தமிழ் நாவல் உலகில் ஆளுமை மிக்க எழுத்தாளர்கள் என்று குறிப்பிட்ட சிலரைச் சுட்டமுடியும். அச்சிலருள் ஒருவர் லா. ச. ராமாமிர்தம். லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்ற இவரின் பெயர் விரிவு இவரின் ஊரின் தந்தையின் பாசத்தை வெளிப்படுத்தும். இவரின் சிறுகதைகளில், நாவல்களில், கட்டுரைகளில் காணக்கிடைக்கும் காட்சிப்படுத்தல், சுய உணர்வுகள், சுய உணர்வுகளுக்குள் லயித்தல் போன்ற சிறப்பம்சங்கள் இவரைக் குறிக்கத் தக்க ஆளுமையாக தமிழ் நாவல் உலகில் நிலைக்க வைக்கின்றது. இவரின் 'புத்ர', 'அபிதா', 'பாற்கடல்' போன்ற நாவல் படைப்புகள் நுணுக்கமும் அகவெளிப்பாட்டுத் தன்மையும் உடையன.வடமொழி, ஆங்கிலம்,தமிழ் என்று மும்மொழிக்கலவையுடன் தன் படைப்புகளை அளிப்பவர் லா.ச.ரா. இருப்பினும் அந்த அந்த மொழிப் பயன்பாடுகள் படைப்பின் அந்த அந்த இடத்திற்கு மிகவும்பொருத்தமாக அமைந்துவிடுவதால் வாசகருக்கு அவை எந்த இடையூறையும் தருவதில்லை. இவர் எழுத்தலங்காரம் மிக்கவராக, கைவினையாளராக தமிழ்ப் படைப்புலகில் அறியப் பெறுகிறார். திறனாய்வாளர்கள் 'எழுத்துக் கைவினைஞர்' என்றே இவரைக் குறிப்பிடுகின்றனர். இதற்குக் காரணம் இவரின் மொழியில் கலந்திருக்கும் நுட்பமான கலைப்பகுதிகள் ஆகும்.‘‘அபிதா’’ நாவல் மிகக் குறைவான கதாபாத்திரங்களை உடையது. அம்பி என்ற பாத்திரம் இந்நாவலின் தலைமைப் பாத்திரம் ஆகும். இப்பாத்திரம் இந்நாவல் பகுதியை முழுக்க எடுத்துக் கொள்கின்றது. வேறு பாத்திரங்களுக்கு இடங்கொடுக்க முடியாமல் அம்பியை விரிக்கும் நோக்குடனே இந்நாவலை லா. ச.ரா எழுதியுள்ளார். இந்நாவல் முழுக்க இப்பாத்திரத்தின் மன இயல்பே விரித்துரைக்கப் பெறுகிறது. இப்பாத்திரத்தைச் சுற்றியே மற்ற பாத்திரங்கள் இயங்குகின்றன. இப்பாத்திரத்தின் விருப்பப்படி மற்ற பாத்திரங்கள் இயங்காவிட்டாலும், இப்பாத்திரத்தை மையப்படுத்தி இயங்குவதாகவே லா.ச.ரா படைத்திருக்கிறார். இப்பாத்திரத்தின் உளப்பகிர்தலே இந்நாவல் ஆகும்.
‘‘அம்பாளின் பல நாமங்களில் அபிதகுசலாம்பாளுக்கு நேர் தமிழ் “உண்ணாமுலையம்மன்.” இட்டு அழைக்கும் வழக்கில் பெயர் "அபிதா.’’ வாய்குறுகியபின் ‘அபிதா’- ‘உண்ணா’. இந்தப் பதம் தரும் பொருளின் விஸ்தரிப்பில் கற்பனையின் உரிமையில் அபிதா- ‘ஸ்பரிசிக்காத’, ‘ஸ்பரிசிக்க இயலாத’ என்கிற அர்த்தத்தை நானே வரவழைத்துக் கொண்டேன்” என்று இந்நாவல் எழுந்த கற்பனையை எடுத்துரைக்கிறார் லா.ச.ரா.இந்நாவலின் கதை என்பது மிகச் சிறியதுதான். அம்பி என்ற இளைஞன் தன் இளவயதில் கரடி மலையில் வாழும் சகுந்தலை என்ற பெண்ணின்மீது ஒருவகை ஈர்ப்பினைப் பெறுகிறான். மாமா வீட்டில் யாருமில்லாத அனாதையாக வளரும் அம்பியை மாமாவின் வார்த்தைகள் ஒருநாள் காயப்படுத்திவிட யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போகிறான். ஓடினவன் தட்டுத் தடுமாறி ஓரிடம் புகுந்து அங்கு சாவித்ரி என்ற பெண்ணை மணக்கிறான். அம்பி முதுமைப் பருவத்தில் சகுந்தலையைத் தேடி வருகிறான். ஆனால் அவள் குடும்பம், குழந்தை என்றாகி ஒருநாள் இறந்துவிட்டாள் என்று அறிகிறான். அவளின் இறப்பின்பின் அவளின் குழந்தை அபிதா சகுந்தலையின் சாயலில் சித்தியின் வளர்ப்பில் வளருகிறாள். வந்த அம்பிக்கு சகுந்தலையின் சாயலில் உள்ள அபிதா சகுந்தலையாகவே தெரிகிறாள். அவளையே சகுந்தலையாக நேசிக்கிறான் அம்பி. அவளில் சகுந்தலையைக் காண்கிறான். மற்றவர்கள் கண்டுகொள்ளாத வகையில் அவளின் வனப்பினை அம்பி ரசிக்கிறான். இதற்கிடையில் சித்தியின் தம்பியாக வரும் (இன்னொரு பாத்திரத்தின் பெயரும் அம்பி) இளைஞன் இவளை ஈர்க்க முயற்சிக்கிறான். அவன் திரைப்படத் துறை சார்ந்தவன். இதன் காரணமாக அபிதாவைத் திரைப்படத்திற்கு அழைத்துப்போக ஒருநாள் வருகிறான். வந்தவனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற அபிதா விபத்தில் இறந்துபோகிறாள். சிறிய காயங்களுடன் திரைத்துறை இளைஞன் அம்பி தப்பிக்கிறான். இரு சக்கர வாகனம் எரிந்துபோகிறது. அபிதா உண்ணாமுலையாளாகவே கன்னியாகவே கலைகிறாள். இதுதான் கதை என்றாலும் அம்பியின் மனதில் எழும் விருப்புகள், கவர்ச்சிகள், ஆசைகள் மறைவில்லாமல் உளவியல் அடிப்படையில் லா.ச.ரா. வால் காட்டப் பெறுகின்றன.நெடுநாளைக்குப் பிறகு தன்னை ஈர்த்தவளை உயிருடன் இருப்பாள் எனக் கருதி காணவருகிறான் அம்பி. அப்போது அவனின் மனநிலையை லா.ச.ரா பின்வருமாறு சித்திரிக்கிறார்:‘‘ உடல் ஒரு கூடு எனில் இதயம் அதனில் குருவி. திடீர் திடீர் திகில் திகில் தொண்டைவரை பறந்து பறந்து மார்த்தட்டில் விழுந்து விழுந்து எழுகையில் அடிவயிறு பகீர் பகீர்- அதன் சிறகுகளின் படபடப்பு என் நெஞ்சின் துடிப்பு. குருவி கொத்து கொத்தெனக் கொத்திக் கொத்தியே மார்ச்சுவர்கள் பிளந்துவிடும்போல் வலி. விண் விண் விண்- ஒரு கையால் மார்பை அழுத்திக் கொண்டே வண்டியை விட்டிறங்குகிறேன்.... இப்போ சக்கு எப்படியிருப்பாள்?
..செவியோரம் ரீங்காரம். புவனத்தையே வளைத்த ஓங்காரம். இதிலிருந்து இந்த நியமனத்துள் எத்தனை சக்கு... எத்தனை நான்.... எத்தனை சாவித்திரி.... எத்தனை எத்தனை....- ஆனால் சக்குவின் ஸ்வரஸ்தானங்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. கதவு திறந்த்தும் ‘‘அம்பி வந்தையா?’’ என்று ஒரே விளிப்பில் கூடத்தில் சிதறிக் கிடக்கும் பெரும் குப்பைகளை ஒரே கை வீச்சில் ஒதுக்கித்தள்ளுவதுபோல் இத்தனை வருடங்களின் கோடுகளை அந்தத் தருண மகிமையில் ஒரே கணத்தில் அழித்துவிடுவாள்.
கதவு திறக்கிறது. கூடவே கிண்கிணி என்
இதயத்திலும் ஒரு-
நானே சரியில்லை. எனக்கே தெரிகிறது.
நான் குடித்ததில்லை. ஆனால் அரைபோதையில் இருக்கிறேன். நெஞ்சிற்குள் பூக்கள் கொத்துக்
கொத்தாய்க் குலுங்க. ஒரு கிளை அசைகிறது. உள்ளெலாம் கம்-
சக்கு
ஆமாம். சக்குவேதான்.
"But my God.
நான் கரடிமலையை விட்டே போகவில்லையோ?
இதுவரை எனக்கு நேர்ந்ததெல்லாம் வெறும் கனவுதானோ? மனிதன் பிறவியெடுத்து வாழ்வோடு
உறவாடி இறந்துபோம்வரை ஒரு ஜன்மா பூராவே கனவாய்க் கண்டு விழித்து எழுந்தும் விட
முடியும் என்பது உண்மைதானா? அப்படியாயின் எது கனவு? இதுவரை கண்டதா? இப்போ காண்பதா?’’
(பக் 35-36)
என்ற இந்த நாவல் பகுதியில் ஒரு
முதுமை நிலை பெற்றவர் தன் பழைய வாழ்வில் லயிக்கும் அனுபவம் அப்படியே கொண்டு
வரப்பெற்று எழுத்தில் சேர்க்கப் பெற்றிருக்கிறது. குறிப்பாக தாயைப் போல பிள்ளை என்ற
வழக்கிற்கேற்ப சகுந்தலையைப் போலவே அவள் மகள் அபிதாவும் தோற்றமளிக்கிறாள். இல்லை...
இல்லை. சக்குவே அபிதா. இந்த்த் தடுமாற்றத்தில் உள்ள அம்பி கதா பாத்திரத்தின் இயல்பை
மிகத் துல்லியமாக எடுத்துரைக்கிறார் லா.ச.ரா.
சகுந்தலையைக் காணப்போகிறோம் என்ற
எண்ணத்தில் அம்பியின் மார் வலிக்க ஆரம்பிக்கிறது. இந்த மார்வலி அபிதா இறந்தபின்
நின்றுபோய்விடுகிறது. இந்த வலியின் தொடக்கம் நிறைவு இதுவே இந்நாவலின் உயிர்ப்பான,
உணர்வுக் குவியலான பகுதி.
இவ்வளவு நாள் ஏக்கத்தையும்
சகுந்தலையைப் பார்க்கும் ஒரே பார்வை தள்ளி வீசிவிடும் என்று நம்புகிறான் அம்பி.
ஆனால் அவன் எதிர்பார்த்ததுபோல் இல்லாமல் அவன் ரசித்த் சகுந்தைலையைக் காண
முடியவில்லை. அவளின் எச்சமான அபிதாவை அவன் காண்கிறான். அபிதாவிடம் ‘‘நான் உன்
அம்மாவைக் காதலித்தேன். அவளை விட்டு விட்டுப் பிரிந்துவிட்டேன். மீளவும் அவளின்
நெருக்கம் தேடிவந்துள்ளேன்’’
என்பதை எல்லாம் சொல்ல அவன் மனம் கூசுகிறது. ஆனால் எனக்குள் இருக்கும் காதல் வேகம்
அபிதாவைக் கண்டால் எப்படிக் குறைகிறதோ அதேபோல் சகுந்தலையிடம் இருந்த அம்பி மீதான
ஈர்ப்பு, அல்லது காதல் நிறைவேறாமல் தொக்கி இருந்து அபிதாவுக்குள் அது உணரப் பட
வேண்டும் என்று எண்ணுகிறான் அம்பி. சொல்லப்படாமலே தன் தாயின் நிறைவோறக்காதல் மகளால்
உணரப்பட்டு அம்மா அடையமுடியாத அம்பியை அபிதா அடைய முற்படவேண்டும் என்று அம்பியின்
மனம் எண்ணுகிறது. இது நிறைவேறாமல் போகின்ற போக்கைத்தான் நாவல் விவரிக்கின்றது.
இந்நாவலின் மற்றொரு உயிர்ப்பான
இடம் சாவித்ரி (அம்பியின் மனைவி) தன் கணவனான அம்பி- அபிதா மீது கொண்டிருக்கிற
ஈர்ப்பினை அறிந்து கொள்வதாக புனையப் பெறுகிற இடம்.
‘‘சாவித்ரி என் ரகஸ்யம் உனக்கு
வெளிச்சமாகிவிட்டதோ? நீ கெட்டிக்காரி. தவிர, பெண் உன்னிடம் எத்தனை நாள் மறைத்து
வைத்திருக்க முடியும்? நானாக சொல்ல நேர்வதைவிட நீயாகவே யூகத்தில் அறிவதே- அல்ல
அறிந்த்தே மேல். கேள்விகள், பதில்கள், மறுகேள்விகள், எதிர் சமாதானங்கள், சண்டைகள்-
எவ்வளவு மிச்சம்! சமாதானம் பதிலாகாது. சமாதானம் என்பதே நாணயமற்ற பதில்.
சந்தேகத்தின் ஊன்று விதை. சந்தேகம்
நமக்குள் இனி ஏன்?
ஆனால் ஓரளவு இந்த நிலைக்கு நீதான்
பொறுப்பென்பேன். ஊரைவிட்டுக் கிளம்புமுன் இடமாற்றமாய் முதன் முதல் எங்கு செல்வது
என்று யோசித்தபோது கரடி மலை பெயரைச் சொல்லி நீதான ஆசைமூட்டிச் சென்று போனதால் நான்
செத்துப் போனதென்று நினைத்த்தையெல்லாம் உயிர்ப்பித்துவிட்டாய். சாவித்ரி, நானொன்று
கண்டேன். எதுவுமே செத்துப் போகல்லையடி!
...இடையில் வந்த மனைவி நீ. என்
விதியை நோக்கிச் செல்ல என்னைவிடு சாவித்திரி. இதை நான் சொல்லாமலே புரிந்து கொள்ள
உனக்குச் சக்தியுண்டு என்பதை நானறிவேன். எப்படியும் என்னிலும் நீ உயர்ந்த சரக்கு.
..இதென்ன சட்டென்று என் கன்னத்தில்
மட்டும் ஈரக் காற்று? சாவித்ரி நீ துப்பினையா? ‘‘தூ அவள் உனக்கு பெண்ணாயிருக்கிற
வயஸாச்சு. இதென்ன அக்கிரமம்? அடுக்குமா? என்கிறாயா? சாவித்ரி இது விட்ட
இடத்திலிருந்து தொட்டுத் தொடர்ந்துவரும் விதியின் பழிவாங்கல். இது உனக்குப்
புரியாது. எனக்கே புரியலியே. இது சகுந்தலையின் கோபம். சகுந்தலை செத்துப்போனபின்
அவள் கோபமாக மாறி என்னை ஆட்டுவிக்கும் ஆட்டத்தில் அபிதா என் பெண்ணோ பெண்டோ, இது என்
செயலில் இல்லை. அபிதாவில் நான் காணும் சகுந்தலை, என்னில் தன் அம்பியைக் காண
மாட்டாளா? சகுந்தலையில் அபிதா, அபிதாவில் சகுந்தலை. ஒருவருக்கொருவர் ஒருவரில்
இருவர். இவர்கள்தான் என் சாபம். என் விமோசனம் இரண்டுமே’’(பக்
103-105).
இப்பகுதியில் அம்பியின் உள்
இருக்கும் சகுந்தலை மீதான ஈர்ப்பு, அபிதாவிடம் இடம் மாறியிருப்பது தெரியவருகிறது.
லா.ச.ரா காதல் என்பதன் உண்மைத்
தன்மையை இ ங்கு ஒளிவு மறைவின்றி எடுத்துரைக்கிறார். காதல், காதலின் தொடர்விழைவாய்
வரும் காமம் இவையெல்லாம் உடல் சார்ந்த இயக்கங்களே என்பதை வெளிப்படுத்த இதைவிடச்
சிறந்த சூழல் வேறு எங்கும் அமையாது.
அம்பி
என்ற பாத்திரம் காதலைத்
தேடுகிறதா அல்லது சகுந்தலை என்ற பாத்திரத்திடம் காமத்தைத் தேடுகிறதா என்ற
ஒரு கேள்வியை இந்நாவலுக்கு வெளியில் நின்று எழுப்பினால் சகுந்தலை என்ற
உடலின் மீதான
விருப்பமே அம்பி தேடிய அல்லது தேடிக் கொண்டிருக்கும் விடியல் என்பது
புலனாகும்.
ஆனால் சகுந்தலை இறந்துபோய்விட்டாள் என்று அறிந்த பின்னரும்கூட அவள் மகள்
அபிதாவிடம் சகுந்தலையைத் தேடும் அம்பியின் விழைவு -படிப்பவர்களுக்குள் இனம்
புரியாத
ஒளிந்து கிடக்கும் உணர்வுகளைத் தட்டி எழுப்பி விடுகின்றது. இதனை லா.ச.ரா
சொல்லில்
சொல்ல வேண்டுமானால்
'சுயநலம்' என்று குறிப்பிடலாம்.
‘‘சுயநலத்தைக் காட்டிலும் பெரிய
உண்மை எது? எனக்குக் காட்டு. உயிர் உண்டான நாளிலிருந்து எல்லா கேள்விகளுக்கும் ஒரே
பதில். சுயத்தைத் தாண்டிக் கேள்வியுமில்லை. பதிலுமில்லை. உண்மையுமில்லை. இதை நான்
சொல்வதே ஒரு சமாதானம்தான்’’
(ப.104) என்பது லா.ச.ராவின்
சொற்கள்.
உயிர்கள் ஒவ்வொன்றும்
சுயநலத்தில் இழுத்த இழுப்பிற்கு ஏற்றபடி ஆடும், அசையும், விரும்பும், வெறுக்கும்
போக்கின. இதை உணர்த்தவே இந்தக் கதை.
அபிதாவில் சகுந்தலையைத் தேடும்
அம்பி, அபிதாவின் துணையாக மற்றொரு அம்பியைக் கதைக்குள் கொண்டுவருவதும் முக்கியமான
திருப்பம். அபிதாவில் சகுந்தலையைக் கண்ட லா.ச.ராவின் படைப்புமனம் அதே சமத்தன்மைக்கு
ஏற்ற வகையில் அம்பியின் இன்னொரு வடிவத்தையும் படைத்துக் கொள்கின்றது. ஆனால் அபிதாவை
இந்த அம்பியும் அந்த அம்பியும் தொடமுடியாத நிலையில் அவளை இறக்கச் செய்துவிடுகிற
படைப்புமனம் விவரிக்க இயலாத கொடுமையைச் செய்துவிடுவதாகவே எண்ண முடிகின்றது.
தன்னை விட்டு அபிதா விலகி இன்னொரு
அம்பியுடன் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து போகிற அளவிற்கு
முன்னேறிவிட்டாள். நாம் அடைய முடியாத்தை அந்த அம்பி அடைந்துவிடக் கூடும் என்பதால்
உடனடியாக அபிதாவை விபத்தில் இறக்கச் செய்துவிடுகிறது லா.ச.ரா. வின் படைப்புமனம்.
அபிதா இறந்த காட்சியை
விவரிப்பதுடன் இந்நாவல் முடிகிறது. ‘‘அர்ச்சனையில், அர்ச்சகன் கையினின்று ஆண்டவன்
பாதகமலங்களை நோக்கிப் புறப்பட்ட மலர்போல் அபிதா மலைமேல் திருவேலநாதர் சன்னதி நோக்கி
ஏறும் படிக்கட்டின் ஒன்று, இரண்டு, மூன்றாவது படிமேல் உதிர்ந்து மலர்ந்தாள்.
தன்மேல் புழுதியைத் தட்டிக்கொண்டு
அம்பி என் பக்கத்தில் வந்து நின்றான். அவனுக்கு ஒரு சிராய்ப்பு கூட இல்லை. மயிர்தான்
கலைந்திருந்தது.
எனக்கு மார்வலி நின்றுவிட்டது.
அபிதா எழுந்திருக்கவில்லை.
இப்போகூட அவளை தொட ஏன் தோன்றவில்லை? அவள் முகத்தின் புன்னகை கூட
மாறவில்லை.
மரத்திலிருந்து பொன்னரளி ஒன்று
நேரே அவள் மார்மேல் உதிர்ந்தது.
சற்று எட்ட மோட்டார் சைகிள் பற்றி
எரிந்து கொண்டிருந்தது’’ (ப.112)
என்று கதை முடிகின்றது.
உண்ணாமுலை – அபிதா- என்ற
தொடர்வில் அவளின் மார் எவராலும் தொடப்படாது பொன்னரளிப் பூவால் மட்டும்
அர்ச்சிக்கத்தக்கதாக கதை முடிந்துபோகிறது. அம்பிக்கு முன்னால் தொடங்கிய மார்வலியும்
நின்று போய்விடுகிறது.
ஒவ்வொருவரின் உள்ளுக்குள்
இருக்கும் சுயம் வெளிப்படுகையில் மற்றவர்க்கு வேண்டுமானால் அசிங்கமாக இருக்கலாம்.
ஆனால் சுயத்தைத் தரிசிக்கும் அந்த மனிதரின் சுயத்திற்கு அது புனிதமானது. அபிதாவின்
நிறைவுற்ற வாழ்க்கை இனிமேல் யாரையும் பழிவாங்க முடியாது. ஏனெனில் அவள் தனக்கென தன்
சாயலைப் பெற்ற ஒரு மகளைப் பெறவில்லை. அந்த அம்பியும் இந்த அம்பியும் இனிமேல்
யாராலும் பழி வாங்கப்படமாட்டார்கள். இரு அம்பிகளும் சகுந்தலை, அபிதா இல்லாத
வெறுமையை எண்ணி கிடைக்காத வெறுமையை எண்ணிக் காலத்தைக் கடத்தலாம். இனிமேல் எந்த
அம்பிக்கும் கரடிமலை சகுந்தலை தோன்றமாட்டாள். கரடிமலை அபிதா தோன்றமாட்டாள்.
மனித மன உணர்வுகளை சுயத்தின்
வெளிப்பாட்டை இந்த வகையில் விளம்பும் லா. ச.ராவின் கைவண்ணங்கள் ஒவ்வொன்றும்
எழுத்துக் கலைவண்ணம் கொண்டவை. தேடிப் படிக்கும் வாசகர்கள் தங்கள் சுயத்தில்
விடுதலையோடு லா.ச.ரா. வின் எழுத்துக்களோடு பயணிக்க இயலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக