சனி, நவம்பர் 07, 2009

பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும்


பெண்களை தனித்த உயிரியாக, உரிமையுடையதாக சொல்லாலும் செயல்களாலும் பாதிப்புகளுக்கு உள்ளாகாத தற்காப்புடையதாக, தன் வாழ்வை தானே நிர்ணயிக்கிற சுய சிந்தனை உடையதாக மாற்ற/ இருக்க/ இயங்க வழிகோலும் கருத்துக்களுக்கு இடமளிக்கும் இயம் பெண்ணியம்.
குளிர்சாதனப் பெட்டி = பெண்
ஒரு கடையில் உணவுப்பொருள்களைப் பாதுகாப்பதற்காக புதிய குளிர் சாதனப் பெட்டி ஒன்றைக் கடைக்காரர் வாங்குகிறார். அது பார்க்கச் சிவப்பாக அழகாக இருக்கிறது. தேவையானபோது அது கடைக்காரரைக் குளிர்பானங்களைத் தந்து குளிர்விக்கிறது. அவற்றை மற்றவர்களுக்கும் அளித்து மகிழ்கிறது. தேவையான பொருள்கள், தேவையற்ற பொருள்கள், அழுகின பொருள்கள், அழுகாத பொருள்கள் எல்லாவற்றையும் சுமந்து கொண்டு அது கடைக்காரரின் நன்மைக்கே இயங்கி வருகிறது.இதற்கும் தற்காலப் பெண்களுக்கும் எத்தனை ஒற்றுமைகள் இருக்கின்றன. நிறம், குளிர்வித்தல், சுமத்தல் இவை அனைத்தும் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகள். கடைக்காரரின் நன்மைக்கே இயங்குதலும், கணவனின் நன்மைக்கே இயங்குதலும் மிகச் சிறந்த ஒற்றுமை. என்றாவது ஒருநாள் கடைக்காரர் குளிர்சாதனப் பெட்டியின் மீது கரிசனம் கொண்டிருப்பாரா? அல்லது அதனைக் கேட்டு ஒரு பொருளை வைக்க, எடுக்க முயன்றிருப்பாரா? இருக்க முடியாது. அது தேவையில்லை. தான் வாங்கிய பொருள் தனக்கே. . . அது முற்றிலும் உழைக்க வேண்டும் என்ற அவர் எண்ணுவது இயல்பு.இதைவிடக் கொடுமை. குளிர்சாதனப் பெட்டி தன் வேலையில் குறைவு பட்டுவிட்டால் உடனடியாகக் கடைக்காரரால் இந்தப் பெட்டி தூக்கியெறியப்படும். அதன்பின் புதிதாக ஒன்று வரும். அதுவும் கடைக்காரருக்கே உழைக்கும். கூடுதலாக ஒரு மின்சமப்பெட்டியையும் ( stubliser) வாங்கி வைத்து விடுவார். அந்தக் குளிர்சாதனப் பெட்டி இன்னும் கூடுதலாக உழைக்கும்.இந்த அடிப்படையில் எண்ணிப் பார்த்தால் தற்காலப் பெண்களின் சூழலும், இந்தக் குளிர் சாதனப் பெட்டியின் இயல்பும் மிகப் பொருந்தி நிற்பது புரியும். பெண் உயிரினமாகக் கூட கருதப்படாமல் ஏதோ ஒரு பொருளின் இயல்பில் அவர்களை வாழவைக்கும் சுயமற்ற போக்கு மாறவேண்டும் என்றே பெண்ணியம் விரும்புகிறது. பெண் ஒரு பொருள் அல்ல. அவளுக்கு விருப்பு வெறுப்புகள் உள்ளன. அவளின் பொருளை, உடலை அவள் விருப்பப்படி பயன் கொள்ளலாம். துய்க்கலாம்.அதற்கான பல முன்னெடுப்புகளை பெண்ணியவாதிகள் முன்வைக்கின்றபோதும் பெண்ணிய எழுச்சிகள் இன்னும் சரிவர வந்து சேர்ந்தபாடில்லை.
பெண் அனுபவிப்பின் தளமல்ல
அமெரிக்கா முதல் அந்தமான் வரை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெண்ணைச் சொல்லாலும், செயலாலும் இழிவு படுத்தும் போக்கு குறையவே இல்லை.அமெரிக்க அரசியல் மையத்தில் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்குப் பல சோதனைகள் நடத்த வேண்டியிருக்கிறது. காஷ்மீர்ப் பெரியவர்களுக்கு விளையாட்டுப் பொம்மைகளாக அனுப்பப்பட்ட பெண்கள் இறந்ததும் அதை எதிர்த்துக் கேள்வி கேட்டால் அரசியல் அரங்கம் ஆட்டம் கொள்கிறது. அனுப்பப்பட்ட பெண்கள் ஓரினச்சேர்க்கையர் என்பதும், அவர்களை அனுப்பியது ஒரு பெண் தலைமையிலான கூட்டம் என்பதும் கூடுதல் வருத்தத்தைத் தரும் செய்திகள். கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த மகனை அம்மாவே நறுக்கிய கதை மனத்தை உலுக்குகிறது. கள்ளக்காதலி வீட்டுக்கு வர அவளை உண்மை மனைவியும் கணவனும் இணைந்து கொல்கிறார்கள். காதலன் முன்பே அவனுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த பெண் பிற ஆண்களால் விருப்பமின்றித் தன்னை இழக்கிறாள். மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு ஆண் பெண்களை சாகடித்துக் கொன்று அதன்பின் அவர்களைப் பயன்படுத்தியிருக்கிறான். தன்னைக் குடித்துத் துன்புறுத்திய கணவனை அரிவாளால் வெட்டிய மனைவி, நறுக்கி வீட்டுத் திண்ணையாக்கிய மனைவி . . . இப்படி விரியும் நாளிதழ்ச் செய்திகள் எதை உணர்த்துகின்றன.இந்நிகழ்வுகள் அனைத்திலும் பெண்ணும் இடம் பெற்றிருக்கிறாள். ஆண்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெண்ணை அழகின் இருப்பிடமாக, அனுபவிப்பின் தளமாகக் காண்கிற, கொள்கிற ஆணின் புத்தியாலேதான் மேற்கண்ட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆணின் புத்திக்குப் பெண்ணும் துணைபோகிறபோது அவளும் ஆண்தன்மையைப் பெற்றவளாகவே மாறிவிடுகிறாள்.
ஆண்சூழலில் வாழுபவள் பெண் அல்ல
ஓர் ஆண் தன்னோடு பழகிய ஆண்களைப் பார்க்கிறபோது/ பழகாத ஆண்களைப் பார்க்கிறபோது கவர்ச்சிகரமான சிந்தனை ஏற்படுவதில்லை. ஆனால் அவனே எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் கவர்ச்சி கொள்கிறான். அவளை அடைந்து விட முயல்கிறான். அவளை அடைய வாய்ப்புக் கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்கிறான்.ஓர் பெண் தன்னோடு பழகிய பெண்களை/ பழகாத பெண்களைப் பார்க்கிறபோது கவர்ச்சிக்கு ஆட்படுவது இல்லை. ஆண்களைப் பெண்கள் பார்க்கிற பார்வையில் ஓரளவிற்குக் கவர்ச்சிக்கு ஆட்பட்டாலும் அது அவர்களை அடையவேண்டும் என்ற உணர்வெழுச்சியை ஏற்படுத்துவதில்லை.ஆண்களிடத்தில் உள்ள பயன்படுத்துதல் என்ற ஒன்றே பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கும், பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கும், ஆணாதிக்கத்திற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றது.
பெண்ணுக்கு எதிரான நிகழ்வுகளை வெளிப்படுத்தும் தகவல் தளங்களும் செய்திகளை வெளியிடுகையில் ஆண்சார்புத்தன்மையுடனேயே வெளியிடுகின்றன. “கள்ளக்காதலால் மகனையே கொன்ற தாய்” என்ற ஒரு தலைப்பு, செய்தித்தாளில் வந்த தலைப்பு ஆகும். இந்தச் செய்தியை எழுதியவர் ஓர் ஆண் என்பது அதன் தலைப்பிலேயே தெரிந்துவிடுகிறது. கள்ளக்காதலுக்குக் காரணமான, உடந்தையான ஆணே கள்ளக்காதலியின் மகனைக் கொல்லக் காரணமாக இருந்தாலும், அவன் இத்தலைப்பிற்குள் மறைந்து கொள்கிற ஒரு பக்க சார்பைப் புரிந்து கொண்டால் இதனுள் இருக்கும் ஆணாதிக்கம் புரிய வரும்.
எனவே இக்கால நிலையில் குழப்பான சூழலில் பெண்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. ஆண் சூழலுக்குள் தன்னை இழந்து நிற்கிறார்கள் என்பது உண்மை.இவர்களை மீட்டுத் தன்னை உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டிய பெண்ணியம், பெண்ணியவாதிகள் செய்தது என்ன? செய்ய வேண்டியது என்ன? என்பதை ஒரு மீளாய்விற்கு உட்படுத்த வேண்டும்.
பெண்கள் பள்ளிக்கூடம், பெண்கள் கல்லூரிகள், பெண்கள் பல்கலைக்கழகங்கள் போன்றன தொடங்கப் பெற்று விட்டன. இவற்றில் பெண்களே வேலைபார்க்கிறார்கள். படிக்கிறார்கள். தோட்டக்காரர்கள் முதல் துணைவேந்தர் வரை பெண்கள்தான். என்றாலும் அவர்கள் படிக்கிற படிப்பு பெண்ணுக்குச் சாதகமானதா என்ற கேள்வியை எழுப்பிப்பார்க்கவேண்டும். பாடதிட்டம், அதற்குள் இடம் பெறும் பாடங்கள், அதனை எழுதிய ஆசிரியர்கள் ஆகியனவற்றை ஆராய்ந்துப் பார்த்தால் பத்து விழுக்காடு கூட பெண்கள் தொடர்புடையதாக இருக்க வாய்ப்பிருக்காது. ஆணின் பாடங்களைப் படித்து வரும் பெண்கள் எப்படி உண்மையான பெண்களாக இருக்க இயலும்.பெண்களே எழுதும் புத்தங்கள், தொகுக்கும் புத்தகங்கள் வந்துவிட்டன. எனினும் பெண்கள் தொகுக்கும் புத்தகங்களில் பெண்களுக்கு உரிய சாதகமான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளனவா என்பது கேள்விக்குறிதான். குறிப்பாகச் சொல்லவேண்டுமானல் தற்போது சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள பெண் மையக் கதைகள் தொகுப்பில் ஆண்களோடு பெண்களின் கதைகளும் இடம் பெற்றுள்ளன. இதனைத் தொகுத்தவர் பெண். இவர் எப்படி ஆண் கதைகளைப் பெண்களுக்குச் சாதகமானதாக ஏற்று அவற்றைத் தொகுக்க இயலும். ஆண்கள் எவ்வளவு விழிப்பாக எழுதினாலும் அதற்குள்ளும் ஆணாதிக்கக் கருத்து வந்து புகுந்து கொள்ளும் என்பது தான் உண்மை.
புறச்சூழலை மாற்றி அமைக்க முடிந்தால் மட்டுமே, அல்லது புறச்சூழல் மாறினால் மட்டுமே பெண் உண்மையான பெண்ணாக வலம் வர இயலும்.
பெண்ணியத் தோற்றமும் மாயையும்
பெண்ணியம், பெண்ணியவாதிகள் என்பதற்கான பொருள் தமிழ்ச்சூழலில் வேறுமாதிரியாகத் திரிக்கப் பெற்றுள்ளது. இத்திரிப்பிற்குக் காரணம் ஆண் விமர்சகர்கள். பெண்ணியம் என்பதை ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் கொள்ளும் காம உணர்வு என்பதே பல ஆண்விமர்சகர்களின் கருத்து. மணமுறிவு பெற்றவர்கள், மணமாகாதவர்கள் இவர்களெல்லாம் பெண்ணியவாதிகள் என்பதும் மேற்சொன்னது போன்றதொரு தவறான பார்வையாகும்.உண்மையான பெண்ணியவாதிகள் என்பதான எண்ணத்தை எட்டவே இன்னும் பல நூற்றாண்டுகள் ஆக வேண்டி இருக்கும். ஆண்களின் தோழியாக வாழும் பெண்கள், ஆண்களின் பராமரிப்பில் இருக்கும் பெண்கள் இவர்களெல்லாம் பெண்ணியவாதிகள் என்ற தவறான எண்ணமும் தமிழ்ச்சூழலில் விளங்கி வருகிறது.இவற்றில் இருந்து உண்மையான பெண்ணியத்தை, பெண்ணியவாதிகளை இனம் கண்டறியவேண்டி தேவை தற்போது ஏற்பட்டிருக்கிறது. அப்படித் தேடிப்பார்த்தால் உண்மையான பெண்ணியம் என்பதும், உண்மையான பெண்ணயவாதி என்பதும் கிடைக்காமல் கூடப் போகலாம்.
சக பெண்களை முன்னேற்றும் பெண் பெண்ணியவாதி ஆவாள். அவள் எலைன் ஷோவால்டர் சொல்வது போன்று சகோதரித்துவ குணம் பெற்றவளாக இருப்பாள். தனக்கு எதிராக நடந்த இழப்புகளை, அவமரியாதைகளை தன் சகோதரி அனுபவிக்காமல் காப்பவளே உண்மையான பெண்ணியவாதி.
மேலை நாடுகளில் உங்கள் எதிரியோடு உறங்குகிறீர்கள் என்று கூறி படுக்கையறையை விட்டு வெளியேறிய பெண்களின் போராட்டம் தரும் கருத்து என்ன? என்றைக்கும் ஆண் ஆணாகவே இருப்பான். அவன் பெண்ணைப் பற்றிச் சிந்திக்க வேண்டாம். அவன் உறவின்றி நாமே நமக்கான வாழ்வைத் தொடங்குவோம் என்பதுதான்.
குடும்பத்தில் பிறந்த பெண் குடும்பத்தவளாக வாழ்கிறபோது பல அனுசரிப்புகளுக்கு உள்ளாக வேண்டியவளாக இருக்கிறாள். அப்படி வாழ்வது சரியென வாழும் பெண்களின் வாழ்வில் பெண்ணியம் நுழைந்து அவர்களைக் கெடுத்துவிடப் போவதில்லை. ஆனால் குடும்பத்தில் சம உரிமையை நிலைநாட்டப் பெண்ணியம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறது. மின்னல் பூக்கள் என்ற நாவலில் இறந்த பெற்றோருக்கு ஆண் இறப்புக் கடன் செய்வது போல பெண்ணும் செய்யலாம் என்பதை திலகவதி முன்வைக்கிறார். அவரே சொப்பன பூமி நாவலில் அச்சகத்தொழிலில் உள்ள ஆண், பெண் தொழில் மதிப்பு வேறுபாட்டைக் களைய முன்வருகிறார். குடும்பச் சூழலை முன்வைத்து பெண்களை முன்னேற்றும் தற்கால போக்கு ஒருபுறம் தற்போது தமிழ்ப் பெண்ணியத்திற்குத் தேவையாகின்றது.
மணம் வேண்டாத, ஆண்துணை வேண்டாத, தன்னையே நம்பி, தன்உழைப்பினைத் தனக்கே உரிமையாக்கிடத் துடிக்கும் தனித்த பெண்நிலைக்கும் இக்காலத்தில் விதை இட வேண்டி இருக்கிறது. இவ்வாறு தனித்துப்போனால் உலகம் இயங்காது. உற்பத்தி பெருகாது என்ற மரபுக் குரல்கள் வாடகைக் கருப்பைத் தாய்களாலும், வாடகை ஆண்விந்தணுக்களாலும் மறைந்து போய்விட்டன. தேவைப்பட்டால் தந்தை தாய் – யார் யாரெனத் தெரியாமல் புதிய உற்பத்திக் கோட்பாடுகளை மருத்துவம் உருவாக்கி வருவது இந்தக் கேள்விக்கு முற்றுப் புள்ளியை வைத்துவிடும்.
இதுவும் அல்லாமல், அதுவும் அல்லாமல் இரண்டுங்கெட்டான ஆகிவிட்ட பெண்ணியத்தை பெண்ணிய மாயை என்றே குறிக்க இயலும். ஆடைகளில் விடுதலையைத் தேடி ஆண்களின் ஜீன்ஸ்களில் நல்லதைத் தேடுதல் உண்மையான பெண்ணியமாகாது. காமத்தில் விடுதலைதேடி ஆண்குழுவோடு தன்னை இணைத்துக் கொள்ளும் குழு விளையாடல்கள் உண்மையான பெண்ணியமாகாது. இதில் வீழ்ந்துகிடக்கும் தற்போதைய தமிழ்ப் பெண்ணிய உலகைக் கண்டிப்பான கரங்கள் கொண்டுத் தூக்கியே நிறுத்த வேண்டும்.

ஆணாதிக்கம்
எழுதுதலும், வெளியிடுதலும் ஆணாதிக்கக் கரங்களில் தற்போது உள்ளன. ஆனந்தவிகடன் வெளியிடும் புதிய புத்தகங்களில் பெண்களின் புத்தகங்கள் எத்தனை என்பதை எண்ணினால் இது தெற்றெனத் தெரியும். காலச்சுவடு தான் கண்டறிந்துள்ள பெண் எழுத்தாளர்களைத் தவிர வேறு பெண் எழுத்தாளர்களே உலகில் இல்லை என உண்மைபேசும். தன் கைக்காசு செலவழித்து ஆண்வெளியீட்டகத்தில் கவிதைத் தொகுதிகள் போட்டுச் சில பெண்கள் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுக் கொள்ள முடிகிறது.இணைய தளங்களில் உண்மையான பெயர்களில், உண்மையான புகைப்படங்களுடன் பெண்கள் உலாவரஇயலாது. வந்தால் பின்னூட்டங்களில் பல இடைஞ்சல்கள் வரும். அம்பை எழுதிய முகமுடிகளுக்குப் பின்னால் முகங்கள் (The face behind the mask) பெண்கள் தம் சொந்தப் பெயரில் எழுதாமைக்கான பல காரணங்களை முன்வைக்கிறது. இதே சூழல்தான் தற்போது இணையத்தில் உள்ள பெண்களுக்கும். இணையத்தில் வெளியான ஒரு பெண்ணின் புகைப்படத்தையும், ஒரு குழந்தையின் புகைப்படத்தையும் அவர்கள் அனுமதி இன்றிப் போட்டு விட்டு தற்போது தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் அதை வெளியிட்ட விளம்பரக் குழு மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி கண்டிப்பினைக் காட்டியிருக்கிறது.இந்தச் சூழலில் வெளியிட்டுத் தளங்கள் ஆண்கள் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதில் ஒரு சிறிதும் மாறுபாடு இல்லை. ஆண்களின் வெளியீட்டுச் சாதனத்துக்குள் பெண் எவ்வாறு விடுதலையுடன் செயல்பட முடியும்.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தமிழ்ப் பெண்ணியம் சுருக்கமான வரலாறு என்ற ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.அவர்தம் கட்டுரையின் ஒவ்வொரு வரிக்குள்ளும் எள்ளல் நிறைந்திருக்கிறது. பெண் எழுத்தாளர்களைக் கேலிபேசும் மேதாவிக்குணம் நிறைந்திருக்கிறது.அவர் பிரிக்கும் பல்வேறு பெண்ணியக் காலகட்டங்களின் பெயர்களில் உள்ள கேலித்தன்மையை உங்களுக்குச் சுட்ட விரும்பிகிறேன். அவர் தமிழ்ப்பெண்ணியத்தைப் பின்வரும் உட்பகுப்புகளாகப் பிரித்துக் கொள்கிறார்.1. கொண்டைக்காலம்( 1950 ஆம் ஆண்டுக்கு முன்னால்)2. பின்சடைக்காலம் (1950 முதல் 1965 வரை)3. மாறு சடைக்காலம் ( 1965 முதல் 1975வரை)4. முன்சடைக்காலம் ( 1975 முதல் 1985 வரை)5. சுரிதார் காலம் ( 1985 முதல் 1995 வரை)6. ஜீன்ஸ்காலம் (1995 ஆம் ஆண்டு தொடங்கி)

இந்தக் கால வரிசையைப் பார்க்கும் எவருக்குள்ளும் எள்ளல் தோன்றும் என்பதில் ஐயமில்லை. பெண்களின் இயக்கத்தினை, அரசியலை, விழிப்புணர்வை இதைவிடக் கொச்சைப்படுத்த முடியாது. இன்னும் அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் ஆணிய எழுத்து அகங்காரத்தின் விளைவுகள். அவற்றைத் தந்து அவற்றில் உள்ள ஆணியச் சொல்லாடல்களை விளக்கவேண்டியது இக்கட்டுரையின் கடமை. (கட்டுரையைப் படித்து ஏற்றது செய்ய அதன் இணைப்பு பின்வருமாறு: http://jeyamohan.in/?p=276 ) ஜீன்ஸ் காலகட்டத்தைப் பற்றிய விவரணை பின்வருமாறு.
“பெண்ணியம் ஒரு தனி அழகியல் மற்றும் அறிவுத்துறையாக மலர்ச்சி அடைந்த காலகட்டம் இது. இக்காலகட்டத்தின் எழுத்தாளர் அம்பை என்னும் சி.எஸ்.லக்ஷ்மி. இவர் எழுதிய கதைகளில் பெண்கள் நிறைய படித்தமையால் ஒன்றுமே தெரியாமலாகி குழந்தைத்தனத்துடன் ‘தோசை ஏன் வட்டமாக இருக்கிறது” போன்ற கேள்விகளை கிராமத்துப் பெண்களிடம் கேட்டார்கள். அம்பையின் நாயகி ”வாழ்நாளில் இதுவரை எத்தனை தோசை சுட்டிருப்பீர்கள்?”என்று கிராமத்து ஆச்சியிடம் கேட்டபோது பக்கத்து டீக்கடை ராமையாக் கோனார் அவர் அடித்த டீக்களின் கணக்கையும் கேட்பாளோ என்று அஞ்சி கடைபூட்டி அம்பாசமுத்திரத்திற்கு கம்பிநீட்டியதாக சொல்லப்படுகிறது.கணவனை டேய் என்று அழைப்பது, நல்வழிப்படுத்தும் பொருட்டு மட்டும் அவ்வப்போது அவனை அடிப்பது, கணவன் நண்பனின் தோளில் சாய்ந்துகொண்டு ஆங்கிலச் செய்தித்தாள் படிப்பது போன்றவை இக்காலகட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. பேச்சில் ‘ஷிட்’ ‘மென்ஸ்ட்ரூவல் பிளட்’ ‘சிமோங் த பூவா’ போன்ற சொற்கள் கலப்பது அவசியமாக இருந்திருக்கிறது. பொட்டு வைக்காமை, பிரா போடாமை போன்றவையும் அக்கால வழக்கம் எனச் சொல்கிறார்கள். சிகரெட் பிடிப்பதும் பீர், ஒயின் அருந்துவதும் சாலச்சிறப்பே. பெண்ணிய ஆயுதமாக துப்பட்டா மாறியதை இக்காலகட்ட வரலாறு ஆவணப்படுத்துகிறது.
துப்பட்டாவை தோளில்போட்டுக்கொள்ள இருநூற்று எண்பத்தேழு வழிகள் இருக்கின்றன. அதை மார்புகளை மறைக்கவும் பயன்படுத்தலாம், கல்யாணத்துக்கு பிறகு. இலக்கிய மேடைகளில் துப்பட்டா கொடியாகப் பயன்படும். இக்காலகட்டத்தில்தான் பெண்கவிஞர்கள் நிறைய உருவாகி வந்தார்கள். ‘நீ நீதான்,நான் நான்தான்’ என்பதே இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கிட்டத்தட்ட நாற்பத்தியெட்டாயிரத்தி அறுநூற்று எண்பத்திமூன்று கவிதைகளின் மையக்கரு என்று தெரிகிறது. ‘நல்லவன் இல்லையோ நீ?’ என்று ஒரு பெண்கவிஞர் எழுதிய வரியை சில விஷமிகள் தவறாகப் படித்து பொருள்கொண்டமையால் ஏற்பட்ட பரபரப்பைத் தொடர்ந்து அதே சொல்லை பெண்கவிஞர்கள் அனைவருமே பாவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானதை வரலாற்றுக் கொடுமை என்றே சொல்லவேண்டும். ஒரு பெண்கவிஞரின் கவிதைத்தொகுதியை நாயுடுஹால் ஸ்பான்ஸர் செய்து வெளியிட்டது என்ற செய்திக்கும் ஆதாரம் ஏதுமில்லை.
ஜீன்ஸ் காலகட்டத்தில் பெண்கள் இறுக்கமான டாப்ஸும் அதைவிட இறுக்கமான ஜீன்ஸும் அணித்து இரண்டுக்கும் நடுவே அரையடி இடைவெளி விட்டு சிவந்த சாயமிட்ட கூந்தலை அலைபாய விட்டு குரல்வளை தெரிய சிரித்தார்கள். பைக்குகளில் பின்னால் கால்பரப்பி அமர்ந்து ஒட்டிக்கொண்டு சென்றார்கள். செல்போனில் பதினெட்டுமணிநேரம் பேசும் வழக்கம் இருந்தது. இப்பேச்சுக்களை இடைவிடாது கேட்கும்பொருட்டு இளைஞர்கள் தன்னையறியாமலேயே உம் கொட்டும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். இவர்களின் ஊடகமாக இணையமே இருந்தது என்று வரலாறு ஆவணப்படுத்துகிறது. இவர்கள் அதிகமும் ஆர்குட் என்ற இணைய தளத்தை பயன்படுத்தினார்கள். ‘தினத்தல்’ என்று தமிழ்க்கொண்டல் மூலம்கிழார் அவர்களால் [பேரன் அவர் பெயரை பைல்ஸ்கிழார் என்று மாற்றியதாக கூறப்படுவது அவதூறு] தமிழாக்கம் செய்யப்பட்ட டேட்டிங் இக்காலகட்டத்தில் பரவலாக இருந்திருக்கிறது.”இந்த விவரணையில் அம்பையின் பிரபலமான பெண்ணிய கதை ஒன்று சீரழிக்கப் பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பெண்களின் உள்ளாடைகள் குறித்த கேலிகளும் வருத்தமளிப்பன. இதுதவிர ”நல்லவன் இல்லையோநீ” என்ற கவிதைத் தொடரில் யோநீ என்பதன் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இழி நிலை கவனிக்கத்தக்கது. பெண்கள் தங்களை, தம் உடலைப் பற்றி எழுதுவது என்பது அவர்களுக்கான இலக்கியமாகக் கொள்ளப்படுகிறது. அதை ஆண்கள் படிக்க வேண்டும் என அவர்கள் விரும்பவில்லை. பெண்களின் தனித்துவ படைப்புக்களை ஆண்கள் படிப்பதே குற்றம் என்ற நோக்கில் புனையப்படுகிற பெண் எழுத்துச் சுதந்திரத்தினை இத்தனைக் கேவலப்படுத்தியிருக்க வேண்டாம். மேலும் எழுத்தாளர் லட்சுமி- கோதைநாயகி அம்மாள் குறித்தும் சில நம்பிக்கையற்ற விமர்சனங்கள் இவரால் வைக்கப்பெற்றுள்ளன. இவை ஆணாதிக்க மமதையால் வந்தனவன்றி வேறல்ல.இதுபோல நச்சு தேய்ந்த விமர்சனங்கள் பெண்ணியத்தை வளர்ப்பன அல்ல. அதனைத் தேய்த்து அழிப்பன.காலம் நிற்பதையும், தோற்பதையும் கணக்கீடு செய்து கொண்டு வரலாறாக ஆக்குகிறது. இந்நிலையில் விழிப்புற்ற பெண்கள் நூறாண்டுகள் கழித்து அடையப் போகிற வெற்றிக்காக இன்றைக்கு எழுதுகிறார்கள். ஏக்கம் கொள்கிறார்கள். அவர்கள் மீது ஆணாதிக்கச் சகதியை, சங்கதிகளைப் பூசாமல் இருப்பது நல்லது.

2 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ஆழமாய் அலசி எழுதியுள்ளீர்கள்... வாழ்த்துகள் நண்பரே

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

vanakkam Nanbare!
penniyam thodarpaana ungal aayvukal viyappalikkinrana...
inraiya penniya iyakkangal, penniya vaathikalin pettikal, athu thodarpaana seithikaliyum serthu avvappOthu veliyittaal, innum muzumaiyaaka irukkumE?
vaazthukal.
P.K: Penniyam thodarpaana pirar ezuthukkalaiyum veliyidum ennam undaa? 'Thamizil Penn kavithaikal' enum enathu katturaiyai thangal blog il veliyida mudiyuma?
- Naa.Muthu Nilvan