்கும், சொல் மரபிற்கும், பொருள் மரபிற்கும், யாப்பு மரபிற்கும் தனிப்பட்ட பல கூறுகள் உண்டு. அவை வடமொழிக்கு அமையாத தனிப்பட்ட கூறுகள் ஆகும். இத்தனிப்பட்ட கூறுகளின் வழி ஆரிய குடும்பத்தைச் சாராத தனித்தன்மை வாய்ந்த திராவிட மொழி தமிழ் என்பது மெய்ப்படும். மேலும் உலக மொழிகளிலும் தமிழ் தனித்தன்மை வாய்ந்தது என்பதும் இதன் வழியாக பெறப்படும்.

வடமொழியையும் தமிழையும் ஒன்றாக வைத்துப் பார்த்த நன்னூல் என்ற இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் பின்வரும் நூற்பாவில் தமிழுக்கு உரிய சிறப்பு எழுத்துக்கள் எவை எனக் காட்டுகிறார். அதனோடு வடமொழிக்கும் தமிழுக்கும் உள்ள பொது எழுத்துக்கள் எவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

றனழஎ ஒவ்வும் உயிர்மெய் உயிரளபு

அல்லாச் சார்பும் தமிழ், பிற பொதுவே. (நன்னூல். 150)

இந்நூற்பாவின்படி தமிழ் மொழிக்கு உரிய சிறப்பு எழுத்துக்கள் " ற, ன, ழ, எ, ஒ '' என்ற ஐந்து எழுத்துக்கள் தமிழின் சிறப்பு எழுத்துக்கள் ஆகும். இவற்றோடு பத்து சார்பெழுத்துக்களில் உயிர்மெய், உயிர் அளபெடை தவிர்ந்த மற்ற எட்டு எழுத்துக்களும் தமிழ் மொழியின் சிறப்பு எழுத்துக்களின் தொகையில் அடங்கும். ஆக எட்டும் ஐந்தும் இணைய பதிமுன்று எழுத்துக்கள் தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்துக்கள் ஆகும் என்கிறார் பவணந்தி முனிவர். எஞ்சிய எழுத்துக்கள் தமிழுக்கும் வடமொழிக்கும் உரிய பொது எழுத்துக்கள் ஆகும். இவற்றின் எண்ணிக்கை இருபத்தேழு என்பது அவரின் கணக்கீடு ஆகும்.

நன்னூல் ஆசிரியரின் கருத்தின்படி உயிர் 12, மெய் 18, சார்பு எழுத்துக்கள் 10 ஆக நாற்பதாக அமைந்து தமிழ் எழுத்துக்களில் மேற்காட்டிய பதிமுன்று எழுத்துக்கள் தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்துக்கள் என்பது உணரத்தக்கதாகும்.

தனித்த இந்தச் சிறப்பு எழுத்துக்கள் உலக மொழிகளை ஒப்பு நோக்கும் போதும் தமிழுக்கே உரிய சிறப்பான எழுத்துக்கள் என்றே கருதத்தக்கனவாகும்.

தமிழின் பாடுபொருள் மரபிற்கும் பல தனித்த கூறுகள் உண்டு. தமிழில் அகம் பாடுதல், புறம் பாடுதல் என்ற இரு மரபுகள் உண்டு. இவற்றுள் அகத்திணை மரபு என்பது தமிழின் தனித்த மரபு ஆகும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பாடுபொருள்களைச் சுட்டும் மரபு வடமொழியில் உள்ளது. இதனைச் `சதுர்வர்க்கம் ' என வடமொழியார் குறிப்பர். இருப்பினும் இன்பத்துள் ஒன்றாக தமிழில் அமைக்கப் பெற்றுள்ள அகமரபு என்பது தமிழரின் தனித்த மரபாகும்.

இது குறித்து வ.சுப. மாணிக்கனார் பின்வருமாறு கருத்துரைக்கிறார். " சங்கப் பெருஞ்சான்றோர் கபிலர், ஆரியவரசன் பிரகதத்தனுக்குத் தமிழின் மேன்மையை அறிவுறுத்த விரும்பினார். விரும்பியவர் அவனுக்கெனத் தாமே குறிஞ்சிப் பாட்டு ஒன்று இயற்றினார். இஃது ஒரு அகத்திணைப்பா. கபிலர் புறம் பாடாது அகம் பாடிய நோக்கம் என்ன? தமிழினத்தின் அறிவுச் சின்னம் அகத்திணைப் படைப்பு. தமிழ் மொழியின் தனி வீற்றினை அயல் மொழியான் உணரவேண்டுமேல் அவனுக்கு முதலில் கற்பிக்க வேண்டும் பொருள் அகப்பாட்டே என்று அவர் உள்ளியிருப்பார்'' (வ.சுப. மாணிக்கம், தமிழ்க்காதல், ப. 2) என்ற இக்கருத்தின்படி தமிழுக்கு உரிய தனித்த நிலையாக அகம் பாடுதல் என்பது அமைந்துள்ளது என்பது பெறத்தக்கதாகும்.

மேலும் அகத்திணை மரபினை உலக இலக்கிய மரபுகளுள் புதுமை வாய்ந்தது என்றும் அவர் கருதுகிறார். "தமிழ் என்னும் சொல் அகத்திணைக்கு மறுபெயராய் நிற்றல் காண்க. ஒரு மொழியின் பெயர் அம்மொழி பெற்றிருக்கும் இலக்கியப் பல்வகையுள் ஒருவகை இலக்கியத்திற்கு மட்டும் பெயராய்ச் சிறப்பித்து ஆட்சி செய்யப்படுமானால் அவ்விலக்கிய வகை அம்மொழியில் அல்லது பிற எம்மொழியிலும் காண்பதற்கு இல்லை என்பதுதானே கருத்துரை. இதனால் உலக மொழிகளுள் தமிழ் மொழியின் தனிச்சிறப்பும், தமிழிலக்கிய வளத்துள் அகத்திணையின் முதற்சிறப்பும் விளங்கித் தோன்றும்'' (மேலது. ப. 23) என்ற இக்கருத்து அகப் பொருள் பற்றிப் பாடும் மரபு உலக மொழிகளுக்கு இடையில் தமிழுக்கான தனித் தன்மை வாய்ந்த மரபு என்பது தெரியவருகிறது.

அகம் பாடுதல், புறம் பாடுதல் என்பனவற்றை திணைப்பகுப்பில் அமைத்திருக்கும் தமிழர் படைப்புத் தன்மை என்பது உலகத்திற்கு புதியது என்று மேலை நாட்டாரும் கருதுகின்றனர்.

"தமிழ்க் கவிதை இயல் வடமொழிக் கவிதை இயலினின்றும் முற்றிலும் மாறுபட்டது. வியப்புக்குரியது. அதனை அறியத் தற்செயலாக வாய்ப்பு கிடைக்கும் மேலை நாட்டினர்க்கு அது இன்ப அதிர்ச்சி ஊட்டும் புதையலாகும். அதில் கவிதை அகமென்றும் புறமென்றும் பகுக்கப் பெற்றுள்ளது. அங்கு ஒரு குறியீட்டுத் திறவுகோலும் மிக மிக மேம்பாடுடைய நிலப்பாகுபாட்டைப் பயன்படுத்தும் உத்தியும் உள்ளன. மேற்கத்திய நாடுகளில் வாழும் போலிச் சேதானைகள் எல்லாவற்றைக் காட்டிலும் அக்கவிதையியல் இன்றைய நடைமுறைக்கு ஏற்றது. செவ்வியல் சார்ந்த தமிழ்க் கவிதையியல் மேலக் கவிஞர்கள் தரும் வறண்ட வாழ்க்கைத் தத்துவத்திற்கு மருந்தாகி உள்மன இன்பங்களை அதிகரிக்க வல்லது. தமிழில் உள்ள அகத்திணைக் கவிதைகள் சிறுதவறும் இல்லாத பெரிதும் பொருத்தமான உளவியல் அடிப்படை கொண்ட ஓர் அமைப்பிற்குள் இயங்குகின்றன. (மேற்கோள் மார்ட்டின் செய்மர் ஸ்மித், மருதநாயகம், உலக அறிஞர்கள் பார்வையில் செம்மொழித்தமிழ், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர், ப. 57) என்ற இந்தக் கருத்து தமிழரின் அகம் பாடும் மரபை உலக இலக்கியங்களில் தனித்தன்மையாகக் காண்கிறது.

எனவே தமிழ் எழுத்தானும், பாடுபொருளானும் தனித்தன்மை வாய்ந்தது என்பது கருதத்தக்கது. ஆரிய மொழிக்குடும்பத்தில் இருந்து இதன் தனித்தன்மையை மெய்ப்பிக்க இந்த இரு கருத்துக்கள் அசைக்க முடியாதனவாகும்.

மற்ற உலக மொழிகளில் இருந்தும் திராவிடக் குடும்பம் சார்ந்த மொழிகள் தனித்த பண்புகளைக் கொண்டு விளங்குகின்றன என்பதைக் கமில் சுவலபில் என்ற அறிஞர் எடுத்துரைத்துள்ளார். அவரின் சில கருத்துக்கள் பின்வருமாறு.

திராவிட மொழி அமைப்பு பற்றி அவர் அறிவித்துள்ள அடிப்படைத் தகவல்கள் இதனை உறுதி செய்வதாக உள்ளன..

`பெயர் சொற்கள்: திராவிட மொழிகளின் பெயர்கள் பெரிதும் வரையறுக்கப்பட்ட முடிவுகளைக் கொண்டிருக்கும். குறிப்பாக பெயர்கள் பால் முடிவுகளை அறிவிக்கும்படியானவையாக இருக்கும். அதனோடு பல்வகை பொருள்முடிவுகளைப் பெறத்தக்க வகையிலான இலக்கணக் கூறுகளை அது நடுவணதாகக் கொண்டிருக்கும் '(.(Kamil v. Zvelebil, Dravidian linguistics – An Introduction,p.19 ) என்று திராவிட மொழிகளின் பெயர்கள் பற்றிய குறிப்புரை தமிழுக்கு மிகவும் பொருந்துவதாகும்.

`வினைச் சொற்கள் : திராவிட மொழிகளின் வினைச் சொற்கள் பற்றிய ஆராய்ந்த டேவிட் டபிள்யு மெகால்பின் என்ற அறிஞர் " வினைச் சொல் என்பது அனைத்துத் திராவிட மொழிகளிலும் அதி முக்கியத்தன்மை கொண்டதாகும். இலக்கண அமைப்பிலும், தொடரியல் அமைப்பிலும் அதற்குக் குறிக்கத்தக்க இடம் உண்டு '' (மேற்கோள், Kamil v. Zvelebil, Dravidian linguistics – An Introduction,p.28) என்று அறிவித்துள்ள கருத்துரைத் தமிழுக்கு மிகப் பொருந்துவதாகும்.

இவை போன்ற பல வெளிநாட்டு அறிஞர்களின் மொழி வரையறைகள் தமிழ் மொழியில் உள்ள சொற்களின் தனித்தன்மையை உலகிற்கு உணர்த்துவனவாகும்.

யாப்பு நிலையிலும் தமிழ் யாப்பு முறை தனித்தன்மை வாய்ந்தது. இதனை மெய்ப்பிக்க வையாபுரிப்பிள்ளையின் பின்வரும் கருத்து உதவும்.

" தெலுங்கு முதலிய பிறமொழிக்குரிய ஆதியிலக்கியங்கள் வடமொழியிலக்கணங்களைப் பின்பற்றிய செய்யுட்களால் இயன்றுள்ளன. ஆனால் தமிழ் மொழியிலுள்ள ஆதியிலக்கியங்களாகிய எட்டுத்தொகை நூல்களோவெனின், தமிழிற்கே சிறந்துரியவாய் வடமொழியிலக்கண இலக்கியங்களிற் காணப்பெறாதவாயுள்ள இலக்கணமமைந்த செய்யுள் வகைகளால் இயன்றுள்ளன. அகவற்பா, கலிப்பா, வெண்பா முதலியன தமிழிற்கே தனித்துரிய செய்யுள் வகைகளாம். இவைகள் தமிழ் மக்களது கருத்து நிகழ்ச்சிக்கும், தொன்று தொட்டு வந்த வழக்கு நிரம்பிய தொடரமைதிக்கும், தமிழ் மக்களது செவியுணர்விற்கொத்த இசை இனிமைக்கும் பொருந்துமாறு அமைந்தன. தமிழிற்கே தனியுரிமையென முத்திரையிடப் பெற்று வெளிப்போந்து வீறுற்று உலவின'' ( வையாபுரிப்பிள்ளை, மேலது, ப. 205) என்ற இவ்வாய்வாளரின் கருத்து தமிழுக்கு அமைந்துள்ள தனித்த யாப்பமைதியைப் பற்றியதாகும்.

இவ்வகையில் தமிழ் மொழியின் தனித்த பண்புகள் இவை என உணர்ந்து கொள்ளமுடிகின்றது. தமிழ் மொழியின் இலக்கண இலக்கியச் சிறப்பினை எடுத்துரைக்கும் பின் வரும் அறிஞர்களின் கருத்துக்களும் தமிழின் தனித்தன்மைக்கு அரண் சேர்ப்பனவாகும்.

தமிழ் இலக்கணத்தின் தனித்தன்மையைப் பொற்கோ பின்வருமாறு குறிக்கின்றார்." உலகிலுள்ள மற்ற மொழியினரும் மற்ற பண்பாட்டினரும் இலக்கணம் என்றால் எழுத்திலக்கணம், சொல்லிணக்கணம், தொடரிலக்கணம் ஆகிய இவற்றைப் பற்றி மட்டுமே கருதுகின்றனர். ஆனால் தமிழ்மரபு இலக்கண எல்லையை இதற்கு மேலும் விரிவு செய்திருக்கிறது.எழுத்து, சொல், தொடர் ஆகியவற்றோடு மொழியில் உள்ள இலக்கியங்களைப் பற்றிய ஆய்வையும் தமிழ்மரபு இலக்கணத்திலேயே அடக்கிக் கொண்டிருக்கிறது. ( பொற்கோ, தமிழிலக்கணக் கோட்பாடுகள், ப. 2)

இவ்வகையில் தமிழ் என்னும் மொழிக்கும் , அதனால் மொழியப்பெற்ற இலக்கண இலக்கியங்களுக்கும் தனித்த பல மரபுகள் உள்ளன என்பது தெளிவாகின்றது. இத்தனித்தன்மைகளும் தமிழ் மரபு கட்டிக் காத்துவருகின்றது. இதற்குத் தமிழ் மக்களும், படைப்பாளர்களும் காரணம் என்பதும் கருதத்தக்கது.

பயன்கொண்ட நூல்கள்.

1. இளவரசு. சோம., நன்னூல் எழுத்ததிகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004

2. பொற்கோ, தமிழிலக்கணக் கோட்பாடுகள், தமிழ் நூலகம், சென்னை, 1989

3. மலர்க்குழு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர், தமிழ்நாடு அரசு, 20104.

4. மாணிக்கம். வ.சுப., தமிழ்க்காதல், சாரதா பதிப்பகம், சென்னை, 2007

5. வையாபுரிப்பிள்ளை, எஸ்., ஆராய்ச்சி தொகுதி, தொகுதி .ஏழு, சென்னை 1998.

6. kamil V. Zvelebil, Dravidian linguistics An introduction, PILC.pondicherry 1997


1 கருத்து:

pavalarponkaruppiah சொன்னது…

மானிடள் வலைப்பூவில் மார்ச்சு28 ஆம்நாள் இடுகையான செம்மொழித் தமிழின் தனித்தன்மை கட்டுரை கண்ணுற்றேன். தமிழின் தனித்தன்மைகளாக, அகம்பாடுதல், புறம்பாடுதல், கவிதைஇன்பம், வரையறுக்கப்பட்ட முடிவுகளுடனான பெயர்,வினைச் சொற்களமைவு, தமிழுக்கே சிறப்பாயுள்ள யாப்பு வளம் இவற்றை தமிழறிஞர்கள் வ.சு.ப.மாணிக்கம், கமில் சுவலபில், வையாபுரிப்பிள்ளை, முனைவர் பொற்கோ ஆகியோரின் சான்றுக்கூறுகளோடு பொதித்து,தமிழ்மொழிக்கும், மொழியப்பெற்ற இலக்கண இலக்கியங்களுக்கும் தனித்த பல மரபுகள் உள்ளன எனத் தெளிவுறப் பதிவு செய்துள்ளமை பாராட்டிற்குரியது. வளர்க முனைவர் மு.ப.அவர்களின் இத்தகு ஆய்வுக் கட்டுரைகள். வுhழ்த்துகளுடன் பாவலர் பொன்.க புதுக்கோட்டை.