வியாழன், ஜனவரி 02, 2020

அந்தக்கரண சுத்தமே ஆசையை நீக்கும்


ஆசையைப் போல இன்பமுடையதும் எதுவுமில்லை, துன்பம் தருவதும் எதுவுமில்லை. ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே என்பது சரிதான். அலை அலையாக ஆசைகள் நமக்குள் வந்து சேர்கின்றன. அந்த ஆசைகள் நிறைவேறும் வரை அலை அலையாக நம் மனதை அலைக்கழித்து வருகிறது. அதனை அடைந்தால்தான் வாழவே முடியும் என்றாக்கி விடுகிறது. ஆசை நல்லதா கெட்டதா என்று விவாதமே செய்யலாம்.
ஆசை இல்லை என்றால் மனிதன் உயர இயலாது. வீடு வாங்க வேண்டும், நிலம், காடு, கரை, கார், வாகனம், நகை என்று எல்லாம் வாங்க வேண்டும் என்று மனதிற்குள் ஏற்படும் தூண்டுதல்கள் அந்த அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கான வழியைத் தேட வைக்கிறது. மனிதனை ஒரு கட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்திற்கு நகர்த்துவது ஆசை.
இந்த ஆசை நியாயமானதாக இருக்கும் வரை நல்லது. நியாயமில்லாது போகின்ற நிலையில் கெட்டதாகிவிடும். சத்தியமாக உழைத்து பெற்ற பணத்தில் வீடு, நிலம், காடு, கரை வாங்கலாம். மாற்றுவழியில் வந்த பணத்தில் வாங்கினால் துன்பம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சத்தியமான வழியில் சத்தியமான ஆசைகள் நிறைவேறும். நலம் தரும். எனவே ஆசை நல்லது தான், அது சத்தியமான நிலையில் மனிதனை வழி நடத்தும் வரை.
ஆசை எப்படி ஏற்படுகிறது. மற்றொருவரைப் பார்த்து, மற்றொன்றைப் பார்த்துத் தான் ஆசை ஏற்பட இயலும். நகை மீது ஆசை உள்ள ஒருவர் தானாக ஒரு நகையை வடிவமைத்து ஆசைப் பட முடியாது. கடைகளில் தொங்கும் நகைகள், பக்கத்து வீடுகளில் அணியப்பெற்றிருக்கும் நகைகள், விளம்பரத்தில் பார்த்த நகைகள் மனதிற்குள் பதிகிறது. இதனை நாம் வாங்கினால் என்ன என்று தோன்றுகிறது. அதை வாங்க மனம் தவிக்கிறது.
ஆசை என்பது முற்றிலும் நமக்கானது அல்ல. அது மற்றவர்கள் மற்ற பொருள்கள் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம். எல்லாப் பொருள்களுக்கும்தான் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. நகை ஆசை உடையவர் நகை விளம்பரத்தால் கவரப்படுகிறார். சேலை ஆசை உடையவர் சேலை விளம்பரத்தால் கவரப்படுகிறார். அடிப்படை தேவைகள் முடிந்தபின்தான் ஆசை தோன்றுகிறது. நாளைய உணவிற்கு என்ன செய்வோம் என்ற நிலையில் இருப்பவனுக்கு தங்க கிரீடத்தின்மீது ஆசை வருமா?
ஆசை என்பது மற்றொன்றால் வருவது. நம்மால் வருவது இல்லை. எனவே நம்மை அடக்கினால் ஆசை அடங்கிப்போகும்.
சித்தி, புத்தி, அகங்காரம், மனம் என்ற நான்கு படிநிலைகளில் ஆசை தோன்றும் என்பது தத்துவம். அதாவது ஒரு பொருளைக் கண் பார்க்கிறது. அந்தப் பொருள் இன்னதென அறிய ஆசைப்படுகிறது.
எடுத்துக்காட்டிற்கு ஒரு பொருள் பக்கத்து வீட்டுக்கு வந்து சேர்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பொருளை முழுவதுமாக அட்டைப்பெட்டியால் மூடிவைத்து இறக்கிக் கொண்டு பக்கத்து வீட்டுக்குள் எடுத்துப்போகிறார்கள். அது என்ன என்று அவ்வீட்டின் பக்கத்தில் உள்ள அனைத்து வீட்டுக்காரர்களும் பார்க்கிறார்கள். ஒரு சிலர் அது என்ன பொருள் என்று தெரிந்து கொள்வதற்காக அந்த வீட்டிற்குள் சென்றே காண்கிறார்கள். இந்தத் தூண்டல்தான் ஆசையின் முதல்படி. இதில் ஏறிவிட்டால் இன்னும் மூன்றுபடிகளைக் கடந்தே ஆகவேண்டும். இதைத் தெரிந்து கொள்ள விரும்பாமல் நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்தால் அங்கு ஆசை தோன்றாது.
அது ஒரு அழகான கண்ணாடி அலங்கார மேசை. மிக அழகாக இருக்கிறது. இதனைத் தெரிந்து கொண்டார் ஒருவர். இது இன்னது என்று அறிந்து கொள்வது புத்தி ஆகிறது. புத்தி என்பது ஒரு பொருளைப் பார்த்தவுடன் இது இன்னது என தன் மனதில் பதிந்துள்ள பொருளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அறிந்து கொள்கிறது.
அறிந்தவுடன் அந்தப்பொருளை அத்துடன் விட்டுவிட்டால் பரவாயில்லை. அது எங்கே கிடைக்கும், என்ன விலை என்று அது பற்றிய செய்திகளைக் கேட்கத் தோன்றுகிறது. அந்தப் பொருளை நான் வாங்கினால், வாங்கியாக வேண்டும். இந்த எண்ணம்தான் அகங்காரம்.
இந்த அகங்காரம் மனத்தைத் தூண்டுகிறது. அந்த அலங்காரக் கண்ணாடி மேசையை வாங்குவதற்குப் பணம் எப்படி வரும். எப்பொழுது வாங்கலாம். எப்படி வாங்கலாம் எனத் திட்டம் போடுகிறது. வாங்கியும் விடுகிறது. அதுவும் ஒரு பொருளாக அவர் வீட்டில் அலங்கரிக்கிறது. அடைத்துக் கொண்டு நிற்கிறது.
இப்படித்தான் ஆசை செயல்படுகிறது, செயல்படுத்துகிறது. சித்தியிலேயே இந்த ஆசையைக் கிள்ளி வீசிவிட்டால் மனம் வரை சென்று ஆசை நம்மை ஆட்டிப் படைக்காது.
ஆசையை அகற்றுவது அந்தக்கரணம்
            சுத்தம் என்று அறிந்து கொள் என்ற நாயகம் (15)
என்று ஆசையை அகற்றுவதே மனத்தூய்மை என்கிறது உபதேச நாயகம். சித்தி, புத்தி, அகங்காரம், மனம் இந்நான்கின் தூய்மையே மனத்தூய்மை என்பது இதற்குப் பொருள்.
ஆசையை விட்டொழித்தால் மனம் பதறாது. மனம் பாடுபடாது. அமைதியடையும். அலைபாயாது. அவ்வாறு அமைதியாக உள்ள மனத்தை பெற்று அதில் சச்சிதானந்த ஞானகுருவைத் தியானிக்கும்போது, இன்னும் அமைதி தோன்றும் ஆனந்தம் விளையும். அவரின் சபையில் அது நித்தியம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஆசை அகன்று போகிறது. அமைதி நிலைத்துத் தோன்றுகிறது.
            சச்சிதானந்த சபை சற்குருவாக வந்து
            தரணியை ஆண்ட நாயகம்
என்று மனம் அமைதி பெற வழி சொல்கிறது உபதேச நாயகம். ஆசையை அவிப்போம். சச்சிதானந்த குருவைத் தொழுவோம். சபைக்குச் செல்வோம். ஆனந்தம் பெறுவோம்.

கருத்துகள் இல்லை: