சனி, ஜூலை 24, 2021

கம்பரின் புவியியல் சார் சிந்தனைகள்

 

கம்பரின் புவியியல் சார் சிந்தனைகள்

முனைவர் மு.பழனியப்பன்


கவிச்சக்கரவர்த்தி கம்பர், கவிதைக்கலையோடு பிற கலைகளிலும் விற்பன்னராக விளங்கியுள்ளார். இவரின் அறிவாற்றல் பல்வேறு துறைகளிலும் சிறப்புடையதாக இருந்துள்ளது. வரலாற்று அறிவு, சுற்றுச் சூழல் அறிவு, வழக்கியல் அறிவு, புவியியல் அறிவு போன்ற பல துறைகளிலும் கம்பர் தன் அறிவுத்திறத்தால் சிறந்து விளங்கியுள்ளார். அவரின் கம்பராமாயணக் காப்பி்யம் பல்துறை சார்ந்த நுணுக்கங்களை உடையதாக விளங்குகிறது. கம்பர் பாடிய ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு படலத்திலும் புதிய புதிய செய்திகள் நிரம்பிக்கிடக்கின்றன. அவற்றைச் சுவைத்து உணருகையில் கம்பரின் புலமைத்திறம், பல்துறை அறிவுத் திறம் வெளிப்பட்டு நிற்கின்றது.

கம்பரின் புவியியல் அறிவுத் திறன் குறித்த செய்திகளை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது. இலங்கை என்பது கம்பராமாயணத்தின் மிக முக்கியமான களமாக விளங்குகின்றது. இலங்கையின் அமைவிடம் குறித்தும் இலங்கைக்கு அருகில் உள்ள தீவுகள் குறித்துமான பல செய்திகளைக் கம்பர் தன் காப்பியத்தில் உரைத்துள்ளார். அச்செய்திகள் அவரின் புவியியல் சார்ந்த அறிவுத் திறனுக்குச் சான்றாகின்றன.

புவியியல்

புவியியல் என்பது பூமி குறித்தான அறிவியல் ஆகும். இது பூமியின் தன்மை, அதன் வளம், அதன் அமைவிடம், அமைவிடத்தில் வாழும் உயிரினங்கள், கனிம வளம் போன்றன குறித்து ஆராயும் துறையாகும்.‘‘இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும்” என்கிறது விக்கிப் பீடியா. புவியியல் என்பது, புவியையும் அதிலுள்ள எல்லா மனித மற்றும் இயற்கைச் சிக்கல்களையும் புரிந்துகொள்ள முயல்கிறது. எங்கெங்கே பொருள்கள் இருக்கின்றன என்பதை மட்டுமன்றி, அவை எவ்வாறு மாறுகின்றன, எப்படித் தற்போதைய நிலையை அடைந்தன என்பவற்றை அறிவது தற்காலப் புவியியலின் நோக்கமாகும். மனிதனுக்கும், இயற்பு அறிவியலுக்கும் இடையே உள்ள தொடர்பாக அமைவதால், புவியியல் துறையானது, மானிடப் புவியியல், இயற்கைப் புவியியல் (physical geography) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வடிப்படை செய்திகளைக் கொண்டு புவியியல் துறை பற்றி அறிந்துகொள்ள முடிகின்றது.

இராமாயணம் இந்தியப் பெருநாட்டின் இதிகாசம். இது இந்தியா முழுமைக்கும் பயணிக்கும் இராமன் என்ற மனிதனின் வாழ்க்கை குறித்தானது. இவ்விராமன் பூமியின் ஓரிடத்தில் தங்காது பல இடங்களுக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். அவன் தான் செல்லும் இடங்களுக்கு ஏற்பத் தன்னை தகவமைத்துக் கொள்கிறான். கங்கைக்கு வரும்போது அவன் படகோட்டியின் துணையை நாடுகிறான்.கடலுக்கு வரும்போது பாலம் கட்டுகிறான். இத்தகைய நிகழ்வுகளில் அவன் மனிதர்களை மட்டுமல்ல மண்ணின் இயல்புகளையும், மண்ணின் தன்மைகளையும் அறிந்து செயல்பட வேண்டியவனாகிறான். அவனுக்கு எதிரான தலைவன் இராவணன். அவனும் தன்னால் முடிந்த அளவு தன் மண் குறித்த இயல்புகளை அறிந்துள்ளான். இத்தகைய கதை மாந்தர்களைப் படைத்த கம்பன் இவ்விரு மாந்தர்களின் புவி சார் இயல்புகளையும் அறிந்துக் காப்பியம் படைத்துள்ளான் என்பது இங்கு எண்ணத்தக்கது.

இலங்கைக்கு பயணிக்கும் வழி

சுக்ரீவன் தன் வானரப் படைகளுக்குச் சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க பல வழிகளைச் சுட்டிக்காட்டுகிறான். தென் திசை நோக்கிப் பயணிக்கும் அனுமன் உள்ளிட்ட வானரக் குழுவினருக்கு அவன் காட்டும் வழி கம்பரின் புவியியல் சார் அறிவியல் திறனுக்கு உரிய சான்றாக அமைகின்றது.

கிட்கிந்தையில் இருந்து தென்பகுதி நோக்கிச் செல்லும்போது, முதலில் விந்திய மலை வரும். அதனைக் கடந்து சென்றால் நருமதை ஆறு வரும். அதற்கடுத்து ஏமகூடம் என்னும் மலை வரும். அதனைக் கடந்து சென்றால், பெண்ணை ஆற்றங்கரை வரும்; அதனைத் தொடர்ந்து வரும் விதர்ப்ப நாட்டைக் கடந்தால், தண்ட காரணியம் என்ற பகுதி வரும். இதற்கடுத்து முண்டகத்துறை என்ற இடம் வரும்.இதனைக் கடந்து சென்றால், பாண்டுமலை எதிர்படும். இம்மலையை அடுத்து, கோதாவரி ஆறு எதிர்படும். இதற்கடுத்து சுவணம் என்ற ஆறு எதிர்படும். இவாற்றைத் தாண்டிய பிறகு கொங்கண நாட்டையும் குலிந்த நாட்டையும் காணலாம்; அதன்பின் அருந்ததி மலையை அடையலாம்; ஆற்றை எல்லாம் கடந்து சென்றால் தமிழ் நாட்டின் வட எல்லையாகிய திருவேங்கட மலையை அடையலாம். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வரும். தமிழ் நாட்டில் காவிரி யாற்றினனக் கடந்தால், மலை நாடும் பாண்டிய நாடும் வரும்; அகத்தியர் தமிழ் வளர்த்த பொதிகை மலை தோன்றும்.அவற்றை எல்லாம் கடந்தால் ‘மயேந்திரம்’ என்னும் மலை தென்கருங்கடலை அடுத்து வரும்; அங்கிருந்து இலங்கைக்குச் சென்று விடலாம்” என்று சுக்ரீவன் தென்திசை செல்லும் வானரங்களுக்கு இலங்கை செல்லும் வழியைக் காட்டுகிறான்.

      ‘‘வடசொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி

            நான் மறையும் மற்றை நூலும்

      இடைசொற்ற பொருட்டு எல்லாம் எல்லை ஆய்

            நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு

      புடை சுற்றும் துணை இன்றி புகழ் பொதிந்த

            மெய்யே போல் பூத்து நின்ற

      அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய

            வேங்கடத்தில் சென்று அடைதிர் மாதோ” ( நாடவிட்டபடலம் 26)

என்ற பகுதி வேங்கட மலையின் தன்மையைக் காட்டுவதாக உள்ளது. இதுபோன்று ஒவ்வொரு இடத்தையும் கம்பர் அதன் புவியியல் தன்மையுடன் எடுத்துக்காட்டுவது இங்கு எண்ணத்தக்கது.

      அஞ்சு வரும் வெஞ் சுரனும், ஆறும், அகன்

பெருஞ் சுனையும், அகில் ஓங்கு ஆரம்

மஞ்சு இவரும் நெடுங் கிரியும், வள நாடும்,

 பிற்படப் போய் வழிமேல் சென்றால்,

நஞ்சு இவரும் மிடற்று அரவுக்கு, அமிர்து நனி

கொடுத்து, ஆயைக் கலுழன் நல்கும்

எஞ்சு இல் மரகதப் பொருப்பை இறைஞ்சி,

 அதன் புறம் சார ஏகி மாதோ, (நாடவிட்ட படலம் 25)

என்ற பாடலில் நிலத்தின் இயல்பினை கம்பர் எடுத்துரைக்கிறார். சுரம், ஆறு, சுனை, நெடுங்கிரி, வளநாடு, பொருப்பு போன்ற நில இயல்புகள் இப்பாடலில் காட்டப்பெறுகின்றன.

இந்தப் பயண வரைபடம் கிட்கிந்தை முதல் இலங்கை வரையான இடங்களை அடுத்து அடுத்து உரைப்பதாக உள்ளது. இந்த விளக்க வழிகாட்டலை வைத்துக் கொண்டு எவரும் இலங்கை செல்ல இயலும் என்பது தெளிவு. தற்போதைய பயணம் போல பல இடங்களைத் தவிர்த்தும், சில இடங்களைக் கண்டும் தூங்கியும் தூங்காமலும் செல்லும் இயந்திர வழிப் பயணமாக அமையாது நடந்து செல்லும் பயணமாக இந்த இலங்கைப் பயணம் அமைந்ததால், ஒவ்வொரு இடத்தையும் போவோர் நின்று இருந்து கடந்து சென்றிருக்கவேண்டும். கம்பரும் இவ்வழி அயோத்திக்கும் இலங்கைக்கும் சென்று இருக்க வேண்டும். அத்தகைய அளவில் சரியான வழிகாட்டலை இப்பகதி வழங்குகிறது.

இதனைப் போன்று அனுமன் இந்த வழிகளில் செல்லும் போது பல நிலவமைப்புகளைக் காண்கிறான். கடலிலும், இலங்கையிலும் அவன் கண்ட காட்சிகள் இன்னும் கம்பரின் நிலவியல் சார்ந்த அறிவினுக்குச் சான்று பயக்கின்றன.

தொடர்ந்து இராவணன் போருக்குச் செல்லும் நிலையில் அவனுக்கு உதவி செய்ய மூல பல படை வருகிறது. அப்படை இலங்கையைச் சுற்றியுள்ள ஏழு தீவுகளில் இருந்து வந்துள்ளது. அவற்றைக் கம்பர் விவரிக்கையில் அவரின் இடம் சார்ந்த புவியியல் அறிவு சிறப்புடையதாக விளங்குவதைக் காண முடிகின்றது.

இலங்கையைச் சுற்றி ஏழு தீவுகள் அமைந்துள்ளன. இத்தீவுகள் குறித்துத் தமிழ் இலக்கியங்கள் பல பதிவு செய்துள்ளன. மணிமேகலை, கந்தபுராணம், பாரதம் போன்ற இலக்கியங்கள் தீவுகள் குறித்துப் பதிவு செய்துள்ளன.கம்பரும் ஏழு தீவுகள் குறித்துப் பதிவுசெய்துள்ளார்.

ஏழு தீவுகள்

இலங்கையைச் சுற்றியுள்ள ஏழு தீவுகளை சப்த தீவுகள் என்று அழைப்பது முறைமையாகும். இத்தீவுகள் குறித்துத் திவாகர நிகண்டு

‘‘நாவலந் தீவே இறலித் தீவே குசையின் தீவே
கிரவுஞ்சத் தீவே சான்மலித் தீவே தெங்கின் தீவே
புட்கரத் தீவே எனத்தீ வேழே
ஏழ்பெருந் தீவும் ஏழ்பொழி லெனப்படும்”

என்று தீவுகளின் வகைகளைக் குறிக்கின்றது. திவாகர நிகண்டின்படி நாவலந் தீவு, இறலித்தீவு, குசையின் தீவு, கிரவுஞ்சத்தீவு, சான்மலித்தீவு, தெங்கின் தீவு, புட்கரத்தீவு என்பன ஏழ் தீவுகளாகும். இத்தீவுகள் அனைத்தும் அங்குள்ள மரங்களின் பெயர்களைப் பெற்றனவாக விளங்குகின்றன.

கந்தபுராணம் இத்தீவுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. உவர் நீர்க் கடல் சூழ்ந்தது சம்புத்தீவு, பாற்கடலால் சூழப்பட்டது சாகத்தீவு, தயிர்க்கடலால் சூழப்பட்டது குசத்தீவு, நெய்க்கடல் சூழ்ந்தது கிரௌஞ்சத்தீவு, கருப்பஞ்சாற்றுக் கடல் சூழ்ந்தது சால்மலி, தேன் கடலால் சூழப்பட்டது கோமேதகம், நன்னீர்க் கடலால் சூழப்பட்டது புஷ்கரம் என்று இத்தீவுகள் குறித்து மொழிகிறது கந்தபுராணம்.

இத்தீவுகள் குறித்து படைக்காட்சிப் படலத்தில் எடுத்துரைக்கிறார் கம்பர். இராவணன் தன் தம்பி கும்பகர்ணன், மகன்கள் அதிகாயன், இந்திரசித்து போன்றவர்களை இழந்த நிலையில் போருக்குத் துணை செய்ய யாரும் இல்லாத நிலையில் கவலையுறுகிறான். அப்போது மூலபலம் என்ற நிலையில் உலகின் பல இடங்களில் இருந்தும் அரக்கர் சேனை ஒன்று திரட்டப்படுகிறது. அவ்வகையில் ஏழு தீவுகளில் இருந்து இராவணனுக்குப் பெரும் படைகள் வந்ததாகக் கம்பர் குறிப்பிடுகிறார். இத்தீவுகளில் இருந்துப் பெருமளவில் வீரர்கள் வந்து இலங்கையில் நிறைந்தனர் என்று தூதுவர்கள் இராவணனிடம் சொல்லுவதாக கதைப்பகுதி அமைக்கப்பெற்றுள்ளது. இவ்வேழு தீவுகளில் இருந்தும் இன்னும் பல மலைப்பகுதிகளில் இருந்தும், பாதாள உலகில் இருந்தும் இராவணனுக்குப் படைகள் வந்து சேர்ந்தன. இவையே மூல பலப் படை ஆகியது. இப்படையின் பெருக்கத்தால் இலங்கை நகரில் இடம் இல்லா நிலை ஏற்பட்டது என்று கம்பர் குறிக்கிறார்.

கம்பர் காட்டும் தீவுகள்

கம்பர் இலங்கையில் அமைந்த ஏழு தீவுகளில் ஆறினைக் குறிக்கிறார். சாகத்தீவு, குசைத் தீவு, இலவந்தீவு, அன்றில் தீவு, இறலித்தீவு, புட்கரத்தீவு என்பன அவ்வாறு தீவுகள் ஆகும். இத்தீவுகள் அனைத்தும் இலங்கையைச் சுற்றி அமைந்துள்ளன. அவை பற்றிய விளக்கங்களையும் கம்பர் சொல்லிய நிலைப்பாடும் அறியத்தக்கனவாகும்.

சாகத்தீவு – காரைநகர்

சாகத்தீவு என்பது தற்போது இலங்கையில் உள்ள காரைத்தீவு ஆகும். இலங்கையில் பல காரைத் தீவுகள் உள்ள நிலையில் இது காரை நகர் என்று அவற்றில் இருந்து வேறுபடுத்தப்படுகிறது. சாகத் தீவு என்பதில் உள்ள சாக என்ற சொல் சாகை என்ற மரத்தின் அடிப்படையில் தோன்றியதாகும். சாகை என்பது தேக்கு மரங்களைக்குறிக்கிறது. இதே சொல் வாகை மரங்களையும் குறிக்கிறது.இவ்விரண்டில், பெரும்பாலும் வாகை மரங்கள் சூழ்ந்த பகுதியே சாகத்தீவு என்று கொள்ளப்பட வேண்டும்.

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இந்த அழகான தீவு இன்று, பாடசாலை, சிவாலயம் போன்ற பல அமைப்புகளை உடையதாக விளங்குகின்றது. இலங்கைச் சிதம்பரம் என்று இன்றைக்குப் புகழும் அளவிற்குச் சிவசம்பந்தம் உடையதாக உள்ளது. இந்தத் தீவு யாழ்ப்பாணத்திற்கு மிக அருகில் உள்ளது. இத்தீவு குறித்துக் கம்பர்

      ‘‘சாகத் தீவினில் உறைபவர் தானவர் சமைத்த

      யாகத்தில் பிறந்து இயைந்தவர் தேவரையெல்லாம்

      மோகத்தில்பட முடித்தவர், மாயையின் முதல்வர்

      மேகத்தைத் தொடும் மெய்யினர், இவர் என விரித்தார் ( படைக்காட்சிப் படலம்10)

என்று சாகத் தீவு வீரர்களை அடையாளம் காட்டுகிறார். சாகத் தீவு சார்ந்த வீரர்கள், அரக்கர்கள் செய்த யாகத்தின் வழியாகத் தோன்றியவர்கள் என்றும் அவர்கள் தேவர்களை மோகத்தில் ஆழ்த்தும் வல்லமை பெற்றவர்கள் என்றும், மாயை வல்லவர்கள் என்றும் கம்பர் இவர்களின் வீரப்பெருமையைப் பேசுகின்றார்.

குசையின் தீவு

கம்பர் சுட்டும் அடுத்த தீவு குசைத் தீவு என்பதாகும்.குசை என்பதற்குத் தர்ப்பைப் புல் என்று பொருள். தர்ப்பைப் புல் அதிகம் உள்ள தீவு என்பதால் இத்தீவு குசைத் தீவு என அழைக்கப்பட்டது.

குசை என்பதற்கு தனம் என்று மற்றொரு பொருளும் உண்டு. தனம் (மார்பு) போன்றமைந்த தீவு என்பதால் இப்பெயரும் இதற்கு அமைந்திருக்கலாம். இத்தீவு தற்போது இலங்கையில் உள்ள வேலணைத் தீவு என்பதாகக் கொள்ளப்படுகிறது. இதனை லைடன் தீவு என்றும் மக்கள் அழைக்கின்றனர்.

கந்தபுராணக் கதைப்படி, கிரௌஞ்ச மலையைப் பிளக்க முற்படும் நிலையில், முருகப்பெருமான் வேல் அணைந்த தீவு என்பதால் இது வேலணைந்த தீவு எனப்பெயர் பெற்றிருக்க வேண்டும். இத்தீவு பத்து ஊர்களை உள்ளடக்கிய பெருந்தீவு ஆகும். இதுகுறித்துக் கம்பர்

‘‘குசையின் தீவினில் உறைபவர் கூற்றுக்கும் விதிக்கும்

வசையும் வன்மையும் வளர்ப்பவர். வான நாட்டு உறைவார்

இசையும் செல்வமும் இருக்கையும் இழந்தது இங்கு, இவரால்

விசையம்தாம் என நிற்பவர் இவர் – நெடுவிறலோய்” (படைக்காட்சிப் படலம்11)

என்னும் பாடலில் குசைத் தீவின் வீரர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார் கம்பர். இப்பாடலில் குசைத்தீவு வீரர்தம் வீரச்சிறப்பு இந்திரனையும் நடுங்க வைக்கும் அளவிற்குச் சிறப்புடையது என்கிறார்.

இலவத்தீவு

இலுப்பை மரங்கள் அடர்ந்த தீவு இலவந்தீவு என அழைக்கப்பட்டுள்ளது.இலங்கையில் அமைந்துள்ள இத்தீவு எழுவைத் தீவு என்றும், சான்மலித்தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இலங்கைக்கு வருபவர்கள் காணும் நிலையில் முதன் முதலாக எழும் தீவு இது என்பதால் எழுவைத்தீவு என இத்தீவு பெயர் பெற்றுள்ளது.ஒன்றரை மைல் நீளம் கொண்ட இத்தீவில் உள்ள முத்தன் காடு என்ற இடத்தில் உள்ள முருகன் ஆலயம் இலங்கையின் திருச்செந்தூர் என்று பெருமைபட உரைக்கப்படுகிறது. இத்தீவில் உள்ள வீரர்கள் பற்றிக் கம்பர்

      ‘‘இலவத்தீவினில் உறைபவர் இவர்கள் பண்டு இமையாப்

       புலவர்க்கு இந்திரன் பொன்னகர் அழிதரப் பொருதார்

      நிலவைச் செஞ்சடை வைத்தவன் வரம் தர நிமிர்ந்தார்.

      உலவைக் காட்டு உறுதீ என வெகுளி பெற்றுடையார்”( படைக்காட்சிப் படலம்12)

என்று இலவத்தீவு வீரர்கள் குறித்துப் பாடுகிறார்.உலர்ந்த மரங்கள் அடர்ந்து காட்டில் ஏற்பட்ட தீ போன்ற வீரத்தன்மை உடையவர்கள் இலவத்தீவு வீரர்கள் என்கிறார் கம்பர். மேலும் இவர்கள் சிவனிடம் வரம் பெற்றவர்கள் என்றும் இந்திரனை வென்றவர்கள் என்றும் கம்பர் குறிப்பிடுகிறார்.

அன்றில் தீவு

அன்றில் பறவைகள் அதிகம் வாழும் தீவு அன்றில் தீவு எனப்படுகிறது. இதனைக் கிரௌஞ்சத் தீவு என்றும் அழைப்பர். கந்தபுராணத்தில் முருகன், கிரௌஞ்ச மலையை இரு கூறு ஆக்கிய புராணக் கருத்து இத்தீவுக்கு உரியது என்பதால் இது கிரௌஞ்சத்தீவு எனப்படுகின்றது. தற்போது இத்தீவு புங்குடு தீவு என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் பூங்குடி என்ற கிராமத்தில் இருந்து வருகை தந்து குடியேறிய மக்கள் வாழ்ந்த பகுதி பூங்குடித் தீவு என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி புங்குடு தீவு ஆகியிருக்க வேண்டும். புங்க மரங்கள் அதிக அளவில் இருந்த தீவு புங்குடு தீவு ஆனதாகவும் கொள்ளமுடிகின்றது.

இத்தீவில் தற்போது பதினாறுக்கும் மேற்பட்ட சிவலாயங்கள் உள்ளன. இத்தீவில் உள்ள வாணர் பாலம் மிக முக்கியமான போக்குவரத்து சாலையாக விளங்குகிறது. இத்தீவு குறித்துக் கம்பர்,

      ‘‘அன்றில் தீவினில் உறைபவர் இவர் பண்டை அமரர்க்கு

      என்றைக்கும் இருந்து உறைவிடம் என்றிட மேருக்

      குன்றைக் கொண்டுபோய் குரை கடல் இட அறக் குலைத்தோர்

      சென்று இத்தன்மையைத் தவிரும் என்று இரந்திடத் தீர்ந்தோர் ”

 (படைக்காட்சிப் படலம்13)

என்று குறிக்கிறார். இத்தீவில் உள்ள வீரர்கள் மேருமலையை மறைத்த பெருமைக்கு உரியவர்கள். அதே நேரத்தில் அதனை மறைக்காது தர வேண்டும் என்று கேட்டபோது தந்த கருணை உடையவர்கள் என்று குறிப்பிடுகிறார் கம்பர்.

புக்கரப் பெருந்தீவு

இலங்கையில் இன்று உள்ள நெடுந்தீவு என்பது புக்கரப் பெருந்தீவு ஆகும். கம்பன் பெருந்தீவு எனச் சொல்ல இத்தீவு நெடுந்தீவு என்று இன்று அழைக்கப்படுவது மிகப்பொருத்தமுடையதாக உள்ளது. இதனைத் தாமரைத்தீவு என்றும் அழைப்பர். இது யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தொலைவில் இருப்பதாலும் நெடுந்தீவு எனப்பட்டுள்ளது.    கம்பர்

      ‘‘முக்கரக் கையர் மூவிலை வேலினர் முசுண்டி

      சக்கரத்தினர், சாபத்தார் இந்திரன் தலைவர்

      நக்கரக் கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர்

      புக்கரப் பெருந்தீவிடை உறைபவர் இவர்கள்” (படைக்காட்சிப் படலம்18)

என்று இத்தீவின் வீரர்கள் குறித்துப் பாடுகிறார். இத்தீவின் தலைவன் பெயர் வன்னி என்றும் கம்பராமாயணம் குறிப்பிடுகிறது.

இறலித் தீவு

இத்தி மரங்கள் நிறைந்திருக்கும் தீவு இறலித் தீவு என அழைக்கப்பெற்றுள்ளது. இலங்கையில் உள்ள தீவுகளில் இப்பெயருடன் தொடர்புடைய தீவு இல்லை எனினும், கோமேதக் தீவு என அழைக்கப்படும் அனலைத் தீவாக இது இருக்க வாய்ப்பு உள்ளது. இலங்கை தீவு வரிசைப்படி பார்க்கையில் இத்தீவு அனலைத் தீவாக இருக்க வாய்ப்புள்ளது. இத்தீவில் கற்கள் அணைகளாக விளங்குகின்றன. இக்கற்களின் இடையில் விளையக் கூடியவை இத்தி மரங்கள் ஆகும். இப்பொருத்தம் கருதியும் இத்தீவு இறலித் தீவு எனப்படுவதாகக் கொள்ளலாம்.

      இத்தீவு குறித்து,

      ‘‘மறலியை பண்டு தம் பெருந்தாய் சொல் வலியால்

      புறநிலை பெருஞ்சக்கரமால் வரைப் பொருப்பின்

      விறல் கெடச் சிறையிட்டு அயன் இரந்திட விட்டோர்

      இறலி அப்பெருந்தீவிடை உறைபவர் இவர்கள்” (படைக்காட்சிப் படலம் 18)

என்ற கம்பன் குறிக்கிறார். எமனைச் சிறையில் அடைத்த வீரமுடையவர்கள் இவர்கள் என்பது இவர்களின் வீரத்தைக் குறிக்கும் பகுதியாக உள்ளது.

சாகரத் தீவு

கம்பர் ஏழாவது தீவாக சாகரத்தில் அமைந்த தீவு ஒன்றில் மலை இருந்த நிலையையும் குறிப்பிடுகிறார். இத்தீவு சம்புத் தீவு எனப்படும் நாவலந்தீவாகக் கொள்ளத்தக்கது. பொதிய மலை சார்ந்தவர்கள் அங்கு இருக்க இயலாது, தென் திசைக்கு வந்து குடியேறிய தீவு ஒன்று உண்டு என்று கம்பர் குறிப்பது இங்குக் கவனிக்கத்தக்கது.

      ‘‘மலயம் என்பது பொதிய மாமலை. அதில் மறவோர்

      நிலயம் அன்னது சாகரத் தீவிடை நிற்கும்

      குலையும் இல் உலகு எனக் கொண்டு நான்முகன் கூறி

      உலைவிலீர் இதில் உறையும் என்று இரந்திட உறைந்தார்”

(படைக்காட்சிப் படலம்16)

என்ற பாடலில் நான்முகன் வழிகாட்டலின் படி பொதிய மாமலை உள்ளோர் இலங்கைக்கு அருகில் உள்ள சாகரத் தில் (கடலில்) உள்ள தீவில் குடியேறினர் என்று கம்பர் காட்டுவது இங்கு கவனிக்க வேண்டிய செய்தியாகும். பிற்காலத்தில் லெமுரியா கண்டம் தமிழர்தம் ஆதி நிலம் என்ற கொள்கை தோன்றிய நிலையில் பொதிய மலையில் உள்ள தமிழர்க்கும் இலங்கைக்கு அருகில் உள்ள தீவிற்கும் தொடர்பு படுத்தும் கம்பரின் சிந்தனை லெமுரியா கண்டக் கொள்கை சார்ந்தது என்று கொள்வதில் தவறில்லை.

இவ்வகையில் கம்பரின் காப்பியம் முழுமையும் நில இயல்புகள், நில அமைவிடங்கள் போன்றன பற்றிய பல செய்திகள் கொண்டுள்ளன என்பதை உணரமுடிகின்றது. இச்சிறு கட்டுரை அவ்வறிவின் ஒரு சிறு பகுதியை மட்டுமே எடுத்துரைக்கிறது. தொடர்ந்து இத்துறை சார்ந்த சிந்திக்கப் பல்வேறு இடங்கள் உண்டு.

கருத்துகள் இல்லை: