திருவாசக முற்றோதல்
முனைவர் மு. பழனியப்பன்,
தமிழ்த்துறைத் தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருவாடானை
மாணிக்கவாசகர் இறை அனுபவத்தில் எழுதிய திருப்பனுவல் திருவாசகம். உலகப் பற்றுகளின் ஈர்ப்பில் சுவைத்து மகிழ்ந்து கிடக்கும் ஆன்மாக்களை, அப்பற்றில் இருந்து விடுவித்து, சிவனைப் போற்றிட, எண்ணிட, துதித்திட, நெஞ்சமதில் ஏத்திட, அவனையே அடைந்திடச் செய்யும் அருள்வாசகம் திருவாசகம் ஆகும். திருவாசகம் மனிதர் ஒவ்வொருவரும் பாடத்தகுந்த அருள் நூல். குழுவாக முற்றோதல் செய்வதற்கும் உரிய நூல். ஒரே நாளில் இறைவன் கழலை இறைஞ்சிடக் கிடைத்த நன்னூல். படிப்பவரும், கேட்பவரும் பொருளோடு உணர்பவரும் முக்தி என்னும் நிறைநிலையை அடையச் செய்யும் பெருவழியைக் காட்டுவது திருவாசகம் ஆகும்.
திருவாசக முற்றோதலை முதலில் நிகழ்த்தியவர் மாணிக்கவாசகரே!
மாணிக்கவாசகர் தாம் இருந்த இடங்களின் சூழுலுக்கு ஏற்ப, பற்பல பாடல்களை அவ்வப்போது பாடி உருகுகிறார். அவர் பாடிய பாடல்கள் அனைத்தையும் ஒருசேர சொல்ல, கேட்க ஒரு வாய்ப்பும் அமைகிறது. மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் இருந்தபோது, அந்தணர் ஒருவர் அவரிடத்தில் வந்து அவர் பாடிய அத்தனைப் பாடல்களையும் பாடச் சொல்லிக் கேட்கிறார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க மாணிக்கவாசகர் தாம் பாடிய பாடல்களைப் பாடுகிறார். அவற்றைக் கேட்டு அவ்வந்தணர் ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறார்.
திருவாசகத்தை மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல எழுதிக் கொண்ட அந்த அந்தணர் ”பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று கேட்கிறார் மாணிக்கவாசகர் அப்போது புதிதாக திருக்கோவையார் பாடுகிறார். அதனையும் அந்தணர் எழுதிக் கொண்டார். பின்பு அவர் மறைந்து போனார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அடுத்த நாள், அந்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் தில்லைச் சிற்றம்பலத்தில் நடராசப் பெருமான் சன்னதியின் திருப்படியில் இருப்பதை தில்லை வாழ் அந்தணர்கள் கண்டனர். சிற்றம்பலமுடையான் திருவடியில் ஒரு சுவடி உள்ளது என்று அனைவருக்கும் அவ்வதிசயத்தைச் சொல்லினர். அனைவரும் பார்த்திருக்க ஓலைகள் பிரித்துப் படிக்கப்பெற்றன. அவ்வோலையின் நிறைவில் ”திருவாதவூரார் சொற்படி திருச்சிற்றம்பலமுடையான்” என்று ஒப்பம் இடப்பெற்று ஓலைச்சுவடிகள் நிறைவு செய்யப்பெற்றிருந்தன.
திருவாதவூரரைக் கண்டடைந்து, இச்செய்தியைத் தில்லை வாழ் அந்தணர்கள் தெரிவித்தனர். அவரும் கோயில் வர இச்சுவடிப் பாடல்கள் உணர்த்தும் பொருள் யாது என்று கேட்டனர். அதற்கு மாணிக்கவாசக சுவாமிகள் இப்பாடல்கள் அனைத்திற்கும் பொருள் ஆடல் கூத்த பிரானாகிய நடராசப் பெருமானே” எனக் காட்டினார். திருவாசகத்தின் பொருள் நடராசப் பெருமான் என்பது அறியத்தக்கது.
மேலும் சில நாள்களில் இவ்வோலைச் சுவடிகள் யாது காரணத்தாலோ தில்லையில் உள்ள நீர்நிலை ஒன்றில் இடப்பெற்று அவை அம்பலத்தாடியார் மடத்து அன்பர்களிடத்தில் கிடைத்தது. அவர்கள் அங்கு வைத்து அச்சுவடிகளைப் பாராயணம் செய்து வந்தனர். அவர்களை அங்கிருக்க விடாது காலச் சூழல் விரட்ட புதுச்சேரிக்கு அவ்வோலைகட்டுடன் அவர்கள் வந்து சேர்கிறார்கள். புதுச்சேரியின் செட்டித் தெருவில் அம்பத்தடையார் மடத்தில் திருச்சிற்றம்பலமுடையான் எழுதிய திருவாசகச் சுவடிகள் உள்ளன. இது ஒரு வரலாறு.
இவ்வரலாற்றின் வழியாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி திருவாசகம் முதன் முதலாக முற்றோதுதலாக மாணிக்கவாசகராலேயே செய்யப் பெற்றது என்பதுதான். எனவே முதல் திருவாசக முற்றோதலைத் தொடங்கியவர் மாணிக்கவாசகரே ஆகின்றார். மாணிக்க வாசகர் சொல்லச் சொல்ல இறைவன் எழுதிய நிலையில் அதுவே முதல் முற்றோதல் ஆகின்றது.
திருவாசகம் ஓதும் முறை
பன்னிரு திருமுறைகளையும் பண் அடிப்படைடியில் ஓதுவார்களே தமிழகத்தில் பாடி வந்துள்ளனர். குறிப்பாக இராசராசன் காலத்தில் பெருமளவில் ஓதுவார்கள் நியமிக்கப்பெற்று பன்னிரு திருமுறை ஓதும் முறைமை இருந்துள்ளது. தற்காலத்திலும் ஓதுவார்கள் உரிய பண்ணிசைப்படி திருமுறைகளை ஓதி வருகின்றனர். பஞ்ச புராணம் பாடும் நடைமுறையும் உள்ளது. பஞ்சபுராணம் என்பது ஐந்து பாடல்களைப் பாடுதல் ஆகும். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒரு பாடலை பாடும் முறைமை பஞ்ச புராணம் பாடுதல் என்றழைக்கப்படுகிறது,
திருமுறைகளை ஓதுவார்கள் ஓதுவதில் பல நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. திருமுறைகளைப் பாடுபவர்கள் நீராடி , தூய ஆடை உடுத்தி, திருநீறு அணிந்து பண் அடைவுடன் இறைவன் முன் ஓதுதல் வேண்டும். சிவ தீட்சை பெற்றிருக்க வேண்டும் என்பதும் இதில் அடங்கும். திருமுறை ஓதத் தொடங்கும்போதும் நிறைவு செய்யும்போதும் திருச்சிற்றம்பலம் என்று சொல்லுதல் வேண்டும். திருமுறை நூல்களுக்கு பட்டு சாத்தி அர்ச்சனை வழிபாடு முதலியன செய்து பாடுதல் வேண்டும். திருமுறை நூல்களை ஆண்டவனாகவே எண்ணுதல் வேண்டும்.
திருவாசகத்தைப் பாடுவதற்கு பண் உறுதி செய்யப்படவில்லை. திருவெம்பாவைப் பாடல்களை மார்கழி மாதத்தில் நாள்தோறும் பாடும் முறைமை ஓதுவார்களிடத்திலும், மக்களிடத்திலும் ஏற்பட்டன. இதுவே திருவாசக முற்றோதல் மக்களைச் சென்றடைந்ததற்கான முதல்படியாகும் மார்கழி மாதத்தில் மட்டுமே பாவை நோன்பாக திருவெம்பாவை அதிகாலையில் பாடப்படவேண்டும். மற்ற நாள்களில் திருவெம்பாவையைப் பாடும் போது அதில் இடம்பெறும் எம்பாவாய் மேலும் சைவ அமைப்புகள் குறிப்பாக என்ற சொல்லை வெளிப்பட பாடுதல் கூடாது என்பது மரபு.
பன்னிரு திருமுறை மன்றங்கள் போன்ற அமைப்பின திருமுறை முற்றோதலைச் செய்விக்கத் தொடங்கின. தேவாரப் பாடல்களை எளிமையாக மக்கள் பண்ணில் பாடி வழக்கிற்குக் கொண்டுவந்தவர் தருமபுரம் சுவாமிநாதன். இவர் பன்னிரு திருமுறைகள் அனைத்தையும் பாடி நிலைத்தவர் ஆவார். இவர் வழியில் பன்னிரு திருமுறைகள் எளிய மக்களைச் சென்றடைந்தன. எளிய மக்களும் திருமுறைகளைப் பாராயணம் செய்ய வந்தனர்.
மனன முறை என்றொரு முறையும் திருமுறைகளுக்கு உண்டு. மனப்பாடம் செய்தல் போல பாடல்களைப் படிக்கும் முறை. முற்றோதலில் படிக்கவும் செய்யலாம். பண்ணுடன் பாடவும் செய்யலாம். அவரவர் ராகத்திற்கு ஏற்ப இசைவித்தும் கொள்ளலாம் என்ற நடைமுறை மக்களிடத்தில் தற்போது நிகழ்ந்து வருகின்றது.
முற்றோதல் செய்யும் முறை
திருவாசகத்தை முற்றோதல் செய்கின்ற போது திருவாசகத்தை மட்டும் படிக்காமல் திருவாசகத்திற்கு முன்னும் பின்னுமான திருமுறைகளை இணைத்துப் பாடுதல் வேண்டும். கடவுளைத் துதிக்கும் நடைமுறைகளைச் செவ்வனே செய்து, கணபதி வணக்கம், திருவிளக்கு வணக்கம், நால்வர் துதி, சந்தானாச்சாரியர்கள் துதி, பொது விண்ணப்பம், அடியார் விண்ணப்பம், ஏழு திருமுறைகளில் இருந்து ஒவ்வொரு பதிகத்திற்கும் உரிய முதல், நிறைவுப் பாடல்கள் ஆகியன பாடப்பட வேண்டும். இதன்பின் திருவாசகப் பகுதிகள் முழுவதும் பாடப்பட வேண்டும். அதன்பின் திருக்கோவையார், ஒன்பதாம் திருமுறை , பத்தாம் திருமுறை, பதினோராம் திருமுறை, பன்னிரண்டாம் திருமுறை ஆகியவற்றில் இருந்து ஒரு ஒரு பாடல்கள் பாடப்பட வேண்டும். இதன்பின் இறைவிக்கான பாடல் அபிராமி அந்தாதி போன்றவற்றில் இருந்து பாடலாம். இதன்பின் திருப்புகழ் இசைக்கப்பட வேண்டும். பின் வான்முகில் வழாது பெய்க என்ற வாழ்த்துப் பாடல் பாடப்பெற்று அன்னம் பாலித்து, அதற்கான தேவாரம் பாடி, தீபமேற்றித் துதித்து வழிபட்டு முற்றோதலை நிறைவு செய்யவேண்டும்.
முற்றோதலில் பங்கு பெறும் அன்பர்கள் முற்றோதலிலேயே முழுக் கவனத்துடன் செயல்பட வேண்டும். பசி, தூக்கம், ஆசை , அலைப்புறுதல் மறந்து ஒரே நினைவாய்ப் பாட வேண்டும். கொடுப்பனவற்றை வாங்கவதற்காகவும், உண்பதற்காகவும் நேரம் கழிகையில் திருவாசகத்தின் முழுமையைப் பாட முடியாதவர்களாக ஆகிவிடுகின்றோம். எனவே அதிகாலை தொடங்கி விரதமாக இருந்து திருவாசகம் முற்றோதலை நடத்துவது சிறப்பு.
திருவாசகம் முற்றோதல் செய்தவர்கள்
வள்ளல் பெருமான் திருவாசகம் முற்றோதலை தன் மணநாளில் மனைவிக்கு முன்னர் நிகழ்த்தினார் என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டிய முக்கியமான முற்றோதல் நிகழ்ச்சியாகும்.
வான்கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
என்று வள்ளல்பெருமான் தான் கலந்து திருவாசகத்தைப் பாடி மகிழ்ந்துள்ளார். கரும்புச் சாறு, தேன், பால், செழுங்கனிகள் எல்லாவற்றின் சுவையை ஒன்றாக்கினால் எவ்வகை இனிப்பு கிடைக்குமோ அத்தகயை இனிப்பினைச் சுவைக்கத் தருவது திருவாசகம் என்கிறார் வள்ளல் பெருமான்.
ரமண மகரிஷி தன் தாயின் நிறைவுப் பகுதியில் திருவாசகத்தைப் பாடிக் கொண்டிருந்தார். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் நிறைவுக் காலத்தில் உ.வே.சாமிநாதர் திருவாசகம் பாடிக்கொண்டிருந்தார். உ.வே.சாவின் நிறைவுக் காலத்தும் திருவாசகம் பாடப்பெற்றது. ஆன்மாவைக் கடைத்தேற்றும் வண்ணமாக அதன் நிறைவுக் கட்டத்தில் திருவாசகம் பாடப்படுவது மறுமை கொள்ள வைக்காது என்பதே இதன் உட்பொருளாகும். எனினும் வாழ்வின் நிறைவில் பாடப்படுவது திருவாசகம் என்ற எண்ணம் தமிழகத்தில் ஒருகாலத்தில் இருந்தது. தற்போது மணிவிழா,மணவிழா, திருவிழாக்களில் திருவாசகம் முற்றோதல் இசைக்கப்படுவது அது மங்கலம் நிறைந்த நன்னூல் என்பதைக் காட்டுவதாக உள்ளது.
தூண்டல்கள்
திருவாசகத்தை முற்றோதல் செய்யவேண்டும் என்று மாணிக்கவாசகரே கருதியுள்ளார்.
பாடவேண்டும் நான் போற்றி! நின்னையே
பாடி,நைந்து நைந்து, உருகி, நெக்கு நெக்கு,
ஆட வேண்டும், நான் போற்றி! அம்பலத்து
ஆடும் நின் கழல், போது நாயினேன்
கூட வேண்டும் நான், போற்றி! இப்புழுக்
கூடு நீக்க எனைப் போற்றி! பொய்யெலாம்
வீட வேண்டும் நான் போற்றி! வீடு தந்து
அருளு போற்றி! நின் மெய்யர் மெய்யனே! (திருச்சதகம் பா. எ 100)
என்று மாணிக்கவாசகர் சிவபிரான் புகழைப் பாடி ஆடிக் கூடி வீடு பெற விரும்புகிறார். இதனைப் படிப்போரும் கேட்போரும் பாடி ஆடி சிவனை நாடி நிற்கின்றனர்.
திருவா சகம் இங்கு ஒருகால் ஓதிற்
கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
தொடுமணற் கேணியிற் சுரந்துநீர்ப் பாய
மெய்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
அன்பர் ஆகுநர் அன்றி
மன்பதை உலகில் மற்றையர் இலரே
என்று நால்வர் நான்மணி மாலையில் சிவப்பிரகாச சுவாமிகள் திருவாசகம் படிக்கும்போது ஏற்படும் மன, உடல் மாற்றங்களைக் குறிப்பிட்டுத் திருவாசகத்தை முற்றோதல் செய்யத் தூண்டுகிறார். கருங்கல் மனமும் திருவாசகம் படித்தால் கேட்டால் அதன் கடினத் தன்மையில் இருந்து கரைய ஆரம்பிக்கும். மேலும் உடலில் மயிற்கூச்சரிப்பு ஏற்பட்டு விதிர் விதிர்ப்படையும். இவையெல்லாம் திருவாசகத்தினால் உடலும் மனமும் பெறும் மாற்றங்களாகும்.
திருவா சகமெனும் பெருநீர் ஒழுகி
ஓதுவார் மனமெனும் ஒண்குளம் புகுந்து
நாவெனு மதகில் நடந்து கேட்போர்
செவியெனு மடையின் செவ்விதின் செல்லா
உளமெனு நிலம்புக ஊன்றிய அன்பாம்
வித்திற் சிவமெனு மென்முளை தோன்றி 10
வளர்ந்து கருணை மலர்ந்து
விளங்குறு முத்தி மெய்ப்பயன் தருமே
என்பதும் நால்வர் நான்மணி மாலையில் இடம்பெறும் மற்றொரு பாடல் ஆகும். திருவாசகம் என்னும் பெரு நீர் பாடுபவர்தம் மனம் என்னும் குளம் புகுந்து நிறைவிக்கும். மேலும் பாடுபவர்தம் நாக்கு என்னும் மதகில்நடந்து கேட்போர் செவிகள் எனும் மடைகளில் தேங்கி அவர்களின் உள்ளம் என்னும் நிலத்தைச் சென்று சேரும். அதன்பின் அன்பு என்னும் சிவ வித்தினை விதைத்து, மென் முறை வரச் செய்து கருணை என்னும் மலர் தந்து முக்தி என்னும் பயன் கனியைத் தந்து நிற்கும் என்றும் பாடுகிறார் சிவப்பிரகாசர்.
திருவார் பெருந்துறைச் செழுமலர்க் குருந்தின்
நிழல்வாய் உண்ட நிகரில்லா னந்தத்
தேன்தேக் கெறியுஞ் செய்யமா ணிக்க
வாசகன் புகன்ற மதுர வாசகம்
யாவரும் ஓதும் இயற்கைக் காதலிற்
பொற்கலம் நிகர்க்கும் பூசுரர் நான்மறை
மட்கல நிகர்க்கும் மதுர வாசகம்
ஓதின் முத்தி உறுபயன்
வேதம் ஓதின் மெய்பயன் அறமே.
என்ற சிவப்பிரகாசர் பாடல் யாவரும் ஓதும் இயல்பினை உடையது திருவாசகம் என்று குறிப்பிடுகிறது. மேலும் அது மதுர வாசகம், பொன் கலம் போன்றது என்று அதன் உயர்வை அளக்கின்றது. மற்ற வாசகங்கள் வேதம் உட்பட அனைத்தும் மண்கலம் போன்றன. ஓதினால் முக்தி உறுதி என்றும் உரைக்கின்றது.
இவ்வகையில் திருவாசகம் முற்றோதல் பால் பாகுபாடு இல்லாமல், தூய்மைச் சைவ நெறி உடைய அனைவரும் பாடலாம் என்று மக்கள் மையமாக திருவாசக முற்றோதல் விளங்குகிறது. பாடுவது கடினம். படிப்பது எளிது. இனிது என்ற அடிப்படையில் மக்கள் சங்கம் அனைத்தும் பாடும் படியான அருள் கருணை இக்காலத்தில் நமக்குத் திருவாசக முற்றோதல் மூலம் கிடைக்கின்றது. அதனை சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து, நன்முறையில் செய்து முக்தி பெறுவோம்.