சனி, நவம்பர் 07, 2009

திருச்சியில் நூல் வெளியீட்டு விழா




சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு ஆகும். இவை தமிழர்தம் தத்துவக் கொடை ஆகும். தனித் தமிழ்ச் சிந்தனை வயப்பட்டதாக அமைந்த, உயிர்களின் நிறைநிலை பற்றிச் சிந்தித்த இந்தத் தத்துவ நூல்களுள் பல மறைபொருள்கள் பொதிந்து கிடக்கின்றன. இவற்றை வெளிக் கொணர்ந்து இவை தரும் உண்மைகளை அறிந்து கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப் பெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பதினான்கு சாத்திரநூல்களுக்கும் எளிய உரை வரைந்து ஒரே நூலாகத் தரும் பணியை உமா பதிப்பகம் தற்போது செய்துள்ளது. இந்நூலுக்கான உரை விளக்கத்தை முனைவர் பழ. முத்தப்பன் அவர்கள் வரைந்துள்ளார்கள். தத்துவப் புலமையும் தமிழ்ப் புலமையும் ஒரு சேர அமையப் பெற்ற அவர்கள் தம் உரை தமிழ் உலகிற்கு புதிய எளிய வழியைத் தரும்.
முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் உரையுடன் சைவ சித்தாந்த சாத்திரங்கள் என்ற நூலின் வெளியீட்டு விழா வரும் 14.11.2009 அன்று (சனிக்கிழமை) மாலை ஆறு மணியளவில் திருச்சி புத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள முகூர்த்தம் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இவ்விழாவிற்கு உமா பதிப்பகத்தின் உரிமையாளர் திருமிகு உமாஇராம. லெட்சுமணன் வரவேற்புரை வழங்குகிறார்கள். சீர் வளர் சீர் திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள் தலைமை தாங்கி நூலினை வெளியிடுகிறார்கள். நூலைப் பெற்று வாழ்த்துரையை திருமிகு எஸ். பி. காசிச் செட்டியார் அவர்கள் வழங்குகிறார்கள். மேலும் இவ்விழாவில் மாண்புமிகு இ. எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்களும், மாண்புமிகு எஸ். இரகுபதி அவர்களும் விஜயா பதிப்பக உரிமையாளர் திரு எம். வேலாயுதம் அவர்களும், அகத்தியர் புத்தக நிலைய உரிமையாளர் எஸ். கோபால கிருஷ்ணன் அவர்களும் வாழ்த்துரை வழங்க உள்ளார்கள். நூலினை மதிப்புரை செய்யும் பணியைத் திருமிகு கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள் செய்ய உள்ளார்கள். மேலும் அறநெறிஅண்ணல் முக்கப் பிள்ளை, மது. ச. விமலானந்தம் அவர்களும் நூல்ச் சிறப்புகளை எடுத்துரைக்க உள்ளார்கள்.
விழாவில் முனைவர் பழ. முத்தப்பன் அவர்கள் மகிழ்வுரை ஆற்றுகிறார்கள். மேலும் இவ்விழாவில் காஞ்சிபுரம் பேராசிரியர் அமுத. இளவழகன் அவர்கள் நன்றியுரை ஆற்றுகிறார்கள்.
இவ்வழைப்பினை ஏற்று அனைவரும் திருச்சியில் வந்து இருந்துச் சுவைத்து நூலை வாங்கி வாசித்து மகிழ்ந்திட அன்புடன் அழைக்கிறோம்.

1 கருத்து:

Unknown சொன்னது…

தமிழ் வழிபாடு தொடர்பான சித்தாந்த நூல் வெளியிட்டு தமிழர்களை முன்னேற்றும் பணி பாராட்டுதலுக்கு உரியது. விழாவில் சுதர்சனம் என்ற தமிழ் மக்கள் வெறுப்பாளரை (எவ்வளவு பசப்புரை தெரிவித்தாராயினும்)சேர்ப்பது வருந்தத்தக்கது.
தமிழ்மக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்.
அன்புடன் ராதாகிருஷ்ணன்
நவம்பர் 7, 2009