புதன், டிசம்பர் 02, 2015

அரிசியும் உமியும்

ஔவையாரை ஒரு புலவர் என்று மட்டும் அறிமுகம் செய்து விட முடியாது. அவர் ஒரு பயணி. நாடு முழுவதும் ஓயாமல் சுற்றிச் சுற்றி வந்து தமிழகத்து மக்களைச் சந்தித்த ஓர் இலக்கிய ஆளுமை. ஔவையாரின் பாடல்கள் தமிழ்நாட்டின் சமுதாயப் பதிவேடுகளாகும். அவர் மன்னர்களுடனும் நட்பு கொண்டிருந்தார். சாதாரண மக்களுடனும் அன்பு பூண்டிருந்தார். புல்லையும் பாடுவார். நெல்லையும் பாடுவார். படைப்பில் புல்லும் நெல்லும் ஒரே தரமானவைதான். படைப்பாளர்களுக்கும் புல்லும் நெல்லும் ஒரே தரத்தில் அமைவனதான். இது உயர்வானது தாழ்வானது என்று பார்க்கும் பார்வை அவருக்குக் கிடையாது. எல்லாவற்றையும் ஒரே தரத்தில் ஒரே நிலையில் பார்த்த சமூகத்தைப் பாடிய பெண் ஔவையார்.

அவர் ஒரு முறை நன்றாக விளைந்து கொண்டிருக்கும் வயல் பக்கமாகச் சென்று கொண்டிருக்கிறார். பச்சைப்பசேல் என்று நெற்பயிர்கள் வளர்ந்து நிற்கின்றன. பால் பிடித்து தலை தூக்கி நிற்கின்றன கதிர்கள். இக்கதிர்கள் நன்றாக முற்றித் தலை சாய்ந்து நிற்க வேண்டும். அந்தத் தலைசாய்தலில் நெற்கதிர்கள் அதிகம் விளைந்திருக்க வேண்டும். இந்த வளத்தை எதிர்பார்த்து உழவர் பெருமக்கள் உறுதியாக விவசாயம் செய்து வருகிறார்கள்.

ஔவையார் அந்த நெல் வயலைப் பார்க்கிறார். இந்த வயல் வளம் தர வேண்டும். வேறு எந்த விதமான துன்பங்களும் இந்தக் கதிர்களுக்கு வந்துவிடக் கூடாது என்று அவர் மனதில் எண்ணி அக்கதிர்களை வாழ்த்துகிறார். வீட்டில் செடிகள் வளர்க்கிறோம். அவற்றிற்கு வெறும் தண்ணீர் மட்டும் ஊற்றுவதை விட, அவை நன்றாக வளரவேண்டும் என்று வாழ்த்துக்களோடு தண்ணீர் ஊற்றினால் அந்த வாழ்த்து இன்னும் அந்தச் செடியை நன்றாக வளரச் செய்யும். வளம் பெருகச் செய்யும். தண்ணீர் ஊற்ற ஊற்றத் தலையாட்டி அந்த வாழ்த்தையும், நீரையும் அச்செடிகள் ஏற்றுக்கொண்டு மகிழும்.

ஓர் அறிவு உயிர் என்றாலும் அதற்கும் உயிர் உண்டு, அன்பு உண்டு, பாசம் உண்டு, எதிரிகள் உண்டு, நம்பிக்கை உண்டல்லவா. இதோ இந்த நெற்பயிர்களும் ஔவையாரின் வாழ்த்துக்களைப் பெற்று வளமாக வளர்ந்து நிற்கின்றன.

இன்னும் சில நாள்களில் இதனைக் களத்தில் இட்டு நெல்மணிகளை இந்த உழைப்பாளர்கள் பெற்று விடுவார்கள். ஒரு புறத்தில் வைக்கோல் போராக நிரம்பி இருக்கும். மற்றொரு புறத்தில் மூடை மூடையாக நெல்மணிகள் குவிந்து நிற்கும். உழைத்துப் பெற்ற நெல்மணிகளைக் காணும் போது ஏற்படும் சுகமே சுகம். அதனைத் தொட்டுத் தடவி அதன் வாசத்தை உணரும்போது ஏற்படும் சுகமே சுகம். இதோ இந்த நெல்மணிகள் என் வீட்டுத் தேவைக்கு எடுத்துக் கொண்ட பிறகு மற்றவர்களின் வயிற்றை நிரப்பப் போகின்றன. ஒன்று ஓராயிரம் ஆகி பல வயிறுகளின் வயிற்றுப் பசியைப் போக்கப்போகின்றன.

அவர்கள் நெல்மணிகளைப் பெற்று அதன் மீதுள்ள உமியைத் தீட்டி எடுத்து விடுவார்கள். கைக்குத்தல் அரிசியாக அதனை ஏற்றுக் கொண்டால் நெல்லின் சத்தெல்லாம் சாப்பிடும் உயிருக்கும் வந்துவிடுகிறது.

நெல்லில் இருந்துப் பதமாக உமியை நீக்கி அதனை முழுமையான அரிசியாக உருவாக்க வேண்டும். இயந்திரங்கள் இதனைச் செய்யலாம். மனிதர்கள் செய்யலாம். என்றாலும் முனை முறியாமல் அரிசிக் கோளங்கள் உருவாக்கப்படும் போது ஏற்படும் மகிழ்ச்சி உலகத்திற்கு ஒரு புதுமை. அதிலும் கல் நீக்கி, குப்பை நீக்கி, பட்டை தீட்டப் பெற்ற வைரமாக அரிசி காட்சி தருகிறது.

மற்றொரு தங்க ரேக்குகளாக உமி குவிந்து கிடக்கிறது. உமி என்று அதனை ஒதுக்கி விட முடியுமா. உமிதான் உண்பதற்கு ஆகாதே. அதனால் அது எதற்கும் உதவாதா? ஆகாதா? அதில் இருந்து எண்ணெய் தயாரிக்கக் கற்றுக் கொண்டுவிட்டது மனித குலம். உமியை எரிபொருளாக்கக் கற்றுக் கொண்டது மனித குலம். ஆனாலும் உமியை அப்படியே உண்ண இயலாது அல்லவா. இதுதான் அரிசிக்கும் உமிக்கும் உள்ள வேறுபாடு.

அரிசிக்கு என்ன பெருமையோ, அதே பெருமை உமிக்கும் உண்டு. இயற்கை தரும் எந்தப் பொருளும் ஒதுக்கத்தக்கதல்ல. அதனைப் பயன்படுத்தத் தெரியாத காரணத்தால்தான் அவை ஒதுக்கப் பெற்று விடுகின்றன. குப்பைகளை, குப்பைகள் என்று அள்ளி வைத்தது ஒரு காலம். அவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்க முனைகிறது இக்காலம். எல்லாவற்றையும் பயன்படுத்தும் மனித ஆற்றல் இயற்கைக்கு மிகவும் நன்றி செலுத்த வேண்டியுள்ளது. சரி உமியும் பெருமை உடையது. அரிசியும் பெருமை உடையது. ஔவையார் என்ற சமுதாயக் கவிஞர் இந்த உமிக்குள் ஒரு சமுதாயத் தெளிவை வைத்துக் கவிதை படைத்துள்ளார். மனிதர்களே விளைந்த நெல்லில் உமியை நீக்கி உண்கிறீர்களே... உங்களிடம் ஒரு கேள்வி. உமியை நீக்கிய அரிசியை மண்ணில் போட்டு முளைக்கச் செய்ய இயலுமா?

ஔவையாரின் கேள்வி புரிகிறதா? உண்ணும் போது உமியை நீக்குகிறீர்களே. உமியை நீக்கிய அரிசியை விதையாகக் கொள்ள இயலுமா? முடியாதே. விதை நெல் என்று எடுத்து வைத்த வீரியம் மிக்க நெல்லில் உமியும் இணைந்துதான் நிற்கிறது. எனவே மேலே உள்ள உமிதான் நெல்லை முளைக்கச் செய்கிறது. இந்த உமி இல்லாவிட்டால் நெல்லும் இல்லை, அரிசியும் இல்லை, உண்ணச் சோறும் இல்லை. பஞ்சம் பட்டினி என்று உலகமே இல்லாமல் போய்விடும்.

எனவே உமியின் பெருமை நெல்லை விளைவிப்பதில் இருக்கிறது. உமி இல்லாமல் நெல் இல்லை.

ஔவையார் எழுதுகிறார்

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம்

உமி என்ற போர்வையில் அரிசி என்ற மணி அற்புதமாகக் காக்கப்படுகிறது. அந்தப் போர்வையை உண்ணும் போது நீக்கிவிடுகிறவர்கள் விளைவிக்கும் போது ஏன் நீக்குவதில்லை. அரிசிதான் முளைக்கிறது என்றாலும் உமியை நீக்கிவிட்டால் அரிசி முளைக்காது. அரிசி மீண்டும் விளையும் பொருள் அல்ல. அதனால் அது உமியுடன் இருந்தால் மட்டுமே விளையும் சக்தியைப் பெருகின்றது.

அரிசிக்கும் உமிக்கும் இத்தனை பெருமைகளை ஏன் ஔவையார் சொல்ல வேண்டும்? அரிசி என்ற பொருள் உமி என்ற துணை கொண்டே முளைக்கும் சக்தியைப் பெறுகின்றது. அதுபோல வல்லமை மிக்கவர்களாக இருந்தாலும் பக்கபலமாக துணை செய்ய பலர் இருக்க வேண்டும். தனிமனிதர்கள் எவ்வளவுதான் வல்லைமை மிக்கவர்களாக இருந்தாலும், அவர்கள் தனிமரமாக இருந்தால் வெற்றி பெறமுடியாது. தனக்குத் துணையானவர்களை தக்க முறையில் சேர்த்துக் கொண்டு வாழ்வில் நடைபோட்டால் முன்னேற முடியும்.

கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கு
ஆகாது அளவு இன்றி ஏற்றக் கருமம் செயல்

என்பதே அரிசியையும் உமியையும் வைத்துச் சொல்லப்படும் பாடம் ஆகும். அரிசி என்பது மிக உயர் நிலை. உமி என்பது அடிப்படை நிலை. ஆனால் இவையிரண்டும் பல இயல்புகளில் ஒன்றாக இருக்கின்றன. குறித்த நேரத்தில் அவை ஒன்றை விட்டு, ஒன்று விலகி விடுகின்றன. அரிசியின் உயரத்தை உமி நின்று பார்த்து அமைதி காக்கிறது.

அரிசியின் பெருமை சிறப்பா? உமியின் அமைதி சிறப்பா? இந்தக் கேள்விக்கு விடை காண்பது கடினம். எனவே செயற்கரும் செயலாக இருந்தாலும் ஒருவரால் மட்டும் அதனை நிறைவேற்ற முடியாது. அவர் தக்க துணைவர்களைத் தேடிக்கொள்ள வேண்டும். அவர்கள் தன்னையிழந்து செயற்கரும் செயல் செய்பவரை முன்னிறுத்தும் தியாக உணர்வு உடையவராக இருக்க வேண்டும்.

காற்றுப் பெட்டிக்குள் உமியும் அரிசியும் ஒன்றாய்த்தான் செல்கின்றன. காற்றின் வேகத்தில் உமி பறந்து விடுகிறது. அரிசி எடையோடு நிற்கிறது. இந்த நிமிடம் எத்தகைய சோதனையான நிமிடம். இதுவரை உடனிருந்து அரிசியை விட்டுப் பிரிகிறது உமி. அழமுடியுமா? அல்லது அரிசியின் உயரத்தைத் தடுத்து விடமுடியுமா?

அரிசியின் உயரத்தை அன்னாந்து பார்க்கிறது உமி. அமைதி காக்கிறது. என்னுடன் வந்தவன் உயரத்தில் ஏறி நிற்கிறான். அவன் உயர்வில் நான் மகிழ்கிறேன். அவனுடன் சிலகாலம் இருந்தேன் என்பதே எனக்குப் பெருமை என்று உமி அமைதி காக்கிறது.

அரிசி போன்றவர்கள் செயல் ஊக்கம் மிக்கவர்கள். இவர்களைப் பேராற்றல் மிக்கவர்கள் என்கிறார் ஒளைவயார். அவர்களுக்கு உமியாகத் துணை செய்பவர்கள் தியாகம் மிக்கவர்கள். இதனால்தான் ஔவையார் இந்தப் பாடலில் அரிசிக்குத் தந்திருக்கும் எடையைவிட உமிக்குத் தந்திருக்கும் எடை சற்று அதிகம்.

தனிமனிதன் ஒவ்வொருவரும் தன்வாழ்வை மட்டுமே நடத்திச் சென்று விடாமல் சமுதாயம் நலமடைய செயல்கள் செய்யவேண்டும் என்பது இப்பாடலில் இருந்துக் கிடைக்கும் மற்றொரு பாடம். சமுதாயத்திற்குச் செய்யப்படும் செயல்களே செயற்கரும் செயல்களாகும். அந்தச் செயல்களையே ஏற்ற கருமம் என்று குறிப்பிடுகிறார் ஔவையார்.

இத்தனைப் பாடங்களையும் அரிசியும் உமியும் சொல்கின்றன. ஓர் ஓரமாய் வீட்டில், அரிசி உற்பத்திச் சாலையில் கிடைக்கும் இப்பொருள்களில் இலக்கியத்தையும் மனிதப் பண்புகளையும் காண்கிறது ஔவையார் உள்ளம்.
நன்றி. முத்துக்கமலம் இணைய இதழ் 

கருத்துகள் இல்லை: