ஞாயிறு, செப்டம்பர் 04, 2016

4. தமிழில் வேதாந்தச் சிறப்பு



தமிழ் மொழி இலக்கணச் சிறப்பும், இலக்கியச் சிறப்பும், தத்துவச் சிறப்பும் கொண்ட மொழி. தமிழில் எழுதப் பெற்றுள்ள தத்துவ நூல்கள் உயிர், உடல், இறை பற்றிய பல தெளிவுகளைத் தருகின்றன. தமிழில் சைவ சித்தாந்த நூல்கள் பலவும், வேதாந்த நூல்கள் பலவும் படைக்கப் பெற்றுள்ளன. இத்தத்துவங்கள் அனைத்தும் உண்மையைத் தேடிப் பயணிக்கின்றன. தத்துவ நிலையில் உயிர்களைப் பேரின்பம் பெறச் செய்ய உதவுகின்றன.

கோவிலூர் மடத்தின் மரபில் அமைந்த வேதாந்த நூல்கள் பதினாறு ஆகும். இந்நூல்கள் அனைத்தும் வேதாந்தச் சார்புடையன. மோட்சத்திற்குச் செல்ல விரும்புவோர் இந்நூல்களைப் படிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். அதன்வழி நிற்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

வேதாந்த வழிப்பட்ட பதினாறு நூல்களில் ஒன்று கீதாசாரத் தாலாட்டு என்பதாகும். பாகவதமோ, பகவத் கீதையோ தமிழில் படைக்கப்படாத நிலையில் அவற்றை நிறைவு செய்யும் வகையில் அமைந்த நூல்களுள் ஒன்று கீதாசாரத் தாலாட்டு என்ற ஒன்று ஆகும். இது வேதாந்தப் பாடங்களைக் கற்பவருக்குத் தொடக்க நிலையில் சொல்லித் தரப்பெறும் தத்துவ நூலாகும். இதனைப் படைத்தவர் திருவாமத்தூர் ஸ்ரீ திருவேங்கடநாதர் ஆவார். இவர் தொண்டை நாட்டில் அமைந்திருந்த மாதை என்ற பகுதியின் மன்னராக விளங்கியவர். இவர் வேதாந்தப் பழக்கமுடையவர். இவருக்கு இரு பெண்பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்கு உரிய வயதில் இவர் திருமணம் செய்து வைத்தார். இவ்விருவர்களில் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு வாய்க்கவில்லை. இதன் காரணமாக அப்பெண்ணின் குறையைப் போக்க இவர் ஒரு கண்ணன் பொம்மையைக் கொடுத்து அதனைத் தொட்டிலில் இட்டு வளர்த்துவரச் சொன்னார். அக்குழந்தையைத் தாலாட்டுவதற்காக ஒரு தாலாட்டு ஒன்றையும் பாடித் தந்தார். அவ்வாறு எழுதப்பெற்றதே கீதாச்சாரத் தாலாட்டு என்பதாகும். இத்தாலாட்டினைப் பாடிப் பாடி கண்ணன் உருவத்தைத் தாலாட்டிய அந்தப் பெண்ணிற்குப் பின்னாளில் குழந்தை பிறந்தது என்பது வரலாறு. இவ்வகையில் கீதையைப் போற்றவும், கேட்டது கிடைக்கவும் இத்தாலாட்டு உதவுகிறது.

இத்தாலாட்டு கேள்வி பதில் முறையில் அமைந்துள்ளது. அர்ச்சுணன் போர்க்களத்தில் இருந்தபடி வினாக்களைத் தொடுக்கிறான். சாரதியாக இருக்கும் கண்ணன் தேர்த்தட்டில் அமர்ந்தபடி கேள்விகளுக்குத் தக்க விடையளிக்கிறார். வினாக்களும், விடைகளும் கூர்மையும் தத்துவ ஆழமும் கொண்டன. இருப்பினும் இந்நூல் படிக்க எளிமையாக இருக்கிறது. கீதையை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைகிறது.



போர்க்களத்தில் காண்டீப வில்லைத் தூக்கி வீசிவிட்ட அர்ச்சுணனை ஆசுவாசப்படுத்துகிறார் கண்ண பரமாத்மா. அவன் தெளிந்து சில சந்தேகங்களைக் கண்ணனிடம் கேட்க முனைகிறான். அவன் முதல் கேள்வியைத் தொடங்குகிறான்.

“ கிருஷ்ணா! ஞானிகளாக இருந்தாலும் தனக்கோ, தன் சுற்றத்தினருக்கோ துன்பம் வரும்போது கலக்கம் கொள்ள மாட்டார்களா?”

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுகிறார் கண்ண பரமாத்மா.

இவ்வுலகில் உள்ள அனைவரும் பிறப்பும் இல்லாதவர்கள். இறப்பும் இல்லாதவர்கள். பிறப்பும் இறப்பும் முன் பிறவியில் செய்த வினை காரணமாக உடலுக்கு ஏற்படுகிறது. ஆனால் ஆன்மாவிற்கு ஏற்படுவதில்லை. உலகில் உன் வடிவம் என்பது அழிவில்லாத ஆன்மாவின் வடிவமாகும். இவ்வான்மாவிற்கு இறப்பும் கிடையாது. பிறப்பும் கிடையாது. ஆகவே உடலழிவிற்காக நீ வருந்தவேண்டாம். ஆன்மா நித்தியமானதாக என்றும் இருக்கிறது என்று பதில் தருகிறார் கிருஷ்ணபரமாத்மா.

இவ்வாறு கேள்வியும் பதிலுமாக விரியும் இத்தாலாட்டில் எளிமையான முறையில் வேதாந்தத் தத்துவங்கள் விளக்கப் பெற்றுள்ளன. அவற்றை எண்ணிக் கற்கும் போது உலக வாழ்வில் பல தெளிவுகளைப் பெற வேண்டியிருப்பது புரிகிறது.

ஆன்மா என்பது என்ன? அது ஒன்றா, இரண்டா, பலவா? ஆன்மாவிற்கும் அறிவுக்கும் தொடர்புண்டா? இப்படிப் பற்பல அடிப்படைக் கேள்விகள் ஞானத்தின் பாதையைத் தொடுபவர்களுக்கு எழும். இக்கேள்விகளை அர்ச்சுணன் கேட்பதாகவும் கிருஷ்ணர் பதிலளிப்பதாகவும் அமைத்துச் சிறக்கிறது கீதா சாரத் தாலாட்டு.

ஆன்மா என்றால் என்ன என்ற கேள்விக்குத் தரப்படும் பதில்;

“நித்தியம் ஆகிய ஆன்மா நின் சொரூபம் என்றவாரோ” என்பதாகும். அதாவது அழியாத நிலையில் அமைவது ஆன்மா என்பதை உணரச் செய்கிறது கண்ண பரமாத்மாவின் பதில்.

மேலும், அறிவு என்பது உடல் சார்ந்ததா? உள்ளம் சார்ந்ததா என்றால் இக்கேள்விக்கும் பதில் உரைக்கிறார் கிருஷ்ணர்.

“பிறிவு செயில் அசித்து உடலம்
பிரம்மம் அறிவு என்றவரோ”

என்பது கிருஷ்ணரின் மொழி. அதாவது ஆன்மா எனப்படும் உயிரும் உடலும் இணைந்து நடக்கும் நிலையில் அறிவு இரண்டிற்கும் அமைகிறது. உடல் வேறு, ஆன்மா வேறு என்று பிரித்துப் பார்த்தால் அறிவற்றது உடல். அறிவுடன் விளங்குவது ஆன்மா.

அறிவற்ற நிலையே மாயை எனப்படுகிறது. இதன் காரணமாக அறிவு பெறும் நிலை ஞானம் ஆகின்றது. இந்த ஞானத்தைப் பெற்று முழுமை அடைவது ஆன்மாவின் பணி.

ஆன்மா என்பது ஒன்றா, இரண்டா என்றால் அதற்கும் சளைக்காது பதிலுரைக்கிறார் கிருஷ்ண பரமாத்மா. ஆன்மா ஒன்றே. அது பலவாகத் தோன்றுவது ஏன் என்றால்

“பலகடத்தில் சலத்து உடு பானவிம்பம் தோன்றுதல்போல்
தொலைவுஇல்புத்தி தொறும் ஆன்மா தோன்றுதல் காண் என்றவாரோ”

என்ற பாடலடிகளில் பதில் உள்ளது. ஆன்மா ஒன்றுதான் என்றால் ஏன் பற்பல உயிர்களாகப் பிறக்கவெண்டும் என்பது அடிப்படைக் கேள்வி.


பானைகளில் நீர் ஊற்றிவைக்கிறோம். அந்நீரில் சூரியனின் பிம்பம் படுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு பானையிலும் ஒவ்வொரு சூரியன் இருக்கும். ஆகவே சூரியன் பல இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்து விட இயலுமா.சூரியன் ஒன்றுதான். அதன் பிம்பங்கள் பல. அதுபோல ஆன்மா ஒன்றுதான். அது தன் மனம், புத்தி, சித்து, அகங்காரம் ஆகிய நிலைகளால் பலவாக உருவெடுத்து நிற்கிறது. பின்னர் அது ஒரே ஆன்மாவுக்குள் அடங்கும் என்று வேதவிளக்கம் கிடைக்கிறது.

ஆன்மா சீவன் முத்தர் தன்மையைப் பெறுவது என்பது அதற்குரிய நோக்கமாகும். இந்தச் சீவன் முத்தர்கள் என்பவர்கள் யார் என்றால்

“வரும் கருவு பிறப்பினொடு வளர்தல் பருத்தல் குறைதல்
ஒருங்கலும் மெய்க்கென்று அதனை ஒறுத்திருப்பர் என்றவாரோ”

என்ற பண்புடையவர் ஆவார். அதாவது, தாயின் கருவறையில் இருந்துப் பிறத்தல், வளர்தல், பெருத்தல், சிறுத்தல், அழிதல் ஆகிய வேறுபாடுகள் உடலுக்கு என்று உறுதியாக எண்ணுபவர்கள் சீவன் முத்தர்கள். இவற்றைச் சகித்துக் கொண்டு ஆன்மாவிற்கு அறிவு விளக்கம் தருபவர்கள் சீவன் முத்தர்கள் ஆவர்.

ஆன்மாவைப் பற்றிய வேதாந்த விளக்கங்களை அள்ளித்தரும் செவ்விய நூல் கீதாசாரத் தாலாட்டு ஆகும். இத்தாலாட்டின் நிறைவுப்பகுதியில் கீதையைத் தந்த ஞானாசிரியரே தொட்டிலில் இனிமையாக உறக்கம் கொள்க என்று முடிக்கிறார் திருவேங்கடநாதர்.

தமிழ் நூல்களில் காணப்படும் தத்துவங்கள் உண்மையைத் தேடுவன. அவற்றை விடாது கற்று நல்வாழ்வு பெறுதல் வேண்டும்.

கருத்துகள் இல்லை: