திங்கள், மார்ச் 16, 2015

மலையமான் திருமுடிக்காரியும் முள்ளுர் நாட்டு வளமும்

கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகக் கொள்ளப்பெறுபவன் மலையமான் திருமுடிக்காரி ஆவான். சிறுபாணாற்றுப்படை இவனின் கொடைச்சிறப்பினை …
                                       கறங்குமணி
வாலுளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல் 
கழல்தொடித் தடக்கை காரி 
(சிறுபாணாற்றுப்படை 91-95)
என்று எடுத்துக்காட்டுகின்றது ஒலிக்கின்ற மணிகளை உடைய வெண்மையான பிடரி மயிரினையுமுடைய தன் குதிரையுடன் தன் நாட்டையும் இரவலர்க்கும் வழங்கும் வள்ளலாக மலையமான் திருமுடிக்காரி இருந்துள்ளான்.
மலையமான திருமுடிக்காரியின் மலைநாடு ஆகும். இது மருவி மலாடு என்று வழங்கப்பெற்றிருந்திருக்கிறது. நடுநாடு எனச்சொல்லப்பெறும் பகுதி சங்ககாலத்தில் மலைநாடு, ஓவியர் மாநாடு என்று இருநிலைப்பட்டதாக இருந்துள்ளது. மலாடுக்கு பெண்ணையம் படப்பை நாடு என்ற பெயரும் உண்டு. இம்மலைநாடு கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர்ப்பேட்டை ஆகிய ஊர்களையம், கல்வராயன் மலைகளையும் உள்ளடக்கியப் பகுதி என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். (தமிழநம்பி வலைப்பூ) இந்நாட்டினைச் கடைச் சங்க காலத்தில் ஆண்டவன் மலையமான் திருமுடிக்காரியாவான்.
இவனின் மலை முள்ளூர் மலையாகும். இவனின் தலைநகரம் திருக்கோவலூர் ஆகும். இவன் வீரம் செறிந்தவன். கொடைநலம் உடையவன். இவனைப் பற்றிய குறிப்புகள் அகநானூறு, நற்றிணை, கலித்தொகை, குறுந்தொகை, புறநானூறு போன்ற பல சங்கப் பனுவல்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இருந்து இவனின் வரலாற்றை ஓரளவிற்கு அறிந்து கொள்ள முடிகின்றது.
“துஞ்சா முழவின் கோவல் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன்துறை
பெண்ணையம் பேரியாற்று நுண்அறல்கடுக்கும்
நெறிஇருங் கதுப்பின்” 
( அகநானூறு 35)
என்ற அகநானூற்றுப் பாடல் குறிப்பு காரியின் அரசியல் சிறப்பை விளக்குவதாக உள்ளது. முழவுகள் ஒலித்துக்கொண்டே இருக்கும் நாட்டினை உடையவன் திருக்கோவலூரைத தலைமையிடமாகக் கொண்டு ஆளும் கோமான் காரி. இவன் நெடிய தேர்களை உடையவன். இவனின் சிறப்பு மிக்க நகரங்களுள் ஒன்று கொடுங்கால். இது பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வாற்றின் நுண்ணிய கருமணலைப் போன்ற கூந்தலை உடையவள் தலைவி என்று தலைவியின் அழகு சிறப்பிக்கப்பெறும் இடத்தில் காரியின் பெருமை பேசப்பெருகின்றது.
இப்பாடலின்வழி தென் பெண்ணையாற்றின் கரை சார்ந்த பகுதிகளை ஆண்டவன் காரி என்பது உறுதியாகின்றது. மேலும் அவனின் தலைநகரம் கோவல் எனப்பட்ட திருக்கோவலூர் என்பதும், அவனின் சிறப்பு மிக்க நகர்களுள் ஒன்று கொடுங்கால் என்பதும், அவன் எல்லைக்குட்பட்டு ஓடிய ஆறுகளில் ஒன்று தென்பெண்ணையாறு என்பதும் தெரியவருகின்றது.
மலையமான் திருமுடிக்காரியின் வீரச்சிறப்பு:
மலையமான திருமுடிக்காரி வீரஞ் செறிந்தவன். இவன் பல மன்னர்களுக்குப் போர் உதவி செய்துள்ளான்.
ஆரியரை வென்றவன்:
“ஆரியர் துவன்றிய பேர்இசை முள்ளூர்ப் 
பலர் உடன் கழிந்த ஒள்வாள் மலையனது
ஒருவேற்கு ஓடி யாங்குதம்
பன்மையது எவனோஇவன் நன்மைதலைப் படினே” 
(நற்றிணை- 170)
என்ற நற்றிணைப் பாடலில் ஆரியரை வென்றவன் மலையமான் என்ற குறிப்பு காணப்படுகிறது.
இப்பாடலில் தலைவி தன் பக்கத்து உள்ள அனைத்துத் தலைவியரையும் அழைத்து, அழகுடன் விளங்கும் விறலியிடமிருந்துத் தலைவனைக் காக்க எழுங்கள் என்று உரைக்கிறாள். அவ்வாறு செய்யவில்லை என்றால் ஆரியர்கள் நெருங்கிப் போர் செய்ய வந்தபோது ஒப்பற்ற தன் வாளை எடுத்துப் போர்புரிந்து ஆரியப்படையை விரட்டிய மலையமானின் திறம்போல நாமும் ஒழிய வேண்டியதுதான் என்பது தலைவி கூற்றாகும்.
இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக்குறிப்பின்படி மலையமான ஆரியரை வென்றச் சிறப்பினை உடையவன் என்பது தெரியவருகிறது.
சேர மன்னனுக்குப் போர் உதவி புரிந்தவன்:
முள்ளூர் மன்னனாகிய மலையமான் சிவந்த வேலினை உடையவன். இவன் வீரவளையை அணிந்தவன். இவன் கொல்லிப்பாவையைக் கைப்பற்றுவதற்காகச் சேரமன்னனுடன் முரண்பட்ட கடையெழுவள்ளல்களில் ஒருவனான ஓரியைக் கொன்று அப்பாவையைச் சேரனுக்கு உடைமையாக்கித் தந்தான் என்ற வரலாற்றுக் குறிப்பு அகநானூற்றுப் பாடல் ஒன்றில் பதிவாகியுள்ளது.
“முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்இசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈந்த
செவ்வேர்ப் பலவின் பயம்கெழு கொல்லி
நிலைபெறு கடவுள் ஆக்கிய
பலர்புகழ் பாவை அன்ன நின் நலனே” 
(அகநானூறு, 209)
ஓரியை வென்றுச் சேரனுக்கு மலையமான அளித்த கொல்லிப்பாவை போன்ற அழகுடையவள் தலைவி என்பதைக் கல்லாடனார் இப்பாடலடிகளில் காட்டியுள்ளார்.
சோழ மன்னனுக்கும் போர் உதவி புரிந்தவன்:
மலையமான் திருமுடிக்காரி மற்றொரு சமயத்தில் சோழனுக்குப் போர் உதவி புரிந்திருக்கிறான். ஒருமுறை சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவனும், சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் போர் புரிந்தனர். இவர்கள் இருவரில் சோழனுக்குச் சார்பாய் காரி நின்று வெற்றியைப் பெற்றுத் தந்தான். இவ்விருவரும் காரியைப் போர் கருதி எந்நாளும் நினைவு கூர்ந்தனர்.
“குன்றத்து அன்ன களிறு பெயரக்
கடந்துஅட்டு வென்றோனும் நிற்கூ றும்மே
வெலீஇயோன் இவன் எனக்
கழல்அணிப் பொலிந்த சேவடி நிலம்கவர்பு
விரைந்துவந்து சமம் தாங்கிய
வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
நல்அமர் கடத்தல் எளிதுமன் நமக்குஎனத்
தோற்றோன் தானும் நிற்கூ றும்மே”
(புறநானூறு, 125)
என்ற பாடலில் திருமுடிக்காரி வெற்றிக்கும் காரணமாகின்றான். தோல்விக்கும் காரணமாகின்றான் என்று காட்டப்பெற்றுள்ளது.
வென்றவர்கள் மலைபோன்ற யானைப்படை அழிந்துபோனாலும் அதன் அழிவைக் கருதாது வெற்றியைப் பெற்றுத்தந்தவன் காரி என்று வென்ற மன்னன் காரியைப் பாராட்டுகிறான்.
வெற்றிவேல் உடைய காரி வாராது இருந்திருந்தால் இத்தோல்வி கிடைத்திருக்காது என்று தோல்வி பெற்றவனும் காரியை எண்ணுகிறான். இவ்வளவில் பகைவர்க்கும், நண்பர்க்கும் முருகவேள் போலக் காட்சி தருகிறான் காரி என்று இந்தப்பாடலைப் பாடியுள்ளார் வடம வண்ணக்கண் பெருஞ்சாத்தன்.
கொடைச்சிறப்பு:
காரி கொடைச்சிறப்பு மிக்கவன். இதன் காரணமாகவே இவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாக ஆக்கப்பெற்றுள்ளான். மற்றவர்கள்போல் இவன் கொடைமடம் மிக்கவன் அல்லன். உண்மையான கொடைத்திறம் மிக்கவன். தன்னைப் பாடியவர்களுக்குப் பொன்னும் பொருளும் அளித்தவன். ‘மாரி ஈகை மறப்போர் மலையன்’ என்று கடையெழு வள்ளல்களில் இவன் குறிக்கப்பெறுகிறான். (புறநானூறு 158) மாரி போன்ற ஈகையன் காரி. மறப்போர் வல்லவன் மலையன் என்பது இப்பாடலடிகளின் பொருளாகும்.
கபிலரால் பாடப்பெற்றவன் என்ற பெருமைக்குரியவனாக இவன் போற்றப்பெறுகிறான். இதனை மற்றொரு புலவரான மாறோகத்து நப்பசலையார் இதனைப் பின்வரும் பாடலில் பதிவு செய்கின்றார்.
“ஒன்னார் யானை ஓடைப்பொன் கொண்டு
பாணர் சென்னி பொலியத் தலைஇ
வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
ஓடாப் பூட்கை உரவொன் மருக
வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே
நினவயிற் கிளக்குவம் ஆயின் கங்குல்
துயில் மடிந்தன தூங்கிருள் இறும்பின்
பறைஇசை அருவி முள்ளூர்ப் பொருந
தெறலரு மரபின்நின் கிளையொடும் பொலிய
நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம்
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்
இரந்து சென்மாக்கட்கு இனிஇடன் இன்றிப்
பரந்து இசை நிற்கப் பாடினான்” 
(புறநானூறு 126)
என்ற பாடலில் மலையமான் திருமுடிக்காரியின் புகழ் கபிலரால் பாடப்பெற்று நிலைநிறுத்தப்பெற்றுள்ளது என்பது தெரியவருகிறது. இதன்வழி கபிலரின் புகழும், காரியின் பெருமையும் ஒருசேர வெளிப்படுகின்றன.
காரியின் முன்னோர் புறமுதுகு காட்டாத மன்னர் பரம்பரையினர், அவர்கள் பாணர்க்குப் பொன் பூ சூட்டியவர்கள். இப்பரம்பரையில் வந்த மலையமான் போரில் வல்லவன். அவன் புகழ் நிற்கக் கபிலர் பாடியுள்ளார் என்பது இப்பாடலின் பொருள்.
மலையமான் திருமுடிக்காரியின் இயல்புகளைக் கபிலர் பாடிய வகை பின்வருமாறு.
“நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குவர் அல்லர் நெறிகொளப்
பாடு ஆன்று இரங்கும் அருவிப்
பீடுகெழு மலையற் பாடியோரே” 
(புறநானூறு 124)
என்ற இந்தப்பாடலில் கபிலர் நாள், நேரம் பார்த்துக் கொடை பெறவேண்டிய அவசியம் காரியின் அவைக்கு இல்லை என்று குறிப்பிடுகிறார். இது கொடை பெறுவதற்கான, அல்லது தருவதற்கான நாள் இல்லை என்றாலும், பறவையின் குறிப்பும் நல்லமுறையில் இல்லை என்றாலும், சென்று காணக்கூடிய சமயம் இது இல்லை என்றாலும் காரியிடம் சென்றுத் திறனற்ற சொற்களைச் சொன்னாலும் சென்றவர்கள் பரிசின்றித் திரும்பாத கொடைத்தன்மை பெற்றவன் காரி என்று கபிலர் புகழ்கின்றார்.
காரி தேர் தருபவன் என்பதை மற்றொரு கபிலரின் பாடல் காட்டுகின்றது.
“நாட்கள் உண்டு நாள் மகிழ்மகிழின்
யாரக்கும் எளிதே தேர்ஈதல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப் 
பட்ட மாரி உறையினும் பலவே”
(புறநானூறு, 123)
என்ற இப்பாடலில் பெரும்பாலும் மன்னர்கள் மதுவுண்டு மயக்கத்தில் இருக்கையில் புவலர்கள் பாடச் செல்வது அல்லது அவர்களை பாட அழைப்பது என்ற வழக்கம் சங்க காலத்தில் இருந்ததைக் காட்டுகின்றது. அக்காலத்தில் தேர்கள் பல தருவது என்பது கள்ளின் மயக்கம், புகழின் போதை. ஆனால் கள்ளுண்ணாத காலத்திலும் பற்பல செல்வங்களை, தேர்களை அளிக்கும் வள்ளல் தன்மை பெற்றவன் காரியாவான் என்பது இப்பாடலின் பொருளாகின்றது.
மற்றொரு பாடலில் மூவேந்தருக்கு உதவியவன் காரி என்ற குறிப்பினை இடம்பெறச் செய்கிறார் கபிலர்.
“கடல்கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
கழல்புனை திருந்து அடி்க்காரி நின்நாடே
அழல்புறம் தரூஉம் அந்தணர் அதுவே
வீயாத் திருவின் விறல் கெழுதானை
மூவருள் ஒருவன் துப்பாகியர் என
ஏத்தினர் தரூஉங் கூழே நும்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே
வடமீன் புரையும் கற்பின் மடமொழி
அரிவை தோள் அளவு அல்லதை
நினது என இலை நீ பெருமிதத்தையே” 
(புறநானூறு 122)
என்ற இப்பாடலில் அந்தணர்க்கு வரையாது வழங்கியவன் காரி என்ற கருத்து உரைக்கப்பெற்றுள்ளது. இப்பாடலில் காரி மூவேந்தருள் ஒருவர்க்கு உதவியவன் என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. காரி மூவேந்தருள் சேரருக்கு ஒருமுறையும், சோழர்க்கு ஒருமுறையும் போர்உதவி செய்துள்ளான். இதனைக் கபிலரின் நயமாக மூவேந்தரில் இருவருக்கும் பொருந்துமாறு வெளிப்படுத்தியுள்ளது. காரிக்கு அவனின் மனைவியின் தோளே சொந்தம். மற்ற எதுவும் சொந்தமில்லை என்ற நிலையில் வரையாது வழங்கும் வள்ளல் காரி எனக்குறிக்கின்றார் கபிலர்.
இவ்வாறு காரியின் வீரமும் கொடையும் இணைத்துச் சங்கப்பாடல்களில் பாடப்பெற்றுள்ளன.
மலையமான் பரம்பரை:
காரி இறந்தபின் அவனின் மகன்களுள் ஒருவனான மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்பவன் பட்டமேற்கிறான். அவனைப் பற்றிய குறிப்பு ஒன்றும் புறநானூற்றுத் தொகுப்பில் கிடைக்கின்றது. இப்பாடலைப் பாடியவர் மாறோகத்து நப்பசலையார். தந்தையையும் பாடியவர், மகனையும் பாடியவர் என்ற பெருமைக்கு உரியவராக இப்புலவர் விளங்குகின்றார்.
“அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென,
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல்
5
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு,
அரசு இழந்திருந்த அல்லல் காலை,
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது
இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி
மல்லல் நல் நாட்டு அல்லல் தீர,
பொய்யா நாவின் கபிலன் பாடிய,
மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச்
செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,
அரு வழி இருந்த பெரு விறல் வளவன்
மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந!
விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண்,
சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன்
ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர்,
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்,
ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலம் தீர,
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!
கல் கண் பொடிய, கானம் வெம்ப,
மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க,
கோடை நீடிய பைது அறு காலை,
இரு நிலம் நெளிய ஈண்டி,
உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே.”
(புறநானூறு, 1740)
என்ற இப்பாடலில் மலையமானின் மகன் பற்றி புகழ் பதிவு செய்யப்பெற்றுள்ளது. திருமால் ஒளிந்த ஞாயிற்றைக் கொண்டு வந்து உலகை மீளவும் காப்பாற்றியது போல சோழ மண்டலத்தின் அரசன் தோற்று ஓடியபோது, அவரைப் பாதுகாத்து முள்ளுர்ப் பகுதியில் தங்கவைத்துத் தேவையான நேரத்தில் வெளிப்படுத்தியவன் திருக்கண்ணன். இவனின் தந்தையான மலையமான் திருமுடிக்காரி இவ்வுலகில் அறம் செய்து அதன் பயனை அனுபவிக்க மேலுலகம் சென்றுள்ளார். அப்பெருமான் கபிலர் வாயினால் புகழப்பெற்றவன். அவன் வழியில் வந்த நீ தேவையான நேரத்தில் பெய்யும் மழையை ஒத்தவன் ஆவாய் என்று பாடல் புகழ்கின்றது.
இப்பாடலின் வாயிலாக மலையமான் திருமுடிக்காரியின் சந்ததியை அடையாளம் காணமுடிகின்றது.
மலையமானும் அவன் மகன் திருக்கண்ணனும் பேரரசுகளுக்குப் போர்உதவி புரியும் படைக்குழுவின் தலைவனாக இருந்துள்ளனர் என்பது இப்பாடல்கள் வழியாகத் தெரியவருகின்றது,
இவ்வகையில் மலையமான் திருமுடிக்காரி பற்றிய செய்திகளைச் சங்கப்பாடல்கள் வழியாக அறிந்து கொள்ளமுடிகின்றது.
இவன் மலையான முள்ளூர் சிறப்பானது ஆகும் . இதன் வளத்தையும் புலவர்கள் பாடியுள்ளனர். அவை பற்றிய செய்திகள் பின்வருமாறு.
முள்ளூரின் இயற்கை வளம்:
திருக்கோவிலூர் வட்டத்தில் முள்ளூர் மலைக்காடு என்ற பகுதி உள்ளது. இதுவே மலையமான் திருமுடிக்காரி வாழ்ந்த இடமாக இருக்கவேண்டும்.இவ்விடத்தின் இயற்கைவளம் பற்றிச் சங்க இலக்கியங்களில் எடுத்து மொழியப்பெற்றுள்ளது.
முள்ளூர்க்காடு என்றழைக்கப்படும் தற்காலப் பெயர் அக்காலத்தில் முள்ளூர்கானம் எனப்பட்டுள்ளது. குறுந்தொகையில் ஒரு தலைவி இப்பெயரை அப்படியே பயன்படுத்துவதாகக் கபிலர் பாடுகின்றார். “முள்ளூர்க் கானம் நாற வந்து” (குறுந்தொகை 3120 என்ற கபிலரின் குறிப்பு மணம் மிக்க மலர்களைத் தரும் காடாக முள்ளூர் திகழ்ந்துள்ளது என்பதை உணரமுடிகின்றது.
புறுநானூற்றில் இடம்பெற்ற கபிலரின் பாடலொன்றில் முள்ளூர் மலை உயரமானது என்ற குறிப்பும், அம்மலையில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும் என்பதும் பெறப்படுகின்றது. “பயன்கெழு முள்ளூர் மீமிசைப் பட்ட மாரி உறையினும் பல” (புறநானூறு, 123) என்ற பாடலடியில் முள்ளூர் மழைப்பொழிவு மிக்கது என்பது தெரியவருகிறது.
முள்ளூர்க் கானம் அடர்ந்து இருள் சூழ்ந்து இருந்தது என்பதை மற்றொரு புறநானூற்றுப்பாடல் விளக்குகின்றது. “துயில்மடித்தன்ன தூங்கு இருள் இறும்பின் பறை இசை அருவி முள்ளூர்பொருந ” (புறநானூறு 126) என்ற பாடலில் ஓரிடத்தில் துயில் உறங்குவதுபோல அடர்ந்த இருளை உடையது முள்ளூர் என்றும், மேலும் இம்மலையில் இருந்து அருவி ஒன்று விழுந்தது என்பதும் இப்பாடலடிகள் வழியாகத் தெரியவருகின்றது.
இவ்வாறு முள்ளூர்கானம் சிறப்புடையதாக விளங்கியுள்ளது. இவற்றின் வழி நடுநாட்டில் இருந்த அரசுநிலைபற்றியும்,இயற்கைநிலை பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது.
நன்றி வல்லமை இணையஇதழ்
http://www.vallamai.com/?p=55469


கருத்துகள் இல்லை: