திங்கள், செப்டம்பர் 25, 2006

அம்மன்குறிச்சி மீனாட்சி அம்மன் கோயில்


இசை, ஓவியம், சிற்பம், நடனம் ஆகிய கலைகளின் பதிவுக் கூடங்கள் திருக்கோயில்கள். சென்ற காலத்தின் செழுமையைக் கோயில்கள் தாங்கி இருக்கின்றன. இக்கோயில்களைத் தினம் தேடிச் செல்வோருக்கும் செழுமை கூடி வரும். இச்செழுமையைத் தரக்கூடிய இடங்களில் ஒன்றாக இருக்கிறது அம்மன் குறிச்சி மீனாட்சி அம்மன் கோயில். இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊர்.


பொன்னமராவதியிலிருந்து நகரப்பட்டி என்ற ஊருக்குச் செல்லும் சாலையில் உள்ள இந்த ஊர் அமைதிக்கும் அழகிற்கும் பேர் போனது. அமைதிக்குக் காரணம் ஜன நெரிசல் இல்லாத பசுமை நிறைந்த சிறிய கிராமம். அழகிற்குக் காரணம் ஊரில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில். மதுரை ஆண்ட நாயக்க மன்னர்கள் மதுரை மீனாட்சி அம்மனுக்கு கல்லாலும் கலையாலும் உயிராலும் தொண்டாற்றியது போலவேதான் அம்மன் குறிச்சி மீனாட்சி அம்மனுக்கும் தொண்டாற்றியுள்ளனர்.
இக்கோயிலைச் சுற்றியுள்ள, "மறவா மதுரை', "சொக்கநாத பட்டி' ஆகிய ஊர்கள் மதுரையைத் தொடர்புபடுத்தக் கூடியவையாக இருக்கின்றன.
கோயிலின் கலை அழகைப் பார்ப்போம்:
சொக்கநாதருக்கும், மீனாட்சி அம்பிகைக்கும் தனித்தனி சன்னதிகள். சன்னதிகளை இணைக்கும் வெளிமண்டபத்தில் வணங்கும் கோலத்தில் நாயக்க மன்னர்கள், அரசிகளின் கற்சிலைகள் பல உள்ளன. இச்சிலைகளில் ஒன்று இக்கோயிலைக் கட்டிய பூச்சி நாயக்கர் சிலை. இந்தச் சிலைகளின் கலைநயம், ஆடை அணிகலன்கள் அனைத்தும் காண்போரை கவரக் கூடியன. இதனை தொடர்ந்து ஒரு மண்டபம் உள்ளது. இதுவே கலைக்கூடமாகக் கருதத்தக்க மண்டபம். இது வெளிவாசலையும் ராஜ கோபுரத்தையும் இணைக்கிறது. நடுவில் நந்தி மண்டபம். சுற்றிலும் ஒற்றைக் கல்தூண்கள். அவற்றில் ஆளுயர சிற்பங்கள். பிள்ளையார் முதல் பத்ரகாளி வரை அனைவரும் காட்சி தருகின்றனர்.


கால்தூக்கி ஆடுகிற சொக்கநாதப் பெருமான். அவர் வைத்துள்ள தண்டம், அவரது இடையாடையின் நுணுக்க வேலைப்பாடு ஆகியன இச்சிலையின் சிறப்பு. எதிரே தோற்றுப் போன காளியின் வடிவம். தோல்வியைத் தாங்கும் அதே நேரத்தில் அரக்கனை மிதித்து ஆடும் போர்க்கோலமும் காளி சிலையின் சிறப்பம்சம்.
சுற்றுப் பிரகாரம் வழியாக அமைந்த மண்டபத்தின் இடைப்பகுதியில் இரு தூண்கள் உள்ளன. அவற்றில் உள்ள யானைகளை முறுக்கிக்கொண்டு கண்விழித்து நோக்கும் யாழிகளின் தோற்றம். காணும் நம்மை மிரளச் செய்கின்றன. மிரட்சியோடு சுற்றுப்பிரகாரத்திற்குச் சென்றால் அங்கே அழகான சுவாமிகள் எழுந்தருளி இருக்கும் மண்டபம். இதை அடைந்ததும் சாந்தமும் அமைதியும் நம் நெஞ்சில் குடிபுகும்.
இக்கோயிலின் சுற்றுப் பிரகாரம் தஞ்சை பெரிய கோயில் பாணியை ஒட்டியவை. மண்டபத்துடன் கூடிய சுற்றுப் பிரகாரமாக அது விளங்குகிறது. தூண்களின் வரிசையும் மண்டபத்தின் கலை நேர்த்தியும் அவற்றின் புதுமையும் நம்மை நாயக்கர் காலத்திற்கே அழைத்துச் செல்கின்றன. சுற்றுப் பிரகார உள்பகுதியில் சுப்பிரமணிய சுவாமிக்குத் தனி சன்னதி உண்டு.
வெளிப்புறத்தில் உள்ள வெளி மண்டபம் சிங்கங்களைத் தாங்கும் சிறப்புடையது. இதன் செய்நேர்த்தி அற்புதமானது. ஒரு பெரிய கல்வெட்டு இந்த மண்டபத்தில் நாட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் கோயில் பணியாளர்களான பண்டாரங்களுக்குத் தரப்பட வேண்டிய தர்மங்களும் கோயில் மேல்தளம் சீர் செய்யப் பெற்ற வரலாறும் குறிக்கப்பெற்றுள்ளது. இக்கல்வெட்டின் தலைப்பில் சூரிய முத்திரை உள்ளது. சூரிய சந்திரர் இருக்கும்வரை அந்தத் தர்மம் நிலைத்து நிற்க வேண்டி அவ்வாறு செய்யப்பெற்றுள்ளது. இக்கல்வெட்டின் காலம், கல்வெட்டை வடித்தோர்
பற்றிய குறிப்புகள் அழிந்தும் அழியாமலும் உள்ளன. நேற்றைய சரித்திரத்தின் மிச்ச சொச்சங்கள் இன்னும் நம்மிடம் உள்ளன. அவற்றைப் பாதுகாத்து நாளைய தலைமுறைக்கு அளிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளதல்லவா?
இந்திய தொல்பொருள் துறையின் பராமரிப்பில் உள்ள இந்தக் கோயிலில் தேர்த் திருவிழா போன்ற திருவிழாக்களும்,
பிரதோஷம், மங்கல நாள் விழாக்களும் நடைபெற்று வருகின்றன. இவை இக்கோயிலை உயிர்ப்புடன் வைத்துள்ளன. இந்த உயிர்ப்பிற்கு நாமும் உயிர்க்கொடுப்போம்.

3 கருத்துகள்:

ஞானவெட்டியான் சொன்னது…

அன்பு நண்பரே!,
சின்னஞ்சிறு வயது முதல் துள்ளி விளையாடிய திருத்தலப் பெருமையை இத்துணை அழகாக எடுத்தியம்பியமைக்கு நன்றி.

வெற்றி சொன்னது…

ஐயா,
மிகவும் நல்ல பதிவு. தங்களின் மறுமொழி நிலவரம் மட்டுப்படுத்தப்படவில்லைப் போல் தெரிகிறது. அதனால் பலரும் உங்களின் பதிவைப் படிக்க முடியாது போகின்றது. தமிழ்மண நிர்வாகிகளுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மிக்க நன்றி.

பெயரில்லா சொன்னது…

மிக்க நன்றி!

அம்மன்குறிச்சி கணேசன்