சனி, மே 17, 2025

சீர் வளர் சீர் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள்

 சீர் வளர் சீர் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள்

முனைவர் மு.பழனியப்பன்

தமிழ்த்துறைத் தலைவர்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

திருவாடானை

 

காரைக்குடியில் கல்விக்குடி

            காரைக்குடியில் பிறந்து,  டெல்லி வரை சென்று  பணியாற்றியவர்  திரு. மெய்யப்பன் அவர்கள். காரைக்குடியில்  மெ. மெ குடும்பத்தில்  மெய்யப்பன், அழகம்மை ஆகியோருக்கு மகனாக மெய்யப்பன் பிறந்தார்.  இளவயதிலேயே தநதை  இறைநீழல் அடைய தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். காரைக்குடியில் உள்ள  ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர்  பள்ளியில் தன் பள்ளிப்படிப்பினைப் படித்தார். அக்காலத்தில்  நடைபெற்ற கம்பன் விழாக்களில் இவர் கலந்து கொண்டு கம்பன் அடிப்பொடி திரு சா. கணேசனாருடன் தொடர்பு ஏற்பட்டு இலக்கிய ஆர்வம்  கொண்டார்.    காரைக்குடி அழக்கப்பா கல்லூரியில்  நிலவியல் துறையில்   இளநிலைப் பட்டத்தையும்,  சென்னை மாநிலக் கல்லூரியில்  முதுநிலை நிலவியல் பட்டத்தையும் முடித்துப் பேராசிரியராகத் தூத்துக்குடியில்  பேராசிரியராகப் பணியாற்றினார். திருக்குறள் கழகத்திலும் இவரின்  இலக்கியப் பணி தொடர்ந்தது,

இந்தியத் தலைநகரில் கோவிலூரின் ஆன்மீகப் பணி

            அதன்பின் ஓசூரில் உள்ள ஆசியன் பேரிங்க்ஸ் குழுமத்தில் இவரின் பணி பல்லாண்டுகளாகத் தொடர்ந்தது.  இதன் பிறகு டெல்லியில் உள்ள எக்கம் குழுமத்திலும் இவரின் பணி தொடர்ந்தது.  டெல்லியில் பணிபுரிந்த காலத்தில்  கோவிலூர் ஆதீனகர்த்தர் சீர் வளர் சீர் நாச்சியப்ப சுவாமிகளின் அறிமுகமும், அவருடன் இணைந்து ஆன்மீகப் பணியாற்றும் வாய்ப்பும் திரு. மெய்யப்பன் அவர்களுக்குக் கிடைத்தது. டெல்லி, ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் கோவிலூர் மடத்தின் கிளைகளை  விரிக்க நாச்சியப்ப சுவாமிகள் எண்ணம் கொண்டார். இவ்விடங்களில் பல பணிகளைத் தன் மேற்பார்வையில் திரு. மெய்யப்பன் அவர்கள்  செய்து வந்தார். குறிப்பாக ரிஷிகேஷ் மடம் சிறப்புடன்  உருவாகவும் நடைபெறவும் திரு மெய்யப்பன்  பெரிதும் உதவினார்.

             நாச்சியப்ப சுவாமிகளைத் தன் ஆன்மீக வழிகாட்டியாகக் கொண்ட மெய்யப்பர்,  அவருடன் நெருங்கிய  தொடர்புடையவராக விளங்கி, அவரின் தனி உதவியாளராகவும்  தன் பணியைத் தொடர்ந்தார். கோவிலூர் தொடர்பு  ஏற்பட்ட யாவரும் அம்மடத்தின் ஆன்மீகப் பணியில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொள்வர்.  அவ்வகையில் கோவிலூர் மடத்தின் ஆன்மீகப் பணிகளில் தன்னை முழுவதும் ஐக்கியப் படுத்திக் கொண்டு  தன் வாழ்வில் மெய்யைத் தேடினார் மெய்யப்பர்.

            பழனி பாதயாத்திரை  அருள் அனுபவம் உடைய மெய்யப்பர்  அருள்பாடல்கள் புனைவதிலும் வல்லவர். ஆடுக ஊஞ்சல்  என்ற அவரின் பாடல்  இன்றும் பல பக்தர்கள் நாவில் செம்மடைப்பட்டி ஊஞ்சலின் போது பாடப்படுவதைக் கேட்கலாம்.  அவரின் இலக்கிய ஆர்வம் அவரைக் கவிஞராகவம், பின்னாளில் கட்டுரையாளராகவும்  விளங்கவைத்தது. வேதாந்த கட்டுரைகளையும், கம்பராமாயணக் கட்டுரைகளையும் எழுதி வ்ந்தார். திருநெல்லை என்ற இதழைத் தொடங்கியவரும் இவரே.  இலக்கியப் பூங்கா என்ற இலக்கிய நிகழ்ச்சியைக் கோவிலூர் மடத்தில் மாதம் தோறும் நடத்தினார்.

கோவிலூர் தொடுப்பும், தொடர்வும்

            நாச்சியப்ப சுவாமிகள் பரிபூரணம் அடைந்தபின் அவரின் ஆணைப்படி மெய்யப்பன்  சீர் வளர் சீர் மெய்யப்ப  ஞான தேசிக சுவாமிகளாக அருள்பீடம் ஏறினார். மெய்யப்ப ஞான சுவாமிகள்  2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்   ஞான தேசிகராக கோவிலூர் மடத்தில் அமர்ந்தார்.

            சீர் வளர் சீர் நாச்சியப்ப சுவாமிகள் தொடங்கிய பணிகளை  எண்ணிய பணிகளைத் தொடர்ந்து  இவர் நடத்தினார்.  தொடங்கப்பறெ்ற கல்விக் கூடங்களைச் சிறப்பாக நடத்தவும்,  புதிதாக பல கல்விக் கூடங்களை ஏற்படுத்தவும் அவர் முனைந்தார். நீதிநூல்கள், காப்பியங்கள் பலவற்றை  உரையுடன் வெளியி்ட்டார். வேதாந்த பாடங்களை நடத்தினார். அவற்றை படப்பதிவுகளாக ஆக்கினார். பழனி பாத யாத்திரை, செட்டிநாட்டுத் தாலாட்டு, பட்டினத்தார், நகரக் கோயில்கள் பற்றிய ஆவணப்படங்களைத் தயாரித்தார்.

            கோவிலூர் மடத்தின் இருநூறாம் ஆண்டுவிழாவைச் சிறப்புடன் கொண்டாடினார்.  மடத்தின் சார்பில் குருபூசைகளை நன்முறையில் நடக்கச் செய்தார்.  கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலைக் கல்லூரிக்குச் செல்ல வசதியாக பாலம் ஒன்றை பெருமுயற்சியில் கட்டினார்.  ஆண்டவர், நாச்சியப்ப சுவாமிகளுக்குச் சிலைகளை அமைத்தார். இவ்வாறு பல பணிகள் செய்து வரும் நிலையில் அவரின் உடல் நலம் நலிவடைய ஆரம்பித்தது.

            2023 ஆம்  ஆண்டு  ஜனவரி மாதம்  17 ஆம் நாள் சீர் வளர் சீர் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் பரிபூரணம் பெற்றார். இதற்கு முன்னதாக அடுத்த பட்டமாக  கோவிலூர் மடத்திற்கு  விளங்க,  திரு. நா. நாராயணன் அவர்களின் பெயர்  உயிலில்  சீர் வளர் சீர் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள்  எழுதி வைத்துள்ளார். அதன்படி  தற்பொழுது கோவிலூர் ஆதீனத்தின் பதினான்காம் பட்டமாகத் துறவேற்று சீர் வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள்  அருளாட்சி புரிந்து வருகிறார். சற்குருவின் அருளாலும், குருமார்களின் அருளாலும்  கோவிலூர்  மடாலயப் பணிகள் மேலும் மேலும் உயர்ந்து சிறக்கும்.

 

கருத்துகள் இல்லை: