சனி, ஏப்ரல் 23, 2011

இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி

திருக்குறளுக்குப் பல பதிப்புகள் உண்டு. அதனைப் போற்றிப் பாடும் நூல்களும் பல உண்டு. அதற்குக் உரை வழங்கிய உரையாசிரியர்களும் பலர் உண்டு. இதன் காரணமாக திருக்குறள் காலந்தோறும் தமிழ் மக்களைச் சென்றடைந்துகொண்டே இருந்துள்ளது. இவை தவிர, திருக்குறளை முன்வைத்துப் பல புதிய படைப்பு முயற்சிகளும் அவ்வப்போது நடந்து வந்துள்ளன. இவையும் திருக்குறளுக்கு பெருமை சேர்ப்பனவே ஆகும்.

திருக்குறளில் உள்ள அதிகாரங்களில் இருந்து அதிகாரம் ஒன்றிற்கு ஒரு நல்ல குறள் என்ற நிலையில் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதனை விளக்கும் கதையையும் அதனோடு இயைத்து நயம்பட ஒரு நூல் செய்யப் பெற்றுள்ளது. இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி என்பது அந்த நூலின் பெயராகும். 133 அதிகாரங்களில் இருந்து 133 குறட்பாக்களை மட்டும் தேர்ந்துகொண்டு ஒவ்வொரு குறளுக்கும் ஏற்ப ஒரு நீதிக் கதையை முன்னால் உரைத்து அதற்குப் பின்னால் அந்தத் திருக்குறளையும் தரும் முறையில் எழுதப் பெற்றது இந்நூல் ஆகும்.

வெண்பாவின் இலக்கணத்திற்குப் பொருந்தி வருவதுபோல பின்னிரண்டு அடிகளில் குறளை வைத்து முன்னிரண்டு அடிகளில் கதை சொல்லும் நேரிய போக்கை இந்நூல் பெற்றுள்ளது. அதிலும் இரங்கேசா என்ற சொல் இரண்டாம் அடியில் மூன்றாம் சொல்லாக இடம் பெறும்படி இந்நூல் பாடப் பெற்றுள்ளது. அரங்கத்தில் இருக்கும் அரங்கேசனை விளத்துப் பாடுவதாக இந்நூல் உள்ளது. எனவே இது இரங்கேச வெண்பா என்று அழைக்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக முதல் குறளான அகர முதல எழுத்தெல்லாம் என்பதில் தொடங்கி, கூடி முயங்கப் பெறின் என்ற நிறைவுக் குறளோடு முடிவதாக இந்நூல் பாடப் பெற்றுள்ளது. இந்நூலைப் பாடிய ஆசிரியருக்குத் திருக்குறளின் மேல் ஆறாத ஆர்வம் இருந்துள்ளது என்பதையே இது காட்டுகின்றது.

tiruvalluvarஇந்நூலை எழுதியவர், பிறசை சாந்தக் கவிராயர் என்று அறியப் பெறுகிறார். இந்நூலிற்கு உரை எழுதியவர் கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் புலவர் என்பவர் ஆவார். பிறசை என்ற ஊர் பிறையாறு என்பதாகக் கொள்ளலாம். அதாவது தற்போது உள்ள பொறையாறு என்பதாகும். இந்நூலிற்கு உரை எழுதப் பெற்ற காலம் 1907ஆம் ஆண்டாகும். எனவே அதற்கு முன்னரே இந்த நூல் படைக்கப் பெற்றிருக்க வேண்டும்.

இந்நூலில் சேர மன்னன், சோழ மன்னன், பொற்கைப் பாண்டியன் போன்றோரின் வாழ்வு நிகழ்வுகள் எடுத்துரைக்கப் பெறுகின்றன. இதன் காரணமாகத் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வாழ்ந்த காலத்தின் நிறைவில் இந்நூல் செய்யப் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

ஒரு திருக்குறளுக்குத் திருக்குறளை மையமாக வைத்தே இந்நூல் கதை சொல்லியுள்ளது. அவையஞ்சாமை பற்றி, இவ்வாசிரியர் பாடல் புனைய வந்தபோது திருக்குறளையே அதற்கு உரிய கதை நிகழ்வாக இவ்வாசிரியர் படைத்துக் காட்டுகிறார்.

ஆன்றசங்கர் போற்றவொன்றை ஐயிரண்டா மாநிலத்தார்க்கு
ஈன்றவரின் சொன்னார் இரங்கேசா தோன்றவே
கற்றாருள் கற்றார் எனப்படுபவர் கற்றார்முற்
கற்ற செலச்சொல்லு வார் (73)

என்ற பாடலில் திருக்குறள் எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.

திருவள்ளுவர், சங்க காலத்தவர் போற்ற ஒரு பொருளை வலியுறுத்திப் பத்துப் பத்துப் பாடல்கள் இயற்றியுள்ளார். இவை தாய்போல வழிகாட்டுவன. இரங்கேசா… கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன் கற்ற செலச் சொல்லுவார் என்று வள்ளுவர் காட்டிய குறளுக்கு அவரே இலக்கணமாகி நிற்கின்றார் என்பது இந்நூலாசிரியர் கருத்தாகும்.

இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்தும், புராணங்களில் இருந்தும் பலவகைக் கதை நிகழ்வுகளைக் கொண்டு இந்நூல் செய்யப்பெற்றுள்ளது. இதன் காரணமாக திருக்குறள் என்ற வாழ்விலக்கணத்திற்கு உரிய இலக்கியத்தையும் இவ்வாசிரியர் படைத்து அளித்துள்ளார் என்பது பெருமைக்கு உரியதாகும்.

கண்கொண்டான் பொன்னிக் கரைகட்ட வாரானை
எண்கொண்ட சோழன் இரங்கேசா மண் கொண்ட
வேலன்று வென்றி தருவது மன்னவர்
கோலதூஉங் கோடா தெனின் (55)

என்ற இந்தப் பாடலில் சோழ மன்னனைப் பற்றியக் குறிப்பு ஒன்று கிடைக்கின்றது. காவிரிக் கரையை வலுவூட்ட வராத பிரதா பருத்திரன் என்னும் அரசனைக் சோழ மன்னன் தண்டிக்க முற்படுகிறான். அவனின் படத்தைக் கொண்டுவரக் கட்டளையிடுகிறான். அந்தப் படத்தைப் பார்த்த சோழன் அதிர்ந்து போனான். காரணம் படத்தில் இருந்த பிரதா பருத்திரன் உருவத்திற்கு முன்று கண்கள் இருந்தன. இதன் காரணமாகவே அவன் ஆணவம் கொண்டு அலைகிறான் என்பதை அறிந்த மன்னன், படத்தில் இருந்த அவன் உருவத்தின் முன்றாம் கண்ணினைக் குத்தினான். மன்னன் ஆட்சி செங்கோல் ஆட்சி என்பதால் உண்மை நிலையிலும் அவனுக்கு ஒரு கண் அழிந்து போய்விட்டது. எனவே மன்னவன் வேல் பயிற்சி மட்டும் வெற்றியைத் தந்துவிடாது. மன்னவர் கோல் கோடாது இருக்க வேண்டும் என்பதே இப்பாடல் தரும் நீதிக் கருத்தாகும்.

இவ்வாறு படிக்கப் படிக்க இன்பம் தருவதாக, எடுத்துக் காட்டுக் கதைகள் அதிகம் இருப்பதாக இந்நூல் விளங்குகின்றது.

திருக்குறளின் பெருமை காக்கப் படைப்பாளர் பற்பல படைப்பு முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பதற்கு இந்நூல் தக்க சான்றாகும். மொத்தத்தில் 133 திருக்குறள் கதைகள், தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு மாலை போல கிடைத்துள்ளன என்பதில் மகிழ்ச்சியே.

=======================================

கருத்துரையிடுக