திங்கள், ஜூலை 10, 2017

அறமரபுசார் ஆய்வுநெறியாளர் மு. வரதராசனார்Siragu mu.varadharaasanaar1
இலக்கியத் திறனாய்வு என்பது தமிழ் இலக்கியப் பரப்பிற்குக் கிடைத்த புதிய துறையாகும். இத்துறை வளர்ந்து ஒரு நூற்றாண்டு காலப்பகுதியைத் தற்போது நெருங்கியிருக்கிறது. தமிழ் கற்றோரின், கற்போரின் இலக்கியப் பயிற்சியை, இலக்கிய ஆராய்ச்சியை நெறிப்படுத்தி வழங்கும் இத்துறை தமிழ்க்கல்வியோடு பிரிக்க முடியாத இடத்தை இன்றைக்குப் பெற்றுவிட்டது. உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் முதலானவற்றின் தமிழ் வளர்ப்புத் திறன் அவ்வவ் நிலையங்களில் உருவாக்கப்பெறும் ஆய்வேடுகளின் தரம், எண்ணிக்கை கொண்டே தற்போது மதிப்பிடப் பெற்று வருகின்றன.
இன்றைக்குத் தமிழ் இலக்கியங்களைத் திறனாய்வு செய்வதில் உலகு தழுவிய நிலையில் வரையறுக்கபட்ட நெறிகள், மொழிநடை முதலானவை நிலைபெறுத்தப்பட்டுவிட்டன. அயல்நாடுகளின் அரசியல், தத்துவஇயல், சமூகவியல், உயிரியல் சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களை மதிப்பிடும் உலகு தழுவிய கருத்து நிலைக்கு இன்றைய தமிழ் இலக்கியத் திறனாய்வு வளர்ந்திருக்கிறது. தமிழுக்கே உரிய மரபு சார்ந்த திறனாய்வு முறைகளும் புறம் தள்ளப்பட்டுவிடாமல் இன்றைய ஆய்வுலகில் எடுத்தாளப் பெற்றும் வருகின்றன.
தமிழ் இலக்கியங்களை ஆராய்கின்ற கல்வித்திட்டம் சார்ந்த திறனாய்வு முறை முதன் முதலாக சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தொன்றாம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பெற்றது. அக்காலத்தைய பி.ஓ.எல் (ஆனர்சு) படிப்பிற்கு உரிய ஒரு பாடமாக, சென்னைப் பல்கலைக்கழகத்தால் கொண்டு வரப்பெற்ற இலக்கியத் திறனாய்வு என்ற தாள் அறிமுகம் தமிழ் இலக்கியத் திறனாய்வுக் களத்தின் துவக்க முயற்சியாகும். இத்தாள் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் மட்டும் நடத்தப்பெறுவதாக அக்காலத்தில் வடிவமைக்கப் பெற்றிருந்தது.
தமிழின் கல்வி நெறித் திறனாய்வாளராக இனம் காணப்பெறும் திருமணம் செல்வ கேசவராய முதலியார் சென்னை பச்சையப்பன் கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்தவர் ஆவார். இவரின் திறனாய்வு அடிப்படையில் அமைந்த இரு குறிக்கத்தக்க கட்டுரைகள் ‘வசனம்’, ‘செய்யுள்’ என்பனவாகும். இதன் தொடர்வாக பச்சையப்பன் கல்லூரி தமிழ் இலக்கியத் திறனாய்விற்கு உரிய ஒரு கல்வி நிறுவனமாக விளங்கத் தொடங்கியது.
இதே நேரத்தில் இக்கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராசிரியராக மு.வரதராசனார் பணியாற்றி வருகிறார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தெட்டாம் ஆண்டு முதல் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்துநான்காம் ஆண்டுவரைப் பேராசிரியப் பணியாற்றிய இவர் தொடர்ந்து அடுத்த ஐந்தாண்டுகள் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றுகிறார். பச்சையப்பன் கல்லூரியில் அறிமுகப்படுத்தப் பெற்ற இலக்கியத் திறனாய்வு தாள் ஒரு சில ஆண்டுகளில், தமிழ் முதுகலைப் படிப்பிற்கும் உரியதாக அமைகின்றது. இந்நிலையில் மு.வரதராசனார் இலக்கியத் திறனாய்வுத் துறையின் அடிப்படைத் தரவுகளை, கொள்கை நூல்களை எழுது முனைகின்றார். இதன் காரணமாக அவர் ‘இலக்கியத்திறன்’(1945), ‘ இலக்கிய ஆராய்ச்சி (1953)’, “இலக்கிய மரபு’(1960) ஆகிய நூல்களை எழுதினார். இந்நூல்கள் தமிழ் இலக்கியத் திறனாய்வின் ஆரம்பகாலச் சூழலைக் கண்டறிய முக்கியமான நூல்களாக விளங்கிவருகின்றன.
மு. வரதராசனார் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டாம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர் என்ற சூழலையும் எண்ணி நோக்குகின்றபோது தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையின் துவக்கப் புள்ளியாக மு. வரதராசனார் விளங்கியிருப்பது தெரியவருகிறது.
தமிழ் இலக்கியத் திறனாய்வு அதன் செல்நெறியின் அடிப்படையில் இரண்டு வகையாகப் பகுப்பப் பெறுகிறது. ஒருவகை மு. வரதராசனார் கையாண்ட இலக்கியத் திறனாய்வு முறை. மற்றொன்று தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் கையாண்ட இலக்கியத் திறனாய்வு முறை. ““மொழியியல், சமூகவியல் முதலிய மானிடவியல் அடிப்படையில் இலக்கியத்தை விளக்க முயல்பவர்கள் தொ.பொ. மீ வழி வருபவர்கள் என்றும், திராவிட இயக்கச் சிந்தனை அடிப்படையில் எழுதுபவர்கள் மு.வ. வழி வருபவர்கள் என்று சுட்டுகிற மரபு இன்றும் தொடர்கிறது’’ என்று இவ்விருவகையின் தன்மைகளைப் பஞ்சாங்கம் சுட்டுகின்றார்.
மதுரைப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பணியினைத் தமக்கான தனித்தன்மையுடன் ஆற்றிய இருவரும் தமிழ் இலக்கியத் திறனாய்வுத்துறையின் இருவகைமையின் தோற்றுநர்களாக அமைந்திருந்தது கவனிக்கத்தக்கது. ஆயிரத்துத் தொள்ளயிரத்து அறுபத்தைந்தாம் ஆண்டு தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரும், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுத்தொன்றாம் ஆண்டு மு.வரதராசனாரும் மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அமைந்தனர். இரு நெறிப்பட்டவர்களின் நெறிமையில் தமிழ் இலக்கியத் திறனாய்வு இருவகை நெறிகளில் வளரத்தொடங்கியது.
இவ்வகையில் மு. வரதராசனார் தமிழ் இலக்கியத் திறனாய்விற்கான கொள்கை நூல்களை வகுத்தளித்து இன்றைக்கு இத்துறை புகழ்பூத்து விளங்க உதவி புரிந்துள்ளார் என்பது வெளிப்படுத்தப்படவேண்டிய செய்தியாகும். இந்நூல்களின் அடிப்படையில் தமிழ் இலக்கியத்திறனாய்வின் ஆரம்ப காலப் போக்குகளையும், மு. வரதராசனாரின் திறனாய்வுக் கொள்கை விளக்க நூல்பணிகளையும் மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
இலக்கியத் திறன்
இந்நூல் ஒரு சொற்பொழிவு நூலாகும். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி என்ற தலைப்பில் மு. வரதராசனார் ஆற்றிய சொற்பொழிவு செம்மையாக்கப் பெற்று இந்நூல் வெளியிடப் பெற்றுள்ளது. “1945 ஆம் ஆண்டு அக்டோபர் 18,22 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் (ஆனரரி ரீடர் என்ற முறையில்) சிறப்புச் சொற்பொழிவாகத் “தமிழ் இலக்கிய ஆராய்ச்சி என்னும் பொருள் பற்றிப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழ் எம்.ஏ வகுப்புக்கு அப்பொருள் பற்றி விரிவுரைகள் நிகழ்த்துவதற்கு அப்பேச்சுக் குறிப்புரைகளைத் திரும்ப நோக்கினேன். அவற்றை விரிவுபடுத்தி ஒரு நூலாக்க முயன்றேன்‘‘ என்று இந்நூல் எழுந்த வரலாற்றை இந்நூலின் முன்னுரையில் மு. வ பதிவு செய்கின்றார். இந்நூல் அறிவியலும்-கலையும், கலைகள், கலைஞர், இலக்கியம், உணர்ச்சி, கற்பனை, வடிவம், உணர்த்தல், நுகர்தல், ஆராய்ச்சி ஆகிய தலைப்புகளை உள்ளடக்கி வரையப் பெற்றுள்ளது.
இலக்கிய ஆராய்ச்சி
“இலக்கியத்திற்கு ஆராய்ச்சி இன்றியமையாதது. இலக்கியத் துறையிலும் உணரத்தக்க உண்மைகள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றைச் சுருங்கச் சொல்வதே இந்நூல். ‘கலைக்கதிரில்’ கட்டுரைகளாகத் தொடர்ந்து வெளிவந்தவைகளே இப்போது இந்நூல் வடிவு பெற்றன’’ என்று இந்நூல் எழுந்த வரலாற்றினைச் சுட்டுகிறார் மு. வரதராசனார். இந்நூல் இலக்கிய ஆராய்ச்சி எனப் பெயர் பெற்றிருந்தாலும் இந்நூலில் ஆராய்ச்சி தொடர்பான பல கட்டுரைகளும், பொதுநிலையில் அமைந்து சில கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. முழுக்க ஆராய்ச்சிப் பொருள் குறித்த தொடர் கட்டுரைகள் இதனுள் இல்லை என்பது உணரத்தக்கது.
இலக்கிய ஆராய்ச்சி, வரலாறும் காவியமும், அகலமும் ஆழமும், நல்ல நூல், சங்கப் பலகை, உள்ளம் பலவகை, இருண்ட சத்திரம், கலைஞன் தியாகம், கலையும் கண்ணீரும், முயலும் ஆமையும், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, மலரும் மாலையும், உயிரும் உடம்பும், பாட்டின் விடுதலை, பாட்டின் துறவு, எள்ளும் எண்ணெயும், காகிதப் பூந்தோட்டம், சடங்குச் செய்யுள், உள்ளத்தின் ஒளி, விட முடியாதது, அறிவியலும் இலக்கியமும், உயர்வும் தாழ்வும், கற்கும் முறை, பாடும் தகுதி, ஆராய்ச்சிப் படிகள் என்பன இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளின் தலைப்புகள் ஆகும். காகிதப் பூந்தோட்டம், சடங்குச் செய்யுள் போன்ற இலக்கிய மதிப்பீட்டுக் கட்டுரைகளாகக் கொள்ளத்தக்கனவன்றி ஆராய்ச்சிக் களம் சார்ந்த கட்டுரைகளாக அமையவில்லை.
இலக்கிய மரபு
தமிழ் இலக்கிய மரபுகளைக் குறிப்பாகத் திறனாய்வு மரபுகளை அளந்தறிவிப்பது இந்நூலாகும். இது எழுந்த முறையை “‘ இலக்கியம் பலவகை. தமிழில் தொன்று தொட்டு அமைந்த இலக்கிய வகைகளும் உண்டு. இன்று புதியனவாய் அமைந்த இலக்கிய வகைகளும் உண்டு. அவற்றில் அமைந்துள்ள மரபுகளை ஆராய்ந்து கூறுவதே இந்நூலின் நோக்கமாகும்.’’ என்கிறார் மு. வரதராசனார். இந்நூல் ‘பாகுபாடு, காவியம், நாடகம், நாவல், சிறுகதை, மரபு’ என்ற தலைப்புகளின் கீழ் வரையப் பெற்றுள்ள கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இதனில் இடம் பெற்றுள்ள மரபு என்ற கட்டுரை தமிழ் இலக்கியக் கொள்கை மரபுகளை எடுத்துரைப்பதாக உள்ளது. மற்றவை வகைமைகளை அறிமுகப் படுத்தும் கட்டுரைகளாக விளங்குகின்றன.
இம்மூன்று நூல்களும் தமிழ் இலக்கியம் கற்போர் இலக்கண இலக்கியங்களை ஆராயப் புகும் தருவாயில் படித்து உணரத்தக்கனவாகும். இந்நூல்கள் தமிழாய்வுப் பகுதியில் முதன் முதலாக நுழைபவருக்கு, இலக்கியம், ஆராய்ச்சி, வகைமை, பயன் போன்றன குறித்த அடிப்படைத் தகவல்களை அளிக்கும் போக்கினவாகும். இருப்பினும் இந்நூல்களின் அடிப்படையில்தான் இலக்கியத் திறனாய்வு இன்றைக்குப் பெருவளர்ச்சி பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.
மு. வரதராசனாரின் இலக்கியத் திறனாய்வு நெறிகள்
மு. வரதராசனார் காலத்தில் இலக்கியத்தை ரசிப்பது என்ற ரசனை நிலையைக் கடந்து அதனை ஆராய்ந்து அதன்வழியாக முடிவுகளைப் பெறுவது என்ற நிலை உருவாக ஆரம்பித்தது. படைப்பு, படைப்பாளன், வாசிப்பு, வாசகன் என்ற நிலை கடந்து இலக்கியத்தை ஒரு ஆராய்ச்சிப் பொருளாக, அறிவியல் சார்ந்து அZகுவதாக அமையத்தொடங்கியது. ஆராய்ச்சி, ஆராய்;ச்சியாளன் என்ற புதிய நிலைப்பாடு ஏற்படத்தொடங்கியது. இவ்வகையில் தமிழ் ஆராய்ச்சி உலகைத் தயார்படுத்தும் முன்னோடியாக மு. வரதராசனார் விளங்கினார்.
ஆராய்ச்சி என்ற துறை அனைத்துத் துறைகளுக்கும் உரியது. ஆராய்ச்சி என்பது ஒரு அறிவியல் அZகுமுறை. எத்துறையையும் வளர்க்க ஆராய்ச்சி என்பது இன்றியமையாததாகிறது. இவ்வாராய்ச்சி எல்லா துறைகளுக்கும் வருவதற்கு முன்னால் இலக்கியத் துறைக்கு தமிழகத்தில் முன்னதாக நுழைந்துவிட்டது. விடுதலைக் காலக்கட்டத்தில் தமிழகத்தில் இயந்திரக் கூடங்கள், தொழில் கூடங்கள் குறைந்திருந்த நிலையில், அரசு பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிக் கூடங்கள் நிறுவ முயலாத நிலையில் தனித்த துறையாக தமிழ் இலக்கிய ஆய்வுத் துறை முன்னோடியாக எழுந்தது. இதன் காரணமாக தமிழ் இலக்கிய ஆராய்ச்சி பயன் மிக்கதா இல்லையா என்ற சந்தேகத்திற்கு இடமாகத் தொடங்கியது. இலக்கிய ஆராய்ச்சி தேவையானது, அறிவு சார்ந்தது என்பதை நிறுவ, பரவலாக்க மு. வரதராசனாரின் நூல்கள் உதவி செய்தன.
ஆராய்ச்சிக்கு மூலப் பொருட்கள், ஆராய்ச்சி சார்ந்த அறிவு, ஆராய்ச்சிக் கூடம் போன்ற அடிப்படை வசதிகள் தேவை. தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக்கு மூலப் பொருட்கள், ஆராய்ச்சி கூடம் போன்ற வசதிகள் அவசியமில்லை. ஆராய்ச்சி சார்ந்த அறிவு மட்டுமே தேவை. அதனை வழங்கவேண்டியதே முதல் தேவையாக இருந்ததால் மு. வரதராசனார் இம்முயற்சியில் இறங்கியிருக்கவேண்டும். மற்ற துறைகளுக்கு முன்னோடிய ஆராய்ச்சித் துறை இலக்கியத் துறைக்கு முன்னோடியாக அமைந்து அதன் வழியில் மற்ற துறைகளும் ஆராய்ச்சிப் பகுதியில் நுழைய இலக்கியத் துறை உதவியது என்பது இங்குக் கவனிக்கத்தக்கது. இன்னமும் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மற்ற துறை ஆராய்ச்சிகளைவிட அதிக அளவிலும், பெரும்போக்கிலும் செய்யப் பெற்றுக் கொண்டிருப்பது என்பதை மிக முக்கியமான மாற்றமாக எண்ணப்படவேண்டும். இம்மாற்றத்திற்கு அடிகோலிட்டவர் மு. வரதராசனார் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
மு. வரதராசனார் தன் காலத்தில் இருந்த நூல் வாசிப்பு முறையைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘‘சென்னையில் குஜpலிக் கடையில் (கந்தசாமிக் கோயில் பக்கம்) ஓர் அணா, இரண்டனா விலையில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனையாகின்றன. அவற்றால்தான் அந்தப் புத்தகக்கடையில் வருவாயும் கிடைக்கின்றது. ஆனால் 1939-ல் அந்தக் கடைகளில் இவ்வாறு விற்பனையான புத்தகங்கள் என்ன என்று பட்டி எழுதி, 1949-ல் விலையாகும் புத்தகங்களையும் எழுதி ஒப்பிட்டால், உண்மை விளங்கும். 1939-ல் விலையான புற்றீசல் போன்ற புத்தகங்களில் ஒன்றையாவது இப்போது காண முடியாது. பத்து ஆண்டுகளில் அந்தப் புற்றீசல்களின் வாழ்வு முடிந்துவிட்டது. ஆனால் திருக்குறளும், நாலடியாரும் அந்தக் கடைகளில் என்றும் விற்கப்படுகின்றன. 1939- ஆம் ஆண்டிலும் அந்தப் பழம் புத்தகங்கள் ஒரு மூலையில் ஒதுங்கி அமைதியாக இருந்தன. இன்றும் அவை அவ்வாறே உள்ளன. 1959-ல் மட்டும் அல்ல. கி.பி. 2959 – ஆம் ஆண்டிலும் குஜpலிக்கடை என்று ஒன்று சென்னையில் இருக்குமானால் அப்போது வெளியாகும் புதிய நூல்களுக்கு இடையே இந்தப் பழம் பெரும் செல்வங்கள் அழியா வாழ்வு பெற்று விளங்கிக் கொண்டே இருக்கும்.’’ மு. வரதராசனாரின் இக்கருத்து பல நிலைகளில் நோக்கத்தக்கது.
நூல் விற்பனை என்ற ஒன்றை மையமிட்டு அதன் வழியாக தமிழ் வாசகச் சூழலை மு. வரதராசனார் மதிப்பிட முனைகின்றார். ஆய்விற்கான களத்தை அளந்தறிய அவர் பத்தாண்டு கால இடைவெளிக் காலத்தை தேர்ந்து கொண்ட முறைமையே, அவர் தேர்ந்த ஆராய்ச்சியாளர் என்பதை மெய்ப்பிக்கின்றது. ஒரு குறிப்பிட்ட பத்து ஆண்டு இடைவெளியில் ஏற்பட்ட வாசிப்பு மாற்றத்தை ஒப்பிடும் ஆராய்ச்சி போக்கு இதனுள் செயல்படுத்தப் பெற்றுள்ளது. தரவுகளைப் பதிவாக்கி அவற்றை ஒப்பு நோக்கும் ஆராய்ச்சி அZகுமுறையை இதற்குள் அவர் அமைத்துள்ளார். புற்றீசல் இலக்கியம், அழியா இலக்கியம் என்ற இரண்டினை இந்த ஆய்வின் அடிப்படையில் அவர் பெறுகிறார். மேலும் புற்றீசல் இலக்கியம் அழியும் தன்மையது, அழியா இலக்கியம் அழியாத் தன்மையது என்ற முடிவினுக்கு அவர் இட்டுச் செல்கிறார். மேலும் எதிர்காலத்தை அதாவது நூறாண்டுக்குப் பின்னான வாசிப்புச் சூழலையும் அவர் இச்சிறு கருத்திற்குள் ஆராய்கிறார். கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்றையும் நோக்கி ஆராயும் அவரின் ஆய்வுப் போக்குடையவராக அவர் விளங்குகிறார். சிறு கருத்தினுக்குள்ளும் ஆராயும் மனப்பான்மையை, ஆராய்ச்சி எண்ணத்தைப் பெற்றவர் மு.வரதராசனார் என்பது இதன்வழி தெரியவருகிறது.
மு. வரதராசனார் தான் படைத்த இலக்கிய ஆராய்ச்சி கருவி நூல்களின் வழியாக ‘உயர்ந்த இலக்கியம்’ என்ற ஒரு கருத்தை உருவாக்குகிறார். இந்த உயர்ந்த இலக்கியத்தைப் படைப்பதற்கான தேவை, படைக்கும் படைப்பாளனின் உயர்ந்த உள்ளம், உயர்ந்த இலக்கியத்தின் பண்புகள் ஆகியனவற்றைத் தமிழ்ச் சமுதாயத்திற்கு எடுத்துரைப்பதாக இவரின் திறனாய்வுப் பார்வை அமைகின்றது. உயர்ந்த இலக்கியத்தை மக்களுக்கு ஆராய்ந்து எடுத்துரைப்பதே திறனாய்வாளாரின் பணி என்பது மு.வரதராசனாரின் ஆராய்ச்சி நெறியாகும்.
ஆராய்ச்சியின் முதல் பணி உயர்ந்த இலக்கியத்தை ஆராய்தலே.
மு. வரதராசனாரின் காலத்தில் தமிழ் இலக்கியப் பரப்பில் இருந்த நன்மை தரும் உயர்ந்த இலக்கியங்களை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தி அதனைத் தொடர்ந்து அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்வது என்ற நிலையில் திறனாய்வுப் பணி நடைபெற்றுள்ளது. தமிழ்ச் செவ்விலக்கியங்களைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியாக இது நடைபெற்றிருக்கிறது. ‘நல்ல இலக்கியம் இது’ என சமுதாயத்திற்கு உணர்த்தி அதன்வழி சமுதாயத்தை நடக்கச் செய்யும் முறைமையை கொண்டது மு.வரதராசனாரின் இலக்கிய ஆராய்ச்சி நெறி என்று கருதுவது இங்குப் பொருத்தமுடையதாகும்.
‘‘நல்ல நூல் என்பது எழுத்துச் சொற்பொருள்களால் ஆன ஏடுகள் அடங்கிய ஒன்று அன்று. நமக்காகக் காட்சி அளித்துக் கருணை பொழிய என்றும் எங்கும் நமக்காகக் காத்திருக்கின்ற பெருந்தகையின் திருவுருவம்’’ என்பது மு. வரதராசனார் தரும் நல்ல இலக்கியத்திற்கான இலக்கண வரையறையாகும்.
நல்ல நூல்கள் தொடர்ந்து போற்றப்படுதன் நோக்கம் குறித்தும் மு. வரதராசனார் கருத்துரைக்கிறார். ‘‘ அறிஹர்கள் பல தலைமுறையாகச் செய்து வந்த விடாமுயற்சியின் பயன் தமிழகத்திலும் சங்க இலக்கியங்களான அகநானு}று, புறநானு}று முதலியவைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளாக காலவெள்ளத்தை நீந்தி இன்னும் பெருமையோடு விளங்குகின்றன என்றால் காரணம் என்னடூ இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பொதுமக்கள் போற்றி வந்தார்கள் என்பது அன்று. இரண்டாயிரம் ஆண்டுகளாக அறிஹர்கள் விடாமுயற்சி கொண்டு அவற்றின் பெருமையைப் பறைசாற்றி வந்த பெருந்தொண்டடே காரணம் ஆகும். அறிஹர்கள் இவ்வாறு தொண்டாற்றாமல் விட்டுவிட்டிருப்பார்களானால் எந்த உயர்ந்த நூலும் உலகத்தில் இதுவரையில் வாழ்ந்திருக்க முடியாது’’ என்ற இந்தக் கருத்தின் அடிப்படை இலக்கியத் திறனாய்வு என்பது நல்ல நூல்களை சமுதாயத்தில் அவ்வப்போது நினைவிற்குக் கொண்டு வந்து நிலைநிறுத்தும் பாங்கினது என்பதை உணரச் செய்கிறது.
திறனாய்வின் பயன் நல்ல நூல்கள் இவை, தீமையான நூல்கள் இவை என அறிவிப்பதுதான் என்று கருதுகிறார் மு.வரதராசனார். ‘‘இலக்கிய ஆராய்ச்சி நல்லமுறையில் வளர, வளர, உயர்ந்த நூல்கள் இவை, உயர்வற்ற நூல்கள் இவை என்று பகுத்தறிதல் எளிதாகும். அதனால் உயர்ந்த நூல்கள் மட்டும் மக்களிடையே வாழ வழி பிறக்கும் என்று நம்பலாம்.’’ என்று திறனாய்வு நல்ல நூல்களை வளர்க்கும் என்று அவர் எண்Z[கிறார். இச்சூழல் அவர்காலச் சூழலாகும்.
எதிர்காலத் திறனாய்வுச் சூழலையும் அவர் அளந்தறிகிறார். ‘‘நூல்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலோர் விருப்பத்திற்கும் அறிஹர் விருப்பத்திற்கும் இடையே பெரிய வேறுபாடு வளர்ந்துள்ளது. அது எதிர்காலத்தில் உயர்ந்த நூல்களின் வளர்ச்சிக்கே இடையூறாக முடியுமோ என்று அறிஹர் சிலர் அஹ்சுகின்றனர். உயர்ந்த நூல்கள் என்று சொல்லப்படுவனவற்றின் தன்மைகள் எள்ளி நகையாடப்படலாம். அவற்றிற்கு எதிர்ப்பும் வளரலாம். வெறுப்பு முதலியவற்றை வளர்த்தல் இக்காலத்தில் எளிதாகவும் உள்ளது. ஆகவே நூலை மதிப்பிடும் அளவைகள் இதுவரைக் காக்கப்பட்டவற்றைவிட இனி மிக்க அக்கறையோடு காக்கப்பட வேண்டும். இவ்வகையில் உண்மையான இலக்கிய ஆராய்ச்சி வளர்தல் இன்றியமையாததாக உள்ளது’’ என்ற இவரின் கருத்து ஆராய்ச்சியின் எதிர்கால நிலையைச் சுட்டுவதாக உள்ளது. நூலை மதிப்பிடும் அளவுகோலாக இலக்கியத்திறனாய்வு அமையவேண்டும் என்பது மு. வரதராசனாரின் நோக்கமாகும்.
தமிழ் இலக்கிய ஆராய்ச்சிப் பரப்பில் தற்போது உள்ள பொது மரபான உயர்வான இலக்கியத்தையே ஆராய எடுத்துக் கொள்ளல் என்ற அடிப்படைப் பண்பு உருவாவதற்கு மு. வரதராசனார் ஏற்படுத்திய உயர்ந்த இலக்கியம் என்ற கருத்தாக்கமே காரணம் என்பது உணரத்தக்கதாகும்.
உயர்ந்த இலக்கியத்தின் பண்புகள்
உயர்ந்த இலக்கியத்தை ஆராயும் ஆராய்ச்;சி உயர்ந்த ஆராய்ச்சியாக அமைந்துவிடுகின்றது. உயர்ந்த இலக்கியத்தின் பண்புகள் பற்றி எடுத்துரைப்பனவே மு. வரதராசானரின் இலக்கியத்திறனாய்வு சார்ந்த நூல்களாகும். ‘அழியாத சில நூல்களே கலையுலகில் இலக்கியங்களாகப் போற்றத்தக்கன’ என்ற கொள்கையை உடையவர் மு.வரதராசனார். அழியாத நிலைபேறுடைய நல்ல நூல்களை இனம் காZவது ஆராய்;ச்சியின் அடிப்படை நோக்கம் என இவர் கொள்கிறார்.
மு. வரதராசனார் உயர்ந்த இலக்கியத்திற்கு இன்றியமையாத கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகியன தேவை என்கிறார். ‘‘பாடுவோரின் அனுபவம் உயர்ந்ததாயின், சிறிய பொருள் பற்றிப் பாடும் பாட்டும் விழுமிய பாட்டு ஆகலாம். அவருடைய அனுபவம் தாழ்ந்ததாயின், உயர்ந்த பொருள் பற்றிப் பாடும் பாட்டும் சிறப்பிழந்து போகலாம்’’ என்று உயர்ந்த இலக்கியத்திற்கு உரிய கருத்து பற்றி அவர் வரையறை செய்கிறார். ‘‘உணர்ச்சி பாட்டின் வடிவத்திலும், பொருளிலும் ஒருங்கே புலப்படுமாறு அமைந்த பாட்டே சிறப்புடையது’’ என்று உணர்ச்சி பற்றி அவர் கருத்துரைக்கிறார். ‘‘ஒரு காலத்து அனுபவத்தை மற்றெhரு காலத்தில் பெறுதலும், ஓரிடத்து அனுபவத்தைத் தன் இடத்ததாக உற்று உணர்தலும் மனித உள்ளத்தின் சிறப்பியல்புகளாக இருக்கக் காண்கிறேhம். இந்தச் சிறப்பியல்பே கலைத்துறையில் வளர்ந்து பண்டும்போது கற்பனைத் திறனாக அமைகின்றது’’ என்று சிறந்த அனுபவத்தால் அமைவது கற்பனை என்றுரைக்கிறார் மு. வரதராசனார். ‘‘கலையின் வடிவமே கலைஹரின் உள்ளத்தையும், கற்பவரின் உள்ளத்தையும் தொடர்புபடுத்துவதாகும். கலைஹரின் உணர்ச்சி ஆற்றலுடையதாய், பண்பட்டதாய் விளங்கின் கலைபெறும் வடிவிலும் அந்த ஆற்றலும் பண்பாடும் விளங்கும்’’ என்ற கருத்தின்படி படைப்பாளன் உயர்ந்த பண்புடையவராக அமைதல் வேண்டும் என்று மு. வரதராசனார் வலியுறுத்துகிறார். வடிவம் என்ற நிலையில் சிறுகதை, நாவல், காவியம், நாடகம் போன்ற வகைமைகளின் வடிவம் பற்றிய தொடக்ககால ஆய்வுப் புரிதல்களையும் முன்வைத்தவர் மு. வரதராசனார். இவரின் இலக்கிய மரபு நூல் முழுவதும் இத்தன்மைகள் நிரம்பியதாகும்.
படைப்பாளன் உயர்ந்த நெறி உடையவராக இருக்கின்ற நிலையில் உயர்வான படைப்புகள் தோன்றும். உயர்வான படைப்புகள் நிலைத்து நின்று என்றைக்கும் மக்களை நல்வழிப்படுத்தும் என்பதே மு.வரதராசனார் கொண்டிருந்த இலக்கியத் திறனாய்வின் அடிப்படை நெறியாகும். இக்கருத்து தமிழ் அறமரபு சார்ந்து அவர் வகுத்துக் கொண்ட நெறியாகும். இதனடிப்படையிலேயே இலக்கியஆராய்ச்சியின் தன்மையைத் திருக்குறள் நெறி நின்று, அதன் நடுவுநிலைத் தன்மையை எடுத்துணர்த்தி மு.வரதராசனார் அமைத்துக் கொள்ளுகின்றார்.
‘‘நம்பிக்கை, விருப்பு, வெறுப்பு இவை வேறு. இவற்றிற்கு இடம் தராத மன நிலையே ஆராய்ச்சி செய்வதற்குத் தகுதி உடையது. ஒன்றில் நம்பிக்கை உடையவர், அந்த ஒன்றையே போற்றுவர். மற்றவற்றைப் பொருட்படுத்தவும் மாட்டார். விருப்பு உடையவர் விரும்பிய ஒன்றைக் கண்மூடி ஏற்றுக் கொள்வார். விரும்பாதவற்றில் மனம் செலுத்தார். நண்மைகாணினும் அதை ஒதுக்குவார், வெறுப்பு உடையவரும் ;அவ்வாறே நடுநிலை அற்றவராய் ஒன்றை வெறுப்பார். குணம் காணினும் கொள்ளமாட்டார். ‘‘வேண்டுதல் வேண்டாமை இலான்’’ என்று திருவள்ளுவரால் போற்றப்பட்ட இறைவனைப் போல் ஆராய்ச்சி செய்யும் நேரத்திலேனும் விருப்பு, வெறுப்பு அற்ற நடுநிலையில் நின்றால்தான் உண்மை விளங்கும். ... குணம் மிகுந்ததைக் கொள்ளவேண்டும். குற்றம் மிகுந்ததைத் தள்ள வேண்டும். அப்போதும் கண்மூடி ஏற்றுக் கொள்ளாமல், முழுவதும் இத்தகையது என்று போற்றாமல், மிகுந்திருக்கும் பண்பு பற்றியே ஏற்றுக் கொள்ள வேண்டும். சிறு குறை பற்றி ஒன்றை விடுத்தல் கூடாது. ஒரு குறையும் இல்லாதது என்று ஒன்றைக் கண்மூடி ஏற்றலும் கூடாது. இதுவே மிக்க கொளல் என்று திருவள்ளுவர் கூறிய ஆராய்ச்சி முடிவாகும்’’ என்ற திருக்குறளின் அடிப்படையில் அமைந்த ஆராய்ச்சி அZகுமுறைகள் மு. வரதராசனாரின் அறமரபு சார்ந்த திறனாய்வு நிலையை எடுத்துரைப்பனவாகும்.
அறநூல்களின் வழிப்பட்டு இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகளை வகுத்துக் கொள்ளுதல் என்பதும் தமிழ் இலக்கண நூல்கள் காட்டும் குற்றம், அழகு, உத்தி, அகப் பொருள் மரபுகள் அடிப்படையில் ஆராய்ச்சி நெறிமுறைகளை அமைத்தல் என்பதும் ஆகிய இருநிலைகளில் தமிழ் மரபு சார்ந்த ஆராய்ச்சி அZகுமுறையை கைக் கொண்டவர் மு.வரதராசனார் என்பதில் ஐயமில்லை. தமிழுக்கான தகுதி வாய்ந்த மரபு சார்ந்த திறனாய்வு முறையை வடிவமைத்துத் தந்தவர் மு.வரதராசனார் என்பதை தமிழாய்வுலகம் என்றைக்கும் நினைவில் கொள்ளவேண்டி இருக்கிறது.
மு.வரதராசனாரின் இலக்கிய நெறிகள் பற்றிய விமர்சனங்கள்
மு. வரதராசனாரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரின் பங்களிப்புகள் பல நிலைகளில் ஆராயப் பெற்று வருகின்றன. அவரின் இலக்கியத்திறனாய்வு முறைகள் பற்றியும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவற்றை எடுத்துரைத்து அவற்றின் உண்மைத் தன்மைகளையும் அறிய வேண்டி உள்ளது.
ஜெயமோகன் ‘‘மு.வவின் இலக்கிய ஆராய்ச்சிகளுக்கு ஆராய்ச்சிக் கோணத்தில் பெரிய மதிப்பு ஏதும் இல்லை. அவற்றை எ];.வையாபுரிப்பிள்ளை, கெ.என் சிவராஜபிள்ளை போன்ற முதல்தலைமுறை ஆய்வாளர்களுடனோ அல்லது அவரது சமகாலத்தவர்களான தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் போன்றவர்களின் ஆய்வுகளுடனோ ஒப்பிட்டால் இந்த வேறுபாடு புரியும். அவர்கள் மரபிலக்கியத்தின் உள்தொடர்ச்சியை கண்டறிவதிலும் காலக்கணிப்பிலும் புதிய கண்டறிதல்களை நிகழ்த்தி பெரும் பங்களிப்பை ஆற்றியவர்கள். மு.வ. அப்படி ஏதும் செய்யவில்லை. வெறுமே நயம்பாராட்டி சில தகவல்களைச் சுட்டுகிறார்’’ என்று மு.வரதராசனாரின் இலக்கிய ஆராய்ச்சியைப் பற்றி விமர்சித்துள்ளார்.
பா. ஆனந்த குமார் ‘‘ மு.வ., வின் உயர் இலக்கியம் என்ற கருத்துநிலைக்கு ஆதாரமாக இருப்பது ஒழுக்கம் சார்ந்த அறவியலே. மு.வ.வின் இலக்கியத்திறனாய்வு நூல்கள் இலக் கியத்தின் அடிப்படைக் கூறுகளை விளக்கிக் காட்டுகின்றன. திறனாய்வின் தொடக்கநிலைக் கூறுகளைத் தொட்டுக்காட்டுகின்றன. திறனாய்வில் கருத்துநிலை சார்ந்த விவாதங்களுக்குள்ளோ, திறனாய்வின் அடுத்த கட்ட வளர்ச்சியான இலக்கியக் கொள்கைப் பகுதிக்குள்ளோ அவை செல்லவில்லை’’ என்று மதிப்பிடுகிறார்.
‘‘தமிழிலக்கியத் திறனாய்வு வரலாற்றில் கல்வியாளர்களின் பங்களிப்பைக் க.நா.சு., சுந்தரராமசாமி போல் வெறுமனே பண்டிதத்தனம் என்று முத்திரை குத்தி மூலையில் தூக்கி எறிந்துவிட முடியாது. பழமையைப் போற்றும் சக்திகள் வரலாற்றில் ஓர் அங்கமாகவே விளங்கி வந்துள்ளன. வரலாற்றை இயக்குகின்றன முரண் நிலைச் சக்தியாக நின்றுச் செயல்பட்டுத் தன் பங்களிப்பை மானுட சமூகத்திற்கு ஆற்றியுள்ளன.’’ என்று மு. வரதராசனார் சார்ந்து நின்ற மரபு வயப்பட்ட திறனாய்வு முறைக்கு இருந்த மறுப்பினையும், அதனைத் தாண்டி அதன் தேவைக்கான ஏற்பினையும் பஞ்சாங்கம் எடுத்துரைக்கிறார்.
இம்மூன்று மதிப்பீடுகள் வழியாக ஒரு கருத்தினை உணரமுடிகின்றது. தமிழ் இலக்கியக் கல்வியாளர்கள் மு. வரதராசனாரை ஏற்பதையும், தமிழ் இலக்கியக் கல்வி சாராதவர்கள் மு. வரதராசனார் போக்கினை விமர்சிப்பதையும் இக்கருத்துகள் காட்டுகின்றன. மு. வரதராசனார் ஆராய்ச்சிக்கு உரிய பாங்கிற்குக் காட்டுவதைப்போல நடுநிலைமை, விருப்பு, வெறுப்பு சாராத நிலைமையில் நின்று மு. வரதராசனரையும் ஆராய வேண்டியிருக்கிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னதான ஆய்வு நெறியளார்கள் வலியுறுத்திய ஒழுக்கம், மரபு, பண்பாடு சார்ந்த ஆய்வுமுறை இக்காலத்தில் விமர்சனத்திற்கு உள்ளானலும் அதன் பிறழ்ச்சி என்பதும், அதன் விலகல் என்பதும் தரப்போகிற விளைவுகள் பெருமைக்குரியவை இல்லை என்பதை உணரவும், உணர்த்தவும் வேண்டியிருக்கிறது.
க.நா.சு வையும், சுந்தரராமசாமியையும், ஜெயமோகனையும் ஆராயும் தற்கால ஆராய்ச்சி முறைகளிலும் அறமரபு சார்ந்த ஆய்வு நெறிகள் புதைந்து கிடக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அந்த அடிப்படைய நெறியை விட்டுத் தமிழ் உலகம் இன்று வரை வெளிவரவில்லை. இனியும் வராது என்பதும் உணரத்தக்கது. அறமரபு சார்ந்த ஆய்வு நெறி என்பதே தமிழின் தனித்தன்மையான நெறியாக அமைகிறது, அமைக்கப்பட்டது என்பதற்கு மு. வரதராசனார் காரணம் என்பது கல்லில் எழுத்து ஆகும்.
thanks to siraguகருத்துகள் இல்லை: