ஞாயிறு, செப்டம்பர் 11, 2016

நற்றிணையில் விளிம்புநிலை மாந்தர்



siragu-natrinai5
சமுதாய விலக்கல் என்பது அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கப்பெற வேண்டிய கல்வி, சுகாதாரம், இருப்பிடம், சமுதாய மதிப்பு ஆகியவற்றில் ஏற்படும் தடைகள் அல்லது குறிப்பிட்ட ஒருவருக்கு அல்லது குறிப்பிட்ட குழுவுக்குக் கிடைக்காமல் இருப்பது என்பதை முன்வைப்பதாகும். குறிப்பிட்ட இனத்தை, குறிப்பிட்ட குழுவை விலக்கும்  சமுதாய விலக்கலுக்குப்  பரந்துபட்ட காரணங்கள் பல இருக்கும். இனச்சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், குற்றவாளிகளாக ஆனவர்கள், அகதிகள் போன்ற பலரை உள்ளடக்கியது இந்தச் சமுதாய விலக்கல் என்ற முறை. இந்த விலக்கல் என்பது பலதரப்பட்ட வழிகளில் பலதரப்பட்ட காரணங்களுக்காக சமுதாயத்தில் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றது என்று சமுதாய விலக்கலுக்கு வரையறை தரப்படுகின்றது.
சங்க காலச் சமுதாயமும் ஒரு கூட்டமைப்புச் சமுதாயம். இக்கூட்டமைப்புச் சமுதாயத்தில் பல்வேறுபட்ட ஏற்ற இறக்கங்கள் அமைந்திருந்திருக்கின்றன. சமுதாய நிலையில், வருண அடிப்படையில், பொருளாதார அடிப்படையில், செய்யும் தொழில் அடிப்படையில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. சங்ககாலச் சமுதாயத்தில் இவ்வேற்ற இறக்கங்கள் இருந்தது என்பதும் அவை பாடல்களாக பதியவைக்கப்பெற்றுள்ளன என்பதும் சங்க இலக்கியங்களின் உண்மைத்தன்மையை, அவற்றைப் படைத்த புலவர்களின் நேர்மையை  உணர்த்துவனவாக உள்ளன.
நற்றிணை ஒன்பது அடி முதல் பன்னிரண்டு அடிகள் வரை கொண்ட அகப்பாடல்களைக் கொண்ட நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பாகும். இத்தொகுப்பு சங்க இலக்கிய யாப்பு எல்லையின்படி இடைநிலைப் பாடல்களாக அமைக்கப்பெற்ற தொகுப்பாகின்றது. இத்தொகுப்பு அகப்பாடல்கள் சார்ந்த தொகுப்பு என்றாலும் சமுதாய நிலைகளை ஆங்காங்கு இப்பாடல்கள் சுட்டிச் செல்கின்றன. நற்றிணையில் அமைந்து இருநூற்றுப் பத்தாம் பாடல் விளிம்புநிலை மக்களுக்கு உதவுவதே உதவி என்கின்றது.
அரிகால் மாறிய அம்கண் அகல்வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனோடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்றுதன் செய்வினைப்பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புண்கண் அஞ்சும் பண்பின்
மென்கட் செல்வம் செல்வம்என் பதுவே||( நற்றிணை 210)
என்ற இந்தப் பாடல் தோழி கூற்றாக இடம்பெறுகிறது. இப்பாடலை எழுதியவர் மிளைக் கிழான் நல்வேட்டனார் என்பவர் ஆவார். தலைவி தலைவனைச் சார்ந்து நிற்பவள் ஆவாள். அவளைக் கண்ணீர் சிந்தாமல் மகிழ்வுடன் வாழவைப்பது தலைவனின் கடமை. அவன் இந்நிலையில் தவறுகின்றபோது, தலைவி அழுகிறாள். இது கண்டு தோழி பாடிய பாடல் இதுவென்றாலும் இதிலுள்ள சமுதாய அறம் குறிக்கத்தக்கது.
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று. ஒருவரால் புகழப்படும் மொழிகளைப் பெறுவதும், யானை, குதிரை ஆகியவற்றில் வேகமாகச் செல்லுதலும் புகழ் உடையன அல்ல. இப்பெருநிலைகள் அவரவரின் வினைப்பயன்களால் ஏற்படுவதாகும்.
சான்றோரால் போற்றப்படும் செல்வம் எது என்றால் தன்னைச் சார்ந்தவர்களைத் தாங்கும் பணியே செல்வமாகும். அவர்களிடம் அன்போடு இருக்கும் பண்பே செல்வங்களில் சிறந்த செல்வம் ஆகும். இப்பாடலில் பொருள் வறுமை சொல்லப்பட்டுள்ளது. இந்தப் பொருள் வறுமையே சமுதாய விலக்கலுக்கு அடிப்படைக் காரணம் என்பது அறிஞர்களின் முடிவு. ‘Naverial poverty’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கு விளக்கம் தரும் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.
ஒரு நாட்டைச் சேர்ந்தோரை, ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தோரை, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தோரை கண்கலங்காமல், விலக்காமல் காக்கும் நன்முறையே செல்வம் ஆகும் என்ற உயர்ந்த நோக்கு சங்க இலக்கியங்களில் இருந்தது என்பதற்கு இப்பாடல் அழியாச்சான்றாகின்றது.
கழைக்கூத்து ஆடுபவர்கள்
siragu-natrinai2
தற்காலத்தில் தெருக்களில் பொதுமக்கள் அரங்கில் சாகச நிகழ்வுகளைச் செய்து காட்டும் கழைக் கூத்துகள் நடைபெற்று வருகின்றன. இந்நடைமுறை சங்க இலக்கியமான நற்றிணையில் கழைக் கூத்து என்ற பெயரிலேயே நடைபெற்றுள்ளது. இக் கூத்து ஆடுவோரின் நிலை அவர்களுக்கு உரிய சமுதாய மதிப்பினை, உணவு, இருப்பிடம், உடை ஆகியவற்றை சரிசமமாக பெற முடியாத நிலையில் இருந்தனர் என்பதும் தெரியவருகிறது.
கழைபாடு இரங்க பல்லியம் கறங்க
ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிறு
அதவத் தீம்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக்
கழைக்கண் இரும்பொறை ஏறிவிசைத்து எழுந்து
குறக்குறு மாக்கள் தாளம் கொட்டும்அக்
குன்றகத் ததுவே கொழுமிளைச் சீறூர்
சீறுரோனே நாறுமயிர்க் கொடிச்சி
கொடிச்சி கையத் ததுவேபிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே (நற்றிணை 95)
என்ற இந்தப் பாடலில் கழைக் கூத்து பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.
கழை என்றால் ஊதுகுழல் என்று பொருள்படும். ஊதுகுழல் ஒரு பக்கம் இசைக்க, பல இசைக் கருவிகள் முழங்க, முருக்குண்ட கயிற்றின் மீது ஆடுமகள் ஆடும் நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது. இப்போது ஆட்கள் இன்றிக் கிடக்கும் இவ்விடத்தில் உள்ள கயிற்றின் மீது அத்திப்பழம் போன்ற சிவந்த முகத்தையும், பஞ்சு போன்ற தலையையும் உடைய குரங்கு ஏறி ஆடுகின்றது. இவ்வாட்டத்திற்கு மலைப்பகுதியில் வாழும் சிறுவர்கள் பெரிய பாறையின் மீது ஏறிநின்று தாளங்களை இசைத்தனர். மீளவும் ஒரு கழைக் கூத்து அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவ்வூரில் உள்ள நறுமணக் கூந்தலை உடைய கொடிச்சியிடம் என்மனம் பிணிப்புற்றுக்கிடக்கிறது. அவள் இரக்கப்பட்டு விடுதலை அளித்தால் மட்டுமே என் நெஞ்சை விடுவிக்க இயலும் என்பது இப்பாடலின் கருத்தாகும்.
இப்பாடலில் கழை என்ற சொல் கவனிக்கத்தக்கது. ஊதுகுழல் கொண்டு ஆடும் ஆட்டம் கழைக் கூத்தாகின்றது. சங்ககாலக் கூத்து முறைகளில் இதுவும் ஒருவகைக் கூத்தாகும். கழைக்கூத்து என்று நற்றிணையில் தொடங்கப்பெற்ற இவ்வாட்டமுறை இன்னமும் தமிழகத்தில் நடைபெற்றுவருவது என்பது சங்ககாலத்தின் தொடர்ச்சி என்றே கருதவேண்டும்.
ஒவ்வொரு இடமாக இக்கழைக் கூத்தர் தன் ஆட்டங்களை நடத்திக் கொண்டு வருகின்றனர் என்று கொண்டால் இவர்களுக்கு என்று நிலைத்த வாழ்விடம் என்பது இல்லை என்பது தெளிவாகின்றது. தனக்கென ஒரு நிலைத்த வாழ்வை, வாழ்க்கையைப் பெறாமல் நாடோடிகளாகவே இக்கழைக்கூத்தினர் இன்றுவரை இருக்கின்றனர் என்று காணும்போது அவர்களின் நிலை இரங்கத்தக்கதாக இருக்கின்றது. தொடர்ந்து இந்நிலைப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர் என்பதும் இன்னமும் இரங்கத்தக்க செய்தியாகும்.
பாணர் குலம்
siragu-natrinai6
தலைவனுக்கும் தலைவிக்கும் ஏற்படும் ஊடலைத் தீர்க்கும் குலமாக விளங்குவது பாணர் குலம் ஆகும். இப்பாணர் குலம் இசையோடும், கூத்தோடும் தொடர்புடையது என்றாலும், இவர்களும் சமுதாயத்தில் ஏற்கப்படாதவர்களாகவே இருந்துள்ளனர்.
விளக்கின்அன்ன சுடர்விடு தாமரை
களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க
வாளை விறழும் ஊரற்கு நாளை
மகட்கொடை எதிர்ந்த மடம்கெழு பெண்டே
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி
உடன்பட்டு ஓராத் தாயரொடு ஒழிபுடன்
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை
வள்உயிர்த் தண்ணுமை போல
உள்யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே|| (நற்றிணை, 310)
மகட்கொடை எதிந்த மடம்கெழு பெண்டே! என்ற விளி விறலிக்கு உரியதாகும். நாள்தோறும் புதிய புதிய பரத்தைகளைத் தலைவனுக்கு அறிமுகப்படுத்தும் விறலியே என்பது இவ்விளியின் விரிவாகும்.
இத்தகைய விறலி அன்றைக்குத் தலைவியை, தோழியை ஆற்றுப்படுத்தித் தலைவனை ஏற்க வைக்க மென்மையான மொழிகளைச் சொல்லுகிறாள். இதனைக்கேட்ட தோழி எங்களை சமாதானம் செய்யவேண்டாம். நாளைக்கு வேண்டிய பரத்தையை, அவளின் தாயைச் சென்று நீ பார்ப்பது உனக்கு நன்மைதரும். எங்களிடம் நீ பேசும் சொற்கள் எவ்வாறு உள்ளன என்றால் பாணன் கையிலுள்ள தண்ணுமைக் கருவிபோன்று உள்ளே ஒன்றும் இல்லாமல் உள்ளன. இவற்றை பரத்தையரிடம் போய்ச்சொல் அவர்கள் நம்புவார்கள் என்று வாயில் வேண்டி வந்த விறலியை மறுக்கிறாள் தோழி.
இதில் சங்க காலத்தில் வாழ்ந்த கலைஞர்களான விறலி, பாணன் ஆகியோர் நிலைபற்றியும் அவர்களைச் சமுதாயம் மறுக்கும் நிலை குறித்தும் அறிந்துகொள்ளமுடிகின்றது.
பாணர்கள் பொய் சொல்பவர்கள் அவர்களை நம்பாதீர்கள் என்று தலைவியர்க்கு அறிவிக்கிறாள் மற்றொரு தோழி.
கைகவர் நரம்பின் பனுவற் பாணன்
செய்த அல்லல் பல்குவை எயிற்று
ஐதுஅகல் அல்குல் மகளிர் இவன்
பொய்பொதி கொடுஞ்சொல் ஓம்புமின் எனவே|| (நற்றிணை- 200)
என்ற இந்தப்பாடலடிகளில் பாணன் பொய்பொதி கொடுஞ்சொல் சொல்பவன் என்று காட்டப்பெற்றுள்ளது. அவனின் இசைத்திறம் கைகவர் நரம்பு என்பதால் தெரியவருகிறது. அவன் பாடும் தன்மை உடையவன் என்பது பனுவல் பாணன் என்பதால் அறியவருகிறது. இவ்வாறு பாணன் என்ற கலைப்பிரிவினரை விலக்கச்சொல்லும் பாங்கு நற்றிணையில் தெளிவாக அமைந்துள்ளது.
தலைவன் தலைவியை அடைய வாயிலாக வரும் கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவது என்பதும் அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லர் என்பதும், அவர்கள் விலக்கப்படக் கூடியவர்கள் என்பதும் மேற்கண்ட பாடல்களால் தெரியவருகின்றன.
குயவன்
siragu-payanilaa1
ஊரில் திருவிழாக்கள் நடைபெறும்போது அத்திருவிழாக்களுக்கு அனைவரும் வருகை தரவேண்டும் என்ற செய்தியைக் குயவர் மரபினர் ஊருக்குச் சொல்லியுள்ளனர் என்பது நற்றிணையின் பாடல் ஒன்றால் தெரியவருகிறது. மேற்பாடலின் முன்பகுதியில் குயவர் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண்குரல் நொச்சித் தெரியல் சூடி
யாறுகிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்
சாறுஎன நுவலும் முதுவாய்க் குயவர்
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ|| (நற்றிணை 200)
கூடலூர்ப் பல்கண்ணனார் பாடிய இப்பாடலில் ஊர்த்திருவிழாவை ஊர்க்கு அறிவிக்கும் நிலைப்பாடுடையவர்கள் முதுவாய்க்குயவர் என்பது தெரியவருகிறது. ஆறுபோல கிடக்கும் நெடுந்தெருவில் திருவிழா நடைபெற உள்ளது என்பதைச் சொல்லுகிற முதிய குடி பிறந்த குயவனே! நீ சொல்லும் திருவிழாச்செய்தியோடு இன்னொன்றையும் இணைத்துச்சொல். அதாவது கைவல் பாணன் பொய் பொதி கொடுஞ்சொல் உடையவன் என்பதாகச் சொல் என்ற செய்தி இப்பாடலில் பதிய வைக்கப்பெற்றுள்ளது.
இதன்வழி குயவர் மரபின் திருவிழா அறிவிப்பதில் முக்கியப்பங்கு வகித்தனர் என்றாலும் அவர்கள் வழியாகவே ஊரில் உள்ளோரை ஏற்பதும், ஊரில் உள்ளோரை விலக்குவதும் ஆன செய்திகள் வெளிப்படுத்தப்பெற்றுள்ளன என்பது தெரியவருகிறது. இவ்வகையில் சமுதாய விலக்கம் எவ்வாறு நடைபெறும் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.
ஏவல் இளையோர்
சங்கச் சமுதாயத்தில் ஏவிய ஏவல்களைச் செய்யும் ஏவல் மரபினர் இருந்துள்ளனர். இவர்கள் இட்ட வேலைகளைச் செய்பவர்கள் என்பதைத்தவிர தனக்கான உரிமை பெற்றவர்கள் இல்லை என்பது இவர்களின் பெயரால் உணரப்பெறுகின்றது.
என்னையும்
களிற்றுமுகம் திறந்த கல்லா விழுத்தொடை
ஏவல் இளையரொடு மாவழிப் பட்டென|| ( நற்றிணை 389)
என்ற இந்தப்பாடலில் ஏவல் இளையருடன் தலைவியின் தந்தை வேட்டைக்குக் கிளம்பிய செய்தி தெரியவருகிறது. இதன் காரணமாக ஏவல் இளையோர் என்ற மரபினர் என்ற குழுவினர் இருந்துள்ளனர் என்பது தெரியவருகிறது. இங்கு தொல்காப்பியர் சுட்டும் ஏவல் மரபு என்பது பொருத்தமுடையதாகின்றது.
ஏவல் மரபின் ஏனோரும் உரியர்
ஆகிய நிலைமை அவரும் அன்னார்|| ( தொல்காப்பியம் 26)
அடியோர், வினைவலர், ஏவுதல் மரபுடைய ஏவலர் ஆகியோர் கைக்கிளை பெருந்திணைக்கு உரியோர் என்பது தொல்காப்பிய மரபு. இதன் காரணமாக ஏவல் மரபினர் அன்பின் ஐந்திணைக்கு உரியோர் அல்லர் என்ற சமுதாய விலக்கம் இருப்பதை உணரமுடிகின்றது.
அகமரபிற்கு உரியோர் என்பவர்கள் மேலோர் என்பதும் கீழோர், ஏவல் மரபிற்கு உரியவர்கள் எனக் கருதப்பட்டவர்கள் அகமரபிற்கு ஏற்றவர்கள் அல்லர் என்பதும் இவற்றின்வழி தெளிவாகின்றது. எனவே சங்க அகப்பாடல்கள் அன்பின் ஐந்திணை என்ற வரையறைக்குள் உயர்ந்தோரை மட்டும் கொண்டுள்ளது என்பது தெளிவு.
பரத்தை மரபினர்
siragu-natrinai4
பொருள் வறுமை மற்றும் பிற காரணங்களால் பரத்தையர் குலம் சங்கச் சமுதாயத்தில் தோன்றுவதற்கான, இன்னும் நீடிப்பதற்கான சூழல் இருந்துகொண்டே உள்ளது. சங்க காலத்தில் பரத்தையர் ஒழுக்கம் என்பது ஏற்பதும் மறுப்பதுமான நிலையைப் பெற்றிருந்தது. தலைவன் எனப்படும் ஆண்வர்க்கத்தினர் இப்பரத்தை ஒழுக்கத்தை ஏற்று தன் ஆளுமையைக் காட்டியுள்ளனர். தலைவியர் பரத்தை ஒழுக்கத்தைக் கடிகின்றனர். மருதத்துறைப் பாடல்கள் அனைத்தும் இச்சாயலுடையவை. இதன் காரணமாக குடும்ப மகளிர், பரத்தையர் ஆகிய இருவரும் ஆண்களால் புறந்தள்ளப்பட்டு சமுதாய மதிப்பு குறைவுபட்டவர்களாக இருந்துள்ளனர்.
பரத்தை ஒருத்தி தன்னைத் தலைவன் விடுத்துச்சென்றதைப் பின்வரும் பாடலில் பதிவு செய்கின்றாள்.
ஈண்டுபெருந் தெய்வத்து யாண்டுபல கழித்தென
பாரத்துறைப் புணரி அலைத்தபின் புடைகொண்டு
முத்துவிளைபோகிய முரிவாய் அம்பி
நல்எருது நடைவளம் வைத்தென உழவர்
புல்லுடைக் காலில் தொழில்விட்டாங்கு
நறுவிரை நன்புகை கொடாஅர் சிறுவீ
ஞாழலொடு கெழீஇய புன்னைஅம் கொழுநிழல்
முழவு முதற்பிணிக்கும் துறைவர் நன்றும்
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
தவறும் நற்கு அறியாய் ஆயின் எம்போல்
ஞெகிழ்தோள், கலுழ்த்த கண்ணர்
மலர்தீய்ந்த தனையர் நின்நயந்தோரே|| (நற்றிணை, 315)
என்ற இந்தப்பாடலில் உள்ளுறைப்பகுதியாக அமைந்துள்ள பகுதி பரத்தையின் நிலை பற்றி உரைப்பதாக உள்ளது.
தெய்வங்களின் பெயர்களால் அமைந்த ஆண்டுகள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாகக் கழிந்தன. நீராடு துரையைச் சார்ந்த கடல் நீரின் அலைகளால் அலைக்கப்பெற்றுப் பழையதாகிப் போன தொழில் செய்ய முடியாத முரிந்த வாயையுடை தோணியை அது பயனற்றது என விட்டுவிடுவர். அது உழவுக்குப் பயன்படுத்திய எருதினை உழவுத் தொழில் செய்வோர் புல்லுடைய தோட்டத்தில் தன் தொழிலைச் செய்ய விடாதபடி விட்டுவிட்டதைப் போல் இருந்தது. இவ்வாறு கடற்பயணத்திற்கு தன் முதுமை கருதி உதவாத தோணியை நல்ல மணத்தை உடைய புகை முதலியவற்றைக் காட்டி, ஞாழல் மரத்துடன் புன்னை மரநிழலும் கூடிய பகுதியில் கட்டி வைத்திருக்கும் துறையை உடையவன் தலைவன் என்பது இப்பாடல் தொடக்க அடிகளில் காட்டப்பெறும் செய்தியாகும்.
ஆண்டுபல ஆனதால் தோணியும் எருதும் அதன் முதுமை கருதி விலக்கி வைக்கப்பெற்றுள்ளது. இத்துறையை உடையவன் தலைவன் என்று பரத்தை குறிப்பிடுகிறாள். முதுமை கருதி சிலவற்றை விலக்கும் போக்கு சங்க காலத்தில் இருந்தது என்பது இதன்வழி தெரியவருகிறது. அவ்வாறு விலக்கும்போது அவற்றுக்கான மதிப்பினை அளித்து விலக்குவது என்பதும் சங்க கால நடைமுறை என்பது தெளிவாகின்றது.
தலைவனே நம்முடைய பழைய காதலை நீ மறந்துவிட்டாயா? காதலை நீ மறந்த காரணத்தால் என் தோள்கள் நெகிழ்ந்து போய்விட்டன. கண்கள் கண்ணீர் சிந்துகின்றன. மலர்  தீப்பட்டதுபோல உன்னை நயந்தவர்களாகிய நாங்கள் வாழ்கிறோம் என்று – பரத்த்தை தலைவனிடம் உரைக்கும் பாடலாக மேற்பாடல் விளங்குகின்றது.
ஆண்டுகள் கழிந்தன. ஆண்டுகடந்த தோணியும், எருதும் விலக்கப்படுகின்றன. அதுபோல ஆண்டுகள் கழிந்து வயதாகிப்போன பரத்தையை விலக்கி நிற்கிறான் தலைவன். அவனிடத்தில் தன் குறையை எடுத்துரைக்கிறாள் பரத்தை.
இப்பாடலின் வழியாக அக்காலத்தில் பரத்தை விலக்கப்படுவதும் அதிலும் குறிப்பாக வயது ஏற ஏற பரத்தை என்ற குலத்தவர் சமுதாயத்தில் விலக்கத்திற்கு ஆளாக்கப்பெறுகிறார்கள் என்பதும் தெரியவருகிறது. வயது குறைவான ஒரு பரத்தை மகளைப் பற்றிய பாடலொன்றும் நற்றிணையில் கிடைக்கின்றது.
நகைநன்கு உடையன் பாண நும் பெருமகன்
மிளைவலி சிதையக் களிறுபல பரப்பி
அரண்பல கடந்த முரண்கொள்தாணை
வழுதி, வாழிய பலஎனத் தொழுது ஈண்டு
மன்எயில் உடையோர் போல அஃதுயாம்
என்னதும் பரியலோ இலம்எனத் தண்நடைக்
கலிமா கடைஇ வந்து எம்சேரித்
தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடமோ அஞ்ச
கண்ணுடைச் சிறுகோல் பற்றிக்
கதம்பெரிது உடையாள்யாய் அழுக்கலோ இலளே|| (நற்றிணை, 150)
என்ற இந்நற்றிணைப்பாடலில் பரத்தை குலம் சார்ந்த முதிய தாய் தன் இளைய மகளை கணுக்களை உடைய மூங்கில் சிறுகோல் கொண்டு அடிக்கும் அளவிற்குக் கோபத்தில் இருக்கிறாள். இதற்குக் காரணம் தலைவன் ஒருவன் குதிரையில் ஏறி நான் இனி அஞ்சமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு, தன் மாலையைக் காட்டிக்கொண்டு வந்து நிற்க என் நெஞ்சம் அவனை நாடியது. இதன் காரணமாக தாய் என்னை அச்சுறுத்தி நிற்கிறாள். பாணனே உன் தலைவனிடம் போய்ச் சொல். பலரது நகைப்பிற்கு ஆளாகிறவன் உன் தலைவன் என்று ஒரு இளம் பரத்தைப் பெண் பேசுகிறாள்.
இளம் பரத்தையின் தாய் அவளின் வயதுச் சிறுமை கருதித் தலைவனிடம் இருந்து: அவளை விலக்குவதாக இப்பாடலைக் கருதவேண்டும்.
வயது இளமையானவர்களும், வயது முதியவர்களும் விளிம்பு நிலை மாந்தர்கள் என்பதும், குறிப்பாக பரத்தையை விலக்குவதற்கு வயது மிக முக்கியமான அடையாளமாகச் சங்கச் சமுதாயத்தில் இருந்துள்ளது என்பதும் கருதத்தக்கது.
பரத்தையரிடத்தில் இருந்துத் தலைவனைக் காப்பாற்றத் தலைவியர் செய்த முயற்சிகள் பல நற்றிணைப்பாடலில் பதிவாகியுள்ளன. அவற்றில் ஒன்று பின்வருகிறது.
விழவும் மூழ்த்தன்று. முழவும் தூங்கின்று
எவன் குறித்தனள் கொல்? என்றிஆயின்
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின்
இளையோல இறந்த அனைத்தற்கு பழவிறல்
ஒரிக்கொன்ற ஒரு பெருந்தெருவில்
காரி புக்க நேரோர் புலம்போல்
கல்லென்றன்றால் ஊரே அதற்கொண்டு
காவல் செறிய மாட்டி ஆய்தொடி
எழில்மா மேனி மகளிர்
விழுமாந்தனர் தம் கொழுநரைக் காத்தே|| (நற்றிணை 320)
விழா முடிந்தது. விழாவிற்கு உரிய அடையாளமாக இசைக் கருவிகளின் முழக்கங்களும் அடங்கின. இச்சமயத்தில் தழையாடை உடுத்திக் கொண்டு பரத்தை ஒருத்தி ஊர் முழுவதும் சுற்றி வந்தாள். அவளின் நிலையைப் பார்த்து ஊரார் அனைவரும் சிரித்தனர். ஏனென்றால் அவள் அழைத்துப்பார்த்த எந்தத் தலைவனும் அவளை நாடி வரவில்லை. மாறாக தலைவியர் அனைவரும் தன் தலைவர்களை அவளிடம் செல்லாதவாறு காத்துக்கொண்டனர். இதன் காரணமாக அவர்கள் நன்மை அடைந்தனர். பரத்தையின் கூவலுக்கு யாரும் செவி சாய்க்காததால் அவள் எண்ணம் நிறைவேறவில்லை என்று ஊரார் சிரித்தனர் என்பது இப்பாடலின் பொருள்.
இதன் காரணமாக பரத்தை மரபினர் தலைவர்களை அபகரித்துத் தன்னை வளப்படுத்திக்கொள்ளும் வழியினர் என்பதும் அவர்களை நகைப்பிற்கு உரியவர்களாக சங்கச் சமுதாயம் வைத்திருந்தது என்பதும் தெரியவருகிறது.
இவ்வாறு நற்றிணையின் வழியாக கழைக் கூத்தாடுபவர்கள், பாணர்கள், குயவர் மரபினர், பரத்தை மரபினோர், ஏவல் மரபினோர் போன்ற பல்வேறு மக்கள் குழுவினர் விளிம்புநிலையில் இருந்துள்ளனர் என்பது தெரியவருகிறது. மேலும் அவர்கள் சமுதாய விலக்கம் பெற்றதற்கு அடிப்படைக் காரணம் பொருள் வறுமை என்பது உறுதியாகின்றது. சங்கச் சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளே விளிம்புநிலை மக்களை உருவாக்கியுள்ளது என்பது முடிவாகின்றது.


thanks to http://siragu.com/?p=21467

கருத்துகள் இல்லை: