ஒரு மொழி வளரக் கணினியின் துணை என்பது இப்போது அத்தியாவசியமாகி விட்டது. குறிப்பாக இணையப் பரவல் என்பதும் மொழியின் வளர்ச்சிக்குத் துணை புரிவதாக உள்ளது. அகராதிகள் பல வகைகளில் தற்போது இணைய வழி கிடைக்கின்றன. தமிழ்மொழிக்கான அகராதிகளும் பல நிலைகளில் இணையவழி கிடைக்கின்றன. தமிழ்த் தொடரடைவுகள் மதுரையைச் சார்ந்த கணிதத்துறைப் பேராசிரியர் முனைவர் ப. பாண்டியராஜா என்பவர் உருவாக்கிய தமிழ் கன்கார்டன்ஸ் (http://tamilconcordance.in/) ஒரு சிறந்த தளமாக விளங்குகின்றது. இதனுள் பல இலக்கியங்கள் தொகுக்கப்பெற்று அவற்றில் இருந்து சொல்சொல்லாக தொடர் தொடராகத் தேடி அந்த சொல், அந்தத் தொடர் எந்த இலக்கியத்தில் எந்த இடத்தில் வருகிறது என்பதைக் காட்டுவதாக உள்ளது. இது ஆய்வாளர்களுக்கு மிகத் தேவையான நல்ல இணைய தளம். இதன்வழி ஆய்வாளர் வெகு சீக்கிரமாக தான் தேட வேண்டிய வார்த்தை, அல்லது தொடர்களை உடன் பெற இயலும். ஒரு பொருள் குறித்துக் கட்டுரை வரைவோர் அச்சொல் இத்தளத்தில் இட்டு அது எந்நத எந்த இலக்கியத்தில் உள்ளது என்றை அறிந்து கொள்ள இயலும்.
தொடர் அடைவு (concordance)
ஒரு இலக்கியத்தில் அல்லது ஒரு படைப்பாளர் எழுதிய படைப்புகளில் ஒரு குறிப்பிட்ட சொல் எவ்வகையில் பயன்படுத்தப்பெற்றுள்ளது என்பதை அகரவரிசைப்படி இடம் பெற்றுள்ளத் தொடராகக் காட்டுவது தொடர் அடைவு (a book or document that is an alphabetical list of the words used in a book or a writer’s work, with information about where the words can be found and in which sentences) எனப்படுகிறது. ஆங்கில இலக்கியத்திற்குப் பல்வேறு தொடரடைவுகள் இணைய அளவில் உள்ளன. தமிழில் முனைவர் பா. பாண்டியராஜா உருவாக்கிய தொடரடைவு தமிழ் ஆய்வு உலகிற்குப் பெரிதும் பயன்படுவதாக உள்ளது.
தமிழ் தொடரடைவு – தேவையும், பயன்பாடும்
தமிழ் இலக்கியப் பரப்பு பெருமளவு உடையது. பெருங்கால எல்லை உடையது. எனவே அனைத்து இலக்கியங்களுக்குமான தொடரடைவு உருவாக்குவதில் பல சிரமங்கள் உள்ளன. எனவே தமிழ் இலக்கிய வரலாறு பிரித்திருப்பதுபோல கால வரிசைப்படி தொடரடைவுகள் உருவாகப்பட வேண்டிய உள்ளது. முனைவர் ப. பாண்டியராஜா உருவாக்கிய தொடரடைவுத் தளம் பின்வரும் தலைப்புகளில் தொடரடைவுகளைக் கொண்டுள்ளது.
தொல்காப்பியம், சங்க இலக்கியம் (பத்துப்பாட்டு, எட்டுத்தொகை), பதினெண்கீழ்க்கணக்கு (திருக்குறள் உட்பட அனைத்து 18 நூல்கள்), திருக்குறள் (மட்டும் – தனியாக),சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள் ஆகிய செவ்விலக்கிய நூல்களுக்குத் தொடரடைவுகள் உருவாக்கப்பெற்றுள்ளன. இவற்றில் தொல்காப்பியம், திருக்குறள், முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, போன்ற தனி நூலுக்கான தொடரடைவுகள் ஆகும்.
அடுத்து கம்பராமாயணம், நளவெண்பா, பெருங்கதை, கலிங்கத்துப்பரணி, வில்லி பாரதம், தேவாரம் (சம்பந்தர் – திருமுறை 1,2,3), தேவாரம் (அப்பர் – திருமுறை 4,5,6), தேவாரம் (சுந்தரர் – திருமுறை 7), திருவாசகம்(திருமுறை 8(1)), திருக்கோவையார் (திருமுறை 8(2)), திருமந்திரம் (திருமுறை 10), பெரியபுராணம் (திருமுறை 12), நாலாயிரத் திவ்விய பிரபந்தம், திருப்புகழ், தேம்பாவணி, சீறாப்புராணம்,(புதியது) ஆகியவற்றிற்கும் தொடரடைவுகள் உருவாக்கப்பெற்றுள்ளன. இவற்றில் மூவர் தேவாரம் என்பது கூட்டுத் தொடரடையாக உள்ளது. ஒரு சொல்லைத், தொடரை மூவர் தேவாரத்திலும் தேட முடியும் அளவில் இந்தக் கூட்டுத்தொடரடையாக உள்ளது.
இவ்வாறு குறிப்பிட்ட இலக்கியங்களுக்குத் தனிமனிதர் ஒருவராக இருந்துத் தொடரடையை உருவாக்கியுள்ளார் பாண்டியராஜா. இவற்றில் சிலவற்றிற்கு தொடரடைகள் பாடல் எண்கள் மட்டும் தரப்பெற்றுள்ளன. சில இலக்கியங்களுக்கு தொடரடைகள் தரப்படும்போது அவற்றின் பாடல் முழுவதும் பெற முடியும்வகையில் தொடர்பு தரப்பெற்றுள்ளது. இதுவே சிறந்த முறை. ஏனெனில் பாடல்எண்கள் பதிப்பிற்குப் பதிப்பு மாறுபடலாம். பாண்டியராஜா பயன்படுத்திய பாடல் எண் ஒவ்வொருவரிடத்திலும் உள்ள பதிப்பிற்கு மாறுபட்டு அமையும்போது தொடரடைவால் பயன் ஏற்படாமல் போய்விடும்.
கம்பராமாயணத்திற்கு இவர் தொடரடைவு உருவாக்கும்போது இவர் நல்ல பதிப்பு எது என்று இணையவழியாகக் கேட்டு அப்போது கிடைக்கும் அளவில் இருந்து கோவை கம்பன் கழகம் பதிப்பித்த பதிப்பினை எடுத்துக்கொண்டுள்ளார். செவ்விலக்கியங்களில் இந்தத் தொல்லை இல்லை. அவை பெரும்பாலும் தரப்படுத்தப்பெற்றுவிட்டன.
இனி வரும் காலத்தில் இப்பட்டியலில் விடுபட்டள்ள இலக்கியங்களுக்கும், இலக்கணங்களுக்கும், நவீன இலக்கியங்களுக்கும் தொடரடைவுகள் ஆக்கப்படுமானால் அவை தமிழுக்குச் சிறந்த ஆக்கம் தருவதாக இருக்கும்.
இவரின் தொடரடைவுகளை இவரின் அனுமதி பெற்றுப் பல இணைய அகராதி அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன. ஆய்வாளர்கள் பயன்படுத்தும்போது இத்தளத்தைக் குறிப்பது என்பது அவருக்குச் செய்யும் நன்றியாகும்.
தொடரடைவு வெளிப்படுத்தப்படும் முறை:
தொல்காப்பியத் தொடரடைவிற்குச் சென்று, கூற்று என்பது எந்த எந்த இடங்களில் பயன்படுத்தப்பெற்றுள்ளது என்பதைக் “கூ”என்ற எழுத்தினைச் சுட்டும் விசையைச் சுட்டினால்பின்வரும் நிலையில் தரவுகள் கிடைக்கின்றன.
கூற்று (4)
திணையே கைகோள் கூற்று வகை எனாஅ – பொருள். செய்யு:1:5
கூற்று இடை வைத்த குறிப்பினான – பொருள். செய்யு:165:6
கூற்று அவண் இன்மை யாப்புற தோன்றும் – பொருள். செய்யு:191:4
குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார் – பொருள். மரபி:10:1
கூற்று என்பது தொல்காப்பியத்தில் நான்கு இடங்களில் கிடைக்கிறது. அச்சொல் இடம்பெற்றுள்ள தொடர்கள் தொகுத்துத் தரப்பெற்றுள்ளன. இதுவே தொடரடைகள் எனப்படுகின்றன.
பொருளதிகாரம், செய்யுளியல், மரபியல் ஆகியவற்றில் நூற்பா எண், அடி எண் படி இச்சொல் அமைந்துள்ளது என்பதை உணரமுடிகின்றது. இன்னும் இதனை வலிமைப்படுத்த வேண்டுமானல் ஒரு சொல் முதலில் வரவேண்டுமா, நிறைவில் வரவேண்டுமா, இடையில் வரவேண்டுமா என்றும் குறித்துத் தொடரடைவுகளை உருவாக்கலாம்.
வில்லி பாரதத்தில் தூ என்ற சொல் எந்த எந்த இடங்களில் இடம்பெற்றுள்ளது என்பதைப் பின்வரும் பகுதி காட்டுகிறது.
தூ (25)
தூ நிற கங்கையாள் சூழல் எய்தினான் – வில்லி:1 40:4
தூ_நகை மொழிப்படி சோரர் ஆகியே – வில்லி:1 70:1
சுதை நிலா எழு மாளிகை தலத்திடை தூ நிலா எழு முன்றில் – வில்லி:2 30:2
தூ நகர் முன்னோர் இருந்தது ஒன்று அந்த தொல் நகர் வைகுமா துணிந்தான் – வில்லி:6 6:4
கூடி இருவரும் ஒருவர் என இதயம் கலந்ததன் பின் குறித்த தூ நீர் – வில்லி:7 30:1
தூ நிறத்தன கபோதம் ஒத்தன இடையிடை எழும் சுடர் தூமம் – வில்லி:9 12:2
விரி துகில் வேறு உடாமல் விரை கமழ் தூ நீர் ஆடி – வில்லி:10 74:1
தோரணம் நாட்டுவாரும் தூ மலர் சிந்துவாரும் – வில்லி:10 75:4
தூ இலை பளிதம் ஏனை துணைவரை வழங்க சொன்னான் – வில்லி:10 101:4
தூ நிற முல்லைகள் மலர்ந்து தோன்றுமால் – வில்லி:11 116:2
தூ நகை உருப்பசி அரம்பை தொண்டை வாய் – வில்லி:12 50:1
செவ்விய தாதை-தானும் சேண் நதி தூ நீர் ஆட்டி – வில்லி:13 3:3
எரித்தது தூ நீர் ஆடி இவனிடம் தன்னில் வந்து – வில்லி:13 97:3
தூ நீர் நச்சு சுனையாய் அ சுனை சூழ்வர ஓர் தொல் மரமாய் – வில்லி:16 21:3
தூ நிற புனல் உண்டு வீழ் துணைவரை கண்டான் – வில்லி:16 48:4
தூ நிறத்து இளம் கன்றுடை தொறுக்களும் மீட்டான் – வில்லி:22 54:4
தூ நறும் தண் துளவோனை தூது விடுவதற்கு எண்ணி சுனைகள்-தோறும் – வில்லி:27 2:3
தூ நிலா மதியம் வந்து குண திசை தோன்றிற்று அம்மா – வில்லி:27 163:4
தூ இயல் நிலவு தோன்ற துணைவரை பிரிந்தோர் கண்கள் – வில்லி:27 164:1
தடாத அன்புடை கெடாத தூ மொழி பகர் தையலும் மையலன் தவிர்ந்து – வில்லி:27 248:2
சுருதி அன்ன தூ மொழி துரோணன் மேல் நடக்கவே – வில்லி:40 37|3
தூ நிழல் பொய்கையும் கொடுத்தி தோன்றலே – வில்லி:41 218:4
தூ நலம் திகழும் சோதி சோமியம் அடைந்து நின்றான் – வில்லி:43 16:3
தூ நானம் ஆடி மறைவாணர்க்கு அநேக வித தானம் சொரிந்து துகிலும் – வில்லி:46 7:2
தூ நாகம் உரும் ஒலி கேட்டு அயர்வது போல் வீழ்ந்து அழுதாள் சுபலன் பாவை – வில்லி:46 240:4
இவ்வாறு இருபத்தைந்து இடங்களில் தூ என்ற சொல் வில்லி பாரதத்தில் பயன்படுத்தப்பெற்றுள்ளது.
இதுபோல் ஒவ்வொரு இலக்கியத்தினின்றும் பெற இயலும். இதன்வழி ஒரு சொல்லின் தொடரின் பயன்பாட்டைத் தொகுத்து ஆராய இயலும்.
இதனுள்ளும் சில சிக்கல்கள் இருக்கின்றன. கடி என்ற சொல்லை எடுத்துக் கொண்டு அவர் தொடரடைவுச் சிக்கல்களை எடுத்துக்காட்டியுள்ளார். கடி என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. கணினிக்குச் சொல் தெரியுமே தவிர, அச்சொல்லுக்கு அந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரியாது. இதனை பயன்படுத்துபவரே அறிந்து கொள்ள வேண்டும்.
கூட்டுத் தொடரடைவுகள்:
கூட்டுத் தொடரடைகள் என்பவை இரு வேறுபட்ட இலக்கியங்களை எடுத்துக்கொண்டு அவற்றைக் கோர்த்து அவற்றில் சொல், தொடர் தேடுதல் ஆகும். இவ்வகையிலும் ப. பாண்டியராஜா உருவாக்கிய தொடரடைவு உருவாக்கப்பெற்றுள்ளன. இவை பெரும் பயன் அளிப்பன. ஒரு சொல் எவ்வாறு காலம் தோறும் பயன்படுத்தப்பெற்றுள்ளது என்பதை இதன்வழி அறிய இயலும்.
1. தொல்காப்பியம், சங்க இலக்கியம்
2. சங்க இலக்கியம், திருக்குறள்
3. சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு
4. சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்
5. சிலப்பதிகாரம், மணிமேகலை
6. சங்க இலக்கியம், கம்பராமாயணம்
7. திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை
என்ற நிலையில் கூட்டுத்தொடரடைவு தற்போது உருவாக்கப்பெற்றுள்ளது. இன்னும் பற்பல கூட்டுத் தொடரடைவுகள் உருவாக்கப்படலாம். இவ்வழியில் தொடரடைவுகளைத் தொகுப்பதால் சிறந்த பயன் கிடைக்கும்.
இவற்றைத் தனி மனிதராக உருவாக்கியுள்ள முனைவர் பா. பாண்டியராஜா அவர்களின் உழைப்பினைத் தமிழ் உலகம் போற்றவேண்டும். மேலும் அவர் இத்தொண்டினைத் தமிழ்த்தொண்டாக எவ்வகையிலும் கட்டணம் பெறாமல் பயன்படுத்தும்வகையில் உருவாக்கியுள்ளார். இம்முயற்சி தமிழ் வளர்க்கும் முயற்சியில் குறிக்கத்தக்க முயற்சியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக