ஞாயிறு, ஜூலை 17, 2016

1. திருவண்ணாமலை







தமிழ்மொழியில் வற்றாத வளம் கொண்டனவாக பக்தி இலக்கியங்கள் வளர்ந்து வருகின்றன. தனக்கு மேலான ஒருவனை, அனைத்தையும் ஆட்டுவிக்கும் அன்பனை, இறைபரம்பொருளை முழுவதுமாக நம்பி அவனிடத்தில் தன் வாழ்க்கையை ஒப்படைப்பதே பக்தி வைராக்கியமாகின்றது. அருளாளர்கள் ஒவ்வொருவரும் ஆண்டவனைக் கண்ட அழகான நிலை, அற்புதமான முறை எண்ணி எண்ணிப் பார்க்க வியப்பளிக்கிறது.

ஒவ்வொருவருக்கும் கிடைத்த அருள் அனுபவம், இறை அனுபவம் அவர்தம் பாடல்களாக வெளிப்பட்டுள்ளன. பக்தி இலக்கியங்களில், பக்தி ஒருபுறம் அமைந்திருக்கிறது என்றாலும், அப்பக்திப்பாடல்களில் ஆழ்ந்திருக்கும் கவியுளம் கண்டு கொள்ளப்படவேண்டியது.

பக்தி சார்ந்த கவிதைகளில் பக்தியும் உண்டு. இலக்கிய இன்பமும் உண்டு. தரிசிப்பும் உண்டு. ரசிப்பும் உண்டு. காலங்கள் பலவானாலும், படைப்புகள் பலவானாலும் அழியாமல் பக்திக் கவிதைகள் நின்று நிலைப்பதற்கு அவற்றின் தரிசிப்புத் தன்மையும் ரசனைத் தன்மையும் தான் காரணம்.

படைப்பாளர்களுக்கு புதுப்புது இடங்கள் புதுப் புதுக் கற்பனைகளைத் தருகின்றன. புதிய இடங்களுக்குச் செல்கின்ற போது ஏற்படும் உள்ளப் பேரெழுச்சி அவர்களைப் புதிய படைப்புகளைத் தரத் தூண்டுகின்றன. நம் ஒவ்வொருவருக்கும் அப்படித்தானே! புதிய இடங்கள் புதிய அனுபவங்களைத் தருகின்றன. புதிய எழுச்சியைத் தருகின்றன. நாம் அனைவரும் புத்துணர்வு கொள்கிறோம். புதுமை என்றாலே விருப்பம்தானே.

படைப்பாளர்களுக்குப் புதிய இடங்கள், புதிய அனுபவங்கள் தரும் உள்ளப் பேரெழுச்சி அவர்களைப் புதுமை செய்யும் பாவலர்களாக மாற்றுகின்றது.

அது ஒரு பௌர்ணமி நேரம். முழுச் சந்திரன் தன் பொன் கதிர்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறான். வானத்திற்கும் பூமிக்கும் இடையே ஒரு பாலமாக உயர்ந்து நிற்கிறது ஒரு மலை. பௌர்ணமி நேரச் சந்திரனின் பொன் கதிர்களைப் பெற்றுப் பொன்னாகவே காட்சி தருகிறது அந்த மலை. சித்தர்களுக்குக் காரிய சித்தி விளைக்கும் மலை அந்த மலை. துறவிகள் துறக்கமுடியாத அருள் மலை அந்த மலை. பக்தர்களின் கண்களுக்குப் பரவசமூட்டும் மலை அந்த மலை. எந்நேரமும் மந்திர ஒலி கேட்கும் மலை அந்த மலை. எல்லோரும் அண்ணாந்து பார்க்கும் மலை அந்த மலை அண்ணாமலை. திருவண்ணாமலை.

அருமையான அந்த அருணைமலையைச் சுற்றிப் பக்தர்கள் பலரும் நடந்து வருகிறார்கள். இன்று அல்ல, நேற்று அல்ல... காலம் காலமாக நடைபெற்று வரும் நடையாத்திரை அந்த யாத்திரை. பௌர்ணமி நிலவில் வாய் மணக்க மந்திரம் சொல்லி, கால் கடுக்க நடந்து வந்து, கைகள் பிரியா வண்ணம் வணக்கம் செய்ய அரிதினும் அரிதான அந்த இனிய அருட்காட்சி யுகம் யுகமாக நடந்து வருகின்றது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசனார் அந்தப் பொன்மலையைச் சுற்றி வருகிறார். தான் மட்டும் அல்ல, தன்னுடன் தன் தம்பியர் மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் பலரையும் அழைத்துக் கொண்டுச் சுற்றி வருகிறார். காலம் குளிர்ச்சியால் பனிபடர்ந்து நிற்கிறது. நேரம் பௌர்ணமி நிலவால் ஒளி வெள்ளம் சூழ்கிறது. எதிரே பொன்மலை, தகதகக்கிறது. நடந்து வரும் சிவப்பிரகாசரின் மனதில் படைப்பு என்னும் கவி ஊற்று பிரவாகம் எடுக்கிறது. நூறு பாடல்களாக அந்தப் படைப்பு பெருகுகிறது. மலையைச் சுற்றத் தொடங்கும் போது, ஆரம்பித்த முதல் பாடல் மலைவலம், கிரிவலம் வந்து நிறையும் போது நூறாக, கவி ஆறாகப் பெருகுகிறது. அப்படி எழுதப்பட்ட பாடல்களில் தொகுப்புதான் சோண சைல மாலை. சோணம் என்பதற்கு பொன் என்று பொருள். சைலம் என்பதற்கு மலை என்று பொருள். பொன் மலையைப் போற்றிப் பாடிய பாடல்களின் மாலை சோணசைல மாலை என்று ஆகியது. இந்த மாலையை மலைக்கு ஏன் சூட்டினார். மலையைப் பாடினாலே மகேசனைப் பாடியதுபோல் தானே. அண்ணாமலையை வணங்கினாலே அண்ணாமலையாரை வணங்கியதற்கு ஒப்பாகும்தானே.

அவசரம் அவசரமாகத் திருவண்ணாமலை வந்து சேருகிறோம். நாம் செல்ல வேண்டிய தூரமோ அதிகம். திருவண்ணாமலையில் இறங்கி அண்ணாமலையாரைத் தரிசிக்க முடியாதே. காலம் இல்லையே என்று கவலைப்படுகிறது நெஞ்சம். கோயிலுக்குள் சென்று அண்ணாமலையாரை வணங்க வேண்டிய கால அவகாசம் இல்லையா கவலைப்பட வேண்டாம். அண்ணாமலையை வணங்கினாலே போதும். அண்ணாமலை வள்ளலை வணங்கியதற்குச் சமமாகும்.

அப்படித்தான் அந்த அவசர அவசரமான பயணத்தில், திருவண்ணாமலைக்கு உள் நுழையும்போது முதன் முதலாக அந்த மலை கண்களில் படுகிறது. அந்த மலையைக் கண்டதும் கரங்கள் தாமாகக் கூப்பி விடுகின்றன. மலையைக் காட்டிய கண்களுக்கு நன்றிகள். மலையை வணங்கிய கரங்களுக்கு நன்றிகள். திரும்பிப் பார்க்கிறேன். என்னைப்போல பேருந்தில் பயணித்த பலரும் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆமாம். அவர்களுக்கும் திருவண்ணாமலையில் இறங்கிக் கோயிலுக்குச் சென்று வழிபட வசதியான நேரமில்லை. அதனால் மலையை வணங்கிப் பெரும்பேறு பெறுகிறார்கள்.

இது சரியா? என்றால் சரி என்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள்

காலம் நன்கு உணர்ந்து சினகரம் புகுந்து
காண் அரிது எனாது

என்பது அவர் வாக்கு.



சினகரம் என்றால் சிவன் ஆலயம். காலத்தின் கட்டாயத்தினால் சிவ ஆலயத்திற்கு சென்று வழிபடுவது அரிது. ஆகவே என்ன செய்வது. இந்தக் கேள்விக்கு அடுத்த அடி பதிலாக அமைகின்றது.

உலகு அனைத்தும் சால நின்றுழியே கண்டிடும்
சோண சைலனே கைலை நாயகனே

என்பது தான் அந்த பதில். அதாவது, காலத்தின் நெருக்கடியால் கோயிலுக்குள் வரும் அளவிற்கு கால அவகாசம் இல்லை என்றாலும், உலகில் உள்ளவர்கள் எல்லாரும் நின்ற இடத்திலேயே காணும் படிமலையாகக் காட்சி தரும் சோண சைல நாதனே உன் திருவடிகளுக்குச் சரணம். கயிலை நாதனாக நீ எங்களுக்கு இம்மலையில் காட்சி தருகிறாய். ஆகவே கோயிலுக்குள் நுழையாத எங்களுக்கும் மலையே நீயாகக் காட்சி தரும் அற்புதமே அற்புதம் என்று வியக்கிறார் சிவப்பிரகாசர்.

திருவண்ணாமலை மண்ணில் நின்று, மலையை வணங்கினாலே அருணாசலனைக் கண்ட பெருமை கிடைத்து விடுகிறது என்பது சிவப்பிரகாசர் வாக்கு. கோயிலுக்குள் சென்றால் கோயிலுக்குச் சென்றவர் மட்டுமே கடவுளைக் காண இயலும். ஆனால் உலகமே காணும் அளவிற்கு மலையாகத் தோற்றம் தரும் எம்பெருமானின் கருணைக் காட்சி வடிவமே அருணை மலை வடிவம். அடியார்களாகிய நாம் மலையின் அடிவாரத்தில் நிற்கிறோம். பரம்பொருளான கடவுள் அந்த மலையில் தோன்றும் அருட்பெருஞ்சோதியாக காட்சியளிக்கிறான். அந்த அருட்பெருஞ்சோதியும் மிகவும் வித்தியாசமானது. ஆதி அந்தம் அற்றது. அந்த அருட்பெருஞ்சோதிக்கு அகல் வேண்டுவதில்லை. திரி வேண்டுவதில்லை. ஏற்றும் தீச்சுடர் தேவையில்லை. ஏற்றுபவர் தேவையில்லை. ஏற்றாமலே எழுந்த ஏற்றமிகு விளக்கு அது.

அகல்விளக்கு என்ன அகல்திரி நெய்தீ
ஆக்குவார் இன்றியே எழுந்த சகவிளக்கு
பரம்பொருள், அண்ணாமலையாம் அருட்பெருங்சோதி சகவிளக்கு. சகலருக்கும் காட்சி தரும் அருமை விளக்கு. அண்ணாமலை முதல் கயிலை மலை வரை ஒன்றே பரம்பொருள் என விளங்கும் விளக்கு என்று இன்னும் அவ்விளக்கிற்குப் பெருமை சேர்க்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள். அண்ணாமலையைச் சிவப்பிரகாசர் செந்நெறி கொண்டு வணங்குவோம்.
http://www.muthukamalam.com/essay/serial/p8a.html

கருத்துகள் இல்லை: