திங்கள், மார்ச் 19, 2012

இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் கிராம சமுதாயம்


சி. இளஞ்சேரன்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
இந்திய மொழிகள் பள்ளி
தமிழ்ப்பல்கலைக் கழகம்
தஞ்சாவூர்

கிராம சமுதாயம் என்பது இயற்கையோடு இயைந்த சமுதாயமாகவும், மனிதர்களின் மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் குறைவில்லாத சமுதாயமாகவும் விளங்குவதாக இலக்குமி குமாரன் ஞானதிரவியம் தன் படைப்புகளில் கண்டுள்ளார்.
இளமைக்காலத்தில் இவருக்குக் கிராம வாழ்க்கை வாய்த்திருக்கிறது. இதன்காரணமாக தன் இளமைக்கால கிராம வாழ்க்கை நினைவுகளை அவர் தன் படைப்புகளில் அசைபோட்டுப் பார்க்கிறார்.
“காட்டுத்தரிசில் ஆட்டை மடக்கிவிட்டு
நாவல், இலந்தை, பலா, ஈச்சை, கலாக்காய், பாலா
எனக் காட்டுப்பழம் சுவைக்க
இரண்டுகால் குரங்காக
கொண்டல் தோறும் குடியிருக்க வேண்டும்
…குதிரிடுக்கில் கோட்டை மீதில்
அடைந்திருக்கும் கோழி பிடித்துக்
குடப்பில் அடைக்கையில்
அடைக்கப்பிடித்தாலும், அடிக்கப் பிடித்தாலும்
அதே கத்தல்தான் சனியன்…
என்ற அப்பாவின் அலுப்பு கேட்டு/
முருங்கைக்காய் போட்டுவைத்த
கருவாட்டுக் குழம்பில்
நல்லெண்ணெய் ஊற்றி
நாலுவாய்த் தின்றுப்பின் நாய்க்கும் போட்டு
… ஆட்டுப்பால் காப்பி குடித்து
வீட்டுப்பாடம் எழுதி”
(இலக்குமி குமாரன் ஞானதிரவியம், நிலாப்பேச்சு, ப. 78)
என்ற கவிதையில் அவர் தன் இளமைக்கால கிராம் வாழ்க்கை முறையை எண்ணிப்பார்க்கின்றார்.
இக்கவிதையில் கிராமத்துக் குழந்தைகளின் வாழ்க்கை முறையையும், அம்முறையில் உள்ள இயல்பான தன்மையையும் இலக்குமி குமாரன் ஞானதிரவியம் கண்டெடுத்துத் தந்துள்ளார்.
அதுபோல கிராமங்களில் கதை பேசிக் கழியும் மகிழ்வான இரவுகள் பற்றியும் அவர் ஒரு கவிதை வடித்துள்ளார். `நிலாப்பேச்சு’ என்ற தொகுப்பின் தலைப்பே இப்பேச்சின் சிறப்பு கருதி எழுதப் பெற்ற கவிதையின் தலைப்பில் இருந்துப் பெறப்பட்டதாக உள்ளது. அக்கவிதையின் சில பகுதிகள் பின்வருமாறு.
“எல்லோருமாய் உண்டபின்பு
கீற்றெடுத்து வாசலில் போடடுக் கொண்டு
நிலாப்பேச்சுக்கு அமர்வோம்.
…சிரிப்பான கதைகள்,
கட்டுமனை நெருக்கடிகள்/
மூன்று மாத தொடர் வெயில்
பெண்களுக்கான விலை
கொடுங்கோடையிலொருமுறை சித்திரை மழையில்
கோட்டவத்து வயல் காடுகளில்
விறால் வெட்டியது
திருவிழாக்கள்
திருவிழாக்களுக்குச் சேர்ந்து போதல்என
சோகம் உரித்தெறிந்த அசல் ஆனந்தப் பேச்சுகள்…
இளநீத் தண்ணிச் சிரிப்புகள்…
நிலவினின்றும் மனதினின்றும் குதூகலம் ஏகமாய்ப் பொழியும்..
”( இலக்குமி குமாரன் ஞானதிரவியம், நிலாப்பேச்சு, ப.74)
என்ற கவிதையில் நிலாக் கால இரவுகளில் கிராமத்து நடைமுறை மகிழ்வு கலந்து விளங்கும் என்று காட்டப் பெற்றுள்ளது.
கிராமத்துச் சூழலை விட்டு நீங்கிப் போகவேண்டிய கட்டாயத்திற்கு இவர் படைத்த `அகஒட்டு’ நாவலின் கதைப் பாத்திரமான செல்வம் முயலுகின்றபோது தான் வாழ்ந்த கிராமத்து வாழ்வை பற்றி அதன் இனிமையைப் பற்றி அசைபோட்டுப் பார்ப்பதுபோல் பல பகுதிகளை அமைத்துள்ளார். அவற்றில் சிறு பகுதி பின்வருமாறு.
” செல்வத்திற்கு மனசு வெறிச்சென்று கிடந்தது. ஏதோ தவறு நிகழப்போகிற உணர்வு வந்து படுத்தியது. இந்த ஆடு மாடுகள், தோப்பு தொரவுகள் அப்பாவின் நினைவில் இந்தப் பெரிய ஓட்டு வீடு, மண் ஒழுங்கைகள், பாலியத்தில் ஏறியாடிய மா, பலா, நாவல், வேம்பு மரங்கள், அறுகு மண்டிக் கிடக்கும் வரப்புகள், நீந்திக் குளித்தாடிய குளங்கள்,அரசியல் பேசிக்கிடக்கும் குளக்கரைப் படிக்கட்டுகள், நிலாவில் நடப்பதற்காகவே பௌர்ணமிக்கால சினிமா… நல்ல காற்று.. நல்ல தண்ணீர் என்று அத்தனையையும் விட்டுவிட்டு ஒரு குளவிக் கூட்டிற்குப் போகவேண்டுமா? போகாமல் இருந்துவிட்டால் என்ன என்று ஒரு நாளைக்கு பத்திருபது முறை யோசனை வந்தது” ( இலக்குமி குமாரன் ஞானதிரவியம், அகஒட்டு, ப.125) என்ற தயக்கமன செல்வத்தின் சொற்களில் கிரமத்து வாழ்வின் மீதான ஈர்ப்பு மிகுந்திருப்பதை உணர முடிகின்றது.
குறிப்பாக நல்ல தண்ணீர், நல்ல காற்று முதலானவற்றை நல்கும் சுற்றுச்சூழல் உடையது கிராம வாழ்வு என்பதை இப்பகுதி எடுத்துரைக்கின்றது. இதன்வழியாக கிராமத்துச் சூழலின் இனிமை, தனிமை, மென்மை, மேன்மை முதலானவற்றை உணரமுடிகின்றது. இதுபோன்று இனிமையான கிராமத்துச் சூழலை இலக்கியமாக்குவதில் தேர்ந்த படைப்புத் தன்மை பெற்றவராக இலக்குமி ஞானதிரவியம் விளங்குகிறார்.

கருத்துகள் இல்லை: